தொகுப்பாசிரியரான கவிதா சந்திரபோஸ் இந்தத் தொகுதி உருவான விதத்தைப்பற்றித் தன் முன்னுரையில் எழுதியிருக்கும் சுருக்கமான குறிப்பு படிப்பதற்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது. காற்றுக்கு எல்லாத் திசைகளும் சொந்தமாக இருப்பதுபோல படிக்கத் தொடங்கும் பழக்கத்துக்கும் எல்லாத் திசைகளும் சொந்தமானவையே. எந்தத் திசையிலிருந்து வேண்டுமானாலும் யார் வழியாக வேண்டுமானாலும் உருவாகி ஒட்டிக்கொள்ளும். கவிதாவின் பயணமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.
எல்லாச் சிறார்களைப் போலவே, சிறுவயதில் அவருக்கு நாளிதழ்களோடு வழங்கப்படும் இணைப்பிதழ்களைப் புரட்டிப் பார்க்கும் பழக்கம்தான் முதலில் தொடங்கியிருக்கிறது. எண்களை வரிசைப்படி இணைத்துக் கோடிழுத்து உருவப்படத்தை உருவாக்கும் ஆர்வம்தான் அந்தப் பழக்கத்துக்கான முதல் காரணம். வளர வளர, அந்த ஆர்வம் குறுக்கெழுத்துப்போட்டிப் பக்கத்தை விரித்துவைத்துக் கொண்டு நிரப்பும் முனைப்பை அளிக்கிறது. அடுத்து நாளிதழ்களின் இணைப்பிதழ்கள் தவிர, கடையில் விற்கும் வார, மாத இதழ்களை வாங்கி அவற்றில் பிரசுரமாகியிருக்கும் போட்டிப்பக்கத்தைத் திறந்துவைத்துக்கொண்டு நிரப்புவதாக வளர்ச்சியடைகிறது. ஏதோ ஒரு தருணத்தில் குறுக்கெழுத்துப்போட்டி அச்சிடப்பட்ட பக்கத்துக்கு முன்னும் பின்னும் பிற பக்கங்களில் வெளியாகியிருக்கும் கதை, கவிதை, கட்டுரைகளையும் பொழுதுபோக்குக்காகப் படிக்கத் தொடங்கியிருக்கிறார். அந்த வாசிப்புப்பழக்கம் தானாகவே அவரை இலக்கியம் என்னும் பெருங்கடலை நோக்கி அழைத்துவந்துவிட்டது.
எண்ணற்ற
பழைய, புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத்தொகுதிகளைப் படித்த பழக்கமுள்ள கவிதாவுக்கு ஏதோ
ஒரு கணத்தில் தனக்குப் பிடித்த அனைத்து எழுத்தாளர்களின் மிகச்சிறந்த கதைகளைக் கொண்ட
ஒரு பெருந்தொகுதியை உருவாக்கவேண்டும் என்கிற கனவு தோன்றியிருக்கிறது.
தான்
எழுதுகிற ஒவ்வொரு சிறுகதைக்கும் நீண்ட நேரம் யோசித்து தலைப்பிடும் எழுத்தாளர்கள் தன்
தொகுப்புக்குத் தலைப்பிட தொகுப்பின் மிகச்சிறந்த சிறுகதையின் தலைப்பையே தேர்ந்தெடுப்பது
வழக்கம். புத்தகத்துக்கு வசீகரமான ஓர் ஈர்ப்பு இருக்கவேண்டும் என எழுத்தாளர்கள் நினைப்பதுதான்
அதற்குக் காரணம்.
தனக்குப்
பிடித்த முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதியை உருவாக்கும் ஒரு
திட்டத்துக்கான கனவை உருவாகிக்கொண்டதுமே, எந்தக் கதையைத் தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பத்துக்கு
இடமளிக்காமல் ஒவ்வொரு எழுத்தாளரும் தம் தொகுப்புக்குச் சூட்டியுள்ள தலைப்பைக் கொண்ட
கதையையே தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டார். அவ்வகையில் கவிதா தமிழில் இப்போது எழுதிக்கொண்டிருக்கும்
48 சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துவிட்டார். வண்ணதாசன், நாஞ்சில்நாடன், அம்பை, ஜெயமோகன், அகரமுதல்வன்,
இமையம், கிருத்திகா, எஸ்.செந்தில்குமார், திருச்செந்தாழை, நவீன், பாமா, சு.வேணுகோபால்,
வெண்ணிலா என முக்கியமான மூத்த, புதிய எழுத்தாளர்கள் அனைவருடைய சிறுகதைகளும் இத்தொகுதியில்
உள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு கோணத்தில் முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளது.
இன்றைய
நவீன தமிழ்ச்சிறுகதை உலகத்தின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை இத்தொகுப்பின் வழியாகப்
பார்க்கமுடிகிறது. கிழக்கு வானில் முளைத்தெழுந்து வரும் சூரியனை எத்தனை கோணத்தில் பார்த்தாலும்
எப்போதும் புதுமையாகவும் அழகாகவும் காட்சியளிப்பதுபோல தமிழ்ச்சிறுகதைகளை எத்தனை விதங்களில்
பகுத்தும் தொகுத்தும் படித்தாலும் அவை வழங்கும் வாசிப்பின்பம் குறைவதில்லை. இப்படி
ஒரு புதுமையான முயற்சியில் இறங்கி இத்தொகுதியை உருவாக்கியிருக்கும் கவிதா சந்திரபோஸ்
பாராட்டுக்குரியவர். தொகுதியை அழகாக வெளியிட்டிருக்கும் தேநீர் பதிப்பகத்தினரும் பாராட்டுக்குரியவர்கள்.
இளைய
எழுத்தாளரான திருச்செந்தாழையின் ‘விலாஸம்’ இத்தொகுதியின் சிறப்பான கதைகளில் ஒன்று.
விலாஸம் என்னும் சொல்லுக்கு இரு பொருள்கள். ஒன்று முகவரி. இன்னொன்று ராம விலாஸ், ரங்க
விலாஸ் போல ஒரு மாளிகைக்கு வழங்கப்படும் பெயர். இரு பொருள்களும் இக்கதைக்குப் பொருந்தும்
விதமாக அமைந்துள்ளன. சாதாரண நிலையிலிருக்கும்
ஒருவன் உழைத்து ஓர் ஆளுமையாக உயர்ந்து நிற்பதை, பொதுவாக உலக வழக்கில் தன் முகவரியை
இந்த மண்ணில் அவனே பாடுபட்டு செதுக்கி நிலைநிறுத்திக்கொண்டான் என்று சொல்வது வழக்கம். இந்தக் கதையின் நாயகனாக வரும் தன்ராஜ் அப்படித்தான்
பாடுபட்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான். ஒரு காலத்தில் பெருமாள் முதலாளியிடம் தொழிலாளியாக
வேலை செய்த தன்ராஜ், அதே தொழிலைக் கற்று அவர் கண்முன்னாலேயே, அவர் தொடமுடியாத உயரத்தைக்
கொண்ட முதலாளியாக வளர்ந்துவிடுகிறார். தன் முகவரியைத் தானே உருவாக்கிக் கொண்டவர் அவர்.
பெருமாள்
முதலாளி வசிக்கும் மாளிகையின் பெயர் ராம விலாஸ். இன்று அவர் ஈட்டிய பெயரும் புகழும்
நிற்கிறதே தவிர, அவர் ஈட்டிய செல்வம் அடுத்தடுத்த தலைமுறைகளில் கரைந்து போய்விட்டது.
தன்ராஜ் தான் வசிக்கும் வீட்டுக்குப் பெயர் சூட்டவில்லை என்றபோதும் அவர் ஈட்டிய செல்வத்தின்
காரணமாக அவர் வீடு தானாகவே ஒரு விலாஸமாக மாறி உயர்ந்துகொண்டே வருகிறது. கண்ணுக்குத்
தெரியும் விலாஸம் மங்குவது தெரியாமல் மங்கிவருகிறது. பிறர் கண்ணுக்குத் தெரியாத ஒரு
விலாஸம் பிரகாசத்துடன் சுடர்விடத் தொடங்குகிறது.
பெருகிவரும்
சர்க்கரைநோயாளிகளுக்கு பொருத்தமான உணவாக சிறுதானியமும் கல் உப்பும் மருந்தாக அமையக்கூடும்
என்று தெரிந்த கணத்திலேயே முதல் ஆளாக அந்த வணிகத்தில் இறங்கி வெற்றி பெற்றவர் அவர்.
குப்பைக்குவியலாக குவிந்திருக்கும் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் நுட்பத்தைக்
கண்டறிந்ததும் அவர் வெற்றி மேலும் பெருகியது. எல்லா நேரங்களிலும் இயங்கக்கூடிய வகையில்
பல துணைப்பிரிவுகளை அவர் உருவாக்கியபடி இருந்தார். புதிய துணைப்பிரிவின் தொடக்க விழாவுக்கான
அழைப்பிதழை முதலாளியிடம் கொடுக்கச் செல்லும் புள்ளியிலிருந்துதான் கதையைத் தொடங்குகிறார்
திருச்செந்தாழை.
புதிதாகத்
தொடங்கவிருக்கும் பிரிவுக்கு பூட்டிக் கிடக்கும் தன் கிடங்குகளையே வாடகைக்குக் கொடுக்க
இசைகிறார் பழைய முதலாளி. பழைய முதலாளி அதைக் கொடுத்துவிடுவார் என்பது புதிய முதலாளிக்குத்
தெரியும். ஆனால் தன் இருப்பும் தோற்றமும் அசைவுகளும் பழைய முதலாளியின் முகத்திலோ பேச்சிலோ
ஏதேனும் ஒரு சலனத்தை அல்லது சுளிப்பை ஏற்படுத்த வேண்டும், அதைக் கண்ணாரக் கண்டு களிக்கவேண்டும்
என்பதுதான் புதிய முதாளியின் எதிர்பார்ப்பு. ஆனால் அது நடக்கவில்லை என்பதில் புதிய
முதலாளி ஏமாற்றம் கொள்கிறார். விலாஸம் ஈட்டிய செல்வம் கைவிட்டுச் சென்றாலும் விலாஸத்தின்
அகமனம் அசைக்கவியலாத மலையாகவும் அன்புக்கு உருகும் பனியாகவும் இருக்கிறது. எப்போதும்
சிரித்த முகத்தோடு காணப்படுவராகவே இருக்கிறார் பழைய முதலாளி. வினாடியில் ஆறில் ஒரு
பங்கு நேரத்துக்கு மேல் சிரிக்கமுடியாதவராக இருக்கிறார் புதிய முதலாளி. அந்த ஒரு விஷயத்தில்
விலாஸம் அசைக்கமுடியாத இரும்புக் கோட்டையாக மாறிவிடுகிறது. இந்த உலகத்தில் அனைத்தையும்
நாம் பாடுபட்டு அடையலாம். ஆனால் அன்பையும் கனிவையும் எப்படி அடையமுடியும். அவை ஆழ்நெஞ்சிலிருந்து
தழைத்தெழுபவை. கதை தன் போக்கில் கடத்தும் ஒரு பேருண்மை இது.
தன்ராஜின்
தொடர்வெற்றிக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள கதையின் இறுதித்தருணம் உதவுகிறது. அது நாம்
உணர்ந்துகொள்ளும் இன்னொரு உண்மை. மழையின் காரணமாக வெட்டவெளிக் களத்தில் அடுக்கப்பட்டிருக்கும்
மூட்டைகள் நனைவதைப் பார்த்ததும் கொக்கிகளை எடுத்துக்கொண்டு தானே மூட்டைகளைத் தூக்கி
இடம் மாற்றுவதற்கு ஓடுகிறார் அவர். எது வெற்றி, எது விலாஸம் என திருச்செந்தாழை எந்தத்
தீர்ப்பும் தரவில்லை. அது அக்கதையைப் படிக்கும் வாசகர்களே ஆய்வு செய்து உணர்ந்துகொள்வதற்கு
ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
நாஞ்சில்
நாடனின் ‘அம்மை பார்த்திருந்தாள்’ சிறுகதையும் வாசகர்களே ஆய்வு செய்து சரி, தவறுகளை
உணர்ந்துகொள்ள வேண்டிய சிறுகதை. வடக்கூர், தெக்கூர் என இரு பிரிவுகளாகப் பிரிந்திருக்கும்
ஊரில் அந்தக் கதை நடக்கிறது. வடக்கூரில் உயர்ந்த சாதியினரும் நடுத்தட்டு சாதியினரும்
வாழ்கிறார்கள். தெக்கூரில் தாழ்த்தப்பட்ட சாதியினர்
வாழ்கிறார்கள். குருணைக்கஞ்சியோ பயத்தங்கஞ்சியோ கிடைத்தாலே விருந்து என்கிற சூழலில்
வசிக்கிறவர்கள் இரண்டு பகுதிகளிலும் இருக்கிறார்கள்.
இரு தரப்பினரையும்
வறுமை சம அளவில் பாதித்தாலும் சாதிநிலை அவர்களைச் சமமாக நினைப்பதில்லை. உயர்சாதிக்
கூட்டத்தினர் தம்மை எல்லா நிலைகளிலும் உயர்ந்தவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள். அந்தக்
கண்ணோட்டம் பிழை என ஒரு சிலருக்குத் தெளிவு இருந்தாலும் அவர்களுடைய சொல் அம்பலம் ஏறுவதில்லை.
வடக்கூரில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க தம்மை அனுமதிப்பதில்லை என்பது ஆறாத புண்ணாக
தெக்கூரினரின் நெஞ்சில் உள்ளது. ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், வடக்கூரினர் அப்புண்ணை
மீண்டும் மீண்டும் கிளறி ஆறவிடாமல் செய்கிறார்கள்.
கதை நிகழும்
போக்கில் நாஞ்சில் நாடன் தரும் சிறுசிறு குறிப்புகள் இக்கதையை வாசிப்பதற்கான மனநிலையை
வாசகர்களுக்கு அளிக்கின்றன. எட்டாம் வகுப்பு படிக்கிற சுப்பையாவின் பார்வையில் கதை
விரிகிறது. தூங்கி எழுந்துவந்து பாலத்துக்கு அருகில் நின்றிருக்கிறான் அவன். அவனோடு
படிக்கிற இன்னொரு பையன் அப்போது பால்வாளியோடு நடந்துபோகிறான். அவனை நிறுத்தி பேச்சுக்
கொடுக்கும்போதுதான் தெக்கூரில் வேதக்கோவிலுக்கு முன்னால் பால் அளிக்கும் செய்தியைத்
தெரிந்துகொள்கிறான்.
பசித்திருக்கும்
தன் குடும்பத்துக்கு அந்தப் பால் ஏதேனும் ஒரு வகையில் தன் குடும்பத்தினரின் பசியைத்
தணித்துக்கொள்ள உதவும் என அவன் நினைக்கிறான். அதனால் ஓட்டமாக ஓடி தன் வீட்டில் சமையல்கட்டிலிருந்த
வாளியொன்றை எடுத்துக்கொண்டு தெக்கூரை நோக்கிச் செல்கிறான். பால்வேனுக்கு முன்னால் ஏற்கனவே
பலர் வரிசையில் நின்று பால் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். அவனோடு படிக்கிற சிறுவர்களும்
அக்கூட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் வரிசையில் அவனும் நின்றுகொள்கிறான்.
வடக்கூரைச்
சேர்ந்த ஒரு பையன் பால் வாங்க வந்து நிற்கிற காட்சியைக் கண்டு அங்கு நின்றிருந்த தெக்கூர்
ஆட்கள் ஏளனம் செய்கிறார்கள். அவமானப்படுத்தும் சொற்களைச் சொல்கிறார்கள். சுப்பையாவுக்கு
உடலும் மனமும் சுருங்கிவிடுகின்றன. வேனில் நின்றபடி அதைப் பார்த்துவிட்ட ஒருவன் வந்து
அனைவரையும் அதட்டுகிறான். கிறிஸ்துவின் முன் வேறுபாடு என்னும் சொல்லுக்கே இடமில்லை
என்று சொல்லி அவர்களுடைய வாயை அடக்குகிறான். சுப்பையாவின் வாளியில் பாலை நிரப்பி அனுப்புமாறு
சொல்கிறான்.
அக்கூட்டத்தில்
தனக்குக் கிடைத்த ஆதரவை நினைத்து சுப்பையாவுக்கு ஆறுதலாக இருக்கிறது. பால் நிறைந்த
வாளியை எடுத்துக்கொண்டு வடக்கூரை நோக்கி நடக்கத் தொடங்குகிறான். இரு ஊர்களுக்கு இடையில்
எல்லையாக இருக்கும் இசக்கியம்மை கோவிலைத் தாண்டி நடக்கும்போது அங்கே ஏரிக்கரையோரமாக
அமர்ந்துகொண்டு அரட்டையடித்துக்கொண்டிருந்த வடக்கூர் கும்பல் அவனை அழைக்கிறது. தெக்கூரிலிருந்து
பால் வாங்கிவந்ததைத் தெரிந்துகொண்டதும் அவனைக் கண்டிக்கிறது. அந்த வாளியைப் பிடுங்கி
பாலையெல்லாம் தண்ணீரில் கவிழ்த்துவிட்டு வெறும் வாளியை வீசுகிறான் ஒருவன்.
அவர்கள்
முன்னால் கையறுநிலையில் பேச்சின்றி நிற்கும் சுப்பையா குனிந்து வாளியை எடுத்து தண்ணீரில்
நன்றாகக் கழுவி எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கிறான். வாளியோடு ஏன் வருகிறான்
என வீட்டில் இருப்பவர்களுக்குச் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக கரையோரமாக வளர்ந்துநிற்கும்
கொடுப்பைக்கீரையைப் பறித்து வாளியை நிறைத்துக்கொண்டு செல்கிறான். நடந்தவை அனைத்துக்கும்
சாட்சியாக இசக்கியம்மை பார்த்தபடி பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். இத்தனை ஆண்டுகளுக்குப்
பிறகும், நாஞ்சில்நாடன் சிறுகதையில் சித்தரித்திருக்கும் இக்காட்சி இன்றும் ஏதேனும்
ஒரு கிராமத்தில் துரதிருஷ்டவசமாக எங்கோ ஒரு மூலையில் நடக்கும் உண்மைச்செய்தியாக இருப்பதால் இன்றைய காலத்துக்கும்
இப்படிப்பட்ட கதை பொருத்தமாக இருக்கிறது.
சாதி
மீது கொண்ட பற்றின் காரணமாக மோதல்போக்கை இரு பிரிவினரும் வளர்த்துக்கொண்டே போகும் சூழல்,
இதே தொகுதியில் உள்ள சு.வேணுகோபால் எழுதிய ‘பூமிக்குள் ஓடுகிறது நதி” என்னும் சிறுகதையிலும்
இடம்பெற்றிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து
விவாதிப்பதற்காக ஒருநாள் இரவில் மேல்சாதிக்காரர்கள் கூடி உரையாடும் பஞ்சாயத்திலிருந்துதான்
கதையைத் தொடங்குகிறார் வேணுகோபால். பஞ்சாயத்தின் உரையாடல் செல்லும் திசை சரியில்லை
என்பதைத் தனிமனிதனாகச் சுட்டிக் காட்டுகிறார் விருமாண்டி. அவர் ஆசிரியர். ஆனால் அவர்
பேச்சு அங்கு எடுபடவில்லை. சில துடுக்கான இளைஞர்கள் அவரைப் பேசவிடாமல் தடுத்து நிறுத்தி
அவமானப்படுத்துகின்றனர். சமரசத்தை விரும்பாத அவர்களோடு பேசிப் பயனில்லை என்ற முடிவோடு
அங்கிருந்து வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறார் அவர்.
சாதிகள்
வேறுவேறாக இருந்தாலும் காலம்காலமாக ஒட்டி உறவாடி வந்த போக்கை அறுத்து வீசுவதிலேயே குறியாக
இருக்கும் பிடிவாதத்தை விருமாண்டியின் மனம் ஏற்க மறுக்கிறது. அவர் வீட்டுக்கு வந்தபோது
பிறந்திருக்கும் பேரனுக்கு தொட்டில் கட்டும் சடங்கு செய்வதற்காக தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பிலிருந்து
வந்திருக்கும் சுப்பம்மாவின் வரவை உணர்கிறார். வாத்தியார் மீதும் வாத்தியார் குடும்பத்தினர்
மீதும் அன்பும் மதிப்பும் கொண்டவள் சுப்பம்மா. சடங்குகளை முடித்துவிட்டு தன் வீட்டுக்குத்
திரும்பும் சுப்பம்மாவை பின்கட்டு வாசல் வழியாக வயல்வெளிக்காடு வரைக்கும் அழைத்துச்
சென்று வழியனுப்பிவிட்டு வருகிறார் விருமாண்டி.
பூமிக்கு
மேலே ஓடும் நதியை வேண்டுமானால் கரையை உயர்த்தித் தடுத்துக்கொள்ளலாம். உன் நதி, என்
நதி என பிரித்துக்கொள்ளலாம். பூமிக்குக் கீழே கண்ணுக்குப் புலப்படாமல் ஓடும் நதியின்
ஓட்டத்தை ஒருவராலும் நிறுத்தமுடியாது. அது எல்லாக் காலத்திலும் ஓடிக்கொண்டே இருக்கும்.
எல்லாத் திசைகளிலும் ஓடிக்கொண்டே இருக்கும். விருமாண்டிக்கும் சுப்பம்மாளுக்கும் இடையிலுள்ள
அன்பு எளியதொரு எடுத்துக்காட்டு மட்டுமே. அவ்விதமாக மறைந்து பெருக்கெடுத்தோடும் ஏராளமான
நதிகள் இந்த மண்ணில் என்றுமிருக்கும். ஒருபுறம் மோதுவதற்குத் தம்மைத் தயார்ப்படுத்தும்
கூட்டத்தைச் சித்தரித்தபடியே, அதன் மறுபுறத்தில் கண்ணுக்கு மறைவாக நிகழும் அன்புப்பரிமாற்றத்தின்
சித்திரத்தையும் காட்டுகிறார் வேணுகோபால்.
இப்படி,
ஒவ்வொரு கதையையும் படித்துவிட்டு அது சித்தரிக்கும் உலகத்தை முன்வைத்து ஒவ்வொருவரும்
மணிக்கணக்கில் உரையாடி மகிழ முடியும். அது ஒரு மாபெரும் அனுபவமாக இருக்கும். நம் நேரடி
வாழ்வில் காணமுடியாத பல உலகங்களை இந்தக் கதைகள் வழியாக நாம் காணமுடியும். அவற்றை முன்வைத்து
சிந்தித்து நம் ஞானத்தை விரிவாக்கிக்கொள்ளவும் முடியும். இத்தொகுப்பின் வழியாக இப்படி
ஒரு வாய்ப்பை வாசகர்களுக்கு நல்கியிருக்கும் கவிதா சந்திரபோஸுக்கு வாழ்த்துகள்.
(தலைப்புக்கதைகள். தொகுப்பாசிரியர்: கவிதா
சந்திரபோஸ். தேநீர் பதிப்பகம், 24/1, மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்ப்பேட்டை
– 635851. விலை. ரூ550)
(புக் டே இணையதளம் – 06.02.2026)
