Home

Sunday, 19 November 2023

இரண்டு ரோஜாக்கள் - கட்டுரை

  

’சர்வோதயம் மலர்கிறது’ இதழுக்காக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு காந்திய ஆளுமையைப்பற்றிய விரிவான தகவல்களுடன் ஒரு கட்டுரையை நான் எழுதி வருகிறேன். அந்த வரிசையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நான் லால் பகதூர் சாஸ்திரியைப்பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் விட்டல்ராவ் கைப்பேசியில் அழைத்தார். வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பிறகு ”இப்போ  என்ன எழுதிகிட்டிருக்கீங்க?” என்று கேட்டார். நான் லால் பகதூர் சாஸ்திரியைப்பற்றிய கட்டுரையை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னேன்.

“முக்கியமான மனிதர் அவர். உங்க பட்டியல்ல அவசியம் இடம்பெற வேண்டியவர். எழுதுங்க. எழுதுங்க” என்றார். தொடர்ந்து “அவரை நினைச்சாவே அறுபத்திநாலுல பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நடந்த யுத்தம்தான் ஞாபகத்துக்கு வருது பாவண்ணன். அற்புதமான மனிதர். நம்ம நாட்டுக்கு கிடைச்ச அருமையான பொக்கிஷம்னுதான் அவரைச் சொல்லணும்” என்று குறிப்பிட்டார்.

அடுத்து அவரைப்பற்றி தம் நினைவிலிருக்கும் பல செய்திகளைக் குறித்து சொல்லத் தொடங்கினார். முடிக்கும்போது “வாழ்க்கை முழுக்க அவர் அரசியல்லயே கழிச்சவர். மாகாண அமைச்சர், மத்திய அமைச்சர்னு பல முறை பதவி வகித்தவர். நம்ம நாட்டுக்கு பிரதமராகவும் பதவி வகித்தவர். கடைசியா அவர் சாகும்போது, தவணை முறையில கடன்ல  வாங்கிய ஒரு கார் மட்டும்தான் அவருடைய சொத்தா இருந்ததுன்னு படிச்சிருக்கேன். உதாரணமா எடுத்துக்காட்டி சொல்லறதுக்குக்கூட அவரை  மாதிரியான ஒரு மனிதர் இன்னைக்கு நம்ம நாட்டுல இல்ல. அக்கம்பக்கத்து நாடுகள்ல கூட இருக்காங்களோ என்னமோ, தெரியலை. ஒரு அறுபது எழுபது வருஷங்களுக்குள்ள வாழ்க்கைமுறையே  இன்னைக்கு மாறிப்போச்சி. எவ்வளவு பெரிய துரதிருஷ்டம் பாருங்க” என்று சொன்னபோது அவருடைய குரலில் வருத்தம் படிந்திருந்தது.

“இலட்சியவாதிகளைப்பத்தி மீண்டும் மீண்டும் படிப்பதன் வழியா நாட்டுல எங்கயாவது  எப்படியாவது ஒரு இலட்சியவாதி உருவாக வழி இருக்குது சார்” என்று குறிப்பிட்டேன். “அந்த நம்பிக்கையிலதான் சார் நான் இந்தத் தொடரையே எழுதறேன்”

ஒரு நொடிக்குப் பிறகு “நீங்க சொல்றது உண்மைதான். நாம நம்ம நம்பிக்கையை ஒருபோதும் விட்டுடக்கூடாது. எழுதுங்க. எழுதுங்க” என்றார் விட்டல்ராவ்.

அப்போது அவரிடம் சாஸ்திரியைப்பற்றி உரையாடி மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்று தோன்றியது. அதனால் “நீங்க சாஸ்திரியைப் பார்த்திருக்கீங்களா சார்?” என்று நானாகவே ஓர் உரையாடலைத் தொடங்கினேன். விட்டல்ராவ் ஒரு கணம் கூட தாமதிக்கவில்லை. “பார்த்திருக்கேன் பாவண்ணன், பார்த்திருக்கேன்” என்று பதில் சொன்னார் விட்டல்ராவ்.

அந்தப் பதில் எனக்கு உற்சாகத்தை அளித்தது. உடனே “எந்த வருஷம் சார்? எப்ப பார்த்தீங்க? எப்படி பார்த்தீங்க?” என்று கேள்விகளை  ஆர்வத்துடன் அடுக்கிவிட்டேன்.

”அறுபத்திமூனுல நான் மெட்ராஸ்க்கு வந்தேன். டெலிபோன்ஸ்ல ஆப்பரேட்டரா சேர்ந்தேன். அறுபத்தி நாலுல நேரு திடீர்னு காலமாயிட்டார். அவருக்கு அடுத்து பிரதமரா சாஸ்திரி வந்தாரு. அதுக்கப்புறம் ஆறேழு மாசத்துக்குள்ளயே அவர் ஒருதரம் மெட்ராஸ்க்கு வருந்தாரு. அப்ப நான் அவரை ரொம்ப பக்கத்துலேர்ந்து பார்த்திருக்கேன்”

எனக்கு அந்தச் செய்தி மிகவும் வியப்பாக இருந்தது. “உண்மையாவா சார்? யாராவது அழைச்சிட்டு போனாங்களா, இல்ல நீங்களா பார்த்தீங்களா?” என்று கேட்டேன்.

”எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரும் டெலிபோன் ஆப்பரேட்டர்தான். என் கூட வேலை செஞ்சாரு. எனக்கு ரெண்டு வருஷம் சீனியர். அவருதான் என்னை அவர்கிட்ட அழைச்சிகிட்டு போனாரு” என்றார் விட்டல்ராவ்.

“யாரு சார் அவர்? ஒரு பிரதமரை தெரிஞ்சி வச்சிருக்கிற அளவுக்கு செல்வாக்கான மனிதரா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.

“சொல்றேன். சொல்றேன்” என்று என்னை அமைதிகொள்ளச் செய்தார் விட்டல்ராவ்.  ”அவரு  பேரு பிரசன்ன வெங்கடேசன். கும்பகோணத்துக்காரர்”

“கும்பகோணத்துலேர்ந்து மெட்ராஸ்க்கு வந்திருந்தாரா?”

“ஆமாம். அந்தக் காலத்துல அப்படி ஒரு விதி இருந்தது. எல்லா மாவட்டத்துக்காரங்களும் மெட்ராஸ்க்கு வேலைக்கு வரலாம்னு. அப்படி வந்தவர் அவர். நானும் அவரும் ஒரே அறையில ரொம்ப காலம் இருந்தோம். அம்மா அப்பா இல்லை. உறவுகளோடு கூட பெரிய நெருக்கம் எதுவும் இல்லை. அவர் உண்டு. அவருடைய வேலை உண்டு. அவ்வளவுதான். ஓய்வு நேரத்துல நிறைய படிப்பாரு. தொழிற்சங்கத்துல ரொம்ப ஆர்வம் உள்ளவர்.”

“சரி சார், அவருக்கும் சாஸ்திரிக்கும் எப்படி தொடர்பு? புரியலையே”

“இருக்குது. இருக்குது. ஒரு சின்ன தொடர்பு இருக்குது.  அது புரியணும்னு சொன்னா, அவரைப்பற்றிய முழுப் பின்னணியையும் நீங்க புரிஞ்சிக்கணும்.”

“அவசரம் இல்லை சார். முழுசாவே சொல்லுங்க”

“அந்த காலத்துல எல்லா எக்சேஸ்ஞ்சுங்கள்லயும் என்.எஃப்.டி.இ. தொழிற்சங்கம்தான் ரொம்ப உறுதியான தொழிற்சங்கமா இருந்தது. அப்ப சீனிவாசராவ்னு ஒருத்தர் மெட்ராஸ் சர்க்கிள் செக்ரட்ரியா இருந்தாரு. நாங்க ரெண்டு பேருமே அந்த யூனியன்லதான் இருந்தோம். யூனியன் செயல்பாடுகள்ல பிரசன்னனுக்கு எப்பவுமே ஆர்வம்  உண்டு. நிறைய படிப்பாரு. நிறைய கேள்வி கேப்பாரு. அடிப்படையில கம்யூனிஸ்ட் கட்சி மேல ஒரு பற்று கூட உண்டு. அவருடைய ஆர்வத்தை பார்த்துட்டு, அவருக்காகவே டில்லில யூனியன் ஆபீஸ்ல அசிஸ்டெண்ட் ஜெனரல் செக்ரட்டரின்னு ஒரு போஸ்ட்ட உருவாக்கினாங்க.  அவரு மாசத்துக்கு ஒரு முறை போய் ஒரு வாரம் பத்து நாள் தங்கிட்டு வருவாரு. அவரு எப்ப போனாலும் தாதாகோஷ்பவன்ல ஒரு ரூம் குடுத்துடுவாங்க”

“சரி”

“யாராவது சொல்லி உண்டானதா, அல்லது அவருக்கு இயற்கையாவே அந்த தாக்கம் இருந்ததான்னு எனக்குத் தெரியலை. திடீர்னு காந்தியம் மீது பிரசன்னனுக்கு ஆர்வம் உருவாச்சி. உடனே காந்தியப் புத்தகங்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பிச்சாரு. எங்கயோ அவருக்கு காங்கிரஸ் இயக்க வரலாறு மூனு வால்யூம்ஸ் கெடைச்சிது. அதையெல்லாம் ராத்திரியும் பகலுமா படிச்சாரு. சத்திய சோதனை, தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்னு காந்தியடிகள் எழுதிய புத்தகங்களையும் வினோபா எழுதிய புத்தகங்களையும் வாங்கி வச்சிகிட்டு படிச்சாரு. அதனுடைய  விளைவா, அவருக்கு அடிப்படையில கம்யூனிஸம் மேல இருந்த ஈடுபாடு கொஞம் கொஞ்சமா குறைஞ்சி காந்தியம், காங்கிரஸ்னு மாறிடுச்சி.”

“அப்ப தொழிற்சங்கம்?”

“அதுல உறுதியாதான் இருந்தாரு. கடைசி வரைக்கும் என்.எஃப்.பி.டி. உறுப்பினராதான் இருந்தாரு. அதுல எந்த மாற்றமும் இல்லை”

“விசித்திரமாதான் இருக்குது”

“அந்த நேரத்துல சென்னையில கோபண்ணான்னு ஒருத்தர் இருந்தாரு. இப்பவும் இருக்காரு. காங்கிரஸ்ல பெரிய ஆள். அவருக்கும் பிரசன்னனுக்கும் எப்படியோ ஒரு தொடர்பு உருவாயிடுச்சி. அவரோடு பேசறது, பழகறது, விவாதிக்கறதுல ரொம்ப நேரம் செலவு செஞ்சாரு. அவரு டில்லிக்குப் போகிற சமயத்துல இவரும் டில்லிக்கு போவாரு. இவரு டில்லிக்கு போகற சமயத்துல அவரும் டில்லிக்குப் போவாரு. ரெண்டு பேருக்கும் நடுவுல அப்படி ஒரு நெருக்கம்”

“சரி”

“டில்லில அப்ப எங்கயோ பகுகுணாவைப் பார்த்துப் பேசி நண்பராயிட்டாரு. அப்ப அவரு நாடு தழுவிய அளவுல ஒரு பெரிய மது விலக்கு இயக்கம் ஒன்னை ஆரம்பிச்சிருந்தாரு. வட நாட்டுல பெண்கள் பெரிய அளவுல அந்த இயக்கத்துல பங்கெடுத்துகிட்டாங்க. அவரைச் சந்திச்சது, பேசினதையெல்லாம் மெட்ராஸ்க்கு வந்ததுமே எங்கிட்ட கதைகதையா சொல்வாரு பிரசன்னன். எல்லாத்தயும் பக்கம் பக்கமா டைரியில எழுதி வைப்பாரு.”

“டைரி எழுதற பழக்கம் உண்டா அவருக்கு?”

“ஆமாம். தினமும் எழுதுவாரு. அந்த டைரிங்க எல்லாம் இப்ப எங்க இருக்குதோ, யாருகிட்ட இருக்குதோ தெரியலை. இருந்தா, இன்னைக்கு அது ஒரு நாவல் மாதிரி இருக்கும். அந்த அளவுக்கு பலவிதமான அனுபவங்கள் அவருக்கு இருந்தது”

அதைக் கேட்ட போது வருத்தமெழுந்தது. “பெரிய இழப்புதான் சார். உயிரோடு இருக்கிற காலத்துல ரொம்ப பாடுபட்டு எழுதறாங்க. ஆனா, அவுங்க வாரிசுகளுக்கு அதும் மேல ஒரு மதிப்பும் இருக்கறதில்லை. பழைய பேப்பர் நோட்டு புஸ்தகம் வாங்கறவன்கிட்ட தூக்கி போட்டுட்டு போயிடறாங்க. என்னமோ தெரியலை, தலைமுறைக்கு தலைமுறை இடைவெளி ரொம்ப அதிகமாயிட்டே போவுது” என்று ஒரு வேகத்தில் நான் சொன்னேன். சில கணங்களுக்குப் பிறகே என்னுடைய அவசரமான இடையீடு, உரையாடலை பிரசன்ன வெங்கடேசன் கதையிலிருந்து  வெளியே தள்ளிவிட்டதை உணர்ந்தேன். உடனே சுதாரித்துக்கொண்டு “அது இருக்கட்டும், நம்ம பிரசன்னன் கதையை சொல்லுங்க சார்” என்றேன்.

“டில்லியில இப்படியே ஒவ்வொரு ஆளுமையா பிரச்சன்னனுக்கு அறிமுகமானாங்க. எல்லாத்துக்கும் மூல காரணம் கோபண்ணா. நாம தட்டினா திறக்காத பல கதவுகள் அவரு கைய வச்சாவே தெறந்துக்கற காலமா, அன்னைய காலகட்டம் இருந்தது. அந்த வரிசையில ஒருமுறை அவர் பிரதமரா இருந்த லால் பகதூர் சாஸ்திரியை போய் சந்திச்சாரு.”

“சாஸ்திரியையா?”

“ஆமாம். பிரதமர் சாஸ்திரியைத்தான். தமிழ்நாட்டைப் பத்தி அவர் என்னமோ சில கேள்விகள் கேட்டிருக்காரு. பிரசன்னனும் தனக்குத் தெரிஞ்சத சின்சியரா பதில் சொல்லியிருக்காரு. படிப்பு, வேலை, ஊரு விவரங்களயெல்லாம் கேட்டிருக்காரு. பேசிட்டு கெளம்பற சமயத்துல சாஸ்திரி மேசை மேல இருந்த பூஜாடியிலிருந்து ரெண்டு ரோஜா பூக்களை எடுத்து பிரசன்னனுக்கு கொடுத்திருக்காரு. அவரு அந்த பூக்களை தேவலோகத்துப் பூக்கள் மாதிரி நெனச்சி ரொம்ப சந்தோஷத்தோடு வாங்கிட்டு வெளியே வந்திட்டாரு”

“உங்ககிட்ட காட்டினாரா?”

“அந்த ரோஜா பூக்களை அப்படியே ஒரு புத்தகத்துல ரெண்டு பக்கங்களுக்கு நடுவுல வச்சி பாதுகாப்பா எடுத்துவந்து என்கிட்ட காட்டினாரு. என்கிட்ட மட்டுமில்லை, ரூமுக்கு வந்துபோகக்கூடிய எல்லார்கிட்டயும் காட்டினாரு. சாஸ்திரிய சந்திச்ச நாள்ல எழுதிய டைரிப்பக்கத்துல அந்தப் பூவை வச்சிகிட்டாரு. அது வாடி உலர்ந்து ஒரு தாள் மாதிரி ஆயிட்டுது. அப்பவும் அதை பத்திரமா வச்சிருந்தாரு. பத்து பதினைஞ்சி வருஷங்களுக்கும் மேல அந்த டைரிக்குள்ளயே அந்தப் பூவை வச்சிருந்தாரு. அவரைப் பொறுத்த வரைக்கும் அது வெறும் பூ இல்லை. சாஸ்திரியாகவே அத நெனச்சிகிட்டாரு. அதுவும் சாஸ்திரியுடைய சாவுக்குப் பிறகு அந்தப் பூவை அவர் புதையல் மாதிரி பாதுகாப்பா வச்சிருந்தாரு”

“அப்புறம் என்ன ஆனார்?”

“அவருடைய அறிவுக்கும் ஞானத்துக்கும் அவரு என்னென்னமோ ஆகியிருக்கலாம். ஆனா விதி அவரை எதுவாகவும் ஆக விடலை.”

விட்டல்ராவின் பதில் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. “என்ன சார் சொல்றீங்க?” என்று திகைப்புடன் கேட்டேன்.

“என்னன்னு சொல்றது பாவண்ணன்? அதுதான் காலத்துடைய கொடுமை.”

“என்ன சார் சொல்றீங்க, புரியலையே”

“தொழிற்சங்கமா இருந்தாலும் சரி, நிர்வாகமா இருந்தாலும் சரி, ஒரு மனுஷன் நேர்மையானவனா இருக்கணும்னு நெனைக்கிறவர் அவரு. தனிப்பட்ட லாபத்துக்காக ஒரு வேலையைச் செய்யறவனை அவருக்கு புடிக்கவே புடிக்காது. அதனால, அவருக்கு தொழிற்சங்க சைட்லயும் கெட்ட பேரு. நிர்வாகத்து சைட்லயும் கெட்ட பேரு. பெரிய அளவுல அவரால முன்னேற முடியலை.”

“த்ச் த்ச்”

“இந்திரா காந்தி நெருக்கடி நிலைமை சட்டத்தை நாடுமுழுக்க கொண்டு வந்த சமயத்துல, அது நாட்டுநலனுக்கான சட்டம்தான்னு பேசினாரு பிரசன்னன். எக்சேஞ்ச்ல இருக்கிறவங்க எல்லாருமே அதுக்கு எதிர்ப்பான மனநிலையில இருந்த சமயத்துல, பிரசன்னன் மட்டும் அது சரியான சட்டம்தான்னு உறுதியா சொன்னாரு. தேசிய அளவுல வலது கம்யூனிஸ்ட் கட்சி என்ன நிலைபாடு எடுத்தாங்களோ, அதே நிலைபாட்டை நம்ம தோழர் பிரசன்னனும் எடுத்தாரு.”

“உங்க ரெண்டு பேருக்கு நடுவுல நல்ல முறையில பேச்சு வார்த்தை  இருந்ததில்லையா?”

“அதிலெல்லாம் ஒரு குழப்பமும் இல்லை. நாங்க எப்பவும் போல சிரிச்சி பேசிகிட்டுதான் இருந்தோம்”

“சரி”

“பத்து வருஷம் சர்வீஸ் இருந்தா டிப்பார்ட்மென்ட் நடத்தக்கூடிய போட்டித்தேர்வுகளை எழுதலாம்னு ஒரு விதி இருந்தது. ஒருத்தரு நாப்பது வயசு வரைக்கும் அப்படி தேர்வுகளை எழுதி மேல மேல போவலாம். அப்படி ஒரு வசதி வச்சிருந்தாங்க. பிரசன்ன வெங்கடேசன் நல்ல புத்திசாலி. எவ்ளோ காலம்யா ஆப்பரேட்டராவே இருக்கறது, ஆர்.எஸ்.ஏ. எக்சாம், ஜே.இ. எக்சாம்னு ஏதாவது ஒரு எக்சாம் எழுதி பாஸ் பண்ணிட்டு போயிடலாம்பான்னு சொல்லி எனக்கும் சேர்த்து அப்ளிகேஷன் வாங்கி வந்தாரு. ரெண்டு பேரும் அப்ளை செஞ்சோம். ரெண்டு பேரும் புஸ்தகம் நோட்ஸ்லாம் வாங்கி வச்சிகிட்டு சின்சியரா படிச்சோம். ரெண்டு தரம் எழுதனோம்.”

“அப்புறம்?”

“சாதகமான முடிவு கிடைக்கும்னு ஒவ்வொரு தரமும் ரொம்ப நம்பிக்கையாத்தான் காத்திருந்தோம். ஆனா ரெண்டு மூனு மதிப்பெண்கள்ல முடிவு மாறி போச்சு. செலக்டாகலை”

“அடடா, ரெண்டு பேருக்குமா?”

“எனக்கு ரெண்டு முறையும் தோல்விதான். ஆனா பிரசன்னன் ரெண்டாவது முறை ஜே.இ.எக்சாம் எழுதிய சமயத்துல பாஸாயிட்டாரு..”

”அப்புறம்?”

“ஆனா, மேலதிகாரிகளுக்கு அவருக்கு ஜே.இ. போஸ்டிங் கொடுக்கக்கூடாதுன்னு ஒரு எண்ணம். அவரைப் பத்திய கான்பிடன்ஷியல் ரிப்போர்ட்ல கன்னாபின்னான்னு  எழுதி கெடுத்து வச்சிட்டாங்க. ஒரு எக்சாம்ல நீங்க பாஸ் பண்ணிட்டீங்கன்னா, உங்கள உடனடியா ட்ரெய்னிங்க்கு அனுப்பணும். அதுதான் விதி. ஆனா  அன்னைக்கு  ஆபிசரா இருந்த ஆள், பிரசன்னனுக்கு ட்ரெய்னிங் ஆர்டர் குடுக்காமலே காலம் தாழ்த்தினாரு.”

“ஏன்?”

“வெறுப்புதான். வெறுப்புக்கு என்ன காரணம் சொல்லமுடியும்?”

“அப்புறம்?”

‘பிரசன்ன வெங்கடேசன் சட்டப்படி அதை எதிர்கொள்ளணும்னு ரொம்ப வி்வேகத்தோடு ட்ரைப்யூனலுக்கு போனாரு. விசாரணைக்குப் பிறகு அவருக்கு உடனடியா ட்ரெய்னிங் ஆர்டர் கொடுக்கணும்னு தீர்ப்பு வந்தது. அதுக்குள்ள வேற ஆபீசர் வந்துட்டாரு. எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு அவர் ஃபைல தூக்கி ஓரம் கட்டிட்டாரு. யூனியன் மூலமா நெருக்கடி கொடுத்த சமயத்துல இதோ செய்றேன், அதோ செய்றேன்னு பேசிப் பேசியே காலம் தாழ்த்தினாரு. அதுக்குள்ள நம்ம பிரசன்னனுக்கு வெறுத்துப் போயிடுச்சி. சீ போங்கடான்னு அந்த விவகாரத்தையே தூக்கி கெடாசிட்டு ஆப்பரேட்டராவே இருந்துக்கறேன் போங்கடான்னு போயிட்டாரு.”

ஒரு கணம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அமைதியாக இருந்தேன். பிறகு என்னை நானே திரட்டிக்கொண்டு “அப்படின்னா, கடைசி வரைக்கும் ஆப்பரேட்டராவே இருந்து ரிட்டயராயிட்டாரா?” என்று கேட்டேன்.

“ரிட்டயர்மென்ட்டா?” என்று கேட்டுவிட்டு ஒரு கணம் அமைதியாக இருந்தார் விட்டல்ராவ். பிறகு ஒரு பெருமூச்சுடன் “இந்த உலகத்துலேர்ந்தே ரிட்டயர்மென்ட் வாங்கிட்டு போயிட்டாரு” என்றார்.

“என்ன சார் சொல்றீங்க?”

“உண்மைதான் பாவண்ணன், சர்வீஸ்ல இருக்கும்போதே செத்து போயிட்டாரு.”

“எப்படி?” என்று அதிர்ச்சியுடன் கேட்டேன்.

“என்னன்னு சொல்றது? அவரு வாழ்க்கையில எதுவும் நெனச்சது மாதிரி  நடக்கலை. ஆள் கொஞ்சம் குள்ளமா இருப்பாரு. ஆனா நல்ல அழகா களையா  இருப்பாரு. யாரையாவது கல்யாணம் பண்ணிக்குங்க, நாங்க எல்லாரும் பக்கத்துல இருந்து நடத்தி வைக்கறோம்னு அவருக்கு நம்பிக்கையூட்டினோம். எக்சேஞ்ச்லயே ஒன்னு ரெண்டு பொண்ணுங்க அவரை கல்யாணம் செஞ்சிக்க தயாரா இருந்தாங்க. ஆனா, அவருதான் புடியே கொடுக்கலை. வேணாம் தோழர், வேணாம் தோழர்னு தள்ளி தள்ளி போட்டுட்டே வந்தாரு. ஒரு கட்டத்துல அவரை வற்புறுத்தறதயே நாங்க விட்டுட்டோம்”

“அப்புறம்?”

“அவரா திடீர்னு ஒரு பொண்ண கல்யாணம் செஞ்சிகிட்டாரு. சரி, எப்படியாவது வாழ்க்கையில ஒரு கட்டுக்கோப்புக்கு வந்தா போதும்னு நாங்க யாருமே ஒன்னுமே சொல்லலை. ஆனா, அந்த பொண்ணுக்கும் அவருக்கும் நடுவுல என்னமோ பிரச்சினை. எதுவோ ஒன்னு சரியில்லை. அவரை அம்போன்னு விட்டுட்டு ரெண்டு வயசு புள்ளையோட டில்லிக்கு போயிட்டுது.”

“டில்லிக்கா?”

“பல தரம் அவர் டில்லிக்கு போய் போய் அந்த அம்மாவை வரச் சொல்லி கெஞ்சுவாரு. ஆனா அந்த அம்மா அவரை வீட்டுப் பக்கமே சேர்க்காது. பிள்ளை மூஞ்சிய கூட கண்ணுல காட்ட மாட்டங்களாம். போ போன்னு ஒரு நாயை விரட்டுறமாதிரி விரட்டிவிட்டுடுவாங்களாம்”

“பிறகு?”

“ஒரு கட்டத்துல போகறதயே நிறுத்திட்டாரு. ஆனா, அதுக்குள்ள குடிப்பழக்கத்துக்கு அடிமையாயிட்டாரு. ஒரு காலத்துல மதுவிலக்கு போராட்டத்தை பாராட்டிச் சொன்ன ஆள், கடைசி காலத்துல மதுவுக்கு அடிமையாகி அனாதையா செத்து போயிட்டாரு”

நான் அந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. “என்ன சார் இது? கடைசியில சோகத்துல முடிஞ்சிட்டுது நம்ம பிரசன்னன் கதை” என்றேன்.

“பொதுவா பத்திரிகையில விதி விளையாடியதுன்னு எழுதுவாங்க, படிச்சிருக்கீங்களா? அந்த மாதிரி நம்ம பிரசன்னன் வாழ்க்கையில விதி ரொம்ப மூர்க்கமா விளையாடி அவரை வீழ்த்திடுச்சி. அப்படித்தான் சொல்லத் தோணுது”

“கேக்கறதுக்கே ரொம்ப சங்கடமா இருக்குது சார்”

“எனக்கு அந்தக் காலகட்டத்துல அவர் முடிவு தாங்கிக்கவே முடியாத பாரமா இருந்தது பாவண்ணன். பல வருஷங்களா நானும் அவரும் ஒரே அறையில இருந்தவங்க. பேசிப் பழகினவங்க. கடைசி காலத்துல யாருமே இல்லாத அனாதையா செத்துபோயிட்டாரு அவரு. அதைப் பார்க்க பார்க்க என் நெஞ்சே வெடிக்கிற மாதிரி இருந்தது. ஆஸ்பத்திரியிலேர்ந்து உடலை வாங்கிட்டு எங்க எடுத்துட்டு போறதுன்னு தெரியாம தவியா தவிச்சிட்டோம். சொந்தமா வீடு இல்லை. வாசல் இல்லை. உறவு இல்லை. அந்த நேரத்துல நாங்க அடைஞ்ச துயரத்துக்கு அளவே இல்லை”

“கடைசியா என்னதான் செஞ்சீங்க?”

“ஜகஜீவன்ராம் நகர்ல டெலிபோன்ஸ்க்கு சொந்தமான க்வார்ட்டர்ஸ் இருந்தது. அங்க ஒரு தோழர் இருந்தாரு. நம்ம தோழரை இங்க கொண்டு வாங்க தோழர். நாம இங்க வச்சி இறுதி மரியாதை செலுத்திட்டு சுடுகாட்டுக்கு போகலாம்னு சொல்லி, அவருதான் தைரியம் கொடுத்தாரு. அவர் அன்னிக்கு சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் பிரசன்னனுக்கு ஒரு கெளரவமான இறுதிச்சடங்கை செய்யறதுக்கு ஒரு வாய்ப்பை அமைச்சிக் கொடுத்தது. அதை ஒருநாளும் என்னால மறக்கமுடியாது”

ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்ட குரலில் சொன்னார் விட்டல்ராவ். “அந்த மாதிரியான சாவு ஒரு எதிரிக்கும் கூட வரக்கூடாது பாவண்ணன். அன்னைக்கு அனுபவிச்ச சங்கடங்களையும் வேதனைகளையும்தான் பிற்காலத்துல நான் காம்ரேடுகள்ங்கற தலைப்பில ஒரு நாவலா எழுதினேன்.

அவர் அந்தப் பெயரைச் சொன்னதும் அந்த நாவல் என் நெஞ்சில் விரிந்துவிட்டது. பிரசன்ன வெங்கடேசனுக்கும் நாவலுக்கும் இவ்வளவு நேரமும் தோன்றாத ஒற்றுமையை அக்கணத்தில் புரிந்துகொண்டேன். ”ஞாபகம் இருக்குது சார்” என்று பொறுமையாகச் சொன்னேன்.

“பிரசன்ன வெங்கடேசன் அடிப்படையில ரொம்ப நல்லவர். நல்ல புத்திசாலி. அடுத்தடுத்து அவருக்கு வாழ்க்கையில ஏற்பட்ட தோல்விகள் அவரை இஷ்டம்போல உதைச்சி பந்தாடிடுச்சி. கொஞ்சம் தைரியமா இருந்திருந்தா மீண்டிருக்கலாம். ஆனா திடீர்னு அவரு கோழையாகி மதுவுக்கு அடிமையாகிட்டாரு. மது மீட்சி தரும்னு நெனச்சிட்டாரு. ஆனா அது கடைசியா அழிவைத்தான் கொடுத்தது. அதை உணர்வதற்குள்ள அவரே இல்லாம போயிட்டாரு”

பெருமூச்சுடன் விட்டல்ராவ் சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு வடிகால்போல இருக்கட்டும் என நான் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுகொண்டிருந்தேன்.

“சாஸ்திரி கொடுத்த ரோஜா, சாஸ்திரி கொடுத்த ரோஜான்னு அந்த வாடிய தோற்றத்தோடு ரெண்டு சிவப்பு ரோஜாக்களை டைரிக்குள்ள வச்சி கொண்டுவந்து பரவசத்தோடு காட்டினதெல்லாம் இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்குது. நோட்டுக்குள்ள அது மடிஞ்சியிருக்கிறத பார்க்கும்போது என்னமோ ரத்தக்கறை மாதிரி இருக்கும்”

விட்டல்ராவ் மறுமுனையில் ஒருமுறை மூச்சை இழுத்துக்கொண்டு தொண்டையைச் செருமி சரிப்படுத்துக்கொள்வதை  ஓசை வழியாகவே உணர்ந்து அமைதியாக இருந்தேன்.

 ”சாஸ்திரி சென்னைக்கு வந்த சமயத்துல பார்த்திருக்கேன்னு சொன்னேனில்லையா?  அப்ப கோபண்ணா பிரசன்னனை அழைச்சிகிட்டு போனாரு. அவருக்குத் துணையா நானும் போனேன். ரொம்ப பக்கத்துல நின்னு சாஸ்திரியை பார்க்கிறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. பிரசன்னனைப் பார்த்ததுமே ஹெள ஆர் யூ மை டியர் யங் மேன்னு சிரிச்சிகிட்டே கேட்டாரு சாஸ்திரி. அவரு வணக்கம் சொல்லிகிட்டே ஏதோ பதில் சொன்னாரு. அப்பதான் அவுங்க ரெண்டு பேருக்கும் இருந்த ஒற்றுமையை கண்டுபுடிச்சேன். ரெண்டு பேருமே ஒரே உயரம். ஒரே மாதிரியான உடல்வாகு. எல்லாமே எனக்கு ஞாபகம் இருக்குது. த்ச், பாவம், பிரசன்னன்தான் பாதி சினிமாவுல எழுந்து போறமாதிரி அரைகொறயா வாழ்ந்துட்டு போயிட்டாரு”

உரையாடல் தானாகவே அந்தப் புள்ளியில் நின்றுவிட்டது. டைரிப்பக்கங்களுக்கு நடுவில் வாடி ஒரு காகிதம்போல உருமாறியிருக்கும் ரோஜாப்பூக்களின் தோற்றம் உடனடியாக என் மனத்தில் எழுந்தது.

                                   

(அம்ருதா – நவம்பர் 2023 )