1857இல் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வங்காளத்தில் இருந்த கவர்னர் கட்டளையிட்டார். உடனே மெட்ராஸிலிருந்த இராணுவப்பிரிவு நீல் என்னும் ஆங்கில அதிகாரியின் தலைமையில் புறப்பட்டுச் சென்று எண்ணற்ற சிப்பாய்களைக் கொன்று குவித்து மோதலை அடக்கியது. நெருக்கடியான தருணத்தில் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும் விதமாக அன்றைய அரசு, மெளண்ட் ரோடில் ஸ்பென்சருக்கு அருகில் நீலுக்கு மாபெரும் உருவச்சிலையை வைத்தது.
தேசிய விடுதலைப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நாடெங்கும் பரவத் தொடங்கியபோது, நீல் சிலையை மாபெரும் அவமானச்சின்னமாக மக்கள் கருதினர். அதை அகற்றுவதற்கான
கிளர்ச்சியில் இளைஞர்கள் ஈடுபட்டனர். 11.08.1927 அன்று சுத்தியலால் அடித்து சிலையை நொறுக்கித் தூளாக்கும் முயற்சியில் ஈடுபட்ட சோமயாஜுலு, சுப்பராயுலு, சீனிவாசவரதன்
போன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றனர். மனம் தளராத
மற்ற இளைஞர்கள் அப்போராட்டத்தை சத்தியாகிரக வழியில் முன்னெடுத்துச் செல்ல விரும்பினர். சென்னைக்கு வந்திருந்த காந்தியடிகளை குழந்தை, சத்தியமூர்த்தி போன்ற தலைவர்களோடு
சென்று சந்தித்து, போராட்டம் தொடர்பாக
உரையாடினர். 06.09.1927, 07.09.1927 ஆகிய இரு தினங்களில் அச்சந்திப்பு நடைபெற்றது. இளைஞர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு காந்தியடிகள் பொறுமையாக பதில் சொன்னார்.
நீல் சத்தியாகிரகத்துக்கு தன் ஆதரவுண்டு என்று தெரிவித்த காந்தியடிகள் காங்கிரஸ் அமைப்பின் சார்பாக அந்தச் சத்தியாகிரகத்தை நடத்த அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை இளைஞர்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிலையகற்றம் போன்ற சிறு செயல்பாடுகள் சார்ந்து தேசிய அளவிலான ஒரு பெரிய இயக்கம் ஈடுபடத் தொடங்கினால், அவ்வியக்கத்தை ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு முடக்குவதற்குக் காத்திருக்கும் அரசாங்கத்துக்கு நாமே ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததுபோல அமைந்துவிடும் என்றும் தனிப்பட்ட வகையில் ஒரு சிறு குழுவாக சத்தியாகிரகத்தில் ஈடுபடுவதே பொருத்தமென்றும் தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேஷன் அமைப்பின் செயலாளராக பொறுப்பேற்றிருந்த நிலையில் கூட, அங்கு
நடைபெற்ற போராட்டத்தை பாசிவ் ரெசிஸ்டன்ஸ் அசோசியேஷன் என்னும் தனி அமைப்பை உருவாக்கி தான் அதன் சார்பாகவே சத்தியாகிரகம் செய்து வெற்றி கண்ட அனுபவத்தை விவரித்தார். ஒரு போராட்டத்தில் சிறு அமைப்புகள் பெறும் வெற்றிகளை பெரிய அமைப்புடன் பகிர்ந்துகொள்ளலாம். அது பெரிய அமைப்புக்கு வலிமையைக் கொடுக்கும். ஆனால் பெரிய அமைப்பு நேரிடையாக ஈடுபட்டு தோல்வியுற்றால், அது அனைவருக்கும் இழப்பையே தரும் என்று விளக்கினார். எந்த நிலையிலும் காங்கிரஸ் அமைப்பின் சார்பில்லாமல் நீல் சத்தியாகிரகம் நடைபெறுவதே நல்லது என்றும் தற்போது அதற்குரிய ஆதரவு போதுமான
அளவில் இல்லையென்றால், அதைத் திரட்டி அடையும்வரை சத்தியாகிரகத்தை சிறிது காலம் தள்ளிவைக்கலாம் என்றும் கூறினார். அன்று காந்தியடிகளைச்
சந்திக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் கரப்பாடியைச் சேர்ந்த ஜமதக்னி. இன்னொருவர் ஆக்கூர்
அனந்தாச்சாரியார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
தொலைபேசி வழியாக காவல்துறைக்கு அறிவித்துவிட்டு ஒருநாள் இரவு வேளையில் சத்தியாகிரக ஊர்வலம் நீல்சிலையை நோக்கிச் சென்றது. ஊர்வலத்தின் முன்னணியில்
ஜமதக்னி நடந்தார். நீல் சிலையை
அகற்றக் கோரும் முழக்கங்களோடு அவர் சிலையை நெருங்கியபோது காவல்துறை அவரைக் கைது செய்தது. மறுநாள் நீதிமன்ற
விசாரணைக்குப் பிறகு பதின்மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
விடுதலைக்குப் பிறகு ஆக்கூர் அனந்தாச்சாரியாருடன் இணைந்து அவருடைய செங்காடு கெளதம ஆசிரமத்தை மையமாகக் கொண்டு கிராமம்தோறும் சென்று சுதந்திரப்போராட்டக் கொள்கைகளைப் பரப்பும் வேலையில் ஈடுபட்டார்
ஜமதக்னி. தெருவெங்கும் நடந்து
சென்று மக்கள் சேருமிடங்களிலெல்லாம் இன்ன நாள், இன்ன நேரம், இன்னார் தலைமையில், இன்னார் சொற்பொழிவாற்றுவார்
என ஜமதக்னியே தண்டோரா அடித்து செய்தியைத் தெரிவித்தார். மாலையில் ஊர்வலமாகச் சென்று நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைந்தபிறகு
பாரதியார் பாடலோடு நிகழ்ச்சி தொடங்குவதுதான் வழக்கம். தொடக்க காலத்தில் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஜமதக்னியும் அனந்தாச்சாரியாரும் மட்டுமே அறிவிப்பாளர்களாகவும் பாடகர்களாகவும் பார்வையாளர்களாகவும் பேச்சாளர்களாகவும் இருந்தார்கள். கிராமத்து மக்கள் அவர்களை நெருங்கி வர அஞ்சினர். தம் வீட்டு
வாசலிலிருந்தே வேடிக்கை பார்த்தனர். நாளடைவில் அவர்கள் மீது நம்பிக்கை பிறந்ததும் அவர்களோடு வந்து சேர்ந்துகொண்டனர்.
மெல்ல மெல்ல கிராமப்பகுதிகளில் தேசபக்தி பெருகியது. மக்கள் தம்
அச்சத்தை கைவிட்டனர். முதலில் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க மறுத்தவர்கள் கூட நெருங்கி வந்து பழகி, உணவு கொடுத்தனர். சிலர் பொருளுதவி செய்தனர். உளவுத்துறை அவர்களைக்
கண்காணிக்கத் தொடங்கியது. அவர்கள் உரையாற்றச் செல்லும் இடங்களுக்கெல்லாம் உளவுத்துறையைச் சேர்ந்த சுருக்கெழுத்தாளர்களும் சென்று குறிப்பெடுக்கத் தொடங்கினார்கள்.
ஒருநாள் ஜமதக்னி வாலாஜாபேட்டையில் உரையாற்றிவிட்டு ஊருக்குத் திரும்பி நடக்கத் தொடங்கினார். இரவு கவிந்துவிட்டது. கடுமையான பசியின் காரணமாக அவர் மிகவும் களைத்துவிட்டார். தொடர்ந்து நடக்க சக்தியில்லாமல் ஒரு வீட்டுத் திண்ணையில் படுக்கச் சென்றார். அதுவரை அவரைப் பின்தொடர்ந்து வந்த உளவுத்துறையைச் சேர்ந்தவர் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரை அழைத்து “உங்கள் வீட்டுத்
திண்ணையில் படுத்திருக்கும் ஆள் அரசாங்கத்தின் எதிரி. அவனுக்கு உணவு
கொடுப்பதும் குற்றம், திண்ணையில் உட்கார
அனுமதிப்பதும் குற்றம்” என்று எச்சரித்தார். உடனே அந்த வீட்டுக்காரன் வெளியே வந்து திண்ணையில் படுத்திருந்த ஜமதக்னியை எழுப்பி வெளியேறும்படி சொன்னான். களைப்பின் காரணமாக
தொடர்ந்து நடக்கவியலாத ஜமதக்னி வேறு வழியின்றி வீட்டைவிட்டு வெளியேறி நடுத்தெருவில் படுத்துக்கொண்டு “இதற்குமேல் யாரிடம் சொல்லி என்னை விரட்டப் போகிறீர்கள்?” என்று உளவுத்துறை ஆளிடம் கேட்டுவிட்டு உறங்கத் தொடங்கினார்.
ஜமதக்னியையும் அவருடைய நண்பர்களையும் தொடர்ந்து கண்காணிப்பதை உளவுத்துறையினர் உளைச்சல் மிகுந்த வேலையாக உணர்ந்தார்கள். சரியான தருணத்துக்காகக் காத்திருந்த காவல்துறையினர் ஜமதக்னியும் மற்றவர்களும் கெளதம ஆசிரமத்தின் முன்னால் தேசியக்கொடியை ஏற்ற முனைந்தபோது கைது செய்தனர். தனியார் கட்டிடங்களிலும்
பொது இடங்களிலும் ஊர்வலங்களிலும் தேசியக்கொடியைப் பறக்கவிடக்கூடாது என்று சட்டம் நடைமுறையில் இருந்த நேரம் அது. ஓராண்டு
சிறைத்தண்டனை விதித்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையிலிருந்த சிறைக்கு அனுப்பியது. ஜமதக்னி கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் முடிந்து ஜமதக்னி ஊருக்குத் திரும்பியபோது கல்யாணராம ஐயர் என்பவர் ரயில் நிலையத்துக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்று ஆதரவளித்தார். அவர் அஞ்சா நெஞ்சம் உடையவர். ஜமதக்னி உரையாற்றிய
பல கூட்டங்களுக்கு உளவுத்துறையின் எச்சரிக்கையையும் மீறி ஒற்றைப் பார்வையாளராக அமர்ந்து கேட்டவர் அவர். அன்று தொடங்கிய
நட்பு அவர்களுடைய வாழ்வின் இறுதிநாள் வரைக்கும் தொடர்ந்தது.
சிறையிலிருந்து விடுதலையானதும் ஜமதக்னி மீண்டும் சுதந்திரப் போராட்டக் கொள்கைகளைப் பரப்பும் வேலையில் இறங்கினார். இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் இந்தியாவுக்கு சுய ஆட்சி உரிமையை வழங்க முன்வந்தார். ஆனால் முழு சுதந்திரமே தமக்குத் தேவை என காங்கிரஸ் கோரியது. 31.12.1929 அன்று லாகூருக்கு அருகில் ராவி நதிக்கரையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திரமே தம் முதன்மைக் குறிக்கோள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நதிக்கரையில் நேரு சுதந்திரக்கொடியை ஏற்றினார். அன்றுமுதல் ஜமதக்னி
தன் பிரச்சாரத்தில் முழு சுதந்திரம் பற்றிய கருத்துகளையும் இணைத்துக்கொண்டார்.
பரப்புரையின் கடுமை காரணமாக, ஜமதக்னி மீண்டும்
சிறையில் அடைக்கப்பட்டார். இன்டர்மீடியட் முடித்ததும் அவர் அரசியல் வாழ்க்கையை நோக்கி அவர் வந்துவிட்டதால் அவரால் தன் படிப்பைத் தொடர முடியாமல் போய்விட்டது. அவருக்கு தமிழ்மொழியில் நன்கு தேர்ச்சி பெறவேண்டும் என்ற ஆவல் இருந்தது. சிறைவாசத்தின் போது
கிடைத்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர் மற்ற நண்பர்கள் வழியாக தமிழிலக்கண நூல்களையும் இலக்கிய நூல்களையும் முறையாகப் படித்துத் தெரிந்துகொள்ளத் தொடங்கினார். திருக்குறள், நளவெண்பா, கம்பராமாயணம், நன்னூல், நைடதம் போன்றவற்றை ஆய்வு செய்யும் அளவுக்கு ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார். இது சிறைவாசத்தால் அவருக்குக் கிட்டிய நன்மை. இதுபோலவே சிறைவாசத்தால்
விளைந்த தீமைகளும் இருந்தன. எப்போதும் அழுக்கேறிய
ஆடைகளும் பாய்களும் கம்பளிகளும் தட்டுகளும் கொடுக்கப்பட்டன. மாற்றுடைகள் இல்லாததால் அவற்றை முறையாக துவைத்துக்கொள்ளவும் வழியில்லை. வழங்கப்படும் உணவுகளில்
மணலும் புழுக்களும் மிதந்தன. அரைகுறையாக வெந்த
பயிரை ஒன்றும் பாதியுமாகக் கடைந்து வழங்கிய குழம்பில் புளிப்புவீச்சம் அடித்தது. பசி இல்லாவிட்டால்
ஒரு பொருளையும் வாயில் வைக்கமுடியாது. அந்த அளவுக்கு மோசமான உணவு சிறையில் வழங்கப்பட்டது. சுகாதாரமற்ற சூழலில் தொடர்ந்து அடைபட்டிருப்பதால் உருவாகும் வியாதிகள் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.
மோசமாக சமைக்கப்பட்ட உணவை வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு சென்று மரத்தடியில் அமர்ந்து உண்ணவேண்டும் என்பது சிறைவிதி. காக்கைகளின் எச்சம்
விழுவதையோ காற்றின் காரணமாக புறப்பட்டு வரும் சருகுகளும் தூசுகளும் தாராளமாக தட்டில் விழுவதையோ யாராலும் தடுக்கமுடியாது என்பதால் ஜமதக்னி மரத்தடியில் உணவுண்ண மறுத்தார். நண்பர்களை அழைத்துச்
சென்று சிறையின் தாழ்வாரங்களில் அமர்ந்து உண்ணத் தொடங்கினார். அது சிறை அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. கைதிகளை வெளியே விரட்டத் தொடங்கினர். தாழ்வாரத்தைவிட்டு இறங்கிச் செல்ல மறுத்த ஜமதக்னியை அசையாதபடி நான்கைந்து காவலர்கள் உறுதியாகப் பிடித்துக்கொள்ள அந்த அதிகாரி அவருடைய வாயில் விளக்கெண்ணெயை ஊற்றிக் குடிக்கவைத்துவிட்டார். அது ஒரு தண்டனை முறை. நாலைந்து நாட்களுக்கு
கடுமையான வயிற்றுவலியாலும் வயிற்றுப்போக்காலும் வேதனைக்குள்ளான ஜமதக்னி தன் முடிவில் மட்டும் உறுதியாக நின்றார். அதற்குத் தண்டனையாக
அவர் மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டார்.
1930இல் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கியதும் தேசமெங்கும் நிறைந்திருந்த காந்தியத் தொண்டர்கள் தம் பகுதிகளுக்கு அருகில் உள்ள கடற்கரைப்பகுதியை நோக்கி யாத்திரையாகச் செல்லத் தொடங்கினர். தமிழகத்தில் ராஜாஜியின் தலைமையில் தொண்டர்கள் உப்பு காய்ச்சுவதற்காக வேதாரண்யத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர். சென்னையில் பிரகாசம் தொண்டர்களைத் திரட்டி கடற்கரையை ஒட்டிய பகுதியில் உப்பு காய்ச்ச ஏற்பாடுகளைச் செய்தார். சிறையிலிருந்து அப்போதுதான் விடுதலை
பெற்றுத் திரும்பியிருந்த ஜமதக்னி அப்போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தம் நண்பர் அனந்தாச்சாரியாருடன் சென்றார். ஏராளமான தொண்டர்களுடன்
கடற்கரைக்கு உப்பு காய்ச்சுவதற்காகச் சென்ற நாகேஸ்வரராவ் கைது செய்யப்பட்டார். பிரகாசம் தலைமையில் மற்றொரு அணி புறப்பட்டு கடற்கரைக்கு அருகில் சென்றது. பிரகாசம் தொண்டர்களை
ஊக்கப்படுத்தும் விதமாக உரையாற்றினார். அதற்கிடையில் கூட்டத்தைக் கலைப்பதற்காக குதிரைப்படை வீரர்கள் பாய்ந்து வந்தனர்.
காவல்துறை கமிஷனரே அப்பிரிவுக்கு தலைமை தாங்கி வந்திருந்தார். கூட்டமாகக் கூடியிருந்த தொண்டர்களைப்
பார்த்து உடனடியாக கலைந்து போகுமாறு எச்சரிக்கை செய்தார். மக்கள் அவர்
எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. உடனே “உங்களுக்கு இரு
நிமிடங்கள் தருகிறேன். உயிர்பிழைக்க வேண்டுமெனில்
உடனடியாக கலைந்துபோய்விடுங்கள். இல்லையென்றால் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்கவேண்டிய நிலை வரும்” என்று அறிவித்தார். குறிப்பிட்ட நேரம் கடந்த பிறகும் யாரும் கலைந்து செல்லாததைப் பார்த்ததும் சீற்றம்
கொண்ட கமிஷனர் தடியடிக்கு உத்தரவிட்டார். மக்களுக்கு
நடுவில் குதிரைகள் புகுந்து அனைவரையும் முட்டித் தள்ளியது. கீழே விழுந்தவர்கள்
மீது கால்களைப் பதித்து குதிரைகள் ஓடின. தடியடிகளால் பலர்
கைகளும் கால்களும் உடைய மயங்கி விழுந்தனர். ஜமதக்னியின் கால்கள் மீதும் கைகள் மீதும் முதுகின் மீதும் தடிகளால் வெறியோடு அடித்தனர் காவலர்கள். ஒரு பலமான
அடி ஜமதக்னியின் தலைமீது விழுந்தது. உடனே அவர்
மயங்கி கீழே சரிந்துவிட்டார்.
ரத்தக்காயங்களுடன் அவரை ஆசிரமத்துக்குத் தூக்கிவந்தார் அனந்தாச்சாரி. அவருக்கு உடனடியாக தடுப்பு ஊசி போட்டு மருத்துவம் பார்த்தனர். ஜமதக்னி உணர்வின்றி படுத்த படுக்கையாகவே இருந்தார். மூளைப்பகுதியில் அடி பலமாக
விழுந்திருந்தது. மருத்துவர் அந்த மயக்கத்தை ‘கன்கஷன்’ என்று
குறிப்பிட்டார். சில நாட்களுக்குப் பிறகே அவருக்கு விழிப்பு வந்தது.
தொண்டர்கள்
அவருக்கு அருகிலேயே இருந்து மருத்துவம் செய்தனர். மெல்ல மெல்ல
அவர் தன்னுணர்வு பெற்றார். அரசு விதித்திருந்த
தடையுத்தரவை மீறி மக்களை ஊர்வலமாகத் திரட்டி அழைத்துக்கொண்டு சென்று கூட்டம் நடத்தினார். அதற்காக கைது செய்யப்பட்டு ஓராண்டு காலத்துக்கு கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அவருடன் சக கைதியாக இருந்த டி.எஸ்.எஸ்.ராஜன், சிங்காரவேலர் இருவரோடும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. டி.எஸ்.எஸ்.ராஜன் வழியாக காந்தியச் சிந்தனையைப்பற்றியும் சிங்காரவேலர் வழியாக பொதுவுடைமைச் சிந்தனையைப்பற்றியும் ஆழமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். சில மாதங்களிலேயே ராஜனும்
ஜமதக்னியும் சென்னைச் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டனர். அச்சிறையில் தமிழ், கன்னட, தெலுங்கு, ஆங்கில மொழி இலக்கியங்களில் பயிற்சி பெற்ற பலரும் அடைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் ஓய்வு நேரத்தில் தத்தம் இலக்கியங்களை விரிவாக அறிமுகப்படுத்தி வகுப்பெடுத்தனர். தட்சிண பாரத இந்தி பிரச்சார சபையைச் சேர்ந்த ஹரிஹரசர்மா அனைவருக்கும் இந்தி மொழியைக் கற்பித்தார். இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஜமதக்னி இந்தியையும் சமஸ்கிருதத்தையும் பிழையின்றி கற்று தேர்ச்சி பெற்றார்.
காந்தி – இர்வின் ஒப்பந்தப்படி உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்ற அனைவரும் விடுதலை பெற்றனர். அந்த ஒப்பந்தப்படி
உப்புக் காய்ச்சவும் துணிக்கடைகளின் வாசலிலும் கள்ளுக்கடைகளின் வாசலிலும் நின்று மறியல் செய்யவும் இந்தியர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டது.
சிறையிலிருந்து விடுதலையான ஜமதக்னி அரக்கோணத்துக்குச் சென்று கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டிருந்த
அனந்தாச்சாரியாரோடும் கல்யாணராம ஐயரோடும் சேர்ந்துகொண்டார். ஒருநாள் மூவரும் கள்ளுக்கடை வாசலிலிருந்து தங்கியிருந்த
இடத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது அறிமுகமில்லாத ஓர் இளைஞன் வேகமாக வந்து ஜமதக்னியின்
பின்கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு ஓடோடிச் சென்றுவிட்டான். ஐயோ என்ற கூச்சலுடன் கீழே விழுந்துவிட்டார் ஜமதக்னி. அங்கேயே காவலர்கள் நின்றிருந்த போதும் நடந்தவை ஒவ்வொன்றையும் நேருக்கு நேர்
பார்த்தபோதும் அந்த இளைஞனைக் கைது செய்ய முயற்சி செய்யவில்லை. திடீரென ஒரு பெரிய பாறையோடு அந்த இளைஞன் மீண்டும் ஓடிவந்து கல்யாணராம ஐயர்
மார்பில் மீது வீசிவிட்டுச் சென்றான். காவலர்கள் அப்போதும் அவனைப்
பிடிக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் பாதையில் நடமாடிக் கொண்டிருந்த
பொதுமக்கள் அவனை மடக்கிப் பிடித்தனர். அதைப் பார்த்த ஜமதக்னி
அவனை அடிக்கவேண்டாம் என்றும் காவல் துறையினரிடம் ஒப்படைத்துவிடவும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கூடவே இருந்த அனந்தாச்சாரியார் காயம் பட்ட இருவரையும் மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்று மருத்துவத்துக்கு வழிசெய்தார். சில நாட்களுக்குப்
பிறகு ஜமதக்னி குணமடைந்தார்.
ஒருநாள் சைனா பஜார் சாலையில் அயல்நாட்டு ஆடைகளை விற்பனை செய்யக்கூடிய கடைகளின் முன்னால் நின்று தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஜமதக்னியும் அன்றைய மறியலில் கலந்துகொண்டார். சத்தியாகிரகிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி பொதுமக்கள் கடைகளுக்குள் நுழையாமல் திரும்பிச் செல்லத் தொடங்கினர். இன்னும் சிலர் கடைக்குள் வராமல் வெளியே கூடி நின்று உரையாடத் தொடங்கினர். கடைக்காரர்கள் புகார் செய்ததன் அடிப்படையில் காவல்துறையினர் வந்து சேர்ந்தனர். அனைவரையும் பார்த்து இரண்டு நிமிடங்களில் கலைந்துசெல்லும்படியும் கட்டளைக்குக் கட்டுப்பட மறுப்பவர்கள் மீது தடியடி நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.
மறியல் செய்ய வந்த தொண்டர்கள் உறுதியாக நிற்பதைக் கண்டு வெகுண்டெழுந்த காவல்துறையினர் அவர்களைச் சூழ்ந்து நின்று எலும்பு முரிய அடித்து நொறுக்கினர். ஜமதக்னி அடிதாளாமல் சரிந்து விழுந்து மயங்கினார். ஏற்கனவே நலிந்திருந்த அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவரைப் போலவே பலரும் மயக்கத்தால் விழுந்துவிட்டனர். காவல் துறையினர் மயங்கியவர்களையெல்லாம் ஆடுமாடுகளை இழுத்துச் செல்வதுபோல இழுத்துச் சென்று ஆங்காங்கே காணப்பட்ட வீடுகளின் வாசல்களிலும் திண்ணைகளிலும் வீசிவிட்டு, மயக்கமடையாதவர்களை மட்டும் கைது செய்து வண்டியிலேற்றி அழைத்துச் சென்றனர்.
ஜமதக்னி ஒரு விலைமகள் வீட்டுத் திண்ணையில் வீசப்பட்டிருந்தார். தற்செயலாக வெளியே வந்த அவள் அடிபட்டு சதை கிழிந்து ரத்தம் சிந்த கிடந்த ஜமதக்னியைப் பார்த்து அஞ்சி அலறிவிட்டாள் அவள் அலறலைக் கேட்டு ஓடோடி வந்த அவருடைய தாயாரும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் அவருடைய நிலையைக் கண்டு இரக்கம் கொண்டனர். ஆட்களின் உதவியோடு
அவரை வீட்டுக்குள் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தும்படி செய்தாள். யாரோ ஒருவர்
ஓடிச் சென்று அதே தெருவில் இருந்த மருத்துவரை அழைத்துவந்தார். அவர் காயங்களையெல்லாம் துடைத்துச் சுத்தப்படுத்தி கிழிந்த சதையில் தையல் போட்டு ஊசி குத்தி மருந்து கொடுத்துவிட்டுச் சென்றார். அவர் அணிந்திருக்கும்
கதராடையைக் கண்டு மருத்துவத்துக்குப் பணம் கூட பெற்றுக்கொள்ளாமலேயே சென்றுவிட்டார். நாலைந்து நாட்களுக்குப் பிறகே ஜமதக்னிக்கு சுய உணர்வு திரும்பியது. அதுவரை அவரை அந்த இளம்பெண்ணே கவனித்துக்கொண்டாள். தினமும் அந்த மருத்துவர் மட்டும் வந்து பார்வையிட்டுச் சென்றார்.
சுய உணர்வு திரும்பிய பிறகே ஜமதக்னிக்கு நடந்த விஷயங்கள் தெளிவாகப் புரிந்தன. மயங்கிக் கிடந்த
நாட்களில் தன்னை அக்கறையுடன் கவனித்துக்கொண்ட அந்த மங்கையை வணங்கி நன்றி சொன்னார். அவள் தன்னை
விலைமகள் என்று உண்மையைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டாள். ஜமதக்னியின் கருத்துகளைக்
கேட்டு மனம் நெகிழ்ந்த அந்த நங்கை காந்தியக்கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டாள். தான் அதுவரை
செய்துவந்த தொழிலை அன்றே கைவிட்டாள். கதராடை அணிந்து இராட்டையில் நூல்நூற்கவும் பயிற்சி எடுத்துக்கொண்டாள். எழுந்து நடமாடும் அளவுக்கு உடல்நலம் தேறியதும் ஜமதக்னி அங்கிருந்து புறப்படத் திட்டமிட்டார். அப்போது அந்த நங்கை அவரைத் தடுத்து அவர் மீது தனக்குள்ள விருப்பத்தைத் தெரிவித்து தன்னை மணந்துகொள்ளுமாறு வேண்டினாள். ஜமதக்னி தன்னோடு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு தன்னோடு சிறையில் தங்கியிருந்த அஞ்சலையம்மாள் – முருகப்படையாச்சி தம்பதியினரின் மகளைத் திருமணம் செய்துகொள்வதாக ஏற்கனவே வாக்களித்திருப்பதாகவும் தன்னை மன்னித்துக்கொள்ளும்படியும் சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டு வெளியேறினார்.
பெல்லாரியின் சிறைவாசம் முடிந்து 1934இல் ஜமதக்னி விடுதலை பெற்று வாலாஜாபேட்டைக்குத் திரும்பினார். மீண்டும் மீண்டும் பலமுறை சிறைக்குச் சென்றதாலும் சத்தான உணவில்லாததாலும் ஜமதக்னியின் உடல்நலம் அடிக்கடி குன்றியது. பெல்லாரியில் அவர்
சிறையில் இருந்தபோது கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டார். பாசிலி என்றொரு தொற்றின் காரணமாக அந்த வயிற்றுப்போக்கு வந்துவிட்டது. சிறை அதிகாரிகள் அவருக்கு மருத்துவம் பார்ப்பதில் அலட்சியம் காட்டினர். நிலைமை கட்டுமீறிச்
சென்ற பிறகே மருத்துவர் வரவழைக்கப்பட்டார். சோதனைகள் மூலம் அவரைத் தாக்கியிருக்கும் தொற்றைக் கண்டுபிடித்து உரிய மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தினார். இன்னொரு முறை அவருக்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டிய அளவுக்கு உடல்நலம் குன்றிவிட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் கூட எதிர்பாராத நேரங்களிலெல்லாம் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். அவரால் முன்புபோல அதிக அளவில் அலையமுடியவில்லை.
வாலாஜாபேட்டையில் வசித்துவந்த அவருடைய பழைய நண்பரொருவர் தன் வீட்டை வாடகை இல்லாமல் தங்கிக்கொள்ளுமாறு ஜமதக்னியிடம் சொன்னார். அந்தக் கட்டடத்தில்
சிறுவர்களுக்கு ஒரு பள்ளியைத் தொடங்கத் திட்டமிட்டார் ஜமதக்னி. தமிழ், கணிதம், வரலாறு என எல்லாப் பாடங்களையும் அவரே பிள்ளைகளுக்குக் கற்பித்தார். கல்விக்கட்டணமாக பிள்ளைகள் கொடுக்கும் தொகையை வாங்கி தன் கதராடைகளுக்கும் உணவுத்தேவைக்கும் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் அந்தப் பள்ளி நீண்ட காலம் இயங்கவில்லை. மாணவர்கள் வருகை குறைந்துபோனதால் மூடவேண்டி வந்தது. அதனால் ஒவ்வொரு
நாளும் நன்னூல் போன்ற இலக்கண நூல்களையும் கம்பராமாயாணத்தையும் படிப்பதில் செலவிட்டார். அத்தருணத்தில் அவருடைய நண்பரான அனந்தாச்சாரியாரும் சிறையிலிருந்து விடுதலை பெற்று ஊருக்கு வந்து சேர்ந்தார்.
இருவரும் ரத்தினநாயகர் புத்தகக் கம்பெனியை நடத்தி வந்த அரங்கசாமி நாயக்கரைச் சந்தித்தனர். அவர் அவ்விருவருக்கும் ஒரு தொகையைக் கொடுத்து, மகாபக்த விஜயம் என்னும் நூலை தமிழில் எழுதும்படி கேட்டுக்கொண்டார். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் போல அந்த நாட்களில் அனைவராலும் பரவலாகப் படிக்கப்பட்ட நூல் மகாபக்த விஜயம்.
அது ஏறத்தாழ எழுநூறு அடியார்களின் வரலாற்றையும் அவர்களுடைய பக்தியுணர்வையும் முன்வைத்து பதினேழாம் நூற்றாண்டில் நாபாஜி சித்தா என்பவர் இந்துஸ்தானி மொழியில் எழுதிய நூல். அந்த நூலை
மீண்டும் சுருக்கி 108 அடியார்களின் பக்திவரலாற்றை மட்டும் கொண்ட தொகைநூலாக மகிபாடி பாவாஜி என்பவர் உருவாக்கினார். அந்தக் காலத்தில் திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண்களுக்கு இப்புத்தகத்தைக் கொடுப்பதும் சீர்வரிசைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. ஜமதக்னியையும் அனந்தாச்சாரியாரையும் இந்த நூலை தமிழில் எழுதும்படி நாயக்கர் கேட்டுக்கொண்டார். அதற்கு உதவும் வகையில் ஐம்பது துணைநூல்களையும் கொடுத்தனுப்பினார். அவர் கொடுத்த தொகையை வைத்துக்கொண்டு ஆறு மாத காலத்தை அவர்கள் பசியின்றி கழித்தனர். அதற்குள் அனந்தாச்சாரியாரின்
உதவியுடன் ஜமதக்னி அந்தப் புத்தகத்தை எழுதி நாயக்கரிடம் ஒப்படைத்தார். இந்தப் புத்தகத்தை எழுதிய அனுபவத்தில் திருமுருகாற்றுப்படை, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, குமரேச சகதம் ஆகிய படைப்புகளுக்கு அழகான விரிவுரை எழுதிக் கொடுத்து கொஞ்சம் பணமீட்டினார்.
1938இல் சோஷலிஸ்ட் கட்சி உருவானபோது, சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோருடன் இணைந்து தமிழகத்தில் அக்கட்சி வளரப் பாடுபட்டார். பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதும் அக்கட்சியின் சார்பில் வட ஆர்க்காடு மாவட்டத்தின் முதல் செயலாளராகப் பொறுப்பேற்று பணியாற்றினார்.
கட்சியில் இருந்தாலும் கூட அவர் மனம் எழுத்துப்பணியில் ஈடுபடவே ஏங்கியது. காரல் மார்க்ஸ், லெனின் எழுதிய நூல்களை முறையாகப் படித்து அவற்றின் சாரத்தை உள்வாங்கிக்கொண்டார். தான் பெற்ற தெளிவின் அடிப்படையில் மார்க்சிஸம், நீ ஏன் சோஷலிஸ்ட் ஆகவேண்டும்?, இந்தியாவில் சோஷலிஸம் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டார். டார்வின் கொள்கைகளை ஆய்வுநோக்கில் பயின்று ’உயிர்களின் தோற்றம்’ என்றொரு நூலை சொந்தமாகவே எழுதி வெளியிட்டார். காரல் மார்க்ஸ் எழுதிய ’தாஸ் கேப்பிடல்’ நூலை ‘மூலதனம்’ என்னும்
பெயரில் மூன்று பெரும்தொகுதிகளாக மொழிபெயர்த்து முடித்தார். ஆனால் அத்தகு பெரிய நூலை வெளியிட அப்போது வாய்ப்பின்றி இருந்தது. நல்வாய்ப்பில்லாததால், அத்தொகுதிகள்
அவருடைய மறைவுக்குப் பிறகே வெளிவந்தன.
ஜமதக்னியின் மற்றொரு முக்கிய மொழிபெயர்ப்பு காமாயினி என்னும் இந்திமொழிக் காவியமாகும். ஜெயசங்கர் பிரசாத் என்னும் இந்திக் கவிஞரால் எழுதப்பட்டு 1936இல் வெளிவந்த காவியத்தை ஜமதக்னி தற்செயலாகப் படித்தார். பிரளயத்துக்குப் பிறகு உலகில் எஞ்சிய ஒரே மனிதன் எவ்விதமான எண்ணமும் உணர்வும் விழைவுமின்றி அஃறிணைப்பொருளைப் போல வாழ்ந்து வருகிறான். அவன் ஒவ்வொரு உணர்வையும் ஒவ்வொரு வழியில் மீண்டும் அடையப்பெற்று முழு மனிதனாக உருப்பெறுவதை உருவகமாக முன்வைக்கும் காவியம் அது. அதன் கதையமைப்பிலும் காவியகுணத்திலும் மயங்கி, உடனே அதை மொழிபெயர்க்க விரும்பினார் ஜமதக்னி. மாதக்கணக்கில் உட்கார்ந்து மொழிபெயர்த்து முடித்தும், அதை வெளியிட பணமில்லாமல் தவித்தார். ஜமதக்னியின் நண்பர்கள் அவருக்காக நன்கொடை திரட்டிக் கொடுத்தனர். அந்தத் தொகையைச் செலவழித்து காமாயினியை வெளியிட்டார். அவருக்கு நல்ல பேரும் புகழும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காளிதாசரின் ரகுவம்சம், மேகசந்தேசம் ஆகிய இரு நாடகங்களையும் மொழிபெயர்க்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஜமதக்னி அவற்றை மிகச்சிறப்பாக மொழிபெயர்த்துக் கொடுத்தார். கம்பராமாயணத்தையும் வால்மீகி ராமாயணத்தையும் ஒப்பிட்டு அவர் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை அன்றைய தினமணி இதழில் எழுதினார்.
இந்தக் காலகட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸின் திட்டத்தை ஆதரிப்பவராக இருந்தார் ஜமதக்னி. யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்று அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது. அமெரிக்கா, பிரிட்டன் சார்பாக ரஷ்யா உலகப்போரில் கலந்துகொண்டதால் 1942இல் சிறையில் இருந்த பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த கைதிகள் அனைவரும் விடுதலை பெற்றனர். அச்சமயத்தில் ஜமதக்னியும் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பிறகு ஏற்கனவே அஞ்சலையம்மாள்- முருகப்படையாச்சி தம்பதியினருக்கு வாக்களித்திருந்தபடி அவர்களுடைய மகளான லீலாவதியைத் திருமணம் செய்துகொண்டார். அவர் அப்போது புவனகிரியில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். புதுமணத் தம்பதியினர் இருவருக்கும் வாலாஜாபேட்டையில் நண்பர்கள் சார்பில் அனந்தாச்சாரி விருந்தளித்தார்.
15.08.1947
அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது வாலாஜாபேட்டை
நீதிமன்றத்தில் கொடியேற்றும் விழாவை நடத்த அனந்தாச்சாரி ஏற்பாடு செய்திருந்தார். அவ்விழாவில் ஜமதக்னி சிறப்பு விருந்தினராகக்
கலந்துகொண்டு கொடியேற்றி உரையாற்றினார். இருவரையும் பல முறை சிறைக்கு அனுப்பிவைத்த நீதிமன்ற
வளாகத்தில் அவர்கள் ஏற்றிய கொடி அன்று பட்டொளி வீசிப் பறந்தது.
மண்ணுலகைப் பொன்னுலகாக்கும் இலட்சியக் கனவுகளால் தன்னை நிறைத்துக்கொண்ட மாமனிதர் ஜமதக்னி. அவற்றை மக்களிடையில்
பரப்பும் எளிய பரப்புரையாளராகவே காலம் முழுதும் செயல்பட்டார் அவர். வேறு எதற்கும்
அவர் தன் வாழ்வில் இடம் கொடுத்ததில்லை. அடுத்த நாள் உணவுக்கு என்ன வழி என்பது தெரியாத நிலையில் கூட தன் நெஞ்சில் துயரமோ குறையோ நுழைந்துவிடாமல் தள்ளிவிட்டுச் சென்ற மாபெரும் இலட்சியத்தின் தூதர் அவர்.
(சர்வோதயம்
மலர்கிறது – ஆகஸ்டு 2021 )