தோழிகள் சூழ நடந்துவந்த கிருஷ்ணை ரத்தின மேடையில் கிழக்கு முகமாக உட்கார்ந்ததைப் பார்த்த கணத்திலேயே தன் மனத்தைப் பறிகொடுத்துவிட்டான் துரியோதனன்.
சற்றே கரிய நிறம் அவளுக்கு. நீண்ட கூந்தலை
அழகாகப் பின்னிப் பூச்சூடியிருந்தாள். வகிடையே தடமாகக் கொண்டு முன்நெற்றியில் வந்திறங்கிய
தங்கச்சுட்டியின் பளபளப்பு வசீகரித்தது. முதல் பார்வையில் அவள் அழகு மிகச் சாதாரணமாகத்
தோன்றியது. பிறகு பார்க்கப்பார்க்க அவள் முகச்சித்திரம் பேரழகு கொண்டதாக மாறியது. இளமையும்
பளபளப்பும் மிகுந்த வாகான உடல். நெற்றியின் பக்கமிருந்த மென்மயிர் பின்னலிலிருந்து
விலகிக் காற்றில் அசைந்தது. அகன்ற கண்கள். சிறிய உதடுகள். மலர்களில் காணப்படும் மேடுகளைப்போலப்
பூரித்த கன்னங்கள். தொடர்ச்சியாக அவள் வீற்றிருந்த திசையையே பார்ப்பதில் அவன் கூச்சமாக
உணர்ந்தான். ஆனாலும் இதயத்தில் நிறைந்து வழிந்த ஆசை, தவிர்க்க நினைக்கும் கண்களை மீண்டும்மீண்டும்
அதே திசையில் திருப்பத் தூண்டியது. அந்த ஆசையும் கூச்சமும் அவனுக்குப் புதுசாக இருந்தன.
ஏதோ ஒரு விசித்திரமான வேகம் ஏக்கத்தில் மிதப்பதை உணர்ந்தான்.
அன்றைய
போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவன் மனத்தில் உறுதியடையத் தொடங்கியது.
நாட்டின் பல மூலைகளிலிருந்தும் திரண்டு வந்திருக்கும் அரச குமாரர்களின் முன்னிலையில்
தன் திறமையை நிறுவுவதற்கான வழிமுறைகளைத் தேடியது அவன் மனம். ஒருபுறம் நெஞ்சில் தன்னம்பிக்கை
திரண்டபடி இருந்தது. மறுபுறம் ஏதோ சஞ்சலம் தடுமாறவைத்தபடியும் இருந்தது.
சஞ்சலத்திலிருந்து
மீள்வதற்காக அவன் எடுத்த முயற்சிகள் படுதோல்வியடைந்தன. தடுக்க இயலாத வேகத்துடன் அவன்
கண்கள் ஒவ்வொரு நொடியும் கிருஷ்ணையைத் தேடின. அவள் பார்வை அருகிலிருந்த திரைச்சீலையில்
தீட்டப்பட்டிருந்த ஓவியத்தின்மீது பதிந்திருந்தது. அப்படி திசைமாறி இருந்த தோற்றமே
அவனுக்குத் தேவைப்பட்டது. ஆசைதீரப் பார்த்தான். அவன் மூச்சின் வேகம் கூடியது. ஒருவித
வெப்பம் அவன் தொண்டையை அடைத்தது.
“துரியோதனா”
என்று அடங்கிய குரலில் அருகிலிருந்த கர்ணன் கிசுகிசுத்தபடி தொடையில் கைவைத்து அசைத்ததும்
தன்னுணர்வு பெற்றவனாகத் திரும்பினான். கர்ணனை நேருக்குநேர் பார்ப்பதில் மிகவும் கூச்சம்
கொண்டான். உடனே சிரிக்க முயன்றான். அது இயல்பாக வெளிப்படவில்லை என்பது அவனுக்கே தெரிந்தது.
அவனை ஒருமுறை பார்த்த பிறகு வேண்டுமென்றே சபையினரின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.
ஒருபுறம் மார்புப்பதக்கமும், காதுக்குழைகளும் மின்னும் இளவரசர்களின் கூட்டம். துரியோதனனுடைய
பார்வையைச் சந்தித்ததும் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே சட்டெனத் தலைகுனிந்து வணங்கிச்
சிரித்தார்கள். எந்த முகத்தையும் பார்த்ததும் கண்டுணர்கிற அவன் மனம் அந்த நேரத்தில்
அடையாளம் காண்பதில் மிகவும் தடுமாறியது. பல பெயர்கள் குழம்பின. பல முகங்கள் மாறிமாறித்
தோற்றமளித்தன. எதைப் பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் கிருஷ்ணையாகவே தெரிந்தது. அதை
நினைத்து அவனுக்குள் வெட்கம் புரண்டது. மனத்தை ஒருமுகப்படுத்தி துருபதனையும் திருஷ்டத்துய்மனையும்
பார்த்தான். பார்வையாளர்களிடையே வீற்றிருந்த கிருஷ்ணணையும் பலராமரையும் பார்த்தான்.
பலராமர் அவனைப் பார்த்து சிரித்து கையசைத்ததும் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுக்குப்
பின்னால் வேறொரு பக்கத்தில் சத்திரியர்களும் பிராமணர்களும் நிறைந்திருந்தார்கள்.
போட்டி
தொடங்குவதன் அடையாளமாக மணியோசை எழுந்தது. மெல்லத் தன் உடலில் பதற்றம் பெருகுவதை உணர்ந்தான்
துரியோதனன். அவன் மனத்துக்குள் கிருஷ்ணையின் முகம் அசைந்தது. உண்மையில் அவன் பார்வை
அவள் வீற்றிருந்த மேடையின்பக்கம் திரும்பவே இல்லை. ஆனால் அவள் முகம் மிகவும் துல்லியமாக
அவன் மனத்திரையில் அசைந்தது. ஏதோ பேசுவதைப்போல. ஏதோ சிரிப்பதைப் போல. கட்டுக்கடங்காமல்
ஓடுகிற குதிரையை இழுத்து நிறுத்துவதைப்போல. அவன் தன் மனத்தின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தினான்.
நடு அரங்கில்
அமைக்கப்பட்டிருந்த மேடையில் கிந்துரம் என்னும் அலங்கரிக்கப்பட்ட வில் வைக்கப்பட்டிருந்தது.
மேலே கூரையின் அருகில் சுழலும் சக்கரம். அதற்குமேல் தெரியும் இலக்கு.
முழு
ஓசையுடன் படுக்கையில் சாய்ந்திருக்கும் கிருஷ்ணையைப் போன்றிருந்தது அந்த வில். அந்த
வில்லின் வழியாக கிருஷ்ணையின் பிம்பங்கள் ஆயிரக்கணக்கில் எழுந்து அவன் மீது பாய்ந்தவண்ணம்
இருந்தன. அத்தனையும் மலர் அம்புகள். கனவா நனவா என்று பிரித்தறிய முடியாதபடி பற்பல விசித்திர
எண்ணங்கள் உதித்தன. முதல்நாள் துருபத நாட்டை நோக்கித் தேரேறிய சமயத்தில் இந்த மாதிரியான
எந்த எண்ணமும் இல்லை. அதைக் கண்டு களிக்கக்கூடிய ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவே அவன்
மனம் கணக்கிட்டிருந்தது. இப்போதோ எல்லாமே தலைகீழாகிவிட்டது. காலம் காலமாகத் தொடர்கிற
உறவை மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பை வழங்குவதற்காகவே அப்பயணம் அமைந்ததாகத்
தோன்றியது.
அதன்
தொடர்ச்சியாக மனத்தில் அரும்பும் கனவுகனை அவனால் நிறுத்தவே முடியவில்லை. ஒரு சோலையின்
நடுவில் தாழ்வான மரக்கிளை ஒன்றைப் பற்றியபடி காத்திருக்கிறாள் கிருஷ்ணை. அவனைக் கண்டதும்
அவள் முகம் நாணத்தால் கவிழ்கிறது. நெருங்கி அவள் முகத்தைத் தொட்டுத் திருப்புகிறான்
துரியோதனன். ஒரே ஒரு கணம் அவனை நேருக்குநேர் பார்த்துவிட்டு மீண்டும் மூடிக்கொள்கின்றன
அவள் கண்கள். அவளது தோளைத் தொட்டுச் சோலைக்குள் அழைத்துச் செல்கிறான். அவள் கூந்தலிலிருந்து
எழுகிற நறுமணம் அவனைப் பித்தாக்குகிறது. “கிருஷ்ணை” என்று பிரியத்தோடு அழைத்தபடி அவளை
நிறுத்தித் தழுவுகிறான். உடலெங்கும் ஒருவித துடிப்பு படர்ந்து எழுச்சி கொள்கிறது. உலரத்
தொடங்கிய உதடுகளை கிருஷ்ணையின் நெற்றியில் பதித்து முத்தமிடுகிறான். அவள் தேகத்திலிருந்து
எழும் மணம் மயக்கத்தைத் தருகிறது. அவனது உள்ளம் பிரமித்து உறையத் தொடங்குகிறது. “கிருஷ்ணை
கிருஷ்ணை” என்று கூப்பிட எண்μகிறான். குரல் எழவில்லை. கிணற்றுக்குள்
விழுந்த எடைமிகுந்த பாத்திரத்தைப் போல ஆழ்மனத்தின் அடியி¢ல் அவ்வார்த்தைகள் அமுங்கிப்
போகின்றன. உதடுகள் மட்டும் உச்சரிக்கும் நினைவில் பிரிந்துபிரிந்து பிதற்றுகின்றன.
அவளைத் தழுவியிருக்கும் கைகளை விலக்குவது அவனால் முடியாத செயலாக இருக்கிறது. அவள் சிரிப்பொலி
அவனுடைய கண்களைத் திறக்கவைக்கிறது. காதலும் ஏக்கமும் நிறைந்த அழைப்பு அது. “நாம் பிறவிக்
காதலர்கள் போலும். ஆழ்மனத்தில் புதைந்திருந்த கடந்த ஜென்மங்களின் காதலெனும் அரும்பு
இக்கணத்தில் மலர்ந்து விட்டது. முடிபுரளும் அவனுடைய மார்பில் முத்தமிடுகிறாள் அவள். அவளுடைய குரலில்
வெளிப்பட்ட காதலை அவனால் உணர்ந்துகொள்ள முடிகிறது. அவளிடம் எதைஎதையோ பேச அவன் உள்மனம்
பொங்குகிறது. ஆனாலும் கிருஷ்ணை கிருஷ்ணை என்பதைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் அவன்
உதடுகள் உச்சரிக்கவில்லை. பனியாக உருகுகிறது அவன் மனம்.
அவையில்
எழுந்த கரவொலியால் அவன் கண்ட கனவு கலைந்தது. கிந்துரத்தின் அருகில் சிசுபாலன் நின்றிருந்தான்.
துரியோதனனுடைய உடல் குப்பென வேர்த்துவிட்டது. ஆத்திரமும் இயலாமையும் மனத்தின் ஒருபுறம்
அரித்தபடி இருக்க, அரசகுமாரன் என்னும் கௌரவம் மறுபுறம் இழுத்தபடி இருக்க தன்னைச் சமநிலையில்
நிலைநிறுத்திக்கொள்ள அவன் படாத பாடுபட வேண்டியிருந்தது. மூச்சு கட்டுப்பாடிழந்து வேகவேகமாக
வெளிப்பட்டது. சிசுபாலன் தோற்கவேண்டும் என்று மனத்துக்குள் நினைக்கத் தொடங்கினான் துரியோதனன்.
தன் மனம் செல்லும் திசை அவனுக்கே உள்ளூரக் கூச்சமளிக்கும் விஷயமாகத் தோன்றியது. ஆனாலும்
கிருஷ்ணையைத் தன்னுடையவளாக ஆக்கிக்கொள்ள அப்படி எண்ணிக்கொள்வதைத் தவிர வேறு வழியெதுவும்
தோன்றவுமில்லை. சிசுபாலனுடைய அசைவுகள் ஒவ்வொன்றையும் துல்லியமாகக் கவனித்தபடி இருந்தான்
துரியோதனன். “தோற்றுப்போ தோற்றுப்போ” என்று மந்திரம்போல முனகியபடி இருந்தது அவன் மனம்.
வில்லின்
ஒருமுனையில் நாணைப் பூட்டி மறுமுனையில் பூட்டுவதற்கான நாணை இழுக்கத் தொடங்கினான் சிசுபாலன்.
தோள்பலம் முழுவதையும் அந்த நாணின் மறுநுனியில் குவித்திருப்பதை சிவக்கத் தொடங்கிய அவன்
முகமும் இறுகிப் புடைத்த கழுத்து நரம்புகளும் புலப்படுத்தின. புருவம் நெரிபட பற்களைக்
கடித்தபடி நாணை இழுப்பதையெல்லாம் துரியோதனுடைய கண்கள் கவனித்தபடி இருந்தன. அவன் இதயத்துடிப்பு
அதிகரித்தபடி இருந்தது. உடல்ரத்தம் முழுக்க வற்றி உலர்ந்ததைப்போல இருந்தது. சிசுபாலனுடைய
தோளில் சோர்வு படிவதை அவனுடைய உடல் அசைவை வைத்து உணர்ந்ததும் ஒருவித புன்னகை எழுந்தது
அவனுக்குள். அதே கணத்தில் நாணேற்றும் முயற்சியில் தோல்வியுற்ற சிசுபாலன் பிடிவிலகி
நிமிர்ந்த வில்லிலருந்து வெளிப்பட்ட அழுத்தத்தால் தடுமாறினான். ஒரு பாறையால் தாக்கப்பட்டதைப்
போல மேடையிலிருந்து கீழே விழுந்தான். மேடையிலிருந்து சரிந்து விழுந்த வில்லை ஏவலர்கள்
ஓடோடி வந்து எடுத்து மீண்டும் மேடையில் வைத்துவிட்டுச் சென்றனர்.
சிசுபாலன்
தலைகுனிந்து பின்வாங்கியதைப் பார்த்து உள்ளூர மகிழ்ந்தான் துரியோதனன். கிருஷ்ணை தனக்கென
விதிக்கப்பட்டவள் என்கிற எண்ணம் மனத்தில் உறுதிப்படத் தொடங்கியது. “உன் கைப்பிடிக்குள்
நான் அடக்கம்” என்று அவளைப் பார்த்துப் பேசுவதைப்போல இருந்தது அந்த வில். அது வில்லின்
குரலா கிருஷ்ணையின் குரலா என்று பிரித்தறிய முடியாத தடுமாற்றத்தில் திளைத்திருந்தான்
துரியோதனன்.
ரத்தினமேடையை
நோக்கி மறுபடியும் சென்றது அவன் பார்வை. அதே கணத்தில் அவள் பார்வை அவனிடமிருந்து விலகியதைப்போல
இருந்தது. அவன் மனம் திடீரென எழுச்சியில் புரண்டது. ஒருகணம் தாமதமாக ஏன் என்கிற காரணம்
புரிந்தது. அவள் பார்வை அவன் பார்த்திராத தருணங்களில் தன்மீது படிந்திருந்துவிட்டுத்
திரும்பியதைப்போல ஓர் எண்ணம் அவனுக்குள் எழுந்தது. முகத்தில் சிவப்பேறுவதை உணர்ந்தான்.
விரல்களை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. மீசையைத் தடவுவதையும் கழுத்துப்
பக்கத்தைச் சரிப்படுத்துவதையும் தோளைத் தொட்டுணர்வதையும் தன்னிச்சையை£கச் செய்தன. கிருஷ்ணையை
உற்றுப் பார்த்தான். அவள் தோளில் படர்ந்திருந்த மேலாடை காற்றின் வேகத்தில் படபடத்தபடி
இருந்தன.
கட்டுக்கடங்காத
வகையில் அரும்பும் கனவுகளை அவனால் நிறுத்தவே இயலவில்லை. அவளை அணைத்தபடி அப்படியே ஒரு
தேரிலேறி ஏதாவது ஒரு வனத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்று தோன்றியது. உடனே ஆறு, குளம்,
அருவி, சுனை என்று இயற்கையின் செழுமை படர்ந்த இடங்களை நோக்கி அவர்கள் பயணம் தொடங்கியது.
பசிதீர வழியில் கிடைக்கும் காய்களையோ பழங்களையோ புசித்தல். சுனையிலும் அருவியிலும்
குளித்தல். கட்டிப்பிடித்து ஆனந்தத்தில் திளைத்தல். புல்லும் சருகுகளுமான மெத்தையில்
உறங்குதல் என விருப்பம் போலக் கழிந்தன பொழுதுகள். ஆனந்தத்தைத் தவிர வேறு எதற்கும் அக்கனவில்
இடமில்லை. மகுடம், ராஜ்ஜியம், மல்யுத்தம், போர், ரதப்படை, குதிரைப்படை, காலாட்படை எல்லாம்
எக்கேடாவது கெட்டுப் போகட்டும். கிருஷ்ணை அளிக்கும் சந்தோஷத்துக்கு ஈடு இணையாக இந்த
உலகில் எதுவுமே இல்லை. அவள் தரும் முத்தங்களுக்கும் உடலுடன் தழுவி அவள் உணர்த்துகிற
களிப்புக்கும் மாற்றாக எதையுமே இந்த உலகில் முன்வைக்க முடியாது. அவள் ஒருத்தியை மட்டும்
தந்துவிட்டு அஸ்தினாபுரத்தையே அபகரித்துக்கொண்டாலும் மனத்துக்கு எந்த இழப்புணர்ச்சியும்
எழாத அளவுக்குத் தன்னை அவள் பாதித்துவிட்டதை உணர்ந்தான்.
அரங்கில்
மீண்டும் கோஷம் எழுந்தது. வில்லுக்கு அருகில் ஜராசந்தன் நின்றிருந்தான். ஏதோ விளையாட்டுப்பிள்ளை
அபூர்வமான ஒரு சிற்பத்தையும் செடியையும் பார்ப்பதைப்போல வில்லை உற்றுஉற்றுப் பார்த்தான்.
“வாழ்நாளில் வில்லையே பார்த்த தில்லையா பைத்தியக்காரா” என்று மனத்துக்குள் முμமுμத்தான்
துரியோதனன். ஓர் இகழ்ச்சியான சிரிப்பு அவன் நெஞ்சில் அரும்பி மறைந்தது. “உனக்கு எதற்கடா
இந்த அழகியின் மீது ஆசை?” எனப் பகடியாடியது அவன் மனம்.
ஐராசந்தனை
ஊக்கப்படுத்தியபடி ஏராளமான குரல்கள் அவையில் எழுந்தன. யாரையும் நின்று பார்க்கவைக்கிற
எழுச்சியூட்டும் ஓசை. ஆனால் எதற்கும் செவிசாய்க்காமல் மனத்தை ஒருமுகப்படுத்தியவனைப்போல
நின்றிருந்தான் ஜராசந்தன. வில்லை நெருங்கினான். தொட்டுத் தூக்கி நிறுத்தினான். சட்டென
மனம் ஒடுங்கியது துரியோதனனுக்கு. அதுவரை அவனைப்பற்றி உருவாக்கி வைத்திருந்த மனக்கணக்கு
பொய்த்ததில் அதிர்ச்சியில் உறைந்தான். “இந்தத் துரியோதனனுக்காகவே பிறந்தவளடா இந்தக்
கிருஷ்ணை, பல ஜென்மங்களாகத் தொடரும் காதல் உறவடா இது. இதை அறுத்துவிடாதே ஜராசந்தன்.
விட்டு விலகி விடு” தன் எண்ணங்களைக் கோர்வையாக்கி அதை ஜராசந்தைனை நோக்கி அனுப்பியபடி
இருந்தான். ஜராசந்தன் வெகுகவனத்துடன் நாணை இழுக்கத் தொடங்கினான். நாணின் மறுநுனியைத்
தொடுவதற்குத் தோதாக வில்லை வளைத்தான். பாறையைப் போல கனத்த அந்த வில் ஜராசந்தனுடைய பலத்துக்குச்
சற்றே இளகி வளைந்தது. பலத்தை ஒருமுகப்படுத்திச் செலுத்தும் முயற்சியில் மூச்சைக் கட்டுப்படுத்தியதில்
அவன் தாடைகள் இறுகின. மார்பு புடைத்தெழ வயிறு உட்குழிந்தது. இன்னும் சில இழைகளே மிச்சம்
என்கிற நிலையில் மேலும் மூச்சை அடக்க முடியாதவனாக ஜராசந்தன் சுவாசிக்க எடுத்துக்கொண்ட
ஒரு கணத்தின் இடைவெளியில் தோள்கள் தளர்ந்தன. அதே தருணத்தில் அறைந்து தள்ளப்பட்டவனாகக்
கீழே தரையில் சரிந்தான். நடந்ததைப் புரிந்துகொள்ள அவனுக்குச் சில நொடிகள் தேவைப்பட்டன.
எழுந்து தாங்கமுடியாத சோர்வுடன் தலைகவிழ்ந்தபடி வெளியேறினான் ஜராசந்தன்.
இனம்புரியாத
மனக்கிளர்ச்சியுடன் துரியோதனுடைய பார்வை கிருஷ்ணையின்மீது படிந்தது. மனப்பதற்றம் பல
மடங்காகப் பெருகியபடி இருந்தது. அப்படியே எழுந்து வானில் பறக்கவேண்டும் போலிருந்தது.
உதடுகளைத் தொடர்ந்து ஈரப்படுத்தியபடி இருந்தான். அவள் பார்வை எங்கோ பார்வையாளர்களின் பக்கம் பதிந்திருந்தது. யாரைத் தேடுகிறாள் அவள்
என்னும் கேள்வி எழுந்தது. பெருமூச்சுவிட்டான். ஒவ்வொரு கணமும் வெற்றியை நோக்கி நெருங்குவதைப்போல
இருந்தது. அதே நேரத்தில் விழுந்துவிடுவோமோ என்கிற அச்சமும் உதறமுடியாதபடி ஒட்டிக்கொண்டிருந்தது.
ஒரு கோணத்தில் இவை எல்லாமே அபத்தமாகப்பட்டது. அவையைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று
தோன்றியது. ஆனால் செல்வதற்கும் மனமில்லை. உள்ளூரப் பொங்கிப் பிரவகிக்கிற பரபரப்பை வெளித்தெரியாமல்
மறைப்பதற்குச் சிரமப்பட்டான்.
மேடையில்
சல்லியன் சென்று நிற்பதைக் கவனித்தான். வில்லையே சுற்றிச்சுற்றி வந்தான் அவன். எளிதில்
வளைத்து நாணேற்றும் சூட்சமம் மறைந்திருக்கும் பாகத்தை அறிவதில் ஆவலுற்றவனைப்போல காணப்பட்டன்.
சல்லியனின் நடவடிக்கைகளைக் கண்டதும் குரூரமான ஒரு சிரிப்பு துரியோதனின் ஆழ்மனத்தில்
அரும்பியது. தன்னால் இந்த அளவுக்கு வன்மத்துடனும் எதிர்ப்புணர்வுடனும் இயங்கமுடியும்
என்பதை அவனால் நம்பவேமுடியவில்லை. உறவாலும் நட்பாலும் பிணைக்கப்பட்ட அவர்களைப்பற்றி
ஒரே கணத்தில் மிகத்தாழ்வான எண்ணங்களுக்கும் இடமளித்த மனப்போக்கைக் கடிந்துகொண்டான்.
சகஜமாக இருக்கவேணடும் என்பதில் முனைப்புற்றான். இளவரசனுக்குரிய கம்பீரத்தையும் பொலிவையும்
இழந்துவிடக்கூடாது என்று நிமிர்ந்து உட்கார்ந்தான். சல்லியன் வில்லைத் தூக்கி நிறுத்தி
நாணைத் தொடுவதை ஓரக்கண்ணால் பார்த்தான். மூச்சை அடக்கி நாணை வில்லின் விளிம்புவரை இழுத்தவன்
சிலகணங்கள் அப்படியே நிறுத்தினான். அதற்குமேல் தன்னால் முயற்சிசெய்ய முடியாது என்பதை
உணர்ந்துகொண்டதைப்போல அவன் முகம் வெளுக்கத் தொடங்கியது. வில்லில் படிந்த அழுத்தம் சட்டென
வெளிப்பட்டு வீழ்த்திவிடாத வகையில் கையை மெல்லமெல்லத் தளர்த்தினான். பிறகு வில்லையும்
நாணையும் எடுத்த இடத்தில் வைத்துவிட்டுத் தலைகுனிந்தபடி திரும்பினான். இருக்கைக்கு
வராமல் வாசல் வரைக்கும் நடந்து சென்று அவையைவிட்டே வெளியேறினான்.
“துரியோதனா”
என்றான் அருகில் வீற்றிருந்த கர்ணன். அவன் முகத்தில் படிந்திருந்த சிறு பதற்றம் மெல்லமெல்ல
சரியானது. “இப்போது நீதான் செல்லவேண்டும். வெற்றிக்கு வாழ்த்துக்கள் துரியோதனா. கிருஷ்ணை
உனக்குத்தான்” என்றபடி தோளைத் தட்டிக்கொடுத்தான். கர்ணனுடைய வாழ்த்துக்கள் அவன் மனதுக்குப்
பலமடங்கு தெம்பையளித்தது. நன்றியுடன் அவனைப் பார்த்தான். பிறகு நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும்
இருக்கையிலிருந்து எழுந்தான். சுய கட்டுப்பாட்டை மீறி அவன் பார்வை ஒரேஒரு கணம் ரத்தின
மேடையின் பக்கம் சென்று மீண்டது. கிருஷ்ணையின் பார்வையும் அவன்மீது பதிந்திருந்தது.-
அவனை மனசார வாழ்த்துவதைப்போல புலப்பட்டது அப்பார்வை. அவளைச் சொந்தமாக்கிக்கொள்ள இன்னும்
சில கணங்களே உள்ளன என்கிற எண்ணம் அவன் மனத்தில் அழுத்தம்பெறத் தொடங்கியது. புன்னகையுடன்
மேடையை நோக்கி நடந்தான். அரங்கத்தில் நிறைந்திருந்த எல்லோருடைய பார்வையும் அவன்மீதே
பதிந்திருந்தது.
புருவங்களின்
சேர்க்கையைப்போல வளைந்திருந்தது கரிய வில். அதன் இறுக்கமும் வளைவுகளும் பொலியும் மினுமினுப்பும்
கிருஷ்ணையை நினைக்கத் தூண்டின. திரும்பக்கூடாது என் மனத்துக்குக் கட்டளையிட்டபடியே
கள்ளத்தனமாக அவளிருந்த திசைக்குச் சென்று மீண்டன அவன் கண்கள். காலையில் அரங்கத்துக்குள்
காலெடுத்துவைத்தது முதல் உடல் ஒவ்வொரு நரம்பிலும் பொங்கிவழியத் தொடங்கிய இசை உச்சத்தை
நோக்கிப் பொங்குவதை இதயம் உணர்ந்தது. அந்த இசையை அவன் அதுவரை அனுபவித்ததில்லை. அவனுக்குள்
பொங்கும் காமத்தைத் துல்லியமாக மீட்டி உச்சத்தை நோக்கி அழைத்து சென்ற பல பெண்கள் அவனுடைய
அந்தப்புரத்தில் உண்டு. ஆனால் அவர்கள் எழுப்பிய இசை அல்ல இது. வேறு விதமான இசை. வேறுவிதமான
மென்மை. உதறவிடாமல் தொடரும் எண்ணங்கள் அவனைத் தடுமாறவைத்தன.
ஒரு விளிம்பிலிருந்து
மறுவிளிம்புவரை வில்லை ஒருமுறை தொட்டுத் தடவினான் அவன். அதன் உறுதியும் வழவழப்பும்
அவனை ஆச்சரியப்படுத்தியது. ஒருகணம் ஏதோ ஓர் உடலின் சதைப்பாகத்தைத் தீண்டியதைப்போலச்
சிலிர்த்தது. அதே நேரத்தில் சுனைநீரைத் தீண்டியதைப்போலக் குளிர்ச்சியாகவும் இருந்தது.
வெடித்துவிடுவதைப்போல இதயம் படபடத்து. குனிந்து வில்லை எடுத்து நிறுத்தினான். மார்பு
ஏறித் தாழ்ந்தது. எங்கெங்கும் மௌனம் நிலவியது. பூட்டப்படவேண்டிய நாணை எடுத்தான். அதில்
ஒருவிதப் பூமணத்தை உணர்ந்தபோது வியப்பாக இருந்தது. நாணின் ஒருநுனியை வில்லின் ஒரு விளிம்புடன்
கட்டினான். எஞ்சிய அதன் நீளத்துக்கேற்ப மெல்லமெல்ல அழுத்தம் தந்து வில்லை வளைத்தான்.
மறுநுனி வில்லின் விளிம்பைத் தொட்டுவிடும்போல இருந்தது. அடிவயிற்றைச் சுருக்கி மூச்சை
அடக்கி உடலின் முழுச்சக்தியையும் விரல்களுக்குக் கொண்டுவந்தான். எண்ணங்களுக்கேற்ப விரல்கள் இயங்கின. நாணின் முனை வில்லின் முனையைத்
தொட்டுவிட்டது. இழுத்துக்கட்டி முடிச்சிட இன்னும் சற்றே வில்லை வளைக்கவேண்டியிருந்தது.
ஆழ்மனத்தில் பொங்கிய இசை மீண்டும் நெருக்கத்தில் கேட்டது. கிருஷ்ணையின் மூச்சுக்காற்றும்
வியர்வை மணமும் நுகரக்கூடிய நெருக்கத்தில் இருப்பவைபோலத் தோன்றின. காந்தமாக ஈர்த்தன
அவள் கண்கள். காதோரத்தில் அலைந்தது குழல்கற்றை. சின்ன பழத்துண்டுகளைப்போன்ற உதடுகள்.
அவற்றுக்கே மேலே பூத்திருந்த பூனைமயிரின் வரிசை. எல்லாமே எதிரிலேயே காண்பதைப்போல தோற்றம்
தந்து மறைந்தன. கன்னத்துடன் கன்னம் இழைபடுவதைப்போல ஓர் உணர்வு. ஒரு வேகம். விரல் நரம்புகளில்
முறுக்கேறியபடி இருந்தது. இளகி இளகி நாண் இழுபட்டது. தலைமீது ஒரு பெரிய பாரம் இறங்கி
அழுத்தியதைப்போல இருந்தது. ஒருகணம் முழுக்க அந்த உணர்வு நீடித்தது. விரல்களின் இடையே
எஞ்சிய நாணின் நீளத்தை மறுநுனியில் பூட்டுவதற்குள் அக்கணம் உடைந்துவிட்டது. அடுத்த
கணமே ஒரு யானை தும்பிக்கையால் வளைத்தெடுத்து பூமியில் வீசியதைப்போலத் தரைமீது விழுந்தான்
துரியோதனன். அவன் உடல் வியர்வையில் நனைந்திருந்தது. அளவுகடந்த சோர்வும் அவமான உணர்வும்
தலைநிமிரவிடாமல் செய்தன. கிருஷ்ணையின் பக்கம் தானாகத் திரும்பி மீண்ட கண்கள் ஏமாற்றத்துடன்
தரைமீது பதிந்தன. மூச்சிரைக்க ஒரே கணத்தில் சக்தியெல்லாம் குன்றிவிட்டதைப்போலத் தளர்ச்சியுற்றான்.
அவையினர் அனைவருடைய பார்வையும் அவன்மீது பதிந்திருக்க, வாசலைநோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினான்
துரியோதனன்.
(கதைசொல்லி, ஏப்ரல் 2004)
s பாவண்ணன்
தொகுப்பு பாகம் 2
வலியின்
ஓவியம்