Home

Monday 30 October 2023

அரிதான தருணங்கள் - புத்தக அறிமுகம்

  

புறநானூற்றுப் பாடல்கள் ஒவ்வொன்றையும் ஒரு சிறிய ஓவியம் என்றே குறிப்பிடலாம். ஓவியத்துக்கே உரிய தேர்ந்தெடுத்த அரிய காட்சிகளை அழகான சொல்லோவியங்களாக உருமாற்றி வைத்திருக்கிறார்கள் கவிஞர்கள். உறையூர் தாமோதரனார் என்பவரின் பாடலொன்றை நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.  ஒன்றுக்குள் ஒன்றென இரு சித்திரங்களைக் கொண்ட பாடல் அது. ஒரு பெரிய சித்திரம். அதற்குள் ஒரு சின்னஞ்சிறு சித்திரம். ஓர் அண்மைக்காட்சி. ஒரு சேய்மைக்காட்சி.

உப்புமூட்டைகள் அடுக்கப்பட்ட வண்டிகள் வரிசைவரிசையாகச் செல்கின்றன. பாரம் மிக்க அவ்வண்டிகளை அவற்றில் பூட்டப்பட்ட எருதுகள் மலையை நோக்கிச் செல்லும் சரிவான பாதையில் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இழுத்துச் செல்கின்றன. அது ஒரு சித்திரம்.

அந்த வண்டிகளை மேற்பார்வை செய்தபடி அவற்றோடு நடந்துபோகிறார்கள் ஒரு தலைவனும் தலைவியும். அது இருள் அடர்ந்த நேரம். கடல்நடுவே உள்ள கப்பல்களில் ஒளிரும் விளக்குகளைப்போல விண்மீன்கள் வானில் தென்படுகின்றன. அவற்றுக்கு நடுவே வட்டமான முழுமதி மேலே எழுந்துவருகிறது. அந்த முழுநிலவின் தோற்றம் அவர்களுடைய நாட்டின் அரசன் பிடித்திருக்கும் குடையை நினைவுபடுத்தி, அரசனையும் நினைவுபடுத்திவிடுகிறது. அதனால் அந்த முழுமதியையே அரசனென எண்ணி கைகுவித்து வணங்குகிறார்கள். அது இன்னொரு சித்திரம்.

அந்த இரண்டாவது சித்திரத்தில் தொனிக்கும் உயர்வுநவிற்சி குரல் நம்மை ஒருகணம் புன்னகைக்க வைக்கிறது. சரிவாக இருப்பினும் பாரத்தை பாரமெனக் கருதாது மலைப்பாதையில் கவனமாக இழுத்துச் செல்லும் எருதுகளின் தோற்றம் ஏதோ ஒரு கோணத்தில் ஆட்சிச்சுமையைத் தாங்கி நடக்கும் அரசனை நினைவுபடுத்திவிடுகிறது. அந்தக் கற்பனை நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கிறது.

இத்தகு அரிய காட்சிகளே ஒரு படைப்பை இலக்கியப்படைப்பாக மெருகுற வைக்கின்றன. வெறும் காட்சியையும் நிகழ்ச்சியையும் கொண்ட படைப்புகள் கேளிக்கைப்படைப்புகளாகவும் அரிய காட்சிகளையும் அரிய மனிதர்களையும் அரிய கோணங்களையும் கொண்ட படைப்புகள் இலக்கியப்படைப்புகளாகவும் மதிப்பிடப்படுகின்றன.

எஸ்ஸார்சியின் சிறுகதைகள் பல சமயங்களில் எளிய காட்சிச்சித்தரிப்புகள் போலத் தோன்றினாலும், ஆழ்ந்து நோக்கும்போது அவற்றில் சில அரிய காட்சிகளை நாம் பார்க்கமுடியும். சில அரிய மனிதர்களின் நடமாட்டத்தையும் உணர்ந்துகொள்ளலாம். வாழ்வின் இடர்கள் தொடர்பான சில அரிய கோணங்களையும் நாம் கண்டறியலாம். அவற்றின் தகுதியால் எஸ்ஸார்சியின் சிறுகதைகள் இலக்கியத்தகுதி கொண்டவையாக உள்ளன.

படி அளக்குறவரு பரமசிவம் என்னும் சிறுகதையில்  அக்கிரகாரத் தெருவில் மாடுகள் போடும் சாணத்தை எடுத்துவந்து வறட்டி தட்டி விற்றுப் பிழைக்கும் ஆதரவற்ற பாட்டி ஒருவரைச் சித்தரிக்கிறார் எஸ்ஸார்சி. அவர் விதவை. அவர் ஈட்டும் எளிய வருமானம் அவருடைய ஒவ்வொரு நாளையும் சுமையற்றதாக மாற்றிக் காப்பாற்றிவருகிறது. பாட்டி தட்டித்தட்டி உலரவைத்து எடுத்துவைத்திருக்கும் வறட்டிகளை சமையலுக்கென வாங்கிப் பயன்படுத்தும் குடும்பங்களே இல்லாமல் போய்விடுகின்றன. சமைக்கும் வழிமுறைகளில் ஏற்பட்ட மாற்றமே அதற்குக் காரணம். ஆனால் இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டும் அந்தப் பாட்டியின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அதன் வழியாக அவள் ஈட்டும் பணம் அவளைப் பசியற்றவளாக நடமாட வைக்கிறது.

அந்தத் தருணத்தில் ஒரு புதிய நெருக்கடி வருகிறது. அந்த ஊர் மயானம் மின்மயானமாக உருமாற்றம் பெறுகிறது. வறட்டிகளுக்கான தேவை திடீரென மறைந்துபோகிறது. அதுவரை அவளிடமிருந்து வறட்டிகளை வாங்கிச் செல்லும் ஒரு தொழிலாளி அவளுடைய ஆதரவற்ற நிலையை உணர்ந்து அவனும் முதலில் திகைப்பில் மூழ்குகிறான். பிறகு பாட்டியிடம் ஒரு திட்டத்தை முன்வைக்கிறான்.

வேலை செய்யும் இடத்தில் மயானத்தொழிலாளிகளுக்கு தேநீர் தேவைப்படுகிறது. அதை நேரத்துக்குச் சரியாக கொடுக்க யாருமில்லை.  வேலை நேரத்தில் விற்பனை செய்யும் இடம் தேடிச் சென்று குடித்துவிட்டு வர அவர்களுக்கு நேரமில்லை. அதனால் அவர்கள் தம் செலவில் பால், தேயிலைத்தூள், சர்க்கரை ஆகியவற்றை வாங்கி பாட்டியிடம் தருவது என்றும் தினமும் அவர்களுக்குத் தேவையான தேநீரை அவள் தயாரித்து சுடச்சுட அளிக்கவேண்டும் என்றும் முடிவாகிறது. அதற்கு ஊதியமாக அவளுக்கு அவர்கள் தினமும் ஐம்பது ரூபாய் கொடுத்துவிடுவார்கள். ஒருவர் தேவையை இன்னொருவர் நிறைவேற்ற, இருவரும் பயனடையும் எளிய திட்டம்.

நெருக்கடியான சூழலில் அந்தத் தொழிலாளியின் மனத்தில் தற்செயலாக உதிக்கும் திட்டம்தான் அது. அக்கணத்தில் அந்தத் தொழிலாளியை தனக்குப் படியளக்கும் பரமசிவனாகவே பார்க்கிறாள் பாட்டி. உலகமதிப்பில் மிகவும் தாழ்ந்த ஒரு வேலையைச் செய்து பிழைக்கும் ஒருவரிடம் வெளிப்படும் மிக உயர்வான அரிய குணத்தை எஸ்ஸார்சி காட்சிப்படுத்தியிருக்கிறார். பாட்டியைச் சுற்றி வாழும் அக்கிரகாரத்து மனிதர்களிடம் வெளிப்படாத மனிதாபிமானத்தை அந்தத் தொழிலாளி தன்னியல்பாக வெளிப்படுத்திவிட்டுச் செல்கிறான்.

எச்சத்தால் பாகம்படும் என்றொரு சிறுகதை. ஒரு குடும்பத்தில் நான்கு பெண்கள். வரிசையாக திருமணத்துக்குக் காத்திருக்கிறார்கள். மூத்த பெண்ணை ஒருவர் பெண்பார்த்துவிட்டுச் செல்கிறார். திருமணத் தேதியை முடிவு செய்துவிட்டு திருமணத்துக்காகக் காத்திருந்த சமயத்தில் பெண் பார்த்துவிட்டுச் சென்ற மாப்பிள்ளை எதிர்பாராத விதமாக மரணமெய்தி விடுகிறார். மூத்த பெண்ணுக்குத் திருமணம் நின்றுபோனதால், மற்ற பெண்களைக் கேட்டு வருபவர்கள் யாருமில்லாமல் போய்விடுகிறது. அப்போது அந்த மாப்பிள்ளையின் தம்பி தம் வீட்டுக்கு அண்ணியாக வரவேண்டியவரை அண்ணியாகவே அழைத்துக்கொண்டு வந்து வாழ்க்கையைக் கொடுக்கிறார். மனைவியாக ஏற்றுக்கொள்ளும் தருணங்களையே பார்த்த நம் கண்களுக்கு அண்ணியாகவே ஏற்றுக்கொண்டு வாழ்க்கை கொடுக்கும் அந்த அரிய மனிதரின் சித்திரம் வியப்படைய வைக்கிறது.

அந்த அரிய மனிதர் இன்னொரு அரிய செயலையும் செய்கிறார். அதுதான் கதையின் மையமான பகுதி. தன் அண்ணனோடு படித்த நண்பரின் பிள்ளை, தன் வீட்டுக்கு அருகிலிருக்கும் உயரிநிலைப் பள்ளியில் சேர்ந்ததையும் மதியச் சாப்பாட்டை உட்கார்ந்து சாப்பிட இடமில்லாது தவிப்பதையும் அறிந்து தன் வீட்டுக்கு வந்து தாராளமாக சாப்பிட்டுவிட்டுச் செல்வதற்கு வழிசொல்கிறார் அவர். சாப்பாட்டை வீட்டிலிருந்து எடுத்துவர வேண்டியதில்லை என்றும் தம் வீட்டிலேயே சாப்பிட்டுக்கொள்ளலாம் என்றும் சொல்கிறார். அந்தச் சிறுவன் உயர்நிலைப்பள்ளியில் படித்துமுடிக்கும் காலம் முழுதும்  அவர்கள் வீட்டுச் சாப்பாட்டையே சாப்பிடுகிறான்.

ஒருவர் உளரேல் என்னும் சிறுகதையில் தம் வீட்டிலேயே பீமரதசாந்தி நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளும் பெரியவர் வீடு முழுதும் வெவ்வேறு உயர தாங்கிகளில் புத்தகங்களையும் விருதுகளையும் அடுக்கி வைத்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு வருகை தரும் உறவினர்களோ, நண்பர்களோ யாராவது அப்புத்தகங்களைப்பற்றி ஏதேனும் ஒரு கேள்வி கேட்கக்கூடும் என குறுகுறுப்புடன் அவர் எதிர்பார்த்தபடி இருக்கிறார்,. ஆனால் கடைசி வரைக்கும் அவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. கடைசியாக அந்த வீட்டிலிருந்து தானம் வாங்கிக்கொண்டு செல்லும் தலைநரைத்த பெரியவர் ஒருவர் அப்புத்தகங்களைப்பற்றி விசாரிக்கிறார். அவர் அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவல் கொண்டவராகவும் தெரிகிறார். ஆனால் தானம் வாங்கிக்கொண்டவர் ஒருகணம் கூட அவ்விடத்தில் கூடுதலாக நிற்கக்கூடாது என்று சொல்லி புரோகிதர் அவரை வெளியேற்றிவிடுகிறார். ’எங்கோ ஒருத்தர் இருக்கார். அது போதும்’ என்று ஆறுதல் கொள்கிறார் பெரியவர்.

கணக்கு என்றொரு சிறுகதை. மாறுபட்ட சாதியில் பிறந்த ஒருவரை தனக்குப் பிடித்திருந்த காரணத்தால் திருமணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறாள் ஒரு பெண், அதற்குப் பிறகு பிறந்த வீட்டாரோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே கண்னவனுடன் தனிவீட்டில் வாழ்கிறாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு தாயின் மரணத்தின் வடிவில் அந்தப் பெண்ணுக்கு சோதனை வருகிறது. தாயின் முகத்தைப் பார்க்கவேண்டும் என விரும்புகிறாள் அவள். பாசம் அவளை உந்தித் தள்ளுகிறது. ஆனாலும் பெற்றோர் வீட்டில் என்ன நிகழுமோ என்கிற அச்சத்தில் தெருமுனை வரைக்கும் வந்த பிறகும் கூட, வீட்டை நோக்கிச் செல்லாமல் ஒதுங்கி நிற்கிறாள். அந்த நேரத்தில் அவளுடைய அலுவலகத்தில் டிரைவராகப் பணிபுரியும் ஒருவர் வாகனத்தோடு வந்து அவளை ஏற்றிக்கொள்கிறார். அவளிடம் மாலையைக் கொடுக்கிறார். வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்று அந்த வீட்டின் வாசலில் நிறுத்துகிறார். அங்கு நின்றிருப்பவர்கள் யோசனையில் மூழ்கியிருக்கும்போதே “ஆபீசர் வராங்க ஆபீசர் வராங்க” என்று அங்கிருப்பவர்களை எச்சரிக்கிறார். அந்தச் சிறு இடைவெளியில் அவள் வாகனத்திலிருந்து இறங்கி வந்து தாய்க்கு மரியாதை செய்துவிட்டு ஒரு துளி கண்ணீரோடு வாகனத்தில் மீண்டும் ஏறிவிடுகிறாள். கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனம் அந்தத் தெருவிலிருந்தே மறைந்துவிடுகிறது. இத்தொகுதியில் அடங்கியிருக்கும் பத்தொன்பது சிறுகதைகளில் இப்படி அரிதான குணத்தை வெளிப்படுத்தும் பல மனிதர்களை அழகாகச் சித்தரித்திருக்கிறார் எஸ்ஸார்சி.

இத்தொகுதியின் மிகச்சிறந்த சிறுகதை தப்புக்கணக்கு. இதுவரை சொன்ன அரிய மனிதர், அரிய காட்சி, அரிய உரையாடல் எதுவுமின்றி, வாசகர்களுடைய கண்முன்னால் அரியதொரு தருணத்தை நிகழ்த்திக்காட்டிவிட்டு இச்சிறுகதை முடிவெய்தி விடுகிறது.

நீண்ட காலமாக திருமணமாகாமல் இருக்கும் சந்திரன் என்னும் இளைஞனைப்பற்றிய சிறுகதை இது. அவனுக்கு யாரோ ஒருவர் ஒரு செய்தியைத் தெரிவிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரத்தில் பட்டப்படிப்புக்காக அவன் வாடகைக்கு அறையெடுத்துத் தங்கியிருந்த காலத்தில் அந்த அறையை வாடகைக்குக் கொடுத்த குடும்பத்தில் திருமண வயதுள்ள பெண்ணொருத்திக்கு வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அவர் தெரிவித்த செய்தி.

சந்திரன் அந்த அறையில் தங்கியிருந்த காலத்தில் அப்பெண்ணுக்கு பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறான். அவளைச் சந்தித்தால், ஒருவேளை அச்சந்திப்பு திருமணத்தில் முடிவடைய வாய்ப்பிருக்கிறது என அவன் மனத்தில் சின்னதாக ஒரு கணக்கு ஓடுகிறது. நேரம் செல்லச்செல்ல அந்தக் கணக்கு  தனக்குச் சாதகமாகவே முடிவடையும் என அவன் மனம் உறுதியாக நினைக்கத் தொடங்கிவிடுகிறது.

சிதம்பரத்தில் தில்லைக்காளி கோயில் வரை சென்று வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டுச் செல்கிறான் சந்திரன். அந்தச் சொல்லைக் காப்பாற்றுவதற்காக காளிகோவிலுக்குள் சென்று வணங்கிவிட்டு வருகிறான். அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் செல்கிறான். ஆனால் சந்திரன் எதிர்பார்த்தது எதுவும் அங்கே நிகழவில்லை.

அந்தப் பெண் அழகாகவே இருக்கிறாள். ஆனால் அவன் மீது எந்தவிதமான நாட்டமும் அற்றவளைப்போலவே நடந்துகொள்கிறாள். அப்பெண்ணின் அம்மா, பாட்டி, அண்ணன் அனைவரும் ஒட்டுதல் இன்றி நடந்துகொள்கிறார்கள். அவன் கணக்கு எல்லாமே தப்புக்கணக்காகிவிடுகிறது. அன்று இரவு அவனை வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள். அடுத்தநாள் காலையில் எழுந்து தன் விதியை நொந்துகொண்டபடி பேருந்து பிடித்து சிதம்பரத்தைவிட்டு வெளியேறிவிடுகிறான் சந்திரன். தான் நினைத்த கணக்கு தப்பாக முடிந்துவிட்டதை நினைத்து சலித்துக்கொள்கிறான்.

அவன் கணக்கு தப்புக்கணக்காகவே முடிவடையப் போகிறது என்று வாசகர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் தொடக்கக்குறிப்பொன்று இச்சிறுகதையில் அமைத்திருக்கிறது. நடராஜருக்கும் காளிக்கும் நடைபெற்ற நடனப்போட்டியில் தோல்வியடைந்தவள் காளி. அதற்காகவே அந்தத் தெய்வம் நகரை விட்டு நீங்கி, நகரத்துக்கு வெளியே தனித்து குடியிருக்கிறது. தன் கணக்கில் வெல்ல நினைக்கும் ஒருவன் தோல்வி கண்ட தெய்வத்தை நோக்கிச் செல்லும்போதே அவன் அடையப்போகும் தோல்வியை கதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது.

சந்திரனும் அந்தப் பெண்ணும் இணைவதற்கு எந்தத் தடையும் இல்லை. அவனும் தனக்குப் பொருத்தமான மணமகளைத் தேடி அலைபவன். அவளும் தனக்குப் பொருத்தமான மணமகனைத் தேடி அலைபவள். அவளும் பட்டதாரி. அவனும் பட்டதாரி. வேலை இருக்கிறது. நல்ல சம்பளமும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்களிடையில் வகுப்பு வேறுபாடும் இல்லை. ஆனாலும் அவனை மணமகன் என்னும் தோற்றத்தில் அவர்கள் பார்க்கத் தயாராகவே இல்லை. அவனை முடிந்தவரை விரைவாக அனுப்பிவைக்கும் அவசரத்திலேயே இருக்கிறார்கள்.

எது அவர்களை அவனோடு ஒட்டவிடாமல் தடுக்கிறது? கதையை இன்னொருமுறை படித்துப் பார்த்தால் அந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்துவிடும். அவன் அப்பா ஜோதிடம் பார்ப்பவர். எங்காவது ஹோமம் நடைபெற்றால் புரோகிதர்களோடு சென்று கூடமாட உட்கார்ந்து ஜபம் சொல்பவர். அந்த வேலைக்கு சமூகத்தகுதி இல்லை. அப்பாவே இல்லாத குடும்பம் என்றாலும் அவர்களுக்குள்ள சமூகத்தகுதி சந்திரனின் அப்பாவுக்கு இல்லை. அதுதான் அவன் மனத்திலிருக்கும் கணக்கைத் தப்புக்கணக்காக்கி விளையாடுகிறது. அந்தக் கோணம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கலாம். ஆனால் எஸ்ஸார்சி மெல்ல மெல்ல அப்புள்ளியை நோக்கி கதையை நகர்த்திச் சென்று நம்மை உணரவைத்துவிடுகிறார். நம் மனம் எடைமிக்க அத்தருணத்தை உள்வாங்கிக்கொண்ட பிறகு கதை முடிவடைந்துவிடுகிறது. காலத்தின் கணக்கு நேராக இருப்பினும் மனிதர்கள் அதை தப்புக்கணக்காக்கி கவலைகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.

 

 

(அம்மா எனும் மனுஷி. எஸ்ஸார்சி. உதயகண்ணன், 10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை – 600011. விலை. ரூ 180)

 

(புக் டே – இனைய தளம் 23.10.2023)