நாற்பதுக்கும் மேற்பட்ட காந்திய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளை எழுதிய அனுபவத்தில் அவர்கள் அனைவரிடமும் வெளிப்பட்ட செயல்வேகத்தில் ஓர் ஒற்றுமையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அது காந்தியக் கொள்கைகள் மீது அவர்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கை.
சத்தியாகிரகத்தையும் ஒத்துழையாமையையும் போராட்ட வழிமுறைகளாக காந்தியடிகளே முதன் முதல் அறிவித்தார். வரலாற்றில் அவ்வகைப் போராட்டங்களுக்கு முன்சுவடுகள் எதுவுமில்லை. ஆயினும் அதன் வெற்றி தோல்விகள் பற்றிய கவலையோ, ஐயமோ எதுவுமின்றி காந்தியடிகளின் வழியில் அவருக்குத் துணையாக செயல்படுவதே சிறந்தது என தன் உள்ளுணர்வாலேயே தொண்டர்கள் அனைவரும் முடிவெடுத்தார்கள். அந்த முடிவின் காரணமாக எது நடந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான மன உறுதியுடன் அவர்கள் களமிறங்கினார்கள். தொண்டர்களின் நம்பிக்கையை தலைவர் பெற்றார். தலைவரின் நம்பிக்கையை தொண்டர்களும் பெற்றனர். ஒவ்வொரு தொண்டரும் எந்தத் துறையில் தன் ஆற்றலை முழு வீச்சில் வெளிப்படுத்த முடியுமோ, அந்தத் துறையின் திசையில் அந்தத் தொண்டரை அடையாளம் கண்டு செலுத்தும் ஆற்றல் காந்தியடிகளிடம் இருந்தது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட தருணங்கள் அமைதியாகக் கடந்து போகின்றன. அவற்றையெல்லாம் எழுத்தில் படிக்கும் போதே மெய்சிலிர்க்கும் அனுபவமாக உள்ளது.
ஒரு தருணம். இராஜாஜியின் தலைமையில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து
கொண்ட க.சந்தானம் சிறைக்குச் சென்றுவிடுகிறார். அவருடைய துணைவியாரும் குழந்தைகளும்
திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருக்கிறார்கள். ஒரு நாள் கிணற்றங்கரைக்கு
குளிப்பதற்காகச் சென்ற சந்தானத்தின் மனைவியார் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து
இறந்துவிடுகிறார். அந்த மரணச் செய்தியைச் சுமந்து கொண்டு சிறையிலிருக்கும்
சந்தானத்துக்கு தந்தி வருகிறது. ஒரு கணம் அவர் மனம் தத்தளிக்கிறது. மன்னிப்புக்
கடிதம் எழுதிக் கொடுத்தால் சிறை நிர்வாகம் அவரை வெளியே அனுப்பிவிடும். மனைவியின்
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவரே எரியூட்டலாம். ஆதரவிழந்த குழந்தைகளை
அரவணைத்துக் கொள்ளலாம். ஆனால் மறுகணமே அவர் மனம் விழித்துக் கொள்கிறது.
ஊசலாட்டத்துக்கே இடமில்லாத வகையில் உறுதி கொள்கிறார். தனிப்பட்ட பாசம், பற்றுகளைவிட காந்தியக் கொள்கைகள் மீது அவர் வைத்திருக்கும் பாசமும் பற்றுமே
வெற்றி பெறுகின்றன. ‘வர இயலாது, தகனம் செய்துவிடவும்’ என்று தந்தி வழியாகவே பதில் அனுப்பிவிட்டு சிறையிலேயே நீடிக்கிறார் சந்தானம்.
இதேபோன்ற இக்கட்டான நெருக்கடியை துரையன் அடிகளும் தன் வாழ்வில் சந்தித்தார்.
அவர் சிறைபட்டிருந்த தருணத்தில் அவருடைய மனைவி துளவம்மாள் மகப்பேற்றில் ஏற்பட்ட
சிக்கலால் உயிரிழந்துவிட்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது. ஆயினும் கொள்கை வழி
நின்று, மன்னிப்புக்கடிதம்
எழுதிக் கொடுக்க விருப்பமில்லாமல் அவரும் சிறையிலேயே நீடித்தார்.
இன்னொரு தருணம். இதுவும் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி.
திருச்செங்கோடு ஆசிரமத்திலிருந்து சேலம் நோக்கி ஆசிரமத்தொண்டர் கிருஷ்ணன் உட்பட சத்தியாகிரகிகள்
அனைவரும் ஊர்வலமாகச் செல்கிறார்கள். பிரதான சாலையில் அவர்களைத் தடுத்து நிறுத்திய
காவலர்கள் சுற்றி நின்று கைத்தடியால் முதுகும் கால்களும் உடையும்படி அடித்து
நொறுக்குகிறார்கள். ஆயினும் கிஞ்சித்தும் எதிர் வினையாற்றாமல் வந்தே மாதர
முழக்கத்துடன் தரையில் விழுகிறார்கள் தொண்டர்கள். சுற்றி நின்று வேடிக்கை
பார்க்கும் கூட்டத்தினர் பலரும் ஆவேசப்பட்ட போதும் அவர்கள் அமைதி காக்கிறார்கள்.
காவலர்களைத் தாக்கி விரட்டுவதற்கு தமக்கு அனுமதி வழங்கும்படி கேட்கும்
ஊர்க்காரர்களிடம் அது காந்தியின் கொள்கைகளுக்கு எதிரானது, அப்படிப்பட்ட செயலில் நாம் ஒரு போதும் ஈடுபடக் கூடாது என அவர்களுக்கு அறிவுரை
சொல்லி தடுத்து நிறுத்துகிறார்கள்.
இத்தகு கொள்கைப் பிடிப்பும் நம்பிக்கையும்தான் காந்தியடிகளின் வழி
வந்தவர்களின் வலிமை. மகரந்தச் சேர்க்கையைப் போல காந்தியடிகளை நெருங்கியவர்கள்
அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் இந்த வலிமை வந்து சேர்ந்து விடுகிறது. பிறகு அந்த
விதை மரமென வளர்ந்து மக்கள் தொண்டெனும் நிழலாக விரிவடைந்து செல்கிறது. ஆளுமைகளின்
வாழ்க்கைச் செயல்பாடுகள் அதையே உணர்த்துகின்றன.
இந்தக் கட்டுரைகளை எழுதும் காலத்தில் நான் விரும்பிய பல புத்தகங்களை
உடனுக்குடன் அனுப்பி உதவிய ‘சர்வோதயம் பேசுகிறது’ இதழின் ஆசிரியரான க.மு.நடராஜன் அவர்களின் உதவியை ஒருபோதும் மறக்கமுடியாது. அது
மட்டுமல்ல, எழுதி முடித்து
அனுப்பும் ஒவ்வொரு கட்டுரையையும் படித்து முடித்ததும் அந்த ஆளுமையைப் பற்றியும்
அவர்களோடு பழகிய விதத்தைப் பற்றியும் தன் பழைய நினைவுகளை அசைபோட்டபடி அவர்
பகிர்ந்து கொள்வார். சர்வோதய இயக்கப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர் என்பதால் அவருக்கு
அனைவரையுமே தெரிந்திருந்தது. அவருடன் உரையாடிய நினைவுகள் அனைத்தும் இனிய
அனுபவங்களாக நெஞ்சில் நிறைந்துள்ளன. அவருக்கு என் வணக்கங்களை இங்கு பதிவு செய்ய
விழைகிறேன். மேலும் புத்தகங்களுக்காக தேடியலைந்தபோது எனக்கு உதவிய முத்துகிருஷ்ணன், பெங்களூரு விஜயன், சுபாஷிணி, புதுவை பேராசிரியர் மு.இளங்கோவன் அனைவரையும் இக்கணத்தில் நன்றியுடன்
நினைத்துக் கொள்கிறேன். காந்தி ஆசிரமம் கிருஷ்ணனின் முற்றுப்பெறாத தன் வரலாற்றுக்
குறிப்புகளை அவருடைய மகன் கி.கண்ணன் இணைய வெளியில் தனியே ஒரு வலைப்பூவை உருவாக்கி
பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் காந்திடுடே தளத்திலும் அது
பிரசுரமாகியிருக்கிறது. அவர்களுக்கும் என் நன்றி.
இத்தொகுதியில் உள்ள எல்லாக் கட்டுரைகளையும் நண்பர்கள் பழனியும்
கே.பி.நாகராஜனும் முதல் வாசகர்களாக வாசித்து தம் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அந்த உரையாடல்கள் எனக்கு எல்லா வகைகளிலும் ஊக்கமூட்டுவதாக இருந்தன.
அவ்விருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இக்கட்டுரைகளை எழுதத் தொடங்கியதிலிருந்து, ஏதாவது ஒரு குறிப்பைச் சரி பார்ப்பதற்காக காந்திய ஆய்வாளரான அ.இராமசாமி எழுதிய
‘தமிழ்நாட்டில் காந்தி’ தொகுதியை ஒவ்வொரு நாளும் படிக்கும்படி நேர்ந்தது. இந்த நூல் தமிழில் உருவாக்கப்பட்ட
மிக முக்கியமான ஓர் ஆவணம். 1896 முதல் 1946 வரை காந்தியடிகள்
இருபது முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அவருடைய ஒவ்வொரு வருகையின் போதும் அவர்
பயணம் செய்த ஊர்கள், அங்கு நிகழ்த்திய
சொற்பொழிவுகள் அனைத்தையும் தேதிக் குறிப்புடன் தெளிவாக இத்தொகுதியில் அ.இராமசாமி
வழங்கியுள்ளார். இதற்காகவே அவர் ஏறத்தாழ மூன்றாண்டு காலம் தொடர்ச்சியாக பல
பத்திரிகைகளையும் புத்தகங்களையும் ஆய்வு செய்து தகவல்களைச் சேகரித்துள்ளார்.
தில்லியிலிருந்து குமரி வரைக்கும் பல ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி நேரடியாக
விவரங்களைக் கேட்டறிந்துள்ளார். அவருடைய கடுமையான உழைப்பின் விளைவாக உருவான
இத்தொகுதியை வரலாற்றில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் விரும்பிப் படிக்கமுடியும்.
அவருடைய ஆளுமையை நினைத்து வியக்காத நாளே இல்லை. பாராயணப் புத்தகம் போல அந்தத்
தொகுதி எப்போதும் என் எழுத்து மேசையிலேயே வைத்திருக்கிறேன். காந்திய வழியில்
மக்களுக்குத் தொண்டாற்றிய ஆளுமைகளைப் பற்றிய இக்கட்டுரைத் தொகுதியை ஆய்வாளர்
அ.இராமசாமி அவர்களுக்கு வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த
மகிழ்ச்சியடைகிறேன்.
இத்தொகுதியில் அடங்கியிருக்கும் சில கட்டுரைகள் சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்ஜியம் ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. இவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு
என் அன்பும் நன்றியும். என் மனைவி அமுதா என் எல்லா எழுத்து முயற்சிகளிலும்
உந்துசக்தியாக விளங்குபவர். அவருக்கு என் கனிந்த அன்பு. இந்தக் கட்டுரைத் தொகுதியை
மிகச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கும் என் அன்புக்குரிய நண்பரும்
பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜனுக்கு என் மனமார்ந்த நன்றி.