எண்பதுகளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக வெளிவந்துகொண்டிருந்த மன ஓசை இதழில் நான் சிறுகதைகளை எழுதி வந்தேன். அப்போது கர்நாடகத்தில் பெல்லாரி, ஹொஸ்பெட், கொப்பல் ஆகிய ஊர்களுக்கிடையில் தொலைபேசி கேபிள் புதைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். நானும் மற்ற பொறியாளர்களும் இந்த ஊர்களுக்கு இடைப்பட்ட கிராமங்களில் கூடாரமிட்டு தங்கியிருந்தோம். வார இறுதியில் விடுப்பு நாளில் மட்டும் நகரத்தில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு வந்து செல்வோம். எங்களுக்கு வந்திருக்கும் கடிதங்களையெல்லாம் ஒரு பெரிய பையில் போட்டு வைத்திருப்பார்கள். அவரவருக்குரிய கடிதங்களை எடுத்துக்கொண்டு திரும்பிவிடுவோம். கடிதத்தை எடுக்கும்போதே, முகவரிப்பகுதியில் காணப்படும் கையெழுத்தை வைத்தே அதை எழுதியவர் யார் என்று கண்டுபிடித்துவிடுவேன். ஒருகணம் அந்தக் கையெழுத்துக்குரியவரின் முகம் நினைவில் ஒளிர்ந்து நகரும்.
ஒருமுறை என்னால் கண்டுபிடிக்கமுடியாத
கையெழுத்தோடு ஒரு கடிதம் வந்தது. சற்றே கூடுதலான உயரத்தோடு செங்குத்தான வடிவில் அமைந்த
எழுத்துகள். என் நினைவிலிருந்த எந்த முகத்தோடும் அந்தக் கையெழுத்து பொருந்தவில்லை.
யாராக இருக்கும் என்னும் கேள்வி என் ஆர்வத்தைத் தூண்டியது. அவசரமாக கடிதத்தைத் திருப்பி
அனுப்புநரின் முகவரிப் பகுதியைப் பார்த்தேன். அங்கே கையெழுத்துக்குப் பதிலாக பெயரும்
முகவரியும் அச்சிடப்பட்ட நீலவண்ண முத்திரை இருந்தது. பா.அண்ணாத்துரய் என்று சற்றே பெரிய
எழுத்தில் அமைந்த பெயருடன் முழு முகவரியும் இருந்தது. அதைப் படித்ததுமே யாரோ புதியவர்
என்று தெரிந்துவிட்டது. ரை எழுத்தை ரய் என்று எழுதியிருக்கும் புதுமையைக் கண்டதால்
விளைந்த புன்னகையோடும் விழுப்புரம் என்னும் ஊர்ப்பெயரைக் கண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியோடும்
அக்கடிதத்தை ஆர்வத்துடன் உடனடியாகப் பிரித்தேன். விழுப்புரம் எங்கள் வளவனூருக்கு அருகிலிருக்கும்
நகரம். நம் வட்டாரத்திலிருந்து ஒருவர் எழுதியிருக்கிறார் என்பதை அறியும்போதே ஒருவித
உற்சாகம் பிறந்துவிட்டது.
இப்படி கலவையான பலவித உணர்வுகளோடு அக்கடிதத்தைப்
பிரித்தேன். இரண்டு பக்கங்கள் அளவுக்கு நீண்ட கடிதம். வரிக்கு வரி தாராளமாக இடம்விட்டு
எழுதப்பட்டிருந்தது. மன ஓசையிலும் மற்ற இதழ்களிலும் வெளிவந்த என்னுடைய சிறுகதைகளை தொடர்ந்து
வாசிப்பவர் என்பதை அக்கடிதத்தைப் படிக்கும்போது புரிந்தது. அந்த மாத கணையாழியில் வெளிவந்த
ஒரு சிறுகதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது என்று குறிப்பிட்டு, அக்கதையைப்பற்றிய
தன் எண்ணங்களை விரிவாகவே எழுதியிருந்தார். அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகவே
அவர் அக்கடிதத்தை எழுதியிருந்தார். இப்படிக்கு என கடிதத்தை முடிக்கும் இடத்திலும் பா.அண்ணாத்துரய்
என்று கையெழுத்திட்டுவிட்டு அதற்குக் கீழே விழி.பா.இதயவேந்தன் என்று அடைப்புக்குறிக்குள்
குறிப்பிட்டிருந்தார்.
அவர் எழுதிய சில கவிதைகளும் சிறுகதைகளும்
அப்போது மனஓசை இதழில் வெளிவந்திருந்தன. அதனால் அப்பெயரைப் பார்த்ததுமே அவருடைய படைப்புகளை
நினைவுகூர்ந்தேன். மனஓசையில் அப்பெயரைப் பார்க்கும்போதெல்லாம் விழி என்பதை ஏதோ ஒரு
பெயரின் முற்பகுதி என நினைத்துக்கொள்வேன். கடிதத்தைப் படித்த கணத்தில்தான் விழுப்புரம்
நகரத்தின் முற்பகுதியின் சுருக்கம் என்று புரிந்தது. இதயவேந்தன் என்கிற அண்ணாத்துரய்
இப்படித்தான் எனக்கு அறிமுகமானார்.
அதற்குப் பிறகு நாங்கள் அடிக்கடி எழுதிக்கொண்டோம்.
ஒவ்வொரு கடிதத்திலும் சிறுகதைகளைப்பற்றிய மதிப்பீடுகளே அதிகமாக இருக்கும். அவருக்குக்
கிடைக்கும் இலக்கிய சிறுபத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளை வாசித்துவிட்டு பிடித்த
சிறுகதைகளைப்பற்றிய எண்ணங்களையே ஒவ்வொரு கடிதத்திலும் எழுதுவார். முடிக்கும்போது, நீங்கள்
அக்கதையைப் படித்தீர்களா, இதுவரை படிக்காமல் இருந்தால் அவசியம் படித்துப் பாருங்கள்
என்று குறிப்பிடுவார். நான் எழுதும் சிறுகதைகள் மீது அவர் பெருமதிப்பு கொண்டிருந்தார்.
ஒருமுறை ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில்
விழுப்புரத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். அவர் அருகிலிருக்கும் இன்னொரு நண்பர்
வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் பெயர் அன்புசிவம். கவிதைகள் எழுதுபவர். இடதுசாரிச்சிந்தனை
உள்ளவர். அவருடைய வீட்டில்தான் நாங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து உரையாடிக்கொண்டிருந்தோம்.
அந்த முதல் சந்திப்பில் மட்டுமன்றி, அடுத்தடுத்த சந்திப்புகளிலும் அவ்விருவருக்கும்
இணையாக சிறுகதைகளைப்பற்றி ஆர்வத்துடன் உரையாடியவர் அன்புசிவத்தின் அம்மா. கணீரென்ற
குரலில் சிரித்த முகத்துடன் உரையாடும் அந்த அம்மாவுடன் உரையாடுவதே ஒரு தனி அனுபவம்.
இதயவேந்தன் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தியதுமே “ஓ, இவருதான் அந்த லெட்டரு போடற தம்பியா?
பாக்கறதுக்கு சின்ன புள்ளையாட்டம் இருக்கறாரு” என்று புன்னகையுடன் பேசத் தொடங்கிவிட்டார்.
இதயவேந்தனுக்கு எழுதும் கடிதத்தை மூன்று பேரும் படிக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.
அன்றுமட்டுமல்ல, அதற்குப் பிறகும்கூட அவர் என்னை பெயரிட்டோ, ஊர் பெயரைச் சொல்லியோ அழைத்ததே
இல்லை. லெட்டரு போடற தம்பியாகவே நான் அவருடைய நெஞ்சில் பதிந்துவிட்டேன்.
எங்கள் உரையாடல்கள் பெரும்பாலும் புத்தகங்கள்
சார்ந்ததாகவே இருக்கும். இதயவேந்தன் இடதுசாரிச்சிந்தனை கொண்டவராக இருந்தார். அந்தச்
சிந்தனையுடைய எழுத்தாளர்களின் படைப்புகளையே தேர்ந்தெடுத்துப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
படிப்பதில் அப்படி ஒரு வரையறையை வைத்துக்கொள்ளவேண்டாம் என்றும் அத்தகு வாசிப்பு மொழியின் பலவேறு விதமான வெளிப்பாடுகளையும்
பலவேறு விதமான வாழ்க்கையனுபவங்களையும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை துறக்கவைத்துவிடுவதால்
அது ஒரு பேரிழப்பு என்றும் எடுத்துரைப்பேன். அதைக் கேட்டு சரி சரி என்று சொல்வாரே தவிர,
அதைப் பின்பற்றமாட்டார். ஒரு புன்னகையோடு அதைக் கடந்துவிடுவார்.
ஒருமுறை ஓர் இளம்வாசகனுக்கு தமிழில்
சிறந்த ஐந்து நாவல்களாக எதைப் பரிந்துரைக்கலாம் என்று எங்களுக்கிடையில் ஒரு பேச்சு
வந்தது. நான் உடனே கொஞ்சமும் தயங்காமல் பொய்த்தேவு, ஒரு புளியமரத்தின் கதை, ஒரு மனிதன்
ஒரு வீடு ஒரு உலகம், அம்மா வந்தாள், புயலிலே ஒரு தோணி என்று சொன்னேன். அந்தப் பட்டியல்
அவருக்கு மனநிறைவளிக்கவில்லை. அந்த நாவல்கள் எதையுமே தான் படிக்கவில்லை என்று அவர்
சொன்னார். அவர் பஞ்சும் பசியும், மலரும் சருகும், தாகம், செவ்வானம், பிறகு என வேறொரு
பட்டியலை முன்வைத்தார். இலக்கியம் என்பது அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சிக்கல்களை
முன்வைப்பதாகத் திகழ்ந்தால் போதும் என்பது அவருடைய தீர்மானமான பார்வையாக இருந்தது.
இதயவேந்தன் என்னும் புனைபெயரை அவர்
சூட்டிக்கொண்டதன் பின்னணியை ஒருநாள் அவரே விவரித்தார். அவர் வசிக்கும் பகுதியில் அவருடைய
வயதையொத்த இரு நண்பர்கள் அவருக்கு இருந்தார்கள். மூவருமே விழுப்புரம் அரசு கல்லூரியில்
ஒரே பாடப்பிரிவில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.
மூவருமே இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள். கல்லூரியில் நடைபெறும் பேச்சுப்போட்டி,
கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி என எல்லாப் போட்டிகளிலும் அவர்கள்தான் பரிசு பெற்றார்கள்.
அன்புசிவம், ஆதவன், அண்ணாதுரை என்ற வரிசையில் அவர்களுடைய பெயர்கள் இருந்தன. ஒருநாள்
அ,ஆ,இ என உயிரெழுத்து வரிசையில் பெயர்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்றொரு பேச்சு
எழுந்தது. உடனே அண்ணாதுரைக்கு ஒரு புனைபெயர் தேவைப்பட்டது. நண்பர்கள் தமக்குள் இ எழுத்தில்
ஒரு புதுமையான பெயரைத் தேடினார்கள். பிறகு
அவர்களாகவே இதயன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்கள். அண்ணாதுரைக்கும் அந்தப் பெயர்
பிடித்திருந்தது. இதயன் என்னும் பெயருக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆயினும் இரவெல்லாம்
யோசித்துவிட்டு, மறுநாள் காலையில் கல்லூரிக்கு வந்ததும் நண்பர்களைச் சந்தித்து இதயன்
என்னும் பெயரை இன்னும் கொஞ்சம் நீட்டித்து
இதயவேந்தன் என்று மாற்றிக்கொண்டார். வரலாற்றுப் பாத்திரத்தின் பெயரைப்போல தோற்றமளிக்கும்
அப்பெயர் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. நண்பர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். அன்றுமுதல் அண்ணாதுரை இதயவேந்தனாக மாறினார். எழுதத்
தொடங்கும்போதே அவர் அந்தப் பெயரில்தான் எழுதினார். சில நாட்களுக்குப் பிறகு புனைபெயருடன்
ஊர்ப்பெயரையும் அப்பாவின் பெயரையும் இணைத்துக்கொள்ளும் விதமாக விழி.பா.இதயவேந்தன் என
சூட்டிக்கொண்டார்.
விழுப்புரம் கல்லூரியில் பழமலய் பணியாற்ற
வந்தபோது இதயவேந்தன் நண்பர் கூட்டத்துக்கும் அவருக்கும் நல்ல உறவு பிறந்தது. திண்டிவனத்தில்
பேராசிரியராக இருந்த கல்யாணியீடும் அந்த இளைஞர்கள் நெருக்கமாகப் பழகினார்கள். மாணவர்களும்
ஆசிரியர்களும் இணைந்து நெம்புகோல் என்னும் அமைப்பை உருவாக்கி இலக்கியத்தை நோக்கி இன்னும்
சில இளைஞர்களை ஈர்த்தார்கள். கதை, கவிதை, கட்டுரைகளை எழுதி வாசித்தார்கள். வீதி நாடகங்களை
நடத்தினார்கள். அப்போது மறைந்த நாட்டுப்புறவியலாளர் கே.ஏ.குணசேகரன் பாடிய பாடல்களை
ஒவ்வொரு கூட்டத்திலும் பாடி விழிப்புணர்ச்சியை உருவாக்கினார்கள். எல்லாச் செயல்பாடுகளிலும்
இதயவேந்தன் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு பங்காற்றினார்.
1987இல் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதி
’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்னும் தலைப்பில் வெளிவந்தது. ஊருக்குச் சென்றிருந்த
சமயத்தில் இதயவேந்தனையும் அன்புசிவத்தையும் சந்தித்து ஒரு புத்தகத்தைக் கொடுத்தேன். அவர்கள் கவிஞர் பழமலய்
வீட்டுக்கு அழைத்துச் சென்று என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினர். நான் அவரிடமும் ஒரு
புத்தகத்தைக் கொடுத்தேன். அவர் என் ஊர், என் பெற்றோர், என் குடும்பம், படிப்பு, வேலை
என என்னைப்பற்றிய எல்லா விவரங்களையும் பொறுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். “உங்க
கதைகளை மன ஓசையில படிச்சிருக்கேன்” என்று பொதுவாகச் சொன்னார். ஒரு சில மாதங்கள் கழித்து
வளவனூர் திருக்குறள் கழக நண்பர்கள் என் சிறுகதைத்தொகுதிக்கு ஒரு அறிமுகக்கூட்டம் நடத்தினர்.
பழமலய் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதயவேந்தனும் அன்புசிவமும் அவரை
அழைத்துவந்தனர்.
நண்பர்கள் இருவருக்கும் வேலை கிடைத்து
விழுப்புரத்தைவிட்டு வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட, விழுப்புரத்தில் தனிமையில் சிக்கித்
தடுமாறினார் இதயவேந்தன். நல்ல வேளையாக இலக்கியம் அவருக்குத் துணையாக இருந்தது. சிறிது
இடைவெளிக்குப் பிறகு சற்றே தாமதமாக விழுப்புரம்
நகராட்சியிலேயே எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார் இதயவேந்தன். அந்த வேலையும் ஒரு நிரந்தர
வருமானமும் அவருடைய குடும்பத்தை கொஞ்சம்கொஞ்சமாக வறுமையின் பிடியிலிருந்து விடுவித்து
காலூன்றி நிற்க உறுதுணையாக இருந்தது. அதற்குப் பிறகுதான் அவர் திருமணம் செய்துகொண்டார்.
இதயவேந்தன் தொடர்ச்சியாக மனஓசை இதழில்
சிறுகதைகளை எழுதினார். பா.செயப்பிரகாசத்துக்கு இதயவேந்தனின் படைப்புகள் மீது பெரும்நம்பிக்கையும்
மதிப்பும் இருந்தது. பா.செயப்பிரகாசம் எழுதிய ஒரு ஜெருசலேம், காடு, இரவுகள் உடையும்
தொகுதிகளில் உள்ள கதைகளையெல்லாம் மனப்பாடமாக கரைத்துக் குடித்திருந்தார் இதயவேந்தன்.
அந்த அளவுக்கு அக்கதைகளோடு அவர் ஒன்றியிருந்தார். அவருக்குத் திருமணமாகி குழந்தைகள்
பிறந்த காலத்தில் தன் மகனுக்கு சூரியதீபன் என்று பெயர் சூட்டி மகிழும் அளவுக்கு பா.செயப்பிரகாசம்
மீது அவர் பாசமும் பற்றும் கொண்டவராக இருந்தார்.
என்னுடைய முதல் நாவல் வாழ்க்கை ஒரு
விசாரணை வெளிவந்ததும் அதை அவருக்கு அனுப்பியிருந்தேன். அந்த நாவல் அவருக்கு மிகவும்
பிடித்திருந்தது. மாடுகளுக்கு லாடம் அடிக்கும் தொழிலாளியின் குடும்ப உறவுகளையும் சமூக
உறவுகளையும் மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் அது. அந்தப் பாத்திரங்களின் வாழ்வியல் சித்தரிப்புகளை
அவர் மிகவும் விரும்பிப் படித்ததாக ஒரு நீண்ட மடலை எனக்கு எழுதியிருந்தார். அந்த வயதில்
அம்மடல் எனக்கு அளித்த உற்சாகத்துக்கு அளவே இல்லை. அடிக்கடி நேர்ந்த இடமாற்றத்தின்
காரணமாக என்னால் பாதுகாக்க முடியாமல் போன புதையல்களில் ஒன்று அந்தக் காலத்து மடல்கள்.
இப்போது நினைத்தாலும் அந்த இழப்பு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது. இரண்டாண்டு கால இடைவெளியில்
என்னுடைய அடுத்த நாவல் வெளிவந்தது. புதுச்சேரிப்பகுதியில் எதிர்பாராத சூழலில் பஞ்சாலை
மூடப்பட்டதன் விளைவாக தொழிலாளர்கள் வாழ்வில் உருவான நெருக்கடிகளை முன்வைத்து அதை எழுதியிருந்தேன்.
அந்த நாவலையும் இதயவேந்தன் விரும்பிப் படித்தார்.
அடுத்தமுறை விழுப்புரத்தில் சந்தித்தபோது
நகராட்சி அலுவலகத்துக்கு வெளியே ஒரு தேநீர்க்கடையில் நின்றபடி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
தனக்குள் ஒரு புதிய நாவலுக்கான ஒரு உத்தேச வரைபடம் கருக்கொண்டிருப்பதாகவும் அதை எழுதவிருப்பதாகவும்
அது தன் கனவுப்படைப்பாக இருக்குமென்றும் முகம் பூரிக்கச் சொன்னார். ஆவலோடு நான் ”நாவலின்
களம் என்ன?” என்று கேட்டேன். ”தூய்மைப்பணியாளர்களின் வாழ்வியல் நெருக்கடிகள பத்தி சொல்லணும்ங்கறதுதான்
இப்ப வரைக்கும் இருக்கற திட்டம். எழுத ஆரம்பிச்ச பிறகு எங்கெங்க போவுதோ, அங்கங்க போக
வேண்டிதுதான்” என்று சிரித்தார். “ரொம்ப நாள்
தாமதிக்காம சீக்கிரம் ஆரம்பிச்சிடுங்க இதயவேந்தன்” என்று வாழ்த்தியபடி அவருடைய கைகளைக்
குலுக்கிவிட்டு விடைபெற்றேன்.
1991இல் எதிர்பாராத விதமாக மனஓசை இதழ்
தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. அதுவரை அவ்விதழில் தொடர்ச்சியாக பங்காற்றி வந்த இதயவேந்தனுக்கு
அது ஒரு அதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இனிமேல் எந்தப் பத்திரிகை தன் கதைகளுக்கு இடம்கொடுக்கும்
என்ற யோசனையில் திகைத்தார். நான் அவரைத் தேற்றும் விதமாக ஒரு கடிதமெழுதினேன். நல்ல
வேளையாக அதுவரை எழுத்தாளர் அனுராதாரமணன் பொறுப்பில் வந்துகொண்டிருந்த சுபமங்களா என்னும்
இதழ் கோமல் சுவாமிநாதனின் பொறுப்பில் வரத் தொடங்கியது. மன ஓசையில் எழுதிய பல எழுத்தாளர்கள்
அதில் எழுதினார்கள். நானும் எழுதினேன். இதயவேந்தனையும் எழுதுமாறு தூண்டினேன். தமிழில்
வெளிவந்த இந்தியா டுடே வார இதழும் சிறுபத்திரிகைப் படைப்பாளிகளுடைய சிறுகதைகளை வெளியிட்டு,
அவர்கள்மீது ஒரு கவனம் விழும்படி செய்தது.
மனஓசை நின்ற பிறகே அவ்விதழில் எழுதிய
சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கவேண்டும் என்று நினைத்தார் இதயவேந்தன். அவருடைய இருப்பில்
ஏராளமான சிறுகதைகள் இருந்தன. எதை நீக்குவது, எதை வைத்துக்கொள்வது என்று முடிவெடுக்கமுடியாமல் அவர்
குழம்பினார். ஒருமுறை அவரைச் சந்திப்பதற்காகச் சென்றபோது அதைப்பற்றிய பேச்சு வந்தது.
அலுவலகத்திலேயே இதயவேந்தன் அந்தக் கதைக்கோப்பினை வைத்திருந்தார். நான் அதை வாங்கி சில
நிமிடங்களில் வேகமாகப் புரட்டிவிட்டு ஒரு பதினாறு கதைகளை மட்டும் தனியே பிரித்தெடுத்துக்
கொடுத்தேன். எல்லாமே ஏற்கனவே அச்சில் படித்தவை என்பதால் புரட்டும்போதே அக்கதையை என்னால்
நினைவுபடுத்திக்கொள்ள முடிந்தது.
”இன்னொருமுறை இதே கதைகளைப் படித்துப்
பாருங்கள். இன்னும் ஒரு அஞ்சாறு கதைகளை நீங்கள் நீக்கலாம். அதை நீங்களே செய்வதுதான்
நல்லது. அதற்குப் பிறகு எஞ்சுவதை தொகுப்பாக வைத்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு
வந்தேன். அந்த ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். பிறகு அவரே சுயதணிக்கையின் அடிப்படையிலும்
நண்பர்கள் உதவியோடும் அத்தொகுதிக்கான படைப்புகளைத் தேர்ந்தெடுத்து ’நந்தனார் தெரு’
என்னும் தலைப்பில் கொண்டு வந்தார். தமிழ்ச்சிறுகதையுலகில் அத்தொகுதியின் வழியாக இதயவேந்தன்
நல்ல கவனத்தைப் பெற்றார். தலித் இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் தொடங்கியிருந்த அன்றைய
சூழலில் அத்தொகுதிக்கு பல நல்ல புதிய வாசகர்கள் கிடைத்தனர். அந்த உற்சாகத்தின் விளைவாக
அடுத்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியிலேயே ’வதைபடும் வாழ்வு’ என்னும் தலைப்பில் மற்றுமொரு
தொகுதியை வெளியிட்டார்.
நாய்கள், பிழைப்பு, நந்தனார் தெரு,
பீவாரி ஆகியவை அவருடைய பெயர்சொல்லும் முக்கியமான சிறுகதைகள். சிறுகதைக்கே உரிய எல்லாவித
குறிப்பமைதிகளோடு அமைந்த சிறுகதை நாய்கள். ஒரு கோணத்தில் செகாவ் தன்மை படிந்த சிறுகதை.
அதிகார அமைப்பின் முடிவுகள் ஆதரவின்றி வாழ்வோரின் வாழ்க்கையில் நிகழ்த்தும் அலங்கோலத்தை
முன்வைக்கும் முத்திரைக்கதை அது. ஊருக்கு வெளியே எங்கோ ஒரு கோலை நிகழ்ந்து இறந்துபோனவனின்
உடல் கிடக்கிறது. கொன்றவன் சென்ற தடத்தைக் கண்டறிய காவலர்கள் நாயை அழைத்து வருகிறார்கள்.
மோப்பம் பிடித்துவிட்டு நடந்துசெல்லும் நாய் தற்செயலாக ஒரு வீட்டின்முன் நின்றுவிடுகிறது.
வீட்டு வாசலில் நிறைந்திருக்கும் கருவாட்டுமணத்தைக் கடந்து அந்த நாயால் செல்ல இயலவில்லை.
அதைப் புரிந்துகொள்ள இயலாத காவலர்கள் அந்த வீட்டில் இருப்பவர்களே கொலையாளிகள் என தீர்மானித்து,
அவ்வீட்டில் இருந்த இரு பெண்மணிகளை அழைத்துவந்து காவல்சிறையில் வைத்துவிடுகிறார்கள்.
உறவுக்காரர்கள் அழுது மன்றாடியும் பயனில்லை. எதையோ அடகு வைத்து எப்படியோ பணத்தைப் புரட்டி
வந்து காவல்நிலையத்தில் இருப்பவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அடுத்த நாள் காலையில்
வேறொரு பகுதியில் கொலையாளி அகப்பட்டுவிடுகிறான். அதுவரை பெண்களை காவல்நிலையத்திலேயே
வைத்திருந்த காவலர்கள் கூடுதல் லஞ்சப்பணத்தையும் வாங்கிக்கொண்டு கெத்து குறையாமல் மிரட்டல்
குரலில் கண்டித்து விடுதலை செய்கிறார்கள். அடித்தட்டு மக்கள் மீது தன்னிச்சையாக உரிமைகளை
எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தினர் நிறைந்திருக்கும் இந்தியச்சமூகத்தின் குறுக்குவெட்டுத்தோற்றத்தை
இதயவேந்தனின் சிறுகதை முன்வைக்கிறது.
தனித்தனியாக இதயவேந்தனின் சிறுகதைகளைப்
படிக்கும்போது தோன்றாத ஒரு விஷயம் அக்கதைகளைத் தொகுதியாகப் படிக்கும்போது புரிந்தது.
அக்கதைகள் அனைத்தும் தூய்மைப்பணியாளர்கள் வாழ்வியல் சார்ந்தவை. தமிழில் அதுவரை பதிவு
பெறாத ஓர் உலகம். தூய்மைப்பணியாளர்களின் வாழ்வியல்
நெருக்கடிகளை முன்வைத்து தன்னுடைய முதல் நாவலை எழுதவிருப்பதாக ஒருமுறை அவர் என்னிடம்
சொன்னது சட்டென நினைவுக்கு வந்தது. ஒருவேளை நாவலாக எழுதவேண்டிய சிற்சில புள்ளிகளைத்தான்
சிறுகதைகளாக எழுதிக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றியது. நாவலுக்காக நினைத்துவைத்திருக்கும்
கருவைப் பிரித்து சிறுகதையாக எழுதுவது என்பது விதைநெல்லை எடுத்து சோறு சமைப்பதற்குச்
சமமான செயல். பிறகு ஒருபோதும் அதை விதைநெல்லாக மாற்றமுடியாது. என் அனுபவம் அது. நான்
எழுதவேண்டிய ஒருசில நாவல் முயற்சிகள் அப்படியே தேங்கி அழிந்துவிட்டன. அது இதயவேந்தனுக்கு
நேர்ந்துவிடக்கூடாது என நினைத்தேன். அவரை தொடக்கத்திலேயே எச்சரிக்காவிட்டால் திரும்பி
வர முடியாத அளவுக்கு நெடுந்தொலைவு சென்றுவிடுவார் என்று தோன்றியது.
அடுத்த சந்திப்பில் அந்த விஷயத்தைப்பற்றி
வெளிப்படையாகவே அவரிடம் பேசினேன். ”இப்படி செய்யாதீங்க இதயவேந்தன். நமக்குத்தான் பின்னால
இழப்பு” என்று எச்சரித்தேன். “அப்படியெல்லாம் ஆகாது. அப்படியெல்லாம் ஆகாது” என்று மறுப்பதுபோல
தலையை வேகமாக அசைத்து அந்த எச்சரிக்கையைக் கடந்துவிட முயற்சி செய்தார் அவர். ”ரெண்டு
மூனு நாவல் எழுதலாம். அந்த அளவுக்கு எனக்கு அனுபவம் இருக்குது. ஆறேழு கதைகள் எழுதறதால
ஒரு இழப்பும் வராது” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அதை ஒரு விவாதமாக மாற்ற நான்
விரும்பவில்லை. மேலும் எனக்கு நேர்ந்த அனுபவம் அவருக்கும் நிகழும் என நானே ஏன் ஊகிக்கவேண்டும்
என்றும் தோன்றியது. அதனால் அந்தப் பேச்சைத் தொடரவில்லை. “சரி, நேரம் இருக்கும்போதே
நாவல் வேலையைத் தொடங்குங்க” என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன்.
அந்தக் காலகட்டத்தில் கன்னடத்திலிருந்து நான் மொழிபெயர்த்த
ஊரும் சேரியும், கவர்ன்மென்ட் பிராமணன் போன்ற தன்வரலாறுகள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன.
ஒவ்வொரு சந்திப்பிலும் அதைப்பற்றி அவர் குறிப்பிடத் தவறியதே இல்லை. தன்வரலாறுகளைத்
தொடர்ந்து புதைந்த காற்று என்னும் தலைப்பில் நான் மொழிபெயர்த்த சில கன்னட தலித் சிறுகதைகளும்
ஒரு நேர்காணலும் அடங்கிய ஒரு தொகுதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதயவேந்தனுக்கு
அத்தொகுதியில் இருந்த சிறுகதைகள் மிகவும் பிடித்துவிட்டன. குறிப்பாக மொகள்ளி கணேஷ்
என்னும் எழுத்தாளர் எழுதிய பம்பரம் என்னும் சிறுகதையை அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒரு சிறுவனும் அவன் கூட்டாளிகளும் பம்பரம் விளையாடும்போது, சிறுவனின் பம்பரம் தற்செயலாக
அருகிலிருக்கும் ஒரு மலக்குழியில் விழுந்துவிடுகிறது. எடுக்க முயற்சி செய்யும்தோறும்
அது அக்குழியில் ஆழ்ந்துசெல்லத் தொடங்குகிறது. அவன் அப்பம்பரத்தை எடுக்கும் முயற்சிகளாக
அச்சிறுகதை விரிவடைந்துகொண்டே போகும். இதயவேந்தனுக்கு அச்சிறுகதை மிகவும் பிடித்துவிட்டது.
”இது ஒரு செவ்வியல் சிறுகதை” என்று பூரித்த
முகத்துடன் அவர் மீண்டும் மீண்டும் சொன்ன காட்சி இன்னும் என் நெஞ்சில் பதிந்துள்ளது.
”உருவகம், படிமம்னு நீங்க அடிக்கடி சொல்வீங்களே, அது ரொம்ப இயற்கையா இந்தக் கதையில
இருக்குது. இந்த மலக்குழியில விழுந்த பம்பரத்தை எடுக்கிறதுதான் இந்த கதைன்னு யாராச்சும்
படிச்சான்னா, அவன் ஏமாந்துபோவான். பம்பரத்தை இந்தியாவா நினைச்சிகிட்டு இந்த கதையை படிச்சா,
படிக்கிறவனுக்கு சுர்னு ஏறும். அற்புதமான கதை” என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.
இயற்கையிலேயே இதயவேந்தன் பெரிய வாசகர்
அல்ல. திட்டமிட்டு தேவையானதை மட்டுமே படிப்பவர். வாசிப்பைப்பற்றி எவ்வளவு சொன்னாலும்
காதில் போட்டுக்கொள்ளாதவர். ஆனால் பம்பரம் கதையில் அடங்கியிருக்கும் உள்மடிப்புகளையும்
உருவகத்தன்மையையும் அவர் உள்வாங்கிக்கொண்ட விதமும் அதை வெளிப்படுத்திய விதமும் என்னைச்
சிலிர்க்கவைத்தது. அப்படி ஒரு வாசிப்பை கடந்த
கால்நூற்றண்டு காலத்தில் ஒரு வாசகரும் சொன்னதில்லை. விமர்சகரும் சொன்னதில்லை.
அந்தச் சந்திப்புக்குப் பிறகு நான்
அவரைச் சந்திக்கமுடியாமல் போய்விட்டது. என்னுடைய வேலைக்கடுமைகளுக்கிடையில் முன்புபோல
அடிக்கடி ஊருக்குச் செல்லமுடியவில்லை. எதிர்பாராமல் வந்த பணியிட மாற்றத்தால் அவர் வேறு
ஊருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார். மடல் தொடர்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நின்றுவிட்டது.
ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குப் பிறகுதான்
2018இல் நான் தற்செயலாக புதுச்சேரியில் இதயவேந்தனைச் சந்தித்தேன். நான் பணியிலிருந்து
ஓய்வு பெற்ற நேரம். புதுச்சேரியில் என் மனைவியின் வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது
காலை நடைக்காக எங்கள் வீட்டிலிருந்து மூலக்குளம் வழியாக பெரம்பை வரைக்கும் சென்றுவிட்டுத்
திரும்புவது வழக்கம். அப்படி ஒரு நாள் பெரம்பைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது வழியிலிருந்த
ஈஸ்ட்கோஸ்ட் மருத்துவமனைக்கு வெளியே மரத்தடியில் நின்றிருக்கும் ஒரு காரை நோக்கி ஒருவர்
மெதுவாக நடந்துவருவதைப் பார்த்தேன். அவர் இதயவேந்தனின் சாயலில் இருப்பதுபோலத் தோன்றியதால்
வேகமாக நெருங்கி அவருக்கு அருகில் சென்று பார்த்தேன். அவரேதான். பெயர் சொல்லி அழைத்ததுமே
நின்றுவிட்டார். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டார். ஒருவித துயரமான புன்னகையுடன்
கூடிய வெளிச்சம் அவர் முகத்தில் படர்ந்து மறைந்ததைக் கண்டேன். வழக்கமாக யாரைப் பார்த்தாலும்
”நல்லா இருக்கீங்களா?” என்று கேட்கும் கேள்வியைக் கேட்கமுடியாத சூழலில் அவர் தோற்றம்
இருந்தது. மெதுவாகப் பேச்சைத் தொடங்கினேன். அவர் அமைதியான குரலில் சுருக்கமாக தன் உடல்நிலை
பற்றித் தெரிவித்தார்.
“கிட்னி ப்ராப்ளம் பாவண்ணன். ஏற்கனவே
சுகருக்கு சாப்ட்ட மாத்திரைகளால வந்திருக்கலாம்னு சொல்றாங்க. பத்து நாளைக்கு ஒரு தரம்
டயாலிஸஸ் செஞ்சிட்டு போறேன். லீவ் கிடையாது. ஒரு மணி நேரம் பர்மிஷன் மட்டும் கொடுத்திருக்காங்க.
அதுக்குள்ள ஆபீஸ் போவணும். வரட்டுமா?”
அவருக்கு விடைகொடுப்பதைத் தவிர வேறு
வழி தெரியவில்லை. கார் வரைக்கும் அவரோடு சேர்ந்து நடந்து அவருக்காக கதவைத் திறந்துவிட்டேன். அவர் உட்கார்ந்து மெல்ல தன்னை சுதாரித்துக்கொண்ட
பிறகு ”நாவல் எழுதிமுடிச்சிட்டீங்களா இதயவேந்தன்?” என்று கேட்டேன். அவர் ”என்ன நாவல்?”
என்பதுபோல என்னை நிமிர்ந்து பார்த்தார். “தூய்மைப்பணியாளர்கள் பற்றி ஒரு நாவல் எழுதணும்னு
சொல்வீங்களே, அந்த நாவல் இதயவேந்தன்” என்று நினைவூட்டினேன். அதைக் கேட்டதும் அவர் கண்களில்
ஒருவித துயரம் படிவதைப் பார்த்தேன். மெல்ல உதட்டைப் பிதுக்கி தலையாட்டினார். “எழுத
முடியாமயே போச்சு பாவண்ணன். எழுதறதவிட, அவுங்களுக்கு ஏதாவது ஒரு விதத்துல உதவியா இருக்கணும்னு
நெனச்சி என்னென்னமோ செய்ய ஆரம்பிச்சேன். நாவல் வேலை அப்படியே நின்னுடுச்சி” என்றார்.
அவரை துன்பத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. அதனால் “சரி கவலைப்படாதீங்க. ரிட்டயர்மென்ட்டுக்குப்
பிறகு எழுதலாம். போய் வாங்க” என்று சொல்லிவிட்டு கதவைச் சாத்தி அவருக்கு விடைகொடுத்தேன்.
இரு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே
இடத்தில் அதே சூழலில் அவரைச் சந்திப்பேன் என நினைக்கவே இல்லை. ஆயினும் விதிவசத்தால்
அப்படிப்பட்ட சூழலில்தான் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்துவிட்டது.
வாரத்துக்கு இருமுறை டயாலஸிஸ் செய்யவேண்டிய நெருக்கடி. பணியிடமும் மாறிவிட்டது. கள்ளக்குறிச்சி.
அதிகாலை ஆறுமணிக்கே எழுந்து விழுப்புரத்திலிருந்து பேருந்து பிடித்து மருத்துவமனைக்கு
வந்து, வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் பேருந்து பிடித்து கள்ளக்குறிச்சிக்குச் செல்லவேண்டும்
என்றார். மிகவும் ஒடுங்கியிருந்தார். அவர் இருந்த நிலையில் எழுத்தைப்பற்றி எப்படி விசாரிப்பது
என்று நினைத்துக்கொண்டு எதுவும் கேட்கவில்லை. பேருந்து நிறுத்தம் வரை அவரோடு நடந்துவந்தேன்.
அப்போது அவராகவே “இப்ப குழந்தைகளுக்கும் எழுத ஆரம்பிச்சிட்டீங்க போல” என்று பேச்சைத்
தொடங்கினார். ஆமாம் என்பதற்கு அடையாளமாக நான் மெதுவாகத் தலையசைத்துக்கொண்டேன். ”போன
மாசம் என்சிபிஎச் புத்தகக்கண்காட்சி ஒன்னும் விழுப்புரத்துல நடந்தது. அப்ப உங்க சிறுவர்
கதைத்தொகுதி ஒன்ன பார்த்துட்டு வாங்கினேன். நல்ல சுவாரசியமான கதைகள்” என்று சொன்னார்.
அப்போதுதான் அவர் கழுத்தின் பக்கவாட்டில் ஒரு குழாய் பதித்திருப்பதைப் பார்த்தேன்.
தன்னிச்சையாக அவர் விரல்கள் அந்தப் பக்கமாகச் சென்று வருடிக்கொடுத்தபடி இருந்தன.
நாங்கள் நிறுத்தத்தை அடைந்த ஒருசில
கணங்களிலேயே அவர் செல்லவேண்டிய பேருந்து வந்து
நின்றது. இதயவேந்தன் மெதுவாக படியேறி உள்ளே சென்று அமர்ந்தார். புன்னகைத்தபடி
கழுத்தை ஜன்னல் பக்கமாகத் திருப்பி என்னைப் பார்த்து கையசைத்தார். வண்டி புறப்பட்டுவிட்டது.
அந்தக் காட்சி ஒரு புகைப்படத்தைப்போல
இன்னும் என் நினைவில் உள்ளது. இன்று அவருடைய மரணச்செய்தி கிடைத்ததில் இருந்து அவர்
கையசைத்துவிட்டுச் சென்ற காட்சியே என் மனத்தி மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருக்கிறது.
அருமையான நண்பர். நல்ல மனம் கொண்ட கலைஞர். அவர் எழுத நினைத்த தூய்மைப்பணியாளர் வாழ்வியலை
அவர் எழுதியிருந்தால், ஒருவேளை அக்களம் சார்ந்து தமிழில் எழுதப்பட்ட முதல் படைப்பாக
இருந்திருக்கலாம். கெடுவாய்ப்பாக, அவர் மனம் ஏதோ ஒரு கட்டத்தில் எழுத்தைவிட நேரடி உதவிகளும்
ஒத்தாசைகளும் முக்கியம் என நினைக்கத் தொடங்கிவிட்டது. அந்தக் கருத்தியல் சாய்வு அவரை
எழுத்திலிருந்து வெகுதொலைவு அழைத்துச் சென்றுவிட்டது. இதயவேந்தனுக்கு என் அஞ்சலிகள்.
(எழுத்தாளர்
விழி.பா.இதயவேந்தன் 07.11.2022 அன்று மறைந்ததையொட்டி எழுதிய அஞ்சலிக்கட்டுரை. டிசம்பர்
மாத தீராநதி இதழில் வெளிவந்தது)