ராஜாத்தி அம்மாவைப்பற்றி நான் இரண்டு காட்சித் தொகுப்புகளை உருவாக்கியிருந்தேன். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ராஜாத்தி அம்மாவின் பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்திருந்த தருணத்தில்தான் “இரண்டு மரங்கள்” என்னும் தலைப்பில் முதல்தொகுப்பு தயாரிக்கப்பட்டது. கடந்த வாரம் பத்மஸ்ரீ விருதை அவர் அரசாங்கத்திடமேயே திருப்பித் தந்ததையொட்டி “ஒரு லட்சம் மரங்கள்” என்னும் தலைப்பில் இரண்டாவது தொகுப்பு தயாரிக்கப்பட்டது. காட்சிப்படுத்த எந்த விதமான வாய்ப்பும் இல்லாமலேயே இரண்டும் பெட்டிக்குள் முடங்கிவிட்டன. ஆசிய விளையாடடுப் போட்டியில் ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கம் வென்ற மதுராந்தகம் தேவிகாவைப் பற்றிய காட்சித்தொகுப்பும் இறால் பண்ணைத் தடுப்புக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற ஜகன்னாதனைப் பற்றி காட்சித் தொகுப்பும் ஊடக உலகில் எனக்கென்று ஓர் நட்சத்திர அந்தஸ்தைத் தேடித் தந்தவை. அவ்வரிசையில் இந்த இரண்டு தொகுப்புகளும் இணைத்து கவனிக்கத்தக்கவை. துரதிருஷ்டவசமாக காலம் அந்த வாய்ப்பை தட்டிக் கவிழ்த்துவிட்டது.
முதல் தொகுப்பை உருவாக்கியபோது எங்கள் செய்தி நிறுவனத்துக்கு வேறொரு மேலாளர் இருந்தார். அவரும் விளம்பரதாரர்களும் சேர்ந்து முன்வைத்த ஏதேதோ காரணங்களால் அத்தொகுப்பு ஏற்றுக் கொள்ளப்படவே இல்லை. இரண்டாம் தொகுப்புக்கான திட்டத்தை முன்வைத்ததும் புதிய மேலாளர் ஒப்புதல் வழங்கியிருந்தார். உத்வேகத்துக்கு பேர்போனவர் என்று ஊடக உலகத்தில் அவருக்கு ஒரு பட்டம் உண்டு. கடந்த பத்து நாட்களாக அத்தொகுப்புக்காக நானும் என் குழுவினரும் கடுமையான உழைப்பைச் செலுத்தியிருந்தோம். தொகுப்பை அவர் பார்வைக்கு அனுப்பி மூன்று நாட்களாகியும் எந்தப் பதிலையும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தார். இன்று காலைதான் உள்ளே அழைத்து, காட்சிப்படுதத இயலாத நிலையில் நிர்வாகம் இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். அரசு நெருக்கடிகள், கட்சிக்காரர்களின் குறுக்கீடுகள் என நெடுநேரம் விரிவாகப் பேசினார். எங்கள் உழைப்பு என்பது பத்தும் பத்தும் இருபது நாட்கள். அவ்வளவுதான். அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. ராஜாத்தி அம்மாவின் உழைப்பு என்பது ஐம்பது ஆண்டு கால நீண்ட உழைப்பு. அதற்குக்கூடவா ஒரு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்ற ஆதங்கத்தோடு வெளியே வந்தேன்.
பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு ராஜாத்தி அம்மாவுக்கு வழங்கியிருந்த நேரத்தில்தான் முதல்முறையாக அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவருடைய பொதுச்சேவைக்கு அது மிகப்பெரிய அங்கீகாரம். ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலம் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் தெனனங்கன்றுகளையும் மாங்கன்றுகளையும் வளர்த்து பசுமை அடர்ந்ததாக மாற்றிய தன்னலமற்ற சேவையை இந்தியாவே அன்று அறிந்து கொண்டது. பிரதமர் வாஜ்பாய் வழங்கிய விருதையும் பாராட்டுப் பத்திரத்தையும் பெற்றுக்கொண்டு அப்போதுதான் ஊர் திரும்பியிருந்தார் ராஜாத்தி அம்மா. அவர் வசிக்கும் தேங்காதிட்டில் இறங்கியதுமே அந்த ஊரின் சித்திரத்தை அழுத்தமான வண்ணங்களுடன் என் மனம் உள்வாங்கிக் கொண்டது.
எங்கெங்கும் சீரான இடைவெளியில் நின்றிருக்கும் ஏராளமான மரங்களைக் கண்டு பிரமித்துவிட்டேன். அப்படி ஓர் அழகை அதுவரை நான் பார்த்ததே இல்லை. மாமரங்களில் காய்களும் தென்னைமரங்களில் இளநீரும் கொத்துக்கொத்தாக தொங்கிக்கொண்டிருந்தன. இடையிடையே மிக நீண்ட பசுமையான புல்வெளி. அதில் பசுக்கள் மேய்ந்தன. காற்றின் குளுமையில் மனம் குளிர்ந்தது. பெரும்பாலான தோப்புகளில் குத்தகைக்காரர்கள் அளவுவாரியாக காய்களை தனித்தனிக் கூடைகளில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ஒரு கற்பனையை ராஜாத்தி அம்மாவின் மனம் கருக்கொண்டு உண்மையென நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. மிகப்பெரிய சாதனை என்று மனம் விம்மியது. இந்தப் பக்கம் வில்லி-யனூர். திருபுவனை, விழுப்புரம் வரைக்கும் அந்தப் பக்கம் பாகூர், கட-லூர், சிதம்பரம் வரைக்கும் எல்லா இடங்களிலும் விற்கப்படுகிற இளநீர்களும் மாம்பழங்களும் தேங்காதிட்டிலிருந்து அனுப்பப்படும் சரக்குகள் என்று பெருமையாகச் சொல்லப்பட்டது. அந்த ஊராரின் வாழ்க்கைக்கு அவையே ஆதாரங்கள் என்பதை ஊருக்குள் நுழைந்த ஒரு மணிநேரத்திலேயே புரிந்து கொண்டேன்.
காட்சித் தொகுப்பில் எனக்கென்று எப்போதுமே ஒரு வழிமுறை உண்டு. முக்கியஸ்தருடைய நேருரைக்கு நிகராக குறைந்தபட்சமாக அக்கம்பக்கங்களில் வசிக்கிற ஐம்பது பேர்களையாவது கண்டு பேசி அவர்களுடைய உரைகளையும் பதிவு செய்து கொள்வேன். இறுதித் தொகுப்பில் பொருத்தமான ஊடுபாவாக அக்காட்சிகளை வெட்டி இணைத்துவிடுவேன். இவற்றின் மூலம் சிறுகச்சிறுக உருவாகி வரும் சித்திரத்தின் வசீகரம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுவிடும்.
முதலில் கண்ணுக்குத் தெரிந்த ஒரு மாந்தோப்புக்குத்தான் அன்று சென்றேன். தோளில் பெரிய கேமிராவோடும் ஒலிப்பதிவுச் சாதனங்களோடும் வந்திருந்த எங்களைக் கண்டதும் ஆட்கள் தாமாகவே சேர்ந்துவிட்டார்கள். அவர்களுக்கு எங்கள் நோக்கம் புரிந்தது. அதற்கும் முதல்நாள்தான் ஊருக்குள் ராஜாத்தி அம்மாவுக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டிருந்தது. நாங்கள் கேட்காமலேயே ஒவ்வொருவராக சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
“இந்த இடம் தேங்காதிட்டா இன்னும் நிக்கறதுக்கே ராஜாத்தி அம்மாதான் காரணம் சார். பிரெஞ்சிக்காரன் காலத்துல கடலோரம் முழுக்க தென்னமரங்க இருந்திச்சாம். தாத்தா சொல்வாரு. சுதந்திரம் வந்ததுமே எல்லாமே மொட்டையாய்டுச்சி. புள்ளசாவடிக்கு அந்தப் பக்கமும் வீராம்பட்டணத்துக்கு இந்தப் பக்கமும் எப்படி இருக்குதுன்னு நேரா போயி பாருங்க தெரியும். எல்லாமே மொட்ட பூமியாய்டுச்சி. அம்மா இல்லன்னா இதுவும் அப்படித்தான் மொட்டக்காடா போயிருக்கும்.”
“அம்மாவுக்கு மரம் நடறதுங்கறது வேல கெடையாது சார். அதுதான் அவுங்க மூச்சி. ஒவ்வொரு வாரமும் மாட்டு வண்டியில நாப்பது அம்பது கன்னுங்கள ஏத்திகினு போவாங்க. கூடவே ரெண்டாளுங்க போவாங்க. அம்மா கைகாட்டற இடத்துல ஆளுங்க குழிவெட்டுவாங்க. மாங்கன்னயோ தென்னங்கன்னயோ கொண்டும் போனத நடுவாங்க அம்மா. அதோட நிக்காது பாத்துக்கிடுங்க. தெனமும் வந்து தண்ணி ஊத்திட்டு போவாங்க. இந்தக் காலத்துல யாரு சார் இப்படி செய்வாங்க? நம்ம ஊட்டுக்கே அவசரம் ஆத்தரத்துக்கு ரெண்டு கொடம் தண்ணி வெளியேயிருந்து தூக்கியாரணும்னா சலிச்சிக்கறம். ஆனா ஒரு நாளும் அம்மா சலிச்சிகிட்டதே இல்ல. புள்ளய வளக்கறமாரி பாசமா மரங்கள வளத்தாங்க.”
“பேருக்கேத்த மாரி ராஜாத்தி சார் அவுங்க. அவுங்க பொறந்த எடமும் சரி, வாழ்க்கப்பட்ட எடமும் சரி, நல்ல வசதிக்கராங்க. எந்தக் கொறச்சலும் இல்ல. அந்தக் காலத்துல தேவனாம்பட்டணத்துக்காரம்மான்னுதான் எல்லாரும் சொல்வாங்க. ஊட்டுக்காரு புச்சேரியில் போஸ்ட் ஆபீஸ்ல ஏதோ வேலயா இருந்தாரு. பாவம், ஆக்சிடென்ட்ல செத்துட்டாரு. அதுலேருந்து இந்த அம்மாவுக்கு இந்தமாதிரி ஒரு ஈடுபாடு வந்துடிச்சி. என் சின்ன வயசுல பாத்தது நல்லா ஞாபகம் இருக்குது. இந்த ஊரு ஏரி அழுக்கு சேர்ந்து ஒரு சாக்கடமாரி கெடந்திச்சி. ஆகாயத்தாமரயும் நாணலும் பூத்து பொதராட்டம் வச்சிருந்தாங்க மக்க. ரெண்டு மூணு ஆள தொணைக்கி வச்சிகிட்டு அம்மாவே கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தயும் அள்ளி வெளிய போட்டாங்க. சக்கயா காஞசதுக்கப்பறமா போலீஸ் பாதுகாப்போட நெருப்பு வச்சாங்க. ஒரு ராத்திரிபூரா அந்த நெருப்பு எரிஞ்சிதுன்னா எவ்வளவு குப்பய அள்ளி போட்டிருப்பாங்கன்னு நீங்களே நெனச்சிப் பாருங்க. அந்த ஏரிக்கு சுண்ணாம்பாறு வழியாதான் தண்ணி வரணும். அந்த ஆழங்காலே துத்தடஞ்சி போச்சி. அதயும் அம்மாதான் சரிப்படுத்தனாங்க. ஆத்து தண்ணி ஏரியில வந்து உழ ஆரம்பிச்சதுமே ஊரு லட்சணமே மாறிப் போயிடுச்சி. ஏரிக்கரைய சுத்தியும் தென்னமரமும் மாமரமும் நிக்குது பாருங்க, அதெல்லாம் அவுங்க அந்தக் காலத்துல நட்டதுதான் பாத்துக்குங்க.”
“காந்தி காலத்து மனுசி சார் அவுங்க. அவுங்க ஒடம்புல ஓடறதே வேற விதமான ரத்தம் சார். சாதின்னா என்னன்னு தெரியாது. மதம்ன்னா என்னன்னு தெரியாது. அரசியல்னா என்னன்னு தெரியாது. அவுங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் சேவ ஒன்னுதான் சார். அப்படி ஒரு ஸ்பெஷல் ரத்தம். தெய்வம்யா அவுங்க தெய்வம். வாஜ்பாயி இப்ப குடுத்தத, இந்திரா காந்தி காலத்துலேயே குடுத்திருக்கணும். நம்ம அரசாங்கத்துக்கு எத செஞ்சாலும் தாமதமா செஞ்சியே பழக்கமாயிடுச்சி.”
“கடலூர் அஞ்சலையம்மா தெரியுமா சார் ஒங்களுக்கு? சுதந்திரத்துக்காக போராட்டம் நடத்தன அம்மா. மேடையேறி பேசனாங்கன்னா, இடிஇடிச்சமாரி இருக்கும். அப்படி ஒரு கொரல். அப்படி ஒரு ஆவேசம். அவுங்க தயாரிப்புதான் நம்ம ராஜாத்தி அம்மா. ரெண்டுதரம் ஜெயிலுக்கு போயிருக்காங்க. கேப்பர்மலயில ஒருதரம் வச்சிருந்தாங்க. இவுங்க பேச்சு கேக்கறதுக்காகவே எங்க தாத்தா பயந்துபயந்து அந்தக் காலத்துல கடலூருக்கு போவாராம். கதகதயா சொல்லியிருக்காரு.”
“இதோ இந்த தோப்பு ஒன்னு போதும் சார். ராஜாத்தி அம்மா யார்னு இந்த ஒலகம் புரிஞ்சிக்கறதுக்கு. இது ஒரு சாட்சி. இதுல இருக்கற ஒவ்வொரு கன்னும் ராஜாத்தி அம்மா கையால நட்டதுங்க. ஒரு காலத்துல தரிசா கெடந்த எடம் இது. எங்க தாத்தாகிட்ட பேசி, நம்பிக்க ஊட்டி, இப்படி ஒரு தோப்பா மாத்திக் காட்டனாங்க. ஒரு வருஷத்துல இதுல நான் ஒரு லட்சம் பாக்கறன்னா அதுக்கு மூலகாரணம் அம்மாதான். அம்மா கைவச்ச எடம் கட்டாந்தரயா இருந்தாகூட தளதளன்னு செடி முளைச்சிவரமாரி மாத்திக் காட்டுவாங்க சார். அவுங்க கைராசி அப்படி. தொட்டதயெல்லாம் பொன்னாக்கற கை சார் இது.”
ஒன்று விடாமல் எங்கள் குழு அன்று பதிவு செய்தபடியே இருந்தது. பேசியவர்கள் மற்றவர்களை தாமாகவே சென்று அழைத்துவந்து பேசவைத்தார்கள். வயதான சில பெரியவர்களை நாங்களே நேரில் சென்று பார்த்துப் பேசினோம். ராஜாத்தி அம்மாள் பெயரைச் சொன்னதுமே பக்தி உணர்வுக்கு நிகரான பரவசத்தை ஒவ்வொருவர் முகத்திலும் என்னால் பார்க்கமுடிந்தது. தேநீர்க்கடை, பலசரக்குக்கடை, காய்கறிச் சந்தை, பஞ்சாயத்துப் பூங்கா, தொலைக்காட்சி மண்டபம், தேவாலயம், அம்மன் கோயில் என எல்லா இடங்களிலும் புகுந்துபுகுந்து வந்தோம்.
ராஜாத்தி அம்மாவை அன்று மாலைதான் நேரில் சந்தித்தோம். எண்பதை நெருங்கும் வயது. எளிமையான -நூல் வேலை கட்டியிருந்தார். கழுத்தில் சின்னதாக ஒரு சங்கிலி. நரைத்திருந்தாலும் தலைமுடி அடர்ந்திருந்தது. சுருட்டிக் கொண்டையாகக் கட்டியிருந்தார். நெற்றியில் குங்குமமும் திருநீறும் அணிந்திருந்தார். முகத்திலும் கழுத்திலும் சுருக்கங்கள் காணப்பட்டன. முன்வரிசைப் பற்கள் இன்னும் அப்படியே இருந்தன. கனிவு ஒளிரும் சிறிய கண்கள். முதல் பார்வையிலேயே எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. உற்சாகமான குழந்தையைப் போல பேசத் தொடங்கினார். தனக்குக் கிடைத்திருக்கும் கௌவரத்தைப் பற்றியோ விருதைப் பற்றியோ அவர் சிறிது கூட முக்கியப்படுத்தவே இல்லை.
அவருக்கு அருகில் அக்கம்பக்கத்தில் வசிக்கக்கூடிய பிள்ளைகள் சூழ்ந்திருந்தார்கள். “போட்டாபுடிக்க போறிங்களா அண்ணா?” என்று ஒரு சிறுமி என்னைப் பார்த்துக் கேட்டாள். “சும்மா இருடி முந்திரிக்கொட்ட, அவுங்க சினிமா புடிக்கறாங்க” என்றாள் இன்னொரு சிறுமி. அவர்கள் அனைவருக்கும் அம்மாவே பாடல் பயிற்சியும் மொழிப் பயிற்சியும் அளிப்பதாக அருகில் இருந்தவர் கிசுகிசுத்தார்.
அது சிற்றுண்டி நேரம். பிள்ளைகள் வரிசையாக உட்கார்ந்தனர். எங்களையும் உட்காரும்படி கேட்டுக்கொண்டார் ராஜாத்தி அம்மா. அதற்குள் எல்லாருக்கும் இலை போடப்பட்டுவிட்டது. சுடச்சுட உப்புமாவும் அவித்த வேர்க்கடலையும் பரிமாறப்பட்டன. குழந்தைகள் ஆலவாக சாப்பிட்டார்கள். அதற்குள் ருசி பார்த்துவிட்ட உதவியாளர் “சார், சூப்பர் உப்புமா, உடுப்பி ஓட்டல் சரக்குமாரி இருக்குது. வெளுத்துக் கட்டுங்க” என்றார். நான் மையமாக தலையசைத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தேன்.
பழச்சாறு அருந்திய பிறகு அம்மா எங்களை தோட்டத்துப் பக்கமாக அழைத்துச் சென்றார். மண்ணும் உரமும் அடைக்கப்பட்ட சின்னச்சின்ன மண்சட்டிகளும் பெரிய பிளாஸ்டிக் பைகளிலும் வளரும் -நூற்றுக்கணக்கான இளங்கன்றுகள் ஒரு மூலையில் அசைந்தன. அவற்றுக்குப் பின்பக்கமாக பெரிய மாமரமொன்றும் தென்னை மரமொன்றும் நின்றிருந்தன. அவற்றைப் பார்த்ததுமே கேமிராவுக்குப் பொருத்தமான கோணம் என்று தோன்றியது.
“இந்த ரெண்டும்தான் எல்லாத்துக்கும் ஆதாரம்.”
அம்மா அம்மரங்களையே பார்த்துக்கொண்டு சொன்னார். கேமிராவை அப்படியே ஓடவிட்டோம்.
“இந்தியாவின் மிகப்பெரிய விருத குடுத்து உங்கள அரசாங்கம் கவுரவிச்சிருக்காங்க. இந்த நேரம் உங்களுடைய மனநிலை எப்படி இருக்குதுன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்ற சம்பிரதாயமான கேள்வியோடு உரையாடலைத் தொடங்கி வைத்தேன்.
“இப்படி ஏதாச்சிம் குடுத்து உற்சாகப்படுத்தனா இப்படிப் பட்ட வேலைங்க நல்லபடியா நடக்கும்ன்னு நெனச்சித்தான் இதயெல்லாம் அரசாங்கம் செய்யுத தம்பி. அவுங்க சந்தோஷத்துக்கு அவுங்க குடுத்தாங்க. அதுக்குமேல் பெருமையா நெனைக்க ஒன்னுமில்ல. நம்ம சந்தோஷத்கு நாம நம்ம வேலய தொடர்ந்து செஞ்சிகிட்டே போவணும். தடையே இருக்கக் கூடாது.”
“மரம் நடறது உங்களுக்குப் புடிச்ச வேலயா?”
“இந்த நாட்டுக்கு ஒரு தேங்காதிட்டு போதுமா சொல்லுங்க தம்பி. இந்த புதுச்சேரியயே தேங்காதிட்டா மாத்தணும். இந்தியாவயே தேங்காதிட்டா மாத்தணும். வேலைன்னு நெனச்சாலும் சரி, கடமைன்னு நெனைச்சாலும் சரி, கடசி வரைக்கும் நிறுத்தாம இத செஞ்சிகிட்டே இருக்கணும்’ அம்மாவின் உதடுகளில் புன்னகை நெளிந்தது. அவர் கண்கள் தன்னிச்சையாக மரங்களின் பக்கம் ஒருகணம் திரும்பி மீண்டன.
“உங்க குடும்பத்துல இதுக்கு ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கெடைக்குதுன்னு தெரிஞ்சிக்கலாமா?”
“பெரிய குடும்பம்லாம் ஒன்னும் இல்லை. அப்பா மட்டும்தான். அவருதான் எல்லாத்துக்கும் தொண. கல்யாணமானப்பறம்தான் நான் இந்த ஊருக்கு வந்தேன். சொந்த ஊரு தேவனாம்பட்டணம். தொடக்கத்துல கஸ்-தூரிபாய் மகளிர் சங்கம்னு ஒன்ன ஆரம்பிச்சி பெண்களுக்கு தையல் பயிற்சி, பாய் பின்னும் பயிற்சி மாதிரி நடத்தனோம். திடீர்னு ஒரு விபத்துல அவர் தவறிட்டாரு. மனசு ரொம்ப தவிச்சி போயிடுச்சி. சங்க வேலையத் தாண்டி வேற எதாச்சிம் செய்யணும்ன்னு நெனச்சேன். அப்பதான் இந்த கன்னு நடற யோசன வந்திச்சி. வெளியேயிருந்து கன்னுங்களா வாங்காம, இந்த மரத்துலருந்தே நெத்துக்காய பக்குவமா மொளைக்கவச்சி, எடுத்தும் போயி நட்டோம். அப்பாதான் எல்லாத்துக்கும் ஒத்தாச. அவர் இல்லன்னா இதயெல்லாம் செஞ்சிருக்கவே முடியாது. கிட்டத்தட்ட நூறு வயசு அவருக்கு. ஆனா, பார்வைக்கு அப்படித் தெரியாது. சுறுசுறுப்பா எதயாவது செஞ்சிகிட்டே இருப்பாரு. பத்து கன்னுங்கள நட்டு ஒரு மாசம் தொடர்ந்து கைக்கொழந்தய பாத்துக்கறமாதிரி பாத்துகிட்டா, ரெண்டோ மூணோ பொழைக்கும். அதுவே எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”
“தொடக்கத்திலேயே பொது எடத்துல நட்டீங்களா? இல்ல சொந்த எடத்துலேருந்து ஆரம்பிச்சிங்களா?”
“முதல் பரிசோதனய நாங்க எங்களுக்கு சொந்தமான எடத்துலதான் செஞ்சம். தெற்கால எங்களுக்கு சொந்தமான ஒரு எடம் விவசாயம் பண்ணாம தரிசா கெடந்திச்சி. அத சரிப்படுத்தி கன்னுங்கள் நட்டு கண்ணும் கருத்துமா பாத்துகிட்டோம். அஞ்சாறு வருஷத்துலயே அழகான தோப்பாய்டுச்சி. அத பாத்துட்டு இன்னும் கொஞ்சம் பேரு கன்னு நட எடம் தந்தாங்க.”
“ஊருக்குள்ள ஒன்னும் சொல்லலயா?”
அவர் புருவங்கள் சுருங்கின. கண்கள் ஒரு கணம் மண்ணைப் பார்த்தன. பிறகு நிமிர்ந்து “சொல்லாம எப்படி இருப்பாங்க? ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசனாங்க. இவளுக்கு தானொரு
அபூர்வப்பிறவின்னு நெனப்புன்னு பரிகாசம் பண்ணாங்க. ஒழுங்கா ஒரு புள்ளய பெத்து வளக்கத் தெரியாத மலட்டு ஜன்மம்லாம் ஊருல கன்னு நட்டு வளக்க வந்துட்டுதுன்னு முதுவுக்கு பின்னால பேசனாங்க. ஒன்னா ரெண்டா, ஆயிரம் இருக்கும். அம்பது வருஷத்துக்குப் பிறகு இப்ப யோசிச்சி பாத்தா அதுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்லன்னு தோணுது.”
“வாழ்க்கையில சலிப்பே உங்களுக்கு வந்தது கெடையாதா?”
“சலிப்பா? எனக்கா?” ஒரு கணம் புன்னகை செய்தார். “உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா? காந்தித்தாத்தா இத அடிக்கடி சொல்வாருன்னு அஞ்சலயம்மா சொல்வாங்க.”
“சொல்லுங்க”
“ஒரு ஊருல ஒருத்தருக்கு தன்னுடைய ஊருக்கு எதாச்சிம் சேவ செய்யணும்னு ஆச உண்டாச்சாம். அந்த ஊருல புள்ளைங்க படிக்கறதுக்கு பள்ளிக்கூடம் இல்ல. மருந்துக்கு வழியில்ல. வண்டிங்க பேகவர சரியான பாதையில்ல. விவசாயம் செய்ய கிணறு வசதி கிடையாது. ஏரி கொளம் எதுவுமே கெடையாது. எதயாச்சிம் செய்யணும்னு ஆசப்பட்டாரு. எத எப்படி செய்யறதுங்கறதுதான் அவருக்கு தெரியலை. பொழுது பூரா அதே யோசனையில கழிப்பாராம். இப்படியே வருஷம் ஓடிச்சி. ஒரு நாளு அந்த வழியா ஒரு சாமியாரு வந்தாராம். நம்ம ஆளு. அவர பாத்துப் பேசி ஆசீர்வாதமெல்லாம் வாங்கிகிட்டு தன்னுடைய ஆசய மெதுவா சொல்லிட்டு நீங்கதான் சாமி நல்லதா ஒரு யோசன சொல்லணும்னு கேட்டாராம். சாமியாரு உக்கா£ந்திருந்த எடத்துக்குப் பக்கத்துல இருந்த சின்னச்சின்ன கூழாங்கல்ல ஒரு கை நிறைய அள்ளி ஒரு பையில் போட்டுக் குடுத்து அப்படியே முழுங்கிடுன்னு சொல்லிட்டு போயிட்டாராம். கல்ல எப்படி முழுங்க முடியும், இது என்னடா கிறுக்குத்தனமா இருக்குதுன்னு அவருக்கு ஒரே கொழப்பம். இருக்கற யோசனயோட இந்த யோசனயும் சேந்து ரெண்டு மடங்காயிடுச்சி. நாலஞ்சி வருஷம் கழச்சி, இன்னொரு சாமியாரு அந்தப் பக்கமா வந்தாராம். வழக்கம்போல எல்லாத்தயும் சொல்லி அவர் கிட்டயும் யோசன கேட்டாராம். அவரு கொஞ்சம் கூட தயக்கமே இல்லாம மழமழன்னு இருந்த கூழாங்கல்ல ஒரு கை அள்ளி ஒரு பையில் போட்டு அப்படியே முழுங்கிடுன்னு சொல்லிட்டு போயிட்டாரு. நம்ம ஆளுக்கு தல ரொம்ப கொழம்பி போயிடுச்சி. அவரு யோசன இப்ப மூணு மடங்காயிடுச்சி. தூக்கம் கெட்டு சாப்பாட்ட மறந்து இதுவே யோசனயா கெடந்தாரு. இன்னும் நாலஞ்சி வருஷம் போச்சி. அந்தப் பக்கமா இன்னொரு சாமியாரு வந்தாரு. அவர்கிட்ட போனதும் நம்ம ஆளு எல்லா விஷயங்களையும் ஆரம்பத்திலேருந்து முடிவுவரைக்கும் ஒன்னுவிடாம சொல்லிட்டு யோசன கேட்டாரு. எல்லாத்தயும் பொறுமையா கேட்ட சாமியாரு குடுக்கறதுக்காக கூழாங்கல்ல அள்ளப் போனாரு. அதப் பாத்ததுமே ஓன்னு மனசு ஒடஞ்சி அழ ஆரம்பிச்சிட்டாரு இவரு. எதுக்கய்யா எனக்கு இந்த சோதன? நல்லததான நான் நெனச்சேன்னு தேம்பித்தேம்பி அழுதாரு. அதப்பாத்ததும் சாமியாரு அவுங்க ரெண்டு பேரும் ஏற்கனவே யோசன சொல்லியும் நீங்க அலட்சியமா இருந்திட்டிங்களேன்னு ஆறுதல் சொன்னாரு. கூழாங்கல்ல முழுங்கச் சொல்றது யோசனயா ஐயான்னு கேட்டாரு நம்ம ஆளு. சாமியாரு சிரிச்சிகிட்டே கூழாங்கல்ல முழுங்க முடியாதுன்னு தெரியற மாதிரி சேவை சேவைன்னு சொல்லிட்டே இருந்தா வேல ஆவாதுன்னு ஏன் ஒங்களுக்குத் தெரியலை? வாய்ப்பேச்சால சேவ நடந்திருமா? நூத்துல ஒரு பங்கா இருந்தாலும் காரியமா செய்ங்க. ஏதாச்சிம் ஒரு இடததிலேருந்து ஆரம்பிச்சிருங்க. அது போதும். யோசன யோசனன்னு பத்து வருஷத்த வீணா கழிச்சிட்டீங்களேன்னு எடுத்துச் சொன்னாரு. செயல்படணும்ங்கறது தான் காந்தியுடைய தத்துவம். எனக்குத் தெரிஞ்ச செயல் இதுதான். இதன் மூலமா நல்லது நடக்கும்ன்னு என் மனம் ஆழமா நம்புது. இதத் தொடர்ந்து செய்யறதுல எனக்கு ஒரு நாளும் சலிப்பே கெடையாது.”
“அம்பது வருஷமா மரம் நடறத தொடர்ந்து செய்யறதா தெரிஞ்சிகிட்டம். வாரத்துக்கு ஒரு அம்பது மரம்னு வச்சாலும் ஒரு வருஷத்துக்கு கிட்டத்தட்ட ரெண்டாயிரத்து அறுநூறு கன்னுங்க. அம்பது வருஷத்துல ஒரு லட்சத்து முப்பதாயிரம் கன்னுங்க. மிகப்பெரிய சாதனைதான்.”
“அத்தனையும் பொழைச்சிருந்தா சாதனைதான். ஆனா பொழைக்கலையே. ஆடு மாடு தின்னது, முளைக்காமலயே வாடி செத்தது, மக்களே புடுங்கி போட்டதுன்னு பாதிக்கு மேல போயிருக்கும்.”
“அப்படியே வச்சிகிட்டாலும் அதுவும் பெரிய சாதனைதான்.”
ராஜாத்தி அம்மாள் பதில் சொல்லவில்லை. மாறாக, அவர் உதடுகளில் ஒரு புன்னகைமட்டுமே ஒளிர்ந்தது. அந்தப் புன்னகையைப் பார்த்து என் உடல் சிலிர்ப்பதை உணர்ந்தேன். எந்தக் கேள்வியையும் எழுப்பத் தோன்றவில்லை. பல கணங்களுக்கு அவரையே பார்த்தபடி நின்றேன்.
“அந்த ரெண்டு மரங்கள்ட்டேயிருந்து உருவான கன்னுங்கதான் எல்லாம். சாதனைன்னா அதுதான்.” அவருடைய அமைதி தவழும் கண்கள் ஏதோ ஓவியத்தில் தீட்டப்பட்டவைபோல் இருந்தன. தாய்மையின் ஊற்று அவற்றில் பொங்குவதை உணர முடிந்தது. அவருடைய புன்னகை பல ஆண்டுக்காலம் பழகிய நெருக்கத்தை வழங்கியது.
“ஒன்னு கைப்புள்ளயா இருக்கும்போது அவரு நட்ட மரம். இன்னொன்னு நான் நட்ட மரம்.”
வயதைப் புலப்படுத்தும் பழைய மரங்கள். காய்கள் குலை குலையாகக் காய்த்துத் தொங்கின. இதமான காற்று. புழுக்கம் என்பதே கிஞ்சித்தும் அந்த வட்டாரத்திலேயே இல்லை. கிளிகளும் குருவிகளும் விரிவிர்ரென்னு குறுக்கும் நெடுக்குமாக அலைந்தன. அணில்கள் தடதடவென ஒரு திசையிலிருந்து இன்னொரு திசையை நோக்கி ஓடின. தாழ்வான மாமரக் கிளையில் தொங்கிய ஊஞ்சலில் இரண்டு சிறுமிகள் உலகத்தையே மறந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். உரம் கலப்பதும் உலர வைப்பதுமாக ஏதோ வேலைகள் நடந்தபடி இருந்தன. மாட்டு வண்டியில் வந்து இறங்கிய சின்னச்சினன மண்சட்டிகளை ஒருவர் ஒரு பக்கமாக இறக்கி அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். எல்லாருமே ஏதோ கனவுலகப் பாத்திரங்களைப்போல இருந்தார்கள்.
காட்சித் தொகுப்பை மிகச் சிறந்ததாக உருவாக்கும் ஆசையில் நான்கு நாட்கள் அங்கேயே தங்கியிருந்தோம். ராஜாத்தி அம்மா எங்களுக்கு தனியாக ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தார். ஒவ்வொரு நாளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரை நாங்கள் சந்தித்தோம். ஒவ்வொருவரும் எங்களுடன் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் மலைக்கவைத்தன.
கிளம்பும்போது அவர் எங்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு மாங்கன்றையும் தென்னங்கன்றையும் அன்பளிப்பாகக் கொடுத்தார். “இந்த ஊர் மட்டும் தோப்பானா போதுமா? உங்க ஊருலயும் ஒரு தோப்ப உருவாக்க முடியுமா பாருங்க” என்றார். மீண்டும் அதே புன்னகை. ஒரு நாளும் மறக்கமுடியாத சுடரை அதில் காணமுடிந்தது. என் தோட்டத்தில் வைத்த கன்-றுகளில் மாங்கன்று மட்டுமே உயிர் பிழைத்தது. எங்கள் குடியிருப்புப் பகுதியின் மண்ணமைப்புக்கு தென்னை வளராது என்று சொன்னார்கள். ஏழு ஆண்டுகளில் மெல்லமெல்ல வளர்ந்து இப்போது என் உயரத்துக்கு நிற்கிறது அது. அதன் தோற்றம் ஒவ்வொரு கணமும் ராஜாத்தி அம்மாவை நினைவுப்படுத்திவிட்டுப் போகும்.
எடுத்த காட்சிகளையெல்லாம் நானும் என் உதவியாளும் இரவும் பகலுமாக உட்கார்ந்து வெட்டித் தொகுத்து சீராக்கி “இரண்டு மரங்கள்” என்று தலைப்பிட்டோம். துரதிருஷ்டவசமாக அத்தொகுப்பை எங்கள் நிறுவனத்தாரால் யாரிடமும் விற்கமுடியவில்லை. தொலைக்காட்சி நிறுவனங்களும் விளம்பர நிறுவனங்களும் காட்சித் தொகுப்பைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டுப் போய்விட்டார்கள்.
“என்ன சார் இது, நியூஸ் டிவிஷன் படமாட்டம் இருக்குது?”
“டி.வி. ரிமோட் மட்டுமில்ல சார், நம்மள இயக்கற ரிமோட்கூட பாக்கறவங்க கையிலதான் இருக்குது. இந்தப் படத்த போட்டா பீச்சாங்கையாலேயே சேனல மாத்திருவாங்க சார்.”
“குறும்படமா மாத்தி சப்டைட்டில் போட்டு ஏதாச்சிம் ஃபெஸ்டிவலுக்கு அனுப்புங்க தம்பி. அவார்டு கிவார்டு கெடைக்கும்.”
“போங்க சார் போயி, சிம்ரன், லைலா, ஜோதிகான்னு கலர்புல்லான ஆளா பாத்து பேட்டியெடுத்துட்டு வாங்க சார். படிப்படியா கலைத்துறையில எபபடி சாதிச்சாங்கன்னு பேசவச்சி எடுத்தாங்க சார். டி.ஆர்.பி. ரேட் ஒரேடியா எகிறிடும். கையிலேயே புடிக்க முடியாது.”
ஆளாளுக்கு என்னென்னமோ பேசி வெறுப்பேற்றியதில் எங்கள் மேலாளருக்கு மிகப் பெரிய வருத்தம். பணநஷ்டம் வேறு. காட்சித் தொகுப்புக் குறுந்தகட்டை என்னிடம் கொடுத்துவிட்டு “நீங்களே வச்சிக்குங்க. வாய்ப்பு கெடைச்சா அப்பறமா பாத்துக்கலாம்” என்று சலிப்போடு எழுந்து போனார்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்களில் ராஜாத்தி அம்மாவைப் பற்றிய செய்திகள் மறுபடியும் இடம்பிடித்தன. அதுவும் சமீபமாக மூன்று மாதங்களாக தொடர்ந்து வெளி வந்தபடி இருந்தன. பொருளாதார சிறப்பு மண்டலத்துக்கான இடமாக அந்தப் பகுதி வரையறுக்கப்பட்டிருப்பதால் மிகப் பெரிய கொந்தளிப்பான சூழல் உருவாகிவிட்டது. அரசாங்கம் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார் ராஜாத்தி அம்மா. தள்ளாத வயதில் நடைப்பயணம் சென்று கவர்னரிடம் மனு கொடுத்தார். முதல் பத்து நாட்களில் காணப்பட்ட தீவிரம் திடீரென படிப்படியாக குறைந்து ராஜாத்தி அம்மா கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு ஆளாகிவிட்டார். கட்சிகளும் சாதி
அமைப்புகளும் அதன் பின்னணியில் இயங்கிய சக்திகள். ராஜாத்தி அம்மா மனம் உடைந்து தளர்ந்து போனார். ஓயாத அலைச்சல்களால் ரத்த அழுத்தம் அதிகரித்துவிட மருத்துவமனையில் சேர்க்கும்படி நேர்ந்துவிட்டது.
மரங்களையும் மனிதர்களையும் ஒரு உயிராக மதிக்கத் தெரியாமல் அகம்பாவத்தோடு அரசாங்கம் நடக்கத் தொடங்கிய பிறகு, அவர்கள் வழங்கிய பட்டத்தை வைத்திருப்பது பெரிய சுமை என்பதாக அவர் எண்ணம் மாறிவிட்டது. பல கோணங்களிலிருந்தும் இதைப் பற்றி யோசித்துப் பார்த்துவிட்டு தன் முடிவை உறுதிப்படுத்திக் கொண்டார். வெளியே செய்தி கசியத் தொடங்கியதும் அவருடைய பிரியத்துக்குரியவர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்து தம் ஆலோசனைகளை வழங்கிவிட்டுச் சென்றனர். மருத்துவமனையில் இருந்தபடியே ஒரு முக்கியச் செய்தித்தாளுக்கு ராஜாத்தி அம்மா இந்த விஷயத்தை முன்னிலைப்படுத்தி பேட்டியொன்றைக் கொடுத்தார். அதுதான் அவரைப் பற்றி வெளிவந்த கடைசிச் செய்தி.
திடீரென ஓர் ஆழ்ந்த மௌனநிலையில் உறையத் தொடங்கியது ஊடக உலகம். அவரைப் பற்றிய ஒரு பெட்டிச் செய்திக்குக் கூட எங்கும் இடமில்லாமல் போய்விட்டது. அமைச்சரின் ரகசிய உத்தரவு என்றார்கள். அடுத்த நாளே சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு நிலம் வழங்கப் படக்கூடாது என்று பதினாறு பக்க அளவில் ஒரு பிரசுரத்தை எழுதி வெளியிட ஏற்பாடு செய்தார் அம்மா.
கட்டாய ஓய்வு வேண்டும் என்கிற நிபந்தனையோடு மருத்துவமனை அவரை வீட்டுக்கு அனுப்பியது. ஆனால் அம்மா ஓய்வை நிராகரித்து அடையாள உண்ணாவிரதம் உட்கார்ந்தார். அரசிடமிருந்து எவ்விதமான எதிர்வினையும் இல்லை. இதற்கிடையே மேளதாளத்தோடு பொதுமக்களோடு ஊர்வலமாகத் திரண்டு சென்று தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ பட்டத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு வந்தார்.
செய்தியைக் கேள்விப்பட்டதுமே அச்சம்பவத்தை உடனடியாக ஒரு காட்சித் தொகுப்பாக தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டது எங்கள் நிறுவனம். எனது முந்தைய அனுபவத்தை விவரித்தபோது “நமது முயற்சியை நாம் செய்யலாம்” என்றார் புதிய மேலாளர். அப்போதே கிளம்பிவந்துவிட்டோம்.
ஊரில் இப்போது சில வசதிகள் பெருகியிருந்தன. ஒற்றையடிப்பாதையாக நீண்டிருந்த மண்சாலைகள் சிமெண்ட் சாலைகளாக மாற்றமடைந்திருந்தன. நிறைய குழல் விளக்குகள். முன்பு ஊரைப்பார்த்துக் கொண்டு கழிமுகக் கால்வாயொன்று கடல்வரைக்கும் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது இரண்டு சின்ன மேம்பாலங்கள் அந்தக் கால்வாயின்மீது முளைத்து விட்டன. ஒரு மாடி வீட்டில் கொம்பு முளைத்தது போல ஏர்டெல் அலைபேசிக் கோபுரம் நின்றிருந்தது. பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கும் மைதானத்தின் ஒரு பகுதியில் வரிசையாக பல கடைகள் தோன்றியிருந்தன. பத்தடிக்கு இருபதடி நீள வழவழப்பு வண்ணத்தட்டியில் ஏழைப்பங்காளர் அடைமொழியுடன் அமைச்சர் கைகூப்பிச் சிரித்தார். இனிப்புக் கடை, பலசரக்குக்கடை, ரொட்டிக்கடை, வாகனம் பழுது பார்க்கும் நிலையம் பெருகியிருந்தன.
வழக்கம் போல பொது இடங்களிலும் தோப்புகளிலும் பலரையும் சந்தித்து உரையாடல்களைப் பதிவு செய்தோம். ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்த அதே மக்கள்தான். ஆனால் அவர்களுடைய குரலிலும் பார்வையிலும் மாற்றங்கள் வந்திருப்பதை ஆச்சரியமாக உணர்ந்தேன்.
“அம்மா செய்தது பெரிய காரியம்தான். யாரும் இல்லன்னு சொல்லலை. அரசாங்கம் இதவிட பெரிய காரியம் செய்ய நெனைக்கிறபோது குறுக்க நிக்கலாமா, நீங்களே சொல்லுங்க.”
“வெளி நாட்டுக்காரனுக்கும் எடம் வேணும்னா எங்களா காடுமேடா கெடக்கற எடமா பாத்து ஒதுக்க வேண்டியதுதானே. அத சீராக்கி செம்மப்படுதி, வசதி செஞ்சி, பெரிசாக்கி கட்டிக்காத்துக் கிடட்டுமே. யாரு வேணாம்னு சொன்னாங்க? யாராவது வருஷக்கணக்கா கஷ்டப்பட்டு நொந்து உருவாக்கி வச்சிருக்கற எடத்தத்தானா தார வாக்கணும?”
“வயசாய்டுச்சின்னாவே மக்களுக்கு பெருந்தன்ம போயி புடிவாதம் வந்துரும் போல....”
“நம்ம தலைவருங்களுக்கு நம்ம நாட்டு மக்களவிட வெளிநாட்டுக்காரங்க சந்தோஷமும் திருப்தியும்தான் சார் எப்பவுமே முக்கியமாக இருக்கும்போல. எதக்குடுத்து எப்படித்தான் மயக்குவானுங்களோ...?”
“அந்த அம்மாவுக்கு வெளிநாட்டுப் பணம் வருது சார். பின்னால ஏதோ ஒரு சக்தி இல்லாம இவ்வளவு செய்ய முடியுமா சொல்லுங்க. அம்மா மேல அப்ப இருந்த நம்பிக்க இப்ப இல்ல சார்....”
“என்னுடைய தோப்பு அளவு நூத்தி இருபதுக்கு இருநூறு இருக்கும் பாத்துக்குங்க. கம்பெனிகிட்டேயிருந்து ரெண்டு கோடி
வாங்கித்தரன்னு சொல்லுது அரசாங்கம். எனக்கு வரக்கூடிய பணத்த இவுங்க எதுக்கு தடுக்கணும்ங்கறேன். எங்க சாதிக் முன்னேற்றம்னா இவுங்களுக்கு புடிக்காத விஷயம் சார். மரம் அது இதுன்னு எதஎதயோ கதசொல்லி பிரச்சனய திசைதிருப்பறாங்க.”
“பத்மஸ்ரீ பட்டத்த திருப்பித்தந்தா தந்துட்டு போவட்டும். உடுங்க சார். இப்படி செஞ்சி ஆளுங்களயும் அரசாங்கத்தயும் மெரட்டலாம்ன்னு அம்மா திட்டம் போடறாங்க போல. அதெல்லாம் இப்ப நடக்காது சார்.”
“இவ்வளவு நாளு இந்த மரங்கதான் சோறு போட்டுது சார். இல்லன்னு சொல்லலை. இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இதுங்கள நம்பி இருக்கறது சொல்லுங்க. மரங்களும்தான் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தாங்கும்? இன்னும் பத்து வருஷம் தாங்குமா? இல்ல, பாஞ்சி வருஷம் தாங்குமா? அதுக்கப்பறம்? சோத்துக்கு எங்க குடும்பங்க லாட்டரிதான் அடிக்கணுமா? உலகமே முன்னேறும்போது நாங்களும் முன்னேறி ரெண்டு காசு பார்க்கணும்னு ஆசப்படக்கூடாதா?”
தெய்வம் என்று போற்றிய வாய்கள் கூசாமல் தூற்றிப் பேசுவதைக் கேட்டு மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்டவர்களைப் பார்த்துப் பேசியதையெல்லாம் பதிவு செய்துகொண்டு மாலை நேரத்தில்தான் ராஜாத்தி அம்மாவின் வீட்டுக்குச் சென்றோம். ஏதோ ஒரு குட்டிநாய் ஏதோ ஒரு அறையிலிருந்து விடாமல் குரைத்தபடியே இருந்தது. அதற்குப் பால் வைத்துவிட்டு வரும்படி பக்கத்தில் இருப்பவரை அனுப்பினார் அம்மா. எங்கள தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். இதமான மாலை நேரக் காற்று. சூரியன் இன்னும் விழுந்திருக்கவில்லை. இரண்டு மரங்களும் மிடுக்கோடும் உறுதியோடும் நின்றிருந்தன. பழைய நினைவுகள் எல்லாம் அடிமனத்தில் புரண்டு எழுந்தன. வேலியோரமாக உரம் கலக்கும் வேலையில் மூழ்கியிருந்தார் அம்மாவின் அப்பா. எங்கள் வணக்கங்களை ஏற்றுக்கொண்டு சிரித்தார்.
அம்மாவிடம் உரையாடலைத் தொடங்கினோம். சுடர்மிகுந்த அவருடைய வழக்கமான புன்னகையில் வாட்டம் படிந்திருந்தது. ஏதோ ஒரு பாரம் அவருடைய மனத்தை அழுத்தியிருப்பதை உணரமுடிந்தது. மிகவும் குறைவாகவே பேசினார்.
“இந்த மரங்கள் வெட்டப்படறத தடுக்கமுடியாத நிலை வரும்ன்னா இந்த மரங்களோடு நானும் மடிந்து போவேன்.”
அவர் இறுதியாக சொன்ன வார்த்தைகளைக் கேட்டு என மனம் உடைந்தது.
விடைபெறும் நேரத்தில் வழக்கம்போல ஒரு மாங்கன்றையும் தென்னங்கன்றையும் எங்களுக்கு அளித்தார் ராஜாத்தி அம்மா. “எங்க ஊரு மண்ணமைப்புக்கு தென்னை வளராதுன்னு சொல்லிட்டாங்கம்மா. போன தரம் வச்சதே பட்டுப் போச்சி. மாங்கன்னு மட்டும் எடுத்துக்கறேன்.’ என்றபடி ஒன்றை மட்டும் பெற்றுக் கொண்டேன். எங்கள் வீட்டில் வளரும் மாங்கன்றைப் பற்றி அக்கறையோடு சிறிது நேரம் விசாரித்தார். எவ்வகையான உரங்களை, எப்படிப்பட்ட விகிதங்களில் வைக்கவேண்டும் என்று விளக்கமாகச் சொன்னார். பிறகு கைகூப்பி விடை கொடுத்தார். வழியனுப்புவதற்காக எங்களோடு அம்மாவின் அப்பாவும் கூடவே வந்தார். அவருடைய நிதான நடைக்கு இசைவாக நாங்களும் மெதுவாக நடந்தோம்.
வீட்டைவிட்டு வெகுதொலைவு தள்ளி வந்ததும் “உங்ககிட்ட ஒன்னு தனியா சொல்லணும்” என்று மெதுவாகத் தொடங்கினார் பெரியவர். “சொல்லுங்க ஐயா” என்றபடி கேமிராவை அவர் பக்கம் திருப்ப முயற்சி செய்தேன். “பதிவுக்காக இல்ல தம்பி. தனிப்பட்ட விதத்துல.....” என்று மேலும் தயக்கத்தோடு சொன்னார் பெரியவர். அவர் கண்கள் தரையில் படிந்திருந்தன.
சந்தர்ப்பத்தைப் புரிந்துகொண்டு என் குழுவினர் தொடர்ந்து நடந்து சென்றுவிட, நாங்கள் அருகில் இருந்த பாலத்தில் உட்கார்ந்தோம். வாய்க்காலில் சாயங்கால மேகத்தின் நிழல் தத்தளித்துக்கொண்டிருந்தது. அருகிலிருந்த மாந்தோப்பிலிருந்து காற்று இதமாக வீசியது.
“அறுபது வருஷத்துக் கத. என் நெஞ்சில் இரும்புமாரி அழுந்திக் கெடக்குது. பேருக்கேத்தமாதிரி ராஜாத்தியாட்டம் வாழவேண்டிய பொண்ணு. அவ வாழ்க்கைக்கு நானே எமனா மாறிட்டேன் தம்பி. நா செஞ்ச பாவத்துக்கு பரிகாரமே கெடையாது.”
“என்ன ஐயா சொல்றிங்க?”
“நான் சொல்றதெல்லாம் சத்தியம். என் பொண்ணு படற இம்சய பாக்க முடியாம பொங்கிப்பொங்கி வருது. உங்ககிட்ட சொன்னா என் பாரம் கொறையும். ஆனா அவ பாரத்த யாராலயும் எறக்கிவைக்க முடியாது. இப்ப சொல்றதயெலலாம் ஒங்க நெஞ்சோட வச்சிக்குங்க. யாருகிட்டயும் மூச்சு காட்ட வேணாம்.”
“சொல்லுங்க ஐயா.”
“சொதந்தரம் கெடச்ச பிறகு கூட ராஜாத்தி பொதுசேவ அது இதுன்னு போயிட்டிருந்திச்சி. சேலம் ஜெயில்ல இருக்கறபோது ராமசாமின்னு ஒரு பையன் பழக்கமாயிருக்கான். அஞ்சல அம்மா மாரி இந்தப் பையனும் பழக்கம்னு நானே நெனைச்சிகிட்டேன். இது பேசற கூட்டத்துல அவனும் பேசுவான். அக்ராகரத்துப் பையன். சிதம்பரத்துக்காரங்க. ஆனா பூர்வீகம் கும்பகோணம். நல்லா பாட்டெல்லாம் கட்டுவான். சங்கீதப் பித்தும் உண்டு. பிச்சமூர்த்தின்னு ஒரு கவிஞர் தெரியுமில்ல. அவருகூட நல்லா பழக்கமெல்லாம் வச்சிருந்தான். ரெண்டு பேரும் ஆசப்பட்டாங்க போல. அந்த ஆண்டவன் மேல சத்திமா எனக்கு எதுவும் தெரியாது. ஒரு நாளு ஐயருதான் ஆளவிட்டு அனுப்பனாரு. ஒன்னும் புரியாம ஓடி நின்னேன். சங்கீத வித்வானா வளர்ற பையன் இப்படி பொண்ணு விஷயத்துல மாட்டிக்கறது அவருக்கு புடிக்கலை. பட்டும் படாம சொன்னாரு. எனக்கு புரிஞ்சிபோச்சி. வந்த வேகத்துல காதும்காதும் வச்சாப்பல எங்க கூட்டத்துலயே ஒரு பையது தேடனன். அப்பதான் போஸ்டாபீஸ் தம்பி ராமச்சந்திரன் கெடச்சான். பாத்து பேசி ஒடனே முடிவு பண்ணிட்டம். அப்பகூட எங்க ராஜாத்தி ஒன்னும் சொல்லவே இல்ல. நான் கிழிச்ச கோட்ட தாண்டலை.”
“ராமசாமி?-”
“கல்யாணத்துக்கு அந்தப் பையனும் வந்திருந்தான். கல்யாணப் பரிசா ஒரு மாங்கன்ன கொடுத்துட்டு போயிட்டான். புருஷன் ஊட்டு தோட்டத்துலேயே அதயும் நட்டு வச்சி வளத்திச்சி.”
“தோட்டத்துல நிக்குதே, அது தானா அந்த மரம்?”
“அதேதான்”.
“அவுங்க கணவர் வளத்த மரமில்லயா அது?”
“தென்னமரம் தான் அவர் வச்சது, மாமரம் இது வச்சது.”
“அப்பறம் ராமசாமிய பாக்கவே இல்லயா?”
“வடக்குலேருந்து யாரோ ஒரு சங்கீதக்காரரு இங்க கச்சேரிக்கு வந்திருந்தாரு. அவருகூட இவரு கௌம்பி போயிட்டாரு. அப்பறம் இந்த பக்கமா வரவே இல்ல. ரெண்டுமூணு வருஷத்துக்கப்புறம் இவுங்களே தேடிட்டு போனாங்க. அப்பதான் கங்கையிலே உழுந்து தற்கொல பண்ணிகிட்டாருன்னு செய்தி கெடைச்சிது.”
“ஐயோ.”
“கட்டனவனும் உயிரோட இல்லாம நெனச்சவனும் உயிரோட இல்லாம அவ வாழ்க்கையே சூன்யமாயிடுச்சி. தெனமும் ரெண்டு மரங்க நடுவுல நின்னு அவ பெருமூச்சு விடறத பாத்தா என் நெஞ்சே வெடிச்சிரும்போல இருக்கும். அப்பதான் இப்படி கன்னு நடற வேலய ஆரம்பிச்சா. அவ மனசு ஆறுதலுக்கு எதயாச்சிம் செய்யட்டும்ன்னு நானும் தொணையா இருந்தேன். இத்தன வருஷத்துல ஒன்ன நூறாக்கி, நூற ஆயிரமாக்கி இன்னிக்கு ஊரெல்லாம் தன்னுடைய நெனப்புக்கு சாட்சியா நிக்க வச்சிட்டா. அன்னிக்கு ஒரேஒரு நிமிஷம் ஐயருகிட்ட நயமா பேசி ஒரு வழிய நான் உருவாக்கியிருந்தா, என் பொண்ணுக்கு இந்த நெலமை வந்திருக்காது.”
“உங்க கையை மீறி நடந்ததுக்கு நீங்க என்ன செய்யமுடியும் சொல்லுங்க. உங்க நெலைமையில எந்த அப்பாவா இருந்தாலும் இதத்தான் செஞ்சிருப்பாங்க” அவருக்கு ஆறுதலாக இருக்குமென்று நினைத்து மெதுவாகச் சொன்னேன்.
“இப்ப மரங்களயெல்லாம் வெட்டணும்ன்னு கௌம்பியிருக்காங்க. மரத்த வெட்டறது என் ராஜாத்தியயே வெட்டறமாதிரி. அதும் மனச வெட்டறமாதிரி. எப்படி தாங்கும் என் பொண்ணு?” உடைந்த குரலில் மூச்சிரைக்க சொல்லிக்கொண்டு வரும்போதே அவர் விம்மிவிம்மி அழத் தொடங்கிவிட்டார். அவர் கைகளை வாங்கி அழுத்தமாகப் பற்றினேன். தளர்ந்த அவர் தோள்கள் நடுங்கின.
சில கணங்களுக்குப் பிறகு, “சரி கௌம்புங்க தம்பி. கூட்டாளிங்க ரொம்ப நேரமா காத்திருப்பாங்க” என்றார். “நான் சொன்னத கவனத்துல வச்சிக்குங்க தம்பி. எந்தக் காரணத்தாலயும் இது எங்கயும் பதிவாகக் கூடாது. என் பாரத்த உங்க தோள்ல எறக்கிவச்சதா நெனச்சிக்குங்க” எனறு வலியுறுத்திச் சொல்லிவிட்டு விடைகொடுத்தார்.
(தீராநதி - 2008)