Home

Sunday 22 October 2023

மழைக்கதைகளும் மழைப்பாடல்களும் - கட்டுரை

 

 பத்து நாட்களுக்கு முன்னால் தொடங்கிய மழை பெங்களூரு முழுக்க விட்டுவிட்டு பொழிந்தபடியே இருந்தது. தொலைபேசியில் அழைத்து உரையாடுகிறவர்கள் அனைவரும் மழையைப்பற்றிய கேள்வி பதிலோடுதான் தொடங்கினார்கள். பலர் உற்சாகமாக உணர்வதாகச் சொன்னார்கள். சிலர் சலிப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

அபொழுதெல்லாம் விடியும்போது வழக்கமான விடியலாகத்தான் இருக்கும். பத்து மணிக்கெல்லாம் கண்கூசும் அளவுக்கு வெயில் வந்துவிடும். அடுத்து ஒரு மணி நேரத்திலேயே எல்லாம் தலைகீழாக மாறிவிடும். வெயில் போன இடம் தெரியாது. சட்டென மேகங்கள் கவிந்து மழை சீராகப் பொழியத் தொடங்கிவிடும். ஒருமுறை தொடங்கினால் குறைந்தபட்சமாக ஒரு மணி நேரமாவது பொழிந்துவிட்டுத்தான் ஓயும்.

மழை வர வாய்ப்பில்லை என்று நினைத்துக்கொண்டு வெயில் தொடங்கிவிட்ட ஒருநாள் காலையில் விட்டல்ராவைச் சந்திப்பதற்காக புறப்பட்டுச் சென்றேன். ஏறத்தாழ ஒரு மணி நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். அதுவரை மழை இல்லை. அதற்குப் பிறகு ஒரே கணத்தில் திரையை இழுத்ததுபோல சட்டென வெயில் மறைந்துவிட்டது.  அடுத்து சில மணித்துளிகளிலேயே மழையின் நடனம் தொடங்கியது. உடனே வீட்டுக்கு வெளியே வந்து நின்றுகொண்டு மழையை வேடிக்கை பார்த்தபடி நின்றோம்.

காற்றுடன் இணைந்த மழைச்சாரல் உடல்மீது பட்டதும் ஒருவித சிலிர்ப்பு எழுந்தடங்கியது. அது எங்கள் உற்சாகத்தை பல மடங்காகப் பெருகவைத்தது. அதன் விளைவாக, என் நினைவுக்கு சட்டென வந்த ஒன்றிரண்டு பழையகாலத்து மழை நினைவுகளை விட்டல்ராவுடன் பகிர்ந்துகொண்டேன். அந்த அனுபவம் அவருடைய ஆழ்நெஞ்சில் பதிந்திருந்த பல பழைய நினைவடுக்குகளைக் கலைத்துவிட்டது. உடனே அவரும் சென்னையில் வசித்தபோது நேர்ந்த சில மழைநாள் அனுபவங்களை தன் நினைவிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லத் தொடங்கினார். மனைவியோடு ஒருமுறை திரைப்படம் பார்த்துவிட்டு திரும்பிவரும் வழியில் மழையில் அகப்பட்டுக்கொண்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக  ஏதோ ஒரு கடையோரம் ஒதுங்கி நின்று பேசிக்கொண்டே இருந்த அனுபவம்.  மழையில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்த அனுபவம். நண்பருடைய புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் மா.அரங்கநாதனுடன் சென்றுவிட்டு திரும்பும்போது நடுவழியில் மழையில் அகப்பட்டு தவித்த அனுபவம். ஒவ்வொன்றையும் யாரோ எழுதிய சிறுகதைகளை விவரிப்பதுபோல சுவாரசியமாக சொன்னார் விட்டல்ராவ். அவருடைய நினைவாற்றலை எண்ணி வியந்தவனாக அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அந்த உரையாடலின் தொடர்ச்சியாக ”மழையைப் பார்த்ததும் உங்களுக்கு நீங்கள் படித்த சிறுகதை ஏதாவது நினைவுக்கு வருகிறதா?” என்று கேட்டார்.  மழை என்றதுமே சட்டென எனக்கு ஜெயகாந்தன் எழுதிய அக்கினிப்பிரவேசம் சிறுகதை நினைவுக்கு வந்தது. அதில் பேருந்தைக் குறிப்பிடுவதற்காக அவர் கையாண்ட ‘டீசல் அநாகரிகம்’ என்னும் சொல்லும் நினைவுக்கு வந்தது. நான் அதை விட்டல்ராவிடம் சொன்னேன்.

“அந்த மழையை மறக்கவே முடியாது சார். ஒரு பொண்ணுடைய வாழ்க்கையையே அந்த மழை நாசமாக்கிடுது. ஊரு உலகத்துல இருக்கறவங்களுக்கு மழைங்கறது வாழ வைக்கிற தெய்வம். ஆனா அந்த சின்ன பொண்ணுக்கு அவளுடைய வாழ்க்கையையே அழிக்கிற தெய்வமாயிடுது. அதே சமயத்துல அவளுடைய அம்மாங்கற இன்னொரு பெண்மணி அவளுக்கு தைரியம் சொல்லி பரிகாரம் செய்யற தெய்வமா இருக்கறா. ஒருபக்கம் அழிவு. இன்னொரு பக்கம் ஆக்கம். அழிவுக்கும் ஆக்கத்துக்கும் நடுவுல ஒரு சாட்சியா இருக்குது மழை. அக்கினி பிரவேசம் தமிழ்ல எழுதப்பட்ட அற்புதமான கதைகள்ல ஒன்னு சார்”

நான் சொன்னதைக் கேட்டதும் விட்டல்ராவ் உற்சாகம் கொண்டவரனார். “அற்புதமான கதைக்கு நீங்கள் கொடுக்கிற விளக்கமும் அற்புதமா இருக்குது பாவண்ணன்” என்று என் கைகளைப் பிடித்து அழுத்தினார். தொடர்ந்து “நீங்க அழிவு, ஆக்கம்னு சொன்னதும் எனக்கும் மழையோடு சம்பந்தப்பட்ட மாதிரி சில கதைகள் ஞாபகத்துக்கு வருது” என்றார்.

“சொல்லுங்க சார். யாருடைய கதை?” என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

“அழிவுக்கு ஒரு கதை ஞாபகம் வருது. ஆக்கத்துக்கும் ஒரு கதை ஞாபகம் வருது” என்றார் விட்டல்ராவ். இரண்டு கதைகள் என்றதுமே எனக்கு வானத்தில் பறப்பதுபோல இருந்தது. “ரெண்டயுமே சொல்லுங்க சார்” என்று வேகமாகச் சொன்னேன்.

“முதல்ல அழிவைப் பற்றிய கதை. தலைப்பு ஞாபகத்துல இல்லை. ஆனா ஆன்டன் செகாவ் எழுதிய கதை. அது மட்டும் ஞாபகத்துல இருக்குது”

“சரி. சொல்லுங்க சார்”

“ஒரு கிராமத்துல ஒரு காதலனும் காதலியும் இருக்கறாங்க. அவுங்க ரெண்டு பெரும் திருமணம் செய்துக்கணும்னு ஆசைப்படறாங்க. ஆனா அந்த ஊருக்குள்ளயே தங்கி திருமணம் செய்துக்கறதுல ஏதோ ஒரு சங்கடம் இருக்குது. அதனால ரெண்டு பேரும் ஊர விட்டு வெளியேறி அசலூருக்குப் போய் திருமணம் செஞ்சிக்கணும்னு நெனைக்கறாங்க. பக்கத்துல ஏதோ ஒரு ஊருல ஒரு தேவாலயம் இருக்குது. ஒரு நாளும் நேரமும் குறிப்பிட்டு அந்த சமயத்துல அந்த தேவாலயத்துல சந்திச்சி, அங்கிருந்து ரெண்டு பேரும் வெளியூருக்கு போய் திருமணம் செஞ்சிக்கலாம்ன்னு பேசி வச்சிக்கிறாங்க”

“சரி”

“சந்திக்க திட்டமிட்டிருந்த நாள்ல திடீர்னு மழை பொழிய ஆரம்பிச்சிடுது. கடுமையான மழை. ரெண்டு அடி தொலைவுல நடக்கிற ஆள் யாருன்னு கூட தெரியாத அளவுக்கு மழை. புயல்காத்து. பனி. எல்லாம் ஒன்னா சேந்துக்குது. எப்படியோ அந்த பொண்ணு ஊர விட்டு பொறப்பட்டு அந்த தேவாலயத்துக்கு வந்து காத்திருக்கிறா. அவனும் அவனுடைய வீட்டுலிருந்து சரியான நேரத்துல பொறப்பட்டுடறான். புயல்காத்துலயும் மழையிலயும் அவனுக்கு வழி தடுமாறிடுது. அவன் போக வேண்டிய திசையை விட்டு வேற திசையை நோக்கி போயிடறான். அவன் போன தெசையில ஒரு தேவாலயம் இருக்குது. அதுதான் காதலி குறிப்பிட்ட தேவாலயம்னு நெனச்சி, அங்கயே காத்திருக்கான். ஆனா அவள் வரலை. வழிபாடு முடிஞ்சி எல்லாருமே கலைஞ்சி போயிடறாங்க. ஒருவேளை தன்னைப்போல மழையில எங்கயாவது சிக்கியிருக்கலாம், அதனால தாமதமாகுதோ என்னமோன்னு நெனச்சி, இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கலாம்னு காத்திருக்கிறான். மழை நிக்காம பொழியுது. இருட்டும் கவிஞ்சிடுது. இனிமேலும் காத்திருக்கிறதுல  அர்த்தமில்லைன்னு நெனச்சி, துக்கத்த கட்டுப்படுத்திகிட்டு அங்கிருந்து கெளம்பி போயிடறான். சரியான தேவாலயத்து வாசல்ல காத்திட்டிருந்த காதலியும் இருட்டின பிறகு மழைக்கும் காத்துக்கும் நடுவுல காத்திட்டிருக்கறதுல அர்த்தமில்லைன்னு நெனச்சி அவளும் மனபாரத்தோடு போயிடறா. ரெண்டு பேருக்குமே காதல் கைகூடலை. காதல் கைகூடாததற்கு மனிதர்கள் குறுக்கே புகுந்து தடுப்பதுதான் காரணம்னு ஊரு உலகத்துல சொல்றதுண்டு. ஆனா செகாவுடைய இந்தக் கதையில காதலுக்கு தடையா இருப்பது மனிதர்கள் கிடையாது. துரதிருஷ்ட வசமா பெஞ்ச மழை.”

கதையும் அவர் விவரித்த பாணியும் அருமையாக இருந்தது.  ”ரொம்ப நல்ல கதை சார்” என்றேன். பிறகு “இன்னொரு கதை யாருடைய கதை சார்?” என்று ஆவலுடன் கேட்டேன்.

“அதுவா? அது ஆக்கம் தொடர்பான கதை. ஓ ஹென்றி எழுதிய கதை. கதையுடைய தலைப்பு கடைசி இலை”

கடைசி இலை என்று சொன்னதுமே எனக்கு அந்தக் கதை நினைவுக்கு வந்துவிட்டது. எங்கள் பள்ளிக்காலத்தில் அந்தக் கதை எங்களுக்குப் பாடமாக இருந்தது. ஆயினும் விட்டல்ராவின் விவரணையைக் காதுகொடுத்துக் கேட்கும் ஆர்வத்தில் ஏற்கனவே எனக்குத் தெரிந்த கதை என்பதை வெளிக்காட்டிவிடாதபடி அமைதியாக அவரைப் பார்த்து “சொல்லுங்க சார்” என்றேன்.

“அந்தக் கதையில முக்கியமான ஒரு பாத்திரம் ஒரு கிழவன். அவன் ஒரு ஓவியன். நல்ல குடிகாரன். ஓவியம் தீட்டி விற்பனை செய்றதுதான் அவனுடைய தொழில். ஆனால் தன் வாழ்க்கையில அதுவரைக்கும் ஒரே ஒரு மகத்தான ஓவியம் கூட வரையலையேன்னு ஒரு மனக்குறை அவனுக்குள்ள இருக்குது. உலக மகத்துவமான ஓவியங்கள் வரிசையில தன்னுடைய ஒரு ஓவியமும் இருக்கணும்ன்னு ஆசைப் படறான். ஆனா அது கைகூடலையேங்கறதுதான் அவனுடைய துக்கம்”

“சரி.”

“அவன் வாடகைக்கு குடியிருக்கிற வீட்டுல மாடியில ரெண்டு பொண்ணுங்க குடியிருக்கிறாங்க. அவங்களும் ஓவியக்கலைஞர்கள்தான். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு கலைக்கூடம் நடத்தறாங்க. அப்பதான் மழைக்காலம் ஆரம்பிக்குது. நாள் முழுக்க மழை. பனி. காத்து. ஒரு பொண்ணுக்கு திடீர்னு காய்ச்சலடிக்குது. அவளுடைய தோழி அவளுக்கு என்னென்னமோ மருத்துவம் செய்யறா. ஆனா எதுவும் பலிக்கலை. நாளுக்கு நாள் அவள் ஆரோக்கியம் குறைஞ்சிகிட்டே வருது. அதைப் பார்த்த தோழிக்கு கவலையா இருக்குது. அவளுடைய மனம் சோர்ந்துவிடாதபடி பக்கத்துலயே உக்காந்து எதைஎதையோ சுவாரசியமா பேசிட்டே இருக்கிறா.”

“நோயாளிகளோடு பேசறதுகூட ஒருவித வைத்தியம்தான சார்?”

“ஆமாமாம். அதைத்தான் அவ செய்றா. நோயாளியுடைய படுக்கை ஒரு ஜன்னலோரமா இருக்குது. அதன் வழியா பாக்கிறமாதிரி எதிர்வீட்டு சுவர்ல ஒரு கொடி தொங்குது. எங்கயோ மரத்தோடு ஒட்டியிருந்த கொடியின் நுனிப்பகுதி அது. அவள் அந்தக் கொடியையே பார்த்துட்டிருக்கா. பனிக்காத்துல அந்தக் கொடியிலிருந்து இலைகள் ஒன்னொன்னா உதிர்ந்துகிட்டெ இருக்குது.  அவ மனசுல திடீர்னு ஒரு எதிர்மறை எண்ணம் தோணுது. கொடியிலிருக்கிற இலைகள் எல்லாம் உதிர்ந்துபோகிற சமயத்துல அவளுடைய உயிரும் போயிடும்னு நெனைக்கிறா. அந்த எதிர்மறை எண்ணம் ஆழமா அவளுக்குள்ள பதிஞ்சிடுது. தன் தோழிகிட்டயும் அதை சொல்றா. அவளுடைய மனச திசைதிருப்பறதுக்காக வேற விஷயத்தை பத்தி பேச தொடங்கறா. அவளுக்கு முன்னால படம் வரையிறா. ஒருநாள் அவள் ஓவியம் தீட்டறதுக்கு ஒரு மாடல் தேவைப்படுது. அப்ப கீழ் வீட்டுல இருக்கிற கிழவனையே மாடலையே நிக்கவச்சி ஓவியத்த தீட்டறா. அப்ப தன்னுடைய தோழியுடைய கதையையெல்லாம் அந்த கிழவன்கிட்ட அவள் சொல்றா.”

“சரி.”

“மறுநாள் கடுமையான மழை. காற்று. அந்தக் கொடியில இருந்த இலைகளெல்லாம் உதிர்ந்திடுது. ஒரே ஒரு இலை மட்டும் காத்துல ஆடி நடுங்கிகிட்டே இருக்குது. அது விழற சமயத்துல என் உயிரும் போயிடும்னு சொல்றா நோயாளிப்பொண்ணு. உடனே அந்தத் தோழி அவள சமாதானப் படுத்தறா. எழுந்து போய் ஜன்னல் கதவைச் சாத்திடறா. ராத்திரி முழுக்க மழை விடவே இல்லை. அடுத்தநாள் காலையிலதான் விட்டுது. மழைதான் விட்டுட்டுதே, கதவைத் திறன்னு சொல்றா அவள். தோழிக்கு வேற வழி தெரியலை. பயந்துகிட்டே கதவை திறக்கிறா.  ஆச்சரியப்படற மாதிரி அந்த ஒத்தை இலை அப்படியே இருக்குது. அத பார்த்ததும் அவளுக்குள்ள ஒரு சக்தி பிறந்தமாதிரி இருக்குது. பழைய எதிர்மறை எண்ணம் ஓடியே போயிடுது. நான் பிழைச்சிக்குவேன்னு நெனைக்கிறா. அன்னைக்கு முழுக்க அந்த இலையை பார்த்துட்டே இருக்கிறா. மறுநாள் காலையிலயும் பார்க்கிறா. அவள் உடம்பு கொஞ்சம்கொஞ்சமா குணமடைய ஆரம்பிச்சிடுது. அதேபோல சீக்கிரமா பொழைச்சிக்கிறா”

“எண்ணங்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்குது சார்”

“உண்மைதான். ஆனா அந்த எண்ணம் சாதாரணமா அவளுக்கு ஏற்படலை. அதுக்குப் பின்னால ஒரு தியாகமே இருக்குது”

“தியாகமா?”

“ஆமாம். மாடலா போய் நிக்கிற அந்த ஓவியர் தாத்தா அந்த தோழியுடைய கதையைக் கேக்கறார் இல்லையா, அன்னைய ராத்திரிதான் கடுமையான மழை பொழியுது. உண்மைய சொல்லணும்ன்னா அந்த மழையில அந்த கடைசி இலை கீழ விழுந்துடுது. அந்த ஓவியர் ராத்திரி நேரத்துல யாருக்கும் தெரியாம, அந்த சுவருக்கு பக்கத்துல போய் அந்த இலைய ஓவியமா வரைஞ்சி வைக்கிறார். உண்மையான இலை போலவே தத்ரூபமா அந்த ஓவிய இலை அமைஞ்சிடுது. விடியவிடிய உக்காந்து வரைஞ்சிட்டு வீட்டுக்கு வந்துடறாரு அந்த ஓவியர்”

“ஓ. அவர் செஞ்ச வேலையா அது?”

“ஆமா. அன்னைக்கு ராத்திரி முழுக்க மழையில நனைஞ்சதால அவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்து இறந்து போயிடறாரு. தன்னுடைய பெயர் சொல்றமாதிரி வாழ்க்கையில மகத்தான ஒரு ஓவியத்தைக்கூட வரையலையேன்னும் காலமெல்லாம் மனவருத்தத்துலயே இருந்த அவர் கடைசி காலத்துல வரைஞ்ச அந்த ஒற்றை இலைதான் மகத்தான ஓவியமா அமைஞ்சிடுது. மழையாலயும் அழிக்கமுடியாத மகத்தான ஓவியம்”

“ரெண்டுமே அருமையான கதைகள் சார்” என்றேன்.

இன்னும் மழை விடவில்லை. ஏதோ ஒரு பெரிய கதையை அது தன் ஓங்கிய குரலால் எங்களிடம் சொல்வதுபோல இருந்தது.

“கதைகளைப்போலவே எனக்கு ரெண்டுமூனு பாடல்கூட நினைவுக்கு வருது பாவண்ணன்” என்றார் விட்டல்ராவ்.

“பாட்டா? என்ன பாட்டு சார்? திரைப்படப்பாட்டா?”

“இல்லை இல்லை. சிறுவர் பாட்டு. ஓமலூருல ஒரு ஸ்கூல்லதான் நான் லோயர் கிளாஸ்லாம்  படிச்சேன்னு சொல்வேனில்லையா? அப்ப எங்க டீச்சர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாட்டு”

அதைக் கேட்டதும் எனக்குள் உற்சாகம் பொங்கியது. ”ஓ. சின்ன வயசுப் பாட்டா? சொல்லுங்க சார், சொல்லுங்க” என்று நான் அவரை உற்சாகப்படுத்தத் தொடங்கினேன்.

“நாங்க கிளாஸ் ரூம்ல இருக்கும்போது இப்படித்தான் அடிக்கடி மழை வந்துடும். எங்க டீச்சர் உடனே பாடத்த நிறுத்திட்டு மழைய வேடிக்கை பார்க்க சொல்வாங்க. ஒருஒரு வரியா ஒரு பாட்ட பாடுவாங்க. நாங்க ஒரே சத்தமா அத சந்தோஷமா கையை தட்டிகிட்டே திருப்பிப் பாடுவோம்.”

“என்ன பாட்டு?”

விட்டல்ராவ் ஒருகணம் தன் நினைவைத் திரட்டிக்கொண்டு அந்த வரிகளை பாடலாகவே பாடிக் காட்டினார். 

     மஞ்சள் வெயில் அடிக்குதாம்

மழையும் கொஞ்சம் பெய்யுதாம்

கிங்கிணி கிங்கிணி

கிணி கிணி கிணி கிணி

சிங்கராஜா மகனுக்கு

தங்கராணி மனைவியாம்

கிங்கிணி கிங்கிணி

கிணி கிணி கிணி கிணி

அவருடைய முகமும் குரலும் ஆறேழு வயது சிறுவனுக்குரியதாக மாறிவிட்டது.

“அந்த டீச்சர் ரொம்ப அருமையான டீச்சர். குழந்தைகளோடு குழந்தையா நின்னு அவுங்களும் மழைய ரசிச்சி பார்ப்பாங்க”

அவர் நினைவு அக்கணமே அந்த டீச்சரைப் பின்தொடர்ந்து போய்விட்டதை உணர்ந்தேன். ”மழை பாட்டு மட்டுமில்லை. இன்னும் ரெண்டுமூனு பாட்டு கூட நினைவுக்கு வருது” என்றார். பிறகு அவராக தன் நினைவைத் துழாவி ஒவ்வொரு வரியாகச் சொல்லி இணைத்து பாடலாக்கிவிட்டார். பிறகு மொத்தமாக இணைத்து ஒருமுறை அந்தப் பாடலைப் பாடினார்.

ஏட்டு பூட்டு கோட்டுடன்

காட்டு குரங்கு ஆடுதாம்

லட்டு பூந்தி வடைகளை

புட்டு புட்டு தின்னலாம்

விஷாலுக்கும் கொடுக்கலாம்

குஷாலாக குதிக்கலாம்

ராகமாகப் பாடிய அந்தப் பாடலைக் கேட்டதும் என்னை அறியாமல் கைதட்டி ஆரவாரம் செய்தேன்.

“இந்த பாட்ட சொல்லிக்குடுக்கும்போது எங்க டீச்சர் என்ன செய்வாங்க தெரியுமா? விஷாலுக்கு சொல்லிக்குடுக்கும்போது விஷாலுக்கும் கொடுக்கலாம்னு சொல்வாங்க. என்கிட்ட வந்து சொல்லிக்குடுக்கும்போது விட்டலுக்கும் கொடுக்கலாம்னு சொல்வாங்க. அத கேக்கற பையனுக்கு அப்படியே வானத்துல பறக்கிறமாதிரி இருக்கும்”

நான் மெளனமாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். “இன்னொரு பாட்டுகூட நினைவுக்கு வருது. இது படகு ஓட்டறவங்க பாடற மாதிரியான பாட்டு. ரொம்ப ராகமா பாடுவாங்க” என்று அந்த ராகத்தோடு பாடிக் காட்டினார்.

தங்கையே தங்கம்மா என் படகு ஐலசா

அதோ அங்கே போகுது பார் ஐலசா

பாக்குமரத்தாலே என் படகு ஐலசா

பாங்காகப் போகுதுபார் ஐலசா

தேக்குமரத்தாலே என் படகு ஐலசா

தெற்குத்திசையில் போகுதுபார் ஐலசா

பாடிமுடித்துவிட்டு, ஒருசில கணங்கள் கண்களை மூடியபடி இருந்தார். ஒருவேளை அந்தப் பள்ளிக்கூடக் காட்சியையே அவர் தன் மனத்துக்குள் பார்த்துக்கொண்டிருக்கக்கூடும் என நினைத்து அமைதியாக இருந்தேன்.

புன்னகையோடு கண்களைத் திறந்த விட்டல்ராவ் ”உங்க ஸ்கூல்  உங்க டீச்சர் பாடிக் காட்டியிருக்காங்களா? ஏதாவது ஞாபகம் இருக்குதா?” என்று கேட்டார்.  எனக்கு உடனே எங்கள் பானுமதி டீச்சர் நினைவுக்கு வந்துவிட்டார். “பானுமதின்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவுங்கதான் நிறைய பாட்டு கதைலாம் சொல்வாங்க” என்றேன். அதைச் சொன்னதுமே “ஏதாவது ஒரு பாட்டு ஞாபகமிருக்குதா? இருந்தா சொல்லுங்க” என்று என் முகத்தையே பார்த்தார் விட்டல்ராவ். 

“பாட்டு…  பாட்டு…” என்று கூச்சத்தோடு முணுமுணுத்தபடி என் நினைவு அடுக்கைக் கலைத்துத் துழாவினேன்.

”பேயுதம்மா பேயுதம்மா

பேய்மழைதான் பேயுதம்மா

ஊசிபோல மின்னிமின்னி

ஊரெல்லாம் பேயுதம்மா

பாசிபோல மின்னிமின்னி

பட்டணமெல்லாம் பேயுதம்மா

மாரியாத்தா கிருபையாலே

மண்ணெல்லாம் பேயுதம்மா

காளியாத்தா கிருபையாலே

காடெல்லாம் பேயுதம்மா”

பாடி முடித்த தருணத்தில் நாங்கள் படித்த மூன்றாம் வகுப்பு அறையின் காட்சியும் ஜன்னல் வழியாக மழையைக் காட்டி பானுமதி டீச்சர் பாடிக் காட்டிய காட்சியும் சித்திரங்களாக எழுந்தன.

விட்டல்ராவ் புன்னகையுடன் என் தோளைத் தொட்டு தட்டிக்கொடுத்தார். “அருமையா இருக்குது பாவண்ணன். வேற ஏதாவது பாட்டு இருக்குதா?” என்று தூண்டினார். அவர் தூண்டிய தருணத்தில் இன்னொரு வேடிக்கைப் பாட்டும் நினைவுக்கு வந்தது. “இது டீச்சர் சொல்லிக் குடுத்த பாட்டு இல்ல சார். வேடிக்கை பாட்டு. பசங்களுக்குள்ளயே  பாடிக்கிற பாட்டு” என்றேன்.

“எதுவா இருந்தா என்ன? சொல்லுங்க, சொல்லுங்க” என்றார் விட்டல்ராவ்.

நான் மனசுக்குள்ளேயே எல்லா வரிகளையும் திரட்டிக்கொண்டு ஒருமுறை சொல்லிப் பார்த்து பழகினேன். பிறகு வாய்விட்டு  பாடிக் காட்டினேன்.

”மழைவருது மழைவருது

நெல்லை அள்ளுங்க

முக்காப்படி அரிசி போட்டு

முறுக்கு சுடுங்க

ஏரோட்டும் மாமனுக்கு

எண்ணி வையுங்க

சும்மா இருக்கிற மாமனுக்கு

சூடு வையுங்க”

ஆனந்தத்தில் விட்டல்ராவ் கைதட்டியபடி புன்னகைத்தார். நாங்கள் இருவருமே சிறுவர்கள் போல மழையை வேடிக்கை பார்த்தபடி மீண்டும் பேசத் தொடங்கினோம்.

                         ( பேசும் புதிய சக்தி – செப்டம்பர் – 2023 )