Home

Saturday 22 April 2023

பொங்கல் - சிறுகதை

 

கல் அடுப்பில் ஏற்றப்பட்டிருந்த புதுப்பானையில் கொதித்து நுரைத்துவரும் பொங்கலைக் கரண்டியால் கிளறிக்கிளறி பக்குவம் பார்த்தாள் பட்டம்மாள். கழுத்திலும் நெற்றியிலும் வழியும் வேர்வையை முந்தானையால் ஒற்றிஒற்றி துடைத்தபடி உஸ்உஸ் என்று ஊதி வெப்பத்தை ஆற்றிக்கொண்டாள். ஆட்டத்தின் உற்சாகத்தில் அடுப்பை நெருங்கிவரும் பிள்ளைகளைபொங்கப்பானையில இடிச்சிக்கப் போறிங்கடா, அந்தப் பக்கமாக போய் ஆடுங்கடா பசங்களாஎன்று அனுப்பினாள். கரும்புகை வளைந்துவளைந்து கட்டையான ஒரு கோடுபோல மேலே எழுந்தது. பானையின் கழுத்தைச்சுற்றி கட்டப்பட்டிருந்த மஞ்சள் கிழங்கின்மீது கருமை படிந்தது.

மோளக்காரன் வந்து எவ்வவோ நேரமா நிக்கறான். இப்ப கௌம்பனாத்தான கோயிலுக்கு நேரம் காலத்தோட போய் சேரமுடியும். அங்க வேற ஏகப்பட்ட வேல பாக்கி கெடக்குது. சீக்கிரமா பொங்கக்கூடை தயாராவட்டும்.-”

பொங்கல்வைக்கும் பெண்களைப் பார்த்து பொதுவாக குரல் கொடுத்தார் கணக்குப் பிள்ளை. வேலையை முடித்துவிட்டு கும்பல்கும்பலாக வெயிலைப் பொருட்படுத்தாமல் சிரித்து கதைபேசியபடி நின்றிருந்த பெண்கள்மாமாவுக்கு ரொம்பதான் அவசரம். கொஞ்ச நேரம் நிக்க உடமாட்டாருஎன்றபடி எழுந்தார்கள். சூடு தணிவதற்காக இறக்கிவைத்த பானைகளை கூடைக்குள் மெதுவாக எடுத்து வைத்தார்கள். புதுவர்ணத்தில் மின்னும் ஐயனாரின்  உருண்ட கண்களையும் கருத்த மீசையையும் வெட்டுக்கத்தியையும் ஐயனாருக்கு முன்னால் தயார்நிலையில் நிற்கும் ஆக்ரோஷமான கல்குதிரைகளையும் அலுக்காமல் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த பிள்ளைகளை தேடிப்போய் அழைத்துவந்தார்கள். வருவது போல போக்குக்காட்டிவிட்டு சட்டென திரும்பி ஓடி புதுப்பாவாடை சரசரக்க பொங்கலுக்காக விடப்பட்ட மண்குதிரைகளிடையே புகுந்துபுகுந்து ஓடிப் பிடிக்கிற ஆட்டம் விளையாடச் சென்றார்கள் சிறுமிகள். விளையாட்டின் உற்சாகத்தில் மண்குதிரையின் வாய்க்குள் செருகப்பட்டிருந்த வேப்பிலையை உருவினார்கள்.

பொங்கல் திடலுக்கு வேகமாக வந்த சாமிக்கண்ணு ஒரு கணம் நின்று பெண்களின் கும்பலில் பட்டம்மாளைத் தேடினான். வெயிலிலும் போதையிலும் அவன் கண்கள் கூசின. இந்த மூலையிலிருந்து அந்த மூலைவரைக்கும் பார்வையை மாறிமாறிச் சுழல விட்டபிறகு அவன் கண்கள் அவளுடைய இடத்தைக் கண்டுபிடித்தன. “என்னால கண்டுபுடிக்க முடியாதுன்னு நெனச்சிக்கினியா?” என்று முணுமுணுத்தபடி அவிழத்தொடங்கிய வேட்டியைச் சரிசெய்துகொண்டே அவளை நெருங்கினான். “பட்டம்மா, பட்டம்மாஎன அதிரும் அவன் குரலைக் கேட்டு எல்லாருடைய பார்வையும் ஒருகணம அவன்பக்கம் படிந்து மீண்டது.

அடுப்புக்குள் வைக்கப்பட்ட கொட்டாங்கச்சி உஸ்ஸென சத்தத்துடன் ஓங்கி எரிந்தது. பட்டம்மாவை நெருங்கிய சாமிக்கண்ணுவின் உடம்பில் பரபரப்பும் வெறியும் தொற்றி இருந்தன.

ஊட்டுல ஒத்த ரூபாய்கூட வைக்காம எல்லாத்தயும் இங்க -தூக்கியாந்துட்டியா? அந்த அளவுக்கு துளுரு உட்டுடிச்சா ஒனக்கு? யாரு குடுக்கற தைரியத்துல இப்பிடி ஆடுற? கண்டதுண்டமா வெட்டி தொங்க வச்சிருவன் பாத்துக்கோ. எந்த பையனும் பொண்ணும் என்ன ஒரு கேள்வியும் கேக்க முடியாது, தெரியுமா?”

அடிப்பதற்காக கையை ஓங்கிக்கொண்டு வந்தான். காதிலேயே வாங்காதவளைப் போல குனிந்து அடுப்பிலிருந்து உருண்டு வெளியே வந்த கொட்டாங்கச்சியை மீண்டும் உள்ளே தள்ளினாள் பட்டம்மாள்.

ஒழுங்கு மரியாதயா நேத்து வாங்கன பணத்த குடுத்துடு. இல்ல. இங்கயே வெட்டி பொதச்சிட்டு போயிடுவன்வெறியோடும் மூர்க்கத்தோடும் கூவினான். பொங்கல் கூடைகளோடு புறப்பட தயாராக இருந்த பெண்கள் அனைவரும் சிறிதுநேரம் வேலையை நிறுத்தி அவனை வேடிக்கை பார்த்தார்கள். பொங்கல் பானையையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் பட்டம்மாள். பக்குவம் கூடிவந்ததும் பானையை அடுப்பிலிருந்து மெதுவாக இறக்கினாள். அவளுடைய மௌனம் அவனை மேலும் வெறிகொள்ளவைத்தது.

திரும்பிப் பார்க்கமுடியாத அளவுக்கு ஒடம்புல மதம் ஏறிடுச்சா? ஒன்னயெல்லாம் இங்கயே வெட்டி பலிகுடுக்கணும்டிஅடுப்பருகே குனிந்திருந்த அவள் முதுகில் காலால் ஓங்கி உதைத்தான். மறுபக்கமாக கையை ஊன்றி தடுமாறி உருண்ட பட்டம்மாள் உதடுகளைக் கடித்து வலியை விழுங்கியபடி எழுந்து மீண்டும் அடுப்புக்கு அருகே வந்தாள்.

நல்ல நாள் அதுவுமா எதுக்குண்ணே இப்படி வந்து அசிங்கப்படுத்தற? மொதல்ல நீ வீட்டுக்கு போ. எதுவா இருந்தாலும் அப்பறமா பேசிக்கலாம்.”

பக்கத்தில் கூடையோடு காத்திருந்தவள் சொன்னதும் அவள் பக்கமாக திரும்பினான் சாமிக்கண்ணு. மொதல்ல இந்த பக்கமா வாடா. குலதெய்வத்துக்கு பொங்கல் வைக்க வந்த எடத்துல இப்படியாடா நடந்துக்கறது? எதுவா இருந்தாலும் ஊட்டுக்குள்ள நாலு செவுத்துக்கு நடுவுல வச்சிக்கணும். பட்டப்பகல்ல நூறு பேரு முன்னால ஒரு பொம்பள புள்ளய கைநீட்டி அடிக்கறியே? பைத்தியமா புடிச்சிருக்குது ஒனக்கு?” அதட்டியபடி அவனை இழுக்க வந்தார் கணக்குப் பிள்ளை. சாமிக்கண்ணு திமிறி பின்வாங்கினான். மறுபடியும் நீண்ட கணக்குப் பிள்ளையின் கைகளைத் தட்டிவிட்டான். அசிங்கமான கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டினான். “ஒழுங்கு மரியாதயா சொல்றன், என் விஷயத்துல எந்த புடுங்கியும் தலயிட வேணாம். யாராயிருந்தாலும் வெட்டி கூறு போட்டுருவேன்என்று கூவினான். அதற்குள் கும்பலாக சேர்ந்துவிட்ட மற்ற குடும்பத்துக்காரர்கள்நமக்கெதுக்க கணக்குப்பிள்ளை, வாங்க இந்தப் பக்கமா, சேத்துல கால உட்டா நம்ம ஒடம்புதான் நாறிப் போவும்என்று கையைப் பற்றி அழைத்தார்கள். ஒருகணம் தயங்கி நின்று பட்டம்மாளைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு நகர்ந்தார் கணக்குப் பிள்ளை. “இவனுங்க பெரிய சமுத்திர மசுரு. வந்துட்டானுங்க நாயம் பேச.....” என்று அவர்களைப் பார்த்து காறித் துப்பினான் சாமிக்கண்ணு. அதைக் கண்டு கோபமுற்ற ஒருவர் அவனைநோக்கி வேகமாக அடிவைத்தார். உடனே அவரசமாக அவர் தோளை அழுத்தமாகப் பற்றி முன்னேற   விடாமல் தடுத்தார் இன்னொருவர். அதையும் மீறி முன்னேறிய கணவன்மார்களை மனைவிமார்கள் தடுத்து நிறுத்தினார்கள். எல்லாருமே சாமிக்கண்ணுவை வெறுப்பாகப் பார்த்தார்கள். “ஊரு மேல மரியாத இல்லாதவனுக்காக நாம எதுக்குய்யா காத்திருக்கணும். கௌம்புங்க போவலாம். பொம்பளங்கள்ளாம் வந்து பொங்க பானைய எடுங்கம்மா. சண்ட முடிஞ்சி அவுங்க வேணும்ன்னா அப்பறமா வந்து சேர்ந்துகிடட்டும்என்று யாரோ ஒருவர் தூண்டிவிட மேளக்காரன் பின்னால் எல்லாரும் அணிவகுந்து நடக்கத் தொடங்கினார்கள். திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டே சின்னப்பிள்ளைகளும் அவர்களோடு நடந்தார்கள்.

ஊரு இருக்கற தைரியத்துலதான் இந்த ஆட்டம் ஆடறியா? ஒன்மேல இவனுங்களுக்கு ஏன்டி அக்கற பொங்குது?” என்றபடி பட்டம்மாவின் விலாவில் உதைத்தான் சாமிக்கண்ணு. அவ்வளவு உதைகளையும் தாங்கிக்கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தாள் பட்டம்மாள். “கேக்க கேக்க பதிலே சொல்லாம ஒக்கார்ந்திருந்தா உட்டுருவான்னு நெனச்சிட்டியா? ஒழுங்கா பணத்த குடுத்திட்டு ஓடிப் போயிடு. இல்ல ஒனக்கு இங்கயே சமாதிதான், பாத்துக்கோமீசையை முறுக்கியபடி அவளை உதைக்க மறுபடியும் காலைத் தூக்கினான். ஒரு கணம் வேட்டி தடுமாற அவனுடைய கால் அடுப்பில் எரிந்துகொண்டிருந்த நெருப்புக்குள் அமிழ்ந்தது. “ஐயோஐயோஎன்று அலறியபடி வேகமாக காலை இழுத்தான். உச்சந்தலை வரைக்கும் நெருப்பின் அனல் பரவ துடித்தான். உட்காரவும் முடியவில்லை. நிற்கவும் முடியவில்லை. இன்னொரு காலை தரையில் ஊன்றியபடி சுற்றிச்சுற்றி குதித்தான். அசிங்கமான கெட்ட வார்த்தைகள் தன்னிச்சையாக அவன் வாயிலிருந்து வெளிப்பட்டன. அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது பட்டம்மாவுக்கு. உதைபட்ட வேதனையயெல்லாம் ஒருகணம் மறந்து அவன் கால்மீது ஊற்றுவதற்காக பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர்க்குடத்தை அவசரமாக எடுத்துக்கொண்டு நெருங்கினாள். நிலைகொள்ளாமல் தடுமாறிய சாமிக்கண்ணு பிசகாக அவள்மீது மோதிவிட, அவள் கையிலிருந்த குடம் நழுவி நங்கென்று அவன் பாதத்திலேயே விழுந்து உருண்டது. பாதமே நசுங்கியதைப்போல வேதனையில் துடித்தான். வெறிபிடித்த மாதிரி அலறினான். காலைப் பிடித்துக்கொண்டு உதடுகளைக் கடித்தபடி அந்த இடத்திலேயே சுருண்டு உட்கார்ந்தான். அவன் உடல் முழுக்க நெருப்பு வைத்ததுபோல எரிந்தது. பற்களைக் கடித்தபடி கண்களை மூடினான். ஒரு கட்டத்தில் அவனுடைய அலறல் இருமலாக மாறியது. வலி தாங்கமுடியாமல் நெஞ்சைப் பிடித்துக்கொண்டான்.   நிலைகொள்ள முடியாதபடி நீண்டு கொண்டே போனது இருமல். சிரமத்தோடு மூச்சை வாங்கி இழுத்தான். கண்களில் நீர் கோர்த்தது. முறுக்கேறி ஆர்ப்பரித்த அவன் உடல் ஒரே கணத்தில் துவண்டு வெடவெடத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் அவனையே வெறித்துப் பார்த்தாள் பட்டம்மாள். துணைக்கு அழைக்கக்கூட ஆளில்லை. குரல் கேட்காத தொலைவில் பொங்கல்கூடை சுமந்தவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள்.

அவுத்து போட்டுட்டாடி ஆடறன், இங்க வேடிக்க பாத்துக்கினு நிக்கற? எங்கனா போயி இன்னொரு கொடம் தண்ணி கொண்டாந்து ஊத்துடி தேவடியா?”

உதைப்பதற்காக பட்டம்மாவை நோக்கி அவன் இன்னொரு காலை நீட்டினான். அதை அறியாமலே திரும்பி வேகமாக ஓடிய பட்டம்மாள் அங்குமிங்கும் தேடி பழைய ஐயனார் குதிரைக்கு அருகே தென்பட்ட தண்ணீர்க்குடத்தை எடுத்துவந்து அவன் கால்மீது ஊற்றினாள்.

தண்ணீர் தந்த குளிர்ச்சியில் சிறிதுநேரம் அமைதியாக கண்ணைமூடி பின்பக்கமாகச் சரிந்து உட்கார்ந்தான். வேக வேகமான மூச்சு வாங்கியபடி ஆகாயத்தையும் காற்றில் அசையும் மரத்தையும் பார்த்தான். மார்புத்துடிப்பு இயல்பான நிலைக்குத் திரும்பியது. இடதுபக்கமாக ஒருக்களித்து நிக்கர் பைக்குள் வைத்திருந்த ஒரு பாக்கெட் சாராயத்தை எடுத்து பல்லால் கடித்து ஓட்டையிட்டான். அப்படியே வாய்க்குள் கவிழ்த்து மடமடவென்று குடித்தான். தொண்டைக்குழி எரிந்தது. நெருப்பு பற்றியதைப் போல உடம்பு முழுக்க ஒரு வேகம் முறுக்கேறியது. துவண்ட நரம்புகளில் துடிப்பு படர்ந்தது. ஆசுவாசத்தோடு எழுந்து நின்றான். திட்டுத்திட்டாக கரிந்த பாதத்தோலுக்குக் கீழே சிவந்த சதை தெரிந்தது. பாதத்தை ஊன்றமுடியாத வேதனையில் பற்களை நறநறவென கடித்தான். நொண்டியபடி நடந்து பட்டம்மாவை நெருங்கினான். அவன் நோக்கத்தை அறிந்து சுதாரித்து ஓட முனைவதற்குள்எங்கடி ஓடலாம்னு பாக்கற?” என்றபடி எட்டி அவளுடைய புடவையைப் பிடித்துவிட்டான்.

நல்லதனமா பணத்த குடுத்துட்டு போயிடு. இல்ல இங்கயெ ஒன் கொடல உருவி மாலயா போட்டுக்குவன்.”

குடுத்துவச்ச மாரி கேக்றியே, எங்கிட்ட ஏதுய்யா காசி? பொங்கல் வைக்க காசில்லாம நாலு நாளா எத்தன ஊடு ஏறிஎறங்கனன்னு ஒனக்கு தெரிமா?” எரிச்சலோடும் கோபத்தோடும் அவனைப் பார்த்தாள் பட்டம்மாள்.   அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல்உயிருமேல ஆசயிருந்தா குடுத்துட்டு ஓடிடு. இல்ல. மவளே, ஐயனாருக்கு இன்னிக்கு நீதான் பலிஅதட்டியபடி அவள் கன்னத்தில் அறைந்தான்.

அந்த காரியத்த மொதல்ல செய்யி, வா. தெனம் தெனம் செத்து செத்து உங்கிட்ட சீரழியறதவிட ஒரேடியா செத்து போறன்யா வா.”

பட்டம்மாவின் சொற்கள் அவனை வெறிகொள்ளவைத்தன. தோள்பட்டையிலும் முதுகிலும் மேலும்மேலும் அடித்தான். அவளுடைய அலறலொலி ஐயனார் திடலெங்கும் எதிரொலித்தது. களைத்துப்போய் மூச்சு வாங்கியபடி சிறிது நேரம் நின்றான். நிலைகுலைந்து விழுந்திருந்த பட்டம்மாவின் முந்தானையின்மீது அவன் பார்வை படிந்தது. சட்டென்று தாவி அதைப் பிடித்து இழுத்தான். புடவை இழுபட்டதில் தடுமாறி விழுந்தாள் அவள். முந்தானையின் முடிச்சை அவசரம் அவசரமாக அவிழ்த்துத் தேடினான். கசங்கிய வெற்றிலைத் துணுக்கும் பாக்கும் ஒரு துண்டு புகையிலையும் மட்டுமே இருந்தன. அவன் அடிவயிற்றில் ஆத்திரம் நெருப்பாகக் கொதித்தது.- முந்தானைத் துணியை அவள் முகத்தைநோக்கி வெறுப்பாக வீசினான். இரண்டு கால்களுக்கிடையே அவளை நெருக்கி படபடவென்று அடித்தான். கண், தலை, கழுத்து, நெற்றி, முதுகு என எல்லா இடங்களிலும் அடிகள் விழுந்தன.

நான் சொல்றதயே காதுல வாங்கமாட்டறியே. சண்டாளப் பாவி, எதுக்குடா என் பாவத்த கொட்டிக்கற?” பட்டம்மாளின் குரல் காற்றில் கரைந்தது. அவள் நெற்றி ஓரம் பிளந்து ரத்தம் கோடாக இறங்கியது. உடம்பிலும் புடவையிலும் புழுதி அப்பியது. காறித் துப்பியபடி அவளை ஒருபக்கமாக தள்ளிவிட்டு விலகி நின்றான் சாமிக்கண்ணு. நழுவிப் போன புடவையை அள்ளியெடுக்கக்கூட இயலாதவளாக தரையில் சரிந்து உட்கார்ந்தாள் பட்டம்மாள்.

நாலு ஆள் உயரத்துக்கு நிமிர்ந்திருந்த ஐயனாரின் முகத்தைப் பார்த்ததும் அவளுக்குள் துக்கம் பொங்கியது. “ஒரு நல்ல நாளும் அதுவுமா ஒனக்கொரு பொங்கல் வச்சி கும்பிட முடியாத பாவியாக்கிட்டானே, இந்த கமினாட்டிக்கு வாழ்க்கப்பட்டு காலம்பூரா இம்சப்படறனே, இதுக்கு ஒரு முடிவில்லயா சாமி.....” என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. 

பையிலிருந்து ஒரு பீடியைத் தேடி பற்றவைத்தான். வீக்கம் கொண்ட காலைத் தூக்கி அடியெடுத்து வைக்க முடியவில்லை. எரிச்சலும் வலியும் அவனை வெறிகொள்ள வைத்தன. வேதனையை மறக்க காறித் துப்பினான். மறுபடியும் இருமத் தொடங்கினான். அவனாகவே காலை இழுத்துஇழுத்து நடந்து குடத்தை எடுத்து பாதத்தின்மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டான். பாதத்தோடு ஒட்டியிருந்த புழுதி கரைந்து வழிந்தது. தோல் கரிந்த பகுதியை தரையில் படியவைக்க முடியவில்லை. மணல் ஒட்டி உறுத்தியது. குனிந்து ஒருபக்கமாக நீவிவிட்டுக் கொண்டான். வேட்டியை ஒரு பக்கமாக கிழித்து, அதை இரண்டாக மடித்து பாதத்துக்கு அடியில் கொடுத்து மேல் பக்கமாக முடிச்சுப் போட்டான். பிறகு, தரையில் வைத்து அழுத்திப் பார்த்தான். வலித்தது. படியவைக்க முடியவில்லை. “ஐயோ அம்மாஎன்று அலறினான். மெதுவாக குதிகாலை மட்டும் ஊன்றி நிமிரவும் நடக்கவும் மட்டுமே முடிந்தது.

எல்லாமே இந்தத் தேவடியாவால வந்த வென. பொங்கலு வய்க்க வந்துட்டாளாம் பொங்கலு. நிம்மதியா சாராயம் குடிக்கக் கூட காசில்லாம மனுசன் இங்க திண்டாடறான். இவளுக்கு மட்டும் பொங்கல் கேக்குதாம் பொங்கலு. வாடி நீ. உனக்கு வீட்டுல நான் வைக்கறேன் பாரு பொங்கலு. அப்ப தெரியும்டி ஒனக்கு, நான் யார்னு.”

இன்னும் சிறிது தண்ணீர் ஊற்றினான். ஆசுவாசமாக இருப்பதைப்போலத் தோன்றியது. என்ன செய்வது என்று புரியாமல் இப்படியும் அப்படியுமாக பார்வையை ஓட்டினான். பார்த்த இடங்களில் எல்லாம் கல் அடுப்புகள். எரியாத விறகுக்கட்டைகளும் மிளார்களும் செத்தையும்தான் இருந்தன. அடுப்புகளிலிருந்து எழுந்த புகை துணியைப்போல காற்றில் நெளிந்து நெளிந்து மேலேறியது. பக்கத்தில் ஐயனார் மேடையோரமாக உருண்டு கிடந்த சில பழைய குடங்கள் தென்பட்டன. நொண்டிநொண்டி அந்த இடத்தைநோக்கி அவன் சென்றான். அவன் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. ஒரு சில குடங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. உட்கார்ந்து பாதத்தின் மீது ஊற்றி நீவியபடி பெருமூச்சு வாங்கினான். வலியில் வாயைத் திறந்தபடி அண்ணாந்து வெயில் வழியும் வானத்தைப் பார்த்தான். ஐயனாரின் உருண்ட கரிய கண்களும் அவனைநோக்கி திரும்பியவைபோல காணப்பட்டன.

அழுகை நின்றுவிட வெறுமை நிரம்பிய மனத்துடன் அருகிலிருந்த புதர்களையும் குட்டைப் பனைமரங்களையும் பார்த்தாள் பட்டம்மாள். அதற்குப் பின்னாலிருந்த முள்காடுதான்   சாராய விற்பனை மையம். போதையில் நிலை தடுமாறி கீழே விழுந்து கிடப்பவனை முட்காடுவரை தேடிவந்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற பழைய சம்பவங்களை நினைத்தது அவள் மனம். சட்டென அழுகை மறுபடியும் பொங்கியது. “எப்படியெல்லாம் இந்தப் பாவிக்கு தொணயா இருந்தன். எல்லாத்தயும் மறந்து இப்பிடி மாட்ட ஒதைக்கறமாரி ஒதைக்கறானே. நன்றிகெட்ட மனுஷனுக்கு வாழ்க்கப்பட்டு நாதியில்லாம போயிட்டனே, என்னப் பெத்த அம்மா.....” என்று வார்தைகளை கோர்த்து அழத் தொடங்கினாள். திடீரென ஓங்கியொலித்த அவளுடைய அழுகுரல் சாமிக்கண்ணுவை மீண்டும் மூர்க்கம் கொள்ளவைத்தது. துணிகள் அலங்கோலமாக கலைந்து கிடக்க தலையில் அடித்தபடி அழும் அவளையே ஒருவித கொலைவெறியோடும் வெறுப்போடும் பார்த்தான்.

தற்செயலாக அவன் பார்வை அவளது ரவிக்கைக்குள் மார்புப் பிளவுகளுக்கிடையே தனித்துத் தெரிந்த ஒரு சின்னமேட்டில் படிந்தது. சில கணங்கள் அதையே உற்றுப் பார்த்தான். சந்தேகமே இல்லை. அது சுருக்குப்பைதான் என உறுதியாக நம்பினான். “இத்தன நேரம் நாடகமாடி போட்ட தேவடியா, எடத்த மாத்திட்டா தெரியாம போயிடும்னு நெனச்சியா?” என வேகமாக எழுந்தான். மறுகணமே காலை அழுத்தமாக ஊன்ற முடியாமல் நிலைகுலைந்து தடுமாறி கல்மேடையைப் பிடித்து சமாளித்தான். சரமாரியாக அவன் வாயிலிருந்து வசைகள் வந்து விழுந்தன.

எதிர்பாராமல் ஓங்கிய அவன் குரலைக் கேட்டு பட்டம்மாள் குழம்பினாள். அவன் கண்கள் படிந்திருக்கும் இடத்தை உணர்ந்ததும் திகைப்புக்கு ஆளானாள். முடிந்தவரை அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடிவிடவேண்டும் என்று விரும்பினாள். வேகவேகமாக புடவையை மேலே அள்ளிப் போட்டுக்கொண்டு பொங்கல் கூடையை இழுத்தாள். அதற்குள் பொங்கல் பானையை தூக்கி வைத்தாள். கூடையை எடுத்து தலைமீது வைத்துக்கொண்டு ஓடத் தொடங்கினாள். நெற்றிக் காயம் வலித்த-து. ரத்தக்கோடு வேகமாக வேறொரு கிளையில் பிரிந்து வழிந்தது.

எங்கடி ஓடற திருட்டுத் தேவடியா, நில்லுடிசாமிக்கண்ணு கத்தினான். பட்டம்மாள் திரும்பியே பார்க்கவில்லை. காலை இழுத்துஇழுத்து நடக்க மிகவும் சிரமப்பட்டான் சாமிக்கண்ணு. வேதனையில் அவன் கோபம் இன்னும் அதிகமானது. “நில்லுடி தேவடியா முண்ட, எந்த பையன பாக்கறதுக்கு இந்த ஓட்டம் ஓடற?” என்றபடி உருண்டையான ஒரு கல்லை எடுத்து அவளது காலை நோக்கி வீசினான். குறி தவறி அவளுக்குப் பக்கத்தில் விழுந்தது  அந்தக் கல். அவளுடைய வேகம் அவனுக்குக் கடுமையான வெறியை ஊட்டியது. ஒரு கணம் கூட அவன் வாய் ஓயவில்லை. விடாமல் கெட்ட வார்த்தைகளைச் சொல்லி அவளை அழைத்தான். திரும்பிக்கூட பார்க்காமல் ஓடிக்கொண்டே இருந்தாள் பட்டம்மாள். ஏமாற்றத்துக்கும் அவமானத்துக்கும் ஆளானவனைப் போல வெறிகொண்டு அதட்டினான் சாமிக்கண்ணு. “என் கையாலதான்டி உனக்கு இன்னிக்கு சாவு. நீ எங்க போனாலும் சரிடி, உன்ன கண்டதுண்டமா வெட்டாம உடமாட்டன்டிமீண்டும் ஒரு கல்லைத் தேடி எடுத்து அவள் காலை நோக்கி வீசினான். அப்போதும் குறி தவறியது.

அவனுடைய வேகம் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுருக்குப்பையில் கம்மலை அடகுவைத்து வாங்கிய ஐந்நூறு ரூபாய் இருந்தது. கோயில் வரி கட்டவேண்டும். அரிசிக்கடன், காய்கறிக் கடன், விறகுக் கடன், எல்லாவற்றையும் அடைக்க வேண்டும். ஆறு மாசத்துக்கு முன்பாக ஆஸ்பத்திரி செலவுக்காக வாங்கிய கடனுக்குரிய வட்டித்தவணையைக் கட்டவேண்டும். எல்லாச் செலவுகளையும் அதை வைத்துக்கொண்டுதான் முடிக்க வேண்டும். அதை இழப்பது கிட்டத்தட்ட மரணத்துக்குச் சமம். நடக்கநடக்க அவளுக்குள் பல யோசனைகள். தப்பித்துவிட முடியும் என்கிற நம்பிக்கையும் அகப்பட்டு விடுவோமோ என்கிற பீதியும் அவளை மாறிமாறி பாடாய்ப் படுத்தின. எதிர்பாராக கணத்தில் அவள் குதிகாலைத் தாக்கி விழுந்தது சாமிக்கண்ணு வீசிய கல். “ஐயோ அம்மாஎன்று அலறினாள் பட்டம்மாள். வலி தாங்க முடியவில்லை. என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவள் கைகள் கூடையை கீழே இறக்கிவைத்தது. கத்தியால் நரம்பை வெட்டியதுபோல வலி காலெங்கும் பரவியது. வேர்வை வழிய உடல் நடுங்கத் தொடங்கியது. “அட கொலகாரா, ஏன்டா எனக்கு இந்த இம்ச குடுக்கற?” என அவன் தாவிவரும் திசையைப் பார்த்து திட்டியவளாக காலைத் தொட்டு நீவினாள். அடி நன்றாக ஆழமாக தாக்கியிருந்தது.

நல்லா மாட்டனியா? இரு இரு. என் கால ஒடச்சி வேடிக்க பாத்த இல்ல. இன்னிக்கு ஒன்ன இன்னா பண்றன் பாருடிஇழுத்து இழுத்து நடப்பதை நிறுத்திவிட்டு ஒரு காலை மட்டுமே பயன்படுத்தி நொண்டிநொண்டி அவளை வேகமாக நெருங்கினான். ஒரு கணம் எதுவும் செய்யத் தோன்றாமல் நிலைகுலைந்து தவித்த பட்டம்மாள் மறுகணம் காலை ஊன்றி எழுந்திருக்க முயன்றாள். முடியவில்லை. வலியில் உடல் நடுங்கியது. தடுமாறிச் சரிந்தாள்.

திருட்டு முண்டபற்களை நறநறவென்று கடித்தபடி சாமிக்கண்ணு கோபத்தோடு பட்டம்மாவை நெருங்கி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அடி தாங்காமல் சாய்ந்தவளை இழுத்து மறுகன்னத்திலும் அறைந்தான். தடுப்பதற்காக அவன் முன்னால் நீண்ட அவளுடைய கைகளை முறுக்கி மடித்தான். உச்சந்தலையிலும் அடிகள் விழுந்தன. “ஐயோ, ஐயோஎன்று அலறியபடி துடித்தாள் அவள், வேதனை பொறுக்கமுடியாமல் ஓங்கி அழுதாள். தப்பிக்கும் வெறி ஒரு உத்வேகமாக அவளுக்குள் பொங்கியெழுந்தது. எழுந்திருக்க முயற்சி செய்தபோது, சற்றும் எதிர்பாராத விதமாக அவள் இடுப்பில் காலாலேயே உதைத்தான் அவன். வெட்டி வீசப்பட்ட மரக்கிளைபோல தடுமாறி விழுந்தாள் அவள். அவள் உடல் வெடவெடவென நடுங்கியது.

மல்லாந்து விழுந்தவளை நொண்டிக்கொண்டே நெருங்கினான் சாமிக்கண்ணு. குனிந்து அவள் ரவிக்கையைப் பற்ற முயன்றான். சட்டென புரிந்துகொண்டு பின்வாங்கி நகர்ந்து புரண்டு தப்பித்தாள் பட்டம்மாள். மறுகணமே கையை ஊன்றி எழுந்திருக்க விரும்பினாள். தரையில் ஊன்றிய கைமீது காலை வைத்து அழுத்தி புழுவை நசுக்குவதைப் போல நசுக்கினான் சாமிக்கண்ணு. வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அலறினாள் பட்டம்மாள். ஒரு பாறையைப்போல அவன் கால் அவள் கைமீது இறுகியது. உருவியெடுக்க அவள் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. கொஞ்சமும் யோசிக்காமல் தன்னுடைய மற்றொரு கையால் தோல் கரிந்த அவனுடைய மறுகாலில் ஓங்கிஓங்கிக் குத்தினாள். இதனால் வலி தாளாத அவன் சட்டென வேறு இடத்துக்கு நொண்டிக்கொண்டே தாவ, விடுபட்ட கைகளை உதறிக்கொண்டு வேகமாக எழுந்து மறுதிசையில் நடந்தாள். ஒரு வெறிநாயைப் போல திடீரென பாய்ந்துவந்து அவள்மீது விழுந்தான் சாமிக்கண்ணு. கன்னம், கழுத்து, மார்பு, தோள்கள் என பார்வையில் பட்ட இடங்களில் எல்லாம் குத்தினான். தடுக்க முயன்ற இரு கைகளையும் ஒரே கையால் மடக்கி ஒதுக்கிவிட்டு மறு கையை ரவிக்கைக்குள் விட்டு சுருக்குப்பையை எடுக்க முனைந்தான். துரும்பளவும் அதற்கு இடம்கொடுக்காமல் குனிந்து ரவிக்கைக்குள் நுழைய முனையும் அவன் கையை முடிந்தமட்டும் பற்களை அழுத்திக் கடித்தாள். வலி பொறுக்காத சாமிக்கண்ணு அலறித் துடித்தபடி அவள் கழுத்தில் மிதிப்பதற்காக காலைத் தூக்கினான். சட்டென தனது காலை உயர்த்தி அவன் அடிவயிற்றிலேயே ஓங்கி உதைத்தாள் பட்டம்மாள். உதை அவன் விதைப்பையை அழுத்த அம்மா என அலறியபடி மறுபக்கமாக தடுமாறி ஒதுங்கினான். எல்லாப் பிடிகளும் நழுவிய அக்கணமே   சேலையை வாரிக்கொண்டு எழுந்த பட்டம்மாள் மூச்சு வாங்கியபடி ஆத்திரத்துடன் முறைத்தாள். அந்தப் பார்வை இதுவரை அவன் பார்க்காத ஒன்றாக இருந்தது. ஆவேசமும் வெறியும் ததும்பும் அவளுடைய உருண்ட கண்கள் உக்கிரம் மிகுந்த ஐயனாரின் கண்களைப்போல காணப்பட்டன. சாமிக்கண்ணு வேதனையோடும் பீதியோடும் பின்வாங்கினான். அந்த இடத்திலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று முதன் முறையாக அவனுக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. அச்சத்தை வெளிக்காட்டாதபடி அவன் வாய்மட்டும் தொடர்ச்சியாக அவளை அதட்டிக்கொண்டும் வசைகளை கொட்டிக்கொண்டும் இருந்தது. சட்டென கைக்கு அகப்பட்ட ஒரு பெரிய பாறையைத் தூக்கி கோபமும் அவசரமுமாக அவள் தலையை நோக்கி எறிந்தான். குறி பிசகி அது வேறுபக்கமாக சென்று விழுந்தது. மல்லாந்தவாக்கிலேயே பின்னகர்ந்து காலை ஊன்றி எழுந்த பட்டம்மாள் சற்றும் எதிர்பாராத விதமாக கூடைக்குள் இருந்த பொங்கல்பானையைத் தூக்கிக்கொண்டு நிமிர்ந்தாள். அவள் பார்வையின் உக்கிரம் சிறிதும் குறையாததாக இருந்தது. நிலைகுலைந்து விழுந்த சாமிக்கண்ணுபட்டம்மா பட்டம்மாஎன்று தடுமாறினான். மறுகணம் ஆகாயத்திலிருந்து வந்து விழுந்த ஒரு பெரிய பாறையைப் போல பொங்கல்பானை தன் தலைமீது மோதி உடைந்ததைக் கண்டான். பைத்தியம் மின்னும் அவள் கண்களில் வெளிப்பட்ட உக்கிரம் பல நூறு பாறைகளென விழுந்து தாக்கியதைப்போல இருநத்து. உறைந்த கண்களால் அவளுடைய உருண்ட கண்களைப் பார்த்தான் அவன்.

(அம்ருதா - 2008)