Home

Sunday 5 November 2023

அடுக்கு மாளிகை - சிறுகதை

 

நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள இது தான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணியபடி திரையை விலக்கிக்கொண்டு வெளியே வந்தான் குப்புசாமி. உண்மையில் பம்பரம் எடுப்பதற்காகத் தான் வெளியேயிருந்து உள்ளே வந்திருந்தான் அவன். அரைக்கணத்துக்குள் மனம் மாறிவிட்டது. பம்பரத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டான். யாருமே இல்லாத சூழல் அவனுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தது. வா வா என்று யாரோ மனசுக்குள் கூப்பிடுகிற குரல் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்தான். பெரிய கீழ்த்தளத்தில் ஆள் சந்தடியே இல்லை. வெறும் தட்டுகளும் துணித்திரைகளும் இருந்தன. ஒரு மூலையில் செங்கற் குவியல். இன்னொரு மூலையில் மணல். கட்டிடத்திற்கு வெளியே பெண்கள் கல் அடுப்பில் சோறாக்கிக்கொண்டிருந்தார்கள். மெதுவாகத் தளத்தின் உள்பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பொக்கையும் பொறையுமாக இருந்தது தரை. ஓர் இடத்தில் தண்ணீர் ஓடித் தேங்கியிருந்தது. இறங்கி நடந்ததில் கால்களில் சேறு அப்பியது. உதறிக்கொண்டான். சீ என்று வாய்விட்டுச் சொன்னான். மூலையில் படுத்திருந்த பூனை சட்டென்று இவன் பக்கம் திரும்பி முறைத்து விட்டு மீண்டும் சுருண்டது.

சொரசொரப்பான சுவர்களிலும் தூண்களிலும் கரித்துண்டுகளால் கிறுக்கப்பட்ட சித்திரங்களைப் பார்த்து நின்றான் குப்புசாமி. எல்லாமே அந்த சோமுப் பையன் வேலை. முறுக்கப்பட்ட மீசைகளோடும் மொட்டைத் தலைகளோடுமான

உருவங்கள் முறைத்தபடி இருந்தன. வாயில் தடிமனான சுருட்டின் புகை. சுருண்டு சுருண்டு எழும் புகை பக்கத்திலிருந்த சூரியனின் பக்கம் சென்றது. கறுப்புச் சூரியனிலிருந்து கத்திகள் போலக் கதிர்கள் நீண்டிருந்தன. சூரியனுக்குப் பக்கத்திலேயே அடுத்தடுத்து தென்னை மரங்கள். அவற்றுக்கு அருகிலேயே இரண்டு பெரிய துப்பாக்கிகள். குறி பார்க்கப்படுவது தெரியாமல் நாக்கைத் தொங்கவிட்ட இரண்டு நாய்கள். நாய்களின் கால்கள் விறகுக் கட்டையைச் செங்குத்தாகப் பிளந்த மாதிரி இருந்தன. கால்களை மடக்க முடியாத நாய் எப்படி ஓடும் என்று தோன்றியது. அப்படிப்பட்ட நாய்களுக்கு நிச்சயமாய் மரணத்தைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லிக்கொண்டான். கரித்துண்டுகளால் படம் எழுத ஆசை வந்து அவனும் முயற்சிகள் செய்ததுண்டு. ஆனால் அவன் பூனையை வரைந்தால் அந்த சோமுப்பையன் உண்டி மாதிரி இருக்கிறது என்றான். நாய் வரைந்தால் கால் முளைத்த மீன் என்றான். அவன் ரொம்ப மோசம். எப்போதுமே அவனுக்குத் தான்தான் உலகத்திலேயே பெரிய கில்லாடி என்கிற நினைப்பு என்று சொல்லிக் கொண்டான். திடுமென்று அவனுக்கு சோமுப் பையன் மீது கோபம் வந்தது. அவனிடம் வாங்கும் உதைகளுக்கும் அளவே இல்லை. அம்மா இருந்தவரைக்கும் எல்லாக் கவலைகளிலிருந்தும் அவனை ஒரு கோழிக்குஞ்சு போலக் காப்பாற்றி ஆறுதல் சொல்லி வந்தாள். அவள் இல்லாததால் தான் அவனுக்குத் தைரியம் அதிகமாகிவிட்டது. அவன் திமிரை அடக்க வேண்டும் என்று கறுவினான். தன்னுடைய காரியம் இன்று அவனை வாயடைக்க வைக்கப்போகிறது என்று மனசுக்குள் பெருமையாய்ச் சொல்லிக் கொண்டான். சந்தோஷம் அதிகரித்துத் துள்ளினான்.

துள்ளிக்கொண்டே தூண்களைச் சுற்றினான். ஓடிப்பிடிக்கிற ஆட்டம் விளையாடுகிற மாதிரி இருந்தது. பின்னால் யாரோ துரத்தி வருகிற மாதிரியான கற்பனை அவனுக்கு உற்சாகமூட்டியது. என்னை யாராலும் பிடிக்க முடியாதே என்று மனசுக்குள் சிரித்தபடி ஓடினான். தளத்தில் மறுகோடியிலிருந்து துவைத்துப் பிழிந்த துணிகள் தோளில் தொங்க ஈரப்புடவையோடு சிவகாமி பெரியம்மா வந்தாள். “என்னடா தனியா ஆடறியா குப்புசாமி. உன் கூட்டாளியெல்லாம் எங்கே?” என்றாள். சிரித்தபடி தூணோடு ஒட்டிக் கொண்டான் அவன். எதுவும் பேசவில்லை. தலைமுடியைத் துண்டுக்குள் சுற்றி கொண்டையைப் போட்டிருந்தாள் சிவகாமி பெரியம்மா. தலை குளித்துவிட்டு வரும்போது அம்மா கூட இப்படித்தான் கொண்டை போட்டுக்கொள்வாள் என்று நினைத்துக் கொண்டான். திடுமெனகொக்கொக்என்று சத்தமெழுப்பியபடி சட்டமிடாத ஜன்னல் வழியே கோழி  ஒன்று உள்ளே குதித்து ஓடியது. சத்தத்தைக் கேட்டு அரண்டு போனவன் கோழியைப் பார்த்த பின்பு அமைதிகொண்டான்.

மெதுமெதுவாக நடந்து படிக்கட்டின் அருகில் வந்தான். யாரும் இல்லை. மேல் ஜன்னல் வழியே வெளிச்சம் அங்கே சதுரமாக விழுந்துகொண்டிருந்தது. அந்தச் சதுரத்தில் போய் நின்றான். முகத்தில் வெளிச்சம் பட்டதும் கண்கள் கூசின. வானத்தைப் பார்க்க முடியவில்லை. உடனே விலகிப் படியோரம் வந்துவிட்டான். கரடுமுரடான படிகளின் சின்னச்சின்ன ஜல்லிச் சில்லுகள் பாதங்களில் குத்தின. சுவரையொட்டியபடியே அவன் படிகளில் ஏறினான். யாருமே தன்னைக் கவனிக்கவில்லை என்கிற விஷயம் அவனுக்குச் சந்தோஷத்தைத் தந்தது. பாய்ந்து பாய்ந்து படிகளைத் தாண்டினான். ஒரு வரிசை ஏறிய பிறகு திருப்பத்தில் வளைந்து மீண்டும் படிகள் வளர்ந்தன. அவனுக்கு மலைப்பாக இருந்தது. இத்தனை படிகளையும் எப்படி அடுக்கினார்களோ என்று ஆச்சரியம் எழுந்தது. ஒவ்வொரு படிக்கும் ஒரு பதுமை எழுந்து விக்கிரமாதித்தனுக்குக் கதை சொன்னதைப் பற்றி அம்மா சொன்ன கதை ஞாபகம் வந்தது. அவனுக்கு உடனே கதை கேட்கிற ஆசை மூண்டது. கதைகளைக் கேட்டுக்கொண்டே படி ஏறினால் அலுப்பே தெரியாது என்று தோன்றியது. அவன் கண்கள் உடனே பிரகாசத்துடன் விரிந்தன. மிகுந்த எதிர்பார்ப்புடன் அவன் உயர்ந்து நிற்கும் படிகளைப் பார்த்தான். அந்தத் திருப்பத்தின் முதல் படியில் காலை வைத்ததுமே ஒரு பதுமை வரும் என்று தோன்றியது. அந்த எண்ணமே புல்லரிக்க வைத்தது. அந்தப் பதுமை அருமையான கதையைச் சொல்லி அவனைச் சந்தோஷப்படுத்தும். அவனிடம் சுலபமான கேள்வி கேட்டுக் கொஞ்சிப் பேசும். அவன் சொல்கிற சரியான விடையைக் கேட்டு அந்தப் பதுமைக்கு அவன்மீது பிரியம் அதிகமாகும். உடனே அந்தப் பதுமைஉனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்கும். அவனுக்குச் சத்தம் போட்டுக் கேட்கப் பிடிக்காது. அந்த சோமுப் பையனின் காதில் விழுந்தால் எதையாவது செய்து காரியத்தைக் கெடுத்துவிடுவான். அந்தப் பதுமையைக் குனியச் சொல்லிக் காதுக்குள்தான் கிசுகிசுப்பான். அவனுடைய தேவை அந்தப் பதுமைக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமான இருக்கும். இரண்டு பேருமாய்ச் சேர்ந்து சோமுப் பையனைப் பார்த்துச் சிரிப்பார்கள். அதைப் பார்த்து அவனுக்குப் பொறாமை மூளும். வரட்டும், வரட்டும், பொறாமையிலேயே வெந்து புழுங்கட்டுமே, எனக்கு என்ன என்று தோளைக் குலுக்கிக் கொண்டான். மெதுவாக முதல் படியில் ஒரு காலை வைத்தான்.

எந்தப் பதுமையும் வரவில்லை. இரண்டாவது காலையும் வைத்தான். அப்போதும் வரவில்லை. தன் செய்முறையில் ஏதோ  தப்பு இருக்கிறது என அந்தப் படியிலேயே நின்று ஆழமாக யோசித்தான். வெகு நேரத்துக்குப் பிறகுதான் கடவுளிடம் வேண்டிக் கொள்ளாமலேயே கால் வைத்தது எவ்வளவு பெரிய பிசகு என்று தோன்றியது. உடனே கண்களை மூடிக்கொண்டு பக்தியோடு கடவுளை நினைத்துவிட்டு மூடிய கண்களோடு தட்டுத் தடுமாறிப் படியில் அடியெடுத்து வைத்து ஏறினான். மிகவும் எதிர்பார்ப்போடு கண்களை மெல்லத் திறந்தான். அப்போதும் ஏமாற்றமே காத்திருந்தது. நிச்சயமாய்த் தனது செய்முறையில் ஏதோ தப்பு இருக்கிறது என்று யோசித்தபடி களைப்போடு படி ஏறத்தொடங்கினான்.

அடுத்த திருப்பம் திரும்பும்போது சிரிப்புக் குரல் கேட்டது. முதலில் ஆண் குரல். தொடர்ந்து பெண் குரல். அப்புறம் பேச்சு சத்தம். அவன் முற்றிலுமாகப் பதுமைகளை மறந்துவிட்டு அக்குரல்களைத் தொடர்ந்தான். மீண்டும் ஒரு வரிசை ஏறிப் பார்த்த போது வலது புறம் நின்றிருந்த தூணில் சாய்ந்த நிலையில் கால்நீட்டி இருந்தார் ஏகாம்பரம் மாமா. அவர் மடியில் ஒரு பெண் படுத்திருந்தாள். முதலில் அந்த மாமாதான் அவனைப் பார்த்து விட்டுஎன்னடாஎன்று அதட்டினார். அப்புறம்தான் அவளும் பார்த்து விட்டு அவசரமாய்த் துணிகளை வாரி உடம்பை மூடிக் கொண்டாள். அவர்களுக்குப் பக்கத்தில் இரண்டு சீசாக்களும் பீடிக்கட்டும் காகிதப் பொட்டலங்களும் இருந்தன. எந்தப் பதிலும் சொல்லாமல் அவர்களையே பார்த்தபடி இருந்தான் குப்புசாமி. அந்த மாமா மீண்டும் அவனிடம்எதுக்குடா இங்க வந்த, என்ன விஷயம்?” என்று எரிச்சலோடு கேட்டார். அவன் அப்போதும் எந்தப் பதிலும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தான். “ஙொப்பனைத் தேடறியா, எங்கனா மேல இருப்பான். போய்ப் பாருஎன்று விரட்டினார் அவர். விருட்டென்று திரும்பிப் படியேறத் தொடங்கினான் குப்புசாமி. அவர் கெட்ட வார்த்தை சொல்லி அவனைத் திட்டுவது காதில் விழுந்தது. கடவுளைக் கும்பிட்டும் கூட அந்தப் பதுமைகள் வராததற்கு இவர்கள் எல்லாருமே இங்கே இருப்பதுதான் காரணம் என்று முடிவு கட்டினான் அவன். அவர்கள் மீது அவனுக்குக் கோபம் வந்தது. எல்லாருமே மோசக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டே படியேறினான்.

வளைந்து வளைந்து பல திருப்பங்களைத் தாண்டியதில் அவனுக்குக் கால்கள் வலித்தன. அங்கேயே உட்கார்ந்துவிட்டான். காலையில் கூட சோமுப் பையனோடு சண்டை வந்துவிட்டது. அவனிடம் அழகான ஒரு புது பம்பரம் இருந்தது. சிவப்பு வர்ணக்கயிற்றால் சுற்றி ஓங்கிக் குத்தியதும் அந்தப் பம்பரம் அழகாகச் சுழன்றது. அதன் மழமழப்பும் நிறமும் கண்களைப்  பறித்தன. “ஆளுக்கொரு குத்து குடுக்கறன், வாங்கடாஎன்றதும், அது வரையில் அவனோடு ஆடிக்கொண்டிருந்த தண்டபாணி, ரங்கசாமி, பாபு, அமாசி, பூங்கோதை, மூக்காண்டி எல்லாருமே அவன் பக்கம் சேர்ந்து விட்டார்கள். தனது பம்பரம் ஞாபகம் வந்து தளத்துக்கு ஓடிவந்தான். பழைய பம்பரம் அது. ஆட்டத்தில் சந்தித்த தோல்விகள் எல்லாம் அப்பம்பரத்தின் முதுகில் ஆணிப்பொத்தல்களாகப் பதிந்திருந்தன. அந்தத் தழும்புகள் அவமானச் சின்னங்கள் போல அவனைத் தலைகுனிய வைத்தன. அப்பாவிடம் எத்தனை தரம் புதுப் பம்பரம் கேட்டாலும்நாளைக்கு . . . நாளைக்குஎன்று சொல்லி ஏமாற்றிக்கொண்டே இருந்தார். அதோடு சரி, மறந்துவிட்டார். ஞாபகப்படுத்தியதும்சரி சரி, நாளைக்கிஎன்றார். அப்பா ரொம்ப மோசம். அம்மா எதையுமே மறந்ததில்லை. ஒருதரம் சொன்னாலே போதும். ஞாபகமாய் வாங்கி வந்து தருவாள். “என் தொரைக்கி வாங்கிக் குடுக்காம யாருக்குக் குடுக்கபோறன்என்று சொல்வாள். குப்புசாமிக்கு அழ வேண்டும் போலத் தோன்றியது. எழுந்து மீண்டும் படியேறினான்.

ஒரு திருப்பத்தையொட்டிய அறையில் பேச்சுச் சத்தம் கேட்டது. வட்டமாக ஆறேழுபேர் உட்கார்ந்திருந்தார்கள். எல்லாருடைய கைகளிலும் சீட்டுகள். விசிறி மாதிரி அவற்றை மடிப்பதும் விரிப்பதும் வினோதமாக இருந்தது. ஒருவர் எரிச்சலோடு ஒரு சீட்டை உருவி வீசி எறிந்தார். உடனே இலையைக் கவ்வப் பாயும் நாய்போல பரபரப்போடு அதைப் பொறுக்கி எடுத்து விரல்களுக்கு இடையே பொருத்திக்கொண்டார் இன்னொருவர். “ராணி, ஒனக்காகத்தான் காத்திட்டிருந்தேன் தங்கமேஎன்று சிரித்தார். அப்போதுதான் அந்தக் கூட்டத்தில் தன் அப்பாவையும் பார்த்தான் அவன். எதுவுமே பேசாமல் ஒரு சீட்டு எடுத்துக் கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தார். மறுகை கழுத்தில் இருந்த தாயத்துக்கயிற்றை உருட்டியபடியே இருந்தது.

அவனைப் பார்த்ததுமே அவர் கவனம் திரும்பியது. கொஞ்சம் அதிர்ச்சியடைந்தது போல அவர் முகம் வெளுத்தது. “எதுக்குடா இங்க வந்த . . ? “என்றார். அவன் அவரைப் பார்த்துச் சிரித்தான். “பம்பரம்தான? நாளைக்கே கண்டிப்பா வாங்கித்தரன் போ . . .” என்றார் அவர். மறுபடியும், “சின்னபுள்ள இத்தன மாடி ஏறி வரலாமா . . . போ ராஜா . . . போயி முத்தம்மா அத்தைகிட்ட கஞ்சி வாங்கிக் குடி . . . போஎன்றார். அவன் எதற்கும் அசையாமல் அவர் அருகில் வந்து கழுத்தைப் பிடித்தான். அதற்குள் அவர் சீட்டு இறக்கவேண்டிய வேளை வந்துவிட்டது. அவசரமாய் ஒன்றை எடுத்து வீசிவிட்டு அவன் பக்கம் திரும்பி முத்தம் கொடுத்தார். அவர் வாயிலிருந்து சகிக்க முடியாத ஒரு  துர்நாற்றம் வீசுவதைப் போல் இருந்தது. அவர் கழுத்திலிருந்து கையை எடுத்தான் அவன். உட்கார்ந்த வாக்கிலேயே தொடையைத் தூக்கி பையிலிருந்து பத்துப் பைசாவை எடுத்து அவனிடம் நீட்டி, “இந்தா . . . போய் முட்டாய் வாங்கிக்கோஎன்று சொன்னார். அவன் வாங்கிக்கொண்டு சிரித்தபடியே மீண்டும் படிகளுக்கருகே வந்தான். திரும்பிப் பார்த்தான். யாருமே அவனைக் கவனிக்கவில்லை. அப்பா கூடப் பார்க்கவில்லை. ஆட்டத்தில் மும்முரமாக இருந்தார்கள். மறுகணமே யோசித்து விட்டு அவன் மீண்டும் மேலே படியேறத் தொடங்கினான். பேச்சு சத்தம் மெல்ல மெல்லக் கரைந்தபடி இருந்தது. திருப்பத்துக்குள் திருப்பமாக வளைந்து வளைந்து படிகள் நீண்டன. அந்தப் படிகள் எல்லாம் மழமழப்பாகவே இருந்தன. ஜன்னல்களில் கூட குறுக்குக் கம்பிகளும் கலர் கண்ணாடிகளும் இருந்தன. கண்ணாடிகளின் நிறங்களைப் பக்கத்தில் போய்ப் பார்த்தான். அசல் நீலநிறம். அதற்குள் சின்னச்சின்ன பூக்களிருப்பதை அருகில் சென்றதும்தான் கவனித்தான். உடனே அவற்றைத் தொட்டுப் பார்க்க அவன் கைகள் துறுதுறுத்தன. எட்டித் தொட்டுவிட பலமுறை முயற்சி செய்தான். முடியவில்லை. ஓரிரு முறை மரச்சட்ட விளிம்புவரை அவன் விரல்கள் நீண்டு தாழ்ந்தன. ‘த்ச்என்று நாக்குச் சப்புக் கொட்டிவிட்டு மீண்டும் படியேறத் தொடங்கினான்.

படிகள் முடிந்து முற்றிலுமான வெளி தனக்கு முன்னே விரிந்திருப்பதைப் பார்த்ததும் அவனுக்குப் பொங்கிய ஆனந்தத்துக்கு அளவே இல்லை. சூரிய வெளிச்சத்தில் கண்கள் கூசின. கால் பாதங்களில் சூடு ஏறியது. சூரியனுக்கு அருகில் நிற்பதை நினைத்து அவன் மனம் பரபரத்தது. கண்கள் பளபளத்தன. சுற்றிச்சுற்றிப் பார்த்தான். பல இடங்களில் இரும்புக் கம்பிகள் நீண்டிருந்தன. தண்ணீர்த் தொட்டிகளைப் பொருத்தியிருந்தார்கள். நிறைய குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் தாண்டி நடந்தான் அவன். திடுமென அழுகை பீறிட ஒரு குழாயின் மேல் உட்கார்ந்தான். சூடு தாங்காமல் உடனே எழுந்து நின்று அழுகையைத் தொடர்ந்தான். அவனுக்கு அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது. எல்லாருமே தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்றும் அம்மா இருந்தால் இப்படியெல்லாம் ஆகாமல் பார்த்துக்கொள்வாள் என்றும் தோன்றியது. “அம்மாஎன்று விரிந்த வானத்தைப் பார்த்துச் சிணுங்கினான். அவனுடைய சின்ன மார்பு கேவலில் தூக்கி வாரிப் போட்டது.

ரொம்ப நேரத்திற்குப் பிறகு அழுகையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து வானத்தை நோக்கிக் கை நீட்டினான். சிரித்தான்.  

ஆண்டாள் ஆயா சொன்னதெல்லாம் பசுமையாய் ஞாபகத்திலிருந்தது.

ஒங்கம்மா மானத்துலதா இருக்கா, நீ என்ன செய்யற, என்ன சாப்படற எல்லாத்தயும் அங்கேர்ந்து பாத்துக்கிட்டே இருப்பா. நீ இங்க சாப்பிட்டாத்தான் அவளும் அங்க சாப்புடுவா. இல்லன்னா அழுவா.”

திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலித்தன. அவன் மீண்டும்அம்மா . . . அம்மாஎன்று கூவினான். வானத்திலிருந்து அம்மா ஏன் இறங்கி வரவில்லை என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. மீண்டும் சத்தம் போட்டுக் கூவினான். கூவிக்கொண்டே இப்போது வானைத் தொடக் கைகளை நீட்டினான். எட்டவில்லை. அவன் இத்தனை நாட்களும் நம்பிக்கை வைத்திருந்த ஆயாவின் வார்த்தைகள் கூட நடக்கவில்லை என்றதும் அவன் மனம் துவண்டது. எல்லோருமே மோசக்காரர்கள் என்று கசப்புடன் நினைத்தான். அதே சமயம் அம்மாதான் வேண்டுமென்றே தன்னை அழ வைத்து வேடிக்கை பார்க்கிறாள் என்ற எண்ணமும் எழுந்தது. மீண்டும் கைகளை நீட்டி எம்பிக்குதித்து வானத்தைத் தொட முயற்சி செய்தான். அப்போதுதான் ஓடி வந்து தாண்டும் ஆபியம் ஆட்டம் ஞாபகம் வந்தது. ஓடி வந்து எகிறினால் அதிக உயரம் எகிறிக் குதிக்க முடியும் என்றும் தோன்றியது. நினைக்கும்போது உடம்பு சிலிர்த்தது. அம்மா. அவளைப் பார்த்ததுமே கட்டிப்பிடித்துக்கொண்டு தன் குறையையெல்லாம் சொல்ல வேண்டும் என்று முடிவு கட்டினான். அதே சமயம் படிகளில் திடுதிடுவென்ற சத்தம். ஓடி வரும் சத்தம். “குப்புசாமி . . . குப்புசாமி . . .” அக்குரல் அப்பாவுடையது என்று தோன்றியது. அப்பா வருவதற்குள் அம்மாவை பிடித்து இறக்கி வந்துவிட வேண்டும், அவரால் செய்ய முடியாத காரியத்தை நான்தான் செய்யப் போகிறேன் என்றபடி சந்தோஷத்தோடு மெல்ல மெல்ல வேகமெடுத்து விளிம்பின் பக்கம் ஓடி அம்மா என்று கூவியபடி வானத்தை நோக்கி எகிறினான்.

(இந்தியா டுடே - 1995)