Home

Sunday, 15 October 2023

பொறுப்பும் பொறுப்பின்மையும் - கட்டுரை

 

ராஜேந்திரன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். ஐம்பது வயதைக் கடந்த நிலையில் திடீரென அவருடைய உடல்நிலை குன்றியது. பல பரிசோதனைகளுக்குப் பிறகு அவருடைய சிறுநீரகம் முழு ஆற்றலுடன் செயல்படவில்லை என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். வாரத்துக்கு ஒருமுறை ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் வகையில் டயாலஸிஸ் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

ஒருநாள் டயாலஸிஸ் செய்துகொண்டால், அதைத் தொடர்ந்து இரு நாட்கள் ஓய்வெடுக்கவேண்டும். அதற்குப் பிறகே அவரால் சீராக இயங்கமுடியும். இப்படிப்பட்ட சூழலில் அவரால் வேலையில் தொடரமுடியவில்லை.  துறைத்தலைமைக்குத் தெரியப்படுத்திவிட்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார்.

அவருக்கு இரு பிள்ளைகள். ஒரு மகன். ஒரு மகள். மகன் கனடாவில் முதுநிலை நிர்வாகவியல் படிக்கிறான். மகள் கணிப்பொறித்துறையில் முதுநிலை பட்டம் வாங்கியவள். திருமணமாகி கணவன், குழந்தையுடன் லண்டனில் வசித்து வருகிறாள். ராஜேந்திரனும் அவர் மனைவியும் மட்டும் பெங்களூரில் தனியே வசித்து வந்தனர். ஒவ்வொரு முறையும் ராஜேந்திரனை அவருடைய மனைவிதான் டயாலஸிஸ் செய்துகொள்ள அழைத்துச் சென்றுவந்தார்.

எங்கள் வீட்டிலிருந்து இரு தெருக்கள் தள்ளி அவருடைய வீடு இருந்தது. வாரத்துக்கு ஒன்றிரண்டு முறை சந்தித்து உரையாடுவது பழக்கம். ஒருமுறை ராஜேந்திரனின் மனைவி எதிர்பாராத விதமாக சென்னை செல்லவேண்டிய வேலை வந்துவிட்டது. அடுத்தநாள் புறப்படவேண்டும். அதே நாளில்தான் ராஜேந்திரனும் டயாலஸிஸ்க்குச் செல்லவேண்டும். ராஜேந்திரனுக்குத் துணையாக தனக்குப் பதிலாக மருத்துவமனைக்கு நான் சென்றுவர வேண்டும் என அவருடைய மனைவி கேட்டுக்கொண்டார். நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

அடுத்தநாள் அதிகாலையிலேயே நானும் ராஜேந்திரனும் ஆட்டோவில் அந்த மருத்துவமனைக்குச் சென்றுவிட்டோம். எங்களுக்கு முன்பாக அங்கே பலர் அங்கிருந்த நாற்காலி வரிசையில் உட்கார்ந்திருந்தனர். ஒரே சமயத்தில் ஐம்பது பேருக்கு டயாலஸிஸ் செய்யும் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை என்பதால் வரிசை விரைவாகவே நகர்ந்தது. அடுத்த அரைமணி நேரத்துக்குள் அவரை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டனர்.

அடுத்து ஐந்தாறு மணி நேரத்துக்கு எனக்கு வேலை இல்லை. வெளியே வந்து கூடத்தில் போடப்பட்டிருந்த உதவியாளர்களுக்கான இருக்கை வரிசையில் அமர்ந்து நடமாடுபவர்களை வேடிக்கை பார்த்தபடி சிறிது நேரம் பொழுதுபோக்கினேன். அப்புறம் சிறிது நேரம் என் கைப்பையில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்துப் படித்தேன். பிறகு மீண்டும் வேடிக்கை பார்த்தேன். அப்போது தேநீர் விற்பனையாளர் ஒருவர் வந்தார். நான் ஒரு தேநீர் வாங்கிப் பருகத் தொடங்கினேன்.

“எனக்கு ஒரு டீ கொடு தம்பி” என்று எனக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. நான் அப்போதுதான் அவரைப் பார்த்தேன். ஒரு பாட்டி கையில் ரூபாய்த்தாளை மடித்துவைத்திருந்தார். அவருக்கு டீ கொடுத்துவிட்டு அந்த விற்பனையாளர் நகர்ந்துவிட்டார்.

குச்சியான உடல். நரைத்த தலைமுடி. கன்னம் ஒட்டியிருந்தது. கண்களில் நிரந்தரமான ஒரு சோகத்தின் நிழல் கவிந்திருந்தது. அவரிடம் பேசவேண்டும் போல இருந்தது. “எந்த ஊரு பாட்டி?” என்று ஒரு கேள்வியுடன் தொடங்கினேன். உடனே எவ்விதமான தயக்கமும் இல்லாமல் அவர் பதில் சொன்னார். அதைத் தொடர்ந்து நானாகவே என்னைப் பற்றியும் நான் வாந்த வேலையைப்பற்றியும் சொன்னேன். அது ஏதோ ஒரு வகையில் அவருக்கு தன் மனத்திலிருக்கும் பாரத்தை இறக்கி வைக்க ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கவேண்டும். உடனே கடகடவென்று கொட்டிவிட்டார்.

“சொந்தமும் இல்லை. பந்தமும் இல்லை. ஒரு சிநேகிதம். அவ்ளோதான். அந்த நெருக்கத்துக்காக மெனக்கிட்டு நீங்க அவருக்கு தொணயா வந்திருக்கீங்க. ஒங்க கூட்டாளி நல்ல வரம் வாங்கி வந்திருக்காரு. நான் பெத்த புள்ளைங்க மூணும் ஊட்டுக்குள்ள உக்காந்துகினே இதுக்கெல்லாம் என்னால வரமுடியாது, செய்யமுடிஞ்சா பார்த்துச் செய். இல்லைன்னா வாரிப் போட்டுட்டு போய்கினே இருன்னு நெஞ்சுல ஈரமே இல்லாம சொல்லுதுங்க. எனக்குக் கெடைச்ச வரம் அந்த மாதிரி”

இரு கைகளையும் விரித்து உதட்டைப் பிதுக்கினார் பாட்டி. எஞ்சிய டீயை வாயில் ஊற்றி ஒரே மிடறாகப் பருகிவிட்டு, அந்த அட்டைக்கோப்பையை அருகிலிருந்த உயரமான குப்பைக்கூடையில் போட்டார்.

“எனக்கு நாலு புள்ளைங்க தம்பி. ஊட்டுக்காரு எப்பவோ போய் சேந்துட்டாரு. ஏதேதோ கூலி வேலை செஞ்சிதான் ஒவ்வொன்னயும் ஆளாக்கிவுட்டேன். தனியா கால ஊனி நிக்கிறதுக்கு தெம்பு வந்ததும் ஊரும் வேணாம், உறவும் வேணாம்னு சொல்லுதுங்க. உள்ள இருக்கறவன் என் கடைசி புள்ளை.  கிட்னி வேலை செய்யலை. குடிச்சி குடிச்சியே இந்த நாய் உடம்ப கெடுத்துகிச்சி. அவனுக்குத்தான் டயால்ஸு செய்யறாங்க. இவன் திருந்த மாட்டான்னு நெனச்சிதான் இவன் பொண்டாட்டி இவன உட்டுட்டு போயிட்டா. அண்ணங்காரனுங்க யாரும் அண்ட உடறதில்லை. நான் பெத்தவளாச்சே, நான் கைவிட முடியுமா?”

நான் அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நடுநடுவே த்ச் என்று நாக்கைத் தட்டி சப்புக்கொட்டிக்கொண்டேன். 

“கூட பொறந்த பொறப்புன்னு ஒருத்தன் கூட நெனச்சி பார்க்கலை. கோவம் இருக்கவேண்டிதுதான். ஆனா அவசரத்துக்கு உதவி செய்யறதுக்கு கூட மனசு வராத அளவுக்கு கோவம் கண்ணை மறைக்கக்கூடாது. அதுக்குப் பேரு கோவம் கெடயாது. அவன காப்பத்த்ணும்ங்கற  பொறுப்பு எங்க நம்ம தலைமேல உழுந்துடுமோ நெனச்சி கோபம்ங்கற பேருல தப்பிச்சிக்கிறது”

அந்தப் பாட்டியின் மனம் அடங்கவே இல்லை. என்றைக்கோ நடைபெற்ற பழைய கதைகளையெல்லாம் நினைவுபடுத்தி  சொல்லிக்கொண்டே இருந்தார்.

”எனக்கும் கோபம் இருக்குது. ஆனா அதையெல்லாம் மீறித்தான் நான் இங்க உட்கார்ந்திருக்கேன். அவன் பொறுப்பா நடந்துக்கலைங்கறதுக்காக நானும் பொறுப்பில்லாம நடக்கமுடியுமா?”

கோபத்தையும் கோழைத்தனத்துடன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கும் குணத்தையும் போகிற போக்கில் சர்வசாதாரணமாக இணைத்து சுட்டிக்காட்டிய பாட்டியின் வற்றிய முகத்தை ஒருமுறை பார்த்தேன். திட்டமிட்டோ யோசித்தோ அவர் அந்த வார்த்தையைச் சொல்லவில்லை. சட்டென தானாக வெளிப்பட்டுவிட்டது.

அவர் தொடர்ந்து ஒவ்வொரு பிள்ளையும் பொறுப்பிலிருந்து தப்பிப்பதற்காக உரைத்த நயமான வெவ்வேறு சாக்குபோக்குகளையெல்லாம் நினைவிலிருந்து சொல்லத் தொடங்கினார். அந்தத் தருணம் அவருக்கு ஒரு வடிகால் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதனால் எந்தப் பதிலும் சொல்லாமல் அவர் சொல்வதையெல்லாம் கேட்டபடி அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

கோபம் என்பது வெளியே காட்டும் ஒரு முகம். மெளனம் கூட ஒரு முகம்தான். பொறுப்பெடுக்க விரும்பாமை என்பது ஆழத்தில் படிந்திருக்கும் முகம். மனிதர்கள் ஒருபோதும் ஆழத்தை வெளிப்படுத்துவதில்லை. அதனால்தான் எல்லாத் தருணங்களிலும் கோபத்தை மட்டுமே வெளியே காட்டுகிறார்கள். பாட்டியின் சொற்களை விரிவுபடுத்தி சின்னச்சின்ன வாக்கியங்களாகப் பிரித்து என் போக்கில் அவற்றை அர்த்தப்படுத்தியபடி இருந்தேன்.

அக்கணத்தில் ஜெயகாந்தனின் யுகசந்தி என்னும் சிறுகதையில் இடம்பெறும் ஒரு பாட்டியைப்பற்றிய நினைவு வந்தது. அவளும் இந்தப் பாட்டியைப்போலவே மனிதர்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனப்போக்கையும் அதற்குக் காரணமாக ஆசாரத்தையும் பழைய கலாச்சாரம் என்கிற பெயரில் உருவாகி நீடிக்கும் நம்பிக்கைகளையும் கண்டித்துப் பேசுபவள். உண்மையிலேயே இரு யுகங்கள் சந்திக்கும் புள்ளியில் அவள் நிற்கிறாள். ஒருபுறம் ஆசாரங்களின் பிரதிநிதிகளாக மனிதர்கள் தம்மை நினைத்துக்கொண்டவர்களின் உலகம். இன்னொரு பக்கம் ’நான் எடுக்கும் என் முடிவு என் வரைக்கும்’ என்ற தெளிவோடும் தன்னம்பிக்கையோடும் எதார்த்த உலகை எதிர்கொள்கிறவர்களின் உலகம். பாட்டி பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் துணிவோடு புதிய யுகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார்.

அந்தப் பாட்டியின் பெயர் கெளரிப்பாட்டி. நெய்வேலியிலிருந்து கடலூருக்கு பேருந்தில் வந்து இறங்குகிறார். அந்தக் காட்சியோடுதான் கதையைத் தொடங்குகிறார் ஜெயகாந்தன். எந்த அவசரமும் இல்லாமல் வரிசையில் காத்திருந்து பேருந்திலிருந்து கடைசியில் இறங்கி வரும் காட்சியிலேயே அவருடைய பொறுமையையும் நிதானமான அணுகுமுறையையும் உணர்த்திவிடுகிறார்.

கெளரிப்பாட்டி பதினாறு வயதில் விதவையானவர். ஒரே மகனை வளர்த்து ஆளாக்கினார். அவனுக்குத் திருமணமாகி பிள்ளைகள் பிறந்தனர். மூத்த பெண்ணுக்குத் திருமணம் நடைபெற்றது. ஆனால் குறுகியகாலமே அந்த வாழ்க்கை நீடித்தது. விதவைக்கோலத்துடன் வீட்டுக்குத் திரும்பி விட்டாள். அவளை அப்படியே விட அந்தக் குடும்பத்துக்கு மனமில்லை. அவளைப் படிக்கவைத்தனர். ஆசிரியர் பயிற்சி பெற்று அவள் வேலைக்குச் சென்றாள். பணம் சம்பாதித்தாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாகம் அவளை நெய்வேலியில் இருக்கும் பள்ளிக்கு இடம் மாற்றியது. பெற்றோருக்கு அவளை தனியே அனுப்ப மனமில்லாதபோது, அவளுக்குத் துணையாக பாட்டி நெய்வேலிக்குச் சென்றாள். இளம்விதவையும் மூத்த விதவையும் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தனர்.

நெய்வேலியில் வசித்தாலும் மாதாமாதம் தலையை மழித்துக்கொள்ள பாட்டி கடலூருக்கு வரவேண்டியிருந்தது. அதே கிணற்றடி. அதே நாவிதர். அந்தப் பழக்கத்தை அவள் உதற விரும்பவில்லை. மகனையும் பேரப்பிள்ளைகளையும் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்பது ஒரு காரணம். தலையை மழித்துக்கொண்டு செல்லலாம் என்பது இன்னொரு காரணம்.

அந்த முறை ஊருக்குப் புறப்படும்போது பேத்தி கீதா ஒரு கடிதத்தைக் கொடுத்து அப்பாவிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு பாட்டி பேத்தியின் வேண்டுகோளுக்கிணங்க அக்கடிதத்தை பிள்ளையிடம் ஒப்படைத்துவிடுகிறாள். கடிதத்தைப் படித்ததும் கோபத்தில் கொந்தளிக்கிறார் கணேசய்யர். பாட்டியின் மகன். கீதாவுடன் பணிபுரியும் இந்தி ஆசிரியர் ஒருவர் இளம்விதவை என்னும் உண்மை தெரிந்திருந்தும் கீதாவை மணந்துகொள்ள விரும்புகிறார். அவளுக்கும் அதில் விருப்பம் இருக்கிறது. ஒரு புதிய வாழ்க்கையை புதிய வெளிச்சத்தில் பெற்று புதிய யுகத்தின் பிரஜையாக வாழப் போகிறேன் என்று கடிதத்தில் அவள் எழுதியிருக்கும் வரிகள் அவரைக் கடுமையான கோபத்துக்கு ஆளாக்குகின்றன. அவள் தன் காதலுக்கு அனுமதியைக் கோரவில்லை. தன் காதலை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் கெஞ்சவில்லை. மாறாக காதலிக்கிறோம், திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறாள். ’என் காரியம் என் வரைக்கும் சரியானது’ என்ற தீர்மானமான முடிவை அவள் தெரிவித்திருக்கிறாள்.

அந்த முடிவெடுக்கும் சுதந்திரம்தான் கணேசய்யருக்கு உறுத்தலாக இருக்கிறது. ஒரு கட்டம் வரைக்கும் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றன. கட்டுப்படுத்தப்பட்ட யுகத்தின் பிரதிநிதியாக பாட்டி வாழ்ந்தார். ஆனால் பாட்டியின் கண் முன்னாலேயே உலகம் மாறியது. வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இடத்தில் ஆசாரங்களை ஏற்றிவைப்பதை அது ஏற்கவில்லை. அவரவர் வாழ்க்கைப்பாதையை அவரவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அந்தச் சுதந்திர யுகத்தின் பிரதிநிதியாக கீதா வாழ்கிறாள்.

கீதாவின் கடிதத்தைப் படித்துவிட்டு கணேசய்யர் குமுறுகிறார். பெற்ற மகளையே வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அவளை குடும்பமே தலைமுழுகிவிட வேண்டியதுதான் என்று பொங்கியெழுகிறார். ஆளாளுக்கு இப்படி முடிவெடுத்தால் ஆசாரங்களால் ஆன வாழ்வு என்னாவது என்று மருகுகிறார். ஆனால் அந்த மருகுதலுக்கு எந்தப் பொருளும் இல்லை. ஆசாரத்தைக் காட்டி யாரும் கல்வியை மறுக்கவில்லை. புதிய துணிமணிகளை மறுகவில்லை. வேலையையோ சம்பளத்தையோ மறுக்கவில்லை. புழங்கும் சூழலுக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால் தலைமழிக்கும் பழக்கத்தை விட்டொழித்ததையும் மறுக்கவில்லை. சினிமாவை மறுக்கவில்லை. வசதிகளையும் பிரயாணங்களையும் ஆனந்தமான தருணங்களையும் மறுக்கவில்லை. ஆனால் மறுமணம் என்னும்போது மட்டும் பொங்கி வருகிறது.

இந்த மறுப்பில் பொருளில்லை என்பதை அக்குடும்பத்தில் புரிந்துகொள்ளும் ஆளாக இருப்பவர் பாட்டி மட்டுமே. ஆசாரத்தின் பின்னால் மகன் தன் பொறுப்பைத் துறந்து ஒளிந்துகொள்ளப் பார்க்கும் கோழையாக வாழ்வதை பாட்டி மட்டுமே புரிந்துகொள்கிறார். கீதாவுக்கு ஆதரவளிக்கக்கூடாது என்று குடும்பமே முடிவெடுக்கும் போது பாட்டி தன் ஆதரவை வெளிப்படையாக அறிவித்துவிட்டு பேத்தியிடம் செல்லத் தயாராக இருக்கிறார். பொறுப்பை உணர்ந்து நடப்பதுதான் முக்கியமே தவிர, இவ்வுலகில் சாஸ்திரமோ, சம்பிரதாயமோ, ஆசாரங்களோ ஒருபோதும் முக்கியமல்ல. கடமை அல்லது பொறுப்புதான் மனிதருக்குரிய முகமே தவிர, ஆசாரமல்ல. கெளரிப்பாட்டியின்  பொறுப்புணர்ச்சி மிக்க எண்ண ஓட்டங்கள் நம் மனத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன.

ஆசாரத்தை மட்டுமே மனிதன் காரணமாகக் காட்டுவான் என்று சொல்லமுடியாது. அது ஓர் எடுத்துக்காட்டு. அவ்வளவுதான். கற்பனையே செய்யமுடியாத அற்பமான விஷயத்தைக் கூட அவனால் காரணமாகக் காட்டிவிடமுடியும். அப்படி ஒரு மகனையும் ஒரு பாட்டியையும் ‘அப்பாவிடம் என்ன சொல்வது?’ என்னும் சிறுகதையில் காட்டியிருக்கிறார் அசோகமித்திரன்.

பெங்களூரு கண்ட்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடைக்கு ஒரு பாட்டியும் பேத்தியும் நடந்துவருகிறார்கள். பாட்டி ஊருக்குச் செல்கிறார். பேத்தி அவரை வழியனுப்ப வந்திருக்கிறாள். பாட்டி ஒரு பெட்டியையும் ஒரு பையையும் வைத்திருக்கிறார். பேத்தி இரண்டு கைகளிலும் இரு பைகளைத் தூக்கிக்கொண்டு வருகிறாள். அந்த இடத்திலிருந்து அசோகமித்திரன் கதையை ஆரம்பிக்கிறார்.

பெங்களூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் நிற்கக்கூடிய ஏதோ ஒரு ஊரைச் சேர்ந்தவர் அந்தப் பாட்டி. அசோகமித்திரன் அவர் வசிக்கக்கூடிய ஊரின் பெயரைச் சொல்லவில்லை. எல்லா ஊரிலும் அப்படி ஒரு பாட்டி இருக்கக்கூடும் என்பதாலோ என்னமோ, அவருடைய ஊரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. அவருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. முகமற்ற பிரஜைகளில் ஒருத்தி.

அவருடைய மகன் பெங்களூரில் பிழைப்பதற்காக வந்து முனிரெட்டிபாளையத்துக்கு அருகில் எங்கோ வசிக்கிறான். மகனோடு வாழ்ந்து காலத்தைக் கழிக்கவேண்டும் என்னும் எண்ணத்தோடுதான் மூட்டைமுடிச்சுகளோடு பெங்களூருக்கு வந்தார். ஆனால் அவரை தங்கவைத்துக்கொள்வதில் அவனுக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. வறுமை ஒரு காரணம். வசதியின்மை இன்னொரு காரணம். இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். அதனால் மகனும் மருமகளும் சேர்ந்து நேருக்கு நேர் பாட்டியைப் பார்த்து “போ, போய்விடு” என்று சொல்லிவிடுகிறார்கள்.

பாட்டிக்கு வேறு வழி தெரியவில்லை. தம் மூட்டைமுடிச்சுகளை எடுத்துக்கொண்டு திரும்பிச் செல்ல ஸ்டேஷனுக்கு வந்து விடுகிறார். அவரை வழியனுப்ப முனிரெட்டிபாளையத்திலிருந்து பாட்டிக்குத் துணையாக நடந்தே வருகிறாள். அவளுக்குப் பாட்டியைப் பிடித்திருக்கிறது. பாட்டி தன்னோடு இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனாலும் அம்மாவும் அப்பாவும் எதற்காக போ போ என்று சொல்கிறார்கள் என்று புரியாமல் தடுமாறுகிறாள். அச்சிறுமியால் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் பாட்டியிடமே கேட்கிறாள். பாட்டி மிகவும் பக்குவமாகவும் நாகரிகமான முறையிலும் “ஏதோ குடும்ப கஷ்டம். போன்னு சொல்லிட்டான்” என்று பதில் சொல்கிறார்.

நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு பாட்டி எதிர்பார்த்த வண்டி வந்து சேர்கிறது. பாட்டி எப்படியோ தன் உடைமைகளுடன் தட்டுத்தடுமாறி வண்டிக்குள் ஏறி இடம் பிடித்து அமர்ந்துவிடுகிறார். ரயில் நகரத் தொடங்கிய சமயத்தில் சட்டென நினைவு வந்தவராக ”இந்தாடி, இத வச்சிக்கோ” என்று சிறுமியை அருகில் அழைத்து ஒரு பத்து ரூபாய்த்தாளைக் கொடுக்கிறார்.

ரயில் நகர்ந்துவிடுகிறது. சிறுமி விடுவிடுவென நடந்து நடைமேடையை விட்டு வெளியே வருகிறாள். ”பாட்டி போயிட்டாளா?” என்று இருட்டிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. அவள் தயங்கி அத்திசையில் பார்க்கிறாள். அவளுடைய அப்பாதான் அந்த இருட்டில் நின்றிருக்கிறார். வாசல் வரைக்கும் வந்த அப்பா நடைமேடைக்கு ஏன் வரவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. “ஏம்பா உள்ளே வரலை?” என்று கேட்கிறாள். “பிளாட்பார்ம் டிக்கட் வாங்கலை. கூட்டமா இருந்தது” என்று ஏதோ ஒரு பதிலைச் சொல்கிறார் அவர். தானும் கூட பிளாட்பார்ம் டிக்கட் வாங்கவில்லை என்று அச்சிறுமிக்கு அப்போது தோன்றுகிறது. ஆனால் வாய்திறந்து சொல்லவில்லை. பெரியவர்கள் எடுக்கிற முடிவுகளுக்குப் பின்னால் இருக்கிற புதிரை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அமைதியாக அப்பாவோடு நடக்கத் தொடங்குகிறாள்.

பெரியவர்களின் முடிவு சிறுமிக்குப் புரியாத புதிராக இருப்பதுபோல அசோகமித்திரன் எழுதியிருந்தாலும், அது உண்மையில் சிறுமி புரிந்துகொள்ளவேண்டிய புதிரே அல்ல. பெரியவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டிய ஒவ்வொரு செய்தியையும் ஒத்திப்போட்டு ஒத்திப்போட்டு புரியாததுபோல ஒரு நாடகத்தைப்போல வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள்.

வயதான ஒரு மூதாட்டியைப் பராமரிக்கும் பொறுப்பை ஒரு குடும்பமே தட்டிக் கழிக்கும் அவலத்தையே அசோகமித்திரனின் சிறுகதை முன்வைக்கிறது. வறுமை என ஒரு காரணம். விருப்பமின்மை என ஒரு காரணம். இயலாமை என ஒரு காரணம். இப்படி எத்தனை எத்தனை  காரணங்கள். எல்லாமே தன்னுடைய பொறுப்பை தனதல்ல என துறப்பதற்காக.

மகனுடைய காரணங்களைக் கேட்டு பாட்டி மனம் தளரவில்லை. பெங்களூருக்கு வந்து மகனோடு காலம் கழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் எல்லா மூட்டைமுடிச்சுகளோடு கிளம்பி வந்தார். ஆனால் அதற்கு வழியில்லை என்றதும் கொண்டுவந்த மூட்டைமுடிச்சுகளோடு மனம் கோணாமல் புறப்பட்டுவிட்டார். யாரையும் அவர் குற்றம் சொல்லவில்லை. நாம் கவனிக்கவேண்டியது அந்தப் புள்ளியைத்தான். ”அம்மா அப்பா ஏன் அப்படி இருக்காங்க?” என்று சிறுமி கேட்கும் கேள்விக்குக்கூட “என்னமோ குடும்பக்கஷ்டம்” என்று பதில் சொல்கிறார். “எல்லாமே தெரியறதுடி. ஆனா எங்கே இருக்கறதுன்னுதான் எனக்குத் தெரியலை” என்று தன்னை மீறி ஒரு சொல்லை பாட்டி வெளிப்படுத்திவிட்டாலும் தன்னைப் பராமரிக்கும் பொறுப்பை தானே வைத்துக்கொள்ளும் உறுதியோடு புறப்பட்டுவிடுகிறார்.

“ரங்கராஜி பேஷண்ட் கூட வந்திருக்கிற அசிஸ்டென்ட் யாரு? இருக்கீங்களா இங்க?” என்று காத்திருப்போர் கூடத்தில் நின்று மருத்துவமனைச் சீருடை அணிந்த ஊழியர் ஒருவர்  நான்கு பக்கமும் திரும்பித் திரும்பிக் கேட்டார். மனத்தில் இருந்த பாரங்களையெல்லாம் என்னிடம் கொட்டிய பிறகு களைப்பில் உட்கார்ந்த நிலையிலேயே சற்றே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பாட்டி ம்ஹ் என்று திடுக்கிட்டு எழுந்தார்.  “என்ன பேரு சொன்னாரு? என்ன பேரு சொன்னாரு?” என்று என்னிடம் பதற்றத்துடன் கேட்டார். ஏதோ கனவில் ஆழ்ந்திருந்தவர் சட்டென எழுந்ததும் பேசுவதுபோல இருந்தது அவர் பேச்சு. “ரங்கராஜின்னு சொன்னாரு” என்று அவரிடம் சொன்னேன். அதே சமயத்தில் அந்த ஊழியரும் அதை ஒருமுறை அறிவித்தார். “என் புள்ளைதாம்பா. ஐயோ, தெய்வமே, என்ன ஆச்சோ தெரியலையே” என்று பதற்றத்துடன் எழுந்து நின்றார். பிறகு “நான்தான், நான்தான்” என்றபடி அந்த ஊழியரை நோக்கிச் சென்றார். ”சீக்கிரம் வாங்க. டாக்டரு கூப்பிடறாரு” என்றார் அந்த ஊழியர். இருவரும் உள்ளே சென்றனர்.

என்னோடு உரையாடிக்கொண்டிருந்த அளவில், ஜெயகாந்தனின் பாட்டியைப்போல, அசோகமித்திரனின் பாட்டியைப்போல அந்தப் பாட்டியும் எல்லாப் பொறுப்புகளையும் எடுத்து நிர்வகிக்கும் ஆளுமை உள்ள பாட்டி  என்றே எனக்குத் தோன்றியது. ஒருகணம் அந்த ஊழியரின் குரலும் தொனியும் சற்றே கலவரமளிக்கும் வகையில் இருந்தபோதும், அச்சமுறும் வகையில் எதுவும் இருக்கக்கூடாது என ஆழ்மனத்தில் நினைத்துக்கொண்டேன்.

 

(சங்கு – அக்டோபர் 2023)