Home

Sunday, 25 December 2022

பயணநூல்களும் பரவசமும்

 

பொதுவாக, ஒரு புதிய நகரத்தைப் பார்ப்பதற்காக பயணம் செய்கிறவர்கள் வழக்கமாக அந்த நகரத்தில் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த வரலாற்றுச் சின்னங்களையும் கோவில்களையும் ஆறுகளையும் கடலையும் கோவில்களையும் கடைத்தெருக்களையும் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் எழுதும் பயணக்கட்டுரைகள் தகவல்களால் நிறைந்திருக்கும். அவையனைத்திலும் ஒருவித ஆவணத்தன்மை இருக்கும். ஆனால் பயணம் என்பது தகவல்களைத் தெரிந்துகொள்வதோ, சரிபார்த்துக்கொள்ளும் வழிமுறையோ அல்ல. அது ஓர் அனுபவம். ஒரு புதிய இடத்தைப் பார்க்கும்போது, அந்த இடம் சார்ந்த மனிதர்களையும் நாம் நிச்சயமாகப் பார்ப்போம். அந்த இடத்தையும் அம்மனிதர்களையும் பார்க்கும்போது நமக்குள் ஏராளமான எண்ணங்கள் எழக்கூடும். எண்ணற்ற கேள்விகள் உருவாகக்கூடும். அவற்றின் ஒட்டுமொத்த பதிவே அனுபவம். அனுபவமில்லாத பயணக்கட்டுரைகள் வெறும் தகவல் களஞ்சியமாகவே எஞ்சும்.

தகவல்களும் அனுபவங்களும் பின்னிப்பிணைந்த பயணக்கட்டுரைகள் மட்டுமே வாசக ஏற்பைப் பெற்று நல்ல இலக்கியப்படைப்பாக உருமாறும். படிக்கும்தோறும் அந்நூல்கள் அளிக்கும் பரவசத்துக்கு எல்லையே இல்லை. பயண இலக்கியத்தின் முன்னோடிப் படைப்புகளாக விளங்கும் சேலம் படகாலு நரசிம்மலு நாயுடு 1889இல் எழுதிய ஆரியர் திவ்யதேச யாத்திரையின் சரித்திரம் புத்தகமும் 1919இல் எழுதியதட்சிண இந்திய சரித்திரம்  புத்தகமும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள். ஒரு நூற்றாண்டைக் கடந்த நிலையிலும் அந்நூல்களின் வசீகரம் இன்னும் குறையவில்லை. அடுத்தடுத்த தலைமுறைகளில் ஏ.கே.செட்டியார், சோமலெ போன்றோர் உருவாகி பயண இலக்கிய வகைமையைச் செழுமையாக்கினர்.

என்.சந்தியாராணி என்னும் எழுத்தாளர் கன்னடத்தில் எழுதி, நல்லதம்பியின் மொழிபெயர்ப்பில் தமிழில் புதிதாக வெளிவந்திருக்கும் பயணநூலான புதுவை என்னும் புத்துணர்வு நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குகிறது. அரசு நிறுவனமான கர்நாடக சாகித்திய அகாதெமி நடைமுறைப்படுத்தும் பல திட்டங்களில் ஒன்று எழுத்தாளர்களுக்கான பயண உதவித்திட்டம். எழுத்தாளர்கள் தம் ஆர்வம் சார்ந்து இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு மாநிலத்துக்குச் சென்று பயணம் செய்துவரத் தேவையான பண உதவியை அந்த நிறுவனம் வழங்குகிறது. அதற்கு ஈடாக, பயணம் முடித்துத் திரும்பும் எழுத்தாளர் தம் பயண அனுபவங்களை நூல்வடிவில் அந்நிறுவனத்துக்கு எழுதியளிக்க வேண்டும். அப்படி ஒரு திட்டம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அத்திட்டத்தின் உதவியைப் பெற்று கர்நாடகத்துக்கு அருகில் உள்ள புதுச்சேரிக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்தார். அந்த அனுபவங்களையே ஒரு புத்தகமாக எழுதி அகாதெமி நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார்.  அந்தப் பயண அனுபவ நூலை அந்நிறுவனமே வெளியிட்டது. கன்னட வாசகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்நூலை, தமிழ்வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தும் விதமாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நல்லதம்பி. அகநாழிகை பதிப்பகம் சிறந்த வடிவில் அதை நூலாக்கம் செய்திருக்கிறது.

சந்தியாராணிக்கு கடல் மீது ஆர்வம். மிக அருகில் நின்று கடலைக் கண்டு ரசிக்கலாம் என்கிற எண்ணமே, அவரை தன் பயணத்துக்குரிய நகரமாக புதுச்சேரியைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கிறது. கரையை நோக்கி அலைகளை வீசும் கடலும் அலைகள் மோதித் திரும்பும் வகையில் கரைநெடுக கொட்டிவைக்கப்பட்ட கரும்பாறைக்குவியலும் கரையையொட்டி ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் நடைப்பயிற்சிக்காகென நீண்ட நேர்க்கோட்டில் அமைந்த அழகான பாதையும் முதல்நாளே சந்தியாராணியை வசீகரித்துவிடுகின்றன. புதுவையில் இருந்த ஒவ்வொரு நாளிலும் இரு வேளைகளிலும் நடைப்பயிற்சிக்குச் செல்லும் அளவுக்கு, கடல் அவரைக் காந்தம் போல இழுத்துவிடுகிறது. அந்த அனுபவத்தை மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார் சந்தியாராணி.

புதுச்சேரியில் கடற்கரையை ஒட்டி நான்கு வெவ்வேறு இடங்களில் மக்கள் கூடி நின்று கடலைப் பார்க்கிறார்கள். நகரத்தெருக்கள் நீண்டு சென்று முடிவடையும் எல்லைப்புள்ளியாக உள்ள கடற்கரை என்பது ஒன்று. அங்குதான் ஒரு பக்கம் டியுப்ளே சிலையும் மற்றொரு பக்கத்தில் காந்தியடிகளின் சிலையும் உள்ளன. அடுத்து, சூரிய உதயம் பார்ப்பதற்காகவென்றே உருவான செரினிடி கடற்கரை. ஆனால் மக்கள் குறைவாகத்தான் அங்கு வருகிறார்கள். மூன்றாவதாக, ஆரோவில் பகுதியை ஒட்டி, அங்கிருப்பவர்கள் அமைதியாக பார்ப்பதற்கென்றே உருவான கடற்கரை. நான்காவதாக, பார்ப்பவர்களை மெய்மறக்க வைக்கும் பேரடைஸ் கடற்கரை. எல்லாக் கரைகளையும் ஆர்வத்தோடு சென்று பார்த்த அனுபவங்களையெல்லாம் சந்தியாராணி அழகுற எழுதியிருக்கிறார்.

கடலைப் பார்க்கும்போதெல்லாம் சந்தியாராணியின் நினைவுகள் எங்கெங்கோ சென்றுவருகின்றன. உருதுக்கவிஞரான குல்சாரின் கவிதை வரிகளை ஒருமுறை நினைத்துக்கொள்கிறார். அக்கவிதை மானுட உறவுகளையும் தண்ணீரையும் இணைத்துக் காட்டும் சித்தரிப்புகளில் கவித்துவம் நிறைந்திருக்கிறது. சில உறவுகள் குளங்கள் போன்றவை. சிறியவை. குறைந்த எல்லைப்பரப்பில் நிறைந்திருப்பவை. கரைகளைப்பற்றிய எந்தக் குழப்பமும் அதற்கில்லை. சில உறவுகள் ஆறுகளைப்போன்றவை. அது ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி ஓட ஓட தன் வடிவங்களை அமைத்துக்கொண்டே போகும். வெவ்வேறு விதமான வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டே செல்லும். சில உறவுகளோ கடலைப்போன்றவை. விரிந்தவை. எல்லையற்றவை. கரைகள் இருந்தாலும் எல்லைகள் இல்லாதவை. அவை எதை நோக்கியும் பாய்ந்தோடுவதில்லை. நின்ற இடத்திலேயே நீடித்திருக்கின்றன. அதே நேரத்தில் அதற்கு கரைசேர்ந்தோம் என்ற நிம்மதியும் இல்லை. இப்படி அவருடைய நினைவுகள் கடலையும் கவிதையையும் இணைத்துச் செல்ல, அந்த வாசிப்பனுபவம் நம் நினைவுகளை வேறு சில கவிதைகளை நோக்கித் திசைதிருப்பிவிடுகின்றது.

உடனடியாக நம் நினைவுக்கு வருவது பிரமிள் எழுதிய கைப்பிடியளவு கடல் தொகுதி. நாம் கடலில்தான் நிற்கிறோம். கடலில்தான் நடக்கிறோம். ஆனால் நம்மால் ஏந்திக்கொள்ள முடிவதெல்லாம் ஒரு கைப்பிடியளவு கடலை மட்டுமே. அதையும் நீண்ட நேரத்துக்கு நம் கைப்பிடிக்குள் வைத்திருக்க முடிவதில்லை. நாம் ஒரு தருணத்தில் கடல்நீரை வைத்திருந்தோம் என்னும் நினைவாக மட்டுமே அந்த அனுபவம் எஞ்சிவிடுகிறது. வாழ்நாள் முழுதும் நாம் வாழ்வதெல்லாம் இப்படி எல்லாம் வழிந்தோட இறுதியாக ஒரு நினைவாக எஞ்சுவதற்காகத்தானா என்னும் கேள்வியில் வந்து நிற்கிறது கவிதை. அவருடைய கடலும் வண்ணத்துப்பூச்சியும் கவிதையும் மற்றொரு முக்கியமான கவிதை. முதல் கணம் உவர்த்த சமுத்திரம் இறுதிக்கணத்தில் தேனாய் இனிக்கத் தொடங்கும் மாற்றத்தை அது பதிவு செய்கிறது. உறவுக்கும் அந்தப் படிமம் பொருந்தக்கூடியது அல்லவா.

முன்னொரு காலத்தில் ரோமானியர்களின் வணிக மையமாக இருந்த துறைமுக நகரமான புதுச்சேரி, முதலில் பல்லவர் ஆட்சியின் கீழும் அதைத்தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர நாயக்கர்கள், பீஜப்பூர் சுல்தான்கள் என பலருடைய கட்டுப்பாடுகளில் சிக்கி இறுதியில் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்த விதத்தை வேகவேகமாக நகரும் காட்சிகளைக் கொண்ட படத்தைப்போல ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சந்தியாராணி. புதுச்சேரி பற்றிய வரலாற்றுச்சித்திரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்த அத்தியாயம் அளிக்கிறது.

பாண்டிச்சேரியில் நகரத்துக்குள் சுற்றிப் பார்க்கத்தக்க எல்லா இடங்களும் அதிகபட்சமாக ஒன்றுக்கொன்று இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கிடையில் உள்ள இடங்களே. அதனால் பாண்டிச்சேரியில் பயணம் செய்யும் அனைவரும் வாடகை காருக்குப் பதிலாக ஆட்டோவையே பயன்படுத்துகிறார்கள். உடனடியாகக் கிடைக்கும் என்பது ஒரு காரணம். செலவு குறைவு என்பது இன்னொரு காரணம்.  ஒவ்வொரு முறையும் ஆட்டோவை அழைத்து, பேரம் பேசி, அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, நாள் முழுதும் தன் பயன்பாட்டுக்காகவென்றே ஒரு ஆட்டோவைப் பேசி ஏற்பாடு செய்துகொள்கிறார் சந்தியாராணி. அவர் பெயர் ராஜு. அவருடைய அறிமுகத்தை சந்தியாராணி எழுதியிருக்கும் விதம் ஒரு சிறுகதையின் தொடக்க வரிகளைப்போல உள்ளது.

ஒருநாள் அவர் மணக்குள விநாயகர் கோவிலுக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வருகிறார். அன்று பார்க்கவேண்டிய இடங்களென அவர் குறித்து வைத்திருந்த பட்டியல் பெரிதாக இருந்ததால், பக்கத்தில் நின்றிருந்த ராஜுவை அழைக்கிறார். இங்கே பக்கத்தில் உள்ள ஏதேனும் சர்ச்சுக்கு அழைத்துச் செல்லமுடியுமா என்று கேட்கிறார். அந்த டிரைவர் ராஜுவுக்கு ஒருகணம் ஒன்றும் புரியவில்லை. கோவிலிலிருந்து வெளியே வரும் ஒருவர் சர்ச்சுக்குச் செல்லவேண்டும் என்று சொன்னதால் உருவான திகைப்பிலிருந்து வெளியே வராதவராக “ஏதேனும் வேண்டுதலா மேடம்?” என்று கேட்கிறார். தன் கேள்வி புரிந்துகொள்ளப்பட்ட விதத்தை நினைத்து சந்தியாராணிக்கு புன்னகை வந்துவிடுகிறது. மெல்ல, தன் நோக்கத்தைச் சொல்கிறார். அதற்குப் பிறகு ராஜு எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. ராஜு அடுத்தடுத்து இரண்டு சர்ச்சுகளுக்கு அழைத்துச் சென்று காட்டுகிறார். சர்ச் வாசலில் போடப்பட்டிருக்கும் கோலம் சந்தியாராணிக்கு வியப்பை அளிக்கிறது. போதாக்குறைக்கு நடுவில் ஒரு தர்காவுக்கும் அழைத்துச் சென்று காட்டுகிறார் ராஜு. அந்த ஒருநாள் பயணம் அழகானதொரு நடைச்சித்திரம்போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜுவைப்போலவே சந்தியாராணி அறிமுகப்படுத்தியிருக்கும் இன்னொரு ஆட்டோ டிரைவர் பாபு. காரைக்காலைச் சேர்ந்தவர். பிரெஞ்சுக்குடியுரிமை பெற்று என்றாவது ஒருநாள் பிரான்ஸ்க்குச் சென்றுவிட வேண்டும் என்னும் கனவோடு தன் பிள்ளைகளை பிரெஞ்ச் படிக்கவைப்பதாக அவர் முன்வைத்த கனவில் பாபுவின் சித்திரம் முழுமையாக வெளிப்படுகிறது.

ஒருநாள் சந்தியாராணி மியூசியத்தைச் சுற்றிப் பார்க்கிறார். அங்கு ஓர் இடத்தில் ஆயி மண்டபத்தின் புகைப்படதையும் ஆயியின் கதையையும் படிக்கிறார். அதனால் மன எழுச்சி கொண்டு, அந்த மண்டபம் கண்ணுக்கெதிரே இருக்கும் பூங்காவுக்கு நடுவில்தான் உள்ளது என்று தெரிந்துகொண்டு, மியூசியத்திலிருந்து ஓடோடிச் சென்று அந்த மண்டபத்தையும் பார்க்கிறார். எல்லாமே ஒரு சிறுகதையின் சுருக்கம் போல உள்ளது.

ஒருமுறை கிருஷ்ணதேவராயர் தம் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயணம் செய்தபோது, ராயவேலூரிலிருந்து வில்வநல்லூருக்குச் சென்றுகொண்டிருந்தார். வழியில் அழகான ஒரு மாளிகை தெரிந்தது. மங்கள் இசை ஒலிக்க, நறுமணப்புகை எழுந்து வந்தது. அரசன் அது கோவிலாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் அந்த மாளிகையை நோக்கி கைகுவித்து வணங்கினார். பாதையோரமாக நின்றிருந்த யாரோ ஒரு உள்ளூர்க்காரர் அக்காட்சியைப் பார்த்து சிரித்தார். உடனே அமைச்சர் அவரை உடனே அழைத்து விசாரித்தார். அவர் அந்த ஊரைச் சேர்ந்த நாட்டியக்காரியான ஆயி என்பவளின் வீடு என்றும் கோவிலல்ல என்றும் தெரிவித்தார். ஒரு நாட்டியக்காரியின் வீட்டுக்கு முன்னால் தலைவணங்கி நின்றுவிட்டோமே என்கிற அவமானத்தால் கூனிக் குறுகினார் அரசர். அக்கணமே அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்குமாறு தன் படையினருக்கு ஆணையிட்டார்.

அதற்குள் விஷயமறிந்த ஆயி வீட்டைவிட்டு வெளியே வந்து மன்னிப்பை யாசித்தாள். ஆயினும் அரசர் மனமிரங்கவில்லை. அந்த வீட்டை இடித்தே ஆகவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு ஆயி அந்த வீட்டை தானே தரைமட்டமாக்குவதாகவும் அந்த வாய்ப்பை தனக்கு நல்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாள். அத்திட்டத்துக்கு அரசர் சம்மதம் தெரிவித்துவிட்டு அகன்றுவிட, அன்றே அந்த வீட்டை இடிக்கும் வேலை தொடங்கியது. ஆயி அந்த இடத்தில் அகலமாக ஒரு குளத்தை வெட்டினாள். அந்தக் குளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி ஆயிகுளம் என்று பெயர் பெற்றது. ஊரார் அனைவருக்கும் அந்தக் குளம் குடிநீர்க்குளமாக பயன்பட்டது. தன் செயல் நகைப்புக்குரிய ஒன்றாக மாறிவிடக் கூடாது என்பதற்காக  தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுத்தார் அரசர். தனக்குக் கிடைத்த தண்டனையைக்கூட, மக்களுக்கு உதவுவதற்காக தனக்குக் கிடைத்த வாய்ப்பெனக் கருதி தன் வீட்டை இடித்து ஒரு குளமாக மாற்றிவிட்டாள் ஒரு நாட்டியக்காரி.

அந்தக் காலத்துத் தலைமுறையினருக்கு மட்டுமன்றி, பல நூற்றாண்டுகள் கடந்து இன்றளவும் புதுச்சேரி நகருக்கு தண்ணீர் விநியோகம் செய்கிற ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது ஆயிகுளம். என்றென்றும் அவளை வணக்கத்துக்குரியவளாக நினைவில் நிறுத்தும் அடையாளமாகவே அந்த ஆயி மண்டபம் நிற்கிறது. ஆயி மண்டபத்தைப் பார்த்து மகிழ்ந்த சந்தியாராணி இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஆயி குளத்தையே நேரில் பார்த்திருக்கலாம்.

பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த புதுச்சேரியின் முதல் முதலமைச்சர் குபேர். அவர் வசித்த வீடு சுற்றுலாப்பயணியர் விடுதியாக இப்போது செயல்படுகிறது. அந்த விவரம் எதுவும் தெரியாமலேயே அந்த விடுதியில் அறையெடுத்துத் தங்கியிருக்கிறார் சந்தியாராணி. உண்மை தெரிய வரும்போது வியப்பில் மூழ்கிவிடுகிறார். அந்த விடுதியில் ஓர் ஊழியராகப் பணிபுரிகிறார் ஒருவர். அவர் பெயர் பாஸ்கரன். குபேரின் பேத்தியின் கணவர். அது அவருக்கு ஏற்படும் அடுத்த வியப்பு. பாஸ்கரன் வழியாக அவர் கேட்டறியும் குபேரின் காதல் கதை அதற்கடுத்த வியப்பு.

குபேரின் அப்பா பிரெஞ்சு அதிகாரி. அம்மா பிரெஞ்சு அப்பாவுக்கும் இந்திய அம்மாவுக்கும் பிறந்த பெண். குபேர் திருமணம் செய்துகொண்டவரும் ஓர் இந்தியப்பெண். காதல் திருமணம். பிரெஞ்சுக் குடியுரிமை இருக்கும் காரணத்தால் குபேரின் குடும்பமே பிரான்ஸ்க்கு குடிபெயர்ந்துவிடுகிறது. ஆனால் குபேரின் மனைவிக்கு பிரான்ஸ் மீது எந்த நாட்டமும் இல்லை. அவருக்காக குபேரும் புதுச்சேரியிலேயே தங்கிவிடுகிறார். குபேரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பிரான்ஸ்க்குச் சென்றுவிடுகிறார்கள். பாஸ்கரனின் மனைவியும் கூட பிரான்ஸில்தான் இருக்கிறார். ஆனால் புதுச்சேரிக்காரரான பாஸ்கரனுக்கு அந்த நகரத்தை விட்டுப் பிரிய மனமில்லை. மண் மீது மனிதர்களுக்கு இருக்கும் காதலும் பற்றும் புரிந்துகொள்ள முடியாத புதிர். இந்தப் பயண நூலை சுவாரசியமானதாக ஆக்குபவை இத்தகு சின்னச்சின்ன தகவல்களே.

பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று, பிரான்ஸில் குடியேறி, பிரெஞ்சியர்களாக தம்மைக் காட்டிக்கொள்வதில் மக்களுக்கு உள்ள ஆர்வத்தை பல இடங்களில் பார்த்தும் கேட்டும் பதிவு செய்திருக்கும் சந்தியாராணி, பிரான்ஸில் குடியேறிய ஒரு பெண் புதுச்சேரிக்குத் திரும்பி வருவதற்காக ஆண்டுக்கணக்காக ஆவலுடன் காத்திருந்த ஓர் அபூர்வக்கதையையும் கேட்டு பதிவு செய்திருக்கிறார். புதுச்சேரியில் பேராசிரியராகப் பணிபுரியும் ஒருவருடைய சகோதரி அவர். இளம்பருவத்தில் அவரை பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஒருவருக்கு மணமுடித்து பிரான்ஸ்க்கு அனுப்பிவைக்கிறது அவருடைய குடும்பம்.

கணவர் விசித்திரமான இயல்புடையவர். தன் தமிழடையாளத்தை அவர் விரும்புவதில்லை. எல்லாத் தருணங்களிலும் ஒரு பிரெஞ்சுக்காரனாகவே தன்னை முன்னிறுத்துக்கொள்ள விரும்புகிறார் அவர். பிரெஞ்சே வீட்டுமொழியாகிறது. மனைவியிடமும் பிறந்த பிள்ளைகளிடமும் பிரெஞ்சிலேயே பேசுகிறார். தமிழ் அடையாளத்தை நேசிக்கும் அவர் மனைவி தமிழைப் பேசமுடியவில்லையே என்று துயரத்தில் மூழ்குகிறார். பிள்ளைகள் பிறக்கிறார்கள். அவர்களையும் பிரெஞ்சு மொழியிலேயே பழக்குகிறார் கணவர். மனைவியை புதுச்சேரிக்குச் செல்லவும் அவர் அனுமதிக்கவில்லை. தமிழ் மொழியை மறந்துவிடுவோமோ என்கிற அச்சம் வந்துவிடுகிறது அவருக்கு. அதனால் ஒவ்வொரு நாளும் சிற்சில நிமிடங்கள் தனக்குத் தெரிந்த தமிழை தனக்குத்தானே பேசி, தமிழை மறந்துவிடாமல் தனக்குள் காப்பாற்றி வைத்துக்கொள்கிறார். இப்படியே இருபது ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிடுகின்றன. அவர் மனசில் மட்டுமே தமிழ் வாழ்ந்து வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருமுறை புதுச்சேரிக்குத் திரும்பும் வாய்ப்பொன்று அவருக்குக் கிடைக்கிறது. தமிழில் பேச தனக்குக் கிடைத்த வாய்ப்பென அதை நினைத்து ஆசையோடு விமானமேறி புதுச்சேரிக்கு வருகிறார் அவர். அவர் முகத்தையே மறந்துவிட்ட அவருடைய சகோதர சகோதரிகளும் பெற்றோர்களும் அவரைச் சூழ்ந்து நிற்கிறார்கள். அவர் ஆவலோடு அனைவரோடும் பேசத் தொடங்குகிறார். அவர்கள் அவர் பேசும் மொழியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள். அவர் பேசும் தமிழ் அங்கே யாருக்கும் புரியவில்லை. எங்கோ கடந்த காலத்தில் ஒலித்த ஓசையென அவர் மொழி ஒலிக்கிறது. ஒரு கால் நூற்றாண்டில் அவர் நெஞ்சில் வாழ்ந்த மொழி ஒன்றாகவும் எதார்த்தத்தில் புழக்கத்தில் இருக்கும் மொழி வேறொன்றகவும் இருக்கிறது. அவரும் குடும்பத்தினரும் மாறி மாறித் திகைப்புடன் பார்த்துக்கொள்ளும் காட்சியை சந்தியாராணி சித்தரித்திருக்கும் விதத்தில் ஒரு சிறுகதைக்குரிய கோணம் பொதிந்திருக்கிறது.

புதுச்சேரியை மட்டுமன்றி காரைக்காலுக்கும் சென்று பார்த்துவிட்டு வருகிறார் சந்தியாராணி. பார்த்த எல்லா இடங்களைப்பற்றியும் விரிவான சித்திரங்களை நூலெங்கும் அளித்திருக்கிறார். அவை மட்டுமன்றி,  அங்கு பார்க்கவும் பழகவும் கிடைத்த மனிதர்களோடு உரையாடிப் பெற்ற அனுபவங்களையும் இடையிடையில் இணைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டுவிதமான குறிப்புகளும் சரியான விகிதத்தில் அமைந்திருப்பதால் சந்தியாராணியின் பயணநூல் ஒரு புனைவுநூலுக்கு இணையான மதிப்பைப் பெற்றுவிடுகிறது.

 

(புதுவை என்னும் புத்துணர்வு. கன்னட மூலம்: என். சந்தியாராணி. தமிழில்: கே.நல்லதம்பி. அகநாழிகை பதிப்பகம். 26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு – 603001. விலை. ரூ.180)

 

( புக் டே – இணையதளம் – 20.12.2022 )