சென்ற நூற்றாண்டில் தொண்ணூறுகளில் தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற இலக்கிய நண்பர்கள் இணைந்து ’விளக்கு’ என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். அந்த அமைப்பின் வழியாக 1995ஆம் ஆண்டு முதல் புதுமைப்பித்தன் நினைவாக இலக்கியத்தில் மிகச்சிறப்பாகப் பங்காற்றியவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக விளக்கு விருதை வழங்கிவருகிறார்கள்.
முதல் விருதைப் பெற்றவர் சி.சு.செல்லப்பா. அவரைத் தொடர்ந்து பிரமிள், கோவை ஞானி, நகுலன், பூமணி, தேவதேவன், அம்பை என பல முக்கிய ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. 2016ஆம் ஆண்டுமுதல் புனைவிலக்கியத்தோடு அல்புனைவுத்துறையில் சிறப்பான வகையில் பங்காற்றியவர்களுக்கும் வழங்கத் தொடங்கியது. 2024ஆம் ஆண்டுமுதல் நுண்கலைப் பிரிவில் பங்காற்றியவர்களுக்கென ஒரு விருதையும் இணைத்துக்கொண்டது. விருதாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் பாராட்டுப்பத்திரமும் வழங்கப்படுகிறது. படைப்பிலக்கியப் பிரிவில் இதுவரை 28 படைப்பாளிகள் விருதைப் பெற்றிருக்கின்றனர். நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் வாசலில் அப்படைப்பாளிகளின் உருவப்படங்கள் அச்சிடப்பட்ட பெரிய சுவரொட்டி வருகையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
2024ஆம்
ஆண்டுக்குரிய புதுமைப்பித்தன் நினைவு விருதுகளுக்கு உரியவர்களாக, படைப்பிலக்கியப் பிரிவில் எம்.கோபாலகிருஷ்ணன், ஆய்வுத்துறைப் பிரிவில் தமிழவன்,
ஓவியத்துறைப் பிரிவில் மூத்த ஓவியர் சந்ரு ஆகிய மூவருடைய பெயர்களும் அறிவிக்கப்பட்டிருந்தன.
விருது வழங்கும் விழா 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு
நூலகத்தில் உள்ள நூல்கள் வெளியீட்டுக்கூடத்தில் முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.
சென்னையில் புத்தகக்கண்காட்சி கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலிலும் அரங்கு
நிறைந்த கூட்டத்தினரிடையே விழா இனிதே நடைபெற்றது.
தமிழ்த்தாய்
வாழ்த்தைத் தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து வந்திருந்த விளக்கு அமைப்பின் தலைவர் நா.கோபால்சாமி
சுருக்கமான அறிக்கையை வாசித்தபின்னர் விருது விழா தொடங்கியது. பார்வையாளர்களின் கைத்தட்டல்களுக்கிடையில் அமெரிக்காவைச் சேர்ந்த விஜய் ஜானகிராமன் படைப்பாளரான
எம்.கோபாலகிருஷ்ணனுக்கு விருதளித்தார். ஆய்வாளர் தமிழவனுக்கு வை.சு.தேவ் அவர்களும்
ஓவியர் சந்ருவுக்கு பாலா சுவாமிநாதனும் விருதுகளை
அளித்தனர். கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான மதிமிதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
கடந்த
முப்பத்தைந்து ஆண்டுகளாக படைப்பிலக்கியத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் புனைகதையாசிரியரான
எம்.கோபாலகிருஷ்ணன் இதுவரை ஆறு நாவல்களையும் இரு குறுநாவல்களையும் ஆறு கதைத்தொகுதிகளையும்
ஐந்து கட்டுரைத்தொகுதிகளையும் ஒரு கவிதைத்தொகுதியையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
இந்தியிலிருந்து ஐந்து நூல்களையும் ஆங்கிலத்திலிருந்து ஏழு நூல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
கதா விருது, ஸ்பேரோ விருது, கண்ணதாசன் விருது, பாவை விருது போன்ற விருதுகள் அவருக்கு
வழங்கப்பட்டிருக்கின்றன.
எம்.கோபாலகிருஷ்ணனுடைய
படைப்பிலக்கியப் பங்களிப்பைக் குறித்து உரையாற்றிய கவிஞர் க.மோகனரங்கன், ஓர் இலக்கியவாதிக்கு
அடிப்படையில் இருக்கவேண்டிய திவீரத்தன்மை நிறைந்தவராக கோபாலகிருஷ்ணனைக் குறிப்பிட்டார்.
அவர் எழுதிய அம்மன் நெசவு, மணற்கடிகை, தீர்த்தயாத்திரை, மனைமாட்சி, வேங்கைவனம், மனையறம்
ஆகிய நாவல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களையும் வெவ்வேறு விதமான சிக்கல்களைப் பேசுபொருளாகவும்
கொண்டிருப்பதை தனித்தனியாகச் சுட்டிக்காட்டி விரிவாக உரையாற்றினார். மூத்த படைப்பாளிகளான
அசோகமித்திரன், தி.ஜானகிராமன் ஆகிய இருவருடைய மொழிக்கும் இடைப்பட்ட ஒன்றாக கோபாலகிருஷ்ணனின்
படைப்புமொழியைக் கருத இடமுண்டு என்றும் குறிப்பிட்டார். சுருக்கமாக, திரட்டியெடுத்த
தகவல்களை அழகான கலையாக மாற்றும் நுட்பமான ரசவாதம் தெரிந்தவராக கோபாலகிருஷ்ணனை வரையறுக்கமுடியும்
என்றும் கூறினார்.
கோபாலகிருஷ்ணன்
படைப்புலகத்தை முன்வைத்து உரையாற்றுவதற்காக வந்த அகரமுதல்வன் கோபாலகிருஷ்ணனை தமிழில்
நிகழ்ந்த அற்புதம் என்று குறிப்பிட்டார். பலநூறு பேர் சேர்ந்து வடம் பிடித்து இழுக்க,
தெய்வத்தைச் சுமந்தபடி முன்னால் நகர்ந்து செல்லும் தேர்ச்சக்கரத்துக்குப் பின்னால்
தேர்க்கட்டையிட்டு தேரின் தொடர்பயணத்துக்கு உதவி செய்பவர்களைப்போல ஒவ்வொரு மொழியிலும்
முன்னோடிப்படைப்பாளிகள் மறைவாக நின்று பங்களிப்பைச் செலுத்துகிறார்கள் என்றும் கோபாலகிருஷ்ணன்
அத்தகு முன்னோடிப் படைப்பாளி எனவும் குறிப்பிட்டார் அகரமுதல்வன். சில ஆண்டுகளுக்கு
முன்பு தன்னுடைய ஆகுதி என்னும் அமைப்பின் வழியாக சென்னையில் கோபாலகிருஷ்ணன் படைப்புலகத்தைப்பற்றி
உரையாற்றும் வகையில் ஒருநாள் கருத்தரங்கத்தை முன்னின்று நடத்திய அனுபவத்தையும் நினைவுகூர்ந்தார்.
தமிழவன்
என்கிற கார்லோஸ் பெங்களூரு பல்கலைக்கழகத்திலும் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்திலும்
பணியாற்றி ஓய்வு பெற்றவர். சில ஆண்டு காலம் போலந்து நகரில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திலும்
பணியாற்றியிருக்கிறார். புதிய ஆய்வுமுறைகளை தமிழிலக்கியப்பரப்புக்கு அறிமுகப்படுத்தியவர்.
பதினைந்துக்கும் மேற்பட்ட கோட்பாட்டு ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். அவற்றைத் தவிர,
ஆறு நாவல்களையும் மூன்று சிறுகதைத்தொகுதிகளையும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் அவர்
எழுதிய தன்வரலாற்று நூல் வெளிவந்துள்ளது.
தமிழவனின் ஆய்வுலகத்தை முன்வைத்து திறனாய்வாளர் சண்முகம் உரையாற்றினார். தமிழவனின் மாணவர் வரிசையில் கல்விப்புலம் சாராத முதல் தலைமுறையைச் சேர்ந்தவராக அவர் தன்னை முன்வைத்துக்கொண்டார். இலக்கியத்தில் ஆர்வமுள்ள இளைஞனாக க்ரியா புத்தகக்கடைக்குச் சென்று தமிழவன் எழுதிய ஸ்ட்ரக்சுரலிசம் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு அவரைச் சந்திக்கச் சென்ற அனுபவத்தை சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டார். ஒற்றைக்கோணத்தில் பார்க்காமல் ஒரு படைப்பை பல்வேறு கோணங்களில் விரிவாக அணுகி ஆய்வுக்குட்படுத்தும் விமர்சன மரபைச் சேர்ந்தவராக தமிழவனை மதிப்பிடவேண்டும் என்று குறிப்பிட்டார். அமைப்பியல், மொழிதல் கோட்பாடு, பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் என புதிய பார்வைகள் உருவாகி வந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருடைய திறனாய்வுப் பார்வை விரிவுபெற்று வளர்ந்து தமிழ்ச்சூழலில் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் குறிப்பிட்டார். பாத்திரங்களை மையப்படுத்தி வாசிக்கும் அறிதல்முறைக்கு மாறாக, கதையாடலை அடிப்படையாகக் கொண்டு வாசிக்கும் அறிதல்முறையை தமிழ்ச்சூழலுக்கு தமிழவன் அறிமுகப்படுத்தினார் என்றும் ஒருசில எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிட்டார்.
அடுத்து
உரையாற்றிய ஜமாலன் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலுக்கு எழுதிய மதிப்புரையின் வழியாக
தமிழவன் எழுத்துகள் தனக்கு முதன்முதலாக அறிமுகமான விதத்தை உற்சாகமான விவரணையோடு பகிர்ந்துகொண்டார்.
தமிழ்ச்சூழலில் படைப்புகளை ரசித்து மகிழ்ந்தும் அவற்றைப்பற்றிய பேச்சுகளில் மூழ்கிக்
கிடக்கும் ரசிக மனோபாவத்தை உடைத்து தரமான வாசகர்களாக தமிழவன் படைப்புகள் மாற்றும் முயற்சியில்
ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார். மொழிப்போரை முன்வைத்து தமிழவன் எழுதிய நீர்ப்பாவை
மிகமுக்கியமான நாவல் என்றும் தமிழ்ச்சூழலில் அது கவனம் பெறவேண்டும் என்றும் சொன்னார்.
அண்ணாவையும் பெரியாரையும் மறுவாசிப்பு செய்து தமிழ்ச்சிந்தனையை மீட்டெடுத்த முக்கியமான
ஆய்வாளர் என அவர் தமிழவனைக் குறிப்பிட்டார். தமிழ்த் திறனாய்வுச் சிந்தனை வழியாக தமிழ்த்தேசியச்
சிந்தனையை வளர்த்தெடுக்கும் வழிமுறைகளை வகுத்தளித்தவராகவும் அவர் தமிழவனை வரையறுத்தார்.
கடந்த
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஓவியத்துறையில் பங்காற்றி வருபவர் சந்ரு என அனைவராலும் அன்போடு
அழைக்கப்படும் சந்திரசேகரன் குருசாமி. நண்பர்களால் சந்ரு மாஸ்டர் என்றும் ஓவியர் சந்ரு
என்றும் அழைக்கப்படுபவர். சென்னை ஓவியக்கல்லூரியில் பேராசிரியராகவும் முதல்வராகவும்
பணியாற்றியிருக்கிறார். நெல்லை ஓவியப்பயிற்சிக் கல்லூரியையும் குருவனம் திறந்தவெளி
அருட்காட்சியகத்தின் நிறுவியவர். ஓவியராக மட்டுமன்றி, சிற்பக்கலைஞராகவும் சுடுமண் வடிவமைப்புக்
கலைஞராகவும் கவிஞராகவும் எழுத்தாளராகவும் தலித் கலை இலக்கியச் செயல்பாட்டாளராகவும்
இயங்கி வருகிறார். இவருடைய பங்களிப்பாக இதுவரை கலை தொடர்பாக ஏழு நூல்களும் இரு கவிதைத்தொகுதிகளும்
ஒரு கதைத்தொகுதியும் வெளிவந்துள்ளன. மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின்
சிலையும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையும் கல்பாக்கத்தில்
உள்ள டாக்டர் ரமணா சிலையும் ஓவியர் சந்ருவின் படைப்பாற்றலை இந்த உலகத்துக்குத் தெரிவிக்கும்
முக்கிய ஆக்கங்கள் ஆகும்.
சந்ருவின் பங்களிப்பைப் பற்றி முதலில் உரையாற்றியவர் ஓவியர் நரேந்திரன். தன் உரையை ‘எழுதுவதும் கைப்பழக்கம்’ என்னும் தலைப்பில் அவர் ஒரு கட்டுரையாகவே எழுதிவந்து வாசித்தார் அவர். சந்ருவுடனான தன் முதல் சந்திப்பில் கார்க்கியின் சிறுகதைகள் குறித்து ஓவியர் சந்ரு எறத்தாழ ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக பேசிப் பகிர்ந்துகொண்ட தருணத்தை நினைவுகூர்ந்தார். கார்க்கியைப்போலவே புதுமைப்பித்தனும் அவருக்குப் பிடித்த சிறுகதையாசிரியர் என்றும் புதுமைப்பித்தனை ஒரு பாத்திரமாக்கி அவரே ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். பழங்குடியினரின் வாழ்வில் இருக்கும் மண்ணுடனான உறவு, அரசியல், அறம், தத்துவம் ஆகியவற்றை தன் அகத்தில் கொண்டிருக்கும் சந்ருவை, தன் படைப்புகள் வழியாக வாழ்க்கை குறித்த ஒரு விமர்சனப் பார்வையையும் மதிப்பீட்டையும் தொடர்ச்சியாக முன்வைப்பவராக வரையறுக்கமுடியும் என பல எடுத்துக்காட்டுகளோடு முன்வைத்தார்.
சந்ரு
விளக்கு விருது பெறுவதை முன்னிட்டு அவருடைய பல்வேறு ஓவியங்கள் தம் மனத்தில் எழுப்பிய
உணர்வுக்கோலங்களைத் தொகுத்து எழுத்தாளர் கோணங்கி
‘பவளக்கோட்டு நீலயானை’ என்னும் தலைப்பில் அவரே எழுதிய 56 பக்கங்கள் கொண்ட ஒரு சிறுநூலை
அவையில் தமிழவன் வெளியிட்டார். பார்வையாளர்கள் அனைவருக்கும் அந்த நூல் இலவசப்பிரதிகளாக
விநியோகிக்கப்பட்டது. அந்நூலில் சந்ருவின் சில ஓவியங்களும் பிற்சேர்க்கையாக இடம்பெற்றிருந்தன.
அந்நூலிலிருந்து சில பகுதிகளை முன்வைத்து எழுத்தாளர் கோணங்கி தன் உரையை நிகழ்த்தினார்.
உணவு
இடைவேளைக்குப் பிறகு ஏற்புரை அமர்வு தொடங்கியது. முதலில் ஏற்புரை நிகழ்த்திய தமிழவன்
மாணவப்பருவத்தில் முதலில் விலங்கியல் துறையில் பட்டப்படிப்பு படித்ததையும் தமிழகமெங்கும்
இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலிமை பெற்று கோலோச்சியிருந்த சமயத்தில் தமிழ் படிக்கும்
ஆர்வத்தில் கேரளத்துக்குச் சென்று தமிழை முதன்மைப்பாடமாக எடுத்து முதுநிலை பட்டம் பெற்றதாகவும்
சிற்சில ஆண்டுகள் நெல்லையில் பணியாற்றிய பிறகு கர்நாடகத்தில் பெங்களூர் கல்லூரியில்
வேலை கிடைத்து இடம் மாறியதையும் நினைவுகூர்ந்தார். தன் கல்லூரிக்காலத்தில் இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற எழுச்சிமிக்க மாணவர் ஊர்வலம் பாளையங்கோட்டை சேவியர்
கல்லூரியிலிருந்து திருநெல்வேலி ஜங்ஷன் வரைக்கும் சென்றதையும் மாணவர்கள் கூட்டத்தைக்
கலைப்பதற்காக காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் ராஜாத்தி குஞ்சிதபாதம்
என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதையும் நினைவுகூர்ந்தார். பொது வரலாறைப் பேசுபவர்கள் இத்தகு
வரலாற்றுத்துளிகளைப் பொருட்படுத்துவதில்லை என்னும் துயரத்தையும் பகிர்ந்துகொண்டார்.
எழுதப்பட்டிருக்கும் எல்லா வரலாற்றுக்குப் பின்னாலும் இப்படிப்பட்ட எழுதப்படாத ஆயிரமாயிரம்
வரலாற்றுத்துளிகள் நிறைந்துள்ளன என்றும் எழுதப்பட்ட எழுத்தை முழுமையான நம்பத்தகுந்த
ஆவணமாக எடுத்துக்கொள்வதில் தனக்கு எப்போதும் தயக்கமுண்டு என்றும் சொன்னார். இப்படி
மாறுபட்ட கண்ணோட்டத்துடன் ஒவ்வொரு துறையையும் பார்க்கும் பார்வையைத் தானே வளர்த்துக்கொண்டதாகவும்
இலக்கிய ஆய்வுகள் சார்ந்த தன் ஆய்வுக்கு இந்தக் கோணம் தனக்குப் பயன்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இலக்கியத்தைச் சமூகக்கண்ணோட்டத்துடன் பார்க்கும் அணுகுமுறையை அறிமுகப்படுத்தும் விதமாக
பெங்களூரிலிருந்து தானும் நண்பர்களும் இணைந்து நடத்திய பத்திரிகை அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
நம்மைப்பற்றி இன்னொருவராக மாறி புரிந்துகொள்ளவும் கேள்வி கேட்கவும் பழகுவது மிகவும்
முக்கியமென்றும் அத்தகு பார்வையே ஆய்வுக்கும் வாழ்க்கைக்கும் பயனளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்து
ஏற்புரை ஆற்றவந்த எம்.கோபாலகிருஷ்ணன் கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் தான் இலக்கியத்துக்குள்
வந்த தருணத்தை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார். அப்போது தர்மபுரியில் பணியாற்றிய எழுத்தாளர்
ஜெயமோகனின் இல்லத்தில் வாரந்தோறும் நடைபெறும் இலக்கிய உரையாடல்களில் கலந்துகொண்ட அனுபவத்தைப்
பகிர்ந்துகொண்டார். கவிதை குறித்த உரையாடல்களின் தொடர்ச்சியாக அனைவரும் இணைந்து டி.எஸ்.எலியட்
எழுதிய கவிதைக்கோட்பாடுகள் குறித்த நீள்கட்டுரையைப் படித்து விவாதித்ததாகவும் அதன்
தொடர்ச்சியாக ‘கலாச்சாரம் என்றால் என்ன?’ என்கிற தலைப்பில் அக்கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்ததாகவும்
குறிப்பிட்டார். மிகவும் ஈடுபாட்டோடு மொழிபெயர்த்த அக்கட்டுரையே தன் எழுத்துப்பயணத்தின்
தொடக்கமென்றும் ஒவ்வொரு முறையும் எழுத்தின் வழியாகப் பெறுகிற உற்சாகமும் பரவசமும் எழுத்துக்களத்தில்
தொடர்ச்சியாக ஈடுபடுவதற்கான விசைகளாக அமைகின்றன என்றும் தெரிவித்தார். சொல்புதிது இதழில்
ஜெயமோகனோடு இணைந்து பணியாற்றிய தருணத்தில் ஒவ்வொரு இதழிலும் வெளிவந்த நேர்காணல்களைத்
தொகுத்து பிற்காலத்தில் ‘இலக்கிய உரையாடல்கள்’ என்னும் தலைப்பில் நூலாக்கியதையும் அப்போது
விளக்கு அமைப்புடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புகொண்டிருந்த எனி இந்தியன் பதிப்பகம் அந்நூலை
அழகுடன் வெளியிட்டதையும் நினைவுகூர்ந்தார். விளக்கு அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் இணைந்து
உருவாக்கிய திண்ணை என்னும் இணைய இதழ் இணையவசதி உருவான தொடக்க காலத்திலேயே அதன் சாத்தியங்களை
முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு செயல்படத் தொடங்கியதையும்
குறிப்பிட்டார். ஹெப்சிபா ஜேசுதாசன் விளக்கு விருது பெற்றபோது காலச்சுவடு இதழில் சுந்தர
ராமசாமி எழுதிய குறிப்பை நினைவுகூர்ந்த எம்.கோபாலகிருஷ்ணன் தன்னுடைய முப்பத்தைந்து
ஆண்டு கால உழைப்புக்குக் கிடைத்த கெளரவமாக தனக்கு வழங்கப்பட்ட விளக்கு விருதைக் கருதுவதாகக்
குறிப்பிட்டார்.
இறுதியாக
ஏற்புரையாற்றிய ஓவியர் சந்ரு ’கூத்து கிருஷ்ணமூர்த்தி’ என அன்புடன் அழைக்கப்பட்ட கூத்துப்பட்டறையைச் சேர்ந்த ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, விட்டல்ராவ் போன்ற
மூத்த ஓவியர்களுடனான அனுபவங்களை நினைவுகூர்ந்தபடி தன் உரையைத் தொடங்கினார். எழுத்தாளர்
கோணங்கி தன்னுடைய கல்குதிரை இதழுக்காகவும் கதைகளுக்காகவும் ஓவியம் தீட்டிக் கொடுக்கவேண்டும்
என்கிற கோரிக்கையோடு தன்னை வந்து சந்தித்த முதல் தருணத்தை நினைவுகூர்ந்து ஒரு கதையைப்
பகிர்ந்துகொள்வதுபோன்ற சுவாரசியத்தோடு அந்த அனுபவத்தை விவரித்தார். அவரோடு அன்று தொடங்கிய
நட்பு இன்றுவரை தொடர்ந்துவருவதாகவும் தெரிவித்தார். நவீன ஓவியர்களை இன்றைய தலைமுறையினரிடம்
கொண்டுசேர்ப்பதில் சிறுபத்திரிகைகள் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார். கார்ட்டூன்களுக்கும்
கேரிகேச்சர்களுக்கும் இடையிலுள்ள நுட்பமான வேறுபாடுகளை ஓர் ஆசிரியரைப்போல பல எடுத்துக்காட்டுகளோடு
விளக்கினார்.
ஓவியர்
சந்ருவின் உரையால் தூண்டப்பட்டு பார்வையாளர் அரங்கிலிருந்து பேச வந்த மூத்த எழுத்தாளர்
விட்டல்ராவ், சந்ரு தீட்டிய மாடுகள் தொடர்பான கோட்டோவியங்களைத் தான் ரசித்த தருணத்தையும்
தன்னுடைய ஓவியக்கண்காட்சி அனுபவங்களையும் நினைவுகூர்ந்தார். மாமல்லபுரத்தில் இரண்டு
இடங்களில் சாமுண்டியின் சிற்பங்கள் இடம்பெற்றிருப்பதையும் ஒரு சிற்பத்தில் ஆயுதமேந்தி
நிற்கும் சாமுண்டியின் முன்னால் அவரைப் பார்த்து சிரித்தபடி விரிந்த தோளுடன் மகிஷனும்
ஆயுதமேந்தி நிற்பதையும் இன்னொரு சிற்பத்தில் அதே சாமுண்டியின் முன்னிலையில் உடல்குறுகி
நிற்பதையும் பார்த்த பழைய அனுபவத்தை விவரித்தார். மகிஷனின் இருவேறு நிலைகளுக்குக் காரணமென்ன
என்று பலரைக் கேட்டபோது அவர்கள் சொன்ன எந்தப் பதிலும் தனக்கு நிறைவளிக்கவில்லை என்றும்
ஓவியர் சந்ருவிடம் கேட்டபோது கொஞ்சம் கூட யோசிக்காமல் ‘அறிந்ததும் அறியாததும்’ என சட்டென
பொருத்தமான வகையில் ஒரே வரியில் பதில் சொன்னதாகவும் அந்தப் பதில் தனக்கு நிறைவளித்ததாகவும்
குறிப்பிட்டார். எல்லா வகைகளிலும் ’சந்ரு ஒரு க்ரேட் மாஸ்டர்’ என்றும் குறிப்பிட்டார்.
அரைநூற்றாண்டுக்கு முன்னால் நடைபெற்ற உரையாடலை நேற்று நிகழ்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதுபோல
புத்துணர்ச்சியோடு பார்வையாளர்களுடன் விட்டல்ராவ் பகிர்ந்துகொண்டார். ஓவியர் சந்ருவின்
நுண்ணுணர்வைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்ள அந்தச் சிற்றுரை உதவியாக இருந்தது.
விளக்கு
அமைப்பின் இந்தியப் பிரதிநிதியாக நின்று சிறப்பான வகையில் ஒருங்கிணைத்து நடத்தி முடித்த
வெற்றிவேல் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
(பேசும் புதிய சக்தி – பிப்ரவரி 2026)


