Home

Sunday 25 December 2022

வணக்கம் சொல்லும் குரங்கு - சில பாடல்கள்

 நான்கு பாடல்கள்

 

எருமை

 

எங்கள் வீட்டு எருமை

இரும்பு வண்ண எருமை

செடியும் கொடியும் கண்டால்

இழுத்துத் தின்னும் எருமை

 

கொம்பைக் காட்டி மிரட்டும்

வாலைச் சுழற்றி அடிக்கும்

அசைந்து அசைந்து நடக்கும்

வயிறு பெருத்த எருமை

 

காட்டுப் பக்கம் நடக்கும்

கண்ட இடத்தில் திரியும்

குளத்தைக் கண்டால் இறங்கி

குழப்பிவிடும் எருமை

 

சுதந்திரமான எருமை

சுற்றித் திரியும் எருமை

பொழுது சாயும் வேளை

வீடு திரும்பும் எருமை

  

மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்

மஞ்சள் வண்ண மாம்பழம்

மூக்கு சிறுத்த மாம்பழம்

தோப்பில் கிடைத்த மாம்பழம்

 

வண்டு துளைக்கவில்லை

உருண்டையான மாம்பழம்

அணிலும் கடிக்கவில்லை

அழகான மாம்பழம்

 

புதையல் போலக் கிடைத்தது

புத்தம் புதிய மாம்பழம்

தகதகவென்று மின்னுது

தங்கக்கட்டி மாம்பழம்

 

கத்தி எடுத்து வாடா

நறுக்கி நறுக்கித் தின்னலாம்

சப்பி முடித்த கொட்டையை

தோப்பில் புதைத்து வைக்கலாம்

 

 

நாய்க்குட்டி

 

வா வா நாய்க்குட்டி

வாலை அசைக்கும் நாய்க்குட்டி

வள் வள் நாய்க்குட்டி

வட்டம் அடிக்கும் நாய்க்குட்டி    

 

கரிய வண்ண நாய்க்குட்டி

காலைச் சுற்றும் நாய்க்குட்டி

குறும்புக்கார நாய்க்குட்டி

கூடையை உருட்டும் நாய்க்குட்டி

 

ஓடு ஓடு நாய்க்குட்டி

மரத்தைத் தொடு நாய்க்குட்டி

திரும்பி வா நாய்க்குட்டி

செல்லமான நாய்க்குட்டி

 

துள்ளி ஓடும் நாய்க்குட்டி

தூணைச் சுற்றும் நாய்க்குட்டி

தாவிக் குதிக்கும் நாய்க்குட்டி

தரையில் புரளும் நாய்க்குட்டி

 

பாய்ந்து ஓடு நாய்க்குட்டி

பந்தை எடு நாய்க்குட்டி

பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி

பணிவைக் காட்டும் நாய்க்குட்டி

 

 

ஆடு

 

ஆடே ஆடே ஓடு

ஆசை ஆடே ஓடு

மேடு வரைக்கும் ஓடு

வேகமாக ஓடு

 

தலையை அசைத்து ஆடு

சாய்ந்து சாய்ந்து ஆடு

பச்சைப் புல்லைத் தேடு

தின்று முடித்து ஆடு

 

துள்ளித் துள்ளி ஓடு

துவண்டு விடாதே ஓடு

முன்னால் பார்த்து ஓடு

முகம்திருப்பாமல் ஓடு

 

மேமே என்று பாடு

விண்ணைப் பார்த்துப் பாடு

உரத்த குரலில் பாடு

ஊக்கம் கொண்டு பாடு