அர்ச்சுனன் தபசு, புலிக்குகையும் கிருஷ்ணமண்டபமும் என்கிற தலைப்பில் மாமல்லபுரம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய நூல்களை ஏற்கனவே எழுதி வெளியிட்ட முனைவர் சா.பாலுசாமி பொதுவாசகர்களுக்காக மாமல்லபுரம் என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைத்தொகுதியை இந்திய அரசு நிறுவனமான பப்ளிகேஷன் டிவிஷன் தற்போது வெளியிட்டுள்ளது. வரலாறு சார்ந்தும் சிற்பக்கலை சார்ந்தும் ஆர்வம் கொண்ட புதிய தலைமுறையினருக்கு மாமல்லபுரம் பற்றிய குறுக்குவெட்டுத்தோற்றத்தை இந்தப் புத்தகத்தில் தெளிவாகச் சித்தரித்துள்ளார் பாலுசாமி. மாமல்லபுரத்தில் பார்க்கவேண்டிய எல்லா முக்கியச் சிற்பங்களின் படங்களும் எல்லாப் பக்கங்களிலும் கருப்புவெள்ளையில் இடம்பெற்றுள்ளன. ஒரு சிற்பத்தைப்பற்றிய குறிப்பைப் படிக்கும்போதே, அதன் படத்தை அருகிலேயே பார்ப்பது நல்ல அனுபவம். வாசிப்பவர்களின் தெளிவுக்கும் அது துணையாக இருக்கிறது.
சென்னைக்குத் தெற்கே கடற்கரையோரத்தில்
அமைந்துள்ள இடம் மாமல்லபுரம். கிழக்கே வங்கக்கடலுக்கும் மேற்கே பக்கிங்ஹாம் கால்வாய்க்கும்
இடைப்பட்ட இடத்தில் இன்று சிற்றூராகக் காட்சியளித்தாலும் ஒரு காலத்தில் அரசர்களின்
தடம் பதித்த இடமாகவும் சிற்பக்கலைக்குப் பேர்போன இடமாகவும் விளங்கியிருக்கிறது.
சங்க இலக்கியம் எதிலும் மாமல்லபுரம்
தொடர்பான குறிப்புகள் எதுவும் இல்லை. கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரைக்குமான காலகட்டத்தில்
இவ்வூர் எப்பெயரால் அழைக்கப்பட்டது என்பது இதுவரை அறிந்துகொள்ளமுடியாத செய்தியாகவே
உள்ளது. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில் ’நீர்ப்பெயற்று’ என்று
குறிப்பிடப்படும் பெயர் இந்த ஊரின் பெயராக இருக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. வறுமையால்
வாடும் பாணன் ஒருவனுக்கு இளந்திரையனிடம் சென்று வறுமையைப் போக்கிக்கொள்ளுமாறு ஆற்றுப்படுத்தும்
மற்றொரு பாணன், அவன் கடந்து செல்லவேண்டிய நிலங்களைப்பற்றிய வருணனையில் நீர்ப்பெயற்று
ஊரைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அந்த ஊர் சார்ந்து கவிஞர் சித்தரித்திருக்கும்
ஒரு காட்சி மிகவும் வசீகரமானது. நீர்வளம் மிகுந்தது அந்த ஊர். குளங்களில் நீராடவரும்
பெண்கள் கரையோரம் கழற்றிவைத்த காதணிகளை, கரையோரத்தில் பறந்து திரியும் கிச்சிலிப்பறவை
கொத்திக்கொண்டு பறந்துபோய் அருகிலிருக்கும் வேள்வித்தூண்கள் மீது அமர்ந்து வேடிக்கை
பார்க்கின்றன. அன்னம் போன்ற விளக்குகளுடன் அப்போது கடற்கரையை நெருங்கி கிரேக்கர்களின்
கப்பல் வருகிறது.
கி.பி.ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில்
வாழ்ந்த பூதத்தாழாரின் பாடலொன்றில்தான் முதன்முதலாக மாமல்லை என்னும் பெயர் காணப்படுகிறது.
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்திக்கலம்பகத்தில் மல்லை என்னும் பெயர் மீண்டும் மீண்டும்
பெருமிதத்துடன் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. திருமங்கையாழ்வார் கடல்மல்லைத் தலசயனம்
என்று தன் பாசுரத்தில் குறிப்பிடுகிறார். மாமல்லபுரம் முதலில் சோழர்களின் ஆட்சியின்
கீழும் பிறகு பாண்டியர்கள், சம்புவராயர், விஜயநகர மன்னர்கள் என மாறி மாறி பலர் கட்டுப்பாட்டில்
இருந்திருக்கிறது.
இங்குள்ள பல கலைச்செல்வங்கள் பல்லவர்
காலத்தில் உருவாக்கப்பட்டன என்ற நம்பிக்கை நிலவியபோதும், பல்லவர்களின் தொல்நிலம் எது
என்பதுபற்றிய முடிவான கருத்தை இன்னும் ஆய்வாளர்கள் எட்டவில்லை. ஆந்திரத்தின் கிருஷ்ணா
நதிப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் வாகாடர்களில் ஒரு பிரிவினராக இருக்கலாம் என்றும்
தொண்டை மண்டலத்திலேயே தோன்றியவர்கள் என்றும் பலடர் என அழைக்கப்பட்ட புலிந்தர் என்றொரு
பழங்குடி இனத்திலிருந்து தோன்றியவர்களாக இருக்கலாம் என்றும் பலவிதமான கருத்துகள் ஆய்வாளர்களிடையே
நிலவுகின்றன என்று குறிப்பிடுகிறார் பாலுசாமி.
மாமல்லபுரத்தின் மிகப்பெரிய சாதனை பாறைகளையும்
குன்றுகளையும் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக்கோவில்கள். குடைவரைக்கோவில் என்பது உலகின் தொன்மையான கோவில்
வடிவமாகும். இங்குள்ள குடைவரை மும்மூர்த்தி குடைவரை என்று அழைக்கப்படுகிறது. மும்மூர்த்தி
என்னும் சொல் பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களைக் குறிக்கும் சொல் எனினும் கருவறையின்
பின்சுவரில் முருகனின் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அடுத்த கருவறையில் நின்ற தோற்றத்தில்
சிவன் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது கருவறையில் திருமாலின் நின்ற தோற்றம்.
அதை அடுத்துள்ள இரு அரைத்தூண்களால் உருவான கோட்டத்தில் மகிடாசுரனின் தலைமீது எட்டுக்
கரங்களுடன் துர்க்கையின் நின்ற தோற்றம் வடிக்கப்பட்டுள்ளது. துர்க்கைக்காகவே உருவாக்கப்பட்ட
கோடிக்கால் மண்டபம் அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ளது.
வராக மண்டபத்தொகுதியில் காணப்படும்
வராக அவதார சிற்பம் அழகான வடிவமைப்பை உடையது. வராகரின் தொடைமீது அமர்ந்துள்ள மகுடம்
சூடிய பூதேவியின் சிலை அற்புதமானதொரு காட்சி. அருகிலேயே காணப்படும் இன்னொரு அழகான சிற்பத்தொகுதி
பணிப்பெண்டிர் சூழ அமர்ந்திருக்கும் கஜலட்சுமியின் தோற்றமாகும். துர்க்கை, திரிவிக்கிரமர்
மகிடாசுரமர்த்தினி சிற்பத்தொகுதிகளும் குறிப்பிடத்தக்கவை.
மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கற்றளிகள்
இரதங்கள் என அழைக்கப்படுகின்றன. தனியொரு பாறையில் கலசம் முதல் அதிட்டானம் வரை செதுக்கி
அமைக்கப்பெறும் கோவில் வடிவத்துக்கு கற்றளி என்று பெயர். மாமல்லபுரத்தில் உள்ள கற்றளிகள்
பஞ்சபாண்டவர் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன. அவை ஐந்து கோவில்கள். ஐந்து என்ற எண்ணிக்கை
காரணமாகவே இவை பாண்டவர்களோடு தொடர்புப்படுத்தப்படுகின்றன. உண்மையில் அவை துர்க்கை,
சிவன், திருமால், முருகனுக்காக உருவாக்கப்பட்ட கோவில்களாகும்.
முதலில் தெரிவது திரெளபதி ரதம். குடிசை
வடிவில் அமைந்துள்ளதால் இக்கோவில் கூர்ஜரபாணி கோவில் என அழைக்கப்படுகிறது. உள்ளே துர்க்கையின்
நின்ற தோற்றம் செதுக்கப்பட்டுள்ளது.
அடுத்து தெரிவது அர்ஜுன ரதம். சிங்கங்களும்
யானைகளும் தாங்கி நிற்கும் காட்சியமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. சிவனுக்குரிய கருவறையாக
இது அமைக்கப்பட்டிருந்தாலும் கருவறையில் சிற்பம் காணப்படவில்லை. அதன் வடக்குச் சுவர்களிலும்
கிழக்குச் சுவர்களிலும் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. கருவறையில் உள்ள தெய்வம் முருகன்
என்று சிலரும் இந்திரன் என்று சிலரும் கூறுவதுண்டு. இலக்கியச்சான்றுகளின் அடிப்படையில்
முருகனே அங்கு வழிபாட்டுக்குரிய கடவுளாக இருந்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்
பாலுசாமி. இங்கும் ஏராளமான சுவர்ச்சிற்பங்கள் காணப்படுகின்றன.
அடுத்தது பீம ரதம். ஒரு தளம் கொண்ட
இக்கோவில் பள்ளிகொண்ட பெருமாளுக்காக எடுக்கப்பட்டது. அதற்குத் தெற்கே அமைந்துள்லது
தர்மராஜா ரதம். இது மூன்று தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தளத்தின் நடுவில்
உள்ள கருவறையின் பின்சுவரில் சோமஸ்கந்த வடிவம் உள்ளது. இங்கும் எல்லாப் பக்கங்களிலும் உள்ள சுவர்க்கோட்டங்களில்
ஏராளமான சிற்பங்கள் காணப்படுகின்றன. எண்ணற்ற தெய்வச்சிற்பங்களுக்கு இடையில் ஒரு மூலையில்
நீர்க்குடம் ஒன்றை தோளில் ஏந்தி வரும் பெண் அடியவர் ஒருவருடைய சிற்பம் காணப்படுகிறது.
அடுத்து நகுலசகதேவ ரதம். முதல் நான்கு
ரதங்களும் ஒரே வரிசையில் மேற்குத்திசை நோக்கி நிற்க, இந்த ரதம் மட்டும் அவற்றுக்கு
எதிரில் தெற்குத்திசை நோக்கி நிற்குறது. இரு தளங்களைக் கொண்ட இக்கோவிலின் கருவறை எவ்வித
உருவமும் இல்லாமல் வெறுமையாகவே இருக்கிறது..
இத்தொகுதியில் உள்ள ஐந்து ரதங்கள் மட்டுமில்லாமல்,
பல்வேறு இடங்களில் தனித்து சில ரதங்களும் காணப்படுகின்றன. அவை கணேச ரதம், பிடாரி ரதம்,
வலையன் குட்டை ரதம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
மாமல்லபுரத்தின் மகத்தான கலைச்செல்வம்
அங்கிருக்கும் திறந்தவெளிப் புடைப்புச் சிற்பத்தொகுதியாகும். இத்தகு சிற்பத்தொகுதியில்
முழுச்சிற்பம் இடம்பெறுவதில்லை. மாறாக, செதுக்கப்படும் தாய்ப்பாறையிலிருந்து முழுதும்
வெளிப்படாமல் அரை அல்லது முக்கால் பகுதி மட்டுமே புடைப்பாகச் செதுக்கப்படுகின்றன. அத்தொகுதிகளில்
அர்ச்சுனன் தபசு, பகீரதன் தபசு, கிருஷ்ண மண்டபம் என்கிற கோவர்த்தனமலைக்காட்சி ஆகிய
மூன்றைக் குறிப்பிடலாம். இவை, வேறெந்த இடத்திலும் காணக்கிடைக்காத அரிய சிற்பத்தொகுதிகளாகும்.
புராணக்காட்சிகளுக்கு அப்பால் சிற்பியின்
மன ஆழத்தையும் கனவையும் வெளிப்படுத்தும் ஒருசில சிற்பங்கள் உள்ளன. அவை மாமல்லபுரத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பிறகும்
மீண்டும் மீண்டும் நினைத்து மகிழத்தக்கவையாக உள்ளன. உட்கார்ந்த நிலையில் இளைப்பாறும்
மான் இணையின் காட்சியைச் சித்தரிக்கும் சிற்பம், பழுத்துத் தொங்கும் பலாமரத்தின் அடியில்
ஒரு பலாப்பழத்தைச் சுமந்து நிற்கும் ஒருவரைச் சித்தரிக்கும் சிற்பம், ஓய்வெடுக்கும்
விலங்குகளையும் பறவைகளையும் சித்தரிக்கும் சிற்பம், கன்றை நாவால் நக்கியபடி நிற்கும்
பசுவின் மடியில் ஒருவர் அமர்ந்து பால்கறக்கும் காட்சியைச் சித்தரிக்கும் சிற்பம், தலையில்
பாயையும் வலது கையில் பானைகள் கொண்ட உறியையும் ஏந்தியவளாக நின்றிருக்கும் ஒருத்தியைச்
சித்தரிக்கும் சிற்பம் என பார்த்துப் பார்த்து ரசிக்கத்தக்க சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.
மாமல்லபுரத்தின் அடையாளமாக உள்ள கடற்கரைக்கோவிலிலும்
அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. கடற்கரைக்கோவில் என அது ஒருமையில் அழைக்கப்பட்டாலும்
ஐந்து கோவில்களைக் கொண்ட ஒரு பெரிய வளாகமாகும். அதை அடுத்து இராசமிம்மமேஸ்வர பல்லவகிருகம்,
நரபதி சிம்ம பல்லவ விஷ்ணு கிரகம், சத்திரிய சிம்ம பல்லவேஸ்வரம், முகுந்த நாயனார் கோவில்,
உழக்கணேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களும் உள்ளன.
கடற்கரைக்கோவிலுக்கு அருகில் உள்ள சிம்மக்கோவில்
மாமல்லபுரத்தின் சாதனைகளில் ஒன்று. சிம்ம வடிவான துர்க்கைக்கோவில் இது. முன்னங்கால்களை
ஊன்றி அமர்ந்துள்ள சிங்கமொன்று நிமிர்ந்து கர்ஜனை புரியும் சாயலில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிங்கத்தின் மார்புப்பகுதியில் சிறியதொரு கருவறை அமைத்து அதற்குள் துர்க்கையின் சிலை
வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கத்தின் கால்களை ஒட்டி வில்லேந்திய காவற்பெண்கள் நிற்பதுபோன்ற
தோற்றம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்திலிருந்து மூன்று மைல்
தொலைவில் சாளுவன்குப்பம் என்னும் இடமுள்ளது. அங்குள்ள மண்டபம் யாளி மண்டபம் என்றும்
புலிக்குகை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நீள்வட்டப்பாறையில் அரைத்தோரணமாக 11 யாளித்தலைகள்
வடிக்கப்பட்டுள்ளன. அதற்கு நடுவில் செவ்வக வடிவில் மண்டபமொன்று காட்சியளிக்கிறது. சரிவாக
இறங்கும் பாறைப்பரப்பில் அம்பாரிகளுடன் இரு யானைகள் செதுக்கப்பட்டுள்ளன. புதுமையான
இச்சின்னத்தைப்பற்றி பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்தபடி உள்ளன. அதன் அமைப்பின் அடிப்படையில்
புலிக்குகை என அழைக்கப்படும் சின்னம் சிவனுக்கும் துர்க்கைக்குமான கூட்டுக்கோவிலாக
இருக்கக்கூடும் என்பது பாலுசாமியின் முடிவு.
தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள
சப்தமாதர் சிற்பவரிசை ஒரு சாதனைப்படைப்பு. ஒரு பீடத்தின் மீது இடது காலை மடித்து வலது
காலைத் தொங்கவிட்டு சாமுண்டி சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். இரு கரங்களும் குழந்தைப்பிணங்களைப்
பற்றியுள்ளன. சாமுண்டிக்கு வலதுபுறத்தில் மூவருமாக
இடதுபுறத்தில் மூவருமாக அமர்ந்திருக்கிறார்கள். அச்சமூட்டும் அழகிய கலைப்படைப்பு என்று
பாலுசாமி குறிப்பிடுகிறார்.
பல்லவர்களுக்கு முந்தைய தலைமுறையினர்
மண், சுதை, மரம், உலோகம் என பல பொருட்களைப் பயன்படுத்தி கோவில்களையும் கட்டடங்களையும்
கட்டிவந்த நிலையில், முதன்முறையாக பல்லவர்கள் காலத்தால் அழியாதபடி என்றென்றும் நிலைத்திருக்கும்
வகையில் சிற்பங்களை உருவாக்க கல்லை ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தத் தொடங்கினர். அந்த
எண்ண வளர்ச்சியின் விளைவாக, அவர்கள் உருவாக்கிய கலைச்சாதனைகள் இன்றளவும் நம் அழியாச்
செல்வங்களாக நிலைபெற்றிருக்கின்றன.
ஒரு பயணக்கையேடாகவும் சிற்பக்கலையின்
மேன்மையைப் புரிந்துகொள்ளும் வழிகாட்டிக் குறிப்புகளாகவும் மாமல்லபுரத்தை மிகச்சிறப்பான
முறையில் எழுதியிருக்கும் பாலுசாமியின் முயற்சி பாராட்டுக்குரியது. 150 பக்க நூலில்
ஏராளமான செய்திகளைத் தெரிந்துகொள்ள இந்த நூல் பேருதவியாக இருக்கிறது. தமிழுலகம் அவருக்கு
நன்றிக்கடன் பட்டுள்ளது.
(மாமல்லபுரம்
– முனைவர் சா.பாலுசாமி. பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், இராஜாஜி பவன், பென்சன்ட் நகர், சென்னை
– 90. விலை.ரூ.230)
(புக்
டே – இணையதளம் – 14.11.2023)