Home

Sunday 12 November 2023

கபாலி

  

தினமணி கதிர் இதழில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தான் எழுதி வெளிவந்த சிறுகதைகளையெல்லாம் தனியாகப் பிரித்தெடுத்து இரு பெருந்தொகுதிகளாக பைண்டிங் செய்துவைத்திருந்தார் விட்டல்ராவ்.  ஒருமுறை அவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது, படித்துவிட்டுத் தருவதாக ஒரு தொகுதியை வீட்டுக்கு எடுத்துவந்தேன்.

அந்தக் காலத்து தினமணி கதிர் இந்தக் காலத்து காலச்சுவடு அளவில் இருந்தது. தினமணி அலுவலகத்திலிருந்து வெளிவந்த போதும் அதற்குத் தனியாக விலை வைக்கப்பட்டிருந்தது. தொடக்க இதழ்களில் விலை முப்பந்தைந்து காசு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது கொஞ்சம்கொஞ்சமாக உயர்ந்து அறுபது காசு வரைக்கும் சென்றிருந்தது.

ஒவ்வொரு பக்கமாக முதலில் புரட்டிப் பார்த்தேன். ’பார் பார் பட்டணம் பார்’ என்றொரு பகுதி ஒவ்வொரு இதழிலும்  இடம்பெற்றிருந்தது. அப்பகுதியில் சென்னையில் உள்ள பழைய ஆங்கிலேயர் காலத்து கட்டடங்களைப்பற்றிய சுருக்கமான தகவல்கள்  இடம்பெற்றிருந்தன. அவற்றுடன் சில்பி கைவண்ணத்தில்  உருவான அக்கட்டடங்களின் கோட்டோவியங்களும் இருந்தன. அரைநூற்றாண்டு கடந்த பிறகும் சில்பியின் ஓவியங்கள் வசீகரத்தோடு காணப்பட்டன.

முதலில் சிறுசிறு தகவல்களையெல்லாம் படித்துமுடித்தேன். பிறகு விட்டல்ராவ் எழுதிய சிறுகதைகளை ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினேன். ஒருமுறை தினமணி கதிர் நடத்திய சிறுகதைப்போட்டியில் விட்டல்ராவ் எழுதிய ‘சொர்க்கத்துக்கு 21 துப்பாக்கி மரியாதை’ என்னும் சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்திருந்தது. இன்னொருமுறை அவருடைய ’கபாலி’ என்னும் சிறுகதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்திருந்தது. சில கதைகள் நட்சத்திரக்கதை என்னும் சிறப்புக்குறிப்போடு வெளிவந்திருந்தன. பொதுப்பிரிவிலும் சில கதைகள் பிரசுரமாகியிருந்தன. நான் எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்துமுடித்தேன்.

அக்கதைகளில் எனக்கு கபாலி என்னும் சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. மிகச்சிறந்த திரைப்படத்தின் திரைக்கதை வடிவத்தைப்போல இருந்தது அச்சிறுகதை. கபாலி ஒரு பேட்டை ரவுடி. சட்டத்துக்குப் புறம்பான எல்லா வேலைகளையும் செய்துவந்தான். அவனுக்குத் துணையாக ஒரு சிறிய கூட்டமே வேலை செய்தது.

அதே ஊரில் வீரய்யா என்பவன் இன்னொரு ரவுடி. அவனும் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துவைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தான். மறைமுகமாக சாராயம் காய்ச்சி விற்றான். போதைப்பொருள் விற்றான். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அணியும் அவனிடம் இருந்தது.

எங்கோ தொலைவில் தொழிலில்லாமல் இருந்த வீரய்யாவை  தொடக்க காலத்தில் கபாலிதான் சென்னைக்கு அழைத்துவந்து வாழ்வதற்கு வழிகாட்டினான். ஆனால் சிறிது காலத்திலேயே கபாலியை விஞ்சும் அளவுக்கு வளர்ந்துவிட்டான் வீரய்யா.

ஒருமுறை ரங்கம்மா என்கிற அழகான பெண்ணை நடிகையாக்கும் ஆசை காட்டி கிராமத்திலிருந்து அழைத்துவந்துவிட்டான் வீரய்யா. தக்க தருணம் பார்த்து பாலியல் தொழிலில் இறக்கவும் திட்டமிட்டிருந்தான் அவன். தற்செயலாக அச்செய்தியை அறிந்துகொண்ட கபாலி அவளை அங்கிருந்து ரகசியமாக அழைத்துவந்து  தன் துணையாகச் சேர்த்துக்கொண்டான். செய்தியை அறிந்துகொண்ட வீரய்யா தன் அணியைச் சேர்ந்த பெண்ணை தன்னிடம் ஒப்படைத்துவிடுமாறு கேட்டு தகராறு செய்தான். கபாலி அதற்குச் செவிசாய்க்க மறுத்தான்.  அதுவரை அவர்களிருவருக்கும் இடையில் மெளனநிலையில் இருந்த பகை, அன்றுமுதல் வெளிப்படையான மோதலாக வளர்ந்தது. பேட்டையை விட்டே அவனை ஒழித்துவிடுவதாக மனசுக்குள் கறுவினான். சந்திக்கும் இடங்களில் எல்லாம் இருவரும் உப்புசப்பில்லாத காரணத்துக்கெல்லாம்  மோதிக்கொண்டனர்.

ஒருநாள் ஒரு தேநீர்க்கடை வாசலில் கபாலிக்கும் வீரய்யாவுக்கும்  சண்டை வந்துவிடுகிறது. எழுத்து வடிவமான கதை, இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது. வாய்ச்சண்டை வலுத்து கைச்சண்டையாக மாறிவிடுகிறது. பிறகு திசைக்கொருவராக ஓடிவிடுகின்றனர்.

அதே தேநீர்க்கடையில் தேநீர் அருந்தவந்த புதிய கான்ஸ்டபிளான துரை, ஆவேசமில்லாமல் அனைத்தையும் அமைதியாகப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறான். ஒவ்வொரு ரவுடியும் எப்படிப்பட்டவர் என்பதை தேநீர்க்கடைக்காரர் வழியாகவே தெரிந்துகொள்கிறான். இருவரில் கபாலி சற்றே மேலானவன் என அவன் மனம் முடிவெடுக்கிறது.

ஒருநாள் இரவு சாராயக்கடையில் அந்தக் கான்ஸ்டபிள் துரையும் கபாலியும் நெருக்கமாக உரையாடி நண்பர்களாகிறார்கள். வீரய்யாவின் சட்டவிரோத செயல்களை ஒவ்வொன்றாகக் களைவதற்குத் தேவையான உதவியை கான்ஸ்டபிளுக்குச் செய்கிறான் கபாலி. வீரய்யாவின் ரகசிய இடங்களை அவனுடைய ஆட்கள் காட்டிக் கொடுக்கிறார்கள். கான்ஸ்டபிளின் வேலை எளிதாகிறது. அவை அழிக்கபப்டுகின்றன. அவனுடைய ஆட்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.  ஸ்டேஷனில் அவன் நல்ல கெளரவத்துக்குரியவனாக வலம் வருகிறான்.

திருவிழா சமயங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடாமல் தடுக்க காவலர்களுடன் கபாலி அணியினரும் கான்ஸ்டபிளுக்கு ஒத்தாசை புரிகின்றனர். இதனால் கான்ஸ்டபிளின் மதிப்பு ஸ்டேஷனில் அதிகரிக்கிறது. மேலதிகாரிகள் அவனைப் பாராட்டுகிறார்கள்.

அதே ஸ்டேஷனில் இன்னொரு கான்ஸ்டபிளாக வேலை செய்பவன் சாயிராம். கான்ஸ்டபிள் துரைக்குக் கிடைக்கும் பாராட்டுகளைப் பார்த்து பொறாமையில் வயிற்றெரிச்சல் கொள்கிறான் அவன். தக்க சமயத்தில் துரையை வீழ்த்தத் திட்டமிடுகிறான். அவன் வீரய்யாவுடன் கூட்டணி வைத்துக்கொள்கிறான். ஒருமுறை கபாலி அணியைச் சேர்ந்த ஒருவனை அழைத்துவந்து அடித்து காவலில் அடைத்துவிடுகிறான். விஷயமறிந்த துரை அதிகாரியிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அவனை காவலிலிருந்து விடுவித்து அழைத்துவந்து அனுப்பிவைக்கிறான்.

தனிப்பட்ட விதத்தில் தான் தோல்வியடைந்துவிட்டதாக நினைக்கிறான் சாயிராம். அன்றுமுதல் துரையைப் பழிவாங்க நினைக்கிறான். சாயிராமும் வீரய்யாவும் கூடி என்னென்னமோ திட்டமிடுகிறார்கள்.

ஒருநாள் கபாலியின் மனைவி கான்ஸ்டபிளைத் தேடி வருகிறாள். சில தினங்களாக கபாலி வீட்டுக்கு வரவில்லை என்று கவலையோடு தெரிவிக்கிறாள். உடனே தேடல் முயற்சியில் இறங்குகிறான் துரை. எந்த இடத்திலும் அவனைப் பார்க்கமுடியவில்லை. கபாலியின் ஆட்களும் கடைத்தெருவில் இருப்பவர்களும் கூட அவனை சமீபநாட்களாகப் பார்க்கவில்லை என்றே செய்தி சொல்கிறார்கள். கான்ஸ்டபிளுக்கு அச்செய்தி திகைப்பையும் கவலையையும் தருகிறது.

ஒருநாள் துரையும் சாயிராமும் சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். சந்தடி மிக்க நகரச் சந்திப்பை ஒட்டிய பகுதியில் கழிவுநீர் வழி அடைபட்டிருப்பதாக புகார் வந்ததையொட்டி மராமத்து வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஊழியர்கள் கழிவுத்தொட்டியில் இறங்கி அடைப்பை நீக்க முயற்சி செய்கிறார்கள், மூழ்கி எழுந்த ஊழியர்கள் ஏதோ ஒரு மனித உடல் நீர்வழியை அடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு அந்த உடலை வெளியே எடுத்து தரையில் கிடத்துகிறார்கள். முகம் சிதைந்திருக்கிறது. உடலும் உப்பி அடையாளம் தெரியாததாக மாறியிருக்கிறது.

 தெருவில் இருப்பவர்கள் அனைவரும் முண்டியடித்து வந்து அந்த உடலைப் பார்க்கிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாக வீரய்யாவும் வந்து பார்க்கிறான். உப்பிய கையில் காணப்பட்ட பச்சை குத்திய அடையாளத்தைப் பார்த்ததும் செத்துக் கிடப்பது கபாலியே என நினைத்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறான். ஆனாலும் “யாரோ எவரோ தெரியலை, பாவம்” என்று சொன்னபடி கூட்டத்திலிருந்து வெளியேறுகிறான்.

கான்ஸ்டபிள் சாயிராமும் இறந்து கிடந்த உடலையும் அந்த அடையாளத்தையும் பார்த்துவிட்டு அது கபாலியே என்பதில் நிறைவடைகிறான். இனிமேல் ஸ்டேஷனில் துரையின் செல்வாக்கு சரிந்துவிடும் என்று கணக்கிடுகிறான்.  பிறகு “யாரோ, தெரியலை, பாவம். வாய்யா போவலாம்” என்று சொல்லிக்கொண்டே நடக்கிறான்.

தரையில் கிடப்பது கபாலியின் உடல் என்பதை ஒரு திகைப்புடன் துரையும் உணர்கிறான். ஆனால் அவனாலும் தனக்குத் தெரிந்த உண்மையை வெளிப்படையாகச் சொல்ல இயலவில்லை. “ஆமாம், பாவம். யாரோ தெரியலை” என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்குகிறான்.

பொறாமை என்பது ஒரு நெருப்புப்பொறி போன்றது. அது வைக்கோல் போரையும் எரிக்கும். கூரையையும் எரிக்கும். எளிய மனிதர்களுக்கும் அது வெறியூட்டும். பெரிய மனிதர்களுக்கும் அது வெறியூட்டும். அதற்கு எழை பணக்காரன் என்னும் வேறுபாடோ, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் வேறுபாடோ எதுவும் இல்லை. அடுத்தவர்களைச் சுட்டுப் பொசுக்காமல் அது அடங்காது.

இந்தக் கதையில் இருவேறு அடுக்குகள் வெவ்வேறு கோணத்திலிருந்து எழுந்துவந்து ஒரு புள்ளியில் சந்தித்துக்கொள்கின்றன. இருவேறு ரவுடிக்கும்பலுக்கு நடுவில் உள்ள முரண்களும் மோதல்களும் ஒரு அடுக்கு. இருவேறு கான்ஸ்டபிள்களுக்கு நடுவில் உள்ள பொறாமையும் போட்டியும் இன்னொரு அடுக்கு. கபாலியின் மரணம் தற்காலிகமாக எல்லா மோதல்களுக்கும் ஒரு முடிவாக அமைந்துவிடுகிறது. ஆனால் கபாலியின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இவ்விரண்டு அடுக்குகளிலும் கபாலியைப் பிடிக்காதவர்கள் தீட்டிய திட்டத்தின் விளைவாக இந்த மரணம் ஏற்பட்டிருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை. மூன்றாவது இன்னொரு அடுக்கு செயல்பட்டு இந்த மரணத்துக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் அதையும் தீர்மானமாகச் சொல்ல இயலவில்லை. உண்மையின் மீது புகை படிந்திருக்கிறது. அந்தக் கலங்கலும் தெளிவின்மையும் கதைக்கு ஒரு தனித்த அழகாக அமைந்துவிடுகிறது.

தொடக்கக்காட்சியில் ஆரவாரமாகப் பேசுபவனாகவும் சோடா பாட்டில் வீசி மோதலுக்குத் தயாராக நிற்பவனாகவும் காட்சியளிக்கிறான் கபாலி. அவனை எதிர்க்க ஆளே இல்லை என்பதுபோல அவனுடைய ஆரவாரம் அமைந்திருக்கிறது. இறுதிக்காட்சியில் யாரோ கொன்று சாக்கடைக்குள் வீசிவிட்டுச் செல்ல, உருத்தெரியாத உடலாகக் கிடக்கிறான் அவன். அனைவரும் பார்த்து அச்சம் கொள்ளும் அளவுக்கு ஓங்கியிருந்த ஒரு வாழ்க்கை, சாக்கடையில் உருத்தெரியாத உடலாக செத்து மிதக்கும் அளவுக்கு மாறிவிடுகிறது.

ஒவ்வொருவனும் தன் மனத்துக்குள் தன்னை வல்லவன் என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் அவனை வீழ்த்திவிடும் இன்னொரு வல்லவன் இன்னொரு திசையிலிருந்து முளைத்துவருகிறான். இந்த ஆக்கமும் அழிவும் இந்த உலகை இயக்கும் மாயவிசை. ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழும் விழுமன்றே என்பது ஒளவையின் நல்வழிப் பாடல். அனைத்தும் விழும் என்பதும் விழுந்தவை அனைத்தும் முளைக்கும் என்பதும் ஒரு தொடர்செயல்பாடு. அந்த ஆடலிலிருந்து யாரும், எதுவும் தப்பிக்கவே முடியாது. மானுடன் தப்பிக்க முடியாத ஒரு புள்ளியை மின்னலைப்போல தொட்டு மீள்கிறது விட்டல்ராவின் சிறுகதை. அன்றைய நாள் முழுதும் அந்தச் சிறுகதை மனத்திலேயே வட்டமிட்டுச் சுழன்று சுழன்று வந்தது.

அடுத்தநாள் காலையில் விட்டல்ரவுடன் உரையாடும்போது நான் படித்த சிறுகதையைப்பற்றிச் சொன்னேன். அப்படி ஒரு கதைப்புள்ளியை அவர் எப்படிக் கண்டடைந்தார் என்பதை அறிய எனக்கு ஆவலாக இருந்தது. அதையே ஒரு கேள்வியாக அவரிடம் கேட்டேன். “அந்தக் கதைக்குப் பின்னால பல கதைகள் இருக்கு பாவண்ணன்” என்று சிரித்தார் அவர். “ஒவ்வொன்னா சொல்லுங்க சார்” என்று நான் தூண்டினேன்.

“நெஜமாவே அப்படி ஒரு ரவுடி இருந்தான்” என்று ஆரம்பித்தார். ”அவனைப்பத்தி கதைகதையா சொல்வாங்க. அப்பப்ப அதெல்லாம் காதுல விழும். அதையெல்லாம் மனசுல வச்சிக்குவேன். ஒருநாள் திடீர்னு செத்துட்டான். அதைக் கேட்டு மனசுக்கு சங்கடமாய்டுச்சி.  அதுவும் அவன் செத்துக் கிடந்த விதம் ரொம்ப ரொம்ப மோசமானது. அதுக்கப்புறமாத்தான் இப்படி ஒரு கதையை எழுதணும்னு ஒரு எண்ணம் வந்தது”

“தெரிஞ்ச ஆளா?”

“இல்லை. இல்லை. மத்தவங்க சொல்றத கேட்டுக் கேட்டு நானே அவனுக்கு ஒரு உருவத்தை கொடுத்தேன்”

“சரி”

“பெரிய ரவுடி அவன். அங்கங்க நின்னு ஆளுங்கள மெரட்டி பணம் புடுங்குவானாம். ஆறடி உயரத்துல ஆள் பாக்கிறதுக்கு ஒரு பெரிய தூண் மாதிரி இருப்பானாம். ஒரு நாள் அவனுடைய ஆட்டம் கொஞ்சம் எல்லை மீறி போயிடுச்சி”

“என்ன நடந்திச்சி?”

“நண்டு கொழுத்தா வளையில தங்காதுன்னு சொல்வாங்க இல்லயா? அந்த மாதிரி ஆயிடுச்சி அவன் கதை”

“ஏதாவது ஏடாகூடமான விவகாரத்துல எறங்கிட்டானா?”

“ஆமாம். ஆழம் தெரியாம காலை விட்டுட்டான். அந்தக் காலத்துல புகழ்பெற்ற நடிகை ஒருத்தவங்க உண்டு. பெரிய பெரிய ஹீரோ கூட எல்லாம் நடிச்சவங்க. எல்லா மட்டங்கள்லயும் அந்த நடிகைக்கு செல்வாக்கு இருந்தது.  அதெல்லாம் தெரியாம, என்னமோ சாதாரணமான பொண்ணுகிட்ட நடந்துக்கிற மாதிரி நடந்துகிட்டான் அவன். அதுவே அவனுடைய முடிவுக்கும் காரணமாயிடுச்சி”

“விவகாரம் என்னன்னு சொல்லுங்க சார்?”

“ஒருநாள் அந்த நடிகை படப்பிடிப்பு முடிஞ்ச கையோடு வீட்டுக்குத் திரும்பிட்டிருந்தாங்களாம். மேக்கப் கூட கலைக்கலையாம். ஏதோ அவசரம்னு கார்ல வந்திட்டிருந்தாங்க. கடைத்தெரு பக்கமா ஏதோ ஒரு பெரிய கடையைப் பார்த்திருக்காங்க. அந்த நடிகைக்கு அந்தக் கடையில ஏதோ ஒரு பொருள் வாங்கணும்ன்னு தோணியிருக்குது. உடனே வண்டிய நிறுத்தச் சொல்லிட்டு அவுங்க மட்டும் எறங்கி கடைக்கு நடந்து போனாங்க.”

“சரி”

“அதே நேரத்துல அந்த ரவுடியும் அந்தப் பக்கமா வந்துட்டான். நடிகையைப் பார்த்ததும் அவனுக்கு என்னமோ தலைகால் புரியாத கிளுகிளுப்பு. பக்கத்துல போய் தொட்டுப் பார்க்கணும்னு ஒரு வேகம். சட்டுனு ஓடி போய் எல்லாருக்கு முன்னாலயும் அந்த நடிகையை வெறியோடு கட்டி புடிச்சிகிட்டான். அந்த நடிகை அதை எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப பயந்துட்டாங்க. உடனே அவன புடிச்சி தள்ளினாங்களாம். ஆனா அவன் இரும்புமாதிரி அந்த நடிகையை புடிச்ச புடிய விடவே இல்லையாம். அந்த நேரத்துல யாரும் எதிர்பார்க்காத வகையில அந்த நடிகையுடைய ப்ரெஸ்ட புடிச்சி நல்லா அழுத்தி கடிச்சிட்டானாம். அந்த நடிகை பயத்துல ஓன்னு சத்தம் போட்டபடியே அவன எப்படியோ புடிச்சி தள்ளிட்டாங்களாம். சுத்தி நின்னு பார்த்துட்டிருந்தவங்களால நம்பவே முடியலை. ஒரே அதிர்ச்சி. எல்லாருமே ஒரு கணம் திகைச்சி நின்னுட்டாங்களாம். அதுக்கப்புறம் அவனை புடிக்க ஓடினாங்களாம். ஆனா அதுக்குள்ள அவன் தப்பிச்சி ஓடிட்டான்”

விட்டல்ராவ் சொல்வதையெல்லாம் கேட்கக்கேட்க எனக்குத் திகைப்பாக இருந்தது. இப்படியெல்லாம் நடக்கும் என்பதையே என்னால் நம்பமுடியவில்லை.

“அப்புறம் என்ன செஞ்சாங்க?”

“அப்புறம் செய்யறதுக்கு என்ன இருக்குது? நேரா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தாங்க அந்த நடிகை. கடுமையான நடவடிக்கை எடுக்கணும்ன்ன்னு சொல்லிட்டு புறப்பட்டு போயிட்டாங்க. அவுங்கள பொறுத்தவரைக்கும் அந்த நாள் பெரிய அவமானத்துக்குரிய நாள்”

“இயற்கைதானே, அப்படித்தானே இருக்கும்?”

“அவுங்களுக்கு எல்லா நிலைகள்லயும் செல்வாக்கு இருந்தது. போலீஸ் துறையில பெரிய பெரிய ஆபீஸர்ங்களயெல்லாம் ஃபோன்ல கூப்ட்டு விஷயத்தை சொன்னாங்க. காவல்துறையில இருந்தவங்களும் அந்த ரவுடி மேல ஏற்கனவே ரொம்ப கடுப்புல இருந்திருக்காங்க. அவன புடிக்கறதுக்கு ரகசியமா ஒரு குழுவை அனுப்பினாங்க”

“சரி”

“இன்னொரு பக்கத்துல தனக்குத் தெரிஞ்ச வேற ஒரு டீம் ரவுடிங்களை வச்சி ஆள கவுக்கறதுக்கும் ஒரு மாற்றுத்திட்டம் வச்சியிருந்தாங்க அந்த நடிகை”

“அப்புறம்?”

“ரவுடி நடமாட்டம் திடீர்னு குறைஞ்சிபோச்சி. போலீஸ்க்கு பயந்து எங்கயோ மறைஞ்சிருக்கான்னு எல்லாரும் நெனைச்சிட்டாங்க. ஒரு வாரமாச்சி.  பத்து நாளாச்சி. அப்பவும் ஆள பார்க்கவே முடியலை. பயத்துல எங்கயோ ஊர் மாறி போயிட்டான்னு ஒரு எண்ணம் வந்துட்டுது.”

“ஏன் அப்படி சொல்றீங்க?”  

“திடீர்னு ஒருநாள் அவுட்டர்ல சாக்கடை அடைப்பை எடுக்கப் போன ஒர்க்கர்ஸ் ஆழத்துல ஒரு உடல் மாட்டியிருக்குதுன்னு சொன்னாங்க. எடுத்து போட்டு கழுவிட்டு பார்த்தா, அது அந்த ரவுடியுடைய உடல்”

“ஐயோ, யாரு கொன்னாங்க? போலீஸ் டீமா? ரவுடிங்க டீமா?”

“அது கடைசி வரைக்கும் தெரியவே இல்லை. கொஞ்ச நாள் வரைக்கும் அந்தக் கதையை பத்தி எல்லாரும் மாறி மாறி பேசிட்டே இருந்தாங்க. அதுக்கப்புறம் யாரும் பேசலை. அவ்ளோதான். மறந்துட்டாங்க.  ஒரு நண்பர் எனக்கு அந்த ரவுடியுடைய கதையைச் சொன்னாரு. அதைக் கேட்டபோது ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. ஒரு வன்முறை இன்னொரு வன்முறை வழியா பழி தீர்த்துகிச்சி. ரெண்டுமே தப்பு. ஒரு தப்பு வெறியில செஞ்சது. இன்னொரு தப்பு திட்டம்போட்டு செஞ்சது. எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாம் ஒன்னுதான்”

“எல்லாம் சரிதான் சார். ஆனா நீங்க அந்த நடிகை கதையை உங்க கதைக்குள்ள வைக்கவே இல்லையே”

“உண்மைதான். என்னுடைய கதைக்கு அந்தப் பகுதி தேவையில்லைன்னு தோணிச்சி. அதனால் விட்டுட்டேன்”

“பேருக்குத்தான் அவன் ரவுடி. ஆனா கடைசியில பலியாடு மாதிரி  செத்துடறான். பாவம். உங்களுடைய நல்ல கதைகள்ல ஒன்னு இது”

”அது சரி” என்றபடி சிரித்தார் விட்டல்ராவ். அத்துடன் உரையாடலை முடித்துக்கொள்வார் என்று நினைத்தேன். ஆனால் மறுகணமே ஒரு பெருமூச்சுக்குப் பிறகு “அந்தக் கதையால என் வாழ்க்கையில ஒரு நல்ல விஷயம் நடந்தது. அது இந்தக் கதையைவிட சுவாரசியமான ஒன்னு” என்று உரையாடலைத் தொடங்கினார் விட்டல்ராவ்.

அதைக் கேட்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “அது என்ன சார்? அதை முதல்ல சொல்லுங்க” என்றேன்.

“அது எனக்குக் கல்யாணம் ஆன நேரம் பாவண்ணன். கல்யாணத்துக்கு முன்னாலயே நான் ஆதம்பாக்கத்துல ஒரு வீட்டுமனை வாங்கி, ஆபீஸ்ல லோன் போட்டு ஒரு வீடும் கட்டிட்டேன். ஆனா அது முழுமையடையலை. வேற வழியில்லாம கல்யாணம் ஆனதும் நாங்க ரெண்டு பேரும் நேரா அந்தப் புது வீட்டுக்குத்தான் போனோம்”

“எந்த அளவுக்கு வீட்டு வேலை முடிஞ்சிருந்தது? எந்த அளவுக்கு முடியாம இருந்தது?”

“அதாவது, வெளியே இருந்து பார்க்கறதுக்கு வீட்டுவேலை எல்லாம் முடிஞ்சமாதிரி தெரியும். ஆனா பாதிக்கு உள்வேலை எதுவும் முடியலை. பணம் இல்லாம எல்லா வேலையும் பாதிபாதியா அப்படியே நின்னுட்டுது. கரென்ட் கனெக்‌ஷன் கூட கிடையாது”

“ஏன் அப்படி?”

“ஆபீஸ்ல குடுத்த கடன் தொகை முடிஞ்சிட்டுது. வெளியேயும் யாருகிட்டயும் கடன் வாங்கற சூழல் கிடையாது. அடமானம் வச்சி பணத்த பொரட்டி வேலையை முடிக்கிற அளவுக்கு சொத்து கித்து எதுவும் கிடையாது. எப்படி பணத்த பொரட்டி எப்படி வேலையை முடிக்கறது? சரி, கையில  பணம் வரும்போது ஒவ்வொன்னா செஞ்சிக்கலாம்ன்னு அப்படியே விட்டுட்டேன்”

“அப்படித்தான் இருந்தாவணும். நடுத்தட்டு வர்க்கத்துக்கு வேற வழி இல்லையே”

“சுவரும் கதவும் ஜன்னலும் மட்டும்தான் முழுசா இருந்தது. மத்தது எல்லாமே அறைகுறைதான். லெட்ரின், பாத்ரூம் எல்லாத்துலயும் நாலுபக்கமும் சுவர் மட்டும் இருக்குது. செய்யவேண்டிய மத்த வேலைகள் எதையும் செய்யலை. லெட்ரினுக்கு பிட் எடுக்கணும். பைப் கனெக்‌ஷன் குடுக்கணும். பேசின் உக்கார வைக்கணும். அறுநூறு எழுநூறு ரூபாய் வேணும். ஆனா ரொக்கமா எதுவும் எங்கிட்ட இல்லை. வெளியில பொரட்டறதுக்கும் வழியில்ல. இந்த மாதிரியான சூழல்லதான் புதுக்குடித்தனம் ஆரம்பிச்சிட்டோம்”

“அப்புறம் எப்படி சமாளிச்சீங்க?”

“தகரத்துல ஒரு பொட்டி மாதிரி செஞ்சி லெட்ரின் சீட் மாதிரி அதுல டிசைன் செய்யற மாதிரி ஒரு வெல்டர்கிட்ட ஒரு ப்ளான படம் போட்டு குடுத்தேன். அவரு அத உடனே புரிஞ்சிகிட்டாரு. எதுக்காகன்னு கேட்டாரு. விஷயத்தை சொன்னேன். நான் சொன்னத கேட்டதும், அவருக்கு என் மேல ஒரு அக்கறை வந்துட்டுது. ஒரே நாள்ல செஞ்சி குடுத்தாரு. கூலியும் அதிகமா கேக்கலை. வெறும் இருபது ரூபாதான் வாங்கினாரு.”

“எப்படியோ, தற்காலிகமா ஒரு ஏற்பாடு செஞ்சிகிட்டீங்க”

”ஆமாம். அதை எடுத்தும் போய் லெட்ரின் ரூமுக்குள்ள வச்சி, அதையே ரெண்டு பேரும் லெட்ரினா பயன்படுத்தினோம்”

“சரி”

“பகல் முழுக்க  பயன்படுத்தறதால அந்தப் பெட்டி ரொம்பிடும். ராத்திரி ஒரு ஒம்பது மணிக்கு மேல ஆதம்பாக்கமே அப்ப அடங்கிடும். அந்த நேரத்துல நான் அந்தத் தகரப் பொட்டிய தூக்கிகிட்டு வெளியே வருவேன். என் மனைவி டார்ச் லைட்ட அடிச்சி எனக்கு வெளிச்சம் காட்டிகிட்டே முன்னால நடப்பாங்க. அவுங்க கையில துடைப்பம், பெனாயில் பாட்டில் எல்லாம் இருக்கும். எங்க வீட்டுலேர்ந்து ரொம்ப தூரத்துல ஒரு ஏரி இருந்தது. அங்க போய் அந்தப் பொட்டிய காலி பண்ணிட்டு, அந்த ஏரியிலயே அத நல்லா கழுவி பெனாயில் ஊத்தி சுத்தப்படுத்திட்டு எடுத்து வருவோம்.”

“எவ்ளோ காலத்துக்கு அந்த ஏற்பாடு இருந்தது?”

“சில மாதங்கள் அப்படியே ஓட்டனோம். அப்பதான் தினமணி கதிர்ல சிறுகதைப்போட்டி அறிவிச்சாங்க. கபாலி சிறுகதைக்கு ரெண்டாவது பரிசு கெடைச்சது. சாவி, செளந்திரா கைலாசம், சுஜாதா மூனு பேரும் அந்தப் போட்டிக்கு நடுவர்கள். எழுநூத்தி அம்பது ரூபாய் பரிசு. கிட்டத்தட்ட என்னுடைய மூனு மாச சம்பளம் அது”

“அந்தப் பரிசுத்தொகையை என்ன பண்ணீங்க?”

“அதைச் சொல்லத்தான் லெட்ரின் கதையைச் சொன்னேன். கையில  காசு வந்ததும் புதுசா பேசின், பிட்டிங்க்ஸ் எல்லாத்தயும் வாங்கினேன். குழி வெட்டற ஆளுங்களும் வந்து எல்லாத்தயும் ரெடி பண்ணி குடுத்துட்டு போனாங்க. அதுக்கப்புறம்தான் முழுமையான கழிப்பறை வசதி எங்க வீட்டுல சாத்தியமாச்சி. கபாலி கதைக்குப் பின்னால இப்படி ஒரு கதை இருக்குது”

விட்டல்ராவ் அதைச் சொல்லும்போது சாதாரணமாக புன்னகை படிந்த குரலிலேயே சொன்னார். துயரங்களைப் புன்னகையால் வெல்லும் கலை அவருக்கு இயல்பாகவே கைவந்த கலையாக இருப்பதை ஏற்கனவே பல தகவல்கள் வழியாக அறிந்தவன் என்கிற நிலையில் நானும் அக்கணத்தை வேகமாகக் கடந்துவர முயன்றேன்.

“ஒரு கதை,  அந்தக் கதைக்குள்ள ஒரு கதை. அதுக்குப் பின்னணியா ஒரு கதை எல்லாமே அருமை சார்” என்றேன்.

“கபாலி கதையை சொல்லி என்னை என்னுடைய இளமைக்காலத்துக்கே நீங்க கொண்டுபோய்ட்டீங்க. பல பழைய விஷயங்களை அசைபோட வச்சிட்டீங்க. இன்னும் பல ஞாபகங்கள் முட்டி மோதுது.” என்று சிரித்தார் விட்டல்ராவ்.

 

(அம்ருதா – அக்டோபர் 2023)