நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் ஓர் அழகான ஏரி இருக்கிறது. அதன் கரையைச் சுற்றி பத்தடி அகலத்துக்கு அச்சுக்கல் பதிக்கப்பட்ட நடைபாதை உண்டு. நடப்பதற்குச் எவ்விதமான சிரமமும் இல்லாத பாதை.
நடந்துகொண்டே வெயிலொளி பட்டு மினுமினுக்கிற நீர்ப்பரப்பை வேடிக்கை பார்க்கலாம். சில நீர்க்காகங்களும் கால்நீண்ட நாரைகளும் எப்போதும் கரையோரத்தில் காணப்படும். கரையோர மரங்களில் எப்போதும் சில கொக்குகளும் நாரைகளும் உட்கார்ந்திருக்கும்.
சில கொக்குகள் திடீரென கூட்டமாக கிளையிலிருந்து வானத்தை நோக்கிப்
பறந்துசெல்லும். நாலைந்து முறை சுற்றிச்சுற்றி வட்டமடிக்கும். பிறகு அமைதியாகத் திரும்பிவந்து
கிளைகளிலேயே அமர்ந்துகொள்ளும். வானவெளியில் நிகழும் விமான அணிவகுப்பைப்போல கொக்குகள்
சீரான இடைவெளியில் வட்டமிடுவதைப் பார்ப்பது இனிய அனுபவம். என்னைப்போலவே பலரும் கரையோரத்தில்
சில கணங்கள் நின்று கொக்குக்கூட்டத்தைப் பார்த்து ரசிப்பார்கள். சிலர் தம் கைப்பேசியில்
படமெடுப்பார்கள்.
ஒருசில சமயங்களில் உயரமான தோற்றமுடைய சில நாரைகளையும் அந்த
ஏரியில் பார்க்கலாம். எல்லாமே வலசை வரும் நாரைகள். அந்த ஏரியில் விருந்தாளிகளைப்போல
நாலைந்து நாட்கள் தங்கிவிட்டு பறந்து சென்றுவிடும். எந்த நாட்டு நாரை என்பதெல்லாம்
யாருக்கும் தெரியாது. இடுப்பளவு உயரம். நீண்ட கால்கள். செங்கல் நிறம். நீளமான மூக்கு.
அந்த விசித்திரமான அமைப்பின் காரணமாகவே கூட்டமாகக் கூடி அனைவரும் அவற்றைப் பார்ப்பார்கள்.
ஏரியைச் சுற்றி வேடிக்கை பார்க்க இத்தகு காட்சிகள் ஏராளமாக
இருக்கின்றன. சில காட்சிகளை ஒவ்வொரு நாளும் பார்த்தாலும் கூட, ஒவ்வொரு முறையும் புதிதாகப்
பார்ப்பதுபோலவே இருக்கும். வயதில் மூத்த பெரியவர்களும் இரண்டுமூன்று வயதுள்ள இளஞ்சிறார்களும்
இணைந்து நடந்துவரும் காட்சியும் அத்தகையதே. நூறுமுறை பார்த்தாலும் சலிக்காது. மீண்டும்
மீண்டும் பார்க்கவே ஆசை எழும் காட்சி அது.
தரைமீது அடியெடுத்து வைக்குந்தோறும் க்விங் க்விங் என ஓசையெழுப்பும்
காலணிகளை அச்சிறார்கள் அணிந்துகொண்டிருப்பார்கள். தம் காலணியிலிருந்து எழும் விசித்திர
ஓசையைக் கேட்டதும் அச்சிறார்களின் முகம் மலரும். அந்த ஓசை, தம் கால்களுக்கு ஏதோ ஒரு
விசித்திரமான ஆற்றல் இருப்பதாக அவர்களை நினைக்கவைக்கும். அந்த ஓசையை எழுப்புவதற்காகவே
ஆனந்தமாக மீண்டும் மீண்டும் கால்களை அழுத்தி நடப்பார்கள் சிறார்கள். ஏதோ சொல்லிக்கொண்டே
அச்சிறார்களின் தாத்தாமார்களும் பாட்டிமார்களும் ஓடுவார்கள். இருவரும் தமக்குள் கொஞ்சிக்கொள்வார்கள்.
சிரிப்பார்கள். பேசுவார்கள். வேடிக்கை பார்ப்பார்கள். நடப்பார்கள். நிற்பார்கள். அக்காட்சிகளைப்
பார்ப்பது பேரின்பம் தரும் அனுபவம்.
அவர்களை வேடிக்கை பார்ப்பதற்கு அப்பால், ஏதோ ஒரு நாளில் அவர்களிடையில்
நிகழ்ந்த உரையாடலைக் கேட்டதும் எழுந்த மனக்கிளர்ச்சியால் அவற்றையெல்லாம் நுட்பமாகக் கவனிக்கத் தொடங்கினேன். வீட்டுக்குத் திரும்பியதும் அவற்றையெல்லாம்
குறித்துவைக்கவும் தொடங்கினேன். வசீகரமான காட்சிகளையும் உரையாடல்களையும் ஆழ்நெஞ்சில்
அசைபோட்டபடி பாடல்களாக எழுதினேன்.
அத்தகு தருணங்களில் என் மனம் பல சமயங்களில் என் பால்யத்தை
நோக்கித் திரும்பிவிடும். அச்சிறுவனாக அல்லது சிறுமியாக என்னை நானே கற்பனை செய்துகொண்டு
அவர்கள் குரலில் நான் பேசிப் பார்ப்பேன். அந்தக் கற்பனை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அந்த ஆனந்தத்தின் விளைவாக, இன்னும் கூடுதலான
சில காட்சிகளை நானே எனக்குள் கற்பனை செய்துகொள்வேன். அப்போது இன்னும் சில பாடல்களை
எழுதத் தோன்றும்.
சமீபத்தில் ஒருநாள் புத்தகங்களை ஒழுங்கு செய்தபோது, அவற்றோடு
கலந்துபோய்விட்டிருந்த பழைய நாட்குறிப்புச் சுவடிகளையெல்லாம் ஒரு பக்கமாக பிரித்து
அடுக்கிவைக்க நினைத்தேன். எனக்கு உதவி செய்வதற்காக நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு
ஒரு பக்கமாக அமர்ந்த என் மனைவி, ஒவ்வொன்றாக எடுத்து அதன் மீது படிந்துவிட்ட தூசைத்
துடைத்துக் கொடுக்க, நான் அதை வாங்கி வரிசைப்படி அடுக்கிவைக்கத் தொடங்கினேன். அந்த
இடைவெளியில்தான் பழைய சுவடிகளில் எழுதிவைத்திருந்த பாடல்களைப் பார்த்துவிட்டு, பிறகு
வாசிக்கலாமென நினைத்து அச்சுவடிகளை ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்துக்கொண்டேன்.
சிறிய இடைவேளைக்குப் பிறகு, நேரம் ஒதுக்கி வாசிக்கத் தொடங்கியதும்,
ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு பழைய காட்சியை மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது.
ஒவ்வொரு வரியாக அசைபோட்டு அசைபோட்டு அந்த அனுபவத்தை மீண்டும் வாழ்ந்தேன். அப்போதுதான்
பல பாடல்கள் தாத்தா, பாட்டி தொடர்பானவையாக இருப்பதையும் உணர்ந்தேன். அவற்றை மட்டும்
தனியாகப் பிரித்து ஒரு தொகுதியாக அமைத்தால் என்ன என்கிற எண்ணம் அப்போதுதான் தோன்றியது.
உடனே உற்சாகம் கொண்டு அவற்றை மட்டும் பிரித்தெடுத்தபோது, ஒரு தொகுதியாக அமைக்கும் அளவுக்கு
பாடல்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருந்தது. அவற்றையெல்லாம் ஒவ்வொரு நாளும் சில பாடல்கள்
என்கிற கணக்கில் கணிப்பொறியில் பதிவு செய்தேன்.
அப்பாடல்கள் என் பாட்டியையும் தாத்தாவையும் நினைத்துக்கொள்ள
வைத்தன. நான் கல்லூரிப்படிப்பை முடிக்கும் முன்பாகவே இருவரும் இம்மண்ணுலகைவிட்டு மறைந்துவிட்டனர்.
என் அம்மாவழித் தாத்தா முருகேசன். அப்பாவழிப் பாட்டி முத்தம்மா. இவ்விருவரோடுதான் என்
குழந்தைப்பருவத்தைக் கழித்திருக்கிறேன். தாத்தா கண்டிப்பானவர். குழந்தைகளுக்குச் செல்லம்
கொடுத்துப் பேசினால் கெட்டுவிடுவார்கள் என்ற எண்ணம் கொண்டவர். ஆனால் நிறைய கதைகளைச்
சொல்வார். பாட்டியிடம் கண்டிப்பு கிடையாது. செல்லம் கொடுத்துக் கொஞ்சுவார். பாட்டுகளை
அவராகவே இட்டுக் கட்டிப் பாடி அனைவரையும் சிரிக்கவைப்பார். அவர்களுடைய அன்பில் திளைத்திருந்த
காலம் இனிமையானது. பாட்டி, தாத்தா தொடர்புடைய பாடல்களை மட்டுமே கொண்ட இத்தொகுதியை என்
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய முத்தம்மா பாட்டிக்கும் முருகேசன் தாத்தாவுக்கும் சமர்ப்பணம்
செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தப் பாடல்களையெல்லாம் வரிசைப்படுத்தி எழுதிய பிறகு அதன்
முதல் வாசகராகப் படித்தவர் என் மனைவி அமுதா. ஒவ்வொரு பாடலையும் தாளம் போட்டு பாடிப்
பாடி அவர் ரசித்த விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு என் நன்றிகளைப் பதிவு
செய்ய விரும்புகிறேன். அவருடைய அன்பும் ஆதரவும் எனக்கு எப்போதும் துணையாக இருப்பவை.
அவருக்கு என் அன்பு எப்போதும் உண்டு. அவரைப்போலவே இப்பாடல்களை உடனுக்குடன் படித்தவர்
என் நண்பன் பழனி. அவன் வெளிப்படுத்திய ரசனைக்குறிப்புகள் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பவையாக
இருந்தன. அவனுக்கும் என் நன்றி. அழகான ஓவியங்களுடன் அழகான முறையில் இத்தொகுதியை வெளியிட்டிருக்கும்
பாரதி புத்தகாலயத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றி.
