Home

Sunday, 16 April 2023

சாரத்தை நெருங்கும் கலை

  

கவிதை என்பது கருத்துகளைத் திரட்டிப் பாதுகாத்துவைக்கும் பேழையென  ஒரு தரப்பும் அழகியல் கூறுகளால் அணிசெய்து காட்சிக்கு வைக்கும் சிலையென இன்னொரு தரப்பும் முன்வைத்த வாதங்கள் ஓங்கியொலித்தபடி இருந்த ஓர் இக்கட்டான தருணத்தில் அழகியல் கூறுகளையும் உருவகமாக மாற்றப்பட்ட கருத்துகளையும் சரியான விகித அளவில் இணைத்து மரபுப்பாடல்களைப் புனைந்து கவன ஈர்ப்பை உருவாக்கிய முக்கியமான பாவலர் ம.இலெ.தங்கப்பா. தாளக்கட்டும் கற்பனைநயமும் அழகான சொல்லாட்சியும் அமையாத பாடல்கள் எல்லாமே சோளக்கொல்லை பொம்மைகள் அணிந்திருக்கும் ஆடைகளுக்கு நிகரானவை என்பதே அவர் எண்ணமாக இருந்தது.

1975ஆம் ஆண்டில் புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் கணிதப்பிரிவு மாணவனாக நான் படித்தபோது எங்கள் வகுப்பில் தமிழ்ச்செய்யுள் நடத்தும் ஆசிரியராக அவர் இருந்தார். வகுப்பில் ஏராளமான புதுச்செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துரைப்பது அவர் வழக்கம். பிறகு அது மெல்ல மெல்ல உரையாடலாக வடிவெடுக்கும். நீண்டுபோகும் அந்த உரையாடல்கள் ஒரு தருணத்தில் அன்றைய பாடத்தோடு தொடர்புடையதாக மாறி முடிவடையும். அந்த மாயத்தை நிகழ்த்திய கலைஞரை ஆசிரியராக அடைந்தது நான் பெற்ற பெரும்பேறு.

என் பள்ளியாசிரியர்களின் வழிகாட்டலால் நான் அடைந்த யாப்பிலக்கணப்பயிற்சியின் விளைவாக அக்காலத்தில் அறுசீர் விருத்தங்களையும் எண்சீர் விருத்தங்களையும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தேன். மனம் கவர்ந்த காட்சிகளையும் நினைவில் பதிந்துவிடும் தருணங்களையும்  ஏராளமான விருத்தப்பாடல்களாக எழுதிவப்பது ஒரு பழக்கமாக மாறிவிட்டது..  ஒரு விடுமுறைக்காலத்தில் எழுதிவைத்த பாடல்குவியலிலிருந்து ஒரு நூறு பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து வெள்ளைத்தாட்களில் தெளிவான கையெழுத்தில் படியெடுத்தேன். பிறகு கடையில் கொடுத்து ஒரு புத்தகத்தைப்போல தைத்து வைத்துக்கொண்டேன். கையெழுத்துப் பத்திரிகை போல கையெழுத்துப் புத்தகம். அதற்கு பூங்கொத்து என்று பெயர்சூட்டி வகுப்பு நண்பர்களிடம் படிக்கக் கொடுத்தேன். அவர்கள் தம் கருத்துகளை பதிவு செய்வதற்காக புத்தகத்தின் பிற்பகுதியில் வெள்ளைத்தாட்கள் இணைக்கப்பட்டிருந்தன.

மாணவர்களிடையே சுற்றிச்சுற்றி வந்த பூங்கொத்து ஒருநாள் வகுப்பெடுக்க வந்த தங்கப்பாவின் கண்களில் அகப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட மாணவரிடமிருந்து அப்பூங்கொத்து அவருடைய கைகளுக்குச் சென்றுவிட்டது. அங்கங்கே சில பக்கங்களைப் புரட்டிப் படித்த தங்கப்பா, அதைத் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டார். நாலைந்து நாட்களுக்குப் பிறகு என்னிடம் ஆசிரியர் அறைக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு தெரிவித்தார். சற்றே கூச்சத்தோடும் அச்சத்தோடும் நான் அவருடைய அறைக்குச் சென்றேன்.

தங்கப்பாவின் மேசை மீது பூங்கொத்து இருந்தது. பல பக்கங்களுக்கு இடையில் அடையாளமாக சின்னச்சின்ன காகித நறுக்குகள் வைக்கப்பட்டிருந்தன. என்னுடைய ஆர்வம், நான் படித்த புத்தகங்கள், என் குடும்பப்பின்னணி பற்றியெல்லாம் தங்கப்பா சில கேள்விகள் கேட்டார். நான் எல்லாக் கேள்விகளுக்கும் சுருக்கமாக விடையளித்தேன்.

“கவிதை சார்ந்த வடிவ ஒழுங்கு உன் பாடல்களில் தெரிகிறது. ஆனால் சொற்கள் கூடிவராமல் துண்டுதுண்டாக நிற்கின்றன. மரபுப்பாடலில் சொல்லிணைவுகள் மிகமிக முக்கியமான கூறு. சொல்லிணைவு அமைந்தால்தான் தாளக்கட்டு அமையும். தாளக்கட்டு என்பது ஒரு பாட்டுக்கு உயிர்நாடி போன்றது. தாளகட்டு இல்லாத பாடல் உயிரற்ற சடலம்”

நான் அமைதியாக அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தேன்.

“ஒரு கருத்தை ஒரு பாடலில் முன்வைக்க முயற்சி செய்யும்போது, அக்கருத்தின் மையமான பகுதியை மட்டும் தொட்டுக் காட்டினால் போதும். அந்த மையம் கண்ணாடிக்கோணம் மாதிரி இருக்கவேண்டும். அதுதான் பாடல்மொழி. நாம் பேசுகிற, எழுதுகிற மொழியிலிருந்து வேறுபட்ட ஒரு மொழி. அதில் நாம் அடைகிற தேர்ச்சிதான் நம்மை ஒரு பாவலனாக மாற்றும்”

அவர் விரல்கள் ஏற்கனவே அவர் அடையாளமிட்டு வைத்திருந்த ஒரு குறிப்பிட்ட பக்கத்தைப் புரட்டின. அதில் எழுதப்பட்டிருந்த கவிதையை ஒருசில கணங்கள் பார்த்தார். பிறகு வேறொரு பக்கத்துக்குச் சென்றார். அவர் பக்கத்தைப் புரட்டி மாறிச் செல்லும்போதெல்லாம் அப்பக்கத்தில் எழுதியிருக்கும் கவிதை வரிகளை என் நினைவிலிருந்து மீட்டெடுத்து மனசுக்குள் சொல்லிப் பார்த்தேன்.

”ஓர் உழவனின் கை கலப்பைக்கு பழகுவதுபோல ஒரு பாவலனின் மனம் அந்தக் கண்ணாடிக்கோணத்துக்குப் பழகவேண்டும். பயிற்சி செய்துகொண்டே இரு. ஒருநாள் மொழி உனக்கு வசமாகும்”

தொகுப்பை மூடி என்னிடம் கொடுத்தார். பிறகு தன் மேசையின் இழுப்பறைக்குள் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்தார். மனம்போன போக்கில் ஒரு பக்கத்தைத் திருப்பினார். புத்தகத்தை என் பக்கமாகத் திருப்பி “இந்தப் பாடலைப் படி” என்றார். நான் அவர் குறிப்பிட்ட பாடலை அவருக்குக் கேட்கும் அளவுக்கு மெல்லிய குரலில் படித்தேன். அது ’காயிலே புளிப்பதென்னே கண்ணபிரானே’ பாடல். நான் படித்துமுடிக்கும் வரை அமைதியாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தார் தங்கப்பா.

“சொல்லிணைவும் தாளக்கட்டும் எப்படி இருக்கிறது பார். ஒரு பாட்டு என்றால் இப்படி இருக்கவேண்டும். இப்பாட்டில் இத்தனை வரிகள் இருந்தாலும் அவர் முன்வைக்க விரும்பும் கருத்து ஒன்றே ஒன்றுதான். எல்லாவற்றிலும் சாரமாக நீ இருக்கிறாய் என்பதுதான் அக்கருத்து. அதை மையமாக்கிவிட்டு, தன்னால் முடிந்த அளவுக்கு அடுக்கிக்கொண்டே போகிறார். ஒரு பாடல் இப்படித்தான் இருக்கவேண்டும்.”

சாரம் என்னும் சொல் என் நெஞ்சில் அப்படியே பதிந்துவிட்டது. அந்த உரையாடல் என் நெஞ்சில் மணியோசையைப்போல மீண்டும் மீண்டும் ஒலித்தபடி இருந்தது. நான் சிந்திக்கும் முறையையே அது மாற்றியமைத்தது. திரட்டித் தொகுத்து அடுக்கும் சிந்தனை முறைக்கு மாறாக சலித்தும் தொகுத்தும் சாரத்தைத் தொடும் சிந்தனை முறைக்கு மாறினேன்.

அதற்குப் பின் என் பாடலின் வடிவமும் மாறியது. ஒவ்வொரு முறையும் என் பாடல்களை அவரிடம் கொண்டு சென்று காட்டி, அவருடைய எண்ணத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் புதிய புதிய செய்திகளை எனக்கு அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். ஒருமுறை என்னிடம் சிலப்பதிகாரத்தில் கானல்வரிப் பாடல்களையும் ஆய்ச்சியர் குரவைப்பாடல்களையும் படிக்கும்படி சொன்னார். மற்றொருமுறை குறுந்தொகையைப் படிக்கும்படி சொன்னார். இன்னொருமுறை ஒளவையார் பாடல்களைப் படிக்கும்படி சொன்னார். அவர் சுட்டிக்காட்டிய ஒவ்வொன்றுமே எனக்கு நல்ல வழிகாட்டிகளாக விளங்கின.

ஒருமுறை கல்லூரி ஆண்டுமலரைத் தயாரிக்கும் பொறுப்பை தங்கப்பா ஏற்றிருந்தார். நான் எழுதிய பாடலொன்றை வாங்கி அதை பாற்கரன் என்னும் பெயரில் வெளியிட்டார்.

நீண்ட கதைகளைப் பாடல்களாக எழுதுவதில் அப்போது நான் ஆர்வமாக இருந்தேன். எல்லாமே ஆயிரம் வரிகளைக் கொண்ட பாடல்கள். அவர் எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்து ஆலோசனைகளை வழங்கினார். அவற்றுக்கு தங்கப்பா குறும்பாவியம் என்று பெயர் சூட்டினார். கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகு புதுச்சேரியில் இருந்த வரைக்கும் அத்தகு பாவியங்களை தொடர்ந்து எழுதிவந்தேன். 

தொலைபேசித் துறையில் பொறியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பயிற்சியைப் பெறுவதற்காக ஐதராபாத் சென்றிருந்தேன். துயரங்கள் நிறைந்த காலம் அது. ஒருநாள் நள்ளிரவில் என் மனச்சுமையைக் கரைத்துக்கொள்ளும் விதமாக, ஒரு பழைய அனுபவத்தை முதன்முறையாக பாவியமாக இல்லாமல் உரைநடையில் எழுதினேன். அக்கணத்தில் பாவியத்திலிருந்து என்னையறியாமல் சிறுகதையுலகத்துக்குள் நுழைந்துவிட்டேன்.

பாடல்வழியை நான் தொடரவில்லை என்பதில் தங்கப்பாவுக்கு சற்றே வருத்தமுண்டு. ஆயினும் அவர் ஒருநாளும் என் முயற்சியைத் தடுக்கவில்லை. கதைகளையே நான் இன்றுவரை தொடர்ந்தாலும் பாடல்மொழிக்கு அவர் வகுத்துரைத்த இலக்கணமே கதைமொழியிலும் இயல்பாகவே படிந்திருக்கிறது. சாரத்தை நெருங்கித் தொடும் நுட்பத்தை எனக்கு அளித்த மாபெரும்  கலைஞர் அவர்.

எழுத்தாலும் பேச்சாலும் தன் வாழ்வாலும் பலருக்கு ஆதர்சமாக விளங்கியவர் தங்கப்பா. அவர் முன்வைத்த தன்முனைப்பில்லாத அன்பும் அறமும் நிலைத்திருக்கும் வரை அவருடைய பெயரும் நிலைத்திருக்கும்.

 

(மார்ச் மாதம் எட்டாம் தேதி ம.இலெ.தங்கப்பாவின் தொண்ணூறாவது பிறந்தநாள். மரபுப்பாடல் தலைமுறையைச் சேர்ந்த தலையாய பாவலர். இருபதுக்கும் மேற்பட்ட பாடல் தொகுதிகளை எழுதியவர். வாழ்வியல் சிந்தனைகளை முன்வைக்கும் வகையில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர். மொழிபெயர்ப்புக்காக ஒரு முறையும் சிறுவர் இலக்கியப்பங்களிப்புக்காக ஒருமுறையும் என இரு முறை சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றிருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட குறுந்தொகைப்பாடகளும் முத்தொள்ளாயிரப்பாடல்களும் பென்குவின் வெளியீடாக வந்துள்ளன.)

 

(தினமணி – 09.03.2023)