Home

Sunday, 26 July 2026

ஒளி பரவட்டும்

 

எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் திரெளபதை அம்மன் திருவிழாவுக்கு நாள் குறித்து அறிவிப்பார்கள். அதைத் தொடர்ந்து, அந்தக் கோவில் வளாகத்தில் ஒரு பெரியவர் தொடர்ச்சியாக  பதினெட்டு நாட்கள் மாலை வேளையில் மகாபாரதம் படிப்பார். முக்கியமான பாடல்களைப் பாடி, அதைப் புரிந்துகொள்ள ஏதுவாக பல துணைக்கதைகளையும் சொல்வார்.

இறுதிநாளில் முடிக்கும்போது “பொதுமக்களே, இதுவரை கேட்ட மகாபாரதக் கதையின் வழியாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிகப்பெரிய நீதி என்னவென்றால் இந்த உலகத்தில் மனிதர்களாகப் பிறந்தவர்களை நல்லவன், கெட்டவன் என கருப்புவெள்ளையாகப் பிரித்துப் பார்க்கமுடியாது. தவிர்க்கமுடியாத சூழலில் நல்லவர்களில் கெட்டதைச் செய்பவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களில் நல்லதைச் செய்பவர்களும் இருப்பார்கள். ஒருவரையும் பேதம் பார்த்து பழகக்கூடாது” என்று சொல்வார்.

இளமையில் அந்தக் கோவில் வளாகத்தில் நான் கேட்ட அந்தச் சொல் அப்படியே என் நெஞ்சில் எஞ்சியிருக்கிறது. அந்த எண்ணம் ஆழமாக வேரூன்றியதும், சந்தர்ப்பவசத்தால் எதிர்நிலையை நோக்கி மாற்றமடையும் ஒருவருடைய குணம், இன்னொரு சந்தர்ப்பம் அமையும்போது நேர்நிலையை நோக்கி மீண்டுவிடும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை பிறந்தது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் தமிழ்ப்பாடத்தில்  எங்கள் ஆசிரியர் ‘மனம் திருந்திய மைந்தன்’ என்றொரு கதைப்பாடத்தை நடத்தினார். இன்றுவரை அந்தக் கதையும் என் நினைவில் பதிந்திருக்கிறது. ஒருநாள் ஒரு முன்னிரவுப்பொழுதில் ஒரு பாதிரியார் தன் வீட்டில் ஒரு வழிப்போக்கருக்கு தங்குவதற்கு இடம் கொடுக்கிறார். பசியைப் போக்கிக்கொள்ள உணவும் அளிக்கிறார். பிறகு வீட்டின் கூடத்திலேயே அவர் உறங்குவதற்கு ஏற்பாடும் செய்துவிட்டு, தன்  அறைக்குச் சென்றுவிடுகிறார்.

களைப்பின் காரணமாக மிகவிரைவில் உறங்கத் தொடங்கிய அந்த வழிப்போக்கர் பின்னிரவுப் பொழுதில் விழித்தெழுகிறார். கூடத்தில் எரிந்துகொண்டிருந்த இரு வெள்ளிக் குத்துவிளக்குகளின் மீது அவர் பார்வை பதிகிறது. அதற்குப் பிறகு அவருக்கு உறக்கம் வரவில்லை. அவற்றை எடுத்துச் சென்று விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தன் வாழ்வை வளமாக்கிக்கொள்ள வேண்டும் எனத் திட்டமிடுகிறார். அக்கணமே, அவ்விளக்குகளை ஒரு துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்.

விடிந்ததும் அறையைவிட்டு எழுந்துவரும் பாதிரியார் கூடத்தில் அவர் இல்லாதததையும் விளக்குகளும் காணாமல் போயிருப்பதையும் பார்க்கிறார். என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை அவரால் ஊகித்துக்கொள்ள முடிகிறது. பிறகு,  அதைப்பற்றிய யோசனைகளை உதறிவிட்டு, பிற வேலைகளில் ஈடுபடத் தொடங்குகிறார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு இரு காவலர்கள் பாதிரியாரின் வீட்டுக்கு வருகிறார்கள். குத்துவிளக்குகளுடன் ஊர் எல்லையில் அந்த வழிப்போக்கரைப் பிடித்ததாகவும் அவர் சொன்ன பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாலும் அவருடைய கையில் தேவாலயத்தின் அடையாளம் பொறிக்கப்பட்ட குத்துவிளக்குகள் இருந்ததாலும், பாதிரியார் வழியாக உண்மையை உணர்ந்துகொள்வதற்காக அவரிடமே அழைத்துவந்ததாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.

ஒருகணம் பாதிரியார் அந்த மனிதரையும் காவலர்களையும் மாறிமாறிப் பார்க்கிறார். பிறகு, அந்த மனிதர் முதல்நாள் இரவில் தன் வீட்டில் தன்னோடு தங்கியிருந்தது உண்மைதான் என்றும்,  தானே அவருக்கு மனமுவந்து அந்த விளக்குகளைக் கொடுத்து அனுப்பியதாகவும் சொல்கிறார். அதைக் கேட்ட காவலர்கள் பாதிரியாரிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். மேலும் அந்த மனிதரையும் அங்கேயே விடுதலை செய்துவிட்டுச் செல்கிறார்கள். சந்தர்ப்பவசத்தால் திருடிவிட்ட அந்த மனிதர் பாதிரியாரின் பெருந்தன்மையைக் கண்டு மனம் திருந்தி தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார். பிறகு மனம் திருந்தி பாதிரியாரின் தேவாலயத்திலேயே வாழ்கிறார்.

திருந்துவதற்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இறந்த காலத்தை மறந்து தன் வாழ்க்கையைச் சீரமத்தைக்கொள்பவர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைப்போக்கு முதன்மையாக அவர்களுக்கே பயனளிப்பதாக அமைகிறது. சிற்சில சமயங்களில் பிறருக்கும் பயனளிப்பதாக அமைகிறது.

அத்தகு வாய்ப்புகள் அமையப் பெறாதவர்களும் அல்லது அப்படிப்பட்ட வாய்ப்புகளை அலட்சியப்படுத்தி உதறிவிட்டுச் செல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இலக்கில்லாமல் திரியும் அந்த வாழ்க்கைப்போக்கு தொடர்புடையவருக்கும் பயனளிப்பதில்லை. பிறருக்கும் பயனளிப்பதில்லை.

INHERITANCE OF GOODNESS LIES IN EVERYONE என்றொரு புகழ்பெற்ற காந்தியடிகளின் வாசகம் ஒன்றுண்டு. மனிதமனத்தில் உள்ளுறையும் அந்த நன்மை நாட்டம் மிகமுக்கியமான குணம்.  அதைத் தொட்டு அசைக்கும் காந்தப்புலம் அந்த மனத்தையும் காந்தமாக்கிவிடுகிறது.

பசுபதி சிதம்பரம், சண்முக சிவா, தேவசர்மா, செல்வமலர் ஆகிய நல்லுள்ளங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் உருவான மைஸ்கில்ஸ் அறவாரியத்தை ஒரு காந்தப்புலம் என்று சொல்லலாம். அங்கு வந்து இணைந்து பயிற்சி பெறும் அனைவரையும் அது காந்தசக்தி மிக்கவர்களாக மாற்றியமைக்கிறது.

அறவாரியத்தின் வழியாக ஈட்டிய அனுபவங்களையும் அது தூண்டிய எண்ணங்களையும் சின்னச்சின்ன கட்டுரைகளாக எழுதித் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் சண்முக சிவா. நம் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் புதுமையான வக்கையில் அத்தொகுதிக்கு ’அன்பேற்றுதல்’ என்றொரு தலைப்பையும் சூட்டியிருக்கிறார்.

ஏற்றுதல் என்னும் சொல் பின்னொட்டாக அமைந்த பல சொற்களை ஒருகணம் அசைபோட்டுப் பார்க்கிறேன். விளக்கேற்றுதல் என்னும் சொல் விளக்கை ஏற்றி ஒளி பரப்புவதைக் குறிக்கிறது. வெறுப்பேற்றுதல் என்னும் சொல் வெவ்வேறு விதமான எதிர்நடவடிக்கைகள் வழியாக ஒருவரின் நெஞ்சில் வெறுப்பைத் தூண்டிவிடுதலைக் குறிக்கிறது. அத்தகு சொல்லின் சாயலில் சண்முக சிவா புதிதாக அன்பேற்றுதல் என்னும் சொல்லை உருவாக்குகிறார். ஒருவருடைய நெஞ்சில் வெறுப்பைப் படியவைக்கமுடியும் என்றால், அன்பின் சாயலையும் படிய வைக்கமுடியும் என்பது சண்முக சிவாவின் அழுத்தமான நம்பிக்கை. குப்பையைப் பெருக்கித் தள்ளுவதுபோல வெறுப்பையும் விரக்தியையும் பெருக்கி எறிந்துவிட்டு அன்பைத் தூண்டுதல்தான் அன்பேற்றுதல். ஊசி வழியாக உடலுக்குள் மருந்தை ஏற்றுதல்போல, பேச்சாலும் செயலாலும் அன்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது.

ஒருவருடைய நெஞ்சில் ஒடுங்கியிருக்கும் அன்பின் திரியைத் தூண்டித்தூண்டி ஒளிபெறச் செய்யும் மகத்தான பணிக்கு அச்சொல் பொருத்தமாகவே இருக்கிறது. ஒருவருடைய நெஞ்சில் அன்பின் சுடர் ஒளியுடன் திகழ்ந்தால் போதும், பிற விஷயங்கள் அதைச் சுற்றி தானாகவே நடக்கத் தொடங்கிவிடும். ’அன்பீனும் ஆர்வம் உடைமை, அது ஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு’ என்பது திருக்குறள் வாக்கு. அன்பு ஒருவகையில் பிறரை நோக்கி நம்மைச் செலுத்துகிறது. இன்னொரு வகையில் பிறரை நம்மை நோக்கி ஈர்க்கிறது. பிறர்பால் ஆர்வம் உடையவராக ஆக்குகிறது. மெல்ல மெல்ல நட்பாக உருமாறி அனைவரையும் நமக்கு அருகிலேயே நெருங்கியிருக்கும்படி செய்துவிடுகிறது. அது ஓர் ஊற்றைப் போல. ஊறிப் பெருக்கெடுத்தபடி இருக்கும்.

மலேசியச் சூழலில் மை ஸ்கில்ஸ் முன்னெடுத்திருக்கும் பணிகள் மகத்தானவை. இளம்பிராயத்திலேயே குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை அதிக அளவில் கொண்டிருக்கும் நாட்டில் ஒருவர் வழிதவறிப் போவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அவர்களை பெரியோரின் எச்சரிக்கைச் சொற்களோ, நீதிநூல்களின் நெறிகளோ எதுவுமே தடுத்து நிறுத்தமுடிந்ததில்லை. ஒருமுறை சந்தர்ப்பவசத்தால் தீமையின் வலையில் விழுந்துவிட்டாலும் மறுமுறை அந்த வலையில் சிக்கிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வோடு மீண்டும் வாழ்க்கையைத் தொடங்க நினைப்பவர்களுக்கு மை ஸ்கில்ஸ் அறவாரியம் அடைக்கலமாக வீற்றிருக்கிறது. அவர்களுக்கு வழங்கப்படும் உளவியல் அடிப்படையிலான ஆலோசனைகள் அவர்களை சிந்திக்கத் தூண்டுகின்றன. மையத்தின் வழியாகக் கிடைக்கும் கல்விப்பயிற்சியும் தொழிற்பயிற்சியும் அத்தகையோர் சொந்தக் கால்களில் நின்றுகொள்வதற்கான தன்னம்பிக்கையையும் உறுதியையும் வழங்குகின்றன. தொடர்ச்சியான சில ஆண்டுகள் பெறும் பயிற்சியின் விளைவாக, அவர்கள் அன்பேற்றப்பட்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

மை ஸ்கில்ஸ் செயல்பாடுகள் வழியாக தமக்குக் கிடைத்த அனுபவங்களை முன்வைக்கும் தருணங்களில் அறவாரியத்திலிருந்து வெளியேறியவர்களின் சுருக்கமான சித்திரங்களையும் குறிப்பிட்டிருக்கிறார் சண்முகசிவா.

சிறார் சிறைச்சாலையில் சந்தித்த ஒரு சிறுவனைப்பற்றி சண்முக சிவா தீட்டியிருக்கும் சொற்சித்திரம் மனத்தை உருக்கவைக்கிறது. கொலையா, தற்கொலையா என தெரியாமலேயே தந்தையைப் பறிகொடுத்தவன் அச்சிறுவன். மனம் பேதலித்த அன்னை மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாட்டியால் வளர்க்கப்படுகிறான்.  இலக்கில்லாத புறச்சூழலின் விளைவாக தகாத நட்பின் வலையில் சிக்கிக்கொள்கிறான். படிப்பு படியாத அவன் மனம், அவர்களுடைய நட்புக்குரிய களமாக மாறிவிடுகிறது. அந்தக் கூடா நட்பின் விளைவாக சின்னஞ்சிறிய வயதில் எல்லா தீய பழக்கங்களுக்கும் அவன் அடிமையாகிவிடுகிறான். பள்ளிக்கூடம் அவனை வெளியேற்றிவிடுகிறது.

கஞ்சா விற்பனையில் சிறுவர்களை ஈடுபடுத்தி பணமீட்டும் கூட்டத்திடம் அவன் அடைக்கலமாகிவிடுகிறான். அவர்கள் அவனை விற்பனைப்பையனாக வைத்துக்கொள்கிறார்கள். ஒருநாள் துரத்திவந்த காவல்துறையினரிடம் அவன் சிக்கிக்கொள்கிறான். கைதாகி சிறைத்தண்டனை பெறுகிறான். மனநல ஆலோசாகராக அங்கு சென்ற மருத்துவர் அவனிடம் பேசி, அவன் நம்பிக்கையை முதலில் பெறுகிறார். மீண்டும் மீண்டும் உரையாடல் நிகழ்த்தியதன் விளைவாக அவனிடம் தன்னம்பிக்கையை விதைக்கிறார். இன்னொரு புதிய வாழ்க்கை தொடர்பான கனவையும் விதைக்கிறார்.

விடுதலைக்குப் பிறகு அவனை தன் மைஸ்கில்ஸ் அறவாரியத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சியில் ஈடுபடவைக்கிறார். அங்கு பெறும் பயிற்சி அவனை மாற்றுகிறது. பயிற்சிக்குப் பிறகு அங்கிருந்து பக்கத்து நாட்டுக்குச் சென்று துறைமுகத்தில் வேலை செய்து பொருளீட்டத் தொடங்குகிறான். புதிய வாழ்க்கை அவன் வாழ்க்கையில் பல புதிய தொடர்புகளைக் கொண்டுவந்து சேர்க்கிறது. அனைத்தும் அன்பின் விளைவாக நிகழ்ந்த மாற்றங்கள்.

மனத்தை உருக்கவைக்கும் மற்றொரு சித்திரம் ஒரு சிறுமியைப்பற்றியது. சிறுவர்களுக்கான சிறைவளாகத்தைப்போலவே சிறுமிகளுக்கான சிறைவளாகமும் அந்த ஊரில் இருக்கிறது. அந்த இடத்தில் சந்தித்த ஒரு சிறுமியின் வாழ்க்கையைத்தான் சண்முக சிவா ஒரு சொல்லோவியமாகத் தீட்டியிருக்கிறார். விழித்திருக்கும் நேரமெல்லாம் வாய்ச்சண்டையிலும் கைச்சண்டையிலும் பொழுதைக் கழிக்கும் பெற்றோரைப் பார்த்துப் பார்த்து மனம் சலித்தவள் அச்சிறுமி.  அப்பாவை வீட்டைவிட்டு விரட்டியடிக்கும் அம்மாவின் முகம் அழியாத ஒரு சித்திரமாக அவள் நெஞ்சில் பதிந்திருக்கிறது.

சில மாதங்களுக்குப் பிறகு, அப்பாவின் இடத்தில் வேறொரு ஆடவனோடு அம்மா அதே வீட்டில் வாழத் தொடங்குகிறாள்.  அக்காட்சியை அச்சிறுமியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆயினும் தன் தம்பிக்கு அன்பு காட்ட ஒருவரும் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டு அக்குடும்பத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறாள் அச்சிறுமி. தன்னிடமே பாலியல் சீண்டலில் ஈடுபடும் அவன் நடத்தையைப்பற்றி தாயிடம் கூட எடுத்துரைக்கமுடியாத நிலையில் பொழுதை ஓட்டுகிறாள் அவள். ஒருநாள் அவள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தபோது அவன் தம்பி பிணமாகக் கிடக்கிறான். வீட்டு மாடியிலிருந்து அவன் விழுந்து இறந்துவிட்டதாக கீழ்வீட்டில் இருந்தவர்கள் சொல்கிறார்கள். வீட்டுக்குள் குடிபோதையிலிருந்த அவள் அம்மாவுக்கோ அவளுடைய நண்பனுக்கோ, அந்த மரணத்தைப்பற்றி எதுவுமே தெரியவில்லை.

அவ்விருவரும் சேர்ந்துதான் தம்பியை அடித்துக் கொன்று வீசியதாக அவள் வெளிப்படையாகவே தன் அம்மாவை நோக்கிக் குற்றம் சுமத்துகிறாள். அதை அந்த அம்மா எதிர்பார்க்கவில்லை. சிறுமியை வீட்டுக்குள்ளேயே அடைத்துவைத்து கொடுமைப்படுத்துகிறாள். மறுநாள் அங்கிருந்து தப்பித்துச் சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறாள் சிறுமி.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது அச்சிறுமியால் அந்தப் புகாரை நிரூபிக்கமுடியவில்லை.  பொய்க்குற்றம் சுமத்தியதற்காக அவளுக்குத் தண்டனை கிடைக்கிறது. நீதித்துறையினரால் அச்சிறுமி சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிடுகிறாள். தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அங்கிருந்து அவளை அழைத்துவந்த சண்முக சிவா மைஸ்கில்ஸ் அறவாரியத்தில் தங்கவைத்து படிக்கவைக்கிறார். கல்வியில் நாட்டமுள்ள அவள் சட்டம் படித்து நல்ல வேலையில் சேர்ந்து பெரியவளாகிறாள். தன் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு துன்புறுவதாக யார் வழியாகவோ கேள்விப்பட்டு, அவளை தன் வீட்டுக்கே அழைத்துவந்து அவளுடைய இறுதிக்காலம் வைத்து பராமரிக்கிறாள். எந்தத் தாய் தன்னைக் கொடுமைப்படுத்தினாளோ, அதே தாய் தன் தவற்றை உணர்ந்து தலைகுனியும் வண்ணம் அவள் இறுதிமூச்சுள்ள வரைக்கும் காப்பாற்றி இறுதிக்கடன்களையும் செய்துமுடிக்கிறாள்.

இப்படி ஏராளமான அனுபவங்களை அன்பேற்றுதல் தொகுதி வழியாக வாசகர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார் சண்முக சிவா. தொழிலின் அடிப்படையில் மருத்துவராக இருப்பதாலும் இயல்பாகவே தன் நெஞ்சில் ஊற்றெடுக்கும் இரக்கத்தின் விளைவாகவும் அன்பின் விளைவாகவும் பாதிக்கப்பட்டவர்களை கருணையோடு அணுகும் மனம் அவரிடம் அமைந்திருக்கிறது. அவர் பங்கேற்றிருக்கும் அறவாரியத்துக்கு அவர்களை அழைத்துவந்து, தக்க பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்கிறார். அது  அவர்கள் வாழ்க்கையை ஒளிமயமான திசையை நோக்கித் திருப்பிவிடுகிறது. அந்த அனுபவங்களின் சாரத்தை அவருடைய ஒவ்வொரு கட்டுரையிலும் பார்க்கமுடிகிறது.

’அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே’ என்பது வள்ளலாரின் வரி. வள்ளலாரின் பார்வையில் ஈடுபாடு கொண்டிருக்கும் சண்முக சிவாவின் நிர்வாகப் பொறுப்பில் இயங்கிவரும் அறவாரியமும் தன் அன்பின் பிடிக்குள் பலரையும் இணைத்துவைத்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். ஒவ்வொருவரும் தொடக்கத்தில் தனித்துவமான கோணல்களையும் கொண்டவர்கள்.  அன்பு, இரக்கம், கருணை ஆகியவற்றால் அனைவரையும் நேர்ப்படுத்தி, இம்மண்ணில் என்றென்றும் காலூன்றி நிற்கும் மன உறுதியோடு அனுப்பிவைக்கும் அர்ப்பணிப்புணர்வு கொண்ட பணியில் மை ஸ்கில்ஸ் அறவாரியம் ஈடுபட்டிருக்கிறது. சண்முகசிவாவின் நேரடி அனுபவத்தொகையாக வந்திருக்கும் அன்பேற்றுதல் அதற்கு முதன்மைச்சான்று. இருள் அழிந்து எங்கெங்கும் ஒளி பரவட்டும்.


(மலேசிய எழுத்தாளர் சண்முக சிவா எழுதிய அன்பேற்றம் நூலுக்கு எழுதிய முன்னுரை)