Home

Sunday, 12 November 2023

கருணையினால் - கட்டுரை

 

மணிப்பால் மருத்துவமனையில் நண்பரொருவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மூன்று நாட்கள் ஆழ்கவன சிகிச்சைப் பிரிவு அறையிலேயே வைத்திருந்தார்கள். பிறகுதான் வேறொரு சாதாரண தனி அறைக்கு மாற்றினார்கள். அதற்குப் பிறகுதான் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்தது. செய்தி கிடைத்ததும் நானும் இன்னொரு நண்பரும் அவரைச் சென்று பார்க்கத் திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் வசிப்பதோ வேறுவேறு திசையில் என்பதால் ஒன்றாகச் சேர்ந்து புறப்பட வழியில்லை. அதனால் நண்பர் “நான் முதலில் வந்தால் நீங்கள் வரும்வரை வெளியே விடுதிக்கு அருகில் காத்திருக்கிறேன். ஒருவேளை நீங்கள் முதலில் சேர்ந்துவிட்டால் நான் வரும்வரைக்கும் காத்திருங்கள்” என்று தெரிவித்துவிட்டார்.

நான் பார்வையாளர் நேரத்துக்கு முன்னாலேயே மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்துவிட்டேன். குறிப்பிட்ட இடத்தில் நண்பரைக் காணோம். இன்னும் வரவில்லை. கைபேசியில் அழைத்து நான் வந்து சேர்ந்துவிட்ட செய்தியைத் தெரிவித்தேன். பக்கத்தில் இருந்த விடுதியில் ஒரு காப்பி அருந்தியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு நேரத்தைப் போக்கினேன். அதற்குப் பிறகு வெளியே வந்து மரத்தடியில் அமர்ந்து காத்திருந்தேன். எனக்கு அருகில் வேறொரு மரநிழலில் ஒரு சிமெண்ட் கட்டையில் மூன்று பேர் முக்கோணமாக உட்கார்ந்திருந்தனர். இந்த உலகத்தையே மறந்தபடி அவர்கள் தமக்குள் உரையாடலில் மூழ்கியிருந்தனர். ஓர் ஆர்வத்தின் காரணமாக அவர்களுடைய உரையாடலைக் கேட்கத் தொடங்கினேன். பிறகு என்னை அறியாமலேயே அதைக் கவனமுடன் கேட்டேன்.

“அப்பா, நீங்கதான் முடிவெடுக்கணும். நீங்க சொல்றத வச்சித்தான் அடுத்த வேலையைத் தீர்மானிக்கணும். கம்பெனியில எனக்கு ஒரு வாரம்தான் லீவு குடுத்தாங்க. யு.எஸ்.லேர்ந்து இங்க வரதுலயே ஒரு நாள் போயிடுச்சி. இதோ, இன்னைய நாளும் முடிஞ்சிட்டுது. புறப்பட்டுப் போகறதுல ஒரு நாள் போயிடும். நடுவுல  நாலே நாள்தான். நான் எதாவது செய்யறதா இருந்தா, அதுக்குள்ள செஞ்சி முடிச்சிட்டு ஓடணும். எதுவா இருந்தாலும் யோசிச்சி சொல்லுங்க” என்றார் ஓர் இளைஞர்.

அப்பா என்று அழைக்கப்பட்ட அந்தப் பெரியவர் தரையைப் பார்த்தபடி தலையை மட்டும் அசைத்தபடி அந்த இளைஞன் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்டபடி இருந்தார்.

“தம்பி சொல்றதுலயும் ஒரு அர்த்தம் இருக்குதுப்பா. நாங்க இங்கேருந்து கெளம்பிப் போனதுக்குப் பிறகு ஏதாவது நடந்தா கூட, எங்களால எதுவும் செய்ய முடியாது. வாட்சப்ல பார்த்துக்கலாம், பேசிக்கலாம்ங்கறத தவிர வேற எதுக்கும் வழி இருக்காது. உங்க முடிவை வச்சித்தான் அடுத்து என்ன செய்யறதுன்னு திட்டமிட முடியும்” என்றாள் ஒரு பெண். அந்த இளைஞனுக்குப் பெண்வேடம் போட்டதுபோல இருந்தது அவள் முகம். அவனுடைய அக்காவாக இருக்கவேண்டும் என்று தோன்றியது.

அந்தப் பெரியவர் துக்கம் படிந்த முகத்துடன் குனிந்திருந்தார். அடிக்கடி நிமிர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டு “அது சரி” “அது சரி” என்ற சொல்லிக்கொண்டே த்ச் த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டிவிட்டு பெருமூச்சு விட்டபடி இருந்தார். பல நாட்கள் தூங்காததன் காரணமாக அவர் முகம் களையிழந்து காணப்பட்டது.

பத்து நிமிடங்களாக அவர்கள் மாறிமாறி இடைவிடாமல் பேசினார்கள். அவர்கள் உரையாடலை வைத்து நான் புரிந்துகொண்டது இதுதான். அந்தப் பெரியவரின் மனைவியும் அந்த இளந்தலைமுறையின் தாயாருமான அம்மையார் மருத்துவமனைக்குள் சுய நினைவிழந்த நிலையில் இருக்கிறார். அவர் அந்த நிலைக்குச் சென்று பத்து நாட்களாகின்றன. ஆழ்துயிலிலேயே இருக்கிறார். செயற்கைச் சுவாச வசதியோடு மருத்துவ நிர்வாகம் அவருடைய இதயத்தை இயங்கவைத்துக்கொண்டிருந்தனர்.   அவர் கண் விழிப்பதற்கு வழியே இல்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டார். செயற்கைச் சுவாச வசதியை நீக்கிவிட்டால் அவர் உயிர் அமைதியாகப் பிரிந்துவிடும். கணவரால் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ”அது…. அது…” என்று எதையோ சொல்ல முனைந்து சொல்லமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.

பிள்ளைகள் ”இன்னைக்கு ராத்திரி நம்ம முடிவை டாக்டர்கிட்ட சொன்னால்தான் அவுங்க அவுங்களுடைய வேலையைச் செய்யமுடியும். அப்பதான் நாளைக்கு காலையில் வழக்கமான விதிமுறைகளுக்கு உட்பட்டு நமக்கு அம்மாவுடைய உடலை வாங்கிட்டு இந்த இடத்துலேருந்து புறப்பட முடியும்” என்று சொன்னார்கள்.

அந்தப் பெரியவர் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் முதலில் தடுமாறினார். பிறகு அவர்கள் பேசப்பேச ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு பெருமூச்சோடு “சரிப்பா, செய்ங்கப்பா. வேற வழியில்லைன்னும்போது நாம என்ன செய்யமுடியும்?” என்றார். தொடர்ந்து “உங்க ரெண்டு பேரயும் நேருல பார்க்கணும்னு அவ ரொம்ப ஆசையோடு இருந்தா. அதுதான் நடக்காது போல இருக்கு” என்றார்.

மகன் நெருங்கிச் சென்று தன் அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டு “அப்பா, ரெண்டு மனசா சொல்லக்கூடாது. சரின்னு சொல்றீங்களா, வேணாம்னு சொல்றீங்களா? எதுவா இருந்தாலும் உறுதியா சொல்லுங்க” என்று ஆங்கிலத்தில் கேட்டான். பெரியவர் மிகவும் தயக்கத்தோடு தலைநிமிர்ந்து “சரிப்பா, நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம். புள்ளை வந்து கொள்ளி வச்சான்ங்கற நிம்மதியோடு அவள் ஆத்மா சாந்தியடையட்டும்” என்றார். அப்போது அவருடைய கண்கள் நிறைந்துவிட்டன.

“அப்பா, ஏதோ நம்ம அவசரத்துக்காக இப்படி செய்யறதா தயவு செஞ்சி நினைக்காதீங்க. இந்த பத்து நாளாதான் அவுங்க சுயநினைவு இல்லாம இருக்காங்க. ஆனா இந்த நோவு நொடியால பத்து வருஷமா அவுங்க எல்லாக் கஷ்டத்தையும் அனுபவச்சிட்டாங்க. இன்னும் கூடுதலா அவுங்களுக்கு நாம கஷ்டம் கொடுக்கக்கூடாது. அவுங்க மேல இருக்கிற கருணையாலதான் நாம இதைச் செய்றோம். அந்தக் கோணத்துல யோசிச்சி பார்த்தா நாங்க சொல்றது உங்களுக்குப் புரியும்” என்று அடங்கிய குரலில் சொல்லிமுடித்தாள் பெண்.

தொடர்பே இல்லாதவனைப்போல அவர்கள் பக்கமே பார்க்காமல் அவர்கள் பேசுவதையெல்லாம் ஒவ்வொரு சொல்லாக நான் கேட்டுக்கொண்டிருந்தேன். சங்கடமாக இருந்தது. அதுபோன்ற கருணை மரணங்கள் சிற்சில இடங்களில் நிகழ்வதை நண்பர்கள் வழியாக ஏற்கனவே நான் கேட்டிருந்தேன். ஆனால் முதல் முறையாக ஒரு கருணை மரணம் தொடர்பான விவாதத்தை அப்போதுதான் நேருக்கு நேர் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்காமலேயே இருந்திருக்கலாம் என அக்கணத்தில் தோன்றியது.

எதையும் தடுக்க இயலாதவனாக, கையறு நிலையில் அந்த உரையாடலைத் தொடர்ந்து கேட்டபடி இருந்தேன். உள்ளூர மனம் நடுங்கியபடி இருந்தது. நல்ல வேளையாக நண்பர் அக்கணத்தில் வந்துவிட்டதால் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து வந்த நண்பரைப் பார்க்க மருத்துவமனைக்கு உள்ளே சென்றோம்.

சிகிச்சை முடிந்து வந்த நண்பரின் முகம் பளிச்சென இருந்தது. அச்சத்திலிருந்து மீண்டுவிட்டார் என்று தோன்றியது. நோய்க்களை முற்றிலும் நீங்கியிருந்தது. நலம் குறித்த விசாரணைக்குப் பிறகு சிறிது நேரம் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு நாங்கள் இருவரும் வெளியே வந்துவிட்டோம்.

ஏற்கனவே உட்கார்ந்திருந்த இடத்தில் அந்த அப்பாவையும் பிள்ளைகளையும் காண இயலவில்லை. உள்ளே சென்றிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். நண்பருடன் சேர்ந்து இன்னொரு காப்பி அருந்திநேன். அப்போது நான் காதுகொடுத்துக் கேட்ட செய்தியை நண்பருக்கும் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவரும் த்ச் என்றபடி வருத்தத்தைப் புலப்படுத்தினார்.

“நடுத்தட்டு மக்கள் அப்படித்தான் யோசிப்பாங்க. நடைமுறைக்கு வசதியானது எதுவோ, அதுதான் இன்னைய தேதிக்கு நியாயம். அதுக்கு மேல எதைஎதையோ நினைச்சி குழப்பிக்க தேவையில்லை. புரியுதுங்களா? கண்டதையெல்லாம் யோசிச்சி தலையை கொழப்பிக்காம  வீட்டுக்குப் போய் ஓய்வெடுங்க” என்றார்.  அவர் வேறொரு இடத்துக்குச் செல்லவேண்டிய வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு ஆட்டோ பிடித்துச் சென்றுவிட்டார். எனக்கு ஆட்டோவில் செல்லவும் மனமில்லை. பேருந்தில் செல்லவும் மனம் வரவில்லை. நானாகவே இழுத்துப் போட்டுக்கொண்ட குழப்பத்தில் தலை வெடித்தது. வீட்டுக்கு நடந்தே போகலாம் என்று தோன்றியது. அப்படியே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

அவர்களுடைய உரையாடலின் சாராம்சமான கருணைமரணம் என்னும் கருத்தோடு உடன்பட எனக்கு மனம் வரவில்லை. நம்மை அண்டியிருக்கும் ஓர் உயிர் தானாகவே பிரியும்வரையில் அதைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நம்முடைய கடமை என்பதே என் எண்ணம். அவர்கள் நம் மீது வைத்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் ஈடாக, அதை மட்டுமே நாம் திருப்பித் தரவியலும். சிற்சில சமயங்களில் சமயசந்தர்ப்பங்களின் விளைவாக பாதுகாப்பதும் பரமாமரிப்பதும் நம் சக்திக்கு அப்பாற்பட்டவையாக அமைந்துவிட நேரிடலாம். சிலருடைய வாழ்க்கையில் அப்படிப்பட்ட தவிர்க்கமுடியாத நெருக்கடித்தருணங்கள் வரலாம். அப்படிப்பட்ட நேரங்களில் கூட, நம் கையறுநிலையை அவர்கள் முழுமையாக உணரும் வகையில் அவர்கள் அருகில் நின்றால் கூட போதும். நாம் அவர்களுக்கு அருகில் நிற்கிறோம் என்னும் நம்பிக்கையை ஊட்டுவதுதான் முக்கியம்.  அந்த நம்பிக்கையைத் தர இயலாமல், அதிலிருந்து விடுபடுவதற்கான அல்லது விடுவிப்பதற்கான வழிமுறைகளை யோசிப்பதையே என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.  அது எனக்குச் சங்கடமாகவே இருக்கிறது.

வீட்டுக்குத் திரும்பி வரும்போது, விலக்கவிலக்க மீண்டும் சேர்ந்துகொள்ள நெருங்கிவரும் பாசியைப்போல அந்த எண்ணங்களே மீண்டும் மீண்டும் எனக்குள் பொங்கிக்கொண்டிருந்தன. “அந்த இடத்தில் நீ இருந்தால் என்ன செய்வாய்?” என்றொரு கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அது ஒரு சிக்கலான கேள்விதான். அடுத்தவருக்குச் சொல்வது எளிது. அதை நாம் நம் வாழ்வில் எந்த அளவுக்குப் பின்பற்றுவோம் என்னும் கேள்வி எனக்குள் எழாமல் இல்லை.

ஆழமாகவே அதைப்பற்றி யோசித்தேன். சில கணங்களுக்குப் பிறகு மனம் தெளிந்து வந்தது. உடல்நலம் குன்றிய நிலையில் நமக்கு வேண்டிய ஒருவரை ஒரு மருத்துவரை நாடி அழைத்துச் செல்வது எதற்காக? அவரை அந்த நோயின் கடுமையிலிருந்து மீட்டு காப்பாற்றுவதற்காக அல்லவா? ஒருவேளை, அந்த மருத்துவர் தன் மருத்துவம் பாதிக்கப்பட்டவரைப் பிழைக்கவைக்க உதவவில்லை என கைவிரித்தால், அவரை அழைத்துக்கொண்டு வந்து நம்மோடு வைத்துக்கொள்ளலாம்.  மருத்துவத்தால் கைவிடப்பட்டவர் அதிகபட்சமாக எத்தனை நாள் உயிர்வாழ்ந்துவிடப் போகிறார்? அந்த அதிகபட்ச நாட்களை நாம் அவருக்காக ஒதுக்கிக் கொடுத்து, பிரிந்து செல்லும் அந்த உயிருக்கு விடைகொடுக்கலாம். குறைந்தபட்சமாக, நாம் நம் வாழ்க்கையை குற்ற உணர்வில்லாமல் வாழ அது உதவும். இன்றைய வாழ்க்கைச்சூழல் இத்தகு பரிசோதனை முயற்சிகளுக்கு எந்த அளவுக்கு உகந்ததாக இருக்கும் என்று சொல்லத் தெரியவில்லை. இருப்பினும், அந்த முயற்சியை மேற்கொள்ளாமலேயே அதைத் தவிர்க்க நினைப்பது பிழை.

இப்படி ஏதேதோ எண்ணங்கள் அலைமோத வீட்டை நோக்கி நடந்தேன். இத்தகு கருணைமரணம் தொடர்பான சிறுகதையொன்றை நாலைந்து நாட்கள் முன்புதான் படித்திருந்தேன். ஒருவேளை  என் தீவிரமான எண்ண ஓட்டங்களுக்கெல்லாம் அந்தக் கதைதான் காரணமோ என்றுகூடத் தோன்றியது. அந்தச் சிறுகதை திடீரென நினைவுக்கு வந்து விட்டது. அந்தச் சிறுகதையின் பெயர் ’கொலைக்கு சாட்சி’. எழுதியவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை எழுத்தாளரான நோயல் நடேசன்.

பாரிசில் ஒரு ரயில் பயணத்தில் அச்சிறுகதை தொடங்குகிறது. ஒரு கணவனும் மனைவியும் அந்த ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். ஒரு பயணம் நிமித்தமாக பாரிஸ் வந்தவர்கள். அதனால் சில மணி நேரங்கள் பயணத்தொலைவில் உள்ள லூர்து நகரத்துக்குச் சென்று, அங்குள்ள கத்தோலிக்கத் தேவாலயத்தில் லூர்து மாதாவைப் பிரார்த்தனை செய்ய நினைத்து அந்த ரயில் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். 

அவர்கள் பயணம் செய்த பெட்டியில் அவர்களைத் தவிர வேறொரு  வயதான தம்பதியினர் வேறொரு ஜன்னலோர இருக்கைகளில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பாரீஸ் நகரத்துக்காரர்கள்.    அந்த அம்மையார் பெயர் வெரோனிக்கா. பாரிஸில் வசிக்கும் ஆங்கிலப் பேராசிரியர். அவர் கணவர் விழித்திருக்கவில்லை. ஒருவித மயக்கத்தில் விழிமூடி மனைவியின் தோளில் சாய்ந்திருக்கிறார். அவர்களும் லூர்து மாதா தேவாலயத்துக்குத்தான் பயணம் மேற்கொண்டிருப்பதாக உரையாடல் வழியாகத் தெரிய வருகிறது.

இரு தம்பதியினருக்கும் ஒரே நோக்கம் என்பதால், அவர்கள் உரையாடலில் தானாகவே ஒரு நெருக்கம் உருவாகிவிடுகிறது. அந்த நெருக்கத்தின் விளைவாகவோ அல்லது தனக்கு ஒரு வடிகால் வேண்டும் என்ற ஆழ்மன உந்துதலாலோ, வெரோனிக்கா தொடர்ந்து உரையாடும் மனநிலையில் இருக்கிறார்.

தன் கணவருக்கு சர்க்கரைநோய் இருப்பதாகத் தெரிவிக்கிறார். தனக்கும் இருப்பதாகத் தெரிவிக்கிறார் ஆஸ்திரேலியாக்காரர். அது ஒரு உலகப்பொது நோய், அதைப்பற்றி கவலை எதுவும் வேண்டாம் என்று தெரியப்படுத்துவதற்காக, நகைச்சுவை உணர்வோடு அதைச் சொல்கிறார். வெரோனிக்கா அதைத் தொடர்ந்து அவருக்கு வலிப்பு நோயும் இருக்கிறது என்கிறார். அது சாதாரண வலிப்புநோய் இல்லை. வலிப்பு வருவதற்கு முன்பு அசாதரணமான கோபம் வந்துவிடும். அப்போது கண்முன்னால் இருப்பதை எடுத்து அடிப்பார். அவளைத் தாக்குவார். கீழே தள்ளுவார். அரைமணி நேரமாவது நீடிக்கும் அந்நோய் அவரைப் பாடாய்ப் படுத்திவிட்டு ஓயும். மருத்துவப் பரிசோதனையில் மூளையில் அறுவை சிகிச்சையால் நீக்கமுடியாத இடத்தில் கட்டியொன்று இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். முதலில் சிற்சில நாட்களுக்கு ஒருமுறை வந்த வலிப்புநோய் சமீப காலங்களில் தினமும் வரத் தொடங்கிவிட்டது.

அவரால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் அடிக்கடி மயக்க ஊசி போட்டு  தூக்கத்திலேயே வைத்திருக்க வேண்டியிருக்கிறது. பிள்ளைகள் அனைவரும் கூடி, அவரை தனியாக வைத்துப் பார்த்துக்கொள்வது இனி இயலாத காரியமென்றும் எங்காவது பாதுகாப்பு நிலையத்தில் சேர்ப்பதுதான் நல்லது என்று சொல்லிவிட்டார்கள். மாற்று வழி எதுவும் தெரியாததால், அந்த யோசனையை அவரும் ஏற்றுக்கொண்டார்.  அவரைச் சேர்க்கவேண்டிய ஒரு பாதுகாப்பு நிலையத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டனர். அங்கு செல்லும் முன்பாக, லூர்து மாதாவைத் தரிசனம் செய்துவிட்டு செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காகவே அப்பயணம் என்று அவள் தெரிவிக்கிறாள். பிள்ளைகள் எடுத்திருக்கும் முடிவு குறித்து அவளுக்கு விமர்சனம் இருக்கிறது. ஆயினும் அதைத் தடுத்துவிட்டு மாற்றுவழி சொல்ல தனக்குத் தெரியாததால்  தரிசனத்துக்குப் போய்க்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார் ஆஸ்திரேலியாக்காரர்.

அடுத்து அரைமணி நேரத்தில் லூர்து நகர் நிறுத்தம் வரவிருக்கிறது என்கிற நிலையில் வெர்னிக்கோவின் தோள்மீது சரிந்திருக்கும் கணவரின் நிலையில் சற்றே ஓர் அசைவு தென்படுகிறது. அவர் எழக்கூடும் என்று தோன்றுகிறது. எழுந்துவிட்டால் அவர் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடும் என்னும் பதற்றம் வெர்னிகோவின் முகத்தில் தெரிகிறது. அவர் நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் ஆஸ்திரேலியாக்காரர். “இது அவருக்கு இன்சுலின் ஊசி போடும் நேரம்” என்று சொன்னபடி கைவசம் இருந்த பெட்டியை எடுத்து ஏற்கனவே மயக்கத்தில் இருப்பவருக்கு இன்சுலின் ஊசியைச் செலுத்துகிறார் வெர்னிகோ.

இன்சுலின் ஊசியின் விளைவாக குளுக்கோஸ் அளவு குறையத் தொடங்கும் என்பதால், அந்த ஊசியை அடுத்து உடனே உணவுண்ண வேண்டும் என்பது உலக விதி. உறக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு ஊசியைப் போட்டால், உணவை எப்படிக் கொடுக்கமுடியும் என்று புரியாமல் திகைத்து விழிக்கிறார் ஆஸ்திரேலியாக்காரர். அவருடைய எண்ண ஓட்டத்தை உணர்ந்ததுபோல வெர்னிக்கோ உறங்குபவருக்கு உணவு எப்படி கொடுக்கமுடியும், லூர்து நகரத்துக்குச் சென்ற பிறகுதான் கொடுக்கவேண்டும் என்று தனக்குத்தானே பேசிக்கொள்கிறார். ஆஸ்திரேலியாக்காரருக்கு ஏதாவது விபரீதமாக நிகழ்ந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது. ரயிலுக்குள்ளேயே உணவகத்துக்குச் சென்று ஏதாவது வாங்கி வரட்டுமா என்று அவசரமாகக் கேட்கிறார் அவர். அதற்கு அவசியம் இல்லை என்று மறுத்துவிடுகிறார் வெர்னிகோ. அதற்குள் அவருடைய தோள்மீது கிடந்த அவருடைய கை தளர்ந்து தொங்கிவிடுகிறது.

ஆஸ்திரேலியாக்காரர் பதற்றத்துடன் சில இருக்கைகள் தள்ளி வேடிக்கை பார்த்தபடி இருக்கும் தன் மனைவியை அழைக்கிறார். அவர் மருத்துவர். நெருங்கி வந்து நாடி பிடித்துப் பார்க்கிறார். பிறகு திகைப்புடன்  நாடி துடிக்கவில்லை என்று தெரிவிக்கிறார். அதற்குள் அங்கே ரயில்வே அதிகாரிகள் வந்துவிடுகிறார்கள். ரயில் மருத்துவரும் வந்துவிடுகிறார். செயலிழந்துபோன இதயத்தை ஒருவராலும் துடிக்கவைக்கமுடியவில்லை. ரயில் லூர்து நகரத்தை அடைந்ததுமே அவரை பாதுகாப்புடன் கீழே இறக்குகின்றனர். அவசரமாக அவரை ஸ்ட்ரெச்சரில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். அனைத்தையும் யாருக்கோ நிகழ்வதுபோல பார்த்துக்கொண்டிருக்கிறார் வெரோனிக்கா. ஸ்ட்ரெச்சர் பின்னால் செல்லத் தொடங்கியவர் ஒருகணம் நின்று ஆஸ்திரேலியாக்காரரை நோக்கி ஓடோடி வந்து தன் கணவரை தான் மிகவும் நேசிப்பதாகத் தெரியப்படுத்திவிட்டு திரும்பிச் செல்கிறார்.

அச்சிறுகதையை வாசித்துவிட்டு வெகுநேரம் திகைத்து அமர்ந்துவிட்டேன். ஒரு செகாவ் கதையைப் படித்ததுபோல இருந்தது. தந்தையை பாதுகாப்பகத்தில் சேர்த்துவிடலாம் என்று பிள்ளைகள் வழங்கிய ஆலோசனையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவர்கள் பேச்சுக்குக் கட்டுப்பட்டு ரயில் பயணத்தை மேற்கொண்டுவிடுகிறாள். ஆனால் அவளுக்குள் எழும் குற்ற உணர்வை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. நன்மையிலும் தீமையிலும் இளமையிலும் முதுமையிலும் ஒன்றாக இருப்போம் என தெய்வத்தின் சாட்சியாக எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக, கடைசி நேரத்தில் அவரைக் கைகழுவுவதை அவள் ஆழ்மனம் ஏற்கவில்லை. அதைவிட, தானே தன் கணவருக்கு உலகத் துன்பத்திலிருந்து விடுதலையை வழங்கிவிட முடிவெடுக்கிறாள். தன் கணவர் மீது கொண்ட காதலாலும் கருணையாலும் அந்த முடிவை எடுக்கிறாள். ஓர் இன்சுலின் ஊசி அவருடைய கதையை முடித்துவைக்கிறது. 

ஓர் உயிரைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே கருணையின் காரணமாக அவருடைய உயிரைப் போக்கி விடுதலை வழங்கும் வாழ்க்கைத் தருணங்கள் நெஞ்சைக் கனக்கவைக்கின்றன. நீல பத்மனாபன் தன் தலைமுறைகள் நாவலில் ஒரு நாட்டுப்புறக்கதையைப் பயன்படுத்தியிருப்பார். அரசன் பார்வையில் தன் மகள்கள் பட்டுவிடக்கூடாது என்பதற்காக பெற்றோர்களே அவர்களைக் கொன்றுவிட்டு, இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடிவிடுவதை அக்கதையில் பார்க்கலாம். அதையெல்லாம் கூட ஏதோ ஒரு காலத்தில் கட்டிச் சொல்லப்பட்ட கதை என்று நினைத்து ஏற்றுக்கொள்ளலாம்.  ஆனால் இன்றைய எதார்த்த உலகில், சொந்தப் பிள்ளைகளை, தாயை, தந்தையை, கணவனை, மனைவியை, முதியோர்களை பாதுகாக்க முடியாத அவலமானொதொரு சூழலில் மரணத்தைத் தழுவவைக்கும் தகவல்களை கதைகளாகவும் செய்திக்கட்டுரைகளாகவும் அடிக்கடி படிக்க நேர்கிறது. அப்படிப்பட்ட தருணங்களிலெல்லாம் நெஞ்சில் ஒரு திகைப்பு பரவி, வெறுமையில் நிற்பதுபோல ஆகிவிடுகிறது. சிறுகதையாசிரியர் நோயல் நடேசனின் சிறுகதையைப் படித்தபோது, அப்படித்தான் திகைத்து செயலிழந்து நின்றுவிட்டேன்.

கொரானா காலத்தில் யாவரும் என்னும் இணையதளத்தில் படித்த சிறுகதையிலும் இப்படியொரு கருணைமரணம் சித்தரிக்கப்பட்டிருந்ததை நினைத்துக்கொண்டேன். அக்கதையை எழுதியவர் தனா. அடிப்படையில் அவர் ஒரு திரைப்பட இயக்குநர். படைவீரன் என்னும் பெயரில் ஒரு திரைப்படத்தை ஏற்கனவே இயக்கியிருக்கிறார். கதையின் தலைப்பு வில்லுவண்டி.  வயது முதிர்ந்த செந்தட்டிக்கிழவன் - ஆவடையம்மாள் இணையருடைய வாழ்க்கையின் இறுதிப்பகுதியைக் களமாகக் கொண்டது அச்சிறுகதை. இறுதிப்பகுதி கூட அல்ல. இறுதிநாள் என்றே சொல்லவேண்டும். வயதான காலத்தில் இருவரும் தனியாக வாழ்கிறார்கள். இவர்களுடைய மகன் பெரியசாமி மனைவியோடு வேறு ஊரில் வசிக்கிறான். 

கதை நிகழும் நாளன்று அவன் இரு சக்கரவாகனத்தில் அந்த வீட்டுக்கு வருகிறான். வண்டியைவிட்டு இறங்காமலேயே வீட்டு வாசலில் நின்றபடி ஹாரன் அடித்து கிழவனை அழைத்து ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டுப் புறப்படுகிறான். ஆவடையம்மாள் அவனைப் பார்க்கும் ஆவலில் உள்ளிருந்தபடியே அழைக்கிறாள். அவனோ, ஒரு திருமணத்துக்குச் செல்வதாகவும் திரும்பி வரும்போது பார்ப்பதாகவும் சொல்கிறான்.  ”ஆஸ்பத்திரிக்கு போகணுங்கறா” என்று கிழவர் சொல்வதை அவன் பொருட்படுத்தவே இல்லை. “இப்பதான ஒரு வாரத்துக்கு முன்னாலதான போனோம். மறுபடியும் எதுக்கு?” என்று எரிச்சலோடு கேட்டுவிட்டு செல்கிறான்.

ஆஸ்பத்திரிக்கு ஆவடையம்மாளை அழைத்துச் செல்லவேண்டும். அவளுக்கு உடல்சார்ந்த பிரச்சினை இருக்கிறது. சிறுநீர் கழிப்பதும் மலம் கழிப்பதும் அவள் கட்டுப்பாட்டை மீறிய செயல்களாகிவிடுகின்றன. கழிவுகள் தன்னிச்சையாக வெளியேறுவதை முதலில் நிறுத்தவேண்டும். அதற்கு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும்.

கிழவியை ஒரு குழந்தையைப்போல பரிவோடு பார்த்துக்கொள்கிறார் கிழவர். சிறுநீர் கழிக்கவும் மலம் கழிக்கவும் அவர்தான் அவளை கைத்தாங்கலாகப் பிடித்து எழவைத்து வெளியே அழைத்துச் செல்கிறார். கட்டுப்பாட்டை மீறி தன் ஆடைகளையே அவள் நனைத்துக்கொள்ளும் தருணங்களில் சங்கடமாக நினைக்காமல் அவளுடைய ஈரத்துணிகளை அகற்றுவதிலிருந்து, அவளுடைய உடலைத் தூய்மை செய்வது, புதிய துணி மாற்றுவது, பழைய துணிகளை அலசி உலரப்போடுவது என எல்லா வேலைகளையும் அவரே பார்த்துக்கொள்கிறார்.

அவர்களுடைய இளமைப்பருவத்துத் திருமணம் ஒரு பெரிய சாகசத்துக்கு நிகரானது. செந்தட்டி இளமையில் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பறிகொடுத்து ஊர்க்காளையாக திரிந்துகொண்டிருந்தார். அவரிடம் அப்போது ஓர் அழகான வில்லுவண்டி இருந்தது. அழகான காளைகளை அதில் பூட்டி பெருமையுடன் கிராமம் முழுதும் சுற்றி மினுக்கிக்கொண்டு திரிந்தார். ஒருநாள் பங்காளி ஒருவனுக்குப் பெண் பார்ப்பதற்காக, மாப்பிள்ளைக்குத் துணையாளாக வில்லுவண்டியோடு போகிறார். அவன் மணந்துகொள்ளவிருந்த இளம்பெண் வெள்ளைவெளேரென அழகாக இருப்பதைப் பார்த்துவிட்டு அவரே அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.   தன் விருப்பத்தை அக்கணமே ஊரார் முன்னிலையில் அந்தப் பெண்ணிடமே தெரிவிக்கிறார். பெண்ணின் பெற்றோருக்கும் ஊராருக்கும் அது பிடிக்கவே இல்லை. அவர்கள் அவரை கட்டாயப்படுத்தி வெளியேற்றுகின்றனர். ஆனால் அந்தப் பெண்ணுக்கு அவர் மீது விருப்பம் பிறந்துவிடுகிறது. வாசலில் நின்ற வில்லுவண்டியின் மிடுக்கு அவளை வசப்படுத்திவிடுகிறது. பெற்றோரின் தடையை மீறி அவரைத் திருமணம் செய்துகொள்வதற்குச் சம்மதம் என்பதற்கு அடையாளமாக அவருடைய வில்லுவண்டியில் ஏறி அமர்ந்துவிடுகிறாள். இளம்பருவத்தில் எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி தன்னை நம்பி வண்டியில் ஏறி அமர்ந்த அவளை கிழப்பருவம் எய்தி உடல்பிரச்சினையால் வேதனைப்படும் நாள் வரைக்கும் தன் நெஞ்சிலேந்தித் தாங்குகிறார் செந்தட்டி.

அவரால் தாங்கமுடியாத அளவுக்கு ஒரு நாள் அமைந்துவிடுகிறது. அந்தச் சிறுகதையே அன்றுதான் நிகழ்கிறது. அவரிடம் பணம் எதுவும் கையிருப்பில்லை. செல்வம் என்று சொல்லத்தக்க எதுவும் இல்லை. வில்லுவண்டிக் கட்டைகளை உடைத்து உடைத்து அடுப்பெரிக்கப் பயன்படுத்திவிடுகிறார். இன்னும் பயன்படுத்தாத ஒரே ஒரு சக்கரம் மட்டும் சுவரோரமா விழுந்து கிடக்கிறது. ஏதோ ஒரு திட்டத்துடன் அதை உருட்டி எடுத்துச் சென்று குயவர்களைச் சந்தித்து விற்பனை செய்துவிடுகிறார்.

மருத்துவமனையிலிருந்து சின்னமனூருக்குத் திரும்பி வரும் வேளையில் பேருந்தில் பக்கத்தில் அமர்ந்துவரும் கிழவி தன்னுணர்வின்றி இருக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறாள். அந்தக் கோலத்தில், பயணத்தைத் தொடரமுடியாது என்பதை உணர்ந்துகொள்கிறார் கிழவர். அதனால் பேருந்து வீரபாண்டி ஆற்றுப்பாலத்தைத் தாண்டும்போது கெளமாரி அம்மன் கோவில் நிறுத்தத்தில் கிழவியை ஆதரவோடு அழைத்துக்கொண்டு இறங்கிவிடுகிறார். அந்த இடத்தில் என்ன செய்வது என்றே அவருக்குப் புரியவில்லை.

ஒருகணம் அங்கிருக்கும் கோவிலைப் பார்க்கிறார். தன்னை நம்பி வில்லுவண்டியில் ஏறி உட்கார்ந்துகொண்டு வந்தவளுக்கு அந்தக் கோவிலில்தான் இறைவன் சாட்சியாக அவர் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார். பழைய நினைவுகளின் மனபாரத்தோடு அவளுடைய ஆடைகளைத் தூய்மை செய்வதற்காக அருகில் பாலத்துக்குக் கீழே ஓடும் வீரபாண்டி ஆற்றங்கரையை நோக்கி அவளை கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறாள். கரையோரமாக ஒரு கல்லின் அருகில் அவளை நிறுத்திவிட்டு பொறுமையாக அவளைத் தூய்மை செய்கிறார். எப்படியெல்லாம் இருந்தவள் இப்படி நிற்கிறாளே என அவர் மனம் ஆற்றாமையில் தவிக்கிறது. அழுகை பொங்கிப்பொங்கி வருகிறது. “ஒரு டீ குடிக்கிறியா?” என்று அவளிடம் கேட்கிறார். அவள் தனக்குத் தேவையில்லை என்று சொல்கிறாள். “நீங்க குடியுங்க” என்று அனுப்பி வைக்கிறாள். அவர் அவளை இறுதியாக ஒருமுறை ஏறிட்டுப் பார்க்கிறார். பிறகு “தாங்கமுடியலைம்மா” என்று குமுறி குனிந்து அழுகிறார். மறுகணம் எழுந்து திரும்பிப் பார்க்காமல் சாலையை நோக்கி விறுவிறுவென நடக்கத் தொடங்குகிறார்.

கூவி அழைத்து அவரை நிறுத்த மனமின்றி கிழவி மெளனமுடன் அவர் செல்வதையே வெகுநேரம் பார்க்கிறாள். நிறுத்தத்தில் நின்றிருக்கும் ஏதோ ஒரு பேருந்தில் அவர் ஏறிச் செல்வதையும் பார்க்கிறாள். அவளுக்கும் மனம் விம்முகிறது. அமைதியாக எழுந்து பலவீனமான கால்களை மெல்ல மெல்ல நிலத்தில் ஊன்றி ஆற்றை நோக்கி நடக்கத் தொடங்குகிறாள். தன் வாழ்க்கையை எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி தன் விருப்பத்தோடு அமைத்துக்கொண்ட ஆவடையம்மாள் தன் வாழ்வையும் தான் விரும்பிய வகையிலேயே முடித்துக்கொள்கிறாள். தன் துணைவன் மீது கொண்ட கருணையா, அல்லது தன் மீது தானே கொண்ட கருணையா, எது அவளை அந்த முடிவை நோக்கி உந்தியிருக்கும் என்பது பிரித்தறிய முடியாத பெரும்புதிராகவே நிற்கிறது.

இப்படியெல்லாம் எதைஎதையோ யோசித்தபடி நடந்துகொண்டிருந்தபோது, இத்தகு சிறுகதைகளுக்கெல்லாம் முன்னோடியான ஒரு சிறுகதையும் நினைவுக்கு வந்துவிட்டது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சிறுகதை. அது வண்ணநிலவன் எழுதிய எஸ்தர்.

ஒரு தெற்கத்திக் கிராமமொன்றில் ஒரு பெரிய கிறித்துவக்குடும்பம். மரியதாஸ் குடும்பத்தலைவர். அவர் அம்மா அவரோடு இருக்கிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். திருமணமானவர்கள். மூத்தவனுக்கு நான்கு பிள்ளைகள். மூன்று பெண்கள். ஒரு பையன். சின்னவனுக்கு இரண்டு பையன்கள். அவருக்கு ஒன்றுவிட்ட உறவில் தங்கை முறையாகவேண்டிய ஒரு பெண்ணும் அவருடைய குடும்பத்தில் ஓர் உறுப்பினராக வாழ்கிறாள். அவள் பெயர் எஸ்தர். அவளுக்குக் குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை. கணவன் வீட்டை விட்டு வெளியேறி அண்ணன் முறைகொண்ட மரியதாஸின் குடும்பத்துடன் ஒட்டிக்கொள்கிறாள். எல்லோரோடும் அன்போடு இருக்கிறாள். அந்தக் குடும்பத்துக்காகவே உழைக்கிறாள். காட்டுவேலைக்கும் மாடுகளைப் பராமரிக்கும் வேலைக்கும் உதவியாக இருக்கும் ஈசாக்கு என்பவனும் அக்குடும்பத்தில் ஒருவனாகவே உழைக்கிறான்.

மரியதாஸும் அவர் மனைவியும் இறந்த பிறகு அக்குடும்பத்தைத் தாங்கும் தூணாகவே மாறிவிடுகிறாள் எஸ்தர் சித்தி. வீடு, நிலம், தொழுவம் எல்லாவற்றையும் அவள் கருத்தோடு பார்த்துக்கொள்கிறாள். எஸ்தர் சித்தி குடும்பத்தின் மையமாகிவிடுகிறாள். அவள் சொன்னால் மறுபேச்சின்றி கேட்கிற அளவுக்கு அவர்கள் அனைவரும் அவள்மீது பாசம் கொண்டவராக இருக்கிறார்கள்.

எதிர்பாராத விதமாக, அந்த வட்டாரம் பஞ்சத்தால் பாதிக்கப்படுகிறது. மழை இல்லை. விளைச்சல் இல்லை. நிலத்தில் ஈரமே இல்லை. ஊர் மக்கள் ஒவ்வொருவராக வெளியேறியபடி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எல்லோரும் வெளியேறிவிட, அங்கே எஸ்தர் குடும்பம் மட்டுமே ஏதோ நம்பிக்கையோடு தங்கியிருக்கிறது. ஊரில் ஒரு கடை கூட இல்லை. வீட்டில் ஒரே ஒரு நெருப்புப்பெட்டி மட்டும் இருக்கிறது. அந்தக் குச்சிகள் தீரும் வரையில் மட்டுமே அடுப்பெரிக்க முடியும். அதன் கடைசிக் குச்சிக்குப் பிறகு நெருப்புக்கு வழியில்லை. காட்டில் அலைந்து ஈசாக்கு கொண்டுவந்து போடும் சுள்ளிகளை தீக்கங்கு அணையாமல் தக்கவைத்துக்கொண்டிருக்கும் கருவிகளாக மாற்றி வைத்துக்கொண்டு பொழுதுகளைச் சமாளிக்கிறாள் எஸ்தர். அப்படிப்பட்ட சூழலில் தன் பீடியைப் பற்ற வைக்க ஒருநாள் ஒரு குச்சியை எடுத்துவிடுகிறான் டேவிட். அது குடும்பத்தில் ஒரு பெரிய மெளனமோதலையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிடுகின்றன. எப்படியோ ஒரு நீண்ட அழுகைக்குப் பிறகு அனைவரும் ஒன்றாகின்றனர்.  

இனி ஒருநாள் கூட தாங்கமுடியாது என்னும் சூழலில் எஸ்தர் குடும்பத்தோடு ஊரைவிட்டுப் புறப்பட்டுச் சென்று எங்காவது வாய்ப்புள்ள இடத்தில் தங்கி, ஏதேனும் வேலை செய்து பிழைக்கலாம் என்று தெரிவிக்கிறாள். எல்லோரும் அவள் முடிவுக்கு உடன்படுகிறார்கள். நடமாட முடியாத பாட்டியை எப்படி அழைத்துச் செல்வது என்பதைத்தான் அவர்களால் தீர்மானிக்கமுடியவில்லை. அழைத்துச் சென்றால், போகிற இடங்களில் எல்லாம் அவள் பெருஞ்சுமையாக அமையக்கூடும் என்னும் எண்ணமும் எழாமல் இல்லை. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, பாட்டியையும் ஈசாக்குவையும் அங்கேயே விட்டுச் செல்வது என்று ஒரு தீர்மானத்துக்கு முதலில் வருகிறார்கள்.

அப்போதும் எஸ்தரால் அதை உறுதியான முடிவாக அறிவிக்க இயலவில்லை. ஒவ்வொரு கணமும் தோன்றும் யோசனைகளும் சுய மதிப்பீடுகளும் அவளை அலைக்கழித்தபடி இருக்கின்றன. எந்த அளவுக்கு எஸ்தர் அக்குடும்பத்துக்காக பாடுபட்டிருக்கிறாளோ, அதே அளவுக்கு ஈசாக்கும் பாடுபட்டிருக்கிறான். எஸ்தரைப்போலவே அவனும் அக்குடும்பத்தின் மீது உள்ளார்ந்த பற்றும் பாசமும் கொண்டவன். குடும்பத்துக்கு அந்நியன் என்பதாலேயே அவனை வேற்று ஆளாகக் கருதுவது பிழை. இப்படியெல்லாம் அவளுக்குத் தோன்றியிருக்கக்கூடும். அதனால், பாட்டியைத் தவிர அனைவரும் சேர்ந்தே புறப்பட்டுச் செல்லலாம் என்று முடிவெடுக்கிறாள்.

புறப்பாடு பற்றிய ஆலோசனைகளையும் குழப்பங்களையும் விவரித்த வண்ணநிலவன் அன்று நள்ளிரவைத் தாண்டிய வேளையில் பாட்டிக்கு அருகில் சென்று எஸ்தர் படுத்துக்கொண்டாள் என்ற குறிப்போடு கிட்டத்தட்ட கதையின் முடிவுப்பகுதிக்கு வந்துவிடுகிறார். அதற்குப் பிறகு கல்லறைத்தோட்டத்துக்கு பாட்டியைக் கொண்டு செல்வதற்காக ஒரு பழைய சவப்பெட்டியை குறைந்த விலைக்கு வாங்கிவந்த தகவலையும் பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலைகுத்தி நின்ற கோலம் எஸ்தரின் நினைவில் அடிக்கடி மோதித் துன்புறுத்தும் தகவலையும் கதை தெரிவிக்கிறது.

எஸ்தர் என்ன செய்திருக்கக்கூடும் என்பதை விரிவாகக் காட்டவேண்டியதில்லை. என்ன நிகழப் போகிறது என்பதை விரிவான ஆலோசனைச் சித்தரிப்புகள் வழியாக முன்வைத்த பிறகு, அதற்கான தேவையே எழவில்லை.

வீட்டுக்குத் திரும்பி குளித்துவிட்டு என் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினேன். ஆனால் கருணைமரணம் தொடர்பான நினைவுகள் மேலெழுந்து என்னை இயங்கவிடாமல் தடுத்தன.

கைக்கெட்டும் தொலைவில் மேசை மீது வைத்திருந்த கைப்பேசி  ஒலித்தது. திரும்பிப் பார்த்தேன். நண்பரின் அழைப்பு. அவருடைய பெயர் கைப்பேசியின் திரையில் ஒளிர்ந்தபடி இருந்தது. எடுத்து “வணக்கம், சொல்லுங்க” என்றேன். “வீட்டுக்குப் போய் சேர்ந்துட்டீங்களான்னு தெரிஞ்சிக்கலாம்னுதான் கூப்ட்டேன்” என்றார். “இப்பதான் வந்து சேர்ந்தேன்” என்றேன்.

“என்ன, இன்னும் அதே யோசனைதான் மனசுல ஓடுதா? இல்லை, அதுலேர்ந்து வெளிய வந்துட்டீங்களா?” என்று கேட்டார்.

”வெளியே வந்துடணும்னுதான் நானும் எதைஎதையோ யோசிச்சிப் பார்க்கறேன். ஆனாலும் மனசு சுத்திச்சுத்தி அந்த எடத்துக்குத்தான் போகுது”

“தெரியும் தெரியும். உங்க சுபாவத்தை பத்தி எனக்குத் தெரியாதா? அதுக்காகத்தான் எனக்குத் தெரிஞ்ச ரெண்டு வார்த்தை சொல்லலாம்னு கூப்ட்டேன்”

“என்ன சொல்லுங்க?”

“முப்பது நாப்பது வருஷம் ஒன்னா இருந்த ஒருத்தவங்களுடைய முடிவு இப்படி அமையறத நினைச்சா கூட இருந்தவங்களுக்கு வருத்தமாத்தான் இருக்கும்.  வருத்தமே இல்லாம முடிவெடுக்கிறாங்கன்னு நாம நினைச்சிக்கக் கூடாது. ஒரு வெளி ஆளா நமக்கு உருவாகிற வருத்தம் அவுங்களுக்கு இருக்காதுன்னு நெனச்சிட்டீங்களா? நம்மைவிட நூறு மடங்கு அவுங்களுக்கும் வருத்தம் இருக்கும். அதையெல்லாம் கடந்துதான் அந்த முடிவை அவுங்க எடுக்கிறாங்க. அப்படி எடுக்கவேண்டிய ஒரு நெருக்கடி இந்தக் காலத்துல இருக்குது. யாரையும் இதுல குற்றம் சொல்லமுடியாது. புரியுதுங்களா?”

“புரியுது, புரியுது, சொல்லுங்க”

“அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை திருக்குறள் ஞாபகம் இருக்குதா உங்களுக்கு? மறம்ங்கறத நம்ம ஆளுங்க வீரம்னு புரிஞ்சிகிட்டு எதைஎதையோ சொல்லி குழப்பிட்டாங்க. இந்த உலகத்துல எல்லாக் காரியங்களையும் ரெண்டா பிரிச்சிடலாம். அறம் சார்ந்த காரியங்கள் ஒன்னு. அறம் சாராத காரியங்கள் இன்னொன்னு. அன்பு, இரக்கம், கருணை இல்லாம, அறம் சார்ந்த காரியங்களை நம்மால செய்ய முடியாது. அதுதான் அடிப்படை. அது பொதுவா எல்லாரும் புரிஞ்சிக்கமுடியற விஷயம்தான். அறம் இல்லாத சில காரியங்களைக்கூட அன்பின் காரணமாகவும் கருணையின் காரணமாகவும் சில சமயங்கள்ல செய்யவேண்டிய நிலை ஏற்படலாம். இதையும் புரிஞ்சிக்கணும்ங்கறதுதான் அந்தத் திருக்குறள். புரியுதுங்களா?”

“சொல்லுங்க, புரியுது”

”வாழுற காலத்துல ஒரு ஆளுக்கு பல விஷயங்கள் கிஃப்ட்டா கிடைக்குது. சில சமயங்கள்ல வேதனையில்ல மூழ்கியிருக்கிற ஆளுங்களுக்கு மரணம் ஒரு நல்ல கிஃப்ட்தான். அந்த கிஃப்ட்ட கொடுக்கிறதுக்கும் ஒரு கருணை வேணும். அதுல தப்பு கிடையாது. எதையும் நினைச்சி குழப்பிக்காம நிம்மதியா இருங்க. சரியா?”

“சரிப்பா, சரி” என்றபோது என்னை அறியாமல் சிரித்துவிட்டேன். நான் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அவர் பிரித்துப்பிரித்துச் சொன்ன விதம் பிடித்திருந்தது. “சரி, வச்சிடறேன்” என்று சொல்லிவிட்டு இணைப்பிலிருந்து விலகினேன்.

 

( பேசும் புதிய சக்தி – நவம்பர் 2023 )