இரண்டு வாசல்கள்
துமிலனின் இயற்பெயர் என்.ராமசாமி. கும்பகோணத்தில் பிறந்தவர். தொடக்க காலத்தில் மாயவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு, ஏதோ ஒரு தருணத்தில் தலைமை அதிகாரியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அந்த வேலையைத் துறந்து சென்னைக்குக் குடிபெயர்ந்து பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கினார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வுடைய அவர் தன் எழுத்தாற்றலால் தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவராக மலர்ந்தார். பொதுவாசிப்புக்குரிய பல நூல்களையும் சிறார்களுக்கான கதைகளையும் நாவல்களையும் எழுதினார். என் பள்ளி நாட்களில் அவர் எழுதிய ’சி.ஐ.டி. சிறுவர்கள்’ என்கிற நாவலை விரும்பிப் படித்த நினைவுள்ளது.
ஆனந்தவிகடன், கல்கி, தினமணி கதிர் என பல பத்திரிகைகளில் துமிலன்
பணிபுரிந்தார். அவற்றில் பல நகைச்சுவைக்கட்டுரைகளையும் நடைச்சித்திரங்களையும் சிறுகதைகளையும்
நாவல்களையும் தொடர்ந்து எழுதினார். ஒரு குறிப்பிட்ட
வாழ்க்கைத்தருணத்தை அல்லது மனிதரை நகைச்சுவை ததும்ப சித்தரிப்பதில் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார்.
அது இயல்பாகவே அவருக்குக் கைவந்த கலையாக இருந்தது. அது ஏராளமான வாசகர்களை அவருக்குத்
தேடித் தந்தது.
ஐம்பதுகளின் தொடக்கத்தில் தினமணி நிறுவனம் தினமணி கதிர் என்னும்
பெயரில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கியது. அதன் ஆசிரியராக துமிலன் பணியாற்றினார்.
அப்போது ’கிராம மோகினி’ என்னும் தலைப்பில்
ஒரு தொடர்கதையை அப்பத்திரிகையில் எழுதினார். கிராமங்களில் வாழ வழியில்லாமல் நகரத்தை
நாடிவந்து தமக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக மனிதர்கள் படும் அல்லல்களையும்
அந்த முயற்சிகளில் கிடைக்கும் வெற்றி தோல்விகளையும் கருப்பொருளாகக் கொண்டு பல எழுத்தாளர்கள்
எழுதிவந்த சமயத்தில் நகரத்திலிருந்து கிராமத்தை நோக்கிச் செல்பவர்களைப் பாத்திரங்களாகக்
கொண்டு மாறுபட்ட கோணத்தில் துமிலன் தன் தொடர்கதையை எழுதினார். அந்தப் புதுமைக்காகவும்
அவருடைய எழுத்தாற்றலுக்காகவும் அந்தத் தொடர்கதை அனைவராலும் விரும்பி வாசிக்கப்பட்டது.
சிறிது காலத்துக்குப் பிறகு 1958 ஆம் ஆண்டில் பழனியப்பா பிரதர்ஸ் வழியாக ’கிராம மோகினி’
நாவல் வெளிவந்தது. கதையின் கட்டமைப்புக்காகவும் நகைச்சுவைக்காகவும் தமிழ்நாவல்கள் வரிசையில்
குறிப்பிடத்தக்க படைப்பாக நிலைபெற்றது.
*
கிராமங்களில்தான் உண்மையான இந்தியா வாழ்கிறது என்று கூறினார்
காந்தியடிகள். நகரங்களைச் சார்ந்திருக்காமல், இந்தியக் கிராமங்களை எல்லா நிலைகளிலும்
தன்னிறைவு பெற்ற ஓர் அலகாகக் கட்டமைக்கவேண்டும் என்பதுதான் அவருடைய கனவு. செய்யும் தொழிலையொட்டி மனிதர்கள் உருவாக்கிக்கொள்ளும்
வேறுபாட்டுணர்வை அவர் வெறுத்தார். மனிதனின் உள்ளமே அவனுடைய தகுதியை மதிப்பிடும் அளவுகோலாக
இருக்கவேண்டுமே தவிர, ஒருபோதும் அவன் செய்யும் தொழிலை அளவுகோலாகக் கருதக்கூடாது என
காந்தியடிகள் ஒவ்வொரு மேடையிலும் மீண்டும் மீண்டும் சொன்னபடி இருந்தார்.
நூல் நூற்பதும் தறி நெய்வதும் ஒவ்வொரு வீட்டிலும் நிகழவேண்டும்
என காந்தியடிகள் கனவு கண்டார். அனைவரும் கதராடைகளை அணிவதன் வழியாக கிராமக் கைத்தொழிலான நெசவுத்தொழிலையும் நெசவுத்தொழிலை
நிலைத்திருக்க வைப்பதன் வழியாக பருத்தி விவசாயத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்கமுடியும்
என்று அவர் நம்பினார். கிராமத்தொழில்கள் நசிந்துவிடாதபடி
காப்பாற்றப்படுவதும் கிராமங்களில் உற்பத்தியாகும் பொருட்களுக்கான சந்தை, கிராமத்தவர்கள்
அணுகுவதற்கு ஏற்றவகையில் எளிதாக அமையவேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.
கிராமப்புறங்களில் கல்விப்பயிற்சியை அளிக்கவும் சுகாதாரம் தொடர்பான
விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராமத்தினர் பணிபுரிவதற்கு ஏற்றவகையில் பல்வேறு களங்களை
ஏற்படுத்திக் கொடுக்கவும் நகரத்தைச் சேர்ந்தவர்கள் கிராமங்களை நோக்கிச் சென்று தொண்டாற்றவேண்டும்
என தேசத்தில் வாழும் அனைவருக்கும் காந்தியடிகள் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். காந்தியடிகளின்
சொல்லை, தனக்கிடப்பட்ட கட்டளையாக எடுத்துக்கொண்டு அத்தருணத்தில் எண்ணற்ற இளைஞர்கள்
நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கிச் சென்று தொண்டாற்றினர்.
கிராமங்களுக்குச் சென்றாலும் அவர்களுக்கு எவ்வகையிலான சேவையை
வழங்குவது என்பது புரியாமல் தடுமாறித் தவித்த
இளைஞர்களும் அந்தக் காலத்தில் இருந்தார்கள். களநிலவரங்களைப்பற்றிய முழுமையான தெளிவு
இல்லாததால் முழு விசையோடு தம் பங்களிப்பைக் கொடுக்க இயலாமல் குழம்பியவர்களும் இருந்தார்கள்.
ஆழம் தெரியாமல் காலை விட்டதுபோல, பிழையான கோணத்தில் தொடங்கி, சங்கடத்தில் மூழ்கியவர்களும்
இருந்தனர்.
காந்தியடிகள் விடுத்த வேண்டுகோளின் விளைவாக கிராமங்களை வளர்ச்சியின் பாதையில் செலுத்த விழையும்
மோகம், அவர் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் பெண்கள் வேறுபாடின்றி, இளைய தலைமுறையினரை ஈர்க்கும்
விசையாக அமைந்தது. இத்தகு பாத்திரங்களின் செயல்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும்
தொகுத்துக் காட்சிப்படுத்தும் விதமாக அக்காலத்தில் துமிலன் எழுதிய நாவலே கிராம மோகினி.
தனக்கு எளிதாகக் கைவரக்கூடிய நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்த
இந்த உள்ளடக்கம் இசைவாக இருக்கும் என துமிலன் முடிவு செய்திருக்கவேண்டும். உடனே, அந்தக்
கோணத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்கிவிட்டார். ஒரு மோகினியின் வசீகரத்தையும் கிராமத்தையும்
இணைத்து உருவகப்படுத்தும் வகையில் அந்தத் தலைப்பு அமைந்துவிட்டது. நாவலை எழுதத் தொடங்குவதற்கு
முன்பே தான் அந்தத் தலைப்பு தன் மனத்தில் உதித்துவிட்டதாகவும், அதையடுத்து பல மாதங்களுக்குப்
பிறகே சிறுகச்சிறுக அந்த நாவலை எழுதி முடித்ததாகவும் துமிலன் தன் முன்னுரையில் எழுதியிருக்கிறார்.
நாவலை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக கிராமத்துக் காட்சிகளை நேரிடையாகப் பார்த்து உள்வாங்கிக்கொள்வதற்காக
கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நடுவக்கரை என்னும் கிராமத்தில் தன் உறவினர் வீட்டில் சிறிது
காலம் தங்கியிருந்ததாகவும், அக்கிராமத்தைச் சுற்றியிருந்த திருபுவனம், திருவிடைமருதூர்,
ஆடுதுறை போன்ற கிராமங்களுக்கு அடிக்கடி சென்று சுற்றித் திரிந்ததாகவும், நாவலின் கட்டமைப்பு
தொடர்பான திட்டம் அப்போது ஒரு பொறியாக தன் மனத்தில் உருவானதாகவும் அம்முன்னுரையில்
பதிவு செய்திருக்கிறார் துமிலன்.
துமிலனுக்கு வழிகாட்டிய அந்தக் கலங்கரைவிளக்கத்தை நாவலை வாசித்துமுடித்ததும்
நம்மாலும் உணரமுடிகிறது. அத்தகைய வலிமையானதொரு உருவகத்தின் வழியாகவே காலவெள்ளத்தில்
இந்த நாவல் நிலைத்து நின்றிருக்கிறது. எதையும் எளிமைப்படுத்தாமலும் சிறுமைப்படுத்தாமலும்,
அதே சமயத்தில் இயல்பான நகைச்சுவையுணர்வோடு ஒரு படைப்பை எழுதமுடியும் என்பதற்கு துமிலனின் ’கிராம மோகினி’ நல்லதொரு எடுத்துக்காட்டு.
*
சென்னையில் வசிக்கும் ஒரு நடுத்தரக்குடும்பத்தில் நிகழும் தினசரிச்
செயல்களைப் பட்டியலிட்டபடி தன் நாவலைத் தொடங்குகிறார் துமிலன். அந்தக் குடும்பத்தின்
தலைவர் சதாசிவம். அரசாங்க அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். கைநிறைய ஓய்வூதியம் வாங்குகிறார்.
அவர் மனைவி தர்மு. குடும்ப வேலைகளை நேர்த்தியாக நிர்வகிப்பவர். அவர்களுடைய ஒரே மகன்
ரஞ்சன். விடுதியில் தங்கி கல்லூரிப்படிப்பை முடித்தவன். ஒரே மகள் சுசிலா.
இருவருமே திருமண வயதை அடைந்தவர்கள். மகன் ஏதேனும் வேலைக்குச்
சென்று சம்பாதிக்கத் தொடங்கினால் திருமணம் செய்துவைத்துவிடலாம் என்று நினைக்கிறார்
சதாசிவம். ஆனால் ரஞ்சனுக்கு அந்த எண்ணமே இல்லை. அவன் அரசியலில் ஆர்வம் கொண்டிருக்கிறான்.
காந்தியம் முதல் மார்க்சியம் வரைக்கும் தனக்குத் தெரிந்ததையெல்லாம் பேசுகிறான். ஆனால்
எதிலும் தெளிவில்லாத காரணத்தால் அடிக்கடி தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கி அவமானப்படுகிறான்.
ஒருமுறை அவன் உள்ளூர் காவலர்களால் கைது செய்யப்பட்டு சிறைப்படும் அளவுக்குப் போய்விடுகிறது.
கடைசியில் சதாசிவம்தான் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அவனை விடுவித்து வீட்டுக்கு அழைத்துவருகிறார்.
ரஞ்சன் வீட்டில் இல்லாத சமயங்களில் அவனை வாய்க்கு வந்தபடி திட்டித்
தீர்ப்பதன் வழியாக தன் சலிப்புக்கு ஒரு வடிகாலைத் தேடிக்கொள்கிறார் சதாசிவம். அப்போதெல்லாம்
அவருடைய மகள் “ஏதேதோ புத்தகங்கள் படிப்பதால் இப்படி சில பைத்தியக்காரத்தனமான வேலைகளைச்
செய்து சிக்கலில் சிக்கிக்கொள்கிறான் அவன். கவலைப்படாதீர்கள் அப்பா. யாராக இருந்தாலும்,
எல்லாப் பைத்தியமும் கொஞ்சகாலம்தான் இருக்கும். பிறகு தானாகவே மறைந்துவிடும்” என்று
சொல்லி சதாசிவத்தைத் தேற்றுகிறாள்.
ரஞ்சனுக்கு ஒரு திருமணம் செய்துவைத்துவிடலாம் என நினைத்து ஒருநாள்
அவனிடம் பேச்சு கொடுக்கிறார் சதாசிவம். வழக்கம்போல அந்த உரையாடல் வேறொரு திசை நோக்கித்
திரும்பி, அவருக்குக் கோபத்தைத் தூண்டிவிடுகிறது. அதனால் மனம் கசந்து “புத்தகங்களைப்
படித்துத் தெரிந்துகொண்ட அறிவால் ஒரு பயனும் இல்லை. ஏதாவது ஒரு வேலையைத் தனியாகச் செய்து
உன்னை நீ நிரூபிக்கவேண்டும். ஊரிலே நமக்குச் சொந்தமாக ஏராளமான நிலம் இருக்கிறது. தொழிலாளி,
விவசாயி, ஏழை, பாட்டாளி என ஏதேதோ பேசுகிறாயே, உனக்கு நிலத்தை நல்ல விளைச்சலைக் கொடுக்கும்
வகையில் நிர்வகிக்கத் தெரியுமா? கிராமத்துக்குச் சென்று உன் திறமையை நிரூபித்துக் காட்டு”
என்று சவால் விடுகிறார். “அதென்ன அப்பா, இப்படிச் சொல்லிவிட்டீர்கள். என்னை வேண்டுமானால்
கிராமத்துக்கு இப்போதே அனுப்பிப் பாருங்கள்.
நான் வெற்றி பெற்றுக் காட்டுகிறேன்” என்று அறிவிக்கிறான் ரஞ்சன்.
திருபுவனம் என்கிற ஊரில் சதாசிவத்துக்குச் சொந்தமாக இருபது வேலி நிலமும் ஒரு பெரிய இலுப்பைத்தோப்பும்
இருக்கின்றன. அந்த ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர்தான் அந்த நிலங்களையெல்லாம் பொறுப்போடு
கவனித்துவருகிறார். அவருக்குத் துணையாக இருந்து நிலங்களையெல்லாம் பார்த்துக்கொள்ளும்படியும்
அவருடன் பழகி விவசாயத்தைப்பற்றிய ஞானத்தை வளர்த்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தி ரஞ்சனை
கிராமத்துக்கு அனுப்பிவைக்கிறார் சதாசிவம்.
கிராமத்துக்கு வரும் ரஞ்சன் மகாலிங்கத்தின் உதவியோடு நிலங்களையும்
அவர்களுக்குச் சொந்தமான தோப்புகளையும் சுற்றிப் பார்க்கிறான். கிராமங்களில் வழக்கமாகப்
பின்பற்றுகிற விவசாய முறைக்கு மாறாக, அறிவியல் வளர்ச்சிக்கேற்ற வகையில் புதுவிதமான
உரங்களை வாங்கிப் பயன்படுத்தி கூடுதலான விளைச்சலை அறுவடை செய்து வெற்றி ஈட்டவேண்டும்
என்று அவன் கனவு காண்கிறான். இளமையின் வேகம் காரணமாக அவன் பேசுவதாக நினைத்து மகாலிங்கம்
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொள்கிறார்.
அந்தக் கிராமத்தில் வேறொரு பகுதியில் அவருக்குச் சொந்தமாக ஒரு
வீடு இருந்தது. அந்த வீட்டில் ரஞ்சன் தங்கிக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார் மகாலிங்கம்.
மகாலிங்கத்துக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் தங்கம். ரஞ்சனைப் பார்த்த முதல்
கணத்திலேயே அவனிடம் மனத்தைப் பறிகொடுத்துவிடுகிறாள் தங்கம். ஒருமுறை ரஞ்சன் தங்கியிருந்த
வீட்டுக்குச் செல்கிறாள் அவள். அந்த வீட்டின் தோட்டத்தில் கொய்யா மரங்களை அவர்கள் வளர்த்துவந்தனர்.
அந்த மரங்களில் பழுக்கும் பழங்கள் சுவையானவை. அவற்றை விரும்பிச் சாப்பிடக்கூடியவள்
அவள். ஒருநாள் அந்த வீட்டின் பக்கமாகச் செல்லும்போது கொய்யாப்பழங்களை நினைத்துக்கொண்டு
வீட்டுக்குள் செல்கிறாள். வேலைக்காரரிடம் தெரிவித்துவிட்டு தோட்டத்துக்குச் செல்கிறாள்.
அங்கே மண்வெட்டி பிடித்து நிலத்தில் கொத்திக்கொண்டிருக்கும் ரஞ்சனைப் பார்த்து வியப்படைகிறாள். அவன் நின்றிருந்த இடத்துக்குப் பக்கத்தில் தக்காளிப்பாத்திகள்
இருக்கின்றன. தக்காளிச் செடிகளுக்கு அருகில் பால் பாத்திரம் வைக்கப்பட்டிருப்பதை அவள்
பார்க்கிறாள். தக்காளிச்செடிக்கு பால் நல்ல எரு என்றும் அவ்வப்போது செடிக்கு பாலூற்றி
வந்தால் தக்காளிப்பழம் மொழுக்மொழுக்கென்று
காய்க்கும் என்று அவன் சொல்கிறான். வேடிக்கைக்காக அவன் சொல்லவில்லை என்பதையும் ஆத்மார்த்தமான
நம்பிக்கையோடு சொல்கிறான் என்பதையும் அவளால் புரிந்துகொள்ள முடிகிறது. அவனுடைய விவசாய
ஆர்வம் பாராட்டுக்குரியதா, நகைச்சுவைக்குரியதா என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆயினும் ஏதோ ஓர் ஈர்ப்பின் காரணமாக அவனைத் தன் மனத்தில் நிறைத்துக்கொள்கிறாள்.
சென்னையிலேயே வேறொரு பகுதியில் கங்காசுந்தரம் – பார்வதி இணையரின்
குடும்பம் வசித்துவருகிறது. பரம்பரைப் பணக்காரர் அவர். சாரதா சட்டத்தைப்பற்றி சட்டசபையில்
பேச்சு நடைபெற்றபோது, பெண்களின் திருமண வயதை பதினெட்டாக நிர்ணயம் செய்யவேண்டும் என
வைசிராயிடம் குரல் கொடுத்தவர். அவருக்கு மூன்று பெண்கள். மூவரும் அவரால் சுதந்திரமாக
வளர்க்கப்பட்டவர்கள். மூத்தபெண் நாகரத்தினம் கல்லூரி ஆசிரியை. இரண்டாவது பெண் சுரபி
வழக்கறிஞர். முன்றாவது பெண் அம்பிகா பட்டம் பெற்றவள். சீர்திருத்த மனப்பான்மை கொண்டவள்.
கங்காசுந்தரம் தம் பெண்கள் தமக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்து
அதில் உழைக்கும் சுதந்திரத்தையும், எப்போது வேண்டுமானாலும் தமக்குப் பொருத்தமான மாப்பிள்ளைகளைத்
தேடி மணந்துகொள்ளலாம் என்கிற சுதந்திரத்தையும் அளித்திருக்கிறார். திரைத்துறையில் துணைநடிகைகளுக்கு
ஆதரவாக நின்று அவர்களுடைய முன்னேற்றத்துக்கு உழைக்கவேண்டும் என்று முடிவெடுக்கிறார்
இளைய மகளான அம்பிகா.
அதே நேரத்தில் ஒரு புதிய படத்தைத் தொடங்கவிருந்த ஒரு நிறுவனம்
தம் நடிக நடிகையர் குழுவோடு திருபுவனம் என்னும் ஊருக்குச் செல்ல முடிவெடுக்கிறது. அம்பிகாவும்
அதே ஊருக்குச் சென்று அவர்களுக்கு உற்ற துணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும்
என நினைக்கிறாள். உடனடியாக அவள் நகரத்திலிருந்து திருபுவனம் கிராமத்துக்குச் சென்று
ஒரு வீடெடுத்துத் தங்குகிறாள். எதிர்பாராத விதமாக திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், கூடுதலான
செலவுக்கஞ்சி தன் படத்தயாரிப்பை நிறுத்திவிடுவதால் தம் கிராமப்பயணத்தை ரத்து செய்துவிடுகிறது.
அவர்கள் முடிவின் காரணமாக அம்பிகா சற்றே ஏமாற்றமுற்றாலும், திருபுவனத்துக்கு வந்ததற்குப்
பயனாக, கிராமத்தைச் சுற்றிப் பார்த்து அதைப்பற்றி நன்றாகப் புரிந்துகொள்ளலாம் என்கிற
முடிவோடு அங்கேயே தங்குகிறாள். தினமும் கிராமத்தைச் சுற்றிவருகிறாள். தற்செயலாக ஒருநாள்
ரஞ்சனும் அவளும் சந்தித்துக்கொள்கிறார்கள். அவளுடைய புதுமைவேட்கையைக் கண்டு அவள் மீது
ஈடுபாடு கொள்கிறான் ரஞ்சன்.
இவர்களுடைய வருகைக்கு முன்னும் பின்னுமான சில நாட்களில் ஓய்வுபெற்ற
ஆசிரியர் குடும்பமொன்று கிராமத்தில் கல்வியறிவைப் பரப்பும் நோக்கத்துடன் திருபுவனத்துக்கு
வந்து சேர்கிறது. நீண்ட காலமாகத் திருமணம் செய்துகொள்ளாமலேயே தனிமையில் வாழ்ந்துவரும்
வழக்கறிஞரான கேதாரி என்பவரும் கிராமத்தைச் சீர்திருர்த்தும் நோக்கத்துடன் திருபுவனத்தில்
குடியேறுகிறார். யாரோ ஒரு வடநாட்டுக்காரர் கிராம முன்னேற்றம் தொடர்பாக நிகழ்த்திய இந்திச்
சொற்பொழிவைக் கேட்டு, தம்மால் முடிந்த அளவுக்குத் தாமும் கிராம முன்னேற்றத்துக்கு ஏதேனும்
செய்யவேண்டும் என்கிற முடிவோடு ஓய்வுபெற்ற ஆசிரியரான நரசிம்மம் தம் குடும்பத்தோடு திருபுவனத்திற்கு
வந்து சேர்கிறார். அவரைத் தொடர்ந்து ஒரு டாக்டரும் ஒரு சாமியாரும் வருகிறார்கள். எல்லோருடைய
நெஞ்சிலும் ஒரே நோக்கமே குடியிருக்கிறது. அது கிராம முன்னேற்றம்.
திருபுவனம் மிகச்சிறிய கிராமம் என்பதால் குறுகிய காலத்திலேயே
அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிவிடுகிறார்கள். ஒத்த நோக்கம் கொண்டவர்கள் என்பதால் அனைவரும் சேர்ந்து
ஒரு சங்கம் தொடங்குகிறார்கள். சங்கத்தின் சார்பில் தினந்தோறும் கூட்டம் நடைபெறுகிறது.
அவர்கள் நிகழ்த்தும் உரைகளை கிராமத்தினர் அனைவரும் பொறுமையாகக் கேட்கிறார்கள். கிராமத்தினருக்கு
எல்லாமே ஏதோ வேடிக்கையாக இருக்கிறது. அந்த உரைகள் தொடர்பாக அவர்களுக்கு எதுவும் பிடி
கிடைக்கவில்லை. புதியவர்கள் அனைவரும் நகரத்திலிருந்து சுற்றுலா மாதிரி கிராமத்துக்கு
வந்திருப்பதாகவும் மக்களுடன் தாராளமாகச் சேர்ந்து பழகுவதற்காக இப்படி கிராம சேவை என்று
பேசிக்கொண்டு திரிவதாகவும் நினைத்துக்கொள்கிறார்கள்.
இப்படி கிராமத்தைச் சீர்திருத்தவேண்டும் என்கிற மோகத்தோடு நகரத்திலிருந்து
வந்து இறங்கியவர்களை படிப்படியாக தொடக்க அத்தியாயங்களில் அறிமுகப்படுத்திவிட்டு, அவர்களுடைய
செயல்பாடுகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விவரித்துச் செல்கிறார் துமிலன். அவர்களுடைய
ஒவ்வொரு செயலும் அறியாமையையும் புரியாமையையும்
உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன. நோக்கம் நல்ல நோக்கமாக இருந்தாலும் அவர்களுடைய
செயல்கள் அதற்கு இசைவானதாக இல்லை. சில சமயங்களில் எதிர்விளைவுகளை உருவாக்குவதாகவும்
அமைகின்றன.
*
வயல்வெளி என்பது எங்கெங்கும் வயல்களை மட்டுமே கொண்ட பரந்தவெளியாக
இல்லாமல், ஆங்காங்கே திட்டுத்திட்டாக பசுமை நிறைந்த தோப்புகளோடு இருக்கவேண்டும் என்பது
ரஞ்சனின் எண்ணம். அவனுடைய குடும்பத்துக்கு
ஆங்கே முப்பது வேலி நிலம் இருந்தபோதும் அவையனைத்தும் எங்கெங்கோ தள்ளித்தள்ளி வெவ்வேறு
இடங்களில் இருக்கின்றன. இடையிடையே இருக்கிற
பகுதிகள் கேதாரி என்பவருக்குச் சொந்தமாக இருக்கின்றன. அவற்றில் விவசாயம் நிகழவில்லை
என்பதால் கரடாகவே இருக்கிறது. அந்த நிலப்பகுதியும் தம் நிலத்தோடு இணைந்திருந்தால் நன்றாக
இருக்கும் என அவனுக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அவரிடம் அந்த நிலத்தைப்பற்றி
நேரிடையாகப் பேச அவன் மனம் துணியவில்லை.
அடுத்து சில மாதங்களிலேயே ரஞ்சனைத் தவிர, மற்றவர்கள் அனைவரும்
விவசாயத்தின் மீது கொண்டிருந்த ஆர்வத்தை இழந்து, கிராம வாழ்க்கையை நிம்மதியாக வாழத்
தொடங்குகிறார்கள். ரஞ்சன் மட்டுமே ஏதாவது புதுமையாகச் செய்து கிராம விவசாயிகளின் வாழ்வில்
ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறான். அவனுடைய எண்ணம் உயர்ந்ததாக இருக்கிறதே
தவிர, அதைச் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை. அதனால்
அனைவராலும் அவன் தனித்து விடப்படுகிறான்.
நல்ல விளைச்சலுக்கு நல்ல உரத்தை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தவேண்டும்
என்பது ரஞ்சனின் எண்ணம். ஆனால் மரபான எருவைப் பயன்படுத்தினாலே போதும் என்பது விவசாயிகளின்
எண்ணமாக இருக்கிறது. ரஞ்சன் இலவசமாகவே அனைவருக்கும் உரத்தை வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னபோதும்
அதற்கு அவர்கள் உடன்பட மறுக்கிறார்கள். அதைக் கேட்டுக் குழப்பத்தில் மூழ்கும் ரஞ்சன்
ஒரு கட்டத்தில் விவசாயிகளுக்கே தெரியாமல் தன்னுடைய உதவியாளின் துணையோடு நள்ளிரவு நேரத்தில்
உரத்தைச் சுமந்து எடுத்துச் சென்று நிலங்களில் தூவிவிட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுக்கிறான்.
கூடுதலான விளைச்சல் கிடைக்கும்போது அவர்களிடம் அந்த உண்மையைத் தெரிவித்துக்கொள்ளலாம்
என்று அவன் நினைக்கிறான். கிராம வளர்ச்சி என்னும் மோகம் அவனை ஆட்டிப்படைக்கிறது.
இது நாவலின் ஒரு தளம். இன்னொரு தளத்தில் தங்கம், அம்பிகா ஆகிய
இரு இளம்பெண்களுக்கும் ரஞ்சன் மீது பிறக்கும் ஈடுபாட்டை முன்வைக்கும் பல்வேறு காட்சிகள்
முன்வைக்கப்படுகின்றன. ரஞ்சன் இரு பெண்கள் மீதும் விருப்பத்தை வளர்த்துக்கொள்கிறான்.
வாழ்க்கைத்துணையாக யாரைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் அவன்
தடுமாறுகிறான். தங்கத்தை நெருங்கும்போது அம்பிகாவையும் அம்பிகாவை நெருங்கும்போது தங்கத்தையும்
நினைத்துக் குழம்புகிறான். அவன் நெஞ்சில் கிராம மோகமும் காதல் மோகமும் முட்டி மோதுகின்றன.
*
கிராம சீர்திருத்தத்துக்காக திருபுவனத்துக்கு வந்து, நாளடைவில்
அந்த ஆர்வம் வற்றி கிராமத்திலேயே தங்கிவிட்ட கூட்டத்தினரில் ஒருவரான வழக்கறிஞரான கேதாரிக்கு
எதிர்பாராத விதமாக அம்பிகா மீது ஈடுபாடு பிறக்கிறது. அந்த விருப்பமே அவரை அக்கிராமத்திலேயே
தங்கவைக்கிறது. அவளை எப்படியாவது தன்னவளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என அவர் நினைக்கிறார்.
ஐம்பது வயதைக் கடந்தவர் என்றபோதும், அந்த ஆசை அவரை ஆட்டிப் படைக்கிறது. அவளோடு உரையாடுவதற்கான பல தருணங்களை அவரே உருவாக்கி,
தந்திரமாக அவளை நெருங்க முயற்சி செய்கிறார்.
ஒருநாள் இரவில் உரம் தெளிப்பதற்காக ஊருக்கு வெளியே இருக்கும்
நிலத்தை நோக்கிச் செல்கிறான் ரஞ்சன். இரவு வேளையில் தன் வீட்டைக் கடந்து தன்னந்தனியாகச்
செல்பவனைப் பார்த்து சந்தேகம் கொள்கிறார் கேதாரி. ஒருவேளை ரஞ்சனும் அம்பிகாவும் இரவு
நேரத்தில் தனிமையில் சந்தித்து உரையாடுகிறார்களோ என்கிற எண்ணம் அவரை வாட்டத் தொடங்குகிறது.
உடனே தன் வேலைக்காரனை அழைத்து, ரஞ்சனைப் பின்தொடர்ந்து சென்று அவன் நடவடிக்கைகளைக்
கவனித்துவிட்டு வந்து தெரிவிக்குமாறு அனுப்பி வைக்கிறார். தனிமைக்குத் துணையாக அவன்
இரும்புக்குண்டு பதித்த கைத்தடியை எடுத்துக்கொண்டு செல்கிறான்.
ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டிருந்த குடிசைப்பகுதிக்குள்
முதலில் செல்கிறான் ரஞ்சன். பிறகு அங்கிருந்து விவசாய நிலப்பகுதிக்கு நடந்துசெல்கிறான்.
ஒரு நிலத்துக்கருகில் நின்று கைச்சுமையாகக் கொண்டுவந்த பையை அவிழ்த்து, அதிலிருந்த
உரத்தூளை கைநிறைய எடுத்து எல்லாப் பக்கங்களிலும் வீசுகிறான். அவன் என்ன செய்கிறான் என்பதையே புரிந்துகொள்ள முடியாத
வேலைக்காரன் பின்பக்கமாக மறைந்து சென்று தன் கைத்தடியால் அவனுடைய தலையில் ஓங்கி அடிக்கிறான். ஆ என்று அலறியபடி அங்கேயே மயங்கி விழுகிறான் ரஞ்சன்.
உடனே ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குத் திரும்பிய வேலைக்காரன் நடந்தவற்றை கேதாரியிடம்
தெரிவிக்கிறான். அம்பிகாவை அவன் சந்திக்கவில்லை என்பது அவருக்கு ஆறுதலாக இருக்கிறது.
அந்த நிம்மதியால் ரஞ்சன் அடிபட்டதைப்பற்றி அவர் பெரிதாக எதுவும் நினைக்கவில்லை.
வரப்போரமாக அடிபட்டு விழுந்துகிடந்த ரஞ்சனை அடுத்தநாள் காலையில்
நிலத்துக்குச் சென்றவர்கள் ஓட்டமாக ஓடிவந்து மகாலிங்கத்திடம் செய்தி தெரிவிக்கின்றனர்.
உடனே அவர் அவனைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு நகரத்து மருத்துவமனைக்குச் செல்கிறார்.
மருத்துவர்கள் பல சோதனைகளுக்குப் பிறகு அவனுக்கு மருத்துவம் செய்து கண் விழிய வைக்கின்றனர்.
அவனால் எதையும் கோர்வையாகத் தொகுத்துப் பார்க்க இயலவில்லை. மனக்குழப்பம் ஒரு நோயாக
அவனைக் கொஞ்சம்கொஞ்சமாக அரிக்கிறது. அவன் நோய்வாய்ப்பட்ட செய்தியை அறிந்துகொண்டதும்
அவனுடைய பெற்றோரும் தங்கையும் திருபுவனத்துக்கு வந்துவிடுகின்றனர்.
கிராமத்தினர் அனைவருமே ரஞ்சன் மீது பரிவு கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
விவசாயம் சார்ந்த அவனுடைய செயல்களை வெற்று ஆர்வக்கோளாறின் வெளிப்பாடுகளாக மட்டுமே அவர்கள் கருதியபோதும், அவனுடைய கபடற்ற அன்பை
விரும்புகிறவர்களாகவே இருக்கின்றனர்.
*
ரஞ்சன் விரைவில் குணம்பெற வேண்டும் என தங்கமும் அம்பிகாவும்
விரும்புகின்றனர். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய இருவருமே தயாராக இருக்கின்றனர்.
தம் நிலத்துக்கு நடுவே ஆங்காங்கே கரடாக இருந்த கேதாரியின் நிலப்பகுதிகள் தமக்குச் சொந்தமாக
இருந்தால், அப்பகுதிகளை பசுமை சூழ்ந்த காடாக மாற்றுகிற கனவு ரஞ்சனிடம் குடிகொண்டிருந்ததை அம்பிகா அறிந்திருந்தாள்.
ஒருவேளை அக்கனவை உண்மையாக்கிக் கொடுத்தால் அவன் மனக்குழப்பம் தெளிந்து பித்து நிலையிலிருந்து
நல்ல நிலைக்கு மாறிவிடக்கூடும் என அவள் மனத்தில் ஓர் எண்ணம் எழுகிறது. அந்நிலத்துக்குச்
சொந்தக்காரரான கேதாரியிடம் அதைப்பற்றிப் பேசி வாங்கி ரஞ்சனிடம் அளிக்க அவள் விரும்புகிறாள்.
ஒரு நாள் கேதாரியைச் சந்திக்கச் செல்கிறாள் அம்பிகா. தனித்து
வாழும் அவருக்கு கரடாகக் கிடக்கும் அந்நிலத்தின் மீது எந்தப் பற்றும் இல்லை. அவள் பெயருக்கே
அந்நிலத்தை எழுதிக் கொடுக்க அவர் தயாராக இருக்கிறார். ஆனால் அதற்கு ஈடாக, அவள் தன்னைத்
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றொரு கோரிக்கையை முன்வைக்கிறார். ஓர் உதவிக்குப்
பதில் உதவியாக அவர் அவளையே விலையாகக் கேட்கிறார். அதைக் கேட்டு கோபமுற்று அவ்வீட்டைவிட்டு
உடனடியாக வெளியேறிவிடுகிறாள்.
ஒருசில நாட்கள் தனிமையில் அமர்ந்து யோசிக்கும்போது கேதாரியின்
திட்டத்துக்கு உடன்பட்டு அந்நிலத்தைப் பெற்று, தன் அன்புப்பரிசாக அதை ரஞ்சனிடம் அளிக்கலாம்
என்றொரு எண்ணம் அம்பிகாவின் மனத்தில் எழுகிறது. அடுத்த முறை கேதாரியைச் சந்திக்கச்
செல்லும்போது அவருடைய திட்டத்துக்குத் தன் இசைவைத் தெரிவிக்கிறாள். வீட்டில் தெரிவித்து
நல்ல முடிவைத் தெரிவிப்பதாகவும் சொல்கிறாள். கேதாரியும் அச்சொல்லை நம்பி அவள் பெயரில்
ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த பத்திரத்தை அவளிடம் அளிக்கிறார். அன்றே அப்பத்திரத்தை
எடுத்துவந்து ரஞ்சனிடம் கொடுக்கிறாள் அம்பிகா. ரஞ்சன் அப்பத்திரத்தை நெஞ்சோடு வைத்துத்
தழுவிக்கொள்கிறான். அவனுக்குத் தன்னால் முடிந்த வகையில் ஏதோ ஓர் உதவி செய்துவிட்டதாக
அவள் நினைத்து மனநிறைவடைகிறாள்.
ஆனால் அம்பிகா எதிர்பார்த்தபடி ரஞ்சனின் மனநோய் குணமடையவில்லை.
அதற்கிடையில் ரஞ்சனுக்குத் திருமணம் செய்துவைத்தால் அந்த நோய் குணமடையக் கூடும் என
அவனுடைய பெற்றோர் நினைக்கின்றனர். தங்கம் அவனை மணந்துகொள்ள முன்வருகிறாள். மணமேடையில்
இருவரும் அமர்ந்திருக்கும்போது, நகரத்தைச் சேர்ந்த காவல் நிலையத்திலிருந்து காவலர்கள்
வந்து நிற்கிறார்கள். அவன் மனநோயோடு இருந்த தருணத்தில் என்றோ ஒருநாள் வீட்டுக்கு வந்த
விவசாய அலுவலரைத் தாக்கியதாக புகார் கிடைத்திருப்பதாகவும் அவனை விசாரிப்பதற்காக அழைத்துச்
செல்லவேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் பிடியிலிருந்து தப்பி ஓடுகிறான்
ரஞ்சன். அவனைத் தொடர்ந்து துரத்திச் செல்கின்றனர் காவலர்கள். ஒரு காவலர் அவனைப் பின்தொடர்ந்து
சென்று அவனுடைய பின்னந்தலையில் ஓங்கி அடித்து வீழ்த்துகிறார். அங்கேயே மயங்கி விழுந்துவிடுகிறான்
ரஞ்சன். அக்கணத்தில் அவர்களுக்குப் பின்னாலேயே ஓடிவந்த உறவினர்களும் ஊரார்களும் அங்கு
வந்து சேர்கிறார்கள்.
எப்போதோ தலையில் விழுந்த அடியால் மனக்குழப்பத்துக்கு ஆளான ரஞ்சன்
இன்னொரு முறை விழுந்த அடியால் அக்குழப்பம் நீங்கப்பெற்று தெளிவடைகிறான். பைத்தியக்களை
அவனைவிட்டு விலகிவிடுகிறது. நல்ல மனநிலையுடன் அனைவரோடும் உரையாடுகிறான். அந்த ஊரைச்
சேர்ந்த அரசியல்வாதி கொடுத்த உறுதியை ஏற்றுக்கொண்டு காவலர்கள் திரும்பிச் செல்கின்றனர்.
ரஞ்சன் – தங்கம் திருமணம் இனிதே நடைபெறுகிறது.
*
அம்பிகாவை மணம்புரிந்துகொள்ள விழையும் கேதாரி பொறுமையிழந்து
ஒருநாள் தன்னைச் சந்திக்க வந்த அம்பிகாவை கைகளை நீட்டித் தழுவ முயற்சி செய்கிறார்.
அவருடைய எண்ணத்தை உணர்ந்த அம்பிகா அந்த அறையிலிருந்து தப்பியோட முயற்சி செய்கிறாள்.
அதற்குமுன் அங்கு மேசைமீது வைக்கப்பட்டிருந்த புத்தகங்களையும் பிற பொருட்களையும் எடுத்து
அவர் மீது வீசித் தடுமாறி விழவைக்கிறாள். அந்த நேரத்தில் தற்செயலாக மின்சாரம் நின்று
எங்கெங்கும் இருள் சூழ்ந்துவிடுகிறது. அந்த இருளைப் பயன்படுத்திக்கொண்டு ஒருவருடைய
பார்வையிலும் படாமல் வீட்டைவிட்டு வெளியேறித் தப்பித்துவிடுகிறாள் அம்பிகா.
தற்செயலாக எங்கிருந்தோ அப்போது வீட்டுக்குத் திரும்பிய கேதாரியின்
வேலைக்காரன் வீடு இருண்டு, கதவுகள் திறந்திருப்பதையும் ஏதோ ஒரு உருவம் அறையிலிருந்து
எழுந்து வருவதையும் பார்த்து, யாரோ ஒரு திருடன் உள்ளே நுழைந்துவிட்டான் என நினைத்து
தன் கைத்தடியால் அவனை அடி அடியென்று அடித்து கீழே வீழ்த்திவிடுகிறான். கேதாரி அந்த
இடத்திலேயே இறந்துவிடுகிறார். மின்சாரம் திரும்பிய பிறகுதான் அடிபட்டவர் கேதாரி என்பதை
உணர்கிறான். அதற்குள் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த வேலைக்காரனைப்
பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கின்றனர். அவர்கள் வேலைக்காரனைப் பிடித்துச் சென்று
சிறையில் அடைக்கின்றனர்.
இறுதியில் திருபுவனம் கிராமம் ரஞ்சனை ஏற்றுக்கொள்கிறது. அவனைத்
திருமணம் செய்துகொள்வதன் வழியாக, கிராமத்தைச் சேர்ந்த தங்கமும் அவனை ஏற்றுக்கொள்கிறாள்.
அவன் நெஞ்சில் மூண்டெழுந்த மோகம் நல்லவிதமாக நிறைவடைவதோடு நாவலை முடித்துவைக்கிறார்
துமிலன்.
*
திருபுவனத்துக்கு ரஞ்சன் வந்த புதிதில், அவனுடைய குடும்பத்துக்குச்
சொந்தமான நிலங்களை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த மகாலிங்கம் அவனைத் தன்னோடு அழைத்துச்
சென்று ஊரைச் சுற்றிக் காட்டுவதாக ஒரு காட்சியை துமிலன் ஓர் அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார்.
ரஞ்சன் விவசாய நிலங்களைப் பார்ப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறான். அதனால் முதலில் அவனை
ஊருக்கு வெளியே விளைந்து நிற்கும் நிலங்களையெல்லாம் காட்டுகிறார் மகாலிங்கம். அதைத்
தொடர்ந்து ஊருக்குத் திரும்பும் வழியில் ஒவ்வொரு கோவிலாகக் காட்டிக் கொண்டு, அதைப்பற்றிய
விவரங்களைச் சொல்கிறார்.
ஒரு கோவிலைச் சுட்டிக்காட்டும்போது அது பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்கான
கோவில் என்று சொல்கிறார் மகாலிங்கம். ரஞ்சனுக்கு அந்த விவரம் புரியாததால் இன்னும் கொஞ்சம்
விளக்கமாகச் சொல்கிறார் மகாலிங்கம். ஒருமுறை சோழ அரசனை பிரம்மஹத்தி என்னும் பிசாசு
துரத்திக்கொண்டு வந்ததென்றும், வெகுதொலைவு ஓடிவந்த அரசன் முதல் பார்வையில் தென்பட்ட
அந்தக் கோவிலுக்குள் பாதுகாப்புக்காக புகுந்துகொண்டான் என்றும் கோவிலுக்குள் வரமுடியாத
பிரம்மஹத்தி பிசாசு கோவில் வாசலோடு நின்றுவிட்டது என்றும் பிசாசு தன்னைத் தொடர்ந்து
வரவில்லை என்பதை உணர்ந்ததும் அச்சம் விலகி
நிம்மதியாக மூச்சுவிட்ட அரசன் கோவில் ஊடாகவே நடந்துசென்று வேறொரு வாசல் வழியாக வெளியேறிச்
சென்றதாகவும் சொல்லி முடிக்கிறார். “பிரம்மஹத்திதான் பிசாசு ஆச்சே? இவனை வேறு பக்கமாக
வந்து பிடித்துக்கொள்ளவில்லையா?” என்று ஆர்வத்தோடு ஒரு சிறுவனைப்போலக் கேள்வி கேட்கிறான் ரஞ்சன்.
”எல்லாம் கதைதானே. கதையில் எதுவும் நடக்கலாம்” என்று புன்னகையோடு கதையை முடித்துவைக்கிறார்
மகாலிங்கம்.
உரையாடல் சுவாரசியத்துக்காக துமிலன் இப்பகுதியை இந்த நாவலில்
எழுதிச் சேர்த்திருந்தாலும், சொந்த கிராமத்தின் பெருமையை, கிராமத்தைப்பற்றி எதுவுமே
அறியாத ஒருவனிடம் சொல்லும் கதையாக மட்டுமே இக்கதையைப் பார்க்கத் தேவையில்லை. அதைக்
கடந்து நாவலின் மையத்தை அக்கதையோடு இணைத்துப் பார்க்க முற்படும் ஒரு முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம்
என்று தோன்றுகிறது. நாவலின் மைய உருவகமே அக்கதையிலிருந்துதான் தொடங்குவதாகத் தோன்றுகிறது.
துரத்திக்கொண்டு வரும் பிசாசை ஒரு பக்கத்திலும் தெளிவுற்று அடுத்த
வாசல் வழியாக வெளியேறும் அரசனை இன்னொரு பக்கத்திலும் அந்தக் கதை முன்வைக்கிறது. கிராம
மோகினி நாவலைப் படித்துமுடித்ததும், பழைய புராணக்கதையின் நவீன வடிவம்தானோ என்கிற எண்ணம்
எழுக்கிறது.
நாவலில் நிகழ்வதும் இதேபோன்ற ஒரு கதை. பிசாசின் பிடிக்குள் சிக்கிக்கொள்வதுபோல
கிராம முன்னேற்றம், கிராமச் சீர்திருத்தம் என்னும் மோகத்தில் தன்னையே இழக்கிறான் ரஞ்சன். பிறகு காதல்
என்னும் மோகத்திலும் தன்னை இழக்கிறான். அந்த மோகமும் அவனை உதறவில்லை. அவனாலும் அந்த
மோகத்தை உதறமுடியவில்லை. இன்னொரு பக்கத்தில் ஒருவரும் எதிர்பாராத மனநோய்க்கும் அவன்
இரையாகிவிடுகிறான். அது ஒரு வாசல்.
இறுதியில் காதலுக்காகத் தன் காதலையே தியாகம் செய்கிறாள் அம்பிகா.
காதலன் மனநோய்க்கு இலக்காகி குழம்பிய நிலையில் இருக்கிறான் என்று தெரிந்தும் காதலுக்காக
அவனையே மணந்துகொள்கிறாள். தங்கம். அந்தத் திருமணத்தின் விளைவாக, வெயிலைக் கண்ட பனிபோல ரஞ்சனுடைய எல்லாத்
துன்பங்களும் மறைந்துபோகின்றன. அது இன்னொரு வாசல்.
(கிழக்கு டுடே - இணையதளம் - 20.05.2026)