Home

Sunday 26 November 2023

வண்ணவண்ண முகங்கள்

 

ஒருவருக்கு ஓர் ஊரின் மீது ஈர்ப்பு ஏற்பட அவர் அந்த ஊரில் பிறந்திருக்க வேண்டுமென்றோ, வாழ்ந்திருக்க வேண்டுமென்றோ எந்த அவசியமும் இல்லை. அந்த ஊரோடு அவரை ஏதோ ஒரு விதத்தில் இணைக்கும் ஒரு மாயம் நிகழ்ந்தால் போதும். அந்த ஊருக்கான ஓர் இடத்தை நெஞ்சம் தானாகவே உருவாக்கிக்கொள்ளும்.

குற்றால அருவியில் குளிப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் விடுப்பில் சென்று தங்கிவிட்டுச் செல்பவர்கள் இருக்கிறார்கள். அது ஒருவிதமான ஈர்ப்பு. ஏ.கே.செட்டியார் தான் பயணம் செய்த ஊர்களைப்பற்றிய தகவல்களையெல்லாம் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். அது இன்னொரு விதமான ஈர்ப்பு.

எட்கர் தர்ஸ்டன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தில் பிறந்தவர். அருங்காட்சியகங்கள் மீது அவருக்கு ஆர்வமிருந்தது. பட்டப்படிப்பை படித்து முடித்ததும் இங்கிலாந்தின் ஆட்சியின் கீழே இருந்த சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததும் சென்னைக்கு வந்து சேர்ந்தார். அவர் பணிபுரிந்த காலத்தில் தென்னிந்தியாவில் நிலவிய சாதியமைப்புகளும் மக்கள் கடைபிடிக்கும் வெவ்வேறு விதமான பழக்கவழக்கங்களும் அவருக்குள் ஏதோ ஓர் ஆர்வத்தைத் தூண்ட, அவை தொடர்பான தகவல்களைத் திரட்டுவதிலும் ஆய்வுகளை மேற்கொள்வதிலும் வாழ்நாளைச் செலவழித்தார். ’தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்’ என்னும் தலைப்பில் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெருநூலை எழுதினார். அது மற்றொரு விதமான ஈர்ப்பு.

பணிமாற்றல் காரணமாக மூன்றாண்டுக்கும் குறைவான காலம் மட்டுமே தங்கியிருந்த தருமபுரியின் வரலாற்றை ஓர் ஆய்வாளருக்கே உரிய ஆர்வத்தோடு அலைந்து அலைந்து திரட்டியெடுத்துத் தொகுத்து ‘தருமபுரி மண்ணும் மக்களும்’ என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு நூலை கவிஞர் பழமலய் எழுதியிருக்கிறார். அது முற்றிலும் வேறுவிதமான ஈர்ப்பு.

அதேபோன்ற ஒரு விசித்திர ஈர்ப்பின் விசையால் பட்டு நெசவுக்கும் கலைக்கோவில்களுக்கும் பெயர்போன காஞ்சிபுரம் என்னும் நகரத்தைப்பற்றி ஓர் ஆவணத்தை உருவாக்கியிருக்கிறார் மாயவரத்தைச் சேர்ந்த அக்களூர் இரவி. தொடக்கத்தில் காஞ்சிபுரத்தைப்பற்றி புத்தகம் எழுதும் திட்டம்   மொழிபெயர்ப்பாளரான பட்டு எம்.பூபதியிடம் இருந்திருக்கிறது. ஏதோ சில காரணங்களால் அது நிகழாமல் போய்விட்டது. பூபதியுடன் உரையாடிய தருணங்களில் காஞ்சிபுரம் தொடர்பான செய்திகளால் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்கப்பட்ட இரவி, அந்தத் திட்டத்தைத் தன் திட்டமாக அமைத்துக்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து  காஞ்சிபுரத்துக்குப் பயணம் செய்து, பல முக்கியமான ஆளுமைகளையும் இடங்களையும் பார்த்து தகவல்களைத் திரட்டி காஞ்சிபுரத்துக்கு எழுத்து வடிவிலான ஆவணத்தை உருவாக்கிவிட்டார். நகரத்தைப்பற்றி பிரபலமாக எல்லோருக்கும் தெரிந்த செய்திகளோடு, இதுவரை பெரிய அளவில் பரவலாக தெரியவராத பல செய்திகளைத் தேடித்தேடி அவற்றின் பின்னணி விவரங்களோடு எழுதித் தொகுத்திருக்கிறார் இரவி. இதுபோன்ற தகவல்களால்தான் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.

காஞ்சிபுரம் என்றதும் பொதுவாக எல்லோருக்கும் நினைவு வரக்கூடிய எல்லாத் தகவல்களையும் விரிவான வரலாற்றுப் பின்னணியோடு இரவி முன்வைத்திருக்கும் அத்தியாயங்களை வாசிக்கும்போது நம் மனத்தில் அந்த நகரம் ஒரு கனவைப்போல பேருருக்கொண்டு நிற்பதை உணரமுடிகிறது.  தன்னை வந்து சேர்ந்த ஒரு சிறிய தகவலை முன்வைத்து அவர் நிகழ்த்தும் தேடல் முயற்சிகள்  அனைத்தும் அவருக்கு தக்க பலனைக் கொடுத்திருக்கின்றன. தனக்குக் கிடைத்த தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு வரலாற்றுச் சித்திரத்தை அவர் மீட்டுருவாக்கம் செய்து விடுகிறார்.

திருக்குறளை நாம் அனைவரும் அறிவோம். அதற்கு எழுதப்பட்ட உரைகளில் பரிமேலழகரின் உரையே மிகச்சிறந்த உரை என்பதையும் அறிவோம். ஆனால் அந்தப் பரிமேலழகர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்னும் கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்காது. அருங்காட்சியகக் காப்பாளராகப் பணிபுரியும் நண்பரொருவர் காஞ்சிபுரமே பரிமேலழகரின் பிறந்த ஊர் என்னும் தகவலைத் தெரிவித்த பிறகு, அதற்குத் துணைச்சான்றுகளைத் தேடி இணைத்து ஒரு கட்டுரையை இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் இரவி. இரவியின் அக்கறையையும் ஆர்வத்தையும் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை நல்லதொரு எடுத்துக்காட்டு.

படிக்காசுப்புலவர் எழுதிய தொண்டைமண்டல சதகம் நூலில் பரிமேலழகர் காஞ்சியில் பிறந்தவர் என்பதற்கான உறுதிசெய்யப்பட்ட குறிப்பு இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் இரவி. காஞ்சிபுரம் அருளாளப் பெருமாள் கோவிலில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் பரிமேலழகரின் பெயர் காணப்படுகிறது. கி.பி.1271ஆம் ஆண்டில் ஆட்சி செய்த தெலுங்குச்சோழனான விஜயகோபாலன் என்பவருடைய காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அது. அந்தக் காலகட்டத்தில் உலகளந்த பெருமாள் கோவிலில் பரிமேலழகர் பணிபுரிந்ததற்கான குறிப்பும் கிடைத்திருக்கிறது. ’திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன்’ என்ற அடைமொழியோடு அவர் அக்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறார். இப்படி ஏராளமான சான்றுகளைத் தேடித்தேடி இணைத்து அக்கட்டுரையை எழுதியிருக்கிறார்.

நந்திக்கலம்பகம் பற்றிய ஒரு தகவலை பொருத்தமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இரவி. மூன்றாம் நந்திவர்மன் என்பவன் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த மன்னன். ஆட்சிப்பதவியை அடைய தனக்குப் போட்டியாக இருந்த தன்னுடைய சகோதரர்களை அவன் அறமில்லாத வழியில் கொன்றொழித்தான். உயிர் பிழைத்த ஒரு சிலர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். அவர்களில் ஒரு சகோதரன் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்து கவிஞனாகிறான். அறம் வைத்துப் பாடுவது என்பது ஒரு பாட்டுவகை. அந்த வகைமைப் பாடல்களில் அவன் புலமை பெறுகிறான். பிறகு பிறந்த ஊரான காஞ்சிக்குத் திரும்பி வருகிறான். புலவன் என்னும் தகுதியோடு சகோதரனான மன்னனின் முன் தோன்றுகிறான். தன்னுடைய பாடல்களை அவையில் பாடுவதற்கு அனுமதி கேட்கிறான். கவிஞனாக வந்து நிற்கும் சகோதரனின் தோற்றம் அவனை வியப்பில் ஆழ்த்துகிறது.   தமிழ்ப்பாடல்கள் மீது ஈடுபாட்டின் விளைவாக, மன்னன் அவனுக்குத் தன் பாடல்களை முன்வைக்க அனுமதி  அளிக்கிறான்.

சகோதரன் பாடத் தொடங்குகிறான். அதன் சந்தமும் பொருளும் அவனை மயக்குகின்றன.  பாடல்களின் தமிழின்பத்தில் அவன் மனம் பறிகொடுக்கிறான். அந்த மொழியின்பத்தில் மயங்கி, அடுத்து அடுத்து என எல்லாப் பாடல்களையும் பாடும்படி கவிஞனிடம் சொல்கிறான்.

அந்தப் பாடல்கள் கலம்பகம் என்னும் வகைமை சார்ந்தது. அறம் வைத்துப் பாடப்படும் பாடல்களின் தொகைக்கு கலம்பகம் என்பது பெயர். அதை முழுமையாகக் கேட்பவர்கள் இறந்து விடுவார்கள் என்பது ஒரு நம்பிக்கை. மன்னனின் அரசவையில் உள்ளவர்கள் அந்தப் பாடல்களில் அடங்கியிருக்கும் நோக்கத்தைப் புரிந்துகொள்கிறார்கள். அறம் பொதிந்துள்ள பாடல்களைக் கேட்கவேண்டாம், உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்று மன்னனை எச்சரித்துத் தடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் பாடல்களின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்த மன்னனோ அந்தப் பாடல்களைக் கேட்கவேண்டும் என்னும் மாறா விருப்பத்துடன் இருக்கிறான்.

அவையினரின் வேண்டுகோளைப் பொருட்படுத்தாத மன்னன் ஒரு பந்தலை அமைக்கச் சொல்கிறான். அதில் அமர்ந்தபடியே மீதமுள்ள பாடல்களைப் பாடும்படி கவிஞனைக் கேட்டுக்கொள்கிறான். வஞ்ச எண்ணத்துடன் வந்த கவிஞன் பாடல்களை இசையுடன் பாடத் தொடங்குகிறான். இறுதிப் பாடலைப் பாடி முடித்ததும் பந்தல் தீப்பிடித்து எரிகிறது. மன்னன் அத்தீயில் கருகி உயிர் துறக்கிறான். உடன் பிறந்த சகோதரர்களை வஞ்சித்துக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய மன்னன் தன் தமிழார்வத்தின் காரணமாக வேறொரு விதமான சகோதர சூழ்ச்சிக்கு இரையாகி உயிர் துறக்கிறான். காஞ்சிபுரம் அதன் முதல் சாட்சியாக விளங்குகிறது. இரண்டாவது சாட்சியாக இன்றளவும் நந்திக்கலம்பகம் உயிர்த்திருக்கிறது.

சிறுத்தொண்ட நாயனார் சிவனடியார்களில் முக்கியமானவர். அவர் சிவபக்தராக மாறுவதற்கு முன்னால் அவர் பரஞ்சோதி என்ற பெயராலேயே அறியப்பட்டிருந்தார். காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த மகேந்திரவர்மன் படையில் தளபதியாக பணியாற்றி வந்த வீரர் அவர். ஒருமுறை காஞ்சியைத் தாக்கிய சாளுக்கிய அரசரான புலிகேசியைத் தோல்வியைத் தழுவச் செய்தவர். பகையை முற்றிலும் அழிக்கும் நோக்கத்துடன் புலிகேசி ஆட்சி செய்துவந்த வாதாபி நகரத்துக்கே படைகளைத் திரட்டிச் சென்று தோல்வியுறச் செய்தார். அப்போரில் புலிகேசி மன்னர் இறந்தார். இரண்டு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிர் துறந்தனர். எண்ணற்ற யானைகளும் குதிரைகளும் உயிர்துறந்தன. வெற்றியைத் தன் மன்னனுக்குக் காணிக்கையாக்கிய பரஞ்சோதி,  வெற்றியின் அடையாளமாக வாதாபி நகரத்தில் இருந்த கணபதி சிலையை காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைத்தார்.  ஆனால் குவியல் குவியலாக மரணமுற்றவர்களின் உடல்கள் கிடந்த கோரமான காட்சியைக் கண்டு அவர் மனம் வருந்தினார். இனி எக்காரணத்துக்காகவும் போரிடுவதில்லை என்னும் முடிவை எடுத்தார். தன் தளபதி பதவியைத் துறந்து, பக்தி வழியில் இறங்கினார். சிறுத்தொண்டர் என்னும் பெயருடன் இறைத்தொண்டு செய்யப் புறப்பட்டுச் சென்றார்.   ஒரு படைத்தளபதியை காஞ்சிபுரம் சிவத்தொண்டராக உருமாற்றிவிட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதப்பணிகளுக்காக மெட்ராஸ் மாகாணத்துக்கு வந்த கிறித்துவ மிஷனரிகள் ஆற்றிய கல்விப்பணிகள் மிகவும் முக்கியமானவை. இரவி அந்தத் தகவல்களை செறிவான முறையில் தொகுத்திருக்கிறார். ஆண்டர்சன் என்னும் இளைஞர் ஸ்காட்லாந்திலிருந்து 1837இல் சென்னைக்கு வந்து ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கி தம் சிறுவர்களுக்குக் கல்வியறிவை ஊட்டினார். இரு ஆண்டுகள் கழித்து சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஒரு காலத்தில் தேசிய அளவில் காசியை அடுத்து புகழ்பெற்ற பல்கலைக்கழகம் இயங்கிவந்ததாகச் சொல்லப்படும் காஞ்சிபுரம் கல்விவெளிச்சமின்றி இருளில் மூழ்கியிருந்த காலம் அது. ஆண்டர்சன் தொடங்கிய பள்ளி காஞ்சி மாணவர்களுக்குப் பேருதவியாக அமைந்தது.

பள்ளியிலேயே தங்கிப் படிக்கும் வசதியை முதன்முதலாக ஆண்டர்சனே ஏற்படுத்தினார். பல சாதிகளைச் சேர்ந்தவர்களும் மதங்களைச் சேர்ந்தவர்களும் வரலாற்றில் முதன்முறையாக வேறுபாடுகளை மறந்து ஒரே இடத்தில் தங்கி கல்வி கற்றனர். அடுத்து ஏழாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவதாக ஒரு பள்ளிக்கூடம் பச்சையப்பர் அறக்கட்டளை சார்பாக தொடங்கப்பட்டது. அன்று ஆண்டர்சன் தொடங்கிய பள்ளி இன்னும் விரிவான அளவில் விரிவான வகையில் மாணவமாணவிகளைச் சென்று அடையும் வகையில் 175 ஆண்டுகளையும் கடந்து இன்றளவும் இயங்கி வருகிறது என்னும் செய்தி மிகமுக்கியமானது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறையன்பு ஆட்சியராகப் பணிபுரிந்த காலத்தில் தொடங்கிய நிலவொளிப்பள்ளிகள் ஆற்றிய கல்விச்சேவையைப்பற்றியும் இரவி தனிக்கட்டுரையாகவே எழுதியிருக்கிறார். அப்பள்ளிகள் வழியாகக் கிடைத்த வெளிச்சத்தால் காஞ்சி நகரின் பல குடும்பங்கள் அடுத்த படியை நோக்கி நகர்ந்திருக்கின்றன.

காஞ்சிபுரத்தில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட மற்றொரு முக்கியமான அமைப்பு நாராயணகுரு சேவாஸ்ரமம். 1916இல் தொடங்கிய அமைப்பு இன்றளவும் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது. தொடக்கத்தில் மருத்துவமனையாக செயல்பட்டு மக்கள் நோயைக் குணப்படுத்திய சேவாஸ்ரமம் படிப்படியாக கல்வியை வழங்கும் நிலையமாகவும் பணியாற்றத் தொடங்கியது. ஏழை மாணவர்கள் தங்கிப் பயில்வதற்கான வசதிகளும் அங்கே உள்ளன. இன்று ஏறத்தாழ 3800 மாணவர்களோடும் 150 ஆசிரியர்களோடும் அந்தப் பள்ளி இயங்கி வருகிறது.

மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் மருத்துவப்படிப்பைப் படித்து முடித்துவிட்டு 1917இல் காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவராகப் பணியாற்ற வந்த சீனிவாசன் என்னும் மருத்துவரின் தியாக வரலாறு காஞ்சிபுரத்தின் வரலாற்றோடு இணைத்துத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. அக்காலத்தில் மகப்பேறு மருத்துவராக அவர் ஆற்றிய பணி மகத்தானது.  இரவுபகல் பாராமல் எந்த நேரத்தில் யார் வந்து அழைத்தாலும் அக்கணமே அவர்களோடு சென்று உரிய மருத்துவச் சேவையை அளிப்பதில் கடமைவீரராகப் பணியாற்றியவர் அவர் என்று பெயர் வாங்கியவர். காலரா நோயால் கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்துவிழுந்த காலகட்டத்தில் அவர் ஆற்றிய மருத்துவச்சேவை இன்றளவும் அனைவரும் நினைத்துப் பகிர்ந்துகொள்ளும் ஒரு பேசுபொருளாக உள்ளது.

காந்தியடிகள் மீதும் காங்கிரஸ் மீதும் மிகுந்த பற்றுக்கொண்டவராக இருந்தவர் சீனிவாசன். விடுதலைப்போராட்டத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பதவியைத் துறந்து விட்டார். உப்பு சத்தியாகிரகத்திலும் அந்நிய ஆடைகள் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு ஓராண்டு தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார். 1931இல் ஆறு மாதங்கள், 1932இல் ஓராண்டு, 1940இல் ஓராண்டு, 1942இல் மூன்றாண்டுகள் என தண்டனை பெற்று வேலூர், சென்னை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்.

காங்கிரஸ் சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு முறை தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குச் சென்றார். இன்னொரு முறை அவரால் வெற்றி பெறமுடியவில்லை.  அப்போது அதே காஞ்சிபுரம் தொகுதியில் அவரை எதிர்த்து வென்றவர் சி.என்.அண்ணாதுரை. “சீனிவாசன் உங்களுக்கெல்லாம் நல்ல மாதிரியாக வைத்தியம் பார்க்கிறார். அதனால் நீங்கள் அன்னைவரும் நலமுடன் இருக்கிறீர்கள். அதற்கே அவருக்கு நேரம் போதவில்லை. அவர் சட்டமன்றத்துக்குச் சென்றுவிட்டால் உங்களுக்கு வைத்தியம் பார்க்க யார் இருக்கிறார்கள்? உங்கள் நன்மைக்காக அவருக்கு வாக்களிக்கவேண்டாம்” என்ற வகையில் அவர் முன்னெடுத்த பிரச்சாரம் சீனிவாசனை தோல்வியைத் தழுவவைத்தது.

சீனிவாசனை சுதந்திரப்போராட்டத் தியாகியாக அறிவித்து அவருக்கு நிலம் வழங்கவும் ஓய்வூதியத்தொகை வழங்கவும் அரசு முன்வந்தது. ஆனால் ’நாம்தான் நாட்டுக்காக தொண்டாற்றி உதவ வேண்டுமே தவிர நாட்டிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது’ என்ற எண்ணம் கொண்ட சீனிவாசன் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவர் இறந்தபோது, காஞ்சிபுரமே அவருடைய வீட்டு வாசல் முன்னால் சேர்ந்துவிட்டது. வைதிக முறைப்படி இறுதிச்சடங்குகளை முடித்து அவருடைய உடல் வீட்டு வாசலுக்கு வந்ததும், இனிமேல் அவர் எங்கள் பொறுப்பு என்று ஊரார் அனைவரும் அவருடைய உடலைப் பெற்றுக்கொண்டு வேகவதி ஆற்றங்கரையில் இருந்த இடுகாடு வரைக்கும் சுமந்து சென்றனர். பொதுமக்கள் அனைவரும் ஊர்வலமாக  பின்தொடர்ந்து சென்று நல்லடக்கம் செய்தனர்.

சீனிவாசனைப்போலவே காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்ற மற்றொரு ஆளுமை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கே.எஸ்.பார்த்தசாரதி. அவர் பிற்காலத்தில் பொதுவுடமைக்கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்றினார். காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா இன்னொரு முக்கியமான விடுதலைப்போராட்ட வீரர். எதிர்பாராத விதமாக 1934இல் உடல்நலம் குன்றி மறைந்துவிட்டார்.

சந்தியா பதிப்பகம் தொடர்ச்சியாக வெளியிடும்  நகர்சார் வரலாற்றுநூல் வரிசையில் கனவு நகரம் காஞ்சிபுரம் புதிதாக இணைந்திருக்கிறது. 42 அத்தியாயங்களில் 280 பக்கங்களில் இரவி தொகுத்திருக்கும் ஏராளமான தகவல்களால் ஆயிரம் முகங்களைக் காட்டும் படிகக்கல்லென காஞ்சிபுரம் சுடர்விட்டபடி இருக்கிறது.

  

(கனவு நகரம் காஞ்சிபுரம். அக்களூர் இரவி. சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை – 600083. விலை. ரூ.330)

                                         (புக் டே – இணையதளம் – 23.11.2023)