Home

Sunday 30 April 2023

இனிமையும் இனிமையின்மையும் - கட்டுரை

 

சில நாட்களுக்கு முன்பு நண்பரொருவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். கூடத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது பின்கட்டிலிருந்து பலாப்பழத்தின் இனிய மணம் வந்தது. “என்ன, பலாப்பழத்து வாசனை போல இருக்குதே? வாங்கிவந்தீங்களா? எங்க கிடைச்சது?” என்று கேட்டேன்.  “நான் வாங்கிவரலை. நேத்து ஊருலேர்ந்து அத்தை வந்தாங்க. அவுங்க வாங்கிட்டு வந்த பழம். அவுங்கதான் அறுத்து சுளை எடுக்கறாங்க” என்றார் நண்பர்.

“இது ஒன்னும் பலாப்பழ சீசனில்லையே, எப்படி கிடைச்சிது?”

“எந்த காலத்துல இருக்கீங்க நீங்க? இப்ப எல்லா சீசன்லயும் எல்லாப் பழங்களும் கிடைக்குது”

உடனே எங்கள் உரையாடலின் திசை மாறிவிட்டது. பூக்கும் காலம், காய்க்கும் காலம், கனியாகும் காலம் என வேறுவேறாக இருந்த காலம் மாறி, கால வேறுபாடின்றி எதையும் நிகழ்த்திவிட முடியும் என  மாறிவிட்ட நிலையை அறிவியல் சாதனை என்று நினைத்துக் கொண்டாடுவதா அல்லது இயற்கையின் மீது மானுடர் நிகழ்த்தும் அத்துமீறல் என நினைத்து ஒதுக்குவதா என்பதைப்பற்றி எங்கள் உரையாடல் முடிவில்லாமல் போய்க்கொண்டே இருந்தது.

ஒரு காலத்தில் ஒரு மரத்தில் பழுக்கும் பழங்களுக்கு யார்யாருக்கெல்லாம் பங்குண்டு என வகுத்துவைத்திருந்த  மானுடப்பண்பாட்டைப்பற்றி சொல்லத் தொடங்கினார் நண்பர். உச்சியில் கனிந்திருக்கும் பழங்கள் பறவையினத்துக்கும் நடுப்பகுதியில் கனிந்திருக்கும் பழங்கள் குரங்கு, அணில் போன்ற உயிரினத்துக்கும் கடைப்பகுதியில் கனிந்து தொங்கும் பழங்கள் மனிதர்களுக்குமாக கருதப்பட்டது என்று சொன்னார்.

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இன்று நடைமுறையில் இல்லாத ஒன்றை நினைத்து எப்படி பெருமைப்பட முடியும் என்று நான் கேள்வியெழுப்பினேன். அதற்கு அவரால் நேரிடையாக பதில் சொல்லமுடியவில்லை. சற்றே தடுமாறி “ஆமாம், எல்லாரும் தனக்கு தனக்குன்னு ஆசைப்பட்டு சேத்துக்க ஆரம்பிச்சிட்ட காலத்துல எல்லைக்கோட்டுக்கு எங்க மதிப்பு இருக்கப்போகுது?” என்றார். பிறகு ஒரு ஆழமான பெருமூச்சைத் தொடர்ந்து ”ஆரம்பத்துல இயற்கையின் கருணையில எல்லாரும் வாழ்ந்துகிட்டிருந்தோம். இப்ப மனிதனுடைய கருணையில இயற்கை வாழவேண்டிய காலமா போயிடுச்சி” என்று சொல்லிவிட்டு நாக்கு சப்புக்கொட்டினார்.

அப்போது அறையிலிருந்து நண்பருடைய இரண்டு பிள்ளைகளும் ஆளுக்கொரு தட்டு நிறைய சுளைகளுடன் வந்து எங்கள் முன்னால் மேசையில் வைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் சற்றே முதிய பெண்மணி ஒருவர் வந்தார்.

”எங்க அத்தை. நேத்து ராத்திரி ஊருலேர்ந்து வந்தாங்க” என்று அறிமுகப்படுத்தினார் நண்பர். நான் அவருக்கு வணக்கம் சொன்னேன். அவரும் புன்னகைத்தபடி வணக்கம் சொன்னார்.

”ருசி எப்படின்னு சாப்ட்டு பாத்துட்டு சொல்லுப்பா. இந்த பழத்துக்கு ஐநூறு ரூபாய சுளையா புடுங்கிட்டான் கடைக்காரன். ருசியா இல்லைன்னா, உன் கடைவாசல்லயே கொண்டாந்து கொட்டிடுவேன்னு அவன்கிட்ட சொல்லிட்டுதான் வந்திருக்கேன்”

நண்பர் புன்னகைத்தபடியே ஒரு சுளையை எடுத்து கொஞ்சமாகக் கடித்து சுவைத்தார். சுளையின் இனிமையை அவர் முகத்தில் படர்ந்த வெளிச்சமே உணர்த்தியது. அத்தையின் முகத்தைப் பார்த்து “நல்லா இனிப்பாதான் இருக்குது அத்தை” என்றார்.  

”ஐநூறு ரூபாய்ல ஒரு பத்து ரூபாய கூட கொறக்கமாட்டன்னு சொல்லி பணத்த கறந்துட்டான் படுபாவி. என்னமோ தங்கத்தையும் வைரத்தையும் விக்கறமாதிரி சொன்னா சொன்ன விலைதான்னு சாதிச்சிபுட்டான்”

ஒரே கணத்தில் அவர் முகத்தில் பலவிதமாக மாறும் உணர்ச்சிக்கலவைகளைப் பார்த்தபடி நண்பர் எதுவும் பேசாமல் இருந்தார்.

“முன்னூறு ரூபா, நானூறு ரூபாய்ல வேணும்ன்னா இந்தப் பக்கம் வந்து எடுங்கம்மான்னு வேறு பக்கத்துல இருந்த பழங்கள காட்டி  சொன்னான். நான்தான் அதெல்லாம் வேணாம்னு ஐநூறு ருபா பழத்த எடுத்தேன். எப்பவோ ஒரு பழம் சாப்புடறம், அத ருசியா சாப்படணுமில்ல? ரூபாயா முக்கியம்? ருசிதான முக்கியம்?”

அவர் எழுந்துவந்து நண்பரின் தட்டிலிருந்து ஒரு சுளையிலிருந்து ஒரு பகுதியை மட்டும் பிரித்தெடுத்து வாயில் வைத்தார். ”நல்லா தேன் மாதிரிதான் இருக்குது. இதுக்கு ஐநூறு ரூபாய் தாராளமா கொடுக்கலாம்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

அவர் நாற்காலியின் பக்கம் சென்று மீண்டும் உட்கார்ந்தார். “அந்தக் காலத்துல ஐநூறு ரூபாய்க்கு ஒரு புடவையே எடுக்கலாம். இன்னைக்கு ஒரு பழத்துக்கு அந்தப் பணத்த கொடுக்கவேண்டியதா இருக்குது”

அவர் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தேன் நான். எனக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தட்டு அப்படியே இருந்தது. அவர் ஒரு கணம் என் பக்கமாகத் திரும்பி “ஏன் தம்பி, நீங்க பழம் சாப்பிடலையா? அப்படியே வச்சிருக்கீங்களே” என்று கேட்டார். நான் மெல்ல புன்னகைத்தபடியே “இல்லைங்க, நான் பழம் சாப்பிடறதில்லை” என்றேன். அவர் உடனே “ஓ, சுகரா?” என்று கேட்டுவிட்டு பின்கட்டுக்குத் திரும்பி நடந்தார்.

“அத்தை அந்த காலத்து மனுஷி. பேச ஆரம்பிச்சாங்கன்னா, அவுங்கள யாராலயும் நிறுத்தமுடியாது. அவுங்களா நிறுத்தனாதான் உண்டு” என்று அடங்கிய குரலில் சொன்னார் நண்பர். அடுத்து, தொடக்கத்தில் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர்வதுபோல இயற்கையின் கருணையைப்பற்றியும் மனிதனின் கருணையைப்பற்றியுமான பேச்சைத் தொடர்ந்தார்.

அடுத்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் என்னால் அங்கிருந்து புறப்படமுடிந்தது. எங்கள் வீட்டின் திசையில் செல்லக்கூடிய பேருந்து அந்த நேரத்தில் எதுவும் இல்லை என்பதால், நடக்கத் தொடங்கினேன். செரித்துக்கொள்ள முடியாத உணவென, நண்பரின் அத்தை தன் உரையாடலில் மீண்டும் மீண்டும் பழத்தைவிட பணத்துக்குக் கொடுத்த அழுத்தம் என் நினைவில் மிதந்துகொண்டே இருந்தது. பழத்தைப்பற்றி நினைக்கும்தோறும் பணத்தைப்பற்றி நினைத்துக்கொண்ட போக்கு ஏதோ ஒருவித சங்கடத்தை எனக்குள் உருவாக்கியது. பழத்தை மட்டுமல்ல, ஆடைகள், அணிகலன்கள், வாகனங்கள், வீடுகள் எல்லாவற்றையும் பணமாக மாற்றிப் பார்ப்பதுதான் மனத்தின் இயல்போ என்று தோன்றியது. அந்த இயல்பு ஓர் இனிமையான தருணத்தைக்கூட கசப்பான தருணமாக மாற்றிவிடுகிறது. அந்த உண்மையை எந்த அளவுக்கு மனிதர்கள் ஆழமாக உணர்ந்திருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. ஒருவேளை அந்த உண்மையை உணர்ந்திருந்தாலும் அதை அமைதியாகக் கடந்து சென்றுவிடுகிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழப்பத்தோடு நடந்துகொண்டே இருந்தேன்.

பலாப்பழத்தை முன்வைத்து எழுத்தாளர் வண்ணநிலவன் எழுதிய ஒரு சிறுகதை சட்டென நினைவுக்கு வந்தது. அந்தச் சிறுகதையின் தலைப்பே பலாப்பழம்தான். பிள்ளைத்தாய்ச்சியான மனைவி செல்லப்பாப்பு.  வேலை நிறுத்தத்தின் காரணமாக சம்பளம் வாங்கிவராத கணவன் சீனிவாசன். அவர்களுடைய ஒருநாள் வாழ்க்கைதான் அச்சிறுகதை.

தடுப்பால் மறைக்கப்பட்ட ஒரு சின்ன அறையில் வாழ்கிறார்கள் அவர்கள். ஒரு காலைப்பொழுதில் அவள் இன்னும் எழுந்திருக்காமல் களைப்பில் படுத்திருக்கிறாள். அப்போது அடுத்த வீட்டில் பலாப்பழம் அறுக்கும் மணம் வீசுகிறது.  கூடுதல் சுளைகளுக்காக மகள் தன் தாயிடம் கெஞ்சுகிறாள். போதும், எழுந்துபோ என்று அதட்டுகிறாள் தாய். அந்த உரையாடல் முழுக்க இந்தப் பக்கம் கேட்கிறது.

செல்லம்பாப்புவை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டவேண்டும். அதற்குத் தேவையான பணத்தை சீனிவாசனால் புரட்டமுடியவில்லை.  அன்று தன் நண்பனிடமிருந்து உறுதியாக கடன் கிடைத்துவிடும் என்றும் மருத்துவரைச் சந்திக்கச் செல்லலாம் என்றும்  நம்பிக்கையோடு மனைவியிடம் பேசுகிறான் சீனிவாசன்.

கணவன் பேசும் நம்பிக்கைச்சொற்களையும் பக்கத்துவீட்டில் பலாச்சுளைகளை முன்னிட்டு பிள்ளைகளுக்கும் தாய்க்கும் இடையில் நிகழும் உரையாடல்களையும் மாறிமாறிக் கேட்டபடியே படுத்திருக்கிறாள் செல்லப்பாப்பு. அங்கிருந்து வீசும் பழத்தின் மணம் செல்லப்பாப்புவின் கவனத்தை வேறெந்தத் திசையிலும் செலுத்த இயலாத அளவுக்குத் தடுக்கிறது.

பக்கத்து வீட்டுக்கார அம்மா அவளுக்கு அறிமுகம் உள்ளவர்தான். முதலில் பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு பிறகு தனக்கும் சில சுளைகளை அவள் கொடுத்தனுப்பக்கூடும் என அவள் மனம் நினைக்கிறது. ஆனால் நேரம் கழிகிறதே தவிர, அவள் எதிர்பார்த்த விஷயம் நடக்கவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு அடுத்த வீட்டிலிருந்து சிறுமி வந்து கதவைத் தட்டுகிறாள். அவளுக்குள் சற்றே நம்பிக்கை துளிர்விடுகிறது. சுளைகளோடு அவள் வந்திருக்கக்கூடும் என நினைக்கிறாள் செல்லப்பாப்பு.

சீனிவாசன் எழுந்து சென்று கதவைத் திறக்கிறான். ஆனால் உள்ளே வந்த சிறுமி, “சாயங்காலமா புட்டாரத்தி அம்மன் கோயிலுக்கு போலாமான்னு அம்மா கேட்டாங்க என்று செல்லம்பாப்புவிடம் கேட்டபடி நிற்கிறாள். அந்த ஏமாற்றத்தை அவளால் தாங்கமுடியவில்லை. சிறுமியின் கடைவாயோரத்தில் ஒட்டியிருக்கும் பலாப்பழ நாரைப் பார்த்தபடியே ஒரு சலிப்பில் “இன்னைக்கு எங்கம்மா வர? அக்கா வரலைன்னு சொல்லு” என்று சொல்லி அனுப்பிவைக்கிறாள்.

செல்லப்பாப்புவின் ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் நேரிடையாகவும் பக்கத்துவீட்டில் பழம் அறுத்த அம்மாவின் மனப்போக்கை மறைமுகமாகவும் உணர்த்திவிட்டு முடிவடைகிறது சிறுகதை. ஒரு பழத்தை அறுத்துச் சாப்பிடுகிற குடும்பத்துக்கு ஒரே ஒரு சுளையை பக்கத்துவீட்டு பிள்ளைத்தாய்ச்சியோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என ஏன் தோன்றவில்லை என்பது முக்கியமான கேள்வி. கோயிலுக்குச் செல்ல துணையாக ஒருத்தி வேண்டும் என நினைக்கிற பெண்மணிக்கு அந்த ஒருத்திக்கு ஒரே ஒரு சுளையாவது அளிக்கவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை என்னும் உண்மை திகைக்கவைக்கிறது.   கிட்டாத பலாப்பழம் என்பது கிட்டாத ஆதரவு, கிட்டாத பணம், கிட்டாத வெற்றி என கிடைக்காத பல கூறுகளின் உருவகமாக நிலைத்துவிடுகிறது.

சிறுகதையின் இறுதிக்காட்சியில் பணம் புரட்டமுடியாத சீனிவாசன் இரவு கனத்த மெளனத்துடன் திரும்பி வருகிறான். அவனுக்கென மூடி வைத்திருந்த உணவுத்தட்டை அவன் முன்னால் வைக்கிறாள் அவள். அவன் மெளனமாக அதைத் திறந்து சாப்பிடுகிறான். திடீரென அப்போது பழவாசனை பரவுவதை உணர்ந்து எழுந்து உட்கார்கிறாள் செல்லப்பாப்பு. அது அடுத்த வீட்டில் அந்த நேரத்தில் மீண்டும் பழம் அறுக்கிற வாசனையா அல்லது காலையிலிருந்து அவள் நெஞ்சிலும் நினைவிலும் நிறைந்திருந்த வாசனையே கனவாகப் பொங்கி வெளிப்பட்டதா என்பதை வெளிப்படையாக வண்ணநிலவன் எங்கும் சொல்லவில்லை. அதை ஒரு புதிராகவே விட்டுவிடுகிறார்.

எடுத்து வைத்து சாப்பிடுகிற அளவுக்கு பழங்கள் இருக்கும் நிலையில் கூட இன்னொருவருக்குக் கொடுக்கவேண்டாம் என மனிதர்கள் ஏன் நினைக்கிறார்கள் என்பது புரியாத புதிர். பழத்தைப் பகிர்ந்துகொள்வது என்பதை பணத்தைப் பகிர்ந்துகொள்வதாக அவர்கள் நினைப்பதுதானே காரணமாக இருக்கமுடியும். எல்லாவற்றையும் பணமாக மட்டுமே பார்க்கத் தெரிந்த கண்கள் வேறெப்படி பார்க்கும் என்று நினைத்து பெருமூச்சு விடுவதைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியவில்லை.

இன்னொரு சிறுகதையும் நினைவுக்கு வந்தது. அது புதுமைப்பித்தன் காலத்துக் கதை. ஆனால் எழுதியவர் புதுமைப்பித்தனல்ல. பழைய எழுத்தாளர் ரஸிகன். சிறுகதையின் தலைப்பு பலாச்சுளை. அதிலும் இரு குடும்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஒன்று பணக்காரக்குடும்பம். மற்றொன்று ஏழ்மை படிந்த குடும்பம். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நாராயணனும் நண்பர்கள். இருவரும் நான்கு வயதுச் சிறுவர்கள். ஒருநாள் கிருஷ்ணமூர்த்தியின் அப்பா தன் அப்பாவின் சிரார்த்தத்துக்காக தஞ்சாவூரிலிருந்து பலாப்பழம் வாங்கி வருகிறார். சிரார்த்தத்துக்குச் செலவானதுபோக மிச்சப்பழத்தை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்து தேவைப்படும் நேரத்தில் அறுத்து அறுத்துச் சாப்பிடுகிறாள் கிருஷ்ணமூர்த்தியின் அம்மா தங்கம்மாள்.

ஒருநாள் அவள் தனிமையில் பழத்தை அறுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியும் நாராயணனும் எங்கோ வெளியே விளையாடிவிட்டு வீட்டுக்குள் ஓடி வருகிறார்கள். “பலாப்பழ வாசனை அடிக்கிறதே. பழம் அறுக்கிறாயா?” என்று கேட்கிறான் கிருஷ்ணமூர்த்தி. அவனை வீட்டுக்குள் அழைத்து அவனிடம் சாப்பிடுவதற்கு சில பலாச்சுளைகளை அளிக்கிறாள். அவன் தன்னுடைய நண்பனான நாராயாணனுக்கும் கொடுக்கும்படி தன் அம்மாவிடம் சொல்கிறான். அவள் வேண்டாவெறுப்பாக அவனை உள்ளே அழைத்து இருப்பதிலேயே இரு சிறிய சுளைகளை எடுத்துக் கொடுத்து ”வீட்டுக்கு எடுத்துட்டு போய் சாப்பிடு’ என்று சொல்லி அனுப்பிவைக்கிறாள்.

வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தியின் அப்பா அவனுடைய கையிலிருக்கும் சின்னஞ்சிறு சுளைகளைப் பார்த்துவிட்டு அவனை நிறுத்துகிறார். மனைவியை அழைத்து பழத்திலிருந்து ஒரு கூறை அறுத்து அவனிடம் கொடுத்தனுப்பச் சொல்கிறார். அது அவளுக்குப் பிடிக்கவில்லை. தானும் தன் குடும்பமும் மட்டுமே பழத்தைச் சாப்பிட வேண்டும் என்பது அவளுடைய எண்ணம். ஆனாலும் கணவனின் சொல்லை மீறமுடியாமல், உள்ளே சென்று முக்கால்பாகத்துக்கு மேல் சுளைகளை எடுத்த கூறை அறுத்து ஒரு இலையால் போட்டு மூடி அவனிடம் கொடுத்தனுப்புகிறாள்.

வீட்டுக்கு வந்த நாராயணன் அந்தப் பழத்தை தன் அம்மாவிடம் கொடுக்கிறான். ஒன்றிரண்டு சின்னஞ்சிறு சுளைகளைத் தவிர அதில் வேறொன்றுமில்லை. எல்லாமே தாள்களாக நிறைந்திருந்தன. அதைக் கண்டு இருவரும் ஏமாற்றமடைகிறார்கள்.

அன்று இரவு மழை பொழிகிறது. கிருஷ்ணமூர்த்திக்கு வயிற்றுப்போக்கு. என்ன செய்வது என்று புரியாமல் பெற்றோர்கள் தவிக்கிறார்கள்.  ஒருவேளை அது காலராவாக இருந்தால் என்ன செய்வது என்னும் அச்சத்தில் அக்கம்பக்கத்தில் உள்ள வீட்டினர் கதவை அடைத்துவிடுகின்றனர். கிருஷ்ணமூர்த்தியின் அப்பா ஓடோடி வந்து நாராயணனின் அம்மாவை அழைத்துச் செல்கிறார். அவள் கொஞ்சம் வைத்திய ஞானம் உள்ளவள். அந்த மழையில் அவரோடு சென்று சிறுவனைப் பரிசோதித்துவிட்டு செரிமானமின்மையால்தான் வயிற்றுப்போக்கு வந்திருப்பதை அவள் கண்டுபிடிக்கிறாள். அதற்குத் தகுந்த மருந்துகளையும் கொடுத்து குணப்படுத்திவிடுகிறாள்.

விடிகிற வேளையில் வைத்தியரும் வந்து மருந்து கொடுக்கிறார். குணமடைந்துவிட்டான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதும் நாராயணனின் அம்மா  தன் வீட்டுக்குப் புறப்படுகிறாள். அவளை நிறுத்தும் தங்கம்மா பலாப்பழத்திலிருந்து ஒரு நல்ல கூறை அறுத்து வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்கிறாள். அவளோ அதை வாங்க மறுத்து “நீங்க நேத்து கொடுத்தனுப்பிய சுளைகளே வயிற்றை நிரப்பிவிட்டன” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிடுகிறாள்.

நாட்கணக்கில் வைத்திருந்து தேவைப்படும்போதெல்லாம் அறுத்து அறுத்துச் சாப்பிடத்தான் மனிதர்களுக்குத் தோன்றுகிறதே தவிர, நன்றாக இருக்கும்போதே நான்கு பேருடன் பங்கிட்டு சாப்பிடலாம் என்று ஏன் மனிதர்களுக்குத் தோன்றுவதில்லை என்பதை ஒரு கேள்வியாக முன்வைக்கிறது ரசிகனின் சிறுகதை.

பழம் இனிமையானதுதான். ஆனால் பழம் சார்ந்த நினைவுகள் இனிமையானதாக இல்லை. பழத்தை பழமாகப் பார்க்காமல் பெரும்பாலான மனிதர்கள் பணப்பொருளாகப் பார்ப்பதற்கு மட்டுமே தெரிந்துவைத்திருக்கிறார்கள். அந்தப் பார்வை அதன் இனிமையை மறைத்துவிடுகிறது. சிலர் பழத்தை உண்ணத்தக்க ஒரு பழமாக மட்டுமே  பார்க்கிறார்கள். அப்போது அதன் இனிமை மேலும் பெருகிவிடுகிறது.

கதைகளின் யோசனையில் மூழ்கியபடி நடந்து வந்ததில் வீட்டுக்கு விரைவாகவே வந்துவிட்டேன். காலணிகளை படியோரமாக விட்ட பிறகு அழைப்புமணியை அழுத்தினேன். சில கணங்களுக்குப் பிறகு மகன் வந்து கதவைத் திறந்தான். உள்ளே காலெடுத்து வைக்கும்போதே வீடெங்கும் பலாப்பழ வாசனை பரவியிருப்பதை உணர்ந்தேன். “என்னடா விஷயம்? வீட்டுக்குள்ள இருந்து பலாப்பழ வாசனை வருது” என்றேன். “அம்மா பலாப்பழம் அறுக்கிறாங்க” என்றான்.

அக்கணத்தில் கூடத்தில் அமர்ந்திருக்கும் நண்பர் மனோஜைப் பார்த்துவிட்டேன். “வாங்க மனோஜ், எப்ப வந்தீங்க? எப்படி இருக்கீங்க?” என்றபடி அவரை நோக்கிச் சென்றேன். “இப்பதான் வந்தேன். கால்மணி நேரமாச்சி” என்றார். தொடர்ந்து “கேரளாவிலிருந்து நேத்து மாமா ஒரு பலாப்பழம் கொண்டு வந்திருந்தாரு. அம்மா பாதி பழத்தை வெட்டி உங்களுக்கு கொடுத்துட்டு வரச் சொன்னாங்க” என்றார். அதற்குள் மனைவி  சுளைகள் அடுக்கிய தட்டை எடுத்துவந்து உணவுமேசையின் மீது வைத்துவிட்டு “ம், எல்லாரும் எடுத்துக்குங்க” என்றார்.

 

(சங்கு – ஏப்ரல் – ஜூன் 2023 )