Home

Monday, 30 October 2023

அன்புள்ள தாத்தா - புத்தக அறிமுகம்

 

காந்தியடிகளின் மகன்களில் ஒருவரான இராமதாஸ் காந்தியின் மகன் கனு காந்தி. குழந்தைப்பருவத்திலிருந்தே காந்தியடிகளின் ஆசிரமத்திலேயே வளர்ந்துவந்தவர். வங்காளத்திலிருந்து ஆசிரமத்துக்கு வந்து குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆபா. (பிற்காலத்தில் கனுவை மணந்து ஆபா காந்தியானவர்) இவ்விருவருமே ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காந்தியடிகளை மிக நெருக்கத்தில் நின்று பார்க்கும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தனர். காந்தியடிகளின் முதுமைக்காலத்தில் அவருக்குத் துணையாக இருக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது.

எல்லோருக்கும் சொல்வதுபோல காந்தியடிகள் அவர்களிடமும் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை விதைத்தார்.  அவருடைய ஆலோசனைக்கு இணங்கி அவர்களும் எழுதினர். காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு, பலருடைய நினைவுகள் தனித்தனி நூல்களாக வெளிவரத் தொடங்கின. கனு காந்தியும் ஆபா காந்தியும் எழுதிய 24 நினைவுக்குறிப்புகள் தொகுக்கப்பட்டு நூல்வடிவில் வெளிவந்தது. அவற்றை மு.ஞானம் தமிழில் மொழிபெயர்க்க, பப்ளிகேஷன் டிவிஷன் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது.

காந்தியடிகள் தன் வாழ்வில் பிரார்த்தனைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை உணரும் வகையில் அமைந்த கனு காந்தியின் நினைவுக்குறிப்போடு புத்தகம் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளையும் அதிகாலைப் பிரார்த்தனையோடு தொடங்குவது காந்தியடிகளின் வழக்கம். அதைப்போலவே மாலைப் பிரார்த்தனையும் உண்டு. சிறையில் இருக்கும்போது கூட அவர் அப்பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார். அவரைப் பொறுத்தவரை பிரார்த்தனை என்பது இறைவனின் முன்னால் கைகூப்பி கோரிக்கைகளை முன்வைக்கும் மன்றாட்டு அல்ல. அது ஒரு மன ஒழுக்கு. தியானத்தின் வழியாக இறைவனின் காலடியில் நின்றுகொண்டிருக்கும் உணர்வை எய்துவது.

1946இல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை கனு காந்தி தன் நினைவிலிருந்து சொல்லியிருக்கிறார். அப்போது காந்தியடிகள் மிசெளரியில் இருந்தார். தங்குமிடத்தில் நடைபெறவிருந்த மாலைப் பிரார்த்தனைக்கு வந்து கலந்துகொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தார். ஆனால் அவர் பயணம் செய்த வாகனம் எங்கோ நெரிசலில் சிக்கி தங்குமிடத்துக்கு குறித்த நேரத்தில் நெருங்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் கனு காந்தி அனைவருக்கும் வணக்கம் சொல்லி பிரார்த்தானையைத் தொடங்கிவிட்டார். தாமதமாக வந்து சேர்ந்ததால், கீதை சுலோகங்கள் சொல்லிமுடிக்கும் வரை வெளியே காத்திருந்தார். அதன் பிறகே அவர் உள்ளே வந்தார். எல்லோருடைய முன்னிலையிலும் தாமதத்துக்கு மன்னிபு கேட்ட பிறகே அன்று தன் உரையைத் தொடங்கினார் காந்தியடிகள். பிரார்த்தனை எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு ஒரு வேலையைக் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிப்பதும் முக்கியம் என்று நினைத்தவர் அவர்.

உணவும் நீரும் இல்லாமல் கூட தன்னால் இருந்துவிட முடியும் என்றும் பிரார்த்தனையும் ராமநாமமும் இல்லாமல் தன்னால் ஒரு கணம் கூட இருக்கமுடியாது என்றும் சொல்வது காந்தியடிகளின் வழக்கம். 1941இல் அவரைச் சந்திக்க வந்த சதீஷ் சந்திரதாஸ் குப்தா என்பவர் “ராமனின் வாழ்க்கையிலிருந்து உங்களுக்கு ஊக்கம் கிடைப்பதாக நீங்கள் அடிக்கடி சொல்லி வருகிறீர்கள். ஆனால் அந்த ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றவன். மாயமானைத் துரத்திக்கொண்டு ஓடியவன். இப்படிப்பட்ட ராமனை எப்படி இலட்சியபுருஷனாக கருதமுடியும்?” என்று கேட்டதையும் அதற்குக் காந்தியடிகள் “வாலி-சுக்ரீவன் சண்டையில் வாலியை மறைந்திருந்து கொன்ற ராமனோ, மானைத் துரத்திக்கொண்டு ஓடிய ராமனோ என் ராமனல்ல. தன் தந்தையார் பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வனவாசம் ஏற்றவரே என் ராமன். பரதன் வந்து அரசாளும்படி கோரிக்கை வைத்த போதும் அதை ஏற்காதவனே என் ராமன்” என்று பதில் சொன்னதையும் தன் நினைவிலிருந்து பதிவு செய்திருக்கிறார் கனு காந்தி. ஒரே ஆளுமையின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடந்தபோதிலும் எதை முன்னுதாரணமாகக் கொள்வது, எதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் அவருக்கு முழு தெளிவும் இருந்தது என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்று.

ராமநாமம் தொடர்பாக, கனு இன்னொரு நிகழ்ச்சியையும் பதிவு செய்திருக்கிறார். ஒருமுறை அவர் “மனிதர்கள் இறுதிக்காலத்தில் ராமனை நினைத்து அவன் பெயரை உச்சரித்தால் அவனை அடைந்துவிடலாம்  என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது அல்லவா? அப்படியென்றால் எதற்காக தினமும் இருமுறை பிரார்த்தனை செய்யவேண்டும்? கடைசி நேரத்தில் ராம் ராம் என்று சொன்னாலும் நற்கதி கிடைத்துவிடும் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு காந்தியடிகள் “வாழ்நாள் முழுதும் ராம நாமத்தைச் சொல்லாதவனுக்கு இறுதித்தருணத்தில் ராம நாமத்தின் நினைவு வருவதற்கான வாய்ப்பே இல்லை. இறுதித்தருணத்தில் ராம நாமத்தின் பெயர் நினைவுக்கு வரவேண்டுமெனில் வாழ்வையே ராமன் மயமாக அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது நடக்கும்” என்று அமைதியாக புன்னகைத்தபடியே தெளிவுபடுத்தினார்.

ஒருமுறை கனுவுக்கு அம்மை போட்டிருந்தது. சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த பல சிறுவர்சிறுமியருக்கும் அம்மைநோய் கண்டிருந்தது. அவர்கள் அனைவருக்கும் காந்தியடிகளே வைத்தியம் பார்த்தார். பட்டினியும் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த வெந்நீர்த்தொட்டிக் குளியலும்தான் அவருடைய வைத்திய முறை. ஆசிரமத்தில் தங்கியிருந்த பலருக்கு இதில் மாறுபட்ட கருத்து இருந்தது. அம்மை போட்டால் தண்ணீரின் பக்கம் போகவே கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. அது அம்மனுக்கு சீற்றமுண்டாக்கிவிடும் என்று நம்பினார்கள். கனுவின் பாட்டியும் அந்த எண்ணம் கொண்டவராக இருந்தார். காந்தியடிகள் அவருக்கு மெதுவாக எடுத்துரைத்துப் புரியவைத்தார்.  ஆசிரமத்தில் உள்ள எல்லாப் பிள்ளைகளுக்கும் தண்ணீர்த்தொட்டிக் குளியலே மருந்தாக அமைந்திருக்கிறது. யார்மீதும் அம்மனுக்கு கோபம் வரவில்லை. அப்படியிருக்கும் நிலையில் கனு மீது மட்டும் அம்மனுக்கு கோபம் வர வாய்ப்பே இல்லை என்றெல்லாம் எடுத்துச் சொல்லிப் புரியவைத்து அவருடைய இசைவைப் பெற்றார். அப்போதே கனுவுக்கு வெந்நீர்த்தொட்டக் குளியல் கொடுக்கப்பட்டது. ஏழு நாட்களில் அவர் உடல்நலம் தேறிவிட்டது. காந்தியடிகளின் இயற்கை வைத்திய முறைக்கு வெற்றி கிடைத்தது.

1944இல் ஆகாகான் மாளிகை சிறைச்சாலையிலிருந்து விடுதலையடைந்த பிறகு சிறிது காலம் தீன்ஷா மேத்தா என்பவருக்குச் சொந்தமான இயற்கை வைத்திய சாலையில் தங்கியிருந்தார் காந்தியடிகள். அங்கே அழகான பாட்மிண்டன் ஆடுகளம் இருந்தது. நோயாளிகள் தினமும் அங்கே விளையாடி உடற்பயிற்சி செய்வதற்காக அந்த மைதானம் உருவானதாக மேத்தா தெரிவித்தார். அவருடைய அனுமதியுடன் அந்த ஆடுகளத்தை ஒரு காய்கறித் தோட்டமாக மாற்றிவிட்டார் காந்தியடிகள். அத்தோட்டத்தில் தினமும்  வேலை செய்வதால் சாப்பாட்டுக்குத் தேவையான காய்கறிகள் எளிதான வழியில் கிடைத்துவிடும். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியும் கிடைத்துவிடும் என்று காந்தியடிகள் விளக்கமளித்தார்.

ஒருமுறை காந்தியடிகள் மலிகாந்தா என்னும் ஊருக்குச் செல்ல ரயில்நிலையத்துக்கு வந்தார். ரயில்நிலையத்தில் கூடியிருந்த கூட்டம் அவரை வாழ்த்தும் பேரோசை கேட்டது. பல தலைவர்களுக்கும் வாழ்க முழக்கம் எழுப்பினர். அக்கூட்டத்தில் ஒருவர் கூட சுபாஷ் சந்திர போஸுக்கு வாழ்த்தொலி எழுப்பவில்லை என்பதைக் காந்தியடிகள் கவனித்தார். தன்னோடு உதவிக்காக வந்த மகாதேவ தேசாயிடம் அதைக் குறிப்பிட்டு வருந்தினார். சுபாஷ் பாபுவுக்கும் காந்தியடிகளுக்கும் சிறியதொரு கருத்து வேறுபாடு இருந்த நேரம் அது. ஆனால் அதற்காக, அவருடைய வீரத்தையும் நாட்டுப்பற்றையும் தியாகத்தையும் ஒருவரும் மறந்துவிடக் கூடாது எனக் கருதினார் அவர். வங்காளத்தில் சுபாஷ் பாபுவுக்கு வாழ்த்தொலி எழுப்பாதது கூட ஒருவகையில் அகிம்சைக்கு எதிரானது என்று காந்தியடிகள் குறிப்பிட்டார்.

ஆபா இளம்வயதிலேயே வங்காளத்திலிருந்து தன் தந்தையாரோடும் சகோதரனோடும் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்துவிட்டவர். ஒருமுறை அவர் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். உடனே பா ஆபாவை அவருடைய குடிலிலிருந்து பிரித்து தன்னுடைய குடிலுக்கு அழைத்துச் சென்று தன் மேற்பார்வையில் வைத்துக்கொண்டார். ஐம்பத்தாறு நாட்களுக்குப் பிறகுதான் அவர் அந்தக் காய்ச்சலிலிருந்து மீண்டார். அதுவரை ஒரு தாயைப்போல பா அச்சிறுமிக்கு வேளாவேளைக்கு மருந்தும் உணவும் கொடுத்து அருகிலிருந்து கவனித்துக்கொண்டார்.

குணமடைந்த பிறகு ஆபா தன் குடிலுக்குச் செல்லத் தயாரானார். ஆனால் ஒரு குழந்தையைப்போல பக்கத்திலேயே நின்று கவனித்த பழக்கத்தால் ஆபா குடிலைவிட்டு வெளியேறுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலில் வெயில் நேரத்தில் செல்லவேண்டாம், பொழுது சாய்ந்த பிறகு போகலாம் என்று சொல்லித் தடுத்து நிறுத்தினார். பிறகு அடுத்தநாள் காலையில் செல்லலாம் என்று சொல்லித் தடுத்தார். அதற்குள் காந்தியடிகளைச் சந்தித்து ஆபாவை தன் குடிலிலேயே வைத்துக்கொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்து அவருடைய அனுமதியை வேண்டினார். காந்தியடிகள் அந்த ஏற்பாட்டுக்கு இசைவு தெரிவித்தார். பாவின் அன்பை நினைத்து மனம் நெகிழ்ந்த ஆபா, அவருடைய எண்ணத்துக்கு இணங்கி, அவருடைய குடிலிலேயே தங்கி விட்டார்.

ஒருமுறை பா உடல்நலம் குன்றிப் படுத்த படுக்கையாகிவிட்டார். காந்தியடிகளின் வழக்கமான இயற்கை வைத்திய முறைப்படி வைத்தியம் நடந்தது. ஆபா அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். ஒருநாள் காலையில் அவரை வந்து பார்த்த காந்தியடிகள் பாவுக்கு காலை உணவாக பாலும் திராட்சைச்சாறும் கொடுக்கவேண்டும் என்று ஆபாவிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இந்தி மொழியை  முழுமையான அளவுக்குப் புரிந்துகொள்ள முடியாத ஆபா தான் புரிந்துகொண்ட விதமாக பாலையும் திராட்சைச்சாற்றையும் கலந்து ஒரு தம்ளரில் கொண்டு வந்து பாவிடம் கொடுத்தார். கரிய நிறமான அத்திரவத்தைப் பார்த்ததுமே பா கோபம் கொண்டார். அதை அருந்த மறுத்தார். காந்தியடிகள் குறிப்பிட்டபடிதான் கொண்டுவந்ததாகச் சொல்லியும் அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தற்செயலாக குளித்துவிட்டு தன் குடிலை நோக்கிச் சென்ற காந்தியடிகள் பாவின் குரலைக் கேட்டு அக்குடிலுக்குள் வந்தார்.

ஆபா எல்லாவற்றையும் விவரித்த பிறகு காந்தியடிகளுக்கு நடந்தது என்ன என்று புரிந்துவிட்டது. பா ஏற்றுக்கொள்ளும் விதமாக அன்பு தோய்ந்த குரலில் ”தனித்தனியாகக் கொண்டுவர வேண்டியவற்றை கலந்து எடுத்துவந்துவிட்டாள்.  இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இதை உணவு என நினைக்கவேண்டாம். இதை மருந்து என்று நினைத்துக்கொள். அப்படி நினைத்தால், உன்னால் கடகடவென குடித்துவிட முடியும்” என்று அமைதியாக எடுத்துரைத்தார். பாவும் அவர் சொற்களை ஏற்று அந்தத் தம்ளரை வாங்கி அமைதியாகக் குடித்துவிட்டார். ஒருபுறம் எவ்வளவோ சிக்கலான அரசியல் விவகாரங்களில் மூழ்கியிருந்த போதும் மறுபுறத்தில் காந்தியடிகள் அனைவரோடும் அன்பும் நிதானமும் பொறுமையும் கொண்ட முகத்தோடு பழகுகிறவராகவும் இருந்தார்.

ஆபாவுக்கும் கனுவுக்கும் 1944இல் திருமணம் நடைபெற்றது. அப்போது ஆசிரமத்தில் இருந்த சரோஜினி நாயுடு ஆபாவுக்கு ஒப்பனை செய்வதற்கு முன்வந்தார். காந்தியடிகளிடம் அதற்கு அனுமதி கேட்டார். காந்தியடிகளோ தன்னிடம் நகைகள் எதுவும் இல்லையென்று தெரிவித்துவிட்டார். நகை எதுவும் இல்லாமல் பூக்களாலேயே ஒப்பனை செய்துவிடுவதாகச் சொன்னார் சரோஜினி நாயுடு. அதற்கு ஒப்புதல் கொடுத்தார் காந்தியடிகள். அறைக்கு அழைத்துச் சென்ற சரோஜினி நாயுடு ஒப்பனை வேலைகளைத் தொடங்கினார். சிறிது நேரத்திலேயே காந்தியடிகளிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. வெளியே வந்து அவரைச் சந்தித்தபோது கீழே விழுந்திருக்கிற பூக்களைக் கொண்டுதான் ஒப்பனை செய்யவேண்டுமே தவிர, செடியிலிருந்து பூக்களைப் பறிக்கக்கூடாது என்றும் கறாரான குரலில் சொன்னார்.

அந்தத் திருமணத்தில் லட்சுமிதாஸ் பிர்லா ஆபாவுக்காக ஒரு நெக்லஸ் வாங்கி வந்தார். அதை காந்தியடிகளிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த காந்தியடிகள் “இதை அவள் கழுத்தில் அடிமை சாசனப்பட்டாவாக போடப் பார்க்கிறீர்களா? இதை எனக்குக் கொடுத்துவிடுங்கள். ஹரிஜனத் தொண்டுக்கு மிகவும் பயன்படும்” என்று தெரிவித்தார். பிர்லாவுக்கு ஒப்புக்கொள்வதைத் தவிர வேரு வழியில்லை. அந்த நெக்லஸ் அவருடைய விருப்பப்படியே ஹரிஜனத்தொண்டு நிதியோடு சேர்ந்துவிட்டது. சிறிது நேரம் கழித்து காந்தியடிகள் பிர்லாவிடம் “திருமணத்தின்போது யாரும் ஒன்றும் கொடுக்கக்கூடாதுதான். ஆனால் உங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கிறேன். பணம் ஏதேனும் கொடுப்பதாக இருந்தால், ஆபாவுக்கு மட்டும் கொடுக்கலாம்” என்று தெரிவித்தார். அதன் பிறகு பிர்லா ஆபாவின் பெயரில் ஒரு காசோலையை எழுதி வந்து கொடுத்தார்.

1946இல் கிழக்கு வங்காளத்தில் நவகாளியில் மதக்கலவரம் வெடித்திருந்த சமயத்தில், இரு மதத்தினரிடையிலும் நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டு காந்தியடிகள் நவகாளிக்குச் சென்றிருந்தார். அப்போது அவருக்குத் துணையாக ஆபாவும் சென்றிருந்தார். நவகாளியில் பல முஸ்லிம் சகோதரர்கள் அவரை வந்து சந்தித்தனர். ஆனால் முஸ்லிம் பெண்கள் யாரும் வரவில்லை. ஒருமுறை ஒரு பெரிய வீட்டைச் சேர்ந்த பெண்கள் ஆபாவிடம் “நாங்களும் காந்தியடிகளைக் காண விரும்புகிறோம். அவர் இங்கு வருவாரா?” என்று கேட்டனர். தானே காந்தியடிகளை அங்கு அழைத்து வருவதாக அவர்களிடம் தெரிவித்துவிட்டு வந்தார் ஆபா. காந்தியடிகளிடம் விவரத்தைச் சொன்னார். அவர்களுடைய வீட்டுக்குச் செல்லும் திட்டத்தை காந்தியடிகளும் ஏற்றுக்கொண்டார்.

மறுநாள் காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தபோது அவர்களுடைய வீட்டுக்கு இருவரும் சென்றனர். காந்தியடிகளை வாசலில் ஒரு நாற்காலியில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று அப்பெண்களை அழைத்தார் ஆபா. அப்போது அந்தப் பெண்களோ வாசல் கதவு வரை வந்து திரும்பிவிட்டனர். அதைப் பார்த்து ஆபா திகைத்துவிட்டார். சங்கட உணர்வுடன் அவர்களைப் பார்த்து “இது என்ன கூத்து? நீங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில்தானே நான் அவரை இங்கு அழைத்து வந்தேன். நீங்கள் வெளியே வர மறுத்தால் நான் என்ன செய்யமுடியும்? தேவையில்லாமல் அவரை இங்கே அழைத்து அலையவைத்து விட்டீர்களே” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டார். அதைக் கேட்டதும் காந்தியடிகள் அவசரமாக ஆபாவைத் தடுத்து அமைதிப்படுத்தி “அப்படியெல்லாம் பேசக்கூடாது. ஒருவேளை அவர்களுடைய வீட்டு ஆண்கள் அவரைத் தடுத்திருக்கலாம். நாம் இரு மதத்தினரிடையேயும் அமைதியை நிலைநாட்ட நவகாளிக்கு வந்திருக்கிறோம். நாம் ஒவ்வொன்றையும் அமைதியோடும் அன்போடும் செய்யவேண்டும். நீ உள்ளே சென்று அவர்களிடம் பிறகு எப்போது சந்திக்கலாமோ அப்போது உன்னிடம் சொல்லலாம் என்று அன்போடு சொல்லிவிட்டு வா” என்று சொல்லி அனுப்பிவைத்தார். அந்தக் குடும்பத்தில் இந்த நிகழ்ச்சியால் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆபா.

நவகாளி பயணம் தேசத்தின் கொந்தளிப்பான காலகட்டத்தில் நடைபெற்றது. ஏராளமான வேலை நெருக்கடிகளுக்கும் சந்திப்புகளுக்கும் இடையில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட பொழுதை ஒதுக்கி வங்கமொழியைக் கற்றுக்கொள்ள விரும்பினார் காந்தியடிகள். அவரோடு நிர்மல்குமார் போஸ் என்னும் பேராசிரியர் இருந்தார். அவரிடம் அந்த வேண்டுகோளை முன்வைத்தார். அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட பேராசிரியர் வங்கமொழி அரிச்சுவடியிலிருந்து அப்போதே தொடங்கிவிட்டார். ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட நேரம் வங்கமொழிப் பயிற்சியில் செல்வானது. வெகுவிரைவிலேயே அவர் எழுத்துகளைக் கற்றுத் தேர்ந்து சொற்களை எழுத்துக்கூட்டி படிக்கும் அளவுக்கு படிப்படியாக முன்னேறினார். சில மாதங்களில் வாக்கியங்களைப் படிக்கவும் எழுதவும் தொடங்கினார். அதற்குள் நவகாளிப்பயணம் முடிவடைந்தது. அங்கிருந்து அவர் டில்லிக்குத் திரும்பவேண்டியதாயிற்று.

வங்கமொழிப் பயிற்சி என்பதை அவர் வங்காளத்தோடு நிறுத்திவிடவில்லை. நிர்மல்குமார் போஸ் டில்லிக்கு வரவில்லை என்றபோதும் அவர் வங்கமொழிப் பயிற்சியைத் தொடரவே விரும்பினார். அதனால் கற்பிக்கும் பொறுப்பை அவர் ஆபாவிடம் ஒப்படைத்தார். ஆபாவுக்கு அதில் தயக்கம் இருந்தது  ஆனாலும் காந்தியடிகள் அவரை உற்சாகப்படுத்தி ஆசிரியராக மாற்றிவிட்டார். 79 வயது பெரியவருக்கு 20 வயது நிறைந்த சிறுபெண் ஆசிரியராக இருந்த வங்க மொழியைக் கற்றுக்கொடுத்தார். நடுநடுவே மத ஒற்றுமைக்காக அவர் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அச்சூழலில் கூட அவருடைய வங்கமொழிப் பயிற்சி நிற்கவில்லை.

உண்ணாவிரத சமயத்தில் பல நேரங்களில் அவர் களைப்பாகவே இருந்தார். அக்களைப்பைக் காரணம் காட்டி வங்கமொழிப் பாடத்தை நிறுத்திவிடலாம் என்று ஆலோசனை சொன்னார் ஆபா. ஆனால் காந்தியடிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “அது எப்படி? நான் எவ்வளவு களைத்திருந்தாலும் வங்கமொழிப்பாடம் நடந்தே தீர வேண்டும். என் மீது இரக்கம் வேண்டாம். ஒருவகையில் அது எனக்கு உணவு. அதை நான் ஒவ்வொரு நாளும் ஒழுங்காக எடுத்துக்கொள்ளவேண்டும். புத்தகத்தை எடு. படிக்கிறேன்” என்று வற்புறுத்தி பாடம் கேட்டார்.

அந்த அனுபவத்தை ஆபாவின் குறிப்புகள் உருக்கமுடன் சித்தரிக்கின்றன. காந்தியடிகள் தன்னுடைய இறுதிநாளான 30.01.1948 அன்று கூட வங்கமொழிப் பாடம் கற்றுக்கொண்டார் என்றும் அவர் இறுதி நாளில் வங்கமொழியில் எழுதிய பாடம் கூட தன்னிடம் இருக்கிறது என்றும் எழுதியிருக்கும் ஆபாவின் குறிப்புகள் மெய்ச்சிலிர்க்க வைக்கின்றன. தலைசிறந்த மனிதரான காந்தியடிகள் கல்வி கற்பதிலும் தலைசிறந்த மாணவராகவும் விளங்கியதையே ஆபாவின் சித்தரிப்பு உணர்த்துகிறது.

பிரார்த்தனை தொடர்பான கனு காந்தியின் நினைவுகளோடு தொடங்கும் புத்தகம் காந்தியடிகள் கொல்லப்பட்ட இறுதிநாள் பிரார்த்தனை பற்றிய ஆபா காந்தியின் நினைவுகளோடு முடிவடைகிறது. 30.01.1948 அன்று மாலை காந்தியடிகளைச் சந்திப்பதற்காக சர்தார் வல்லபாய் படேல் வந்திருந்தார். அவர்களிருவரும் தனித்து உரையாட நினைத்ததால் ஆபா அறையைவிட்டு வெளியே வந்துவிட்டார். பிரார்த்தனை நேரமான ஐந்து மணி நெருங்கிவிட்டது. உரையாடிக்கொண்டிருப்பவர்களுக்கு அருகில் நெருங்கி தாமதம் தொடர்பாக உணர்த்த வழியின்றி வெளியே தவித்து நின்றபடி அவர்களையே பார்த்தபடி நின்றிருந்தார் ஆபா. பிரார்த்தனை நேரத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும் காந்தியடிகளின் குணத்தை நன்கு அறிந்திருந்தபோதும் வேறு வழியின்றி எட்டு நிமிடங்கள் வரைக்கும் காத்திருந்தார். பிறகு துணிச்சலோடு அறைக்குள் சென்று கடிகாரத்தை அவருக்கு முன்னால் அமைதியாக வைத்துவிட்டு நின்றார். அப்போதுதான் தாமதத்தை உணர்ந்த காந்தியடிகள் “இது என்ன? பத்து நிமிடம் தாமதமாகிவிட்டது. நான் கிளம்பவேண்டும். நீங்கள் வேண்டுமெனில் நாளை வரலாம்” என்று படேலிடம் சொல்லிக்கொண்டே எழுந்தார்.

பிரார்த்தனை செய்யும் இடத்தை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார் காந்தியடிகள். நான்கு நிமிட நடைதூரம். அந்தத் தொலைவைக் கடப்பதற்குள்  அவர் மார்பில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. அவர் ‘ஹே ராம்’ என்றபடி கீழே சரிந்தார். அவசரமாக கீழே சாய்ந்து அவரை தன் மடியில் தாங்கிக்கொண்டார் ஆபா. அக்கணமே அவர் உயிர் பிரிந்தது.

சிறுசிறு அத்தியாயங்களாக எழுதப்பட்டிருக்கும் நினைவுக்குறிப்புகள் ஒரே வாசிப்பில் படித்துமுடிக்கும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளன. சின்னஞ்சிறு வயதினரின் நினைவுகளில் பதிந்திருக்கும் காந்தியடிகளின் படிமம் அவர்களுடைய அன்புள்ள தாத்தா ஒருவருடைய படிமத்துக்கு நிகராகவே உள்ளது.

 

 

(காந்தியுடன் நாங்கள் – கனு காந்தி மற்றும் ஆபா காந்தி. ஆசிரியர்கள்: சஞ்சய் கோஷ் மற்றும் அனுஜ் சர்மா. தமிழாக்கம்.  . டாக்டர் எம்.ஞானம்.  பப்ளிகேஷன் டிவிஷன், தகவல் மற்றும் ஒலிபரப்பு அச்சகம், சூச்னா பவன், சி.ஜி.ஓ.காம்ப்ளெக்ஸ், லோதி ரோடு, புதுடெல்லி-3. விலை. ரூ.90)

(புக் டே – இணைய தளம் 27.10.2023)