வாசிப்பு குறைந்துவிட்டது என்னும் கூற்று ஒரு புனைவு. உண்மையில் கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் வாசிப்பு பெருகியுள்ளதாகவே நான் உணர்கிறேன். முன்பெல்லாம் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இலக்கியக்கூட்டங்கள் அபூர்வமாகவே நிகழ்ந்து வந்தன.
இன்று நிலைமை வேறு. ஒவ்வொரு ஊரிலும் மாதாந்திர, வாராந்திரக் கூட்டங்களை நடத்தி இலக்கியம் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இணையவழி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. மாவட்டம்தோறும் புத்தகக்கண்காட்சிகள் நடைபெறுகின்றன. புத்தக அறிமுகம் பெருகி வருகிறது. பள்ளியளவில் மாணவமாணவிகளிடம் இலக்கியத்தை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தும் பல ஆசிரியர்களை நான் சந்தித்திருக்கிறேன். பவா.செல்லதுரை, ரம்யா வாசுதேவன் போன்ற கதைசொல்லிகளின் யுடியூப் காணொளிகள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் உள்ளன. ஒவ்வொரு காணொளியையும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் கேட்கிறார்கள். நேரடி வாசிப்புக்குள் வாசகர்களை ஈர்த்து இலக்கியத்தைச் செழிப்பாக்கும் வேலையை இத்தகையோர் ஆர்வத்தின் காரணமாக இலவசமாகவே செய்கிறார்கள். நேரிடையாக புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு இணையாக இணையவழியில் வாங்கும் வாசகர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. மாநில அளவில் நடைபெறும் சென்னை புத்தகக்கண்காட்சியில் அறுநூறுக்கும் மேற்பட்ட கடைகள் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறுகின்றன என்பதை நாம் அறிவோம். வாசகர்கள் பெருகி வருகிறார்கள் என்பதற்கு இதைவிட பெரிய சாட்சி என்ன வேண்டும்? மக்கள் தொகையின் பெருக்கத்துக்கு இணையாக வாசகர்களின் எண்ணிக்கையும் பெருகிவருவதாகவே நான் நினைக்கிறேன். காட்சி ஊடகங்கள் மக்களை வேறொரு திசையில் ஈர்க்கும் பெருவிசையாக இருப்பது உண்மைதான். காட்சி ஊடகம் அளிக்கும் இன்பத்தைவிட ஒரு புத்தக வாசிப்பு அளிக்கும் இன்பமும் மனநிறைவும் மகத்தானவை என்பதை ஒவ்வொரு குடும்பமும் பெற்றோரும் தம்மளவில் முதலில் நம்பவேண்டும். உணரவும் வேண்டும். பாடப்புத்தக வாசிப்புக்கும் இலக்கியப்புத்தக வாசிப்புக்கும் இருக்கும் வேறுபாட்டையும் அவசியத்தையும் பெற்றோர்கள் புரிந்துகொண்டால், அவர்களே தம் பிள்ளைகளுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்வார்கள். அவருக்குத்தான் பொறுப்பு, இவருக்குத்தான் பொறுப்பு என பொறுப்பை யார் தலையிலோ கட்டிவிட்டு விலகி நிற்பதில் எந்தப் பொருளும் இல்லை. பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது. மாற்றம் நம்மிடம் இருந்துதான் தொடங்கவேண்டும். ஒரு சினிமாவை முன்வைத்து மணிக்கணக்கில் அரட்டை அடிப்பதில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இருக்கிறது என நினைக்கிற நாம் ஓர் இலக்கியப்பிரதியை முன்வைத்து வெவ்வேறு கோணங்களில் உரையாடுவதிலும் அதே மகிழ்ச்சியும் நன்மையும் இருக்கிறது என்பதை உணர்வதுதான் எல்லா மாற்றங்களுக்கும் முதல் படி. இலக்கிய அரட்டை ஒரு ருசி. டி.கே.சி., கல்கி, கி.ரா. போன்றோர் வாழ்ந்த காலத்தில் அத்தகு அரட்டைகளால் ஏற்பட்ட மாற்றங்களை அவர்களே பதிவு செய்துவைத்திருக்கிறார்கள். அத்தகு உரையாடல்களைச் சாத்தியப்படுத்துவது அடுத்த படி. அதற்குப் பின் நிகழும் மாற்றத்தை நாமே மெல்ல மெல்ல உணரத் தொடங்குவோம்.
(வாசிப்புப்பழக்கம் அதிகரித்ததா, குறைந்ததா? அருள்செல்வன் கேள்விக்கான விடை - தினமணி கதிர் - 11.01.2026)