Home

Sunday 5 November 2023

வெளியேற்றம் - சிறுகதை

 முதுகில் துணி மூட்டையோடு காலை இழுத்து இழுத்து கழுதை முன்னால் நடக்க பின்னாலேயே நடந்தான் பிச்சையா.

இந்த நொண்டிக் கழுதையாவது துணையாக இருப்பதால்தான் ஆற்றங்கரையிலிருந்து சுடுகாட்டு மேட்டுக்கும் சுடுகாட்டு மேட்டிலிருந்து வீட்டுக்கும் என்று துணிப் பொதிகளைச் சுமந்தபடி ஓடியாடி யாவது தொழில் செய்து ஊரில் பிழைப்பு நடத்த முடிந்தது. கழுதையே இல்லாவிட்டால் பிழைக்கிறது சிரமம். ஆஸ்துமாவும் பலவீனமும் சேர்ந்து ஒடுக்கு விழுந்த அலுமினியத்தட்டு மாதிரி ஆக்கி வைத்திருக்கிற உடம்பு வாட்டத்துக்கு குனிந்து துணிகளைக் கல்லில் அடிப்பதும் நீரில் அலசிப் பிழிவதுமே பெரிய விஷயம். துணியை முறுக்கிப் பிழியும்போதே மூச்சு திணறலாகி நின்றேவிட்டது போல அடைத்து மார்புக்கூடு வலித்து இம்சை கொடுத்துவிடும். இந்த லட்சணத்தில் ஈரத்துணிகளை மூட்டை கட்டித் தலைமேல் வைத்துக்கொண்டு உலர வைப்பதற்காக ஆற்றங்கரையில் இருந்து நாலுமைல் நடப்பது மகா இம்சையான விஷயம்.

இம்சை அனுபவித்தது எல்லாம் போதும் என்றுதான் சலிப்போடும் மனக்கஷ்டத்தோடும் குடும்பம் குடும்பமாக நிறைய பேர் மூட்டை முடிச்சு கட்டிக் கொண்டு புறப்பட்டபோது பிச்சையாவுக்கு அந்த தைரியம் வரவில்லை. மற்றவர்களுக்கெல்லாம் உடம்பில் தெம்பும் துணையாய் மனிதர்களும் இருந்தார்கள். எங்கே போனாலும் எப்படியாவது வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையும் இருந்தது. எந்த ஊர்க்குப் போனாலும்  ஒரு லாண்டரிக் கடையோ என்னமோ வைத்துக் காலத்தை ஓட்டிவிட முடியும். குறைந்த பட்சம் ஒரு தள்ளு வண்டியை வைத்துக்கொண்டாவது பத்துப்பதினைந்து தெரு அலைந்து துணிகள் இஸ்திரி போட்டு பொழுதைத் தள்ளிவிட முடியும். கடை வைக்கிற சாத்தியம் இல்லாவிட்டாலும்கூட ஊரில் இருக்கிற கடைகளில் சேர்ந்து துணி துவைக்கிற ஆளாகவாவது சேர்ந்து வயிற்றுப்பாட்டைப் பார்த்துவிட முடியும். இந்த தொழிலயே உதறிவிட்டுக்கூட பட்டணம் உண்டாக்கித் தருகிற வாய்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி வேறு வேறு விதமான உத்தியோகங்களுக்கு ஒட்டிக்கொண்டு பிழைக்கவாவது முடியும். எதிர்காலம் குறித்த அந்த மாதிரியான நம்பிக்கைகள் எதுவுமே இல்லாததால்தான் இன்னும் சொல்ப காலமே ஆயுசில் மிச்சமிருக்கிற பிச்சையாவுக்கு நாலாபக்கத்திலிருந்தும் இம்சைகளே பிடுங்கித் தின்ற போதிலும் ஊரை விட்டுப் போக மனசில்லை. வாதம் வந்து படுத்துக்கிடக்கிற மனைவியை வைத்துக்கொண்டு எந்தப் புது ஊர்க்குப் போனாலும் இம்சைதான்.

எல்லா இம்சைகளுக்கும் மூலகாரணம் ஊர் ஆட்கள்தான். மச்சு வீடு சாரங்கபாணியும் மணியம் செல்வராஜாவும்தான் முக்கிய காரணம். இரண்டு பேருக்குமே ஆற்றங்கரையில் சாகுபடி நிலங்கள் உண்டு. இரண்டு நிலங்களுக்கும் நடுவில் நாலைந்து ஏக்கர் காணுகிற மாதிரி இருக்கிற வெற்றிடம்தான் பரம்பரை பரம்பரையாய் உபயோகப்படுகிற சலவைத்துறை. பிச்சையாவுக்குக் கருத்துத் தெரிந்த காலத்தில் இருந்து அப்பா, தாத்தா காலம் தொட்டு துணிதுவைத்து உலரவைத்தது, மடித்தது எல்லாமே இந்த துறையில்தான். இந்தத் துறையை அபகரித்து ஆக்கிரமித்துக் கொள்ள மச்சு வீட்டுக்காரனும் மணியமும் செய்த சில்மிஷங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. ஒரு சாகுபடி முடிந்து அடுத்த சாகுபடிக்கு வரப்பு கழிக்கும்போது பத்துப் பதினைந்து அடி தள்ளித்தள்ளி வேலி கட்டுவதில் தொடங்கி, ராத்திரியோடு ராத்திரியாய் கரையில் இருக்கிற துணி துவைக்கிற கற்களை ஆற்றில் தள்ளிவிடுவது, துணிகள் உலர்கிற இடத்தில் மாடுகளை விரட்டி நாசப்படுத்துவது, நட்டு வைத்த கழிகளை உடைத்துப் போடுவது என்று தொடர்ச்சியாய் தொந்தரவுக்கு மேல் தொந்தரவுதான். கூடாரத்துக்குள் ஒட்டகம் புகுந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமாய் ஆக்கிரமித்து ஆக்கிரமித்து கடைசியில் காலியிடமே தனக்குத்தான் சொந்தம் என்று சொல்லி சலவைக்காரர்களை விரட்டினார்கள். இரண்டு பேருமே ஒரே ஜாதி. ஊர்ப் பஞ்சாயத்து பிரசிடென்டும் அதே ஜாதி. ஜாதிக்கு ஜாதி உபகாரமாய் இருந்ததே தவிர சலவைக்காரர்கள் கோரிக்கைக்குக் காது கொடுக்கவில்லை.

வாயில்லாத ஜனங்கள் பதறி ஓடி எட்டுகிற மட்டும் டவுனுக்குப் போய் அதிகாரிகளைப் பார்த்தார்கள். அதிகாரிகள் வந்து ஆக்கிரமித்தவர்களை அதட்டுகிற மாதிரி அதட்டி, தவறான எல்லைக் கற்களைப் பிடுங்குகிற மாதிரி பிடுங்கிவிட்டுப் போனார்கள். வந்த அதிகாரிகள் எல்லாம் ஊர் எல்லையைத் தாண்டுவதற்குள் பிடுங்கப்பட்ட கற்களையெல்லாம் மீண்டும் நீட்டிக் கொண்டு பழையபடிக்கு வெறித்தாண்டவம் ஆடினார்கள் ஊர்க்காரர்கள். இதையெல்லாம் பார்த்துப்பார்த்துச் சலித்து வெறுத்துப் போய்த்தான் ஆதரவில்லாமல் ஊரைவிட்டு நகர்ந்து போனது சலவைக்காரக் குடும்பங்கள்.

கடைசியாய் ஊரைவிட்டுப் போன ரத்தினசாமி குடும்பத்தை ரயிலேற்றப் போனபோது நடந்த சம்பாஷணை இன்னும் கூட ஞாபகம் இருந்தது பிச்சையாவுக்கு.

எப்ப பெரியப்பா முடிவு பண்ணப் போறீங்க?’

எதுடா?’

தெரியாதமாதிரி கேக்காதிங்க பெரியப்பா.’

எதுடா சொல்ற?’

இவ்ளோத்தம் நடந்த பின்னாலயும் இந்த ஊர்லேயே இருக்கப் போறன்னு ஒத்தக்கால்ல நிக்கறிங்களே, அதத்தான் கேக்கறன்?’

பொறுமையா முடிவு செய்யலாம்டா.’

நீங்க முடிவு செய்றதுக்குள்ள ரொம்ப தாமசமாயிடுமோன்னு பயமா இருக்குது பெரியப்பா.’

செத்துருவன்னு நெனைக்கறியா?’

ச்ச்ச், உட்டன்னு சொல்லு பெரியப்பா. அவுங்களால ஒங்களுக்கு கெடுதல் எதுவும் வந்துரக் கூடாதுன்னுதா நெனைக்கறன்.’

எனக்கும்தா இருக்கப் புடிக்கலை ரத்தனசாமி. ஆனா வேறுவழி இல்லடா. இந்த வயுசுல நா எந்த ஊரில் இருந்தாலும் ஒன்னுதான்டா. எப்படியோ நடக்கறது நடக்கட்டும், கடவுள் உட்ட வழி.’

ரயில் ஊதிச் சத்தமிட்டுப் புறப்பட்டுப் போக ஒற்றையாய் வீட்டுக்குத் திரும்பிய பிறகு ஒவ்வொரு நிமிஷத்திலும் வேலையின் சிரமம் தெரிந்தது பிச்சையாவுக்கு. உதவியாய் இருந்த ரத்தினசாமியின் இழப்பு எவ்வளவு கஷ்டமானது என்று புரிந்தது. அதைச் செய் இதைச் செய் என்று சொல்லி ஏவக்கூட ஆள்  இல்லாமல் எல்லா வேலையையும் ஒண்டியாய் செய்ய வேண்டி இருந்தது. ஊருக்குள் சென்று துணி எடுப்பது, குறிபோடுவது, வெள்ளாவி வைப்பது, துணிச்சோடா கரைப்பது, சாயம் தோய்ப்பது, வெள்ளாவிக்குள் துணிகளை மேலும் கீழும் கிளறிக் கொண்டே இருப்பது, மூட்டை கட்டுவது, துவைப்பது, பிழிவது, உலர்த்துவது என்று ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்துச் செய்ய வேண்டி இருந்தது. நகர்ந்து நகர்ந்து வந்து வெள்ளாவி எரிகிற அடுப்புக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு கருப்பஞ்செத்தையை தீ பானையில் படுகிற மாதிரி தள்ளுவதும் போடுவதுமாய் பெண்டாட்டி செய்கிற ஒரே ஒரு உபகாரம் தவிர வேறு எல்லாவற்றையும் தானே சமாளிக்க வேண்டி இருந்தது. பலமற்ற உடம்பால் சமாளிப்பது சிரமமாய் இருந்தது. சமாளிக்கிற சக்தி குறைந்தபோது துணிகளைக் குறித்த நேரத்தில் வெளுப்பது இயலாததாகியது. நேரம் தப்பியபோது வாடிக்கைகள் தப்பின. ஏதோ அந்தக் காலத்துப் பரிச்சயம் என்பதால் பிழைத்துப் போகட்டும் என்கிற மாதிரி ஏழெட்டு வாடிக்கைகளே ஆதாரமாய் நின்றன. ஏழெட்டு கூட ஒன்றிரண்டு என்று குறைந்தது. துணிகள் எல்லாம் சுடுகாட்டுத் தரையில் உலரவைக்கப்படுகின்றன என்று அறிந்த போது இன்னும் சில வாடிக்கையாளர்களை அவன் இழந்தான். எப்படியோ கிடைக்கும் சின்ன வருமானத்தையே ஆதாரமாக்கித் தனியாளாய் தேர் இழுக்கிற மாதிரி வாழ்க்கையை இழுத்துக்கொண்டிருந்தான் பிச்சையா.

ஆஸ்பத்திரி முக்கைக் கடந்து நிமிர்ந்தது கழுதை.

ஆலமரத்தடியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் கழுதையைப் பார்த்து ஆவேசத்தோடு உய்யென்று கத்தினார்கள். ஆலம்பழத்தையும், பட்டையையும் கழுதையைப் பார்த்து வீசினார்கள். ‘போங்கடா டேய்என்று சிறுவர்களைப் பார்த்து கையை வீசி அதட்டினான் பிச்சையா. அதட்டலுக்கு மறு அதட்டல் மாதிரி பிச்சையா போலவே தள்ளாடித் தள்ளாடி நடந்துபோங்கடா டேய்என்று தேய்ந்த குரலில் பாவனையோடு செய்து காட்டி குபீர் என்று சிரித்தார்கள் சிறுவர்கள். வெயிலில் நின்று இதற்கெல்லாம் மதித்துப் பதில் சொல்ல விரும்பாதவன் மாதிரி சுடுகிற மணலில் காலைப் பொத்தி நடந்தான் பிச்சையா.

சுடுகாட்டில் நிற்கிற ஒவ்வொரு தருணமும் ஆற்றங்கரையை நினைத்துப் பார்க்காமல் இருக்காது மனசு. ஆற்றங்கரையில் கரையை ஒட்டியே உலர்த்தும் இடம். நடக்கும் சிரமம் இல்லை. பிழியும் போதே கொஞ்சம் நடந்து உதறி உலர்த்தினால் கூட போதும் வெயிலிலும் வயல்களின் காற்றிலும் துணிகள் உலர்வது தெரியாமல் உலரும். உடம்பு அசதிக்கு தூங்குமுஞ்சி மரத்தடியில் உட்கார்ந்துகொள்ளவும் வசதியாய் இருக்கும்.

பெரிய ஜாதிக்காரர்களின் ஆக்கிரமிப்பில் எல்லாமே புகையாய்க் கரைந்துவிட்டது. கஷ்டகாலத்தில் சுடுகாடாவது இருந்து புண்ணியம் கட்டிக்கொண்டது. நடக்கிற சிரமம் ஒருபக்கம் என்றாலும் நிற்க நிழலான இடமில்லை சுடுகாட்டில். தோலைக் கருக்குகிற மாதிரி சுள்ளென்று எரிக்கிற வெயிலில் நாலைந்து மணி நேரம் நிற்க தள்ளாமை இடம் தரவில்லை. வனாந்தரமான இடத்தில் ஒற்றையாய் நிற்பது நெஞ்சில் சின்னதாய் பயத்தைப் பரப்பும். ஒரு மூலையில் துணி உலர்த்திக்கொண்டிருக்கும்போதே அடுத்த மூலையில் பிணங்கள் எரிவதும் நெருப்பும் புகையும் ஆகாயத்தை தாவிப் பிடிக்கிற மாதிரி அலைவதும் கொஞ்சம் திணறலாய்த்தான் இருந்தது, இந்தத் திணறலே ஊர்க்காரர்களுக்கு குமட்டலாய் இருந்தது. ‘பொணங்களுக்குப் பக்கத்லயா காயவய்க்கறஎன்று தயங்க வைத்தது. இப்ப வேணாம்பா அப்றம் பாக்கலாம் என்று துணி எடுக்கப் போகிறபோது ஒதுங்க வைத்தது. தட்டிக்கழிக்க என்னென்னமோ காரணம் சொல்ல வைத்தது.

ஆற்றங்கரை நிலம் பறிபோனபோது பதறிப்பதறி இதே ஜனங்களிடம் வீடுவீடாய்ச் சென்று எத்தனையோ தரம் முறையீடு செய்யப்பட்டது. எல்லாருமே ஜாதிக்காரர்களின் வாயில் அகப்பட அச்சப்பட்டுக்கொண்டு, சொன்னதையெல்லாம் பதில் பேசாமல் ஆளைப் பார்த்து சின்னதாய் புன்னகை பூத்த முகத்துடன் கேட்டபடி உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கேட்ட பொறுமையைப் பார்த்தபோது இந்த நிமிஷமே எழுந்து போய் நீதி கேட்டுவிடுகிற மாதிரிதான் தோன்றியது. அப்புறம் எந்த அரட்டலும் அதிகாரமும் மனசுக்குள் ஓடியதோ, சற்று மூச்சு ஒடுங்கிபோனாப் போவுது உடுங்கப்பாஎன்றார்கள். ‘பணம் காசி இருக்கறவன் பத்தும் செய்வான் உட்டுத்தள்ளுங்கய்யாஎன்றார்கள். ‘இதுல நாங்க ஒன்றும் செய்றதுக்கில்ல. ஒங்க பிரச்சனையை நீங்கதா தீத்துக்கணும்என்று கை விரித்தார்கள். ‘அட வெயில் இருக்கற எடமா பாத்து காய வச்சிக்கங்களாம்பா. இதுக்குப் போயி இவ்ளோ தூரத்துக்கு அலட்டிக்கறிங்கஎன்று சமாதானம் சொன்னார்கள். அப்பேர்ப்பட்ட ஜனங்களே சுடுகாட்டில் உலரவைத்துத் துணிகளைத் திருப்பித் தரும்போது அருவருப்பானார்கள். ‘நல்ல எடம் பாத்த போஎன்று நிந்தித்தார்கள். துணி எடுக்க அடுத்த தரம் போனபோது தவிர்த்தார்கள். அபபோதெல்லாம் அடக்கிக்கொண்டும் தலையைக் குனிந்துகொண்டும்தான் திரும்ப வேண்டியதாய் இருந்தது.

ரயில்வே ஸ்டேஷனைக் கடந்து நடக்கும்போது ஆட்டுக்காரக் கிழவன் கூப்பிட்டான்.

இன்னா பிச்சையா, சுடுகாட்டுக்குக் கௌம்பிட்டியா?’

ம்.’

தெனம் சுடுகாட்டுக்குப் போய் திரும்பி வர ஆளுன்னு சொன்னா நீ ஒரத்தன்தாய்யா. அதிர்ஷ்டசாலிதான் போ.’

இன்னா ராஜப்பா. ஒனக்கும் கூட கிண்டலா இருக்குதா என்னப் பாத்தா?’

சிச்சி. சும்மா வெளையாட்டுக்குச் சொன்னம்பா. கோச்சிக்காத. இப்டி ஒக்காரு.’

வெயில் ஏறுது ராஜப்பா. போவணும். இன்னா விஷயம் சொல்லு.’

ஆடு ஒன்னு வாரத்துக்கு இருக்குது. கூப்டுக்னும் போறியா. . .’

நீ ஒன்னு ராஜப்பா. மனுஷன் பாடே திண்டாட்டமா இருக்குது. இதுல ஆட்ட வேற வச்சிக்னு கஷ்டப்படச் சொல்றீயா . . .’

கட்டிப் போட்டா தானா வளருது. நீ இன்னா தலைலயா சொமக்கப் போற.’

சொல்றது சுலபம் ராஜப்பா. செய்யறது ரொம்ப கஷ்டம். வேணாம். இப்பவேதா எறும்பு நசுக்கற மாதிரி நசுக்கிட்டானுங்க என்ன. ஒன் ஆட்டு வளத்தன்னு வையி நெலத்த சொன்னமாதிரி ஆடு கூட என்னிதுதான்னு புடுங்க வந்திருவானுங்க . . .’

ரொம்ப நொந்து பேசற பிச்சையா.’

வயத்தெரிச்சல் ராஜப்பா வயத்தெரிச்சல், எங்க ஆளுங்கள்ள பொண்ணுங்க யாரும் ஊட்டமா இல்ல. இருந்தா அதுக்குக்கூட என் பொண்டாட்டி இவள்ன்னு உரிமையா இழுத்திருப்பானுங்க . . .’

ஒன்னயும் வெளியேத்திட்டுத்தா மறுவேலன்னு அலயறாணுவங்களாமே கேட்டியா பிச்சையா . . .’

அவனுங்க வெளியேத்தறானுங்களோ இல்ல பசியும் வியாதியும் சேர்ந்து இந்த ஒலகத்தவிட்டே வெளியேத்துதோ, பாப்பம் பாப்பம் . . .’

வார்த்தைகளில் பொதிருந்த வலியை உணர்ந்தவனாய் கோலை வீசிவிட்டு பதற்றத்துடன் ஆட்டுக்காரக்கிழவன் எழுந்து நின்று பார்க்கும்போதே மேலும் பேச எதுவும் இல்லாதவனாக கழுதையை ஓட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் பிச்சையா.

(தாய் - 1988)