Home

Sunday 22 October 2023

சுத்தானந்த பாரதியார் : சோதனையும் சாதனையும்

 

 

இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கில அரசு 1919ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு புதிய குற்றவியல் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. ரெளலட் என்பவருடைய தலைமையின் கீழ அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த சட்டம் என்பதால், அது ரெளலட் சட்டம் என்று அழைக்கப்பட்டது. யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதற்கும் சிறையில் அடைப்பதற்குமான அதிகாரங்களை ரெளலட் சட்டம் அரசு அதிகாரிகளுக்கு வழங்கியது. இச்சட்டத்தின் கடுமையை எதிர்த்து காந்தியடிகள் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.





நாடெங்கும் இச்சட்டத்தைக் கண்டித்து ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. அமிர்தரஸில் ஜாலியன்வாலாபாக் என்னும் இடத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மீது ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் ஏறத்தாழ 380 பேர் மாண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ரெளலட் சட்டத்துக்கு எதிராகவும் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு  எதிராகவும் குரல் கொடுக்கும் விதத்தில் 01.08.1920 அன்று காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அதை மக்களிடையில் பரவலாகக் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் காந்தியடிகள் நாடு தழுவிய ஒரு சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டு, அதன் முதல் பகுதியாக 12.08.1920 அன்று செளகத் அலியுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னை கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய பிறகு தமிழகத்தின் பிற பகுதிகளுக்குப் பயணமானார். செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மாயவரம், கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் என பல ஊர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். 16.08.1920 அன்று அவர் திருச்சியை நோக்கிப் புறப்பட்டார். அந்த ரயில் நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் கட்டளை என்னும் நிலையத்தை அடைந்தது.  

நள்ளிரவானாலும் காந்தியடிகளைச் சந்தித்துவிடலாம் என்னும் நம்பிக்கையுடன் காட்டுப்புதூர் ஜமீன்தார் உயர்நிலைப்பள்ளியில்  ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த ஓர் இளம் ஆசிரியரும் அவருடைய நண்பர்களும் மாணவர்களும் கிராமத்திலிருந்து புறப்பட்டு கட்டளை ஸ்டேஷனை நோக்கி வந்தனர். காந்தியடிகளுக்கு அணிவிப்பதற்காக தானே நூற்ற கதர்த்துண்டுகளால் அழகான மாலையைச் செய்து வைத்திருந்தார் அந்த இளைஞர்.  காந்தியடிகளிடம் அளிப்பதற்காக இருபது ரூபாய் நன்கொடையும் திரட்டி வைத்திருந்தார். ‘இராமனும் கண்ணனும் ஆயுதம் தாங்கி நாட்டைக் காத்தனர். காந்தி மகானே, நீ சத்தியம் என்னும் ஆயுதத்தோடு தியாகத்தேரில் ஏறி, சுயேச்சாதிகாரத்தை வெல்லப் புறப்பட்டாய். உன் முயற்சி வெல்க. உன்னால் உலகில் போர் ஒழிக. சாந்தம் பொழிக. மனிதனுக்கு மனிதன் எய்யும் கொடுமைகள் ஒழிக. வானக்குடைக்கீழ் எல்லோரும் ஆண்டவன் அன்பைத் தாங்கி வாழ்க’ என்று இந்தியில் எழுதிய ஒரு தாளையும் தன் பைக்குள் வைத்திருந்தார்.  கிராமத்திலிருந்து சுதந்திர முழக்கமிட்டபடி எல்லோரும் சேர்ந்து காவிரிக்கரையை நோக்கி வந்தனர். கரையில் பரிசில் எதுவும் இல்லை. என்ன வந்தாலும் சரி என்ற முடிவோடு கையிலிருக்கும் சுளுந்தோடு அனைவரும் காவிரியில் இறங்கினர். நல்ல வேளையாக யாரோ ஒருவர் அப்போது பரிசிலோடு வந்து, அனைவரும் கரையைக் கடந்துசெல்ல உதவினார்.

ஸ்டேஷனில் இரவு பன்னிரண்டு மணிக்குச் சரியாக ரயில் வந்து நின்றது. அனைவரும் வந்தே மாதரம் முழக்கமிட்டனர். காந்தியடிகள் பயணம் செய்த பெட்டியைக் கண்டுபிடித்து அதற்கு அருகில் சென்றனர். காந்தியடிகள் அப்போது கம்பளியைப் போர்த்திக்கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார். பக்கத்தில் விழித்திருந்த செளகத் அலியிடம் கதர் மாலையையும் பணத்தையும் கொடுத்துவிட்டு காந்தியடிகளிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டனர். எதிர்பாராத விதமாக, அந்த நேரத்தில் காந்தியடிகள் உறக்கம் கலைந்து எழுந்துவந்து அவரே அந்த மாலையையும் தொகையையும் ஏற்றுக்கொண்டு இளைஞர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.  அவருக்குத் தொல்லை தர விரும்பாத இளைஞர் கூட்டம் அடுத்தநாள் காலையில் திருச்சியில் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு ஸ்டேஷனிலிருந்து கலைந்து சென்றது.

அடுத்தநாள் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் ”நம்மை ஆட்சி செய்பவர்கள் குண்டுகளாலும் பீரங்கிகளாலும் எல்லாம் நடக்கும் என்று நினைக்கிறார்கள். மிருகபலத்தால் மனித ஆன்மாவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். கோழைகளைக் கட்டுப்படுத்தலாம். தியாக தீரர்களைக் கட்டுப்படுத்த முடியாது. தன்னம்பிக்கை, மன உறுதி, அகிம்சை, சத்தியம் ஆகியவற்றின் துணையோடு பொறுமையாக முயற்சி செய்தால் எத்தகைய இடர்களையும் வெல்லலாம். நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றால் மிகவிரைவில் சுதந்திரமடைய முடியுமென்பது என் நம்பிக்கை. எல்லோரும் இராட்டை சுற்றுங்கள். தீண்டாமையை ஒழியுங்கள். கிராம சேவை செய்யுங்கள். சேர்ந்து வாழுங்கள். பொதுநலம் புரியுங்கள். விடுதலை வரும்” என்று சுருக்கமாகப் பேசினார். அவர் கூறிய சொற்களை தனக்கிடப்பட்ட கட்டளையாகவே அந்த இளைஞர் எடுத்துக்கொண்டார். காட்டுப்புதூர்  பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த அந்த இளைஞர்  சுத்தானந்த பாரதியார்.

காந்தியடிகள் பேசிய கூட்டத்தில் கலந்துகொண்ட செய்தியை அறிந்துகொண்ட காட்டுப்புதூர் பள்ளித் தலைமையாசிரியர் அடுத்தநாள் சுத்தானந்தரை அழைத்துக் கண்டித்தார். அவரோடு சேர்ந்துகொண்டு கூட்டத்துக்குச் சென்ற மாணவர்களையும் தண்டித்தார். அதைக் காண மனமொப்பாத சுத்தானந்தர் வேலையை உதறிவிட்டு அந்தப் பள்ளியிலிருந்து வெளியேறினார். அப்போது அவருடைய நண்பர் கிருஷ்ணசாஸ்திரிகள் பிள்ளையார்புத்தூரில் தொடங்கவிருக்கிற  பள்ளிக்கூடத்தின் திறப்புவிழாவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று அந்தப் பள்ளிக்குச் சென்ற சுத்தானந்தர் அங்கேயே பிள்ளைகளுக்குப் பாடங்களைக் கற்பிக்கத் தொடங்கினார். ஓய்வுப்பொழுதில் ஊரார் கூடி இராட்டையில் நூல் நூற்கும் வகையில் சொந்தச் செலவில் முப்பது இராட்டைகள் வாங்கி அனைவருக்கும் அளித்தார். 

யங் இந்தியா இதழில் அரசுக்கு எதிராக மூன்று கட்டுரைகளை எழுதியமைக்காக காவல் துறையினர் காந்தியடிகளைக் கைது செய்து  விசாரணைக்குப் பிறகு 10.03.1922 அன்று எரவாடா சிறையில் அடைத்தனர். அதற்குத் தம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் சுத்தானந்தரும் அவருடைய நண்பர்களும் கரூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதமிருந்தனர். அக்குழுவில் அப்போது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையும் இருந்தார். தேசபக்திப் பாடல்களைப் பாடுவதும் தேசவிடுதலை பற்றிப் பேசுவதுமாக அன்றைய பொழுதைக் கழித்தனர்.

அடுத்தநாள் ஏதோ ஒரு வேகத்தில் திருப்பதிக்கு யாத்திரை சென்றார். அங்கிருந்து காளஹஸ்திக்குச் சென்று கண்ணப்பர் மலையில் தியானம் செய்தார். பிறகு வடக்கே காசி வரைக்கும் சென்றார். வழியெங்கும் பயங்கரமான அடக்குமுறை, பஞ்சம், பட்டினி, சாதிமதக்கலகம், அரசியல் கட்சிகளின் மோதல் அனைத்தையும் கண்டார். காங்கிரஸில் ஏற்பட்ட பிளவின் காரணமாக தொண்டர்கள் திசையறியாமல் குழம்பி நிற்பதையும் கண்டார். இறுதியில், அடக்கமாக ஓரிடம் தங்கி, கலையும் கதருமாக இருப்பதே நலமென நினைத்து சிவகங்கைக்குத் திரும்பி தன் தாயாரைச் சந்தித்தார். தான் எழுதி எடுத்துவந்த கவிதைகளை அவரிடம் படித்துக் காட்டி ஆசி பெற்றார். அடுத்தநாளே தேவகோட்டைக்குச் சென்று நண்பருடைய பள்ளியில் ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார்.

ஒருபுறம் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே, மற்றொரு புறத்தில் கதர்ப்பிரச்சாரத்திலும் ஈடுபட்டார் சுத்தானந்தர். தன் பிரச்சாரத்தை முதலில் தன் பள்ளியிலிருந்தே அவர் தொடங்கினார். அவருடைய பள்ளியில் நாற்பது இராட்டைகளும் தறிகளும் இருந்தன. உடன் பணிபுரிந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அவற்றில் நூல்நூற்றனர். அந்த நூலைக்கொண்டே தறியில் துணி நெய்தனர். இன்னும் கூடுதலாகத் தேவைப்பட்ட நூலை சுந்தரபாண்டிபட்டினத்தில் நூல்நூற்கும் இஸ்லாமிய மாதர்களிடம் விலைகொடுத்து வாங்கிக்கொண்டனர். அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே சுத்தானந்தர் ‘சக்கரம் சுழற்றிடுவோம்’ என்றொரு பாட்டை எழுதிப் பாடினார்.

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடத்துக்கு அருகிலிருக்கும் சிற்றூர்களுக்குச் சென்று முகாமிட்டு கதர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சுத்தானந்தர். ஆர்வத்துடன் நெருங்கிவரும் மக்களுக்கு இராட்டையில் நூல்நூற்கும் பயிற்சியை அளித்தார். ஒருமுறை சிறுவயல் என்னும் சிற்றூரில் சுத்தானந்தர் தங்கியிருந்தபோது,  ஊருக்குள் ஏதோ ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு சென்றுவிட்டனர். அப்போது ஒரு பையன் அழுவதையும் அவனை ஒரு இளம்பெண் அமைதிப்படுத்துவதையும் சுத்தானந்தர் பார்த்தார். விசாரித்தபோது இருவரும் கணவன் மனைவி என்னும் விவரம் தெரியவந்தது. இச்சம்பவங்களையே முன்னுதாரணமாக சுட்டிக்காட்டி மாலைநேரக் கூட்டத்தில் மக்களிடையில் செல்வம் சேர்ப்பது தீமையையே விளைவிக்கும் என்றும் இளவயதுத் திருமணம் கூடாது என்றும் சீர்திருத்தக்கருத்துகளைக் கூறினார் சுத்தானந்தர்.  அது மக்களை யோசனையில் ஆழ்த்தி, நல்ல விளைவை உருவாக்கியது.

மற்றொருமுறை அனுமந்தகுடி என்னும் சிற்றூரில் முகாமிட்டு, கதர்ப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஒருநாள் அகிம்சைத்தத்துவத்தைப்பற்றியும் சத்தியாகிரகத்தைப்பற்றியும் தம் மாணவர்களுடன் உரையாடியபடி தெருவில் நடந்துவந்தார். அப்போது வழியில் ஒரு பெரிய வைக்கோல் கட்டை தலையில் சுமந்துகொண்டு அக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை ஒருவர் வருவதைப் பார்த்தார்.  எதிர்ப்புறத்தில் ஒரு மாட்டுவண்டியில் ஒரு ராவுத்தர் வந்தார். வைக்கோல் சுமந்து வந்த ஏழையை மிரட்டி நிறுத்தி, வைக்கோல்கட்டை வண்டியில் ஏற்றும்படி கட்டளையிட்டார் அந்த ராவுத்தர். அந்த ஏழையும் அவர் சொன்னதைச் செய்தார்.

மாணவர்களுடன் சென்ற சுத்தானந்தர் அதைப் பார்த்ததும் மனம் பொறுக்கமுடியாமல் வண்டிக்காரரை நிறுத்தி வைக்கோல் கட்டுக்குரிய பணத்தை ஏழையிடம் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். ராவுத்தர் அவர் சொன்ன சொல்லைப் பொருட்படுத்தாமல் செல்ல முற்பட்டார். அதைக் கண்டு வண்டியின் முன்னால் சென்று பாதையில் படுத்துக்கொண்டார் சுத்தானந்தர். வைக்கோலுக்குரிய பணத்தைக் கொடுக்காமல் வண்டியை நகரவிட முடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். வேறு வழியில்லாமல் அந்த ராவுத்தர் ஏதோ சில்லறைகளைக் கொடுத்துவிட்டு வண்டியை ஓட்டிச் செல்ல முற்பட்டார். முழுப்பணத்தையும் கொடுத்தால்தான் வழி விடமுடியும் என்று தீர்மானமாக அறிவித்தார் சுத்தானந்தர். ஊரே திரண்டு நின்று தன்னைக் கவனிப்பதைப் பார்த்த ராவுத்தர், அந்த அவமானத்திலிருந்து தப்பிக்க முழுத்தொகையையும் கொடுத்தார்.  அதற்குப் பிறகே சுத்தானந்தர் எழுந்து வண்டிக்கு வழியை விட்டார். சத்தியாகிரகம் என்றால் என்ன என்று புரியாமல் தவித்த மாணவர்களுக்கு அச்சம்பவம் ஒரு நடைமுறை விளக்கம்போல அமைந்துவிட்டது.

கதர்ப்பிரச்சாரத்தைத் தவிர, மக்களை மதுவின் பாதையிலிருந்து விலக்கி நல்வழிப்படுத்தும்பொருட்டு, கள்ளுக்கடை போராட்டத்திலும் சுத்தானந்தர் ஈடுபட்டார்.  கள்ளுக்கடைகளின் முன்னால் நின்று கள் அருந்துவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைப்பதில் அவர் பல புதுமையான வழிகளைப் பின்பற்றினார். மதுவிலக்கு தொடர்பாக அவரே பல பாடல்களைப் புனைந்து ராகத்தோடு பாடி மக்களுடைய கவனத்தை ஈர்த்தார். குடிகாரர்களின் வீடுகளுக்குச் சென்று அறிவுரை சொன்னார்.

ஒருமுறை கள்ளுக்கடை மறியலுக்குப் புறப்பட்டபோது, வழியில் கண்ட ஒரு கழுதையையும் தன்னோடு அழைத்துச் சென்றார். ’நான் குடிப்பதில்லை. மனிதா, நீயும் குடிக்காதே’ என ஓர் அட்டையில் எழுதி, அதை கழுதையின் கழுத்தில் மாட்டி கடைவாசலில் தனக்கு அருகிலேயே நிற்கவைத்துக்கொண்டார். கடைக்கு வந்தவர்கள் அனைவரும் அந்த அறிவிப்பைப் படித்துவிட்டு அவமானமுற்று திரும்பிச் சென்றார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் அக்கழுதையை அனுப்பிவிட்டார். கழுத்திலிருக்கும் அறிவிப்பு அட்டையோடு நடந்துபோன கழுதை ஒரு மரத்தடியில் நின்று காள் காள் என்று கத்தியது. அந்த இடத்தில்தான் கள்ளுக்கடைக்கான ஏலம் நடந்துகொண்டிருந்தது. அங்கே கூடியிருந்த அனைவரையும் அந்த அறிவிப்பு வாசகம் சங்கடத்தில் ஆழ்த்தியது. பலர் ஏலத்தில் கலந்துகொள்ளாமல் வெளியேறினர். போதுமான பங்கேற்பாளர்கள் இல்லாததால் ஏலம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

சுத்தானந்தர் பணியாற்றி வந்த பள்ளிக்கூடம் ஒருநாள் அரசு உதவி பெறும் பள்ளியாக மாற்றமடைந்து. அதனால் அங்கிருந்து வெளியேறிய சுத்தானந்தர் தன் சேமிப்பையெல்லாம் செலவு செய்து தேவகோட்டையிலேயே ’அன்பு நிலையம்’ என்னும் பெயரில் ஒரு தொழிற்கல்விக்கூடத்தைத் தொடங்கினார். பல மாணவர்கள் அங்கே ஆர்வத்துடன் கல்வி கற்க வந்தனர். ஒரு தோட்டத்தை உருவாக்கி  உணவுப்பயிரை விளைவிக்கும் முயற்சியில் இறங்கினார் சுத்தானந்தர். அருகிலேயே முனிசிபல் குப்பைகூளங்களும் பன்றி எருவும் இருந்தன. அவரும் மாணவர்களும் சேர்ந்து அவற்றை கூடைகூடையாக எடுத்துவந்து தோட்டத்தில் கொட்டி தண்ணீர் பாய்ச்சினர். தண்ணீர் வசதிக்காக அங்கேயே  ஒரு கிணற்றைத் தோண்டினர். அதன் தண்ணீரின் உதவியோடு ஒரு வாழைத்தோட்டத்தை உருவாக்கினார். அக்கம்பக்கத்தில் இருந்து பலரும் ஆர்வத்தோடு வந்து அன்புநிலையத்தில் இணைந்தனர். அந்தப் பள்ளிக்கு மக்களிடையில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியதும் சுத்தானந்தர் அப்பள்ளியை தன் நண்பருடைய பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அவரைச் சந்தித்த அவருடைய நண்பர் சிவசுப்பிரமணிய ஐயர் இராமேஸ்வரத்தில் நடக்கவிருந்த இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் மாநாட்டில் தேவகோட்டை பிரதிநிதியாகச் சென்று கலந்துகொள்ளுமாறு கடிதமொன்றைக் கொடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட சுத்தானந்தர் நடந்தே செல்வதாகச் சொல்லிவிட்டு ஒரு தீர்த்தயாத்திரையைப்போல தேவகோட்டையிலிருந்து இராமேஸ்வரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.. மாநாட்டில் அவருடைய உரை அனைவரையும் கவர்ந்தது. உரையின் முடிவில் வ.வெ.சு.ஐயரின் குருகுலத்துக்கு அனைவரும் மனமுவந்து உதவவேண்டும் என்றொரு கோரிக்கையை முன்வைத்து ஆதரவு திரட்டினார் சுத்தானந்தர்.

சாந்திநிகேதனைப்போல ஒரு தமிழ்க்குருகுலம் நடத்தவேண்டும் என்று கனவு கண்ட வ.வெ.சு.ஐயர் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியாரின் உதவியோடு சேரன்மாதேவிக்கு அருகில் முப்பது ஏக்கர் நிலம் வாங்கி பாரத்வாஜ ஆசிரமம் என்னும் பெயரில் ஆசிரமமொன்றைத் தொடங்கினார். சுத்தானந்தர் அந்த ஆசிரமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். எல்லைக்கற்கள் நாட்டி, கள்ளிச்செடிகளால் வேலியெழுப்பும் வேலையிலிருந்து ஆசிரமத்துக்குள் எல்லா வேலைகளிலும் சுத்தானந்தர் பங்கேற்றார். அந்தத் தோட்டத்தில் ஒரு கிணறு இருந்தது. அதில் ஏற்றம் போட்டு நீர் இறைத்து நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்தனர். ஓட்டுக்கட்டிடம் எழுப்பி தட்டிகளால் அறைகளை வகுத்து பள்ளிக்கூடத்தைத் தொடங்கினர். ஒவ்வொருவராக மாணவர்கள் வந்து சேரத் தொடங்கினர்.  மெல்ல மெல்ல மாணவர்களின் எண்ணிக்கை பெருகியது.

ஆசிரமத்தின் சார்பில் வெளிவந்த பாலபாரதி என்னும் இதழுக்கு சுத்தானந்தர் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதற்காகவே அச்சகமொன்று ஆசிரமத்தில் நிறுவப்பட்டது. ஒவ்வொரு இதழிலும் அவரே பல கட்டுரைகளையும் பாடல்களையும் எழுதி நிறைத்தார். மாணவர்களுக்கு ஆங்கிலம், அறிவியல் கற்பிக்கும் ஆசிரியராகவும் சாரணர் பயிற்சியளிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். நூல்நூற்றல், இசைப்பயிற்சி, குஸ்தி, சிலம்பப்பயிற்சி, விளையாட்டுப்பயிற்சி என பல வகுப்புகளும் நடைபெற்றன. பொங்கல், தீபாவளி, சிவராத்திரி, ஆடிப்பெருக்கு, நவராத்திரி, திலகர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. குருகுலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அந்நாட்களில் தம் திறமையை வெளிப்படுத்தினர். ஓய்வு நேரத்தில் பாரத சக்தி என்னும் பெயரில் நீண்ட காவியமொன்றை தொடர்ந்து எழுதினர்.

’பிராமண மாணவர்களுக்குத் தனியாகவும் பிற மாணவர்களுக்குத் தனியாகவும் சாப்பாடு பரிமாறப்படுகிறது’ என குருகுலத்தின் மீது சுமத்தப்பட்ட பழி தமிழ்நாடெங்கும் தீயெனப் பரவியதால் குருகுலம் நிலைகுலைந்தது. எண்ணற்ற விசாரணைகளில் சிக்கி வ.வெ.சு.ஐயர் துயரத்தில் மூழ்கினார். இயற்பியல், வேதியியல் ஆய்வுக்கூடங்களை எழுப்புவதற்காக மலாயா நாட்டு நண்பர்கள் வசூல் செய்த இருபதினாயிரம் ரூபாய் தொகை கைக்கு வந்து சேரவில்லை. பத்தாயிரம் சந்தா கிடைக்கக்கூடும் என எதிர்பார்த்த பாலபாரதிக்கு எண்ணூறு சந்தாக்கள் மட்டுமே கிடைத்தன. ஆசிரமம் தடுமாறத் தொடங்கியது. எதிர்பாராத விதமாக மகளுடன் கல்யாண அருவிக்குச் சென்ற வ.வெ.சு.ஐயர், அருவியில் கால் தடுமாறி கீழே விழுந்த மகளைக் காப்பாற்றுவதற்குச் செய்த முயற்சியில் இருவருமே 03.06.1925 அன்று உயிர் துறந்தனர்.

குருகுலம் நின்றுபோன சோகத்தை சுத்தானந்தரால் தாங்கமுடியவில்லை. திடீரென 16.06.1925 அன்று சித்தரஞ்சன் தாஸ் இறந்தார். அதற்கு அடுத்த மாதத்திலேயே 23.07.1925 அன்று சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டியில் இறந்தார். மூத்த நண்பர்களின் பிரிவால் உருவான மனத்துயரத்தை சுத்தானந்தரால் தாங்கமுடியவில்லை. ஐயரின் மரணத்துக்குப் பிறகு பாலபாரதி  இதழ் மட்டும் தட்டுத்தடுமாறி ஐந்தாறு மாதங்களுக்கு மட்டுமே வெளிவந்தது. பிறகு அதையும் நிறுத்தவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதனால் மனச்சோர்வுற்ற சுத்தானந்தர் ஆசிரமத்தைவிட்டு வெளியேறி மதுரைக்குச் சென்றார். சில தினங்களுக்குப் பிறகு அங்கும் நிலைத்திருக்க முடியாமல் தஞ்சைக்குச் சென்று சமரஸபோதினி என்னும் பத்திரிகையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்..

காஞ்சிபுரத்தில் 25.11.1925 அன்று  நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுத்தானந்தர் கலந்துகொண்டார். அந்த மாநாட்டுக்கு திரு.வி.க. தலைமை தாங்கினார். அம்மாநாட்டில் கிராமசேவை, கதர், தீண்டாமை போன்ற தீர்மானங்கள் எளிதில் நிறைவேறின. அப்போது ஈ.வெ.ரா. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தொடர்பாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். காரசாரமான விவாதங்கள் நிகழ்ந்தன. ஆயினும் அந்தத் தீர்மானம்  நிறைவேறவில்லை. தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக தன் தீர்மானம் நிறைவேறவில்லை என்பதையொட்டி ஈ.வெ.ரா. வெகுண்டெழுந்து காங்கிரஸ் கட்சியை விட்டு தான் வெளியேறுவதாக அறிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். அதைப் பார்த்து மனம் துவண்ட சுத்தானந்தர் அடுத்த நாளே காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தார். ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று, அங்கிருந்த துறவிகளோடு சில நாட்கள் தங்கி உரையாடி மனம் தேறினார்.

ஒருபுறம் எங்கெங்கும் பெருகிவரும் பிராமண எதிர்ப்பு. இன்னொருபுறம் காங்கிரஸ் கட்சியில் முன்வரிசைத் தலைவர்களிடம் மெளனமாக நிலவிய கருத்துவேறுபாடுகள். செல்லும் இடங்களிலெல்லாம் இவை திரண்டுவந்து நிற்பதைக் கண்டு மனம் சலித்தார் சுத்தானந்தர். இதற்கெல்லாம் மீட்சி இல்லையா என ஒருமுறை இராஜாஜியைச் சந்தித்துக் கேட்டார். அக்கேள்விக்கு நேரிடையாக எப்பதிலும் சொல்லாமல் கருத்துவேறுபாடுகளைக் கவனிப்பதில் நேரம் செலவழிப்பதைவிட்டு கிராமசேவையில் கவனம் செலுத்துமாறு ஆலோசனை கூறி அனுப்பிவைத்தார் அவர்.

சில நாட்கள் கழிந்தன. மீண்டும் பழைய கேள்விகள் அவர் நெஞ்சைக் குடையத் தொடங்கின. அதனால் கிடைத்த ரயிலில் ஏறி பயணம் செய்து சபர்மதிக்குச் சென்று காந்தியடிகளைச் சந்தித்து தன் கேள்வியை முன்வைத்தார். விடைகாண முடியாத கேள்விகளில் சிக்கி பொழுதுகளைக் கழிப்பதைவிட பயன் கருதாது கிராமசேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருமாறு கூறினார் காந்தியடிகள். அவருடைய சொற்கள் சுத்தானந்தருக்குத் தெளிவை அளித்தன. இனி கிராமசேவையே தன் வழி என்ற முடிவோடு தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.

அந்த நேரத்தில் சர்தார் வேதரத்தினம் பிள்ளை வேதாரண்யத்தில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து, கதர் கண்காட்சியைத் திறந்துவைக்க சுத்தானந்தருக்கு அழைப்பு விடுத்தார். உடனே சுத்தானந்தர் வேதாரண்யத்துக்குச் சென்று கிராம சேவை பற்றி மனமுருகப் பேசினார். கதரே கிராமசேவையின் உயிர். காந்தியடிகளே நமது சுதந்திரத்தின் உள்ளத் துடிப்பு. காந்தி, கதர், கிராமசேவை ஆகிய மூன்றையும் போற்றினால் சுதந்திரம் நமக்கு எளிதாக வசப்படும் என சுத்தானந்தர் முன்வைத்த கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

நாடோடியாக அலைந்த சுத்தானந்தர் ஒருமுறை பாமணி என்னும் கிராமத்தில் தங்கியிருந்தார். அக்கிராமத்தில் சுகாதாரத்தை நிலைநாட்டுவதும் கள்ளருந்தும் பழக்கத்தை விட்டொழிக்க வைப்பதும் சவால் நிறைந்த பணிகளாக இருந்தன. சுத்தானந்தர் தனக்கே உரிய பொறுமையோடு அவற்றில் ஈடுபட்டார். தானே எழுதிய நகைச்சுவைப்பாடல்கள் வழியாக சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்ச்சியை அவரால் எளிதாக ஊட்டமுடிந்தது. தெருக்ளில் மலம் கழிக்கும் பழக்கம் நின்றது. குளத்தில் கால் கழுவும் பழக்கமும் குடிநீரில் துணிதுவைக்கும் பழக்கமும் நின்றன. சுகாதார விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்னும் அறிவிப்பு பயனளித்தது. குப்பைகூளங்களெல்லாம் குழியுரமாயின. வீடுகளில் கழிப்பறை கட்டும் பழக்கம் ஏற்பட்டது. 

தானே எழுதி மெட்டமைத்த ‘கள்ளுக்கடைப் பக்கம் போகாதே அண்ணே’ என்னும் பாட்டைப் பாடியபடி வீடுவீடாகச் சென்று ஆண்களைச் சந்தித்து கள்ளருந்துவதன் தீமையை எடுத்துரைத்ததால் ஓரளவு பயன் கிடைத்தது. பெரும்பாலானோர் கள்ளருந்தும் பழக்கத்தைக் கைவிட்டனர். ஒருமுறை இரண்டாயிரம் பேருக்கும் மேல் கூடிய ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது நாளைமுதல் கள்ளுக்கடைப்பக்கம் போவதில்லை என அனைவரும் வாக்குறுதியளிக்கவேண்டும் என்று வேண்டினார். யாரேனும் ஒருவர் வாக்குறுதியை மீறினாலும் அதே இடத்தில் உண்ணாவிரதமிருந்து  உயிர் துறப்பேன் என அறிவித்தார். அவருடைய வேண்டுகோளுக்கு நல்ல பயன் கிடைத்தது. அடுத்த நாள் முதல் ஒருவரும் கள்ளருந்தச் செல்லவில்லை. கள்ளுக்கடைக்காரரும் கள் வியாபாரத்தை கைவிட்டு தேங்காய் பதநீர் கருப்பட்டி விற்பதற்குச் சென்றுவிட்டார்.

சுத்தானந்தரின் பலதுறைப்பணிகளால் பாமணி கிராமம் புதுவாழ்வு பெற்றது. அவருடைய சேவையைக் குறித்து லோகோபகாரி, சுதேசமித்திரன், சுயராஜ்ஜியம் ஆகிய பத்திரிகைகள் போற்றி எழுதின. அச்செய்திகள் காந்தியடிகளின் கவனத்துக்கு எப்படியோ சென்று சேர்ந்தன. அவர் உடனே சுத்தானந்தருக்கு “இதுவே உனக்கு இயல்பான தொண்டு. தொடர்ந்து செயல்பட்டு வரவும்” என்று கடிதம் எழுதி உற்சாகப்படுத்தினார்.

பாமணியில் எட்டு மாத காலம் தங்கி சேவையாற்றிய பிறகு பாலையூர் என்னும் சிற்றூருக்குச் சென்றார். அங்கு சக்தி நிலையம் என்னும் பெயரில் ஆசிரமமொன்றைத் தொடங்கினார். சக்தி நிலையம் காந்தியடிகளின் விருப்பப்படி ஆதாரக்கல்வி மையமாக விளங்கியது. இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மாணவமாணவியர் அங்கே கல்வி கற்றனர். தமிழ், எண்சுவடி, சமஸ்கிருதம், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடங்கள் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. காலை, மாலை இரு வேளைகளும் பிரார்த்தனை வகுப்புகளும் நூல்நூற்கும் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன. சக்தி நிலையத்தின் பணிகளைப் பாராட்டி காந்தியடிகள் ‘சக்தி நிலையம் கதர் நிலையமாகுக’ என தமிழில் எழுதி அனுப்பிய கடிதத்தைப் படித்து அனைவரும் மகிழ்ந்தனர்.

41வது அகில இந்திய காங்கிரஸ் மாநாடு 26.12.1926 முதல் 28.12.1926 வரை நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீநிவாச ஐயங்கார் அதற்குத் தலைமை தாங்கினார். காந்தியடிகள் அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கெளகாத்திக்குச் சென்றார். அரிஜனத்தொண்டில் மகத்தான பங்காற்றிய சுவாமி சிரத்தானந்தர் ரஷீத் என்பவரால் கொல்லப்பட்ட செய்தியை அறிந்து ஆழ்ந்த துயரமடைந்தார். அவர் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து காந்தியடிகளே ஓர் இரங்கல் தீர்மானத்தை அந்த மாநாட்டில் கொண்டுவந்தார். காங்கிரஸ்காரராக வாக்களிக்க விரும்பும் ஒவ்வொருவரும் கதரணிபவராக இருக்கவேண்டும் என்ற தீர்மானமும் இந்த மாநாட்டில் நிறைவேறியது.

கெளகாத்தி மாநாட்டிலிருந்து தன் கதர் பிரயாணத்தைத் தொடங்கிய காந்தியடிகள் பீகார், மத்தியப்பிரதேசம், பம்பாய் மாநிலங்கள் வழியாக  கர்நாடகத்துக்கு வந்தார். அப்போது அவர் உடல்நலம் குன்றியதால் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் சில நாட்கள் நந்திக்குன்றில் தங்கி ஓய்வெடுத்தார். 24.08.1927 அன்று ஹோசூர் வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்த காந்தியடிகள் பல நகரங்களின் ஊடே பயணம் செய்து 03.09.1927 அன்று சென்னைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ஸ்ரீநிவாச ஐயங்கார் வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தற்செயலாக அதே வீட்டில்தான் சுத்தானந்தரும் தங்கியிருந்தார். காந்தியடிகள் அவரைக் கண்டதும் அவருடைய சேவைகளைக் குறித்து பாராட்டிப் பேசினார். சுத்தானந்தரின் கையில் கீதை இருப்பதைப் பார்த்து, அதை வாங்கி ஒரு பக்கத்தைப் புரட்டினார். அப்பக்கத்தில் ஒரு வரியைத் தொட்டு சுத்தானந்தரிடம் சுட்டிக்காட்டினார் காந்தியடிகள். ’யோக யுக்தனாய் உழை’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக் கண்டு மெய்சிலிர்த்தார் சுத்தானந்தர்.

அன்று மாலை திலகர் கட்டத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சட்டசபைத்தேர்தலில் பங்கெடுத்து ஆங்கில அதிகாரக்கோட்டைக்குள் செல்லவேண்டும் என்ற முனைப்புள்ள தலைவர்கள் பலர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்தார் காந்தியடிகள். சிலர் காந்தியடிகளையும் கதரையும் எதிர்த்துப் பேசியபடி திரிந்தனர்.

காந்தியடிகள் தன் உரையில் ’கதர்ச்சேவையே தரித்திர நாராயணனின் சேவை’ என்று குறிப்பிட்டு இருபது நிமிடங்கள் பேசினார். சத்தியமூர்த்தியும் இராஜாஜியும் அவருடைய உரையை மொழிபெயர்த்தனர். அடுத்தநாள் ஒரு தொழிற்சங்க மைதானத்திலும்  மேரி கல்லூரியிலும் தங்கசாலைத்தெருவில் உள்ள குஜராத்தி சங்கத்திலும் தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்றன. எல்லா இடங்களுக்கும் காந்தியடிகளுடன் சுத்தானந்தரும் பயணம் செய்தார்.

அடுத்தநாள் இந்தி பிரச்சார சபையில் கூட்டம் நடைபெற்றது. ’வாழிய காந்தி மகாத்மா’ என தானே புனைந்த பாடலொன்றை ஒரு தாளில் எழுதி, அத்துடன் நூறு ரூபாய் நோட்டொன்றைச் சேர்த்து காந்தியடிகளிடம் அளித்தார் சுத்தானந்தர். காந்தியடிகள் அதைப் புன்னகையுடன் பெற்றுக்கொண்டார். கூட்டம் முடிவடைந்ததும் தனியிடத்தில் காந்தியடிகள் ஏறத்தாழ ஒரு மணி நேரம் சுத்தானந்தருடன் மனம்கலந்து உரையாடினார். “நீங்கள் தவயோகி. கவிஞர். உங்கள் ஆன்மிகக் கலையை வளர்த்து வருக. யோகமுனையில் கவனமூன்றுக” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

42வது காங்கிரஸ் மாநாடு 26.12.1927 முதல் 28.12.1927 வரை மூன்று தினங்களுக்கு சென்னையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இயற்கை மாநாடு, மாதர் மாநாடு, ஜீவகாருண்ய மாநாடு ஆகிய பிரிவுகளில் சுத்தானந்தர் பங்கேற்றார். வாஸ்வானி, பண்டித மாளவியா, கென்னத், டாக்டர் கிருஷ்ணாராவ், கே.எஸ்.சர்மா, பைரவமூர்த்தி, ராமசந்திரன் ஆகியோர்  அந்த அரங்குகளில் பங்கேற்று உரைநிகழ்த்தினர். கதர் கண்காட்சியை காந்தியடிகள் திறந்துவைத்து உரையாற்றினார். ‘தாரிணியே எதிர்த்தாலும் ஆத்ம சக்தியிருக்குது வெல்வோம்’ என்று தானே எழுதிய பாடலை அந்த அரங்கில் பாடினார் சுத்தானந்தர்.

சுத்தானந்தரின் மொழிநடையும் இசையுடன் கூடிய பாடல்களும் அனைவரையும் ஈர்த்தன. அவருடைய கட்டுரைகள் பொருளாழத்தோடும் தகவல்கள் செறிவோடும் அமைந்திருந்தன. தமிழகத்தில் அவருக்கு ஏராளமான வாசகர்கள் உருவாகினர். அத்தருணத்தில் சுயராஜ்ஜியம்  இதழின் தமிழ்ப்பதிப்புக்கு ஆசிரியராக இருக்குமாறு சுத்தானந்தருக்கு அழைப்பு வந்தது. சுத்தானந்தரும் அப்பொறுப்பை உவகையுடன் ஏற்றுக்கொண்டார். பத்திரிகை அலுவலகத்தின் மாடியிலேயே அவருக்கு அறை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. மதுவிலக்கு, கதர், தீண்டாமை ஒழிப்பு, கல்வி, பெண்சக்தி, முன்னேற்றம், மாதர் மறுமணம், இந்தி வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி, பிரம்மச்சரியப் பிரச்சாரம், யோகாசனப்பிரச்சாரம், சமயோகம், இயற்கை வைத்தியம் என பல துறைகள் சார்ந்து கட்டுரைகளை எழுதினார். கட்டுரை எழுதுவதும் உரை நிகழ்த்துவதுமாக அவருடைய பொழுதுகள் கரைந்தன.

03.02.1928 அன்று சைமன் குழு பம்பாய்க்கு வந்து சேர்ந்தது. இந்தியர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய உருவாக்கப்பட்ட ஒரு குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம் பெறாததால் இந்தியர்கள் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீகும் சைமன் குழுவைப் புறக்கணிக்க முடிவுசெய்தன. ‘சைமன், திரும்பிப்போ’ என முழக்கமிட்டபடி எல்லா நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் கருப்புக்கொடி போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையிலும் அத்தகு எதிர்ப்பு ஊர்வலம் பெரிய அளவில் நடைபெற்றது. மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த சூழலில் ஹாரிசன் கம்பெனி அலுவலகம் மட்டும் இயங்கிக்கொண்டிருந்தது. மூடும்படி கேட்டுக்கொண்ட மாணவர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குள் தடதடவென கற்கள் பறந்தன. ஜன்னல்கள் உடைந்தன. உடனே காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். சில மாணவர்களைக் கைது செய்தனர்.

ஒரு வெள்ளைக்கார அதிகாரியின் வாகனம் கட்டுக்கடங்காத வேகத்துடன் மாணவர் கூட்டத்துக்குள் ஊடுருவிச் சென்றதால் இருவர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். அதற்குள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த இராணுவப்படையினர் கூட்டத்தைக் கலைக்கும் விதமாக வானை நோக்கிச் சுட்டனர். நிலைமை தீவிரமடைவதை உணர்ந்த பிரகாசமும் சுத்தானந்தரும் துணிச்சலாக இராணுவத்தினர் முன்னால் சென்று ‘முதலில் எங்களைச் சுடுங்கள்’ என மார்பைத் திறந்து காட்டினர். அதற்குப் பிறகே இராணுவத்தினர் சுடுவதை நிறுத்தினர். இறந்தவர்களின் உடல்களோடும் காயம்பட்டவர்களோடும் மருத்துவமனைக்கு விரைந்தனர் தொண்டர்கள். அமைதியாகத் தொடங்கிய புறக்கணிப்பு ஊர்வலம் அலங்கோலமாக முடிவடைந்தது.  அன்று மாலை திலகர் கட்டத்தில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்திலும் இரானுவத்தினர் முரட்டுத்தனமாக புகுந்து அனைவரையும் மிரட்டி கலைந்தோடச் செய்தனர்.

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லாமல் சுயராஜ்ஜியம் இதழின் தமிழ்ப்பதிப்பு நிறுத்தப்பட்டது. அதனால் அந்த அலுவலகத்தின் மாடியறையைக் காலி செய்துவிட்டு ஜைன தர்மசாலையை நாடிச் சென்றார் சுத்தானந்தர். அப்போது குஜராத் மாகாணத்தில் பர்தோலியில் வல்லபாய் படேலின் தலைமையில் ஒரு சத்தியாகிரகம் நடைபெற்று வந்தது. தொடர்ந்து சென்னையில் இருக்கமுடியாத மனநிலையில் இருந்த சுத்தானந்தர் ரயில் பிடித்து பர்தோலிக்குச் சென்று அப்போராட்டத்தில் சேர்ந்துகொண்டார். அதன் வெற்றிக்குப் பிறகே அவர் சென்னைக்குத் திரும்பி வந்தார்.

நாங்குநேரி, பாபநாசம், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றியபடி ஊரூராகச் சென்றுகொண்டே இருந்தார் சுத்தானந்தர். தலைவர்களிடையில் நிலவிய பூசலைக் கண்டு அவர் மனம் சலித்தார். இறுதியில் ஒரு காஷாயம், தோள்பையில் கீதை, யோகசித்தி, பாரத சக்தி, ஒரு துண்டு, பென்சில், நோட்டு ஆகியவற்றுடன் ஊரைவிட்டுப் புறப்பட்டார்.

திருப்பறம்பூர், காஞ்சிபுரம், கோலார், கெங்கேரி, மைசூர், நெல்லூர் என பல இடங்களுக்குச் சென்று திரிந்தலைந்த பிறகு, இறுதியாக புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தை வந்தடைந்தார் சுத்தானந்தர். சுதந்திரப் போராட்டச் செய்திகளை அவ்வப்போது செய்தித்தாட்கள் வழியாக அறிந்து அந்தந்தச் சூழல்களுக்கேற்ப பாடல்களையும் கட்டுரைகளையும் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார். இருபத்தைந்து ஆண்டுகள் மெளனவிரதம் பூண்டு பாரத சக்தி காவியம் முதல் ஆத்ம சோதனை வரை எண்ணற்ற நூல்களை எழுதுவதிலேயே வாழ்க்கையைக் கழித்தார்.

 

 

கவியோகி என்றும் மகரிஷி என்றும் அழைக்கப்படுகிற சுத்தானந்த பாரதியார் 11.05.1897 அன்று சிவகங்கையில் பிறந்தார். அவருடைய தந்தையார்  பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யர். தாயார் காமாட்சி அம்மையார். இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன். இளமையிலேயே தந்தையை இழந்ததால் மதுரையில் தன் தாய்மாமாவின்  வீட்டில் தங்கிப் படித்தார். அவருக்கு யோகம், ஆன்மிகம், இலக்கியம், இசை, தேசியப் போராட்டம், கல்வி கற்பித்தல் என பல துறைகளில் நாட்டமிருந்தது. திருச்சியில் முதன்முதலாக காந்தியடிகளை அவர் சந்தித்தார். அதற்குப் பிறகு வாழ்நாள் முழுதும் காந்தியராகவே வாழ்ந்தார். ஊரூராகச் சென்று பாரதியார் பாடல்களையும் தன் பாடல்களையும் பாடி மக்களுக்கிடையில் தேச விடுதலைக் கருத்துகளைப் பரப்பினார். தேச விடுதலைக்காக நன்கொடைகள் திரட்டி காந்தியடிகளுக்கு அனுப்பினார்.  அவர் எழுதிய பாரதசக்தி காவியம் மிகமுக்கியமான நூல். தமிழர் புரட்சி, சுதந்திரக்கனல், வீரத்தேவன் ஆகிய நூல்கள் வெள்ளையருக்கு எதிராக இந்தியர்கள் முன்னெடுத்த போராட்டவரலாற்றைப் பின்னணியாகக் கொண்டவை.  பாலபாரதி, சமரசபோதினி, சுயராஜ்ஜியம் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளில் எழுதவும் படிக்கவும் அவர் தெரிந்துவைத்திருந்தார். ஆங்கிலத்தில் இருந்து சுத்தானந்தர் மொழிபெயர்த்த ‘புல்லின் இதழ்கள்’ கவிதைத்தொகுதியும் பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்த்த ஹியுகோவின் ‘ஏழை படும் பாடு’ ’இளிச்சவாயன்’ நாவல்களும் தாந்தேவின் ‘டிவைன் காமெடி’ நாடகமும் காளிதாசரின் ’இரகுவம்சம்’ நாடகமும் முக்கியமான மொழிபெயர்ப்புகள். சொந்தப்படைப்புகளும் மொழிபெயர்ப்புகளுமாக மொத்தத்தில்  முந்நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டார். இன்று, அந்நூல்களின் பட்டியல் இருக்கிறதே தவிர, தீயூழின் விளைவாக இப்போது வெகுசிலவே புத்தகவடிவில் கிடைக்கின்றன. சோழபுரத்தில் 07.03.1990 அன்று மறைந்தார்.

 

(சர்வோதயம் மலர்கிறது - அக்டோபர் – 2023)