Home

Monday 27 November 2023

அண்ணல் தங்கோ என்கிற சுவாமிநாதன் : தேசமும் மொழியும்

  

1920ஆம் ஆண்டு தொடக்கத்தில் டில்லியில் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பான திட்டங்களை காந்தியடிகள் அறிவித்தார். அரசு வழங்கியிருக்கும் பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும் துறத்தல்,  ஊதியம் பெறும் அரசாங்கப்பதவிகளிலிருந்து விலகுதல், அந்நிய நாட்டுத்துணிகளை விலக்குதல். நீதிமன்றங்களிலிருந்து வழக்கறிஞர்கள் வெளியேறுதல்,  அரசு கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் வெளியேறுதல் என எல்லா விதங்களிலும் அரசுடன் ஒத்துழைப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்பதுதான் அவருடைய திட்டம்.


காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமைத் திட்டம் தொடர்பாக கருத்து கேட்கச் சென்ற பத்திரிகையாளர்களிடம் அன்றைய இந்திய வைசிராய் ரீடிங் ’காந்தியடிகளின் திட்டங்கள் அனைத்தும் பொருளற்றவையாகவும் அறிவுபூர்வமான அணுகுமுறையற்றவையாகவும் உள்ளன’ என்று நையாண்டியுடன் குறிப்பிட்டார். ஆனால் அரசாங்கத்தின் விமர்சனங்களைப்பற்றி கிஞ்சித்தும் கவலையின்றி உற்சாகத்துடன் செயல்பட்ட காந்தியடிகள் 01.08.1920 அன்று ஒத்துழையாமை திட்டம் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, மக்களிடையில் அத்திட்டத்தைப்பற்றி எடுத்துரைத்து ஆழமான அளவில் புரிதலை உருவாக்க நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

கொஞ்சம்கொஞ்சமாக நாட்டுமக்களிடையில்  ஒத்துழையாமைத் திட்டத்துக்கு ஆதரவு பெருகியது. 1920, 1921 என அடுத்தடுத்து இரு ஆண்டுகளும் அவர் தமிழ்நாட்டுக்கு வந்து மக்களிடையில் உரையாற்றி ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவைத் திரட்டினார். அவருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, காங்கிரஸில் சேர்ந்து தேசத்தொண்டுக்காக ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டனர். குடியாத்தம் பகுதியில் கடை வைத்து  வணிகத்தில் ஈடுபட்டிருந்த இளைஞரொருவரும் அந்தச் செயல்வீரர்களின் வரிசையில்  இருந்தார். அவர் பெயர் சுவாமிநாதன்.

குடியாத்தத்துக்கு அருகிலிருந்த திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியின் தாலுகா மாநாடு 1922இல் நடைபெற்றது. அம்மாநாட்டுக்கு ஈ.வெ.ரா. தலைமை தாங்கினார். சென்னை, வேலூர் நகரங்களைச் சார்ந்த பல தலைவர்கள் அந்த மாநாட்டில் தேசபக்தியை ஊட்டும் வகையில் உரையாற்றினர். அவற்றைக் கேட்டு ஊக்கம் கொண்ட இளைஞர் சுவாமிநாதன் தன்னால் இயன்ற வகையில் நாட்டுக்குத் தொண்டாற்ற வேண்டும் என மனத்துக்குள் உறுதியெடுத்துக்கொண்டார்.

காந்தியக் கொள்கைகளான கதர், மது எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு  ஆகிய மூன்று முக்கியத்தளங்களிலும் சுவாமிநாதன் ஆர்வத்துடன் பாடுபட்டார். 1923இல் திருப்பத்தூர் தாலுகா அரசியல் மாநாட்டை முடித்துக்கொண்டு மதுரைக்குச் சென்றார். அங்கிருந்த தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த வைத்தியநாத ஐயருடன் இணைந்து சுவாமிநாதனும் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். அவருடைய நண்பரான சிதம்பர பாரதியும் அவரோடு இணைந்துகொண்டார். காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.   தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை கிடைத்ததும், மீண்டும் கள்ளுக்கு எதிரான பிரச்சாரத்திலும் கள்ளுக்கடை மறியலிலும் சுவாமிநாதன் ஈடுபட்டார். காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்து மூன்று மாத காலம் சிறைத்தண்டனை விதித்தது.  தண்டனைக்காலத்தை மதுரைச்சிறையில் கழித்தார் சுவாமிநாதன்.

சுவாமிநாதன் குடியாத்தத்துக்குத் திரும்பிவந்த சிறிது கால இடைவெளியில் நாக்பூரில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்ட ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் தொண்டர்கள் அகில இந்திய தேசியக்கொடியையும் காங்கிரஸ் கொடியையும் பயன்படுத்தினர். மக்கள் தம் வீடுகளிலும் அக்கொடிகளைப் பறக்கவிட்டனர். ஆங்கிலேய அரசு அதற்குத் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் பதின்மூன்றாம் தேதி வரைக்கும் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நினைவுகூரும் வண்ணம் தேசியக் கொடி வாரத்தைக் கடைப்பிடித்தது. இறுதிநாளான 13.03.1923 அன்று  தேசியக்கொடியை ஏந்தி நடையிடும் ஊர்வலமொன்றை காங்கிரஸ் இயக்கத்தினர் திட்டமிட்டது. ஆனால் அந்த ஊர்வலத்தை அரசு தடை செய்தது.

தடையை மீறி  நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஜம்னாலால் பஜாஜ் தலைமையில் கொடியேந்தி நெடுஞ்சாலையில் ஊர்வலமாகச் சென்றனர். தடியடி நடத்தி அந்த ஊர்வலத்தைக் கலைத்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அடுத்த சில தினங்களிலேயே இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் விடுதலை இயக்கத் தொண்டர்கள் அணிஅணியாக நாக்பூருக்குச் சென்று ஒவ்வொரு நாளும் கொடி ஊர்வலங்களை நடத்தி கைதாகி சிறைபுகுந்தனர். குடியாத்தத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் சென்ற சுவாமிநாதனும் கைது செய்யப்படார். சுவாமிநாதனுக்கு ஏழு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. நாக்பூர், பிடல், சாகர் ஆகிய சிறைகளில் மாறிமாறி அடைக்கப்பட்டு தண்டனைக்காலத்தைக் கழித்தார் சுவாமிநாதன். சிறை அதிகாரிகள் அவருடைய இரு கால்களிலும் கைகளிலும் விலங்குகளை மாட்டி, சோளம் அரைக்கவைத்து, நார் அடிக்கவைத்து துன்புறுத்தினர்.

தொடர்ச்சியாக 109 நாட்கள் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் 1850 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இறுதியாக ஆகஸ்டு மாதம் அரசாங்கத்துக்கும் காங்கிரஸ் இயக்கத்தினருக்கும் இடையில் ஓர் இணக்கமான உடன்பாடு ஏற்பட்டது. அதையொட்டி கொடியேந்திச் செல்லும் ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் விடுதலை பெற்றனர். சுவாமிநாதனும் விடுதலையாகி குடியாத்தம் திரும்பினார். குடியாத்தத்திலும் அருகிலுள்ள வேலூர், இராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி, ஆற்காடு பகுதிகளில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று கதர்ப்பிரச்சாரத்திலும் மது ஒழிப்பு பிரச்சாரத்திலும் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்திலும் தொடர்ந்து ஈடுபட்டார்

கதர் யாத்திரையின் பொருட்டு நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த காந்தியடிகள் 01.09.1927 அன்று குடியாத்தத்துக்கு வந்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அந்த ஊரில் பெரிய மதக்கலவரம் நடந்தது. அன்று அவருக்கு வாசித்து வழங்கப்பட்ட வரவேற்புரையில்  ”உங்கள் உடல்நலக்குறைவு காரணமாக நீங்கள் நந்தி குன்றிலேயே தங்கி உங்கள் பயணத்தை ஒத்திவைத்தது ஒருவகையில் இறைவனின் கருணையால் நிகழ்ந்த செயலாகவே நினைக்கவேண்டும். நீங்கள் முதலில் திட்டமிட்டபடி வந்திருந்தால் ஊரில் நிலவிய மதப்பிணக்குகளைக் கண்டு பெரிதும் துயரமடைந்திருப்பீர்கள். இப்போதுதான் நாங்கள் அதிலிருந்து விடுபட்டு ஒற்றுமை அடைந்து வருகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர். அன்றைய கூட்டத்தில் மதநல்லிணக்கத்தின் அவசியத்தைப்பற்றி காந்தியடிகள் உருக்கமுடன் உரையாற்றினார்.

அதே தினத்தில் ஆற்றுப்படுகையில் மற்றொரு பொதுக்கூட்டமும் நடைபெற்றது. மக்கள் திரள் முண்டியடித்து நின்றது. ஒருவராலும் அங்கே அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. அக்கூட்டத்தில் நின்றிருந்த சுவாமிநாதனும் பிற தன்னார்வத் தொண்டர்களும்  எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. மனவருத்தமுற்ற காந்தியடிகள் அமைதியாக வாகனத்தில் ஏறி அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு ஊருக்கு வெளியே ஒரு மரத்தடிக்குச் சென்று உட்கார்ந்துவிட்டார். தாம் அமைதியாக இல்லாததால்தான் காந்தியடிகள் அங்கிருந்து வெளியேறிவிட்டார் என்பதைப் புரிந்துகொண்டு பொதுமக்கள் மெல்ல மெல்ல அமைதி காத்தனர். கூட்டம் தொடங்குவதாகக் குறிப்பிட்டிருந்த ஐந்தரை மணிக்குச் சரியாக காந்தியடிகள் கூட்டத்துக்கு வந்தார். அப்போது அனைவரும் அவருக்கு வழிவிட்டு அமைதியாக நின்றனர். மேடைக்குச் சென்ற காந்தியடிகள் மத ஒற்றுமையைப்பற்றியும் விடுதலையைப்பற்றியும் சிறிது நேரம் உரையாற்றிய பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்

சென்னையில் ஸ்ரீநிவாச ஐயங்காரின் இல்லத்தில் காந்தியடிகள் தங்கியிருந்தபோது, சத்தியமூர்த்தியும் பிற தலைவர்களும் தொண்டர்களும் அவரைச் சந்தித்து நீல் சிலை அகற்றுவதற்கான போராட்டத்தைப்பற்றி உரையாடினர். நீல்சிலை சத்தியாகிரகத்தில் காங்கிரஸ் நேரிடையாக பங்கேற்கமுடியாது என்றும் இளைஞர்களே அதை மேற்கொள்ள வேண்டுமென்றும் காந்தியடிகள் கருத்துரைத்தார். இதன் விளைவாக ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொண்டர்கள் நீல் சிலைக்கு அருகில் சத்தியாகிரகம் செய்து சிறைபுகுந்தனர்.

குடியாத்தம் சார்பில் அப்போராட்டத்தில் பங்கேற்ற சுவாமிநாதனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடைத்தது. சுவாமிநாதன் கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய சிறைவாசத்தின்போது குற்றவாளிகள் மறுவாழ்வு நிதிக்காக கைதிகள் கூடி ஒரு நாடகத்தை மேடையேற்றும் திட்டம் உருவானது. அவர்கள் பம்மல் சம்பந்தம் எழுதிய ’லீலாவதி சுலோசனா’ என்னும் நாடகப்பிரதியை எடுத்து பயிற்சியெடுத்துக்கொண்டனர். அந்நாடகத்தில் சுவாமிநாதன் கதாநாயகனாக நடித்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார்.

இங்கிலாந்து அரசாங்கம் 1927இல் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றக் குழுவொன்றை அமைத்தது. அந்தக் குழு உடனடியாக இந்தியாவுக்குச் சென்று அனைத்துக் கட்சியினரையும் சந்தித்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்து, எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எப்படிப்பட்ட சீர்திருத்தங்கள் தேவைப்படும் என்பதைப்பற்றிக் கலந்துரையாடி தம் கருத்துகளை ஓர் அறிக்கையாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டது.  அந்த உத்தரவையேற்று அக்குழு இந்தியாவுக்கு 03.02.1928 அன்று பம்பாய்க்கு வந்து சேர்ந்தது. இந்தியாவின் எதிர்காலம் குறித்து அறிக்கையைத் தயாரிக்கும் குழுவில் ஓர் இந்தியர் கூட இடம் பெறாததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சைமன் குழுவைப் புறக்கணித்து ‘சைமன் குழுவே, திரும்பிப் போ’ என முழக்கமிட்டது. தேசமெங்கும் அக்குரல் எதிரொலித்தது. நாடெங்கும் இளைஞர்கள் சைமன் குழுவுக்கு எதிராக குரல்கொடுத்தனர்.

சுவாமிநாதன் குடியாத்தம் பகுதியில் பல மேடைகளில் சைமன் குழுவுக்கு எதிராக உரையாற்றத் தொடங்கினார். வேலூர், இராணிப்பேட்டை வட்டாரத்தைச் சுற்றி ஏற்கனவே சைமன் குழுவுக்கு எதிராக மேடைகளில் குரல்கொடுத்துக்கொண்டிருந்த  அனந்தாச்சாரி, ஜமதக்னி, சுந்தரவரதன் ஆகியோருடன் சுவாமிநாதனும் இணைந்துகொண்டார். நான்கு பேருடைய உரைகளாலும் பொதுமக்களிடையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கும் சுதந்திர ஆட்சிக்கும் உள்ள வேறுபாடுகள் தொடர்பான விழிப்புணர்ச்சி பரவத் தொடங்கியது.  அவர்களுடைய ஆழமான மேடைப்பேச்சுகள் வழியாக காங்கிரஸ் கட்சியின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் அறிந்துகொள்ளத் தொடங்கினர்.

அந்த நான்கு பேருடைய பேச்சின் தீவிரத்தை உணர்ந்த காவல் துறை, அரசாங்கத்தை நிந்திக்கும் வகையில் ஒருபோதும் பேசக்கூடாது என அவர்களுக்குத் தடை விதித்தது. அவர்கள் உரையாடும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து வந்து கண்காணிக்கத் தொடங்கியது. அதனால் நால்வரும் அரசாங்கத்தைப்பற்றி எதுவும் பேசாமல், சைமன் குழு என்பது கண்துடைப்பாக உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் மட்டும் எடுத்துரைத்தனர். மேலும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு காங்கிரஸ் கட்சியின் கனவுத்திட்டங்களைப்பற்றி விரிவாகப் பேசினர்.

அக்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர அனைவரும் தயங்கிக்கொண்டிருந்தனர். நால்வருடைய உரைகளாலும் மக்களிடையில் அத்தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அகலத் தொடங்கியது. வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்தபோதும் ஓரிரு இளைஞர்கள் மட்டுமே ஒருசில பகுதிகளில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொண்டனர். அதையே பெரிய சாதனையாகக் கருதிய நால்வரும் கிராமங்கள்தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவ்விதமாக உணவையும் உறக்கத்தையும் மறந்து நடமாடிக்கொண்டிருந்த நால்வரையும் எப்படியாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து கைது செய்துவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் காவல்துறையினர் ஓய்வில்லாமல் அவர்களைப் பின்தொடர்ந்தபடி இருந்தனர். நான்கு இளைஞர்களுக்கும் யாரும் உதவி செய்யக்கூடாது என காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

ஒருமுறை ஆற்காட்டை அடுத்து செங்காடு என்னும் கிராமத்தில் சுவாமிநாதனும் பிற நண்பர்களும் வழக்கம்போல காந்தியடிகளின் கொள்கைகள் பற்றியும் நாட்டின் எதிர்காலம் குறித்தும் உரை நிகழ்த்தினர். கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றனர். நான்கு பேருக்கும் நல்ல பசி. ஆனால் உணவுண்ண அந்த ஊரில் எந்த வழியும் இல்லை.  அவர்களுக்கு உணவு கொடுக்க எந்தக் குடும்பமும் தயாராக இல்லை. அந்த ஊரைச் சேர்ந்த கிராம முனிசீப் அடிப்படையில் கோழைமனம் கொண்டவர் என்றபோதும் இளைஞர்களின் பசித்த முகங்களைக் கண்டதும் அவருக்கு மனம் இளகிவிட்டது. அதனால் “போலீசைப்பற்றி பிறகு கவலைப்படலாம். முதலில் பசியால் வாடியிருப்பவர்களுக்கு உணவு வழங்கு” என்று தன் துணைவியாரிடம் சொல்லி உணவு கொடுக்க வழிசெய்தார்.  நான்கு இளைஞர்களும் அன்று அவருடைய வீட்டில் உணவுண்டு பசியாறினர்.  எதிர்பாராத விதமாக, அச்செய்தி காவல்துறையினர் கவனத்துக்குச் சென்றுவிட்டது. உடனே தாசில்தார் பொறுப்பிலிருந்து அரசு அவரை வெளியேற்றியது.

நால்வரும் செங்காடு கிராமத்திலேயே குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு அதில் வசித்தபடி தேசபக்தி ஊட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஒருநாள் காலை நேரத்தில் குடிசைக்கு முன்னால் ஒரு கம்பத்தில் கொடியேற்றி விழா நடத்திக் கொண்டாட முடிவெடுத்து, ஊர்முழுதும் அறிவிப்பு செய்தனர். உடனே கொடிக்கம்பத்தைச் சுற்றி சிறியவர்களும் பெரியவர்களும் கூடி நிறைந்துவிட்டனர். பொது இடத்தில் கொடியேற்றுவது அப்போது தடைசெய்யப்பட்டிருந்தது. முதல் முறை கொடியேற்றி முடித்த வேளையில் கம்பம் முறிந்து கொடி கீழே விழுந்தது.  உடனே கம்பத்தைச் சரிப்படுத்தி, இரண்டாவது முறை கொடியேற்ற முனைந்தனர். அப்போதும் கம்பம் ஒருபக்கமாகச் சாய்ந்து கொடி கீழே விழுந்தது. அபசகுனமாக ஏன் அப்படி நேர்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியாமல் குழப்பத்துடன் நால்வரும் கம்பத்தை நேராக்கும் வேலையில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினரின் வாகனம் வேகமாக அந்த இடத்தில் வந்து நின்றது. போலீஸ் சூப்பிரண்டென்ட்டும் ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் இறங்கிவந்தனர். நால்வரையும் கைது செய்வதற்குரிய உத்தரவு அவர்களுடைய கையில் இருந்தது. அதைக் காட்டியதும் சுவாமிநாதனும் அவர் நண்பர்களும் அமைதியாக காவல்துறை வாகனத்துக்குள் ஏறிக்கொண்டனர்.  நால்வர் மீதும் இராஜத்துவேஷ வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நால்வருக்கும் ஓராண்டு காலம்  சிறைத்தண்டனை கிடைத்தது.  அனைவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தண்டனைக்காலம் முடிவடைந்ததும் நால்வரும் விடுதலை பெற்று வீடு திரும்பினர். சில மாதங்களுக்குப் பிறகு நேரு தலைமையில் லாகூரில் 16.04.1929 அன்று அகில இந்திய காங்கிரஸ் மாநாடு தொடங்கி 18.04.1929 வரைக்கும் நடைபெற்றது. அப்போது, ’வந்தே மாதரம்’ முழக்கத்துக்கிடையே ரவி நதிக்கரையில் இந்திய நாட்டின் சுதந்திரக்கொடியை நேரு முதன்முதலாக ஏற்றிவைத்தார். அந்தக் கொடியேற்றத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் இயக்கத்தின் மீது ஒருவித நம்பிக்கையும் பற்றும் பிறந்தன. நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்த பொருளாதாரச் சீர்குலைவுகளுக்கும் பிரிட்டன் ஆட்சியின் சுரண்டலுக்கும் இடையிலான தொடர்பை அவர்கள் மெல்லமெல்லப் புரிந்துகொள்ளத் தொடங்கினர். காந்தியத் தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பையும் தியாக வாழ்க்கையையும் துணிச்சலையும் பாராட்டினர்.

சொந்த ஊரில் சுவாமிநாதன். மதிப்புக்குரிய ஆளுமையாக வளர்ந்தார். நாடெங்கும் ஊர்தோறும் தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லவேண்டும் என்ற காங்கிரஸ் மகாசபையின் வேண்டுகோளுக்கிணங்க, குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த தேசபக்தர்களையும் சிறுவர்களையும் திரட்டி வரிசையில் நிற்கவைத்து, அனைவருக்கும் முன்னால் தேசியக்கொடியை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றார் சுவாமிநாதன்.

ஆங்கில அரசு விதித்திருந்த உப்புவரியை அறவழியில் எதிர்க்கும் வகையில் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். அவருடைய தலைமையில் தேர்ந்தெடுத்த தொண்டர் குழு 12.03.1930 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்டு குஜராத் மாநிலத்தில் 240 கி.மீ. தொலைவில் உள்ள தண்டி கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கியது. அதையடுத்து, இராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் கடற்கரையை நோக்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர் குழுவொன்று நடைப்பயணத்தைத் தொடங்கியது.

உப்பு சத்தியாகிரகம் பற்றிய செய்தி கிடைத்ததுமே, குடியாத்தத்தில் வசித்த மக்களுக்கு உப்பு சத்தியாகிரகத்தைப்பற்றிய விழிப்புணர்வை ஊட்டவேண்டும் என நினைத்தார் சுவாமிநாதன். அதே காலகட்டத்தில் செங்காடு கிராமத்தில் கெளதம ஆசிரமம் என்னும் பெயரில் ஆசிரமமொன்றை அமைத்து, அவருடைய நண்பர்களான ஆக்கூர் அனந்தாச்சாரியும் ஜமதக்னியும் காந்தியக்கொள்கைகளை மக்களிடையே  பரப்பிவந்தனர்.  அவ்விருவரும் கூர்மையான முறையில் உரையாற்றும் ஆற்றல் நிறைந்தவர்கள். அவர்களை குடியாத்தத்துக்கு வரவழைத்து சத்தியாகிரகத்தைப்பற்றிய தெளிவை உருவாக்கவேண்டும் என நினைத்தார் சுவாமிநாதன். உடனே குடியாத்தத்துக்குப் புறப்பட்டு வருமாறு அவ்விருவருக்கும் கடிதம் எழுதி வரவழைத்தார்.

அனந்தாச்சாரியும் ஜமதக்னியும் வேலூரிலிருந்து புறப்பட்டு வாலாஜாபேட்டை, இராணிப்பேட்டை, ஆற்காடு வழியாக, குடியாத்தத்துக்கு நடைப்பயணமாகச் செல்ல முடிவெடுத்தனர். அவர்கள் தங்குமிடங்களிலும் உரையாடும் இடங்களிலும் காவலர்களின் ஒற்றர் படை பின்தொடர்ந்து வந்தபடி இருந்தது. எந்த இடத்திலும் பொதுஅமைதி குலையாவண்ணம் சத்தியாகிரகத்தை முன்வைத்து உரையாற்றியபடி அவர்கள் குடியாத்தத்துக்குச் சென்று சேர்ந்தனர். சுவாமிநாதனும் மற்ற தொண்டர்களும் அவர்களை வரவேற்றனர். ஆற்றங்கரையில் மாபெரும் கூட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் நகரத்தின் கிழக்குப்பகுதியில் அம்மன் கோவிலையொட்டி ஒரு சத்தியாகிரக ஆசிரமத்தை சுவாமிநாதன் அமைத்தார். அனைவரும் அங்கேயே தங்கிக்கொண்டனர். அதற்கு அருகிலேயே தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பு இருந்தது. தெருத்தெருவாக ஊர்வலங்களும் கூட்டங்களும் நடத்தினர். தொடக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் தனிக்கூட்டமாகவும் பிற சாதியினர் தனிக்கூட்டமாகவும் அமர்ந்து உரைகளைக் கேட்டனர். அது காண்பதற்கே மனமொவ்வாத காட்சியாக இருப்பதை உணர்ந்தார் சுவாமிநாதன். தேச விடுதலையைப்பற்றி உரையாடும் தருணத்தில் சாதிகளின் அடிப்படையில் மக்கள் தனிக்கூட்டமாக பிரிந்து நிற்பதை அவர் மனம் ஏற்கவில்லை. அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவும் பாடுபடவும் இதுவே பொருத்தமான தருணம் என நினைத்த அவர் சாதிஒற்றுமை குறித்து மனமுருக உரையாற்றினார். அனந்தாச்சாரியும் ஜமதக்னியும் அவ்வழியிலேயே தம் உரைகளை அமைத்துக்கொண்டனர். அவர்கள் உரையாற்றும்போதே உயர்சாதியினரின் கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக எழுந்து தாழ்த்தப்பட்டோர் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி நடந்துவந்து நெருக்கமாக அமர்ந்துகொண்டனர். குடியாத்தம் பகுதியில் அதுவரை வரலாறு காணாத மாற்றத்தை அன்றைய சத்தியாகிரகக் கூட்டம் உருவாக்கியது.

காந்தியடிகளின் தண்டி யாத்திரையும் இராஜாஜியின் வேதாரண்யம் யாத்திரையும் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தபோது, சென்னையில் பிரகாசம் தலைமையில் மற்றொரு தொண்டர் படை கடற்கரையில் திரண்டிருந்தது. சென்னை இராயப்பேட்டையில் உதயவனம் என்னும் கட்டிடத்தை சத்தியாகிரக ஆசிரமமாக அவர் அமைத்திருந்தார். குடியாத்தத்தில் சுவாமிநாதனும் அனந்தாச்சாரியும் ஜமதக்னியும் இணைந்து ஏராளமான தொண்டர்களைத் திரட்டி ஒருங்கிணைத்திருக்கும் செய்தியை அறிந்த பிரகாசம் ஸ்ரீபாதசங்கர் என்பவர் வழியாக உடனே புறப்பட்டு சென்னைக்கு வருமாறு ஒரு தகவலைச் சொல்லியனுப்பினார். தகவல் கிடைத்ததும் சுவாமிநாதனும் அனந்தாச்சாரியும் ஜமதக்னியும் நூறு தொண்டர்களுடன் புறப்பட்டு உதயவனம் ஆசிரமத்தை அடைந்தனர்.

அவர்களை வரவேற்று உபசரித்த பிரகாசம் பொன்னேரி பகுதியில் உப்பு இயற்கையாகவே பூத்திருக்கும் உப்பங்கழிகளைக் கண்டுபிடித்து வருமாறு கேட்டுக்கொண்டார். பொருத்தமான இடங்களைத் தேர்ந்தெடுத்ததும் சத்தியாகிரகத்தைத் தொடங்கலாம் என்பது அவர் திட்டமாக இருந்தது. அக்கணமே சுவாமிநாதன் தன் நண்பர்களுடன் புறப்பட்டார். வழிச்செலவுக்கு அவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பிவைத்தார் பிரகாசம். அதைப்பெற்றுக்கொண்டு ரயிலில் பயணம் செய்து மூவரும் பொன்னேரியை அடைந்தனர். நாள்முழுதும் கடற்கரைப் பகுதிகளில் அலைந்து திரிந்தபோதும் அவர்களால் இயற்கையாகவே உப்பு பூத்திருக்கும் பகுதிகளைக் கண்டறியமுடியவில்லை. எங்கெங்கும் பாத்தி கட்டி கடல்நீரை நிரப்பி செயற்கை முறையில் உப்பு பூக்கச் செய்த இடங்கள் மட்டுமே காணப்பட்டன. திரும்பிவந்த சுவாமிநாதன் குழுவினர் பிரகாசத்திடம் பொன்னேரி நிலவரத்தைத் தெரிவித்தனர்.

தாராசனா உப்பளத்தில் 05.05.1930 அன்று தடையை மீறி உப்பெடுக்க காந்தியடிகள் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கைது செய்யப்பட்டார். காந்தியடிகள் கைதான செய்தி நாடெங்கும் வேகவேகமாக பரவியது. அக்கணமே யாரும் அறிவிக்காமலேயே சென்னையில் கடையடைப்பு நடைபெற்றது. அன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு எதிர்ப்புறத்தில் உள்ள கடற்கரையில் பொதுக்கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெள்ளமென மக்கள் திரண்டு வந்துவிட்டனர். உதயவனத்தில் தங்கியிருந்த சுவாமிநாதனும் பிறரும் அக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றனர். அச்சமயத்தில் வெள்ளைக்குதிரைப்படையினர் அங்கு வந்து கூட்டத்தைக் கலைந்து போகுமாறு கட்டளையிட்டனர். மக்கள்கூட்டம் அசையாமல் அப்படியே நின்றிருந்தனர். அதைக் கண்டு வெகுண்ட குதிரைப்படையினர் மிருகத்தைப்போல மக்களுக்கு நடுவே புகுந்து தாக்குதலைத் தொடங்கினர். மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

அடுத்தநாள் சென்னை நகரெங்கும் 144 தடையுத்தரவு அறிவிக்கப்பட்டது. தடையை மீறி உப்பு காய்ச்சுவதற்குச் சென்றதற்காக பிரகாசம் கைது செய்யப்பட்டார். இளம் மருத்துவரான நடராஜன் என்பவரும் துர்காபாய் அம்மையாரும் முன்வந்து சத்தியாகிரகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இருவரும் கடற்கரையில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து முழங்கினர். அன்றும் குதிரைப்படையினரின் தடியடி நடந்தது. ஜமதக்னிக்கு கடுமையாக அடிபட்டது. நடராஜன் கைது செய்யப்பட்டார். அடுத்தநாள் துர்காபாய் சத்தியாகிரக அணியை வழிநடத்திச் சென்று கைதானார். அதற்கு அடுத்தநாள் சுவாமிநாதன் சத்தியாகிரக அணியை வழிநடத்திச் சென்றார். அன்று அவர் கைது செய்யப்படவில்லை என்றபோதும் சில நாட்கள் கழித்து கைதுசெய்யப்பட்டார்.  உதயவனம் ஆசிரமம் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. கிருஷ்ணய்யர், அனந்தாச்சாரி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காந்தி இர்வின் ஒப்பந்தப்படி சிறையில் அடைபட்டிருந்த சத்தியாகிரகிகள் அனைவரும் விடுதலை பெற்றனர். காங்கிரஸின் சார்பில் இங்கிலாந்தில் நடக்கவிருந்த இரண்டாம் வட்டமேசை மாநாட்டில்  கலந்துகொள்ளும் பொறுப்பை காந்தியடிகள் ஏற்றுக்கொண்டார். 07.09.1931 முதல் 01.12.1931 வரை லண்டன் மாநகரில் வட்டமேசை மாநாடு நடைபெற்றது. ஆயினும் அந்த மாநாட்டு விவாதங்கள் வழியாக எந்த முடிவையும் அடையமுடியவில்லை. காந்தியடிகள் ஏமாற்றத்துடன் இந்தியாவுக்குத் திரும்பினார். அவர் தாயகம் திரும்புவதற்காகவென காத்திருந்ததுபோல அவரை 04.01.1932 அன்று காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சிறையிலிருந்து விடுதலையானதும் காந்தியடிகள் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு 07.11.1933 அன்று நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். ஏறத்தாழ ஒன்பது மாதங்களில் 12500 மைல்கள் பிரயாணம் செய்து மக்களைச் சந்தித்து உரையாடி, மனிதர்களின் நெஞ்சில் படிந்திருக்கும் தீண்டாமை என்னும் அழுக்கைப் போக்க பாடுபட்டார். 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாடு முழுதும் வலம்வந்தார். வில்வண்டி, நான்கு சக்கர வாகனம், புகைவண்டி என எல்லாவிதமான வாகனங்களிலும் பயணம் செய்து 112 ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்தார். ஓர் இரவு தங்கிய இடத்தில் மறு இரவு தங்காமல் ஒவ்வொரு நாளும் சராசரியாக நூற்றைம்பது மைல்கள் பயணம் செய்தார்.

18.02.1934 அன்று காந்தியடிகள் வேலூருக்கு வந்து சேர்ந்தார். காலையில் காகிதப்பட்டறையில் உள்ள அரிஜனப்பள்ளிக்குச் சென்று பார்வையிட்ட பிறகு நகருக்குள் சென்றார். ஆதி திராவிட அபிவிருத்தி சங்கம் அளித்த வரவேற்புரையை ஏற்றுகொண்டு கிராமமக்கள் திரட்டியளித்த பணமுடிப்பையும் பெற்றுக்கொண்டார். நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை  ஒழுங்குபடுத்த ஒருவரும் இல்லாததால் நெரிசலும் இரைச்சலுமாகவே இருந்தது. காந்தியடிகள் பேசத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூச்சல் நிலவியது. அதனால் ஓரிரு வாக்கியங்களோடு பேச்சை நிறுத்திக்கொண்டார் காந்தியடிகள். பிறகு காட்பாடிக்குச் சென்று அரிஜன நிதியைப் பெற்றுக்கொண்டு குடியாத்தத்துக்கு வந்து சேர்ந்தார்.

குடியாத்தம் ஆற்றுப்படுகையில் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் சுவாமிநாதன். ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு ஈ கூட புகமுடியாத அளவுக்கு நெருக்கியடித்துக்கொண்டு நின்றிருந்தனர். கடந்தமுறை வழியை அடைத்து நின்றிருந்ததைப்போலவே மக்கள் அப்போதும் நின்றிருந்தனர். மேடையை நெருங்கிச் செல்வதோ, உரையாடுவதோ சாத்தியமற்ற செயலாக இருந்ததை காந்தியடிகளும் அவரோடு வந்திருந்தவர்களும் உணர்ந்தனர். தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காரணமாக தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக சுவாமிநாதன் திரட்டிவைத்த நிதியை மட்டும் பெற்றுக்கொண்டு காந்தியடிகள் புறப்பட்டார். ஆம்பூர், பெரியங்குப்பம், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இறுதியாக கிறித்துகுல ஆசிரமத்துக்குச் செல்லவேண்டிய நீண்ட பயணத்திட்டத்தின் காரணமாக காந்தியடிகள் அங்கிருந்து புறப்பட வேண்டியிருந்தது. ஆனால் அந்தச் செயலைக் கண்டு சுவாமிநாதன் நிராசையுற்றார்.  இரவு பகலாக பாடுபட்டு தாம் செய்த ஏற்பாடுகள் பயனற்றுப் போனதை நினைத்து துயருற்றார். கொஞ்சம்கொஞ்சமாக காங்கிரஸின் செயல்பாடுகளிலிருந்து விலகி நிற்கத் தொடங்கினார். 1936இல் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

தனித்தமிழ் மீது கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக சுவாமிநாதன் தன் பெயரை அண்ணல்தங்கோ என மாற்றி வைத்துக்கொண்டார். தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் தமிழர் முன்னேற்றத்துகாகவும் 1937இல் உலகத்தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவையைத் தோற்றுவித்தார்ாண்டுதோறும் வேலூரில் பொங்கல் விழாவைக் கொண்டாடினார். அதில் தமிழறிஞர்களையும் சான்றோர்களையும் பங்கேற்கவைத்து தமிழுணர்வை வளர்த்தார்.  தூய தமிழின்பால் மக்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதையும் திருக்குறள் நெறிகள்பால் பற்று ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தமிழகமெங்கும் பயணம் செய்து பற்பல மேடையுரைகள நிகழ்த்தினார். 1937, 1938 ஆண்டுகளில் தொடர்ச்சியாக தமிழர் உரிமை மாநாடுகளை நடத்தினார். 1938இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் கலந்துகொண்டு மேடைகளில் முழங்கினார். தமிழ்ப்பற்றினை மக்களிடையே ஊட்டி வளர்ப்பதற்காக தமிழ்நிலம் என்னும் மாத இதழைத் தொடங்கி சில ஆண்டு காலம் நடத்தினார். 

இந்தி மொழியைச் சாடி ‘அண்ணல் முத்தம்மாள் பாட்டு’ என்றொரு நூலை எழுதி வெளியிட்டார். திராவிடர் கழகத்துக்கு தமிழர் கழகம் என பெயர்சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுத்தார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. நாடு சுதந்திரமடைந்த பிறகு தமிழக எல்லை தற்காப்பு மாநாடு நடத்தினார். மதராஸ் மாகாணம் என்னும் பெயரை மாற்றி தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்காகவே 26.08.1956 அன்று திருச்செங்கோட்டில் தமிழ்நாடு பெயர் அமைப்பு மாநாட்டைக் கூட்டினார்.

1957, 1962 ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில்  தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ என்னும் நூலுக்கு 1946இல் விதிக்கப்பட்ட தடையை 23 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்குவதற்கு மூலகாரணமாக இருந்தார். இறுதிக்காலம் வரைக்கும் தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் தமிழர் மேம்பாட்டுக்கும் உழைத்தார்.

 

 

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடியாத்தம் என்னும் ஊரில் 12.04.1904 அன்று அண்ணல் தங்கோ பிறந்தார். அவருடைய இயற்பெயர் சுவாமிநாதன். தந்தையார் பெயர் கு.மு.இல.முருகப்பனார். தாயார் பெயர் மணியம்மை என்கிற மாணிக்கம்மாள். தமிழைத் தவிர, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளை அவர் தன் சொந்த முயற்சியாலேயே கற்றுத் தேர்ச்சியடைந்தார். அவருடைய மகள் வழிப் பேரனான செ.அருள்செல்வன் அண்ணல் தங்கோவின் வாழ்க்கை வரலாற்றை ‘தூய தமிழ்க்காவலர் கு.மு.அண்ணல் தங்கோ’ என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு ஐந்துமுறை சிறை சென்றிருக்கிறார். 1934இல் இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறி  தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபட்டு ’உலகத்தமிழ்மக்கள் தற்காப்புப் பேரவை’ என்னும் அமைப்பை உருவாக்கி நடத்தினார். குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் சென்றார்.  தமிழகத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டவேண்டுமென்ற கோரிக்கையுடன் இவரே முதன்முதலில் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். 04.01.1974 அன்று மறைந்தார்

            

(சர்வோதயம் மலர்கிறது – நவம்பர் 2023)