தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு காந்தியடிகள் வருவதற்கு அரைநூற்றாண்டுக்கு முன்பிருந்தே பீகாரைச் சேர்ந்த சம்பாரணில் அவுரி சாகுபடியின் விளைவாக விவசாயிகளின் வாழ்வில் துயரம் கவியத் தொடங்கிவிட்டது. ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய அவுரிச் சாகுபடி விவசாயிகளின் வாழ்க்கையை சிறுகச்சிறுகச் சிதைத்து வதைத்தது.
அங்கிருந்த நிலங்கள் அனைத்தும்
ஆங்கிலேய அதிகாரிகளின் வசம் இருந்தன. இந்திய விவசாயிகள் அந்த நிலங்களில் குத்தகைக்கு
பயிரிட்டு வந்தனர். அதற்கு ஈடாக இருபதில் மூன்று பங்கு நிலப்பரப்பில் அவுரியைப் பயிரிட்டு
அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும் என்பது விதியாக இருந்தது. தீன்கதியா என்று அழைக்கப்பட்ட
இந்த நடைமுறையின் விளைவாக விவசாயிகள் கடுமையான பொருளிழப்புக்கு ஆளானார்கள். சாகுபடி
நிபந்தனையிலிருந்து அவர்களால் விடுபடவும் முடியவில்லை. விடுவித்துக்கொள்ள ஆங்கிலேயர்கள்
இழப்பீடாகக் கேட்கும் பெரும் தொகையை அவர்களால் அளிக்கவும் முடியவில்லை.
தென்னாப்பிரிக்காவிலிருந்து 09.01.1915 அன்று இந்தியாவுக்குத் திரும்பிய காந்தியடிகள் கோகலேயின் ஆலோசனைப்படி இந்தியாவின் நிகழ்முறைகளைப் புரிந்துகொள்வதற்காக ஓராண்டுக் காலம் சுற்றுப்பயணம் செய்தார். அப்பயணத்தின் தொடர்ச்சியாக லக்னோ நகருக்கு வந்து 1916ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அம்பிகாசரண் மஜூம்தார் தலைமையில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் சம்பாரண் விவசாயிகளின் துன்பங்களை முன்வைத்துப் பேசுவதற்காகச் சென்ற ராஜ்குமார் சுக்லா காந்தியடிகளைச் சந்தித்து சம்பாரணுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். விரைவில் கல்கத்தாவுக்கு வரவிருப்பதாகவும் அப்போது சம்பாரணுக்கு வருவதாகவும் சுக்லாவுக்கு வாக்களித்தார் காந்தியடிகள்.
காந்தியடிகள் 07.04.1917
அன்று அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கல்கத்தாவுக்கு
வந்து சேர்ந்தார். அங்கு ராஜ்குமார் சுக்லா அவருக்காகக் காத்திருந்து, நிகழ்ச்சிகள்
முடிவடைந்த பிறகு சம்பாரணுக்கு அழைத்துச் சென்றார். விவசாயிகளை நேருக்குநேர் சந்தித்து
பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதுதான் அவருடைய முதல் நோக்கமாக இருந்தது. ஏராளமான நண்பர்கள்
அவருக்கு உதவி செய்யத் திரண்டு வந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்று விவசாயிகளைச்
சந்தித்து தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்தினர். அவருடைய விசாரணையின் தீவிரத்தைக் கண்ட
மாவட்ட நீதிபதி 16.04.1917 அன்று நீதிமன்றத்தில்
ஆஜராக வேண்டும் என காந்தியடிகளுக்கு கடிதம் அனுப்பினார். நீதிமன்றத்தில் மேலோட்டமாக
நடைபெற்ற சிறிதுநேர விசாரணைக்குப் பிறகு, சம்பாரணைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும்
என்று காந்தியடிகளுக்கு உத்தரவிட்டார் நீதிபதி.
நீதிபதியின் உத்தரவுக்கு
அவர் கீழ்ப்படிய மறுத்துவிட்டார் காந்தியடிகள்.
தன்னை எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் சம்பாரண் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்வரை
சம்பாரணுக்கு மீண்டும் மீண்டும் திரும்பி வருவதை யாராலும் தடுக்கமுடியாது என்று அறிவித்தார்.
என்ன செய்வது என்று முடிவெடுக்கமுடியாத நீதிபதி தீர்ப்பை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைத்தார்.
கிடைத்திருக்கும் ஒரு வார
காலத்துக்குள் ஆவணப்படுத்தும் வேலையை விரைவாகச் செய்யும் பொருட்டு நண்பர்களை எல்லாக்
கிராமங்களுக்கும் அனுப்பிவைத்தார். ஒருவேளை தான் சிறைப்பட நேர்ந்தால், அடுத்தடுத்து
ஆவணப்பணிகளை மேற்கொள்ளவும் சிறைக்குச் செல்லவும் முன்னெச்சரிக்கையாக ஒரு தொண்டரணியைத்
திரட்டித் தயார்ப்படுத்தினார் காந்தியடிகள். பாட்னாவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இளைஞரொருவரும்
அந்த அணியில் ஆவலோடு சேர்ந்திருந்தார். ஏற்கனவே கல்கத்தாவிலும் லக்னோவிலும் நடைபெற்ற
காங்கிரஸ் மாநாட்டில் அவர் காந்தியடிகளைச் சந்தித்திருந்தார். ஆயினும் விவசாயிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் வேலை
வழியாக காந்தியடிகளின் மனத்தில் அவர் இடம் பிடித்தார். அவர் பெயர் இராஜேந்திர பிரசாத்.
கல்லூரி மாணவராக படித்துக்கொண்டிருந்த
காலத்திலேயே காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு
வைத்திருந்தார் இராஜேந்திர பிரசாத். கல்கத்தாவில் 1906இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்
தொண்டராகப் பணியாற்றியபோது கேட்டிருந்த சரோஜினி நாயுடு, மதன்மோகன் மாளவியா, ஜின்னா
போன்ற தலைவர்களின் மன எழுச்சியூட்டும் சொற்பொழிவுகள் தேசவிடுதலைக்குப் பாடுபடும் எண்ணத்தை
அவருக்குள் வளர்த்தன. அது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் இயல்பாகவே மக்கள்
மீது இரக்கமும் கனிவும் கொண்டவராக இருந்தார் அவர். ஒருமுறை வங்காளத்திலும் பீகாரிலும்
1914இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல நகரங்கள் மூழ்கிவிட்டன. பூன்பூன் நதி பெருக்கெடுத்தோடி
பாட்னா நகரத்தையே மூழ்கடித்துவிட்டது. அப்போது, இராஜேந்திர பிரசாத் தன் வயதையொத்த இளைஞர்களைத்
திரட்டிக்கொண்டு வெள்ள மீட்புப்பணிகளில் இரவும் பகலுமாக ஈடுபட்டு மக்களுக்கு உதவியாக
இருந்தார்.
இந்திய தேசிய உணர்வை வளரவிடாமல்
தடுக்கும் வகையில் ஆங்கிலேய அரசு 1919இல் ரெளலட் சட்டத்தை இயற்றியது. காந்தியடிகளும்
பிற தலைவர்களும் இச்சட்டத்தை எதிர்த்தனர். நாடெங்கும் இச்சட்டத்தைக் கண்டித்து சத்தியாகிரக
வழியில் கண்டன ஊர்வலங்களும் கூட்டங்களும் நடைபெற்றன. 06.04.1920 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு
காந்தியடிகள் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்புக்கு பீகார் மாநிலம் முழு அளவில் ஆதரவை
அளித்தது. இராஜேந்திர பிரசாத் ஓய்வின்றி பல கூட்டங்களில் சொற்பொழிவாற்றி இச்சட்டத்தின்
தீமைகளைப்பற்றி மக்களிடையே எடுத்துரைத்தார்.
அகில இந்திய காங்கிரஸ்
கமிட்டி 30.05.1920 அன்று காந்தியடிகள் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்துவதற்கான தீர்மானத்தை
நிறைவேற்றியது. மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் வழியாக அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமெனத் திட்டமிடப்பட்டது. பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆடைகளும் பிற பொருட்களும்
கூட இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்க முடிவெடுக்கப்பட்டது.
இராஜேந்திர பிரசாத்தும்
அக்கூட்டத்தில் இருந்தார். சுதந்திரப் போராட்டத்தில் முழுமையான அளவில் ஈடுபடுவதற்காக
தன்னுடைய வழக்கறிஞர் வேலையை அவர் உடனடியாகத் துறந்தார். பாட்னா பல்கலைக்கழகத்தில் தான்
ஏற்றிருந்த செனட் உறுப்பினர் பதவியையும் சின்டிகேட் உறுப்பினர் பதவியையும் துறந்தார்.
மாநிலம் முழுதும் பயணம் செய்து ஒத்துழையாமை இயக்கத்தின் கொள்கைகளை விளக்கிப் பேசினார்.
தேசிய இயக்கத்தின் செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்தி மொழியில் தேஷ்
என்னும் பத்திரிகையைத் தொடங்கினார். பல தேசியத்தலைவர்களின் கட்டுரைகளைக் கேட்டு வாங்கி
தன் பத்திரிகையில் வெளியிட்டார்.
தேஷ் இதழை நடத்திவந்த காலத்தில்
இராஜேந்திர பிரசாத்துக்கு எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயனுடன் நெருங்குப் பழகும்
வாய்ப்பு கிடைத்தது. இந்திய விடுதலை தொடர்பாக அவருடன் தொடர்ந்து உரையாடி தம் கருத்துகளைச்
செழுமைப்படுத்திக்கொண்டார் இராஜேந்திர பிரசாத். அந்த உரையாடல் அனுபவங்களையெல்லாம் தேஷ்
இதழில் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். அது மட்டுமன்றி, ராகுல சாங்கிருத்தியாயனிடமிருந்து
சிறப்புக்கட்டுரைகளை எழுதி வாங்கி தேஷ் இதழில் வெளியிட்டார்.
இராஜேந்திர பிரசாத் ஆசிரியராக
பணியாற்றிய தன் நண்பர்களுடன் இணைந்து பாட்னா – கயா சலையில் 05.01.1921 அன்று ஒரு தேசியக்
கல்லூரியை நிறுவினார். அரசு கல்லூரியிலிருந்து வெளியேறிய பல மாணவர்கள் அப்புதிய கல்லூரியில்
இணைந்து படிக்கத் தொடங்கினர். 31.03.1921, 01.04.1921 ஆகிய இரு தினங்களில் விஜயவாடாவில்
நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இராஜேந்திர பிரசாத் பங்கேற்றார்.
சுயராஜ்ஜிய நிதியாக ஒரு கோடி ரூபாய் திரட்டவேண்டுமென்றும் ஒரு கோடி பேரை காங்கிரஸில்
புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கவேண்டும் என்றும் சுதந்திரப்போராட்டத்துக்கு விசையூட்டும்
விதமாக இருபது லட்சம் இராட்டைகளை உறுப்பினர்களுக்கு விநியோகித்து தம் தேசப்பற்றை வெளிப்படுத்தும்
விதமாக அவர்களிடம் நூல்நூற்கும் ஆர்வத்தை உருவாக்கவேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில்தான் பிங்கலி வெங்கய்யா என்னும் தொண்டர் தேசியக்கொடியின் ஒரு மாதிரி
வடிவத்தை வடிவமைத்து காந்தியடிகளிடம் ஒப்படைத்தார்.
கூட்டத்திலிருந்து பீகாருக்குத்
திரும்பிய இராஜேந்திர பிரசாத் 06.04.1921 முதல் சத்தியாகிரக வாரத்தை மாநிலம் முழுதும்
கொண்டாட வேண்டுமென்று மக்களைக் கேட்டுக்கொண்டார். சுயராஜ்ஜிய நிதியாக பத்து லட்சம்
ரூபாய் திரட்டுவதையும் பத்து லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பதையும் இரண்டு லட்சம் இராட்டைகளை
உருவாக்கி விநியோகிப்பதையும் மூன்று மாத காலத்துக்குள்
முடிக்கவேண்டுமென்ற இலக்குடன் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவருடைய
கடுமையான உழைப்பின் விளைவாக தேசத்துக்கென விதிக்கப்பட்ட இலக்கில் பத்தில் ஒரு பங்கை
பீகார் மாநிலம் நிறைவேற்றியது.
அகில இந்திய காங்கிரஸ்
கமிட்டி 16.08.1921 அன்று பாட்னாவில் உள்ள சதாகத் ஆசிரமத்தில் கூடியது. அந்தக் கூட்டத்தில்
இராஜேந்திர பிரசாத் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில்
அயல்நாட்டு ஆடைகளைப் புறக்கணிக்கும் தீர்மானமும் ஒன்று. இராட்டைக்கும் சுதேசியத்துக்கும்
உள்ள தொடர்பை விளக்கியபடி மாநிலமெங்கும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் இராஜேந்திர
பிரசாத். இராஜேந்திர பிரசாத்தும் லாலா லஜபதி ராயும் சேர்ந்து பல கூட்டங்களில் கதர்
பயன்பாட்டைப்பற்றியும் அயல்நாட்டு ஆடைகள் புறக்கணிப்பதைப் பற்றியும் ஊக்கத்துடன் பரப்புரை
செய்தனர்.
1922ஆம் ஆண்டு டிசம்பர்
மாதத்தில் காங்கிரஸின் ஆண்டு மாநாடு கயாவில் நடைபெற்றது. சட்டமன்ற நுழைவு பற்றி இம்மாநாட்டில்
விவாதமெழுந்தது. இராஜேந்திர பிரசாத் உட்பட பலரும் அதை ஏற்கவில்லை. மாறாக, கதர் பயன்பாட்டை
அதிகரிக்கும் வகையில் நாடெங்கும் தீவிரமான பரப்புரையில் ஈடுபடுவது தொடர்பான தீர்மானத்தை
நிறைவேற்ற வழிவகுத்தார். கயா காங்கிரஸுக்குப் பிறகு இராஜேந்திர பிரசாத் பீகார் காங்கிரஸின்
செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
1923இல் நாக்பூரில் காங்கிரஸ்
கொடியையும் இந்திய தேசியக் கொடியையும் ஏந்தியபடி காங்கிரஸ் தொண்டர்களின் ஊர்வலம் நடைபெற்றது.
உடனடியாக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்திய தேசியக் கொடியைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தனர்.
அத்தடையைப் பொருட்படுத்தாத விடுதலை இயக்கத்தினர் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நினைவுகூரும்
வகையில் ஏப்ரல் மாதம் 6 முதல் 13 வரை கொடி வாரம் கடைபிடித்தனர். இறுதி நாளில் தடையை
மீறி ஜம்னாலால் பஜாஜ் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. ராஜேந்திர பிரசாத்தும் அந்த ஊர்வலத்தில்
கலந்துகொண்டார். பஜாஜ் கைதானதும் வல்லபாய் படேல், வினோபா பாவே, இராஜாஜி போன்ற தலைவர்கள்
போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். 109 நாட்கள் நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு
தேசியக் கொடியை பொது இடங்களில் பறக்க விடவும் ஊர்வலங்களில் ஏந்திச் செல்லவும் விதிக்கப்பட்டிருந்த
தடையை ஆட்சியாளர்கள் விலக்கிக்கொண்டனர்.
பீகாருக்குத் திரும்பிய
ராஜேந்திர பிரசாத் தேசியக்கொடியைப் பறக்கவிட்டு கொடிநாளைக் கொண்டாடினார். அடுத்த நாள்
கயாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரையில் ஒரு நாட்டுக்கு
தேசியக்கொடி எந்த அளவுக்கு முக்கியமானது என்பதைப்பற்றியும் பொதுமக்கள் தேசியக்கொடியை உயிரினும் மேலானதாக ஏன்
கருதவேண்டும் என்பதைப்பற்றியும் அனைவரும் உணரும்வகையில் உணர்ச்சிமயமாக உரையாற்றினார்.
1923இல் நடைபெற்ற நகராட்சித்
தேர்தலில் இராஜேந்திர பிரசாத் பாட்னாவில் நின்று வெற்றி பெற்று நகராட்சித்தலைவராகப்
பொறுப்பேற்றார். ஆனால் போதிய நிதி ஆதாரமில்லாததால், அவரால் நகராட்சியை நிர்வகிக்க முடியவில்லை.
மக்கள் நலவாழ்வுக்கு போதிய வசதிகளைச் செய்துதர முடியவில்லை. அப்போது புதிய உறுப்பினர்கள்
பங்கேற்றிருக்கும் நகராட்சிகளையும் மாநகராட்சிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர
அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்ற நினைத்தது. அதை எதிர்த்து இராஜேந்திர பிரசாத் தலைமையின்
கீழ் மாநில அளவில் ஒரு பெரிய மாநாடு நடைபெற்றது. கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகே
ஆட்சியாளர்கள் தம் முயற்சியைக் கைவிட்டனர்.
கதர் பயன்பாட்டுக்கு இராஜேந்திர
பிரசாத் ஆற்றிய தொண்டை கெளரவப்படுத்தும் வகையில் 23.12.1924 அன்று பெல்காம் காங்கிரஸ்
மாநாட்டையொட்டி நடைபெற்ற அகில இந்திய சுதேசி கண்காட்சியைத் திறந்துவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.
கண்காட்சியைத் திறந்து வைத்ததோடு அன்று கதர் உற்பத்திக்கும் நாட்டின் கெளரவத்துக்கும்
பொருளாதார மேம்பாட்டுக்கும் இடையிலான உறவைப்பற்றி புள்ளி விவரங்களோடு அவர் ஆற்றிய உரை
அனைவருக்கும் ஆழமான புரிதலை அளிக்கும் விதமாக அமைந்தது.
இராஜேந்திர பிரசாத்தின்
துணையோடு 1925, 1927 ஆகிய இரு ஆண்டுகளில் காந்தியடிகள் பீகாரில் விரிவான அளவில் சுற்றுப்பயணத்தை
மேற்கொண்டார். ஒவ்வொரு மேடையிலும் இருவரும்
பொதுமக்களிடம் கதரின் மேன்மையைப்பற்றியும்
நாட்டு விடுதலைக்கும் கதருக்கும் இருக்கும் தொடர்பைப்பற்றியும் உரையாற்றினர். கதரைப்பற்றி பேசுவதோடு இராஜேந்திர பிரசாத் பீகார்
வித்தியா பீடத்துக்குத் தேவையான நிதியையும் திரட்டினார். இந்தப் பீடத்தின் கீழ் ஒரு
கல்லூரியும் ஒன்பது உயர்நிலைப்பள்ளிகளும் பதினைந்து நடுநிலைப்பள்ளிகளும் முப்பது ஆதாரப்பள்ளிகளும்
இயங்கி வந்தன.
அச்சமயத்தில் எதிர்பாராத
விதமாக பீகாரில் சில இடங்களில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வேற்றுமை
முற்றி கலவரங்கள் நடைபெற்றன. உடனே இராஜேந்திர பிரசாத்திடம் அந்த இடங்களுக்குச் சென்று
அச்சமின்றி மக்கள் நடமாடும் வகையில் அமைதி
திரும்பப் பாடுபடும்படி காந்தியடிகள் சொன்னார். அப்போதே கலவர இடங்களுக்கு விரைந்து
சென்ற இராஜேந்திர பிரசாத் இரு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தையின் வழியாக அமைதியை
நிலைநாட்டினார்.
ஒத்துழையாமை இயக்கத்தில்
ஈடுபட்டதும் அவர் வழக்கறிஞர் தொழிலிலிருந்து விலகிவிட்ட போதிலும் முடிவுக்கு வராத ஒரு
ஜமீன் வழக்குக்கு மட்டும் அவர் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார். இந்திய நீதிமன்றத்தில்
முடிவுக்கு வராத அவ்வழக்கு 1928இல் இங்கிலாந்தில் உள்ள பிரிவியு கவுன்சில் என்கிற உயர்நீதிமன்றத்தின்
முன் விசாரணைக்குப் போயிற்று. அவ்வழக்கு தொடர்பாக
வாதாடுவதற்காக இராஜேந்திர பிரசாத் இங்கிலாந்துக்குச்
சென்றார். சில நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற அவ்வழக்கில் அவருக்கு வெற்றி கிடைத்தது.
அதற்குப் பிறகு, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற
போர் எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். காந்தியடிகளை பெரிதும் மதித்தவரும்
பரமஹம்சர் இராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான ரொமன் ரொலான் (Romain Rolland) அவர்களைச் சந்தித்து உரையாற்றினார். அடுத்து, ஆஸ்திரியாவின்
வியன்னா நகரத்தில் நடைபெற்ற உலக அமைதி விரும்புவோர் மாநாட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
சென்ற இடங்களிலெல்லாம் கதராடைகளை மட்டுமே அணிந்து சென்றார். அதையொட்டி கேள்வி எழும்
இடங்களிலெல்லாம் கதரின் பெருமை, கதரின் நோக்கம், காந்தியடிகளின் கருத்து அனைத்தையும்
சுருக்கமாக எடுத்துரைத்து விளங்கவைத்தார். இந்தியாவுக்குத் திரும்பியதும் கதரின் பெருமையை
எடுத்துரைக்கும் விதமாக கதரின் மகத்துவம், காந்தி தத்துவம் என இரு நூல்களை எழுதி வெளியிட்டார்.
15.02.1930 அன்று கூடிய
காங்கிரஸ் செயற்குழு தேசமெங்கும் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்குவதற்கான தீர்மானத்தை
நிறைவேற்றியது. சட்டமறுப்பு இயக்கத்தை, உப்பு உற்பத்திச் சட்டங்களை மீறுவதன் வழியாக
தொடங்கிவைக்கலாம் என்று காந்தியடிகள் எடுத்துரைத்தார். பீகார் முற்றிலும் நிலம் சூழ்ந்த
பிரதேசம் என்பதால் உப்புச்சட்டத்தை மீறும் போராட்டத்தை நிகழ்த்த வழியில்லை என்று கருதினார்
இராஜேந்திர பிரசாத். அதனால் உப்புச்சட்டத்தை மீறும் போராட்டத்துக்கு மாறாக செளகிதார்
வரிகொடா இயக்கத்தை நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கினார். ஆனால் காந்தியடிகள் அதை ஏற்கவில்லை.
போராட்டத்தை நிகழ்த்த வழியில்லாத இடங்களில் உப்புச்சட்டத்தை மீறும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான
தேவையைக் குறித்து விளக்கக்கூட்டங்களை நிகழ்த்தி மக்களிடையே ஒரு புரிதலை உருவாக்குவதன்
வழியாக தேசத்தின் கவனத்தை ஒரு புள்ளியில் குவியுமாறு செய்யலாம் என்பது அவருடைய எண்ணமாக
இருந்தது. இராஜேந்திர பிரசாத் காந்தியடிகள் சொல்லுக்குக் கட்டுப்பட்டார்.
சபர்மதி ஆசிரமத்திலிருந்து
12.03.1930 அன்று காலையில் 79 சத்தியாகிரகிகளுடன் காந்தியடிகள் தண்டி கடற்கரையை நோக்கி
நடக்கத் தொடங்கினார். 23 நாட்கள் தொடர்ந்த அந்த யாத்திரையின்போது வழியிலிருந்த கிராமங்கள்
தங்கி, உரையாற்றியபடி சென்று 05.04.1930 அன்று கடற்கரையை அடைந்தார். அடுத்த நாள் காலையில்
கடலோரத்தில் ஒரு பிடி உப்பை கையிலெடுத்து உயர்த்தி “இது ஆங்கிலேய அரசின் அடித்தளத்தை
அசைத்துப் பார்க்கும் நடவடிக்கை” என்று அறிவித்தார். அங்கிருந்தபடியே தாராசனா போராட்டத்திட்டத்தை வகுத்தார்.
நாளுக்குநாள் அவருக்குப் பெருகும் ஆதரவைக் கண்டு காவல் துறையினர் 04.05.1930 அன்று
காந்தியடிகளைக் கைது செய்தனர்.
காந்தியடிகளின் ஆலோசனையின்படி
பீகார் மாநிலமெங்கும் பயணம் செய்து கூட்டங்கள் நிகழ்த்தி உப்புச்சட்டத்தை மீறும் போராட்டம்
ஏன் மேற்கொள்ளப்படுகிறது என மக்களிடம் விளக்கினார் இராஜேந்திர பிரசாத். அவர் உரைகள்
மக்களிடையில் ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்கின. அவர் உரைகளுக்குப் பெருகும் ஆதரவைக்
கண்டு அஞ்சிய காவல்துறையினர் 05.07.1930 அன்று கார்க்கா என்னும் இடத்தில் கூட்டத்தில்
உரையாற்றிக்கொண்டிருந்தபோது இராஜேந்திர பிரசாத்தைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விடுதலையடைந்து பம்பாய்
சென்று வல்லபாய் பட்டேலைச் சந்தித்தார். அங்கிருந்து அலகாபாத்துக்குச் சென்று உடல்நலம்
குன்றியிருந்த மோதிலால் நேருவைச் சந்தித்தார். இதற்கிடையில் காந்தி இர்வின் உடன்படிக்கை
கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையைப்பற்றி மக்களிடம் விளக்கிப் பேசுவதற்காக மீண்டுமொரு
சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் இராஜேந்திர பிரசாத்.
உடன்படிக்கையின்படி இரண்டாவது
வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குச் சென்றார் காந்தியடிகள். ஆனால்
அவர் எதிர்பார்த்த எவ்விதமான தீர்வுக்கும் அந்த மாநாடு உதவியாக அமையவில்லை. தோல்வியுணர்ச்சியுடன்
இந்தியாவுக்குத் திரும்பிய காந்தியடிகள்
01.01.1932 அன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நாடெங்கும் சட்டமறுப்பு
இயக்கத்தை மீண்டும் தொடங்கி நடத்துவோம் என்று அறிவித்தார். அதையொட்டி அவரும் பிற தலைவர்களும்
04.01.1932 அன்று கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
11.01.1932 அன்று பாட்னாவில் சதாகத் ஆசிரமத்தில் காங்கிரஸ் பிரதேச கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த
நிலையில் இராஜேந்திர பிரசாத் கைது செய்யப்பட்டு அசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு ஆறுமாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்து, முஸ்லிம், பெளத்த நூல்களைப் படிப்பதில் தன்
சிறைக்காலத்தைக் கழித்தார் இராஜேந்திர பிரசாத்.
இந்திய தேசிய காங்கிரஸின்
பொறுப்பு தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத், 04.01.1933 ‘காந்தியடிகள் சிறைபட்ட நாள்’
ஆண்டு நினைவுக்கூட்டத்தில் உரையாற்றினார். அவருடைய உரை அரசுக்கு எதிராக இருப்பதாகக்
குற்றம் சாட்டிய காவல்துறை அவரை அடுத்தநாள் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில்
கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட அவரை மருத்துவக்குழுவின் ஆலோசனையை ஏற்று சில
நாட்களிலேயே விடுதலைசெய்துவிட்டது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற காந்தியடிகள் அரிஜன
சேவா சங்கம் என்னும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி, தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தியும்
தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக நிதி திரட்டியும் நாடு தழுவிய ஒரு பயணத்தைத் தொடங்கினார்.
எதிர்பாராத விதமாக, பீகாரில்
15.01.1934 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்பும் பொருளிழப்பும் மிகுதியாக ஏற்பட்டன.
அப்போது இராஜேந்திர பிரசாத் சிறையிலிருந்தார். உடனடியாக தன் நண்பரான நாராயண சிம்ஹா
வழியாக ஒரு நிவாரணக்குழுவை ஏற்படுத்தி மக்களுக்குத் தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கச்
செய்தார். இரு தினங்களுக்குப் பிறகு அவருடைய மோசமான உடல்நிலையின் காரணமாக அவர் விடுதலையடைந்தார்.
ஆயினும் ஓய்வெடுப்பதைப்பற்றிய பேச்சுக்கே இடமில்லாத வகையில் நிவாரணக்குழுவுடன் சேர்ந்து
நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் செய்து குறுகிய கால
இடைவெளிக்கும் ஏறத்தாழ முப்பத்தெட்டு லட்ச ரூபாய் திரட்டி உதவினார். அதே ஆண்டில் பம்பாயில்
நடைபெற்ற கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1936ஆம் ஆண்டில் நடைபெற்ற
பொதுத்தேர்தலில் பங்கேற்ற காங்கிரஸ் பல மாகாணங்களில் வெற்றி பெற்றது. வேட்பாளர்களைத்
தேர்ந்தெடுக்கும் குழுவில் பட்டேலின் தலைமையின் கீழ் இராஜேந்திர பிரசாத் பணியாற்றினார்.
இதனால் ஓய்வில்லாமல் எல்லா மாநிலங்களுக்கும் அவர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
தொடர்ச்சியான இப்பயணங்கள் அவருடைய உடல்நிலையை சீர்குலைத்தது. 1939ஆம் ஆண்டில் மூண்ட
இரண்டாம் உலகப்போரில் இந்திய மக்களின் ஒப்புதலைப் பெறாமல் பிரிட்டன் இந்தியாவைப் பங்கேற்க
வைக்க முடிவு செய்தது. 09.10.1939 அன்று வார்தாவில் இராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடிய
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நீண்ட விவாதத்துக்குப் பிறகு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
அதன் விளைவாக காங்கிரஸ் பதவியை உதறிவிட்டு வெளியேறியது.
1940 ஜூன் வாக்கில் போர்நிலைமை
மோசமானது. அதையொட்டி 03.07.1940 அன்று புது தில்லியில் காந்தியடிகளின் தலைமையில் அவசரமாகக்
கூடிய காங்கிரஸ் கமிட்டி பிரிட்டனின் போர்முயற்சிக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்றும்
அகிம்சை வழியில் சுதந்திரத்துக்கான போராட்டத்தைத் தொடரவேண்டும் என்றும் அறிவித்தார்.
எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக மேற்கொள்ளப்படவிருந்த தனிநபர் சத்தியாகிரகத்துக்கு
அவரே சத்தியாகிரகிகளைத் தேர்ந்தெடுத்தார். வினோபா, நேரு போன்ற பல தலைவர்கள் தனிநபர்
சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றனர். நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு
வந்த இராஜேந்திர பிரசாத்தால் அப்போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.
எதிர்பாராத விதமாக அந்நேரத்தில்
பீகாரில் ஆங்காங்கே இந்து முஸ்லிம் கலவரங்கள் நிகழ்ந்தன. உடல்நிலை சீர்குலைந்திருந்த
போதிலும் அதைப் பொருட்படுத்தாத இராஜேந்திர பிரசாத் அமைதிக்குழுக்களை உருவாக்கி மாநிலமெங்கும்
பிரயாணம் செய்து அமைதிப்பிரச்சாரம் செய்தார். நாட்டில் மெல்ல மெல்ல அமைதி திரும்பியது.
அகில இந்திய காங்கிரஸ்
குழு 05.08.1942 அன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. வெள்ளையனே வெளியேறு என்னும்
முழக்கமே அத்தீர்மானத்தின் சாரமான செய்தி. சுதந்திரம் என்பதுதான் நம் மந்திரம். அதை
ஒவ்வொரு கணமும் உச்சரித்தபடியே இருப்போம் என அறிவித்தார் காந்தியடிகள். ஆகஸ்டு மாதம்
ஒன்பதாம் தேதி அதிகாலையில் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். அவரையடுத்து நேரு, பட்டேல்,
இராஜேந்திர பிரசாத் என ஒவ்வொருவரும் கைது செய்யப்படனர். அரசாங்கம் அடக்குமுறையை அவிழ்த்துவிட்டது.
பாட்னாவிலிருந்து வரும் செய்தித்தாட்கள் நிறுத்தப்பட்டன. 1944,45 ஆண்டுகளில் பீகாரில்
மலேரியா பரவி பலர் உயிரிழந்தனர். அதே காலகட்டத்தில் வங்காளத்திலும் பஞ்சத்தின் விளைவாக
பலர் உயிரிழந்தனர்.
1945இல் மத்திய அசெம்ப்ளிக்கு
நடைபெறவிருந்த தேர்தலில் பங்கேற்க காங்கிரஸ் செயற்குழு முடிவெடுத்தது. இந்தியாவின்
மன உறுதியை புற உலகத்துக்குப் புலப்படுத்தவும் சுதந்திரத்துக்கான ஒரு வியூகமாகவும்
தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அனைவரும்
கருதினர். அவர்கள் நினைத்ததுபோல பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
02.09.1946 அன்று இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. நேரு, இராஜேந்திர பிரசாத், இராஜாஜி
உள்ளிட்ட பன்னிரண்டு பேர் அமைசர்களாக பதவியேற்றனர். இராஜேந்திர பிரசாத் வேளாண்மை மற்றும்
உணவு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
கல்கத்தாவில்
முஸ்லிம் லீக்கின் நேரடி நடவடிக்கையின் விளைவாக இந்து முஸ்லிம் கலவரம் வெடித்தது. தாக்கா,
நவகாளி, திப்ரா போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக
பாட்னாவிலும் கலவரம் ஏற்பட்டது. இராஜேந்திர பிரசாத் உடனடியாக பீகாருக்கு விரைந்து சென்று
அமைதி திரும்பப் பாடுபட்டார். இப்படிப்பட்ட
இக்கட்டான சூழலில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை 09.12.1946 அன்று கூடியது. அச்சபையின்
தலைவராக இராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்றுக்கொண்டார். 1947 ஜூலையில் இந்தியச் சுதந்திரச்சட்டம்
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக 15.08.1947 அன்று இந்தியா
சுதந்திரமடைந்தது. புதிய நாடாக பாகிஸ்தான் உருவானது.
26.01.1950
அன்று இந்தியக்குடியரசின் தலைவராக இராஜேந்திர பிரசாத் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்று அவர் ஆற்றிய உரையில் இந்தியாவின் அணுகுமுறையைப்பற்றியும் மதநல்லிணக்கப் பார்வையைப்
பற்றியும் தெளிவான ஒரு சித்திரத்தை வகுத்துரைத்தார். ”இந்தியா ஒருபோதும் தன் எந்தக்
கருத்தையும் நம்பிக்கையையும் பிறருக்குப் பரிந்துரைப்பதில்லை. கட்டாயபப்டுத்துவதும்
இல்லை. தெய்வநம்பிக்கை உள்ளவர், தெய்வ நம்பிக்கையே இல்லாதவர், தெய்வத்தைப்பற்றி எந்தக் கருத்தும் இல்லாதவர் ஆகிய
எல்லாப் பிரிவினருக்கும் இந்த நாட்டில் இடமுண்டு என்பதுதான் இந்தியாவின் அணுகுமுறை”
என்றுரைத்த அவருடைய உரை மனசாட்சியுள்ள ஓர் இந்தியனின் வாக்குமூலமாக அமைந்திருந்தது.
இராஜேந்திர
பிரசாத்தின் உரைகள் ஒவ்வொன்றும் கேட்பவர்களுக்கு தெளிவையும் மன எழுச்சியையும் வழங்கும்
ஆற்றல் உள்ளவை. 1956இல் காஞ்சிபுரத்துக்கு அருகில் நடைபெற்ற சர்வோதய மாநாட்டில் கலந்துகொண்டு
அவர் ஆற்றிய உரையால் கவரப்பட்டவர்கள் பலர். அரசாங்கம் நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாத
ஒரு செயலை ஒருசில ஆண்டுகளில் நிறைவேற்றியிருக்கும் பூமிதான இயக்கத்தை அம்மாநாடில் அவர்
மனம் திறந்து பாராட்டினார். நாட்டில் பிற இயக்கங்கள் எல்லாமே செல்வத்தைப் பெருக்கவும்
நாடுகளைக் கவரவும் முனைகின்ற சூழலில் பூதான இயக்கம் மட்டுமே கொடுக்கத் தெரிந்த இயக்கமாக
விளங்கும் பண்பை நயமுடன் எடுத்துரைத்தார்.
மிக உயர்ந்த
பதவியில் இருந்தாலும் எளிமையான முரட்டுக்கதர் அணிபவராகவே இறுதிவரைக்கும் இராஜேந்திர
பிரசாத் வாழ்ந்தார். அரசு தனக்கு வழங்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் மிக அதிகமான தொகை
என்று தெரிவித்துவிட்டு, அதை அவராகவே இரண்டாயிரத்து ஐநூறாகக் குறைத்துக்கொண்டார்.
12.05.1962 அன்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் தில்லியிலிருந்து வெளியேறி பீகாரில்
தன்னுடைய சதாகத் ஆசிரமத்துக்குச் சென்றுவிட்டார்.
பீகார்
மக்களின் நெஞ்சிலும் நினைவிலும் நிறைந்தவர் இராஜேந்திர பிரசாத். காந்தியடிகளின் அன்புக்குப்
பாத்திரமான அரிய தொண்டர். மனம், மொழி, மெய் ஆகிய மூன்றிலும் காந்தியடிகளைப்போன்றே விளங்கும்
சாந்த வடிவினர். காந்தியடிகள் காட்டிய அகிம்சையாகிய அறவழியையே தன் வழியெனக் கொண்ட உயர்ந்த
பண்பாளர். நாட்டுப்பற்றுக்கும் நேர்மைக்கும் தன்னலமற்ற தொண்டுள்ளத்துக்கும் எடுத்துக்காட்டாக
வாழ்ந்து காட்டிய மாமனிதர். தன் உயர்ந்த எண்ணங்களாலும் எளிமையான தோற்றத்தினாலும் எல்லோருடைய
நெஞ்சிலும் இடம்பிடித்த மாபெரும் தலைவர்.
பீகார் மாநிலத்தில் சிவான் மாவட்டத்தில்
ஜிராடே என்னும் ஊரில் 03.12.1884 அன்று இராஜேந்திர பிரசாத் பிறந்தார். அவருடைய தந்தையார்
சமஸ்கிருதம், பாரசிகம் ஆகிய மொழிகளில் பண்டிதரான மகாதேவ சகாய் ஸ்ரீவாஸ்தவ. தாயார் கமலேஸ்வரி
தேவி. பாடலிபுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்த இராஜேந்திர பிரசாத்,
காந்தியடிகளின் அழைப்புக்கிணங்கி அத்தொழிலைத் துறந்துவிட்டு சுதந்திரப்போராட்டத்தில்
ஈடுபட்டவர். அதற்காக பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர். பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதும்
வெள்ளம் பெருகி நாசம் விளைவித்தபோதும் மக்களுக்காக இராஜேந்திர பிரசாத் ஆற்றிய பணி மகத்தானது. அவருக்கு ஏழு மொழிகளில் எழுதவும் படிக்கவும் தெரியும்.
விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவராக பத்தாண்டு காலம் பணியாற்றினார்.
அவருடைய தன்வரலாறு ஆத்மகதா என்னும் தலைப்பில்
வெளிவந்துள்ளது. அவருடைய உரைகள் தொகுக்கப்பட்டு
நூல்வடிவில் வெளிவந்துள்ளன. மகாத்மா
காந்தியும் பீகாரும் : சில நினைவுகள், பிரிக்கப்பட்ட இந்தியா, சம்பாரண் சத்தியாகிரகம்
ஆகியவை இராஜேந்திர பிரசாத் எழுதிய பிற முக்கியமான நூல்கள். பீகார் காந்தி என பட்டப்பெயர்
சூட்டி மக்களால் அழைக்கப்பட்ட இராஜேந்திர பிரசாத் 28.02.1963 அன்று இந்த மண்ணுலகை விட்டு
மறைந்தார். எம்.எஸ்.சுப்பிரமணி ஐயர் என்பவர் எழுதிய ராஜேந்திர பிரசாத் வாழ்க்கை வரலாறு ஆசிரியர் நூற்பதிப்புக்கழகத்தால்
1958இல் வெளிவந்தது. முதல் குடியரசுத்தலைவர்
என்னும் தலைப்பில் அ.க.நவநீதகிருஷ்ணன் எழுதிய நூலை சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
1966இல் வெளியிட்டது.
(சர்வோதயம் மலர்கிறது – மார்ச் 2023)