Home

Sunday, 30 August 2026

ஒவ்வொரு பாடலும் ஒரு சொல்லோவியம்

  

’காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்’, ’அக்கா குருவி’ போன்ற சிறார் பாடல் தொகுதிகள் வழியாக தமிழ்ச்சூழலுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் குருங்குளம் முத்துராஜா. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறார்களுக்கான படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.  புதிதாக வெளிவந்திருக்கும் ’சேட்டைக்கார சின்னா’ என்னும் பாடல் தொகுதி வழக்கம்போல சிறார்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

சின்னா என்பது ஒரு வீட்டில் வளர்க்கப்படும் பூனையின் பெயர். அந்த வீட்டில் வசிக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் அந்தப் பூனையைப் பிடிக்கும். அந்தப் பூனையும் ஒரு குடும்ப உறுப்பினரைப்போல அனைவரோடும் நெருக்கமாகப் பழகி  எல்லோருடைய நெஞ்சிலும் இடம்பிடிக்கிறது. பூனை தனக்கே உரிய விளையாட்டுக்குணத்தால் ஒரு நாளின் எல்லாத் தருணங்களையும் இனிய அனுபவங்களாக மாற்றிவிடுகின்றன. அம்மா, அப்பா, சிறுவன், சிறுமி என வீட்டில் வசிக்கும் எல்லா உறுப்பினர்களுடைய நெஞ்சிலும் இடம் பிடித்துவிடுகிறது. அவர்கள் அனைவருக்கும் பூனையின் குறும்புகளையெல்லாம் ரசிக்கும் மனநிலை இயல்பாகவே வாய்த்திருக்கிறது. எல்லை மீறாத குறும்புகள் வழியாக அவர்களுடைய நெஞ்சிலும் நினைவிலும் பூனை நிலையானதொரு இடத்தைத் தக்கவைத்துக்கொள்கிறது. நினைவில் தடம் பதித்த அத்தகு தருணங்களையே குருங்குளம் முத்துராஜா இந்தத் தொகுப்பில் பாடல்களாக எழுதியுள்ளார்.   ஒவ்வொரு பாடலும் ஒரு சொல்லோவியம்.

கோலம் போடும் பூனையைப் பற்றி ஒரு பாடல் எழுதியிருக்கிறார் முத்துராஜா. ஒவ்வொரு வரியும் புன்னகையோடு படிக்கும் வகையில் அமைந்துள்ளது.  ஒருநாள் காலை வேளையில் வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக அம்மா வருகிறாள். சின்னா என்னும் பூனை அக்காட்சியைப் பார்க்கிறது. அம்மாவுக்கு உதவியாக இன்னொருவர் இருந்தால் நல்லது என நினைத்து, கூடத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் சிறுமியை முட்டி எழுப்புகிறது. அவள் எழுந்து வருவதற்குள் வாசலில் இருந்த தண்ணீர் வாளியை உருட்டிவிட்டு, வாசலெங்கும் தண்ணீரை வழிந்தோடச் செல்கிறது. அதுவே வாசலைத் தெளித்துவிட்டது போல மாறிவிடுகிறது. அம்மா குனிந்து கோலம் போடுகிறாள். அம்மா வேறு பக்கம் போய் திரும்புவதற்குள் புள்ளிவைத்த இடங்களையெல்லாம் பூனை தோண்டி வைத்துவிடுகிறது.

 

குறும்பு சின்னா கோலத்தின் மேல்

உருண்டு புரண்டது

வெள்ளைப் பூ கோலம் இப்போ

வண்ணம் ஆச்சுது

 

கோலம் போட உதவி செய்த சின்னா பூனை இன்னொரு பாடலில் பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகளோடு சேர்ந்து செல்லும் காட்சியைப் பாடலாக்கியிருக்கிறார் முத்துராஜா. செல்வியும் பாபுவும் ஒருநாள் பள்ளிக்குப் புறப்படுகிறார்கள். அன்று அவர்களோடு சேர்ந்து பள்ளிக்குச் செல்ல பூனைக்கும் ஆசை வந்துவிடுகிறது. அதனால் யாருக்கும் தெரியாமல் செல்வியின் பைக்குள் சென்று பதுங்கிக்கொள்கிறது. முதுகில் சுமந்துசெல்லும் பைக்குள் பூனையும் இருப்பதை அறியாமல் செல்வி பள்ளிக்குச் சென்றுவிடுகிறாள். வகுப்பு நடக்கும்போது ஒருவருக்கும் தெரியாமல் செல்வியின் பையிலிருந்து பூனை வெளியே வருகிறது. ஒருவருக்கும் தெரியாமல் அடிமேல் அடிவத்து நடந்து சென்று கடைசி பெஞ்ச் கீழே அமர்ந்துகொள்கிறது.

ஆசிரியர் அன்று ஓர் எலியைப்பற்றிய பாடத்தை நடத்துகிறார். அதற்கான விளக்கமாக கரும்பலகையில் அவரே ஓர் எலியின் படத்தை வரைகிறார். அதுவரை சத்தம் காட்டாமல் யாருடய பார்வையிலும் படாமல் மறைந்திருந்த பூனைக்கு எலியின் படத்தைப் பார்த்ததும் இயற்கையான குணம் திரும்பிவிடுகிறது. அது பள்ளிக்கூடம் என்பதையே மறந்து, கரும்பலகையை நோக்கி ஒரே தாவாகத் தாவிச் சென்று படத்திலிருக்கும் எலியைத் தாக்கத் தொடங்குகிறது. அதைப் பார்த்ததும் வகுப்பே ஆரவாரத்தில் மூழ்குகிறது. சிறார்களின் சத்தத்தைக் கேட்டு அஞ்சிய பூனை சட்டென உண்மைச்சூழலை உணர்ந்து மெல்ல மெல்ல பின்வாங்கி நடந்துவந்து செல்வியின் புத்தகப்பைக்குள் சென்று மறைந்துகொள்கிறது.

வீட்டுக்குள் நடைபெற்ற இன்னொரு குறும்பான காட்சியையும் ஒரு பாடலாக எழுதியிருக்கிறார் முத்துராஜா. ஒருநாள் காலையில் பூனை தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறது. அதே கணத்தில் எங்கிருந்தோ காற்றுவாக்கில் கருவாட்டின் வாசம் வருகிறது. அந்த வாசம் அதனுடைய எல்லாப் புலன்களையும் கிளர்ந்தெழச் செய்கிறது. அந்த வாசம் வரும் பாதையிலேயே மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறது. இறுதியில் திறந்து கிடக்கும் கருவாட்டு டப்பாவைக் கண்டடைந்து நெருங்கிச் செல்கிறது. டப்பாவுக்குள் எட்டிப் பார்க்கிறது.

ஒரே ஒரு சின்ன கருவாட்டுத்துண்டு டப்பாவின் அடியில் கிடப்பதைப் பார்க்கிறது சின்னா. அதைச் சுவைக்கும் ஆவலால் எதையும் யோசிக்காமல் அந்த நொடியிலேயே டப்பாவுக்குள் குதித்துவிடுகிறது. வேகவேகமாக அந்தத் துண்டைத் தின்று முடிக்கிறது. அதற்குப் பிறகுதான் அந்த டப்பாவின் உட்புறத்திலிருந்து வெளியேற வழியில்லை என்பது அதற்கு உறைக்கிறது. ஐயையோ மாட்டிக்கொண்டோமே என்று தவிப்புடன் உள்ளே இருந்தபடி டப்பாவுக்குள் உருள்கிறது.

டப்பா உருளும் சத்தத்தால் தூக்கம் கலைந்த நாய் வேகமாக வந்து ஓசை வரும் டப்பாவை உதைத்து வெளியே உருட்டித் தள்ளுகிறது. உருட்டப்பட்ட வேகத்தில் டப்பாவிலிருந்து பூனை வெளியே வந்து விழுகிறது. பூனையைப் பார்த்ததுமே வேகம் கொண்ட நாய் அதைப் பிடிக்கத் தாவி வருகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பூனை சட்டென தாவி பக்கத்தில் இருந்த மரத்தின் மீது ஏறி ஒளிந்துகொள்கிறது.

 

பாய்ந்து வந்த ஜிம்மி அதை

பிடிக்கத் தாவுது – சின்னா

பக்கத்தில் இருந்த

மரத்தின் மீது ஏறி ஒளிந்தது

 

என்று எழுதி அந்தப் பாடலை முடிக்கிறார் முத்துராஜா. ஒரு கதைக்கே உரிய சுவாரசியத்தோடு எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதைப்பாடல் சிறார்கள் நெஞ்சைக் கவரும் என்பதில் ஐயமே இல்லை.

பூனை கனவு காண்பதைப் பற்றி முத்துராஜா எழுதியிருக்கும் பாடலும் படிப்பதற்குச் சுவையான ஒன்று. ஒருநாள் பூனை ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கிறது. அப்போது அது ஒரு கனவு காண்கிறது. அக்கனவில் நாட்டிலுள்ள எல்லா விலங்குகளும் சேர்ந்து அந்தப் பூனையை அரசனாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். தலையில் கிரீடம் அணிந்துகொண்டு மிடுக்காக வலம் வருகிறது பூனை.

அரசனானதும் பூனை ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக சட்டம் கொண்டுவருகிறது. ஒருநாள் தனக்கு விருந்தாக இரண்டு எலிகள் வேண்டும் என்று சட்டம் போடுகிறது பூனை. இப்படி தாறுமாறான பல சட்டங்கள் நாட்டில் கட்டாயமாகின்றன.

பூனை கனவில் லயித்திருக்கும்போது சத்தம் காட்டாமல் நெருங்கி வந்த சுண்டெலி அதன் கழுத்தில் ஒரு மணியைக் கட்டிவிட்டுச் செல்கிறது. ஏதோ சத்தம் கேட்டு கனவு கலைந்து பூனை எழுந்தது. கனவின் இன்ப நினைவுகளிலிருந்து விடுபட்டதும் பூனை பசியால் தவிக்கிறது. அதனால் இரையைத் தேடி நடந்து செல்கிறது. அது நடக்கத் தொடங்கியதும் அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணியின் ஓசை ஒலிக்கத் தொடங்குகிறது. மணியோசையைக் கேட்டதும் அது நடந்து செல்லும் திசையை அறிந்த எலிகள் அனைத்தும் அத்திசையிலிருந்து விலகி வேறு திசைகளில் பாதுகாப்பாகப் பதுங்கிக்கொள்கின்றன.

இத்தொகுப்பில் உள்ள எல்லாப் பாடல்களும் பூனையை மையமாகக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பாட்டிலும் சுவையானதொரு கதை அடங்கியிருக்கிறது. சிறார்கள் மனத்தைக் கவரும் வகையில் ஒவ்வொரு கதையையும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் முத்துராஜா. ஒவ்வொரு பாடலும் பாடிப் பழகுவதற்கு ஏற்ற வகையில் எளிய சொற்களோடும் நல்ல தாளக்கட்டோடும் அமைந்திருக்கின்றது.

 

(வேட்டைக்கார சின்னா. சிறார் பாடல்கள். குருங்குளம் முத்து ராஜா, மேஜிக் லேம்ப், 96, நியு ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி. விலை. ரூ.80)

 

(புக் டே – இணைய இதழ் – 18.08.2026)