கல்கத்தாவில் 04.09.1920 அன்று நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்துக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து உரையாற்றினார். அந்த உரையில், ஜாலியன்வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலைக்கு எல்லா வகையிலும் மூல காரணமாக இருந்த ஜெனரல் டயர் மீது பெயருக்கு ஒரு விசாரணை நடைபெற்ற போதும் அவருக்கு எவ்விதமான தண்டனையும் பிரிட்டன் அரசு வழங்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். இப்போக்கு பிரிட்டன் அரசுக்கும் இந்திய வைசிராய்க்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதில் எவ்விதமான அக்கறையும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது என எடுத்துரைத்தார். இதுபோன்ற நிகழ்ச்சிகள் இனியொரு முறை நிகழாமல் இந்திய மக்களைப் பாதுகாப்பதற்கு சுயராஜ்ஜியமே சிறந்த தீர்வென்றும் அறவழியிலான ஒத்துழையாமை இயக்கத்தின் வழியாக சுயராஜ்ஜியத்தை அடைய இந்திய மக்கள் அனைவரும் இணைந்து போரிடவேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஒத்துழையாமை
என்பதைப்பற்றி போதுமான விளக்கங்களையும் காந்தியடிகள் அன்றைய உரையில் வழங்கினார். அரசு வழங்கிய பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும்
துறத்தல், அரசு விழாக்களில் பங்கேற்காமை, அரசு கல்லூரிகளிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும்
மாணவர்கள் வெளியேறி சுதேசி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்வியைத் தொடர்வது, வழக்கறிஞர்கள்
நீதிமன்றங்களிலிருந்து வெளியேறுவது, தேர்தலில் பங்கெடுக்காமல் இருத்தல், அயல்நாட்டு
ஆடைகளை விலக்குதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் ஒத்துழையாமை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்கலாம் என்று
காந்தியடிகள் அறிவித்தார்.
காந்தியடிகளின் உரை இந்தியாவெங்கும் எல்லாப் பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது. பொதுமக்கள் அனைவரும் அதைப் படித்தார்கள். அப்போது காசியில் உயர்நிலைப்பள்ளியில் இறுதிவகுப்பில் படித்துக்கொண்டிருந்த பதினாறு வயது மாணவரொருவர் அந்த அறிவிப்புச்செய்தியைப் படித்து மனஎழுச்சியுற்றார். சுயராஜ்ஜியத்தை அடைவதற்காக பள்ளியை விட்டு வெளியேறி விடுதலை இயக்கத்தில் ஈடுபடவேண்டும் என்று அவர் விரும்பினார். தன் விருப்பத்தைப்பற்றி தன் தாயாரிடம் தெரிவித்தார். தந்தையில்லாத குடும்பம் அது. சித்தப்பாவின் ஆதரவில்தான் அவர் படித்துக்கொண்டிருந்தார். படிப்பை முடித்து வேலைக்குச் சென்று பொருளீட்டும் நாளை அந்தக் குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. அச்சூழலில் காந்தியடிகளின் அழைப்பையேற்று பள்ளியை விட்டு வெளியேறப் போவதாக அந்த மாணவர் தெரிவித்ததும் அவருடைய தாயார் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். செய்தியை அறிந்த உறவினர்கள் அனைவரும் அவரைத் தடுக்க முனைந்தனர். குடும்பமா, போராட்டமா என முடிவெடுக்கமுடியாமல் அந்த மாணவர் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
அதே
நேரத்தில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக,
காங்கிரஸ் தொண்டர்கள் காசியில் ஒரு பொதுக்கூட்டத்துக்கும் ஊர்வலத்துக்கும் ஏற்பாடு
செய்துகொண்டிருந்தனர். அதைப்பற்றிய செய்தி கிடைத்ததுமே, காவல் துறையினர் அதற்குத் தடை
விதித்திருந்தனர். ஆயினும் அதைப் பொருட்படுத்தாத தொண்டர்கள் தடையை மீறி ஊர்வலமும் பொதுக்கூட்டமும்
நடத்தினார்கள். தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாத அந்த மாணவர் தன்னுடைய ஐந்து நண்பர்களுடன்
பள்ளியிலிருந்து வெளியேறிச் சென்று அந்த ஊர்வலத்திலும் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
அவர் பெயர் லால் பகதூர் என்கிற லால் பகதூர் சாஸ்திரி.
அத்தருணத்துக்கு
முன்னரே அந்த மாணவர் காந்தியடிகளை நேரில் பார்த்திருந்தார். காந்தியடிகளுடைய உரையையும்
அவர் கேட்டிருந்தார். காசியில் இந்து பல்கலைக்கழகம் 04.02.1916 முதல் இயங்கத் தொடங்கியபோது,
அதன் தொடக்கநாளில் சிறப்புரையாற்றுவதற்காக பண்டிதர் மாளவியா காந்தியடிகளை அழைத்திருந்தார். பரோடா மன்னர் தலைமை தாங்கிய அந்த நிகழ்ச்சியில்
பல்கலைக்கழகத்துக்கு நிதி வழங்கிய செல்வந்தர்களும் பல சிற்றரசர்களும் கூடியிருந்தனர்.
காந்தியடிகள் தன் உரையில் நாட்டில் நிலவும் அடிமை நிலையைப்பற்றியும் ஆங்கிலேயர் ஆட்சியை
அகற்றவேண்டிய கடமையைப்பற்றியும் குறிப்பிட்டார். ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
உரையைக் கேட்க அங்கிருந்த பரோடா மன்னரும் மற்றவர்களும் அஞ்சினர். ஆகவே, சிலர் நிகழ்ச்சியிலிருந்து
வெளியேறினர். அரங்கத்திலேயே அமர்ந்திருந்த சிலர் காந்தியடிகளுடைய உரைக்கு எதிர்ப்புத்
தெரிவித்தனர். அதன் காரணமாக காந்தியடிகளுடைய உரை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பெரும்பாலானோருக்கு
காந்தியடிகளுடைய சொற்கள் ஒவ்வாமையை அளித்தன. ஆயினும் உண்மை பொதிந்த அவருடைய சொற்களால்
ஈர்க்கப்பட்டவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். அவர்களில் ஒருவராக இருந்து, அன்றைய
உரையைக் கேட்ட லால் பகதூரின் நெஞ்சில் காந்தியடிகளுடைய சொற்கள் பசுமரத்தாணி போல பதிந்தன.
தடைசெய்யப்பட்ட
ஊர்வலத்தில் கலந்துகொண்ட காரணத்தால் காவல்துறையினர் லால் பகதூரைக் கைது செய்தனர். ஆனால்
பள்ளி மாணவர் என்பதால் எச்சரிக்கைச் சொற்களோடு அவரை அனுப்பி வைத்தனர். ஆயினும் லால்
பகதூர் ஊர்வலத்தில் பங்கேற்ற செய்தி அவர் படித்த அரிச்சந்திரா உயர்நிலைப்பள்ளிக்குத்
தெரிந்துவிட்டது. அதனால் அந்தப் பள்ளி நிர்வாகம் அவரை மீண்டும் பள்ளிக்குள் அனுமதிக்க
மறுத்தது. அதனால் அவருடைய படிப்பு தடைப்பட்டது.
நல்லூழின்
விளைவாக, அந்த நேரத்தில் அதே காசி நகரத்தில் ’காசி வித்தியா பீடம்’ என்னும் சுதேசி
கல்வி நிலையமொன்று இயங்கி வந்தது. லால் பகதூர் அந்தக் கல்வி நிலையத்தில் சேர்ந்து தன்
கல்வியைத் தொடர்ந்தார். அங்கு தத்துவத்துறையில் தலைமைப்பேராசிரியராக இருந்த அறிஞர்
பகவன் தாஸ் அவர்களுடன் நெருங்கிப் பழகி உரையாடி சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொண்டார்.
பள்ளிக்கல்வியையும் கல்லூரிக்கல்வியையும் அங்கேயே படித்து முடித்தார். கல்லூரியில்
முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று 1926இல் சாஸ்திரி பட்டம் பெற்றார்.
அத்தருணத்தில் காந்தியடிகள் தொடங்கிவைத்த
‘மக்கள் பணிச்சங்கம்’ என்னும் அமைப்பு காசியில் இயங்கிவந்தது. கல்வியின்றி வறுமையில்
வாடிய மக்களுக்கு ஏற்றவகையில் தொண்டாற்றுவதற்காக லாலா லஜபதிராய் அந்த அமைப்பை உருவாக்கினார்.
சாஸ்திரி பட்டம் பெற்றதும் லால் பகதூர் அந்தச் சங்கத்தில் தொண்டராகச் சேர்ந்தார். சங்கத்
தொண்டர்களின் வாழ்க்கைச் செலவுக்கென அறுபது ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. அதை வைத்துக்கொண்டு
தன் தாயாரையும் தமக்கையாரையும் அவர் கவனித்துக்கொண்டார். அதிக எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டோர்
வசித்துவந்த முசபர் நகர் என்னும் ஊரில் அவருடைய பணி அமைந்திருந்தது. சிறார்களுக்கென
கல்விநிலையங்களை உருவாக்கி கற்பிப்பதிலும் சுகாதாரப்பணிகளிலும் அவர் ஆர்வத்தோடு ஈடுபட்டார்.
ஓராண்டுக்குப் பிறகு அலகாபாத் நகரத்துக்கு இடம் மாறி வந்து, அதே பணிகளில் ஈடுபட்டார்.
நேரு தலைமையில் லாகூரில்
16.04.1929 அன்று அகில இந்திய காங்கிரஸ் மாநாடு தொடங்கி 18.04.1929 வரைக்கும் நடைபெற்றது.
அப்போது, இந்திய நாட்டின் சுதந்திரக்கொடியை ’வந்தே மாதரம்’ முழக்கத்துக்கிடையே ரவி
நதிக்கரையில் நேரு முதன்முதலாக ஏற்றிவைத்தார். அந்தக் கொடியேற்றத்தில் கலந்துகொண்ட
லால் பகதூர் மூன்றுநாள் நிகழ்ச்சிகளிலும் தலைவர்கள் ஆற்றிய உரையை ஆர்வத்துடன் கேட்டார்.
1930இல் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகப்
போராட்டத்தைத் தொடர்ந்து நாடெங்கும் சட்ட மறுப்பு இயக்கம் வலிமையடைந்தது. ஆர்வத்துடன்
அதில் பங்கெடுத்துக்கொண்ட லால் பகதூர் அலகாபாத் நகாத்துக்கு அருகில் உள்ள கிராமங்களுக்குச்
சென்று விவசாயிகளிடையில் உரையாற்றினார். ஆங்கிலேயர் ஆட்சியால் ஏற்பட்டிருக்கும் அவமானங்களைப்
பட்டியலிட்டுக் குறிப்பிட்டு, அவற்றுக்கு எதிர்வினை ஆற்றவேண்டிய தேவையைப்பற்றி எடுத்துரைத்தார்.
மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்தின் உதவியாலேயே ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்கின்றனர். அந்த ஆட்சிக்கு நாம் வரி செலுத்துவது என்பது ஆங்கிலேயர்களின்
ஆட்சிக்கு நாம் மறைமுகமாக ஆதரவளிப்பதாக அமையும் என்பதால், அரசுக்கு வரி செலுத்துவதை
நாம் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று உறுதியான குரலில் முழங்கினார். அவரை ரகசியமாகப்
பின்தொடர்ந்து அவருடைய உரையைக் கேட்ட காவல்துறை,
நிகழ்ச்சி முடிந்ததும் அவரைக் கைது செய்தது. நீதிமன்ற விசாரணையில் அவருக்கு இரண்டரை
ஆண்டு காலம் சிறைத்தண்டனை கிடைத்தது. நைனி என்னும் ஊரில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
அப்போது அதே சிறையில் நேருவும் இருந்தார்.
நைனி சிறையில் லால் பகதூர் அடைக்கப்பட்டிருந்த
சமயத்தில் எதிர்பாராத விதமாக அவருடைய பெண்குழந்தை நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகச்
செய்தி வந்தது. அரசியலில் ஈடுபடமாட்டேன் என எழுதிக்கொடுத்து குறிப்பிட்ட காலம் பரோலில்
வெளியே செல்வதற்கு அப்போது வழி இருந்தது. ஆயினும்
அந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள லால் பகதூருக்கு விருப்பமில்லை. தன் துயரத்தை
தனக்குள் விழுங்கியபடி அமைதியாகவே இருந்தார். உண்மையை அறிந்த சிறை அதிகாரி அவருக்கு
உதவுவதற்காக முன்வந்தார். எவ்விதமான உறுதிமொழியையும் எழுதி வாங்காமல், லால் பகதூரை
பதினைந்து நாட்கள் பரோலில் அனுப்பினார். லால் பகதூர் வீட்டையடைந்து நோய்வாய்ப்பட்ட
குழந்தையைப் பார்த்தார். ஆனால் அன்றே அந்தக் குழந்தை இறந்துவிட்டது. மனச்சுமையுடன்
அவரே இறுதிச்சடங்கைச் செய்துமுடித்தார். அதைத் தொடர்ந்து சிறையைவிட்டு வெளியே இருப்பது
முறையன்று எனக் கருதி, உடனடியாக சிறைக்குத் திரும்பினார்.
ஓராண்டு சிறைவாசம் மட்டுமே முடிந்திருந்த
சமயத்தில் லால் பகதூருடைய வாழ்வில் மற்றொரு துயர நிகழ்ச்சி நடந்தேறியது. அவருடைய மகன்
உடல்நலம் குன்றி காய்ச்சலில் அவதிப்படுவதாக செய்தி வந்து சேர்ந்தது. இம்முறையும் எழுதிக்
கொடுத்துவிட்டு வெளியே செல்லும் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள அவருடைய மனம் விரும்பவில்லை.
கடந்த முறை அவரை பரோலில் அனுப்பிவைத்த அதே அதிகாரியே அப்போதும் சிறை அதிகாரியாக இருந்தார்.
லால் பகதூர் மீது மிகவும் மதிப்பு கொண்டிருந்த அவர் முன்பு போலவே எதையும் எழுதி வாங்காமல்
ஒரு வார காலம் பரோலில் அனுப்பினார். லால் பகதூர் வீட்டையடைந்து நலிந்திருந்த மகனைப்
பார்த்தார். வீட்டிலேயே மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. அவர் மகனுக்கு அருகிலேயே
இருந்து கவனித்துக்கொண்டார். ஒரு வார காலம் முடிவடைந்த நிலையில், அவர் மகனுடைய உடல்நிலையில்
சிறிதளவும் முன்னேற்றம் ஏற்படவில்லை. “அப்பா, போய்விடாதீர்கள்” என காய்ச்சலின் உச்சத்தில்
அவன் பிதற்றிக்கொண்டிருந்தான். ஆயினும் கூடுதல் சலுகையைப் பெற விரும்பாத லால் பகதூர்
கண்ணீர் வழியும் கண்களோடு மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.
லக்னோ நகரில் 18.06.36 அன்று கூடிய
அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், நிகழவிருக்கும் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்கும்
முடிவை அறிவித்தது. காங்கிரஸின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நேருவுக்கு
அந்த முடிவில் உடன்பாடில்லை என்றபோதும் பெரும்பான்மையானோரின் கருத்துக்கு அவர் கட்டுப்பட
வேண்டியிருந்தது. சிறைத்தண்டனையை முடித்துவிட்டு விடுதலையாகி வந்திருந்த பெரும்பாலான
தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் அந்த எண்ணம் இருந்தது. 1937இல் நாடெங்கும் நடைபெற்ற
தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு ஐந்து மாகாணங்களில் ஆட்சி அமைத்தது. லால் பகதூர்
சாஸ்திரியும் அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐக்கிய மாகாணச் சட்டசபையின்
உறுப்பினரானார்.
ஐக்கிய மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பை
ஏற்ற காங்கிரஸ், முதல் வேலையாக அந்த மாகாணத்தில் நிலச்சீர்திருத்தத்தை மேற்கொண்டது.
நடைமுறையில் பயனளிக்கும் வகையில் நிலச்சீர்திருத்தச் சட்ட விதிகளை உருவாக்குவதற்காக
ஒரு குழுவை அரசு ஏற்படுத்தியது. அக்குழுவின் முக்கியமான உறுப்பினராக லால் பகதூர் செயல்பட்டார்.
மற்ற உறுப்பினர்களோடு நிகழ்த்திய நீண்ட உரையாடல்களுக்குப் பிறகு ஓர் அறிக்கையைத் தயாரித்து
முதல்வராக இருந்த கோவிந்த் வல்லப பந்த் அவர்களிடம் அளித்தார் லால் பகதூர். அந்த அறிக்கையின்
அடிப்படையில் நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.
ஏழை விவசாயிகள் தாம் உழுதுகொண்டிருந்த நிலங்களின் உரிமையைப் பெற்றனர்.
லால் பகதூர் இயல்பாகவே தன்னலம் கருதாத
அணுகுமுறையைக் கொண்டிருந்தார். சுதந்திரப்போராட்டத்தில்
தொண்டராக பணிபுரிந்த காலத்திலும் சரி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று
செயல்பட்ட காலத்திலும் சரி, அவர் தன் அடிப்படை இயல்பை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை.
கட்சி அமைப்பில் உள்ளவர்களிடையே அடிக்கடி நிகழும் கருத்துவேற்றுமைகளைத் தீர்ப்பதில்
வல்லவராக விளங்கினார். எல்லோரோடும் இணக்கமுடன் பழகி உரையாடும் குணத்தால், அவரால் எல்லா
வேலைகளையும் எளிதாகச் செய்யமுடிந்தது. மதிநுட்பமும் வினைத்திட்பமும் அவரிடம் ஒருங்கே
அமைந்திருந்தன.
இரண்டாம் உலகப்போர் 1939இல் மூண்டது.
பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் தொடங்கிய போர் மெல்ல மெல்ல உலக நாடுகள் பலவற்றுக்கும்
பரவியது. இந்திய நாடும் ஆங்கிலேயருடன் இணைந்து போரில் கலந்துகொண்டதாக, இந்தியாவில்
உள்ள ஆங்கிலேய அரசின் சார்பில் வைசிராய் தன்னிச்சையாக அறிவித்துவிட்டார். இதை காங்கிரஸ்
கட்சி ஒப்புக்கொள்ள மறுத்தது. போர் முடிந்த பிறகு, இந்தியாவுக்கு சுயராஜ்ஜிய உரிமை
அளிப்பதாக வாக்குறுதி அளித்தால் இந்தியா பிரிட்டனுடன் இணைந்து போரில் இறங்கமுடியும்
என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதை பிரிட்டன் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, இந்திய
நாட்டில் ஆங்கிலேய அரசாங்கம் எடுத்த போர் முயற்சிகளை எதிர்ப்பதாக காந்தியடிகள் அறிவித்தார்.
எதிர்ப்புமுறை பற்றிய திட்டத்தை காந்தியடிகளே
உருவாக்கினார். காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர்கள் தனித்தனியாக
பல்வேறு இடங்களில் போர் எதிர்ப்பு உரையை நிகழ்த்தி, பொதுமக்கள் நலம்சார்ந்த அக்கறையின்மை
அரசாங்கத்திடம் குடிகொண்டிருப்பதை அனைவருக்கும் புரியவைப்பதுதான் அத்திட்டத்தின் நோக்கமாகும்.
எங்கு, எப்பொழுது, யார் உரைநிகழ்த்த இருக்கிறார்கள் என்பவற்றைப்பற்றிய விவரங்களை அந்தந்த
வட்டார அதிகாரிகளிடம் முன்னரே தெரிவித்துவிட வேண்டும் என்பது இந்தத் தனிநபர் சத்தியாகிரகத்தின்
அடிப்படை விதியாகும். அந்த இயக்கத்தின் முதல் தொண்டராக தேர்ந்தெடுக்கப்பட்டு பரப்புரையில்
ஈடுபட்டவர் வினோபா பாவே. அதற்குப் பின் ஒருவரை அடுத்து ஒருவராக பல பெருந்தலைவர்கள்
பரப்புரையில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றனர். லால் பகதூரும் தம் முறைக்காகக் காத்திருந்து
போர் எதிர்ப்புரை நிகழ்த்தச் சென்று கைதானர். அவருக்கு ஓராண்டுக் காலம் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டது.
சிறையிலிருந்து விடுதலையடைந்த சில மாதங்களிலேயே
08.08.1942 அன்று காந்தியடிகளின் ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கிவிட்டது. அரசாங்கத்துடன்
எவ்வகையிலும் ஒத்துழைப்பதில்லை என்ற வகையில் அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் அமைந்தன.
நாடெங்கும் அது வேகமாகப் பரவியது. நாட்டின் முக்கியத்தலைவர்கள் பலரை அரசு மீண்டும்
கைது செய்து சிறையில் அடைத்தது. வடநாட்டுத் தலைவர்களையும் தொண்டர்களையும் தென்னாட்டைச்
சேர்ந்த சிறைகளிலும் தென்னாட்டைச் சேர்ந்தவர்களை வடநாட்டுச் சிறைகளிலும் அடைத்தனர்.
சிறைவிவரங்களைக் கூட வெளிப்படையாக அறிவிக்காமல் அதிகாரிகள் குரூரமாக நடந்துகொண்டனர்.
ஐக்கிய மாகாண மக்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்த லால் பகதூரும் கைது செய்யப்பட்டு மூன்றாண்டு
காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டாம் உலகப்போர் 1945இல் முடிவடைந்ததையொட்டி
ஆங்கிலேய அரசு இந்தியாவில் மீண்டும் தேர்தலை நிகழ்த்தியது. சிறையிலிருந்து விடுதலையாகியிருந்த
லால் பகதூரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தது. பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய
காங்கிரஸ் ஐக்கிய மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ஏற்கனவே முதல்வர் பொறுப்பிலிருந்த
கோவிந்த வல்லப பந்த் அவர்களே மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். லால் பகதூரின்
திறமை அப்போது உலகறிந்த உண்மையாகியிருந்தது. அவரை முழு அளவில் பயன்படுத்திக்கொள்ள முதல்வர்
தீர்மானித்தார். அதனால் தம் பார்லிமெண்டரி செயலாளராக லால் பகதூரை நியமித்து தனக்கு
அருகிலேயே வைத்துக்கொண்டார். இந்திய விடுதலைக்குப் பிறகு, அவரை காவல்துறைக்கும் போக்குவரத்துத்
துறைக்குமான அமைச்சராக நியமித்து, தம் அமைச்சரவையில்
ஒருவராக சேர்த்துக்கொண்டார்.
அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட சில
நாட்களுக்குப் பிறகு ஒருமுறை அவர் அலுவல் நிமித்தமாக ஆக்ராவுக்குச் செல்ல வேண்டியிருந்தது.
அலகாபாத்திலிருந்து ஆக்ராவுக்கு இரயிலில் பயணம் செய்தார். காவல்துறையின் அமைச்சர் என்கிற
வகையில் அவரை வரவேற்க உள்ளூர் காவல் துறை அதிகாரிகளும் பொதுமக்களும் இரயில் நிலையத்தில்
திரண்டுவந்து காத்திருந்தனர்.
லால் பகதூர் அமர்ந்திருந்த இரயில் பெட்டி
வரவேற்புக் கூட்டத்தினரைக் கடந்து சென்று சிறிது தொலைவுக்கப்பால் நின்றது. இரயிலிலிருந்து
இறங்கிய லால் பகதூர் வரவேற்பளிக்க வந்தவர்களின் கண்ணில் படாமல் இரயில் நிலையத்திலிருந்து
வெளியேறுவதற்காக வேகவேகமாக நடைமேடையைக் கடந்து வாசலை நோக்கிச் சென்றார். ஆனால் வாசலில்
காவல்பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அவரை வெளியே செல்லவிடாமல் தடுத்துவிட்டார். வந்திருப்பவர்
யார் என்று அறியாமலேயே “போலீஸ் மந்திரி வந்திருக்கிறார். அவர் முதலில் வெளியே செல்லவேண்டும்.
அவர் சென்ற பிறகே பிறருக்கு அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார். தானே அந்த அமைச்சரென எடுத்துச் சொன்ன பிறகும் அந்தக்
காவலர் அதை நம்பத் தயாராக இல்லை. அவருடைய உயரத்தை
வைத்து அவர் பிழையாக எடைபோட்டுவிட்டார். அதற்குள் அவர் வெளியேறிய செய்தியை அறிந்துகொண்ட
அதிகாரிகள் அனைவரும் வாசலுக்கு வந்துவிட்டனர். அதற்குப் பிறகே லால் பகதூர் இரயில் நிலையத்தைவிட்டு
வெளியே செல்லமுடிந்தது.
1952இல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட
சூழலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதற்கு திறமை மிக்க செயலாளர் ஒருவரை
நியமிக்க நினைத்தார் நேரு. அலகாபாத் நகரமன்ற உறுப்பினராக லால் பகதூர் செயல்பட்ட காலத்திலிருந்தே
அவரைப்பற்றி நன்கு அறிந்திருந்த நேரு அவரையே செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தார்.
நேருவின் அழைப்பை ஏற்று லால் பகதூர் தம் அமைச்சர் பதவியைத் துறந்து கட்சியின் செயலாளராகப்
பொறுப்பேற்றுக்கொண்டார். ஓய்வின்றி இந்தியாவின்
எல்லா மாநிலங்களுக்கும் பயணம் செய்து அந்தந்த வட்டாரத்தலைவர்களுடன் தொடர்புகொண்டு குறைநிறைகளை
நேரில் கேட்டுத் தெரிந்துகொண்டார். குறைகளைக் களைவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார்.
பொதுத்தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு அவர் அரும்பாடு பட்டார். லால் பகதூருடைய அயராத
உழைப்பையும் அர்ப்பணிப்புணர்வையும் நேரில் கண்ட நேரு அவர் மீது தனி நம்பிக்கையும் அன்பும்
மதிப்பும் கொண்டார்.
பொதுத்தேர்தலில் காங்கிரஸ் அடைந்த வெற்றிக்கு
பிறகு நேரு மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றார். லால் பகதூருக்கு ரயில்வே துறையின்
அமைச்சர் பொறுப்பையளித்து, அவரைத் தம் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார் நேரு. அமைச்சர்
பதவியை ஏற்றுக்கொண்டதும் லால் பகதூர் அத்துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்தார்.
அதற்கு முன், மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் மின்விசிறி வசதியே இல்லாமல் இருந்தது.
படுக்கை வசதியும் இருந்ததில்லை. லால் பகதூர் அமைச்சரானதும் அந்த வசதிகளை உடனடியாக ஏற்படுத்தினார்.
இரயில் மூலமாக அனுப்பப்படும் சரக்குகள் பல முறை வழியில் அடிக்கடி களவு போயின. அதைத்
தடுப்பதற்காக, இரயில்வே துறைக்கென தனி காவல் படையை உருவாக்கினார்.
சென்னையில் உள்ள இரயில் பெட்டி இணைப்புத்
தொழிற்சாலையின் முதல் இயந்திரம் லால் பகதூர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் பொருத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவென்றே அவர் சென்னைக்கு வந்திருந்தார்.
வட இந்தியாவில் மகபூப் நகரில் 1956இல்
ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த இரயில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் 114 பேர் உயிரிழந்தனர். தான் அமைச்சராக உள்ள ஒரு துறையில் நிகழ்ந்த
விபத்துக்கு தானே பொறுப்பு என அவர் மனம் கருதியது. உடனே, அவர் தம் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக
பிரதமர் நேருவுக்குக் கடிதம் எழுதினார். ஆனால், நேரு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. லால்
பகதூரை அழைத்துப் பேசி, அவரை அமைதிப்படுத்தி, அவரை அமைச்சர் பதவியிலேயே தொடரும்படி
கேட்டுக்கொண்டார். அவருடைய வற்புறுத்தலுக்கு இணங்கி, லால் பகதூர் அமைச்சர் பதவியில்
தொடர்ந்தார். தீயூழாக, சில மாத இடைவெளியிலேயே தென்னிந்தியாவில் அரியலூருக்கு அருகில்
பயணிகளோடு சென்றுகொண்டிருந்த ரயில் ஓர் ஆற்றுப்பாலத்தைக் கடந்த சமயத்தில் விபத்துக்குள்ளானது.
பெட்டிகள் ஆற்றுக்குள் விழுந்து மூழ்கின. ஏறத்தாழ 144 பயணிகள் அந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இச்செய்தியை அறிந்ததும் லால் பகதூர் மிகுந்த துயரமடைந்தார். விபத்துக்கும் அமைச்சருக்கும்
நேரிடையான தொடர்பு எதுவுமில்லை என்ற போதும் தார்மிக நெறியின் அடிப்படையில் அவ்விபத்துக்கான
பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலகினார்.
1957இல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும்,
கட்சி நிர்வாகப் பொறுப்பை மீண்டும் லால் பகதூரிடமே அளித்தார் நேரு. கடந்த முறை நாடெங்கும்
பயணம் செய்து கட்சியின் வெற்றிக்குப் பாடுபட்டதுபோலவே அந்த முறையும் பயணம் செய்து வெற்றிக்குப் பாடுபட்டார்
லால் பகதூர். அதன் விளைவாக, காங்கிரஸ் மீண்டும் மகத்தான வெற்றியைப் பெற்றது. அலகாபாத்
நகர் தொகுதியில் போட்டியிட்ட லால் பகதூரும் வெற்றி பெற்றார். நேரு மீண்டும் லால் பகதூரை
தன் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டு செய்தித்துறைக்கும் போக்குவரத்துத்துறைக்கும் அமைச்சராக்கினார்.
சில மாதங்களுக்குப் பிறகு வணிகத்துறைக்கும் கைத்தொழில் துறைக்கும் அமைச்சரானார். ஏறத்தாழ
நான்காண்டு காலம் கைத்தொழில் அமைச்சராக நீடித்த லால் பகதூர், அதன் வளர்ச்சிக்காக பல
திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்.
எதிர்பாராத விதமாக உள்துறை அமைச்சராக
பணியாற்றிய கோவிந்த் வல்லப பந்த் 1961இல் இயற்கையெய்தியதை அடுத்து, உள்துறை அமைச்சர்
பொறுப்பை லால் பகதூரிடம் அளித்தார் நேரு. எண்ணற்ற சிக்கல்களும் குழப்பங்களும் நிறைந்த
அப்பதவியை மிகவும் திறமையோடும் எச்சரிக்கையோடும் நிர்வகித்தார் லால் பகதூர். தம் நெஞ்சுறுதியாலும்
நேர்மையாலும் லால் பகதூர் நேருவின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் உரியவரானார். 1962இல்
நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் லால் பகதூர் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.
நேரு அவருக்கு மீண்டும் உள்துறை அமைச்சர் பதவியையே அளித்தார்.
1959ஆம் ஆண்டில் திபெத் கிளர்ச்சி தோல்வியடைந்ததால்,
சீன அதிகாரத்தை ஏற்க மறுத்த அப்போதைய தலாய் லாமா சீனாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு
அடைக்கலம் தேடி வந்தார். இந்தியா அவரையும் அவரோடு வந்தவர்களையும் ஆதரித்து அடைக்கலம் அளித்தது. இச்செயல் சீனாவின்
அடிமனத்தில் கோபத்தைக் கிளறியது. ஆயினும் அதை வெளிக்காட்டாமல் சீனா அமைதி காத்தது.
1962இல் எல்லைப் பிரச்சினை உருவான சமயத்தில், அதையே ஒரு காரணமாக முன்வைத்து அக்டோபர்
மாதத்தில் சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்தது. சீன நாடு எப்போதும் அமைதியையே விரும்பும்
என்று நம்பியிருந்த நேருவுக்கு சீனாவின் இச்செயல் எதிர்பாராத பேரிடியாக இருந்தது. ஆனாலும்
மனம் கலங்காமல் பிரச்சினையை எதிர்கொள்ளத் தயாரானார் நேரு. உள்துறை அமைச்சகமும் பாதுகாப்புத்துறை
அமைச்சகமும் துரிதமாகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட்டதன் விளைவாக,
20.11.1962 அன்று போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
நாடெங்கும் நீண்ட காலமாக பதவி வகிப்பவர்கள்
அவற்றிலிருந்து விலகி மக்களுக்குரிய சேவைகளில் ஈடுபடவேண்டும் என்று 1963இல் ஓர் அறிவிப்பை
வெளியிட்டார் நேரு. அதைக் கேட்டதும் உடனடியாக தன் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறி
முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் லால் பகதூர். அவரைத் தொடர்ந்து தேசமெங்கும் பெருந்தன்மையுடன்
பல மூத்த தலைவர்கள் பதவியிலிருந்து விலகி இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டனர்.
எதிர்பாராத விதமாக நேரு நோய்வாய்ப்பட்டு
உடல் தளர்ந்தார். அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. தம் பொறுப்பைப் பகிர்ந்துகொண்டு, தமக்கு
உதவியாக இருப்பதற்கு நம்பகமான ஓர் அமைச்சர் தேவையென அவர் உணர்ந்தார். அவருடைய ஆழ்மனம்
லால் பகதூரையே நாடியது. பதவியிலிருந்து விலகியிருந்த அவரை அழைத்து மீண்டும் அமைச்சரவையில்
சேர்ந்துகொள்ளுமாறு வேண்டினார். லால் பகதூருக்கு பதவியின் மீது எவ்விதமான பற்றும் இல்லை.
அதே சமயத்தில் நாட்டின் ஒப்பற்ற தலைவரின் விருப்பத்தை அவரால் புறக்கணிக்கமுடியவில்லை.
நேருவின் கோரிக்கைக்கு இணங்கி, 1964ஆம் ஆண்டில்
ஜனவரி மாதத்தில் இந்திய அரசாங்க அமைச்சராகப் பொறுப்பேற்றார். சில மாதங்களே அந்தப் பதவியில்
அவர் தொடர்ந்தார். எதிர்பாராதவிதமாக, 27.05.1964 அன்று நேரு இயற்கையெய்தினார். ஒரு
வார இடைவெளியில் பாராளுமன்றத்தில் கூடிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும்
ஒருங்கிணைந்து ஒரு மனதாக லால் பகதூரை தம் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். 11.06.1964 அன்று
இந்திய நாட்டின் இரண்டாவது பிரதமராக லால் பகதூர் பதவியேற்றார்.
பெரும்பஞ்சமொன்று அப்போது இந்தியாவைத்
தாக்கியது. உணவுப்பொருட்களின் விலையேற்றத்தால் ஏழைமக்கள் இன்னலுற்றனர். பஞ்ச நிலையைப்
போக்க லால் பகதூர் உடனடியாக உணவு தானியங்களைப் பெருமளவில் இறக்குமதி செய்தார். நாடெங்கும்
நியாய விலைக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டார். நல்ல தரமான விதைத்தானியங்கள் விவசாயிகளுக்குக்
கிடைக்குமாறு செய்தார். இருநூற்றைம்பது கோடி ரூபாய் செலவில் ஒரு பெரிய உரத்தொழிற்சாலை
அமைப்பதற்கான திட்டத்தை அவர் வகுத்தார். வாழ்க்கைக்கு அவசியத்தேவையான மண்ணெணெய், சர்க்கரை,
காய்கறி, துணி முதலிய பொருட்கள் மலிவான விலையில் எளிதில் கிடைப்பதற்கு பல ஏற்பாடுகளைச்
செய்தார். இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்தி வளர்ப்பதில்
லால் பகதூர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
அந்நியநாட்டு உறவுமுறைகளைப் பராமரித்து வருவதற்காகவென்றே தனி அமைச்சரொருவரை நியமித்து
ஆப்கானிஸ்தானம், நேபாளம், பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்கு நல்லெண்ணத் தூதராக அனுப்பிவைத்தார்.
லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் பிரதமர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு நாடு
திரும்பினார்.
சென்னை, தரமணியில் தொழில்நுட்ப மைய
வளாகத்தை 1964இல் லால்பகதூர் திறந்துவைத்தார்.
உலக அமைதியை நிறுவும் வகையில் அணுசோதனைகளைப் பயன்படுத்தும் முறைகள் குறித்த ஆய்வுகளை
இந்தியாவில் நிகழ்த்துவது பற்றி அறிவியலாளரான பாபா முன்வைத்த ஆலோசனைகளை ஏற்று, அவை
என்றென்றும் தொடர்வதற்கு ஒரு நிறுவனத்தை உடனடியாகத் தொடங்கினார். கிருஷ்ணா நதியின் குறுக்கே அல்மட்டியில் அணை கட்டுவதற்கான
திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, அதற்கு அடிக்கல் நாட்டி கட்டுமான வேலையைத் தொடங்கிவைத்தார்.
ட்ராம்பே நகரில் ப்ளூட்டோனியம் சுத்திகரிப்பு ஆலையொன்றை நிறுவினார்.
எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் படையினர்
கட்ச் பகுதியில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். அது சதுப்பான நிலப்பரப்பாக
இருந்ததால் இந்தியப்படையினரால் உடனடியாக முன்னேறிச் சென்று அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றமுடியாமல் இருந்தது. ஆக்கிரமித்த
இடங்களை விட்டு உடனடியாக வெளியேறாவிட்டால் பாகிஸ்தானுக்குச் சொந்தமான வேறு ஏதேனும்
ஒரு பகுதிக்குள் இந்தியப்படைகள் புகுந்து தாக்கும் என்று திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்தார்
லால் பகதூர். உடனே பாகிஸ்தான் கட்ச் பகுதி குறித்து இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள
முன்வந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களுக்குள்ளேயே காஷ்மீர் பகுதியில்
பாகிஸ்தான் படையுடன் புகுந்து சம்ப் என்ற இடத்தைத் தாக்கிப் பிடித்தது. அடுத்து ஸ்ரீநகரை
நோக்கி முன்னேறத் தொடங்கியது. முப்படைத்தலைவர்களும் பிரதமரும் சந்தித்து உரையாடினர்.
நேருக்கு நேர் தாக்குதல் நிகழ்த்துவதைவிட, மேற்கு பஞ்சாபை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிக்குள்
இந்தியப்படைகள் செல்ல முயன்றாலேயே பாகிஸ்தான் படைகள் தாமாகப் பின்வாங்கும் என்று அவர்கள்
ஆலோசனை வழங்கினர். இந்திய எல்லையைக் காப்பாற்றுவதே தன் முதல் கடமையென நினைத்த லால்
பகதூர் தாக்குதலுக்கு அனுமதி அளித்தார். தாக்குதல் தொடங்கிய ஒன்றிரண்டு தினங்களுக்குள்ளேயே
பாகிஸ்தான் தன் தவறை உணர்ந்துகொண்டது. போரை நிறுத்தி சமாதானத்துக்குத் தயாராக இருப்பதாகத்
தெரிவித்தது. ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் உதவியால் போர் நின்று அமைதி திரும்பியது.
நிலைத்த அமைதிக்கு ஒரு வழி காணவேண்டும்
கருதிய ரஷ்யப் பிரதமர் கோசிகின் பாகிஸ்தான், இந்தியா இரு நாட்டுப் பிரதமர்களுக்கும்
அழைப்பு விடுத்தார். 1966ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் லால் பகதூர் தாஷ்கந்த்
நகருக்குச் சென்றார். ரஷ்யப் பிரதமரின் முன்னிலையில் லால் பகதூருக்கும் பாகிஸ்தான்
பிரதமர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏழெட்டு நாட்கள் நடைபெற்ற
பேச்சுவார்த்தையின் முடிவில் 10.01.1966 அன்று ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அந்த உடன்படிக்கையில்
இரு பிரதமர்களும் கையெழுத்திட்டனர். அன்று நள்ளிரவுக்குப் பின் உறக்கத்திலேயே லால்
பகதூரின் உயிர் பிரிந்தது. அவருடைய மறைவுக்குப் பிறகு தவணைமுறையில் கடனாக வாங்கிய ஒரு
பழைய கார் மட்டுமே அவருக்குச் சொந்தமாக இருந்தது.
தொடக்க காலத்தில் மக்கள் பணிச்சங்கத்தில்
பணியாற்றும்போது காந்தியடிகள் வழியாக அவர் கற்றுக்கொண்ட பண்புகளான எளிமையும் எளியவர்களுக்காக
உழைக்கும் அர்ப்பணிப்புணர்வும் இறுதி மூச்சு வரைக்கும் அவரிடம் குடிகொண்டிருந்தன. ’ஜெய்
ஜவான் ஜெய் கிஸான்’ என முழக்கமிட்ட அவருடைய அடையாளங்களாக அவ்விரண்டு பன்புகளும் திகழ்கின்றன.
காசிக்கு அருகில் உள்ள மொகல்சராய் என்னும் ஊரில் 02.10.1904
அன்று லால் பகதூர் சாஸ்திரி பிறந்தார். அவருடைய தாயார் பெயர் ராம் துலாரி தேவி. பள்ளி
ஆசிரியரான அவருடைய தந்தையார் பெயர் சாரதா பிரசாத். சாஸ்திரி என்பது அவர் படித்துப்
பெற்ற பட்டமாகும். சாதிமுறையை எதிர்த்த லால் பகதூர் தன் பெயரின் பின்னொட்டாக இருந்த
ஸ்ரீவஸ்தவா என்னும் சாதி அடையாளத்தை தானாகவே நீக்கிக்கொண்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில்
ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமரான நேருவின்
அமைச்சரவையில் 1951-1956 காலகட்டத்தில் ரயில்வே துறையில் அமைச்சராகப் பணிபுரிந்தார்.
1964இல் நேரு மறைவுக்குப் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்றார். அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக
ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகருக்குச் சென்றிருந்தபோது 11.01.1966 அன்று மறைந்தார். அவருடைய
மறைவுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரியுடைய
பாராளுமன்ற உரைகள் புகழ்பெற்றவை. இரண்டு பெரும்தொகுதிகளாக அவை வெளிவந்தன. மேரி கியூரின்
வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து இந்தியில் மொழிபெயர்த்தார். இந்திய விடுதலைப்போராட்டத்தையும்
தன்னுடைய வாழ்க்கையையும் இணைத்து அவர் எழுதத் தொடங்கி முற்றுப்பெறாத அவருடைய தன்வரலாறு முக்கியமான ஆவணமாகும்.
(சர்வோதயம்
மலர்கிறது - செப்டம்பர் 2023)