Home

Sunday 15 October 2023

அறிவியல் கதைகளும் அறிவியல் உண்மைகளும் - முன்னுரை

   

ஒரு காலகட்டம் வரைக்கும் நம்முடைய வாழ்க்கை நம்பிக்கைகளால் மட்டுமே நிறைந்திருந்தது. நல்லதோ, கெட்டதோ, அவையே நம் தினசரி நடவடிக்கைகளையும் கருத்துகளையும் தீர்மானிக்கும்  சக்திகளாக இருந்தன. இந்த உலகம் தட்டையானது. சூரியன், நிலவு, விண்மீன்கள் எல்லாம் ஒரு நிலையான இடத்தில் நின்று வெளிச்சத்தையும் இருட்டையும் வழங்குகின்றன. இப்படி ஏராளமான நம்பிக்கைகள் நம்மைச் சூழ்ந்திருந்தன.

அறிவியலின் வருகையால் அந்த நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்தன.  அது மிகப்பெரிய சாதனை. இந்த உலகம் உருண்டையானது. சூரியன், நிலவு, விண்மீன்கள் எல்லாமே பூமியிலிருந்து கணக்கிடப்படும் தொலைவுக்கேற்ப அவற்றின் உருவங்கள் சிறிதாகவும் பெரிதாகவும் உள்ளன. பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. நிலவும் தன்னைத்தானே சுற்றிக்கொள்வதோடு பூமியையும் சுற்றிவருகிறது. இந்த உண்மைகளையெல்லாம் மனிதர்கள் உணர்ந்துகொள்வதற்கு அறிவியல் துணையாக இருந்தது. இப்படி அறிவியல் தன் நீருபணங்களால் ஏற்கனவே நீடித்திருந்த நம்பிக்கைகளை மெல்ல மெல்ல இற்றுவிழச் செய்தன. .

ஒவ்வொரு நாளும் அறிவியல் நமக்கு வசீகரமான பல உண்மைகளை முன்வைத்தபடியே இருக்கின்றன. அந்த உண்மைகளை உடனுக்குடன் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு தேவை நமக்கு இருக்கிறது. அறிவியலைப் புறக்கணித்துவிட்டு இனி வாழ்க்கை இல்லை என்பதுதான் முக்கியமான ஒரு காரணம்.

அறிவியலால் நாம் அடையும் பயன்கள் ஏராளம். முதலாவதாக, சோதனைகள் வழியாக உண்மைகளைக் கண்டறிந்து அடுத்தடுத்த படிகளை நோக்கி மானிட வாழ்க்கை நகர்வதற்கு அறிவியல் உதவுகிறது. இரண்டாவதாக, சாதக விளைவுகளையும் பாதக விளைவுகளையும் தொகுத்தும் பகுத்தும் ஒன்றை மதிப்பிடுவதற்கான கருவியாக அறிவியல் விளங்குகிறது. மூன்றாவதாக, படைப்பூக்கம் மிகுந்த சிந்தனையை அறிவியல் நமக்கு வழங்குகிறது.  நம்பிக்கைகளைச் சார்ந்திருக்காமல் தர்க்கங்களின் அடிப்படையில் ஒரு முடிவை நோக்கிச் செல்ல அறிவியல் நிலைபாடு உதவி செய்கிறது. நான்காவதாக, இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் கேள்விக்குட்படுத்தி, தெளிவுற அறிந்துகொள்வதற்கான ஆர்வத்தைத் தூண்டும் அடிப்படை விசையாக அறிவியல் அமைந்திருக்கிறது. ஐந்தாவதாக, நம் வாழ்க்கைப் பார்வையை விரிவுகொண்டதாக மாற்றுகிறது. இறுகி விடாத, நெகிழ்வுத்தன்மை உடையதாக நம் பண்புகளை நமக்குத் தெரியாமலேயே தகவமைக்கிறது.

கதை என்பது வலிமைமிக்க ஒரு வடிவம். நேரடியாகச் சொல்லிப் புரியவைக்கமுடியாத பல உண்மைகளை கதைகள் வழியாக உணர்த்திவிடமுடியும்.  கதைகளை எழுதி வைத்து படிக்கும் பழக்கம் ஏற்படுவதற்கு முன்பாக, எல்லாத் தொல்குடிகளிலும் ஒருவருக்கொருவர் கதைகளைச் சொல்லி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் இருந்தது. “வாழ்ந்த கதை சொல்லவா, வளர்ந்த கதை சொல்லவா” என்றொரு மரபுத்தொடரே உண்டு.

புராணக்கதைகள், நீதிக்கதைகள், தேவதைக்கதைகள், வரலாற்றுக்கதைகள், பக்திக்கதைகள், நகைச்சுவைக்கதைகள், நன்னெறிக்கதைகள் என ஏராளமான கதைவடிவங்கள் நம்மிடம் இருக்கின்றன. வளரும் தலைமுறையிடம் ஏதோ ஒரு உண்மையை உணர்த்துவதற்காக வளர்ந்த தலைமுறை கதை வடிவத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது.

உலகம் தட்டையானதல்ல, அது உருண்டையானது என கலிலியோ கண்டறிந்து சொன்ன உண்மை அறிவியல் உலகத்துக்கு அடிக்கல் நாட்டியது. அந்த உண்மை, அறிவியல் சிந்தனையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கியது. அதையடுத்து வானியல் சார்ந்தும் இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், புவியியல் சார்ந்தும் ஏராளமான பல உண்மைகளை அறிவியல் முன்வைத்தது. அந்த உண்மைகளை வளரும் தலைமுறையினரிடத்தில் கொண்டு சேர்க்க வேறொரு ஊடகம் தேவைப்படுகிறது. நீதிக்கருத்துகளை இளையோர் நெஞ்சில் நிலைநிறுத்திய விதத்தில் கதைவடிவம் ஏற்கனவே பெற்றிருக்கும் வெற்றி மகத்தானது. நவீன அறிவியல் உண்மைகளை சிறுவர்களிடையே கொண்டு செல்வதற்கு கதைவடிவம் முக்கியமான பங்கை ஆற்றமுடியும்.

கொ,மா.கோ. இளங்கோ சிறுவர்களுக்காக ஏற்கனவே பல படைப்புகள் எழுதி பெயர்வாங்கியவர். பல சிறுவர் நூல்களை பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர். சிறார் மனம் ஏற்கும் வகையில் சில அறிவியல் உண்மைகளை அழகான கதை வடிவத்தில் எழுதித் தொகுத்திருக்கிறார். புதுமையான அவருடைய முயற்சி பாராட்டுக்குரியது. ஓர் ஆசிரியருக்கே உரிய பொறுமையும் சிறார்களுக்கே உரிய வேகமும் அறிவுநாட்டமும் அவரிடம் நிறைந்துள்ளன. பதினான்கு சிறுகதைகள் அடங்கிய இத்தொகுதியில் அவர் பல புதிய அறிவியல் உண்மைகளை சிறாரின் நெஞ்சில் பதியவைக்க முயற்சி செய்திருக்கிறார்.

தொழில் அடிப்படையில் இளங்கோ எந்தத் துறை சார்ந்து இயங்குபவராக இருந்தாலும், அவருக்குள் ஒரு நல்லாசிரியருக்கே உரிய பொறுமையும் படைப்பூக்கமும் ஒவ்வொரு அறிவியல் உண்மைக்கும் ஏற்றவகையில் பொருத்தமான கதைப்பின்னணியை அமைக்கும் கற்பனையாற்றலும் நிறைந்திருக்கின்றன. அதற்கு இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கதையும் சான்று. தான் அறிந்த ஓர் உண்மையை அடுத்த மனிதர்களிடம் வாய்திறந்து பகிர்ந்துகொள்ளக்கூட தயங்குகிற இந்தக் காலத்தில் சிறார் உலகத்தில் அவ்வுண்மைகளைப் பரவச் செய்வதற்காக அவர் எடுத்திருக்கும் முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

அவருடைய கதைகளைப் படித்துச் செல்லும் போக்கில் எனக்கு என் இளமைக்காலத்தில் அறிவியல் உண்மைகளை மனத்தில் பதியும் வண்ணம் பாடமெடுத்த எங்கள் அறிவியல் ஆசிரியரை நினைத்துக்கொண்டேன். அவரும் நம்முடைய இளங்கோவைப்போலவே சொல்ல விழையும் கருத்தை, பிள்ளைகள் நெஞ்சில் ஊடுருவிச் சென்று பதியவைக்கவேண்டும் என்னும் தீராத வேட்கை கொண்டவர். என் நெஞ்சில் அறிவியல் தொடர்பான ஆர்வம் உருவானதற்கு அவரே அடிப்படைக்காரணம்.

ஒருமுறை இவ்வுலகில் இரவும் பகலும் எப்படி மாறிமாறி வருகின்றன என்பதை எடுத்துரைக்கும் பாடத்தை அவர் வகுப்பில் நடத்தினார். அறிவியல் பாடமென்றாலும், ஏதோ ஒரு விசித்திரமான புதிய விளையாட்டைச் சொல்லிக்கொடுக்கும் விறுவிறுப்போடும் நுட்பத்தோடும் சொல்லிக்கொடுத்தார்.

அன்று அவர் வகுப்பறைக்கு உலக உருண்டையை எடுத்து வந்திருந்தார். ஏற்கனவே எங்களுக்கு புவியியல் ஆசிரியர் அதைக் கொண்டுவந்து காட்டியிருந்தார். உலகில் ஐந்து கண்டங்களும் எப்படி வெவ்வேறு இடங்களில் கடல்களாலும் மலைகளாலும் சூழப்பட்டிருக்கின்றன என்பதை அந்த உருண்டையை உருட்டி உருட்டி அவர் புரியவைத்திருந்தார்.  ஒவ்வொரு கண்டமும் எங்கே இருக்கிறது என்பதை நாங்களும் எங்கள் கையாலேயே உருட்டிஉருட்டி அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருந்தோம். அதனால் அறிவியல் ஆசிரியர் அந்த உருண்டையைச் சுட்டிக்காட்டி “என்னடா இது?” என்று கேட்டபோது நாங்கள் எல்லோருமே ஒரே நேரத்தில் “உலக உருண்டை” என்று பதில் சொன்னோம்.

ஆசிரியர் எங்கள் பதிலைக் கேட்டு புன்னகைத்தபடியே மேசையின் மீது ஒரு முக்காலியை வைத்து, அதன் மீது உலக உருண்டையை வைத்தார். அதன் ஒரு பக்கத்தில் தூண் மாதிரி ஒரு மரக்கம்பத்தை நிறுத்தி அதன் உச்சியில் ஒரு மின்சார விளக்கைப் பொருத்தினார். நான்கு சிறுவர்களை அழைத்து உலக உருண்டையைச் சுற்றி திசைக்கு ஒருவராக நிற்கவைத்தார்.

“எல்லாரும் இங்கயே பாருங்க. இந்தியா பக்கத்துல சூரியன் உதிக்கப் போவுது” என்று சொன்னபடியே உருண்டையைச் சுற்றி இந்தியாவின் இருப்பிடத்தை நோக்கி மின்விளக்கை எரியவைத்தார். மின்விளக்கின் வெளிச்சம் இந்தியாவின் மீது முழுமையாகப் படர்ந்து பளிச்சென்று இருந்தது.

“இப்ப விடிஞ்சிடுச்சி. காலை நேரம். குட்மார்னிங் சொல்ற நேரம். யாரு இப்ப  குட்மார்னிங் சொல்லணுமோ, அவுங்க சொல்லுங்க?” என்றார். உடனே இந்தியாவைப் பார்த்தபடி நின்றிருந்த சிறுவன் கையை உயர்த்தியபடி “குட் மார்னிங்” என்று சத்தமாகச் சொன்னான். அவனை அடுத்து வலப்புறமும் இடப்புறமும் நின்றிருந்த இருவரும் குழப்பத்தோடு “எங்க பக்கத்துல வெளிச்சமும் இருட்டும் கலந்து சாயங்காலம் மாதிரி இருக்குது. குட்மார்னிங் சொல்லணுமா, குட் ஈவனிங்னு சொல்லணுமா?” என்று குழப்பத்துடன் சொன்னபடி ஆசிரியர் முகத்தையே பார்த்தனர். அவர் அமைதியான முகத்தைப் பார்த்த பிறகு, அவரிடமிருந்து உதவி கிட்டாது என புரிந்துகொண்டு தடுமாறியபடியே “குட் ஈவனிங் சார்” என்று தயக்கத்துடன் சொன்னார்கள். உடனே, முற்றிலும் எதிர்ப்பக்கம் இருந்தவன் உதட்டைப் பிதுக்கியபடி “நான் குட்நைட்தான் சொல்லணும். ஒரே இருட்டா இருக்குது” என்றான்.

“எந்த நாட்டுக்கு முன்னால நீ நிக்கிற, பார்த்துச் சொல்லு” என்று ஆசிரியர் அவனிடம் கேட்டார். அவன் உருண்டையின் மீது இருந்த எழுத்துகளைப் படித்துவிட்டு “வட அமெரிக்கா சார். மெக்சிக்கோன்னு போட்டிருக்குது” என்றான்.

வகுப்பில் இருந்த அனைவரும் நான்கு நான்கு பேராக எழுந்து சென்று உலக உருண்டை முன்னால் நின்று சோதித்துப் பார்த்தோம். ஒரு பக்கம் வெளிச்சம். ஒரு பக்கம் இருட்டு. அதில் மாற்றமே இல்லை. வெளிச்சம் இருக்கும் பக்கத்தில் இந்தியா. இருட்டு அடர்ந்திருக்கும் பக்கத்தில் மெக்சிகோ. அதிலும் மாற்றமில்லை. எல்லோரும் அதை திருப்தியுடன் உறுதிப்படுத்திய பிறகே ஆசிரியர் பாடத்துக்கு வந்தார்.

“உலக உருண்டையில் சூரியனுக்கு எதிரில் இருக்கும் பக்கத்தில் மட்டுமே வெளிச்சம்  இருக்கும். அதுதான் அறிவியல். உலகத்தின் உருண்டையான அமைப்பின் காரணமாக மற்ற இடங்களில் முழு இருட்டாகவோ அல்லது அரைகுறையான இருட்டாகவோ மட்டுமே இருக்கும். வெளிச்சம் இருக்கும் திசையில் பகல். வெளிச்சம் இல்லாத திசையில் இருட்டு. உலகம் சூரியனைச் சுற்றி வரும். அதே நேரத்தில் தன்னைத்தானே சுற்றி வரும். தன்னைத்தானே சுற்றியபடி செல்லும்போது இரவும் பகலும் மாறிமாறி வரும். அதனால் இங்கே இருப்பவன் குட்மார்னிங் சொன்னால், அங்கே இருப்பவன் குட்நைட்தான் சொல்லமுடியும். அவன் குட்மார்னிங் சொல்லும் நேரத்தில் இவனுக்கு குட்நைட் சொல்லும் நேரம் வந்திருக்கும்”

இவ்வளவு செய்முறை விளக்கங்களையும் கதைகளையும் கேட்ட பிறகே எங்களுக்கு அந்த உண்மை புரிந்தது. அந்த ஆசிரியர் பாடுபட்டு உண்மையை உணர்த்துவதற்கு விளக்கங்களை அளித்ததுபோல, கொ.மா.கோ.இளங்கோ கதைகளின் போக்கில் அந்த அறிவியல் உண்மையையும் இணைத்துக்கொண்டு செல்கிறார்.

‘சுழற்காற்றாக வந்த சிறுவன்’ சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் காற்று உண்மையில் காற்றே இல்லை. தெருவில் நாம் பயன்படுத்திவிட்டு அலட்சியமாக ஒவ்வொரு நாளும் வீசிவிட்டுச் செல்லும் பிளாஸ்டிக் பைகளும் பிளாஸ்டிக் தாள்களும் எல்லா இடங்களிலும் ஏராளமாகக் குவிந்திருக்கின்றன. குப்பையைத் தெருவில் வீசுகிறோம் என்னும் குற்ற மனப்பான்மையே நம்மிடம் இல்லை. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்கும் தன்மை இல்லை. மட்காமலேயே அதன் உண்மையான வடிவத்திலேயே அது மண்ணில் நீடித்து வாழும். ஒருபோதும் மட்கி மண்ணாவதற்கு வாய்ப்பில்லாத பிளாஸ்டிக் தாட்கள் இந்த மண்ணின் மீது பெருஞ்சுமையாக நிறைந்துள்ளன.

யாரிடமும் வாய் திறந்து சொல்லமுடியாத பிளாஸ்டிக் தாட்கள் ஒருநாள் சூறாவளிக்காற்றில் மனக்குமுறலோடு மண்ணிலிருந்து புறப்பட்டு பறக்கத் தொடங்குகிறது. ஏராளமான பிளாஸ்டிக் குப்பைத்தாட்கள் இணைந்து ஒரு சிறுவனின் வடிவத்தை அடைந்துவிடுகிறது. அந்தச் சிறுவனைத்தான் சுழற்காற்றில் செல்லும் சிறுவனாக இளங்கோ உருவக்கப்படுத்தியிருக்கிறார். பிளாஸ்டிக் சிறுவன் யாருடைய கைக்கும் சிக்காமல் ஓடிச் சென்று நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் நின்று நீதிபதியிடம் உண்மையைச் சொல்கிறான். நீதிபதியிடம் முறையிடுவதன் வழியாக உண்மையை உரைத்து ஒரு முக்கியமான கோரிக்கையையும் முன்வைத்துவிட்டுச் செல்கிறான். இன்று, மனிதர்கள் பொருட்படுத்தாத ஓர் உண்மையையும் , வரவிருக்கும் ஆபத்தைப்பற்றிய எச்சரிக்கையையும் சிறார்களிடையில் எடுத்துரைக்கிறார் இளங்கோ.

ஒவ்வொரு கதையிலும் இப்படி ஓர் அறிவியல் உண்மையை இணைத்துக்கொள்கிறார் இளங்கோ. ’துப்பறியும் கைபேசி’ சிறுகதையில் வனச்சமநிலையைப் பேணுவதில் சோலை மந்தி என்னும் சிறுவிலங்குக்கு இருக்கும் பங்கையும் அது எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தையும் ஒருசேர எடுத்துரைக்கிறார். அத்துடன், நுட்பமான முறையில் கைப்பேசி வழியாக தகவல்களை அனுப்பவும் பெறுவதற்கும் இருக்கும் வழிமுறைகளையும் அவற்றின் நேர்மறையான விளைவுகளையும் முன்வைக்கிறார். ’பஞ்சுமெத்தைத்தீவு’ சிறுகதையில் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கையை முன்வைத்திருக்கிறார். அதன் போக்கில் கெழுத்தி மீன்கள் தம்மை நோக்கி வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க, கூட்டமாகக் கூடி பந்து வடிவில் உருமாறி உருண்டோடும் உண்மையும் எடுத்துரைக்கிறார். கிளிஞ்சான் மீன் எனப்படும் இன்னொரு வகையான மீன் பவளத்திட்டுகளின் மீது படிந்துள்ள பாசியை உணவாக உட்கொள்கிறது. பாசியை எடுத்துண்ணும் போது திட்டு உடைந்து, வெள்ளைமணல் வெளியேறுகிறது. அந்த வெள்ளை மணல் கரையில் ஒதுங்கி, கடற்கரைப்பகுதியை வெள்ளைநிறமாக மாற்றிவிடுகிறது. இப்படி நுட்பமான பல அறிவியல் உண்மைகள் ஒவ்வொரு கதையிலும் இணைந்திருக்கின்றன.

தூய அறிவியல் உண்மைகள் வகுப்பறையிலும் ஆய்வுக்கூடங்களிலும் மட்டுமே பேசுவதற்குரியவை என்ற எண்ணமே கடந்த தலைமுறையினர் வரை அனைவரிடமும் இருந்தது. ஆனால் புதிய தலைமுறையினரின் வாசிப்பு வேகமும் சிந்தனை வேகமும் அந்த எண்ணத்தைத் தலைகீழாக்கிவிட்டது.

அறிவியல் உண்மைகளைக் கதைகள் வழியாக சிறார்களிடையே கொண்டு செல்வதன் வழியாக அறிவியலைப் பரவலாக்க முடியும் என்னும் நம்பிக்கையுடன் பலர் செயல்பட்டுவருகின்றனர்.  குறுகிய காலத்திலேயே அவர்கள் அடைந்திருக்கும் வெற்றி குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

கதை என்பது மிகச்சிறந்த வெற்றிகரமான வடிவம்.  கதைவடிவம் என்பது சொல்பவர், கேட்பவர் இரு தரப்பினருக்கும் ஆர்வத்தை ஊட்டுவதாகும். கேட்பவரின் உணர்வோடு கலந்து, சொல்பவரை நோக்கி அது மேலெழுகிறது. இருவருக்கும் இடையில் நல்லதொரு இணைப்பை அது கட்டமைக்கிறது. அபோது, இயல்பாகவே அறிவியல் உண்மைகள் விதைமணிகளைப்போல கேட்பவரின் நெஞ்சில் ஆழ்ந்து பதிகின்றன.

அறிவியல் கல்வி இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், புவியியல் சார்ந்த எண்ணற்ற உண்மைகளைத் தெளிவுபடுத்துகிறது. பிற உயிர்கள் மீதும் மரம், செடி, கொடிகள், மலைகள், ஆறுகள், கடல்கள் மீதும் நல்லவிதமான பரிவுணர்ச்சியும் நட்புணர்ச்சியும் உருவாக அறிவியல் கல்வி துணையாக நிற்கிறது. இயற்கையோடு இயைந்து வாழும் வேட்கையை எழுப்புகிறது. மொத்தத்தில், ஒரு பண்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கு அறிவியல் கல்வி உறுதுணையாக உள்ளது.

இந்த எழுத்துப்பயணத்தில் இணைந்திருக்கும் இளைய ஆளுமையான கொ.மா.கோ.இளங்கோவுக்கு வாழ்த்துகள்.

 

(கொ.மா.கோ.இளங்கோவின் ‘சுழற்காற்றாக வந்த சிறுவன்’ என்னும் சிறார் அறிவியல் சூழலியல் கதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை)