Home

Sunday, 1 October 2023

விட்டல்ராவின் உரையாடல்கள் - சில நினைவுப்பதிவுகள் - புதிய நூலின் முன்னுரை

 

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று காலையில் ஓர் இசைக்கலைஞர் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வாதாமரத்துக்கு அருகில் வந்து நின்றுகொண்டு அலைபாயுதே பாடலை தன் குழல்வழியாக பாடியபடி சிறிது நேரம் நிற்பார். அதை முடித்ததும் ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே பாடலை இசைக்கத் தொடங்குவார். அப்படியே நடந்துபோய் அடுத்த மரத்தடியில் நின்றுகொண்டு நலம்தானா, உடலும் உள்ளமும் நலம்தானா பாடலில் லயித்துவிடுவார். அவருடைய குழலிசை ஒரு மெல்லிய காற்றைப்போல அங்கேயே சுழலும். அவர் எங்கள் தெருவைக் கடந்து சென்ற பிறகும் கூட அவருடைய இசை அந்த வாதாமரத்தடியிலேயே மித்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றும். கனவிலிருந்து அந்த இசை கேட்பதுபோல இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட வாரத்தில் அவர் வரவில்லை. வழக்கமாக அவர் வந்து செல்லும் நேரம் கடந்துவிட்டது. இனி அவர் வருவதற்கான வாய்ப்பில்லை என்று தெளிவாகவே புரிந்துவிட்டது. இருப்பினும் ஒரு நப்பாசையுடன் வாதாமரத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தபோது, அவர் அங்கே நின்றுகொண்டு இசைப்பதுபோலவே ஒரு காட்சி தோன்றியது. அந்தக் குழலிசையும் எனக்காக ஒலிப்பதுபோலவே இருந்தது. இசையைக் கேட்டுக் கேட்டு மனத்துக்கு இசை பழகிவிடுகிறது. பிறகு வெட்டவெளியிலிருந்து இசை எழுந்துவரத் தொடங்குகிறது.


விட்டல்ராவின் உரையாடல்களும் ஒருவகையில் இசைக்கு நிகரானவை. நினைவிலிருந்து மீண்டும் மீண்டும் மீட்டி சுவைக்கத்தக்கவை. காலம் கடந்த பிறகும் நெஞ்சில் நிலைத்திருப்பவை.

மாதத்தில் இரண்டு மூன்று முறை எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களுடைய வீட்டுக்குச் சென்று உரையாடிக்கொண்டிருப்பது வழக்கம். பல நேரங்களில் நானும் நண்பர் திருஞானசம்பந்தமும் சேர்ந்து செல்வோம். அவர் இணைந்துகொள்ளமுடியாத நேரங்களில் நான் மட்டும் சென்று பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்புவேன். செல்லமுடியாத நாட்களில் தொலைபேசி வழியாக உரையாடிக்கொள்வோம். கொரானா காலத்துக்குப் பிறகு தொலைபேசி உரையாடல்கள் அதிகரித்துவிட்டன.

பொதுவாக ஒரு பத்திரிகைச்செய்தியிலிருந்தோ அல்லது ஒரு பழைய புத்தகத்திலிருந்தோதான் எங்கள் உரையாடல் தொடங்கும். பிறகு எப்படி எப்படியோ வளர்ந்து சென்று நீண்டு செல்லும்போது, சட்டென பழைய நினைவுகளின் அனுபவத்தோடு கொண்டிருக்கும் ஒரு தொடர்பை  அவருடைய ஆழ்மனம் கண்டுபிடித்துவிடும். மறுகணமே அந்த அனுபவத்தை விவரிக்கத் தொடங்கிவிடுவார். அது யாராவது ஒரு மனிதரைப்பற்றியும் இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பழைய புத்தகம் அல்லது பழைய சிறுகதையைப்பற்றியதாகவும் இருக்கலாம். அல்லது ஏதேனும் ஓர் இலக்கியக்கூட்டம் அல்லது ஒரு பயணம் தொடர்பானதாகவும் இருக்கலாம். ஆலாபனையைப்போல அது மெல்ல மெல்ல விரிவடைந்தபடியே செல்லும். அவ்வளவு விரிவான பின்னணியும் கொஞ்சம்கொஞ்சமாக யாராவது ஒரு மனிதரைச் சித்தரிக்கும் தகவல்களாக உருமாற்றம் பெற்றுவிடும். எதிர்பாராத கணத்தில் அந்தத் தகவல்களிலிருந்து அந்த மனிதர் ஒரு சொல்லோவியமாக எழுந்துவந்து நிற்பார்.

பழகிய மனிதர்களைப்பற்றியும் சூழல்கள் பற்றியும் பயணம் செய்த ஊர்களைப்பற்றியும் வேறு பலரும் சொன்னதையெல்லாம் கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. பெரும்பாலும் பிறரைப்பற்றிய புகார்களையும் கசப்புகளையும் மட்டுமே அழுத்தி அழுத்திச் சொல்வதையே கேட்டிருக்கிறேன். இனிய நினைவு என்பதையே அத்தகு உரையாடல்களில் பார்க்கமுடியாது.

விட்டல்ராவின் உரையாடல்கள் இவற்றுக்கு நேர்மாறானவை. அவர் தன் இளமைக்காலத்தைக் கழித்த சேலத்தை ஒட்டிய கிராமப்பகுதி வாழ்க்கையும் வேலை காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த சென்னை நகர வாழ்க்கையும் பலவிதமான மனிதர்களைப் பார்க்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கியிருக்கின்றன. அவர்கள் அத்தனை பேரைப் பற்றியும் நல்லவிதமாக  நினைவுகூர்ந்து சொல்லும் அளவுக்கு அவருக்கு நல்ல மனமிருக்கிறது. அவருக்கு உதவியாக அவர் அடைந்த அனுபவங்கள் இருக்கின்றன.

சரியான கோணத்திலும் சரியான வெளிச்சத்திலும் எடுக்கப்பட்ட நிழற்படத்தைப் போல, ஒரு மனிதரை காலமெல்லாம் நினைவில் நிறுத்திக்கொள்ளத்தக்க போதுமானதாக இருக்கும் வகையில் மிகச்சிறந்ததொரு அனுபவப்பதிவை அவர் மனம் தக்கவைத்திருக்கும் விதம் ஒவ்வொரு முறையும் என்னை வியப்பிலாழ்த்தும். அந்த அனுபவத்தை ஓர் இசைக்கலைஞனுக்கே உரிய லாவகத்துடன் தொட்டு விரிவாக்குவதில் அவர் தேர்ச்சிபெற்ற கலைஞர் என்றே சொல்லவேண்டும்.   அவருடைய ஒவ்வொரு உரையாடலிலும் நான் அந்த அபூர்வத்தன்மையைத்தான் காண்கிறேன்.

நகரத்தில் வாழும் ஒவ்வொருவரிடமும் ஆட்டோக்காரர்கள் பற்றிய கதைகள் ஏராளமாக இருக்கும். பெரும்பாலும் கசப்பான அனுபவங்களையே நினைவில் வைத்திருப்பார்கள். அவற்றை முன்வைத்துப் பேசிப்பேசி, ஆட்டோக்காரர்கள் பற்றிய ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்க முனைவார்கள். ஆனால் விட்டல்ராவ் பகிர்ந்துகொண்ட ஓர் ஆட்டோக்காரர் சித்திரம் வேறு விதமானது. புதுமையானதாகவும் இருந்தது.

ஒருமுறை ஒரு திரைப்படத்தைப் பார்க்க  அவரை வெகுதொலைவு அழைத்துச் செல்கிறார் ஓர் ஆட்டோக்காரர். அந்த நெடுந்தொலைவு அவருக்கே மலைப்பாக இருக்கிறது. படம் முடிந்து வெளியே வரும் சமயத்தில் இந்த இடத்திலிருந்து ஆட்டோ பிடிப்பது அவ்வளவு எளிதான செயலல்ல என்று அவருக்குத் தோன்றுகிறது. அதை விட்டல்ராவிடம் எடுத்துச்சொல்கிறார்.  மனம்  முழுக்க பார்க்கவிருக்கும் திரைப்படத்திலேயே மூழ்கிக் கிடந்ததால் அதைப்பற்றி பிறகு யோசிக்கலாம் என்பது விட்டல்ராவின் எண்ணமாக இருக்கிறது. அதையே தன் பதிலாக ஆட்டோக்காரரிடம் தெரிவிக்கிறார். ஆனால் ஆட்டோக்காரருக்கு அவ்விதமான ஒரு நெருக்கடியில் வாடிக்கையாளரைத் தள்ளிவிட்டுச் செல்ல மனமில்லை.   திரைப்படம் முடியும் வரைக்கும் காத்திருந்து, தானே நகரத்துக்கு அழைத்துச் செல்வதாக நம்பிக்கையூட்டி படம் பார்க்க அனுப்பிவைக்கிறார்.  சொன்னதுபோலவே திரையரங்குக்கு வெளியே இரண்டரை மணி நேர காத்திருந்து நகரத்துக்கு அழைத்து வருகிறார். ஆளரவமே இல்லாத சாலைகளைப் பார்த்த பிறகே, ஆட்டோக்காரரின் முன்யோசனை அவரை நெகிழவைக்கிறது. மனிதர்களுடைய தனித்தன்மையோடு அவர்களை நினைவில் வைத்திருக்கிறார் என்பதுதான் விட்டல்ராவின் சிறப்பு.

இன்னொரு உரையாடலில் வேறொரு இளைஞரைப்பற்றி விட்டல்ராவ் குறிப்பிட்டார். அவரோடு சேர்ந்து ஓவியப்பயிற்சியில் ஈடுபட்டவர் அவ்விளைஞர். எதிர்பாராத விதமாக அவர் தன் காதலில் தோல்வியடைந்தார். அத்தோல்வி அவரைச் சோர்வுற வைத்தது என்பது உண்மைதான். ஆனால் சில நாட்களிலேயே அதிலிருந்து மீண்டு வந்தார். வெளிநாடு சென்றார். தன் பணியில் உயர்ந்தார். ஓவிய ஈடுபாட்டையும் வளர்த்துக்கொண்டார். ஓர் ஓவியக்கண்காட்சியைப் பார்க்கச் சென்ற இடத்தில் வேறொரு பெண்ணுடன் காதல் அரும்பியது. அந்தக் காதல் வெற்றி பெற்றது. இல்லற வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிகரமாக வாழ்ந்தார். 

இப்படி ஒவ்வொரு மனிதரையும் அவரவருக்குரிய தனித்தன்மையோடு நினைவில் வைத்திருக்கிறார் விட்டல்ராவ். பள்ளி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, கிராமத்து வாழ்க்கை, நகர வாழ்க்கை, தொலைபேசி நிலைய வாழ்க்கை, பழைய திரைப்படம், பழைய திரைப்படப்பாடல்கள் என ஏதோ ஒன்றைப்பற்றியதாகவே விட்டல்ராவின் உரையாடல்கள் தொடங்கும். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டே செல்லும். ஏதோ ஒரு அபூர்வமான தருணத்தில் ஒரு பழைய அனுபவத்தை நினைவுகூர்ந்து சொல்லத் தொடங்குவார். அது ஒரு கோணத்தில் விசித்திரமாக இருந்தாலும், மற்றொரு கோணத்தில் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

பொழுதெல்லாம் உரையாடிவிட்டு, வீட்டுக்குத் திரும்பும் வழியில் அவருடைய உரையாடல்களை மனத்துக்குள் அசைபோட்டபடி வருவேன். குழைத்த மண்ணிலிருந்து உருவாகி வரும் பொம்மையைப்போல, அந்த உரையாடல் செய்திகளிலிருந்து உரையாடலுடன் தொடர்புடைய மனித உருவம் என் மனத்துக்குள் திரண்டுவரும். அவர்களுடைய தனித்தன்மைக்காகவே அந்த உரையாடல் பதிவை எழுதித் தொகுக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

12.05.2023 அன்று, விட்டல்ராவின் வயது எண்பத்தொன்றை நிறைவுசெய்து எண்பத்திரண்டில் அடியெடுத்து வைக்கிறது. அவர்மீது நான் வைத்திருக்கும் அன்பின் அடையாளமாக அவருடைய உரையாடல்களைக் கொண்ட இத்தொகுதியை உருவாக்கினேன். கடந்த ஆண்டு ‘விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம்’ என்னும் தலைப்பில் முதல் தொகுதியை முடித்தேன். இது இரண்டாவது தொகுதி. என் திட்டத்தை முழுமனத்துடன் ஏற்றுக்கொண்டு உடனுக்குடன் நூலாக வெளிக்கொண்டு வந்தவர் நண்பர் நடராஜன். அவரை இக்கணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடித்ததுமே முதல் வாசகியாகப் படித்து வந்தவள் என் மனைவி அமுதா. ஒரு சிறுகதையைப்போல விரிவடையும் ஒவ்வொரு கட்டுரையின் அமைப்பும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொருவரைப்பற்றிய தகவலும் அவளுக்கு வியப்பையளிப்பதாகவே இருந்தது.  என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் ஊக்கமளித்து என்னோடு எப்போதும் துணையாக இருக்கும் அமுதாவுக்கு என் இனிய அன்பு. என் மனைவியைப்போலவே எல்லாக் கட்டுரைகளையும் தொடர்ச்சியாக வாசித்தவன் என்னுடைய நண்பன் பழனி. இக்கட்டுரைகளின் தூண்டுதலால் நாங்கள் இருவரும் எங்கள் இளமைக்கால நினைவுகளை அசைபோட்டு, அக்காலத்து மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் பற்றிய உரையாடல்களில் பொழுது போவது தெரியாமல் மூழ்கியிருப்போம். அவனுக்கும் என் அன்பு.

விட்டல்ராவை நினைத்துக்கொள்ளும்போதெல்லாம் நினைவுக்கு வரும் மற்றொரு எழுத்தாளுமை சா.கந்தசாமி. பெங்களூருக்கு வரும்போதெல்லாம் பூங்காக்களிலும் உணவு விடுதிகளிலும் வீட்டுக்கூடத்திலும் அமர்ந்தபடி அவர் உரையாடிய தருணங்கள் இனிமையானவை. ஓர் இலக்கிய நிகழ்ச்சியை பெங்களூரில் நடத்துவது தொடர்பாக நானும் அவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தோம். தன் வெளிநாட்டுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல் வேலையாக பெங்களூரு வருவதாகவும் வந்த பிறகு நிகழ்ச்சியைத்ன் திட்டமிட்டு நடத்தலாம் என்றும் தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட காலத்தில் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பிவிட்டாலும், துரதிருஷ்டவசமாக உடனடியாக இன்னொரு பயணத்துக்கு அவருடைய உடல்நிலை இடம்தரவில்லை. எண்ணற்ற சிக்கல்கள் அவரைச் சூழ்ந்துவிட்டன. குறுகிய இடைவெளியிலேயே அவர் இயற்கையோடு கலந்துவிட்டார். விட்டல்ராவ் போலவே அவரும் மிகச்சிறந்த உரையாடல்காரர். உயிருடன் இருந்திருந்தால், விட்டல்ராவின் உரையாடல்களைக் கொண்ட இத்தொகுதியை அவர் மிகவும் ஆர்வத்துடன் சுவைத்திருக்கக்கூடும். விட்டல்ராவுடன் தொடர்புடைய மனிதர்கள் அனைவருமே பெரும்பாலும் அவரோடும் தொடர்புடையவர்களே. அதனால் அவரையும் இந்நினைவுப்பதிவுகள் ஈர்த்திருக்கும் என்றே நம்புகிறேன்.  மறைந்த சா.கந்தசாமி அவர்களுக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பணம் செய்வதில் மிகவும் மனநிறைவடைகிறேன்.