Home

Sunday, 8 October 2023

வெளிச்சம் - சிறுகதை


‘தமிழ்தான தம்பி நீங்க . . .’

‘ரொம்ப நல்லதா போச்சி. நாப்பத்தஞ்சி வருஷமா இந்த ஊர்ல இருக்கம். இன்னம் இந்த கன்னட பாஷ  நாக்குல படியல. அடிவயித்லேந்து மூச்சுக் கட்டிப் பேச ரொம்ப சிரமம். அப்டி இப்டி கடகண்ணிக்கு போனா ரெண்டு வார்த்த பேசுவன். அவ்ளோதான் தெரியும். தொடச்சியா தமிழ் மாதிரி வராது. அதனாலயே எங்க போனாலும் தமிழ்ல பேச ஆரம்பிச்சிடுவன். ஆனா கன்னடத்தில யாரு பேசனாலும் பூரா புரிஞ்சுக்குவன்.’

‘இன்னா வயசிருக்கும் தம்பி ஒங்களுக்கு? ஒரு இருவது இருவத்தஞ்சி இருக்குமா, அதான் இருக்கும். மூஞ்சியப் பாத்தா தெரியுதே, நானும் இந்த ஹோஸ்பெட் வரும் போது அதான் வயசு. அப்ப வந்தவன்தா. இன்னிய தேதி வரிக்கும் இங்கியே கதின்னு ஆய்டுச்சு . . .’

‘என்னா கேட்டிங்க. ஏன் வந்தன்னா கேட்டிங்க. நல்ல கேள்விதா போங்க. நம்மள மாதிரி ஆளுங்க பான நெறயா வச்சிக்னு கொழுப்பெடுத்துப் போயா ஊர் சுத்த முடியும். எல்லாம் இல்லாத கொடுமதா. சொந்த ஊர்ல சோத்துக்கு வழியில்லை, எங்கனா நாலு காசி கெடைக்காதான்னு வந்ததுதான். இப்படியே இருந்தாச்சி . . .’

‘ஊர்ல பொரட்ட முடியாத காசியான்னு கேக்கறிங்களா? இன்னாத்த சொல்றது தம்பி. அப்பல்லாம் ஒரு பொத்த காசிய பாக்குறதுன்னாகூட  பொதயலயே பாக்ற மாதிரி. ஒரு மாசம் வெறும் வெங்காயத்த வதக்கி வதக்கி தின்னிருக்கன். வதக்கறதுக்குகூட எண்ண இல்லாம நெருப்புல காட்டி வதக்கிட்டு தின்னிருக்கன், அவ்ளோ பஞ்சம் சோத்துக்கு. அதுகூட இல்லாத சமயம் சோளத்தவுட்ட தின்னன். எதுவுமே இல்லாதப்போ கழனில எலி புடிச்சி சுட்டு தின்னன்.’

‘எலின்னதும் மூஞ்சிய சுளிக்கறிங்களே தம்பி. அப்ப பசில எனக்கு ஒன்னும் தெரில, வயித்த முறுக்கி கொடல புழியற மாதிரி பசி ஒரு சொழட்டு சொழட்டிப் போடும்போது எதக் குடுத்தாலும் துன்னலாம்கற நெலம. ஆனா எலி துன்னவன்ல நாலு பேரு நாலஞ்சி நாள்ல வயிறு வீங்கி காலரா வந்து செத்துட்டான். ஊர்ல ஒரே பீதி. ஊரே வேணாம்னு நானும் தம்பியும் அம்மாகூட மூட்டமுடிச்ச கட்டிக்கிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடியாந்துட்டம், ஸ்டேஷனுக்கு ஓடியாந்தட்டமே தவிர எங்க போறதுன்னு தெரியல. அங்கயே ரெண்டுநாள் பட்டினியா படுத்துக் கெடந்தம். அம்மாவப் பெத்த ஆயா ஊரு திருணாமலைல இருந்திச்சி. அங்கெல்லாம் போய் ஒண்டக்கூடாதுன்னு அம்மாவுக்கு ஒரு வைராக்கியம். அதனாலதான் ஸ்டேஷன்லயே ரெண்டு நாளு வெறும் தண்ணிய குடிச்சிட்டு கெடந்தம். பசி ஏறஏற ஒன்னும் தாள முடியல, ரோஷம் மானம் பாக்காம கௌம்பிப் போனம் . . .’

‘போய் வாசல்ல எறங்கறம் தம்பி, எங்க அம்மாவுக்கு அண்ணிக்காரி கேட்டா பாரு ஒரு கேள்வி ஏன்டா வந்தம்னு ஆய்டுச்சி. அப்படியே நாக்கெ புடிச்சி இழுத்துக்னு செத்ரலாம்னு தோணிச்சி. அப்படி இன்னா கேள்வின்னு கேக்கறிங்களா? சோத்துக்காடி வந்திங்க பிச்சக்கார கழுதங்களா. ஓசிச் சோத்தத் துன்றதுக்கு பதிலா பீயத் துன்னுங்களேன்டின்னா தம்பி. அப்டியே கழுத்துல கத்திவச்சி அறுத்த மாதிரி இருந்திச்சி எனக்கு. எங்கம்மாக்காரி அழுவறா. ஆயாக்காரி அதுக்குமேல அழுவறா. ஒங்களுக்கு ஆக்கிப்போட நா ஒன்னும் வேலைக்காரியில்லேன்னு போய்ப் படுத்துக்கினா கேள்வி கேட்டவ. ராத்திரி எங்க மாமா வர வரிக்கும் நாங்க திண்ணையிலேய ஒக்காந்திருந்தோம். வந்ததும் பெரிய சண்ட. அதுக்கப்புறம் போயி சோறாக்கிப் போட்டா அந்த மகராசி.’

மக்காநாளு கொல்லிக்குப் போவும்போது கும்பல் கும்பலா ஆளுங்க பேசிக்னு இருந்தாங்க. இன்னான்னு போய் கேட்டன். இந்த மாதிரி துங்கபத்ராங்கற நதிகிட்ட அணக்கட்டு கட்றாங்களாம். எத்தினி ஆயிரம்பேரு போனாலும் வேல கெடைக்கும். எப்டியும் பத்து பாஞ்சி வருசம் தாங்கும்னாங்க. வெறும் துங்பத்ரான்னா நமக்கு இன்னா எழவு தெரியும்?  இன்னா ஊர்னு கேட்டன். கர்நாடகாவுல ஹோஸ்பெட்னாங்க. கர்நாடகாங்கற பேரெல்லாம் அப்ப ஏது? எல்லாம் மெட்ராஸ் ராஜதானிதான தம்பி, அப்பயே முடிவு பண்ணிட்டன் வண்டி ஏறிடுறதுன்னு. க்வாரி ரங்கசாமின்னு ஒர்த்தன்தா ஆள் அமத்தறான்னு தெரிஞ்சிது. போயிபார்த்தன். ராவண்டிக்கே வந்துடு போவலாம்னான். வந்து, அம்மாகிட்ட சொன்னா ஓன்னு அழுவுது. மலயத் தாண்டக் கூடாது ஆத்தத் தாண்டக் கூடாதுன்னு ஒரே சத்தம். அழுக. ராவண்டி போயிடுச்சி. ஆத்ரத்ல அம்மாவுக்கும் எனக்கும் வெடியவெடிய சண்ட. இங்க இன்னா பரம்பர சொத்து கொள்ளைல போவுதுன்னா இருக்க ஆசப் படறன்னு ஒரு வார்த்த கேட்டன். அதுக்கும் மசியல அம்மாக்காரி. புள்ளைங்க ஓணும்னா எங்கூட வா, இல்ல இந்த எச்சச் சோறு ஈனச் சோறு துன்னுட்டு இங்கயே இருக்கணும்னா இரு. நாங்க போறம்னு தம்பிய என்பக்கம் இழுத்துக்னன். ரொம்ப நேரம் அழுது அழுது அப்பறமா ஒத்துக்கிச்சி அம்மா . . .’

‘ஒருவழியா ரயிலேற கௌம்பனம். டிக்கட்டுக்கு காசி இல்ல தம்பி. மொத நாளா இருந்தா ரங்கசாமியே இட்டும் போய்ருப்பான். இப்ப திக்கும் தெரியல தெசையும் தெரியல. மூட்ட முடிச்ச அவுத்து பித்தள சாமானல்லாம் எடுத்தும் போயி அம்மா வித்துட்டு காசி எடுத்தாந்திச்சி. டிக்கட் கேட்டா அந்த காசிக்கு குண்டக்கல்வரிக்கும்தா வரும்னுட்டான். சரி நடக்கறது நடக்கட்டும்ன்னு ஒரு குருட்டு தைரியம். முன்வச்ச கால பின்வாங்கக் கூடாதுன்னு ஒரு திமிரு. டிக்கட் வாங்கி ஒக்காந்துட்டம்.

‘குண்டக்கல் வந்ததும் இன்னாச்சின்னு கேக்றீங்களா. கேளுங்க மிச்சக் கதய. எறங்கி எங்கனாச்சும் தெரிஞ்ச மூஞ்சி தெரியாதான்னு சுத்தி சுத்தி பாக்கறன். ஒர்த்தரயும் காணம். ஹோஸ்பெட் ரயில் அடுத்த பிளாட்பாரத்துல போவுதுன்னாங்க. டிக்கெட் இல்லாம ஒக்கார மனசு கேக்கல. வயிறு நெறய தண்ணி குடிச்சுட்டு வண்டி பின்னாலேயே மூணுபேரும் ரயில் ரோட்டு மேலேயே நடந்தம் தம்பி.

‘ஒரு பத்து மைல் இருக்கும். அதுக்கு மேல நடக்க முடியாதுனு அம்மா ஒக்காந்திடுச்சி, கண்ணு மேலே சொருகிக்கிச்சு. சரி. அம்மா கத முடிஞ்சிடுச்சின்னு நெனச்சிட்டேன்.

‘அந்த நேரத்துல கௌடா ஒர்த்தன் அங்க வந்தான். தம்பி, இப்ப நெனச்சாலும் கண்ணு கலங்குதுப்பா. இன்னம் இந்த பூமியில மழ பெய்துன்னா அந்த மாதிரி ஆளுங்க இருக்கறதனாலதா. கிட்டவந்து இன்னான்னு கேட்டான். அவன் கன்னடத்துல கேக்கறான். நானு தமிழ்ல சொல்றன்.  பசிக்கு எந்த பாஷை வித்தியாசம். கௌடா புரிஞ்சிக்னான். அப்படியே ஒக்காரச் சொல்லிட்டு ஓடிப்போய் எங்கேர்ந்தோ சோள ரொட்டியும் தயிரும் கொண்டாந்தான். அத தின்னு தண்ணிய குடிச்சப்பறம்தான் உயிரே வந்திச்சி. அப்பறம்தா எங்கே போறிங்கன்னு மேக்கொண்டு கேட்டான். சொன்னன். எதுக்கு நடந்து போறிங்கன்னான். நா காசி இல்லன்னதும் அவனுக்குக் கண்ணு கலங்கிடுச்சி. கிட்ட வந்து முதுவுல தட்டி குடுத்தான். மெதுவா நடத்தி இட்டாந்து அடுத்த ஸ்டேசன்ல எங்க மூணு பேருக்கும் அவனே டிக்கெட் எடுத்துக்குடுத்து கைல ஒரு ரூபா செலவுக்கு குடுத்துட்டு வண்டி ஏத்திட்டுப் போனான். அந்த கௌடா புண்ணியத்ல ஒருவழியா ஹோஸ்பெட் வந்து சேந்தம் . . .’

‘இப்ப அணக்கட்டு இருக்குதே அதுக்கு மல்லாப்புரம்னு பேரு அப்ப. சுத்தி இருபத்தெட்டு கிராமம். எல்லாம் அழிஞ்சிதா அணையாய்டுச்சி. இந்த பக்கம் ஒரு மல. அந்த பக்கம் ஒரு மல. ஒரு மைல் தள்ளி இன்னொரு மல. அத ஒடச்சி இத நெரப்பணும். கல் ஒடைக்கிற ஜனம் ஆய்ரத்துக்கு இருக்கும். பெரிய பெரிய கல்ல ஒடச்சி கயித்துல கட்டி மூங்கில் கழிய குறுக்குல குடுத்து ஆளுங்க தூக்கிம் போவாங்க பாரு தம்பி. பாத்தா நம்ம முழியே பிதுங்கிடும். தோள்பட்ட எறங்கிடும். அவ்ளோ பெரிய சொமய தூக்கிகினு ஏறும் போது வழுக்கி உழுந்தா அவ்ளோதா. பொணமாத்தா எடுக்கணும். ஒன்னும் கேக்கமுடியாது. போய்க்னே இருக்க வேண்டிதுதா . . .’

‘இன்னா சொன்ன தம்பி கேட்டா? இன்னாயிடும்ன்னா. இன்னாத்த கேக்கறது சொல்லு. கேட்டா ஊட்டுக்கு அனுச்சிருவானோங்கற பயம்தா, ஊருக்குப் போனா மறுபடியும் வெங்காயம் வதக்கித் துன்னனுமேங்கற பயம்தா வேறென்ன. இதுக்கு சொல்றியே. ‘அணக்கட்டு கடக்காலு நூத்தி இருபது அடி கீழ வேல செஞ்சிக்னிருப்பாங்க. ஆளு, ஒர்த்தன் ரெண்டு பேரு இல்ல. நூத்துக்கணக்கா. அப்டியே மேலேந்து சரிஞ்சி உழும். செத்தவனுக்கு கணக்கே இல்ல. கெடைக்கறவரிக்கும் எடுத்து வெளிய போட்டுட்டு மீதிய அங்கயே மண்ண தள்ளி மூடிட்டு வேலய ஆரம்பிச்சிடுவம்.’

‘நா இன்னா வேல செஞ்சன்னு கேக்கறிங்களா. டிக்கரு. மண்ணு தோண்டறவேல. காலங்காத்தால கடப்பாற மமிட்டி எடுத்துக் குடுத்தான்னா ஒரு பொம்பள, ஆள ஜோடியா வச்சிக்னு ஒரு நாளக்கி, அம்பது ஸ்கொயர்பிட் கணக்கு காட்டணும். கல்லு வந்தாலும் சரி மண்ணு வந்தாலும் சரி கணக்கு சரியா இருக்கனும். இல்லன்னா சம்பளம் கெடையாது. அன்னியோட சீட்டும் கிழிஞ்சிடும். சாயங்காலம் கையல்லாம் ரத்தம் கட்டிக்கும்.  தோல் பிஞ்சி எரியும். ஒரே கொப்பளமாய்டும். கழுவக்கூட தண்ணில கை வைக்க முடியாது. அப்டியே மொளகாத்தூளு கண்லபட்ட மாதிரி எரியும். எரிச்சல பாத்தா நடக்குமா. மூணு பேரு சாப்ட்டாவணுமே. எப்டியோ சகிச்சிக்கினேன் . . .’

‘வேல செஞ்ச ஆளுங்க நாலாய்ரம் இருக்கும் பாரு தம்பி. இது தமிழ்க்காரங்க மாத்தரம். இது இல்லாம நெறயா வைஜாக்காரங்க இருந்தாங்க. பர்மாலேந்து வந்தவங்களும் இருந்தாங்க. இரும்பு வேலைங்கள்ளாம் மலயாளத்துக்காரங்க செஞ்சாங்க . . .’

‘இந்த ஊர்க்காரன் இன்னா செஞ்சான்னு கேக்கிறிங்களா. வாஸ்தவமான கேள்வி. இப்பிடி கஷ்டமான வேலக்கி இந்த ஜனங்க தயாரா இல்ல தம்பி. அப்ப ரெண்டு மூணு சுகர் பேக்டரிங்க ஓடிச்சி இங்க. அதுல மொடங்கிட்டாங்க. அதுவுமில்லாம அவுங்களுக்கும் நெலபொலம் வேற. அணக்கட்டே ஊர தண்ணில முழுகடிக்கற வெவகாரம்னு வெறுப்பு வேற. அதுதான் ஒதுங்கியே இருந்தாங்க . . .’

நாங்க எங்க இருந்தம்னு சொல்லணுமா . . . எல்லார்க்கும் குடிசதா. பன்னிக் குடிச மாதிரி சின்னச் சின்னதா இருக்கும். கௌர்மென்ட்டே கட்டிக் குடுத்திச்சு. கல்லு ஒடைக்கறவன்லாம் ட்ரஸ்ஸிங் கேம்ப். என்னமாதிரி லேபர்ஸ்ங்களுக்கு நிசானி கேம்ப். வங்க்கா கேம்ப். ஒரு குடிசைல பத்துபேரு இருக்கணும். அக்கா தங்கச்சி ஆம்படையான் பொண்டாட்டி எந்த வித்தியாசமும் இல்லை. அப்படியே கால்மாடு தலமாடு தெரியாம படுத்துக் கெடக்க வேண்டிதுதா. வெயில்ல பரவா இல்ல. மழ வந்தா கஷ்டம். அப்படியே தொரதொரண்ணு ஊத்தும். அப்படியே முட்டிக்கால கட்டிக்னு செவுத்தோட செவுத்தா ஒட்டிக்குவம். தூக்கமே இருக்காது. வெடிஞ்சா அப்படியே, ஏந்து வேலக்கி போய்டணும். நெறயா பேருக்கு காலரா, அம்ம, ப்ளேக்னு வந்திருச்சி. எவ்வளவோ பேரு செத்தாங்க - ஆஸ்பத்திரியாவது மண்ணாவது. ஒரு பெரிய கொட்டா கட்டி அதுலதா எல்லாரயும் வச்சிருப்பாங்க. ஹோஸ் பெட்லந்து டாக்டர் வந்து பாப்பாரு. ஊசி மருந்து குடுப்பாரு. அதுலயும் பொழச்சது பாதி செத்தது பாதி.’

‘அப்பதாங்க சொதந்தரம் கெடைச்சிது. சொதந்தரம்னா அர்த்தம் தெரியுமான்னு கேக்றிங்களா, அப்ப நெஜம்மா அதெல்லாம் தெரியாதுங்க. கும்பலா கூட்டி முட்டாய் குடுத்து கொடியேத்தி இன்னிக்கு சொதந்திரம். வேல கெடையாது. லீவ்ன்னுட்டாங்க, அதான் தெரியும். காந்தி நேரு பத்தி தெரியுமான்னு கேக்கிறீங்களா. காந்தி பத்தி அப்ப எதுவும் தெரியாதுங்க. பின்னால சுட்டாங்க பாருங்க. அப்பதா தெரியும்.   நேரு மாத்தரம் தெரியும். அணக்கட்ட பாக்க எலிகாப்டர்ல வரார்னு சொல்லி அப்பவும் வேலையெல்லாம் நிறுத்தி மீட்டிங்லாம் போட்டாங்க. அப்பகூட ரொம்ப தூரமா நின்னு பார்த்ததுதா. சரியா தெரியல . . .’

‘அணக்கட்டுல மொத்தம் முப்பத்திரெண்டு கேட்டு. அதுல பதனாறு இந்தியாக்காரன் கட்ணும். மிச்சம் பதனாறு நிஜாம்காரன் கட்டணும்னு ஒரு ஒப்பந்தம். அப்டிதா நடந்திச்சி கொஞ்ச காலம். இன்னான்னு தெரியல ஒருநாளு திடீர்னு கலாட்டா. வேலய ரொம்ப நாளு நிறுத்திட்டாங்க. நிஜாம் பக்கத்லதா அரிசி கெடைக்கும். எங்களுக்கு இங்க கோதும குடுப்பாங்க. அங்க எடுத்தும் போயி கோதுமய குடுத்துட்டு அரிசி வாங்கியாருவம். போவக் கூடாது சண்டன்னு எங்களயெல்லாம் தடுத்துட்டாங்க. திடீர்னு பாத்தா ஆர்மி ஆளுங்க வந்து எறங்கறாங்க மூணு ராத்திரி மூணு பகல் சண்ட. ராஜாங்க எங்க இருக்கறாங்களோ அங்கல்லாம் ஆர்மி சண்ட போடுதுன்னு பேசிக்றாங்க, ஒரே வெடிச் சத்தம். அணக்கட்டுக்கு அந்த பக்கம்தா முனிராபாத். அங்கதா சண்ட. மாத்தி மாத்தி குண்டு போட்டாங்க. ஒரு ராத்திரில இந்தியா ஆர்மி அவுங்க எடத்த புடுங்கிடுச்சி. ஆர்மிகாரன் கலாட்டா அடங்கறதுக்கு ரொம்ப காலமாய்டுச்சி. அப்றம்தா வேலய ஆரம்பிச்சாங்க.’

‘அஞ்சி வருஷமோ ஆறு வருஷமோ ஆய்டுச்சி. அணக்கட்டு மெதுவா பூமி லெவலைத் தாண்டி மேல ஆரம்பிச்சாச்சி. தண்ணி வந்தா போவ நடுவுல வழி உட்டுட்டு அந்தப் பக்கம் கொஞ்சம் இந்தப் பக்கம் கொஞ்சம் மாத்தி கட்டனம். சிமெண்ட்லாம் கெடையாது தம்பி. சுருக்கின்னு ஒரு பவுடரு. அதுலதா கட்டனம், பெஷலா இதுக்குன்னு தயார் பண்ணாங்க. சுண்ணாம்புத்தூளு, மணலு, செங்கல் தூளு எல்லாத்தையும் கலந்தது இது. பிசுபிசுன்னு கைல ஒட்டிச்சின்னு வை, ஒடனே கழுவணும். கொஞ்சம் காய உட்டாலும் தோலோடதா பிச்சி எடுக்கனும் அவ்ளோ கெட்டி . . .’

‘அம்மாவுக்கு பெரிய கொற, கல்யாணம் பண்ணிக்கலன்னு. தெனம் ரோதனயா போச்சி. அதும் நச்சரிப்பு தாங்காமத்தா ஒரு நாளு சரின்னுட்டன். வங்க்கா கேம்ப்லயே ஒரு பொண்ண இட்டும்போயி காட்டிச்சி அம்மா. மல்லிகான்னு பேரு. பொண்ணு நல்லா ஷோக்கா இருந்திச்சி. நானும் ம்னுட்டன். அப்றமின்னா, கல்யாணந்தான் . . .’

‘கல்யாணம் கட்டன மக்கா நாளு மழத்தொடங்கிச்சி பாரு தம்பி. சொன்னா நம்ப மாட்ட நீ. மூணுமாசம் தொடர்ச்சியாப் பேஞ்சிது. மழன்னா அது மழ. வேல கெடையாது. ஆனா சி.இ.  ஒர்த்தர் இருந்தாரு. அவரும் தமிழ்காருதா. திருமல ஐயங்காரோ இன்னமோ பேரு. சரியா ஞாபகம் இல்ல. எல்லார்க்கும் ரேஷன் குடுத்தாரு. ஒழுவற குடிசங்களயெல்லாம் சீர்ப்படுத்தினாரு . . .’

‘மழ நின்னதும் வேல ஆரம்பிச்சாங்க. அப்ப வழில ஒரு வெடி வெடிச்சிது பாரு தம்பி. என் ஆயுசுல அந்த மாதிரி பாத்ததில்ல. ஜவாலில கல்லு கட்டி ஆளுங்க தூக்கிம் போவுது, வரிசையா நூறு பேரு போவாங்க. கல்லு ஒடைக்க எவ்னோ வெடிய வச்சிருக்கான். பக்கத்துல பொம்பள ஆம்பளங்க ஆயிரம் பேரு ஜல்லி ஒடைக்குது. சின்னதா வெடிக்கும்னு நெனச்சி பாவி யார்கிட்டயும் சொல்லாம நெருப்பு வச்சிட்டான். படார்னு வெடிச்சதும் ஒன்னும் புரியல. மலயே பேத்துக்னு மேல போயி தூள் தூளா கீழ உழற மாதிரி இருந்திச்சி. ஜவாலி தூக்கிப்போனவன்லாம் உருண்டு உழுந்தாங்க. எல்லார் மேலயும் பீஸ் பீஸா கல்லு அடிச்சி காயம். என் பக்கத்துல நின்னிருந்தவன் தோள்ல கல்லுக் குத்தி ரத்தம் ஊத்திச்சி. ரத்தத்த பாத்ததும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. அப்படியே உழுந்திட்டன். . .’

‘எதுக்கு இவ்ளோ சொல்றன்னா, இந்த அணக்கட்டுக்காக ஜனங்க அவ்ளோ கஷ்டப்பட்டுச்சிங்கறது ஊரு உலகத்துக்கும் தெரியனும்ங்கறதுக்குத்தா. இந்த மாதிரி ஆனப்பறம்தா நாலஞ்சி பொட்டி கோத்து கல்லு தூக்கறதுக்கு ஒரு பெஷல் ரயில உட்டான். மலைலேந்து ஒர்க் ஸ்பாட்டுக்கு அதான் போவும் வரும் . . .’

‘எனக்கு பன்னென்டணா கூலி அப்ப. வாரா வாரம் சனிக்கிழம கூலி குடுப்பான். வாரத்துக்கு நாலார்ரூபா. அதுவே எங்களுக்கு ஏதளாப்பம்தா. ஞாயத்துக்கெழம கறி எடுப்பன். தூக்குகறி எட்டணா அப்ப. ஆக்கனா இவ்ளோ ஆவும். எண்ணெ தேச்சி குளிச்சிட்டு வந்ததும் சுடச்சுட கறியும் சோறும் துன்னதும் தூக்கம் வரும் பாரு தம்பி இன்னா சொகமா இருக்கும் தெரியிங்களா . . .’

‘கழுதமாதிரி வேல செஞ்சம் பத்துவருஷமோ பன்னெண்டு வருஷமோ அணக்கட்டு வேல முடிஞ்சிருச்சி. எனக்கு நாலு பொறந்து ஒண்ணு செத்துடுச்சி. மீதி ரண்டு பொண்ணுங்க ஒரு பையன்.’

‘அணக்கட்டு முடிஞ்சதும் எங்க போறதுன்னு தெரியல. பத்ராவதிலே அணக்கட்டு கட்றாங்க அமராவதில கட்றாங்கன்னு கொஞ்சம் ஆளு அங்க இங்க ஓடிச்சி. எனக்கு ஒன்னுமே புரியல. ஒரே குழப்பம். அப்ப அணக்கட்ல வேலைக்கி ஆளு எடுத்தாங்க. நானும் போய் நின்னன். இன்னா வேல செஞ் சடான்னாங்க. டிக்கர்ங்கன்னன். அதுக்குப்போயி இன்னடாவேல   போட்டுத்தர்றது வேற எடம் பாத்துக்கனாங்க; சாமி நீங்கதா காப்பாத்தணும் ஒங்கள உட்டா வழியில்லன்னு கால்ல உழுந்துட்டன். அப்டி இப்டி யோசிச்சி அந்த ஆளு கால்வா ஓரம் கேட்கீப்பராக்கிட்டான். புண்யாத்மா, அவன் போட்ட சோறுதா இன்னிக்கிம் சாப்டறன் தம்பி.’

‘தோ தோன்னு நாப்பது வருஷம் ஓடிருச்சி. ரயில பாக்கறப் போதெல்லாம் இப்பதா வந்து எறங்கன மாதிரி இருக்குது தம்பி எனக்கு. என்ன தம்பி கேட்டிங்க ஊர்பக்கம் போவலியானா. போவல தம்பி. எதுக்கு போவணும் சொல்லுங்க. பீயத் துன்னுங்களேன்டின்னு சொன்னாளே அவ மூஞ்சிய பாக்கறதுக்கா போவ சொல்றிங்க. திருணாமல தீபம்டா வருஷத்துக்கு ஒரு தரமாச்சிம் போவலாம்ன்னு அம்மா இருந்தவரிக்கும் சொல்லிச்சி. தீபமாவது தூபமாவது சும்மா கெடன்னு அடக்கிடுவன் தம்பி. அந்த தெசையக்கூட திரும்பிப் பாக்காதன்னுட்டன். பின்ன இன்னா தம்பி மனுஷனா பொறந்துட்டா ஒரு வைராக்கியம் வேணாமா . . ?’

‘பசங்கள பத்தியா கேட்டிங்க. முனிராபாத்ல ஒன்னு ஹொஸஹள்ளில ஒன்னுன்னு பொண்ணுங்கள இங்கயே கட்டிக் குடுத்துட்டங்க. பையனுக்குத்தா முடிக்கணும். வேல ஒன்னும் சரியா அமையல அதுக்குத்தா அலையறன் தம்பி . . .’

‘போன வருஷம் சர்வீஸ்லேந்து எடுத்துட்டான் தம்பி. எதுக்குன்னா கேக்கறிங்க. சொல்றன். போர்டுலாரி ஒன்னு வேகமா வந்திச்சி. நிறுத்தி என்ட்ரி போட்டுத்தா உள்ள போவனும். கை காட்டி நிறுத்தனன், நம்ம போறாத காலம் வண்டில பிரேக் இல்ல. வந்து இடிச்சிட்டான். ஒரு காலு போய்டுச்சி. தலக்கி வந்தது தலப்பாயோட போய்டுச்சின்னு சொல்லறாங்களே அந்த கததா. உயிரே போய்ருக்கணும் இடிச்ச இடிக்கு . . . இன்னமோ பெரியவங்க புண்ணியம் காலோட போச்சி. ஆபிஸ்ல கணக்கு தீத்து அனுச்சிட்டான் . . .’

‘என் வேலய எம் புள்ளக்கி போட்டுக்குடுங்க சாமின்னு கேக்காத ஆளு இல்ல. குடுக்காத மனுஇல்ல. அப்டிலாம் சட்டமில்ல போன்னு அனுப்ச்சிட்டாங்க. கன்னடா படிச்சி பாஸ்பண்ணி இருக்கணுமாம். அப்றம் எம்ப்ளாய்மென்ட். எக்ஸ்ஷேஞ்ச்ல பதிஞ்சி இருக்கணுமாம். பதிவுலாம் இருக்குது. கன்னடா பேசுவான். படிக்க வராது. எட்டாவது வரிக்கும் தமிழ் ஸ்கூல்லதா படிச்சா. இப்பகூட அவன கூப்ட்டுக்னு பெல்லாரிவரிக்கும் போய் கலெக்டர் ஆபீஸ்ல மனு குடுத்துட்டுதான் வரன் . . .

‘இப்பியாவது ஊர்க்குப் போவக்கூடாதான்னு கேக்கறீங்களா தம்பி. ஊர்க்குப் போயி இன்னாங்க செய்யறது. நெலபொலம் ஏதாச்சிம் இருந்திச்சின்னா பொழச்சிக்கலாம். அதுவும் இல்ல. கூலி வேலதா செய்யணும். நல்லதோ கெட்டதோ இங்க வந்துட்டம். அத இங்கியே செய்யலாம்ன்னுதா இருக்கம்.’

‘தம்பி . . . பாத்தா நல்லவங்களா தெரியறிங்க. ஒரு உபகாரம் செய்றிங்களா? நீங்களும் ஆபீஸ்ல இருக்கறவங்கதா. ஆபீஸ்காரனுக்கு ஒம்போது ஆபீஸ்காரங்க பழக்கமா இருக்கும். எங்கனாச்சிம் பாத்து பையன தள்ளி உடமாட்டிங்களா. கூட்டறவேல பெருக்கறவேலனா கூட பரவாயில்ல. தமிழ்க்காரனுக்கு தமிழ்க்காரன்னு கூட இத செய்ய வேணாம். ஏதோ ஒங்க கையால ஒரு குடும்பத்துக்கு வௌக்கு ஏத்தி வய்க்கற மாதிரி நெனச்சி செய்யணும். என் உசிரு இருக்கறதுக்குள்ள அததுக்கும் ஒருவழிய காட்டிட்டன்னா நானும் நிம்மதியா போய் சேருவேன்.’

‘செய்றிங்களா தம்பி.’

(தளம் - 1989)