காட்சி ஊடகத்
தொடர்பியலைப் பாடமாக நடத்தும் ஆசிரியர் ஒருவருக்கும் எனக்கும் நெருக்கமான
தொடர்புண்டு. கிட்டத்தட்ட பத்தாண்டு காலப் பழக்கம். உற்சாகம் கொப்பளிக்கப்
பேசுகிறவர். மரங்கள், பறவைகள்பற்றி ஏராளமான பல
தகவல்களைத் துல்லியமாக ஞாபகத்தில் வைத்திருப்பவர். ஒருமுறை மாலைநடை வேளையில்
ஏறத்தாழ அறுபது பறவைகளின் பெயர்களையும் அவற்றின் வடிவமைப்பையும் குரலமைப்பையும்
அவர் சொன்னதை மனம் சிலிர்க்கக் கேட்டுக்கொண்டிருந்த அனுபவம் என் வாழ்வில்
மறக்கமுடியாத சம்பவம். வாட்டம் என்பதே
என்னவென்று அறியாதவை அவருடைய பேச்சும் குரலும். பத்து நிமிடம் அவரோடு
பேசிக்கொண்டிருந்தால் போதும், பத்து நாட்களுக்குத்
தேவையான ஊக்கம் தானாகவே அவரிடமிருந்து நம்மைத் தொற்றிக்கொள்ளும்.
முக்கியமான பல சங்கப் பாடல்வரிகள்
நிரந்தரமாக அவர் நினைவில் உண்டு. மிகவும் பொருத்தமான இடத்தில் அவற்றை அழகாகப்
பயன்படுத்தி மனத்தில் பதியும்படி செய்துவிடுவார். மலையேற்றத்தில் மிகவும்
ஈடுபாடுடையவர். விடுமுறை நாட்களில் மாணவமாணவிகளை குழுவாக அழைத்துக்கொண்டு அருகில்
உள்ள சின்னச்சின்ன மலைப்பகுதிகளுக்கும் காட்டுப்பகுதிகளுக்கும் சென்றுவருவார்.
தன்னிச்சையாக திட்டமிட்டு எவ்வித மேலிடத்து அனுமதியின்றி செயல்படுகிறார் என்கிற
குற்றச்சாட்டு அவர்மீது கல்லு¡ரியில் எப்போதும் உண்டு.
அதைப்பற்றி ஒருபோதும் அவர் கவலைப்படுவதில்லை. "வகுப்புக்குள்ள
இருக்கறவரைக்கும்தான் அவர்கள் மாணவர்கள். நான் ஆசிரியர். வகுப்பைத்தாண்டி வெளியே
வந்தபிறகு எல்லாருமே நண்பர்கள்தான். எந்த வித்தியாசமும் இல்லை. நான் யாரையுமே
வலுக்கட்டாயப்படுத்தி வந்துதான் தீரவேண்டும் என்று அழைத்துச் செல்வதில்லை.
விருப்பமுள்ளவர்கள் தாமாகவே என்னோடு சேர்ந்து வருகிறார்கள். அவர்கள் வராவிட்டாலும்
நான் செல்வேன். நான் வாழ்வதற்கான உயிர்க்காற்றை அங்கிருந்துதான் பெற்று
வருகிறேன்" என்று அமைதியாகச் சொல்வார்.
ஒருநாள் மாலை ஒரு
நாடகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது தற்செயலாக அவரைச் சந்தித்தேன். அவர்
வேறு ஒரு பேருந்துக்காக நிறுத்தத்தில் நின்றிருந்தார். என்னைப் பார்த்ததும் அவர்
முகம் பூரிப்பில் மலர்ந்தது.
"காலையிலிருந்து உங்களை பத்துமுறையாவது நினைச்சிட்டேன். வீட்டுக்குப் போனபிறகு
நானாகவே உங்களுக்கு தொலைபேசி செய்யணும்னு இருந்தேன். இப்படி திடுதிப்புன்னு
சந்திப்பேன்னு நெனைச்சே பாக்கலை."
அவர் கண்கள்
ஆச்சரியத்தில் மின்னலிட்டன. மகிழ்ச்சியோடு கையை வாங்கிக் குலுக்கினார். அருகில்
இருந்த ஒரு தேநீர்க்கடையில் தேநீர் வாங்கி இருவரும் பருகினோம்.
"என்ன விஷயமா என்னை நினைச்சிங்க?"
"எல்லாம் நல்ல விஷயம்தான். எங்க மாணவமாணவிகளுக்கு ஒரு அசைன்மென்ட்
கொடுத்திருந்தேன். எல்லாருமே செய்து முடிச்சிட்டாங்க. எல்லாமே பவர்பாய்ன்ட்
ப்ரசன்டேஷன்தான். தகுதிக்குரியதை தீர்மானிக்கறதுல
விஷயத்துல உங்க உதவி தேவைப்படுது. முதல், இரண்டாவது,
மூன்றாவது நிலையை அடையக்கூடிய படைப்புகளுக்கு சின்னதா
பரிசுகூட தரலாம்னு இருக்கேன். என்னுடைய சொந்தச் செலவுலதான். எனக்காக ஒரு ரெண்டு
மணிநேரம் ஒதுக்கணும். எப்போ ஓய்வா இருப்பிங்கன்னு சொல்லுங்க?"
பலமுறை பல கல்லூரி
ஆசிரியர்களுக்கு இப்படி உதவியதுண்டு. மாணவமாணவிகளின் படைப்பாற்றலையும்
கற்பனையாற்றலையும் செழுமைப்படுத்தி வளர்க்கும் விதமாக ஆசிரியர்கள்
செய்துகொண்டிருக்கும் வேலைகள் பல சமயங்களில் எனக்கும் உதவியதுண்டு.
"வர சனிக்கிழமை சாயங்காலம் பாக்கலாமா? "
"சரி,
அலுவலகம் முடிச்சிட்டு நேரா வீட்டுக்கே வந்துருங்க. அங்க
வச்சியே கம்ப்யூட்டர்ல பாத்துரலாம். நான் எல்லாத்தயும் டெஸ்க்டாப்ல சேமிச்சி
வைக்கறேன்."
மாணவமாணவிகளுக்கு அவர்
அசைன்மென்ட் கொடுக்கும் விதமே வித்தியாசமானது. மற்றவர்களைப்போல எழுதும் வேலையையோ
படம்வரையும் வேலையையோ கொடுப்பதில்லை. எல்லாமே கணிப்பொறியின் மூலமாகத்தான்.
தலைப்பைச் சொல்லிவிடுவார். அந்தத் தலைப்பையொட்டி அவர்கள் படங்களைச்
சேகரிக்கவேண்டும். அவற்றை பவர்பாய்ன்ட் பிரசன்டேஷனாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
பொருத்தமான வாசகங்களை எழுதி இணைத்துக்கொள்ளவேண்டும். ஒருவர் தனிப்பட்ட அளவில்
முப்பது படங்களைத் தொகுக்கலாம். அதுதான் அதிகபட்ச எல்லை. தயாரித்து முடித்தபிறகு
ஆசரியருடைய மின்முகவரிக்கு அனுப்பிவைத்துவிடவேண்டும். அவர் எல்லாவற்றையும்
தொகுத்துப் பார்த்துவிட்டு தகுதியான ஒன்றைத் தீர்மானிப்பார்.
"இந்த முறை என்ன தலைப்பு கொடுத்திருக்கிங்க?" ஆவலுடன் கேட்டேன் நான்.
"உலக அதிசயங்கள்."
நம்ப முடியாமல் அவரை நான்
நிமிர்ந்து பார்த்தேன். "எல்லாருக்கும் ரொம்ப தெரிஞ்ச விஷயமா இருக்குதே. இதுல
அவுங்க கற்பனைக்கு எப்படி வேலை இருக்கும்?"
"அதுதான் சவால். தெரிஞ்ச ஒரு விஷத்திலேருந்து தெரியாத ஒரு விஷயத்தைநோக்கி
சட்டென்று தாவிப்போவ முடிவதுதானே படைப்பு. அப்படி தாவத் தெரிஞ்சவன்தானே படைப்பாளி.
என் மாணவமாணவிகளுக்கு எந்த அளவுக்கு தாவத் தெரியுதுன்னு நான்
புரிஞ்சிக்கிறதுக்காத்தான் இந்த அசைன்மென்ட். வேணுமின்னேதான் இப்படி
தலைப்புகொடுத்தேன்."
"ஞானப்பழத்துக்காக முருகரும் பிள்ளையாரும் உலகத்தைச் சுத்திவந்த கதைதான்
தற்சமயம் எனக்கு ஞாபகம் வருது."
"சரியான உதாரணத்த சரியான நேரத்துல சொல்லிட்டீங்க. உலகம்னு சொல்லறதை பெளதிகமான
அளவில முருகர் புரிஞ்சிக்கறாரு. அதையே சூட்சுமமான அளவில புரிஞ்சிக்கறாரு
பிள்ளையாரு. ஒரு படைப்பாளிங்கற விதத்துல முருகருடைய பார்வையைவிட பிள்ளையாருடைய
பார்வைதான் உயர்வானதுன்னு என்னுடைய கணிப்பு."
"அந்தப் பார்வையை உங்க மாணவமாணவிகளுக்கு வரவழைக்கணும்னுதான் இந்த மாதிரி
அசைன்மென்ட்லாம் கொடுக்கறிங்களா?" நான் புன்னகைத்தபடி கேட்டேன்.
"வரவழைக்கணும்ங்கறதுதான் என்னுடைய ஆசை. ஆனால் எல்லாரிடமும் அதை
எதிர்பார்க்கமுடியறதில்லை. பத்துல நான்கு பேராவது அந்த எதிர்பார்ப்பை
நிறைவேற்றினாலேயே வெற்றிதான். இன்னைக்கு நான்கு பேர் எங்க கல்லு¡ரியிலேருந்து கற்பனையாற்றலோடும் படைப்பாற்றலோடும் வெளியேறினா, அந்த நாலு பேருல ஒரே ஒருத்தராவது மிகச்சிறந்த படைப்பாளியா நிலைச்சி
நிப்பாங்க."
"அந்த ஒருத்தர உருவாக்கறதுக்காக வருஷக்கணக்கில் பயிற்சி தேவைப்படுகிறதல்லவா?"
"ஆமாம். ஒன்றுங்கற எண்ணிக்கையை குறிப்பிட்டு நாம இதை அளக்கக்கூடாது. கலையாக்கம்
என்கிற அளவிலதான் நாம பாக்கணும்."
"இதுக்கு முன்னால இப்படி என்னென்ன அசைன்மென்ட் கொடுத்திருக்கிங்க?" நான் ஆர்வத்தோடு கேட்டேன்.
"நிறைய கொடுத்திருக்கேன். ஒவ்வொன்னும்
வித்தியாசமானது. அத அவர்கள் எவ்வளவு ஈடுபாட்டோடு செய்றாங்கங்கறதுதான் முக்கியம்.
போன வருஷத்துல 'அம்மா'
என்கிற தலைப்பைக் கொடுத்து தயார் செய்யச் சொன்னேன். நாலஞ்சி
நாள் அவகாசத்துல மாணவமாணவிகள் செய்து வந்தத பாத்து நான் அப்படியே மலைச்சிப்
போயிட்டேன்."
"அந்த அளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியா இருந்ததா? "
"அந்தக் காட்சிகள என்னால இப்பவும் மறக்கமுடியலை. எல்லாமே பசுமையா இப்பதான்
பாத்தமாதிரி நெஞ்சில இருக்குது. எல்லாத்தயும் என் கம்ப்யூட்டர்ல சேத்து
வச்சிருக்கேன். ஓய்விருக்கும்போது உங்களுக்கு போட்டுக் காட்டறேன். அம்மான்னு
சொன்னதுமே நம்ம எல்லாருக்கும் என்ன ஞாபகம் வரும்? ஒரு தாய்,
ஒரு குழந்தை. அந்த உறவை எந்தெந்த கோணத்துல காட்டலாமோ
அந்தந்த கோணத்துல அழகும் கற்பனையும் கலந்து காட்டலாம் இல்லையா? இது முதல் நிலை. அம்மாங்கறத ஒரு உறவுநிலைன்னு நெனைச்சிக்குங்க. படமாக்கக்கூடிய
சாத்தியப்பாடு இன்னும் அதிகமாகுது. கங்காரு தன் வயித்துல குட்டிய
சுமந்துட்டிருக்கிற காட்சி, அம்மாக் குரங்கு பிள்ளைக்
குரங்குக்கு பேன் பாக்கற காட்சி இப்படி நிறைய சொல்லலாம். இது இரண்டாவது நிலை.
இருநு¡று இருநூற்றிஐம்பது வருஷத்து ஆலமரம் ஒன்னு தனிமரங்களாக உறுதியாக நிலத்தில் ஊன்றிவிட்ட
ஏராளமான விழுதுகளோடு நிக்கறமாதிரி ஒரு காட்சியை நினைச்சிப் பாருங்க. அதில வெளிப்படுகிற
உணர்வும் தாய்மை உணர்வுதான் இல்லையா? இது மூன்றாவது நிலை. ஒரு மலையின் அடிவாரத்துல சின்னச்சின்ன குருவிங்க
உக்காந்திருக்கறமாதிரியான ஒரு காட்சியையோ அல்லது ஒரு நதிக்கரையில கால்நடைகள்
நின்னுட்டிருக்கிறமாதிரியான ஒரு காட்சியையோ நினைச்சிப் பாருங்க. இயற்கையையே ஒரு
தாயாகப் பார்க்கிற உணர்வு உருவாகிறதில்லையா? மலை ஒரு தாய், நதி ஒரு தாய். அதன்
மடியில்தான் இந்த உயிர்கள். இந்த உலகில் நீக்கமற நிறைந்திருக்கும் இயற்கையை ஒரு
மாபெரும் தாயாகப் பார்க்கிற பார்வையை உணரமுடியுதில்லையா? இது நான்காவது நிலை. இப்படி பார்வையை கூர்மைப்படுத்திக்கொள்வதற்காகத்தான்
இந்தப் பயிற்சியை திரும்பத்திரும்ப தரவேண்டியதா இருக்குது."
"நீங்க சொல்றத கேக்கக்கேக்க ஏதோ ஒரு கவிதையை கேக்கறமாதிரி சந்தோஷமா இருக்குது.
உங்க ஏழு அதிசயங்கள் எப்படி இருக்குதுன்னு உடனே பாக்கணும்னு தோணுது. அதில
எப்படிப்பட்ட காட்சிகள்ளாம் இருக்குது" கட்டற்ற ஆர்வத்தோடு வேகமாக கேட்டேன்.
"நானும் எதையும் பாக்கலை. எல்லாரையும் என்னுடைய மின்அஞ்சல்ல அனுப்பச்
சொல்லியிருக்கேன். நேத்துத்தான் கடைசிநாள். எல்லாருமே அனுப்பியாச்சி. இனிமேல்தான்
பாக்கணும். நீங்க வருவதற்குள்ளாக எல்லாவற்றையும் எடுத்து பிரிச்சி கம்ப்யூட்டர்
டெஸ்க்டாப்பில வரிசைப்படுத்தி வைக்கறேன். நீங்க வந்ததுமே பாக்கறதுக்கு வசதியா
இருக்கும்" அந்தப் பதில் சற்றே நிராசையை அளித்தாலும் என் ஏமாற்றத்தை
வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை.
"சரி,
சனிக்கிழமை சாயங்காலம் பாக்கலாம்" அவர் விடைபெற்றுச் சென்றார். ஒவ்வொரு நாளும் ஏழு அதிசயங்களைப் பார்க்கும்
என் ஆவல் பெருகியபடி இருந்தது. முதலில் உலக அதிசயங்கள் நிலைபெற்றிருக்கும்
இடங்களையும் அவற்றின் தோற்றத்தையும் மனத்தில் சித்திரங்களாகத் தீட்டிப்
பார்த்தேன். அவற்றையொட்டியதாகவே மாணவமாணவிகளின் படக்காட்சிகளும் இருக்கக்கூடும்
என்று நினைத்துக்கொண்டேன். அவர்கள் கற்பனைகளில் இவை எப்படிஎப்படியெல்லாம்
உருமாறக்கூடும் என்று நானாகவே பல விதங்களில் வடிவமைத்துப் பார்த்தேன்.
விளையாட்டுக்காக ஒரு நாள்
இரவில் உணவுவேளைக்குப் பிறகு என் மனைவியிடமும் மகனிடமும் "உலக அதிசயங்கள்
எத்தனை தெரியுமா?" என்று கேட்டேன். சற்றும்
தயக்கமில்லாமல் அவர்கள் உடனடியாக "ஏழு" என்றதும் ஆளாளுக்கு ஒரு
வரிசையில் அந்த ஏழு இடங்களின் பெயர்களைச் சொன்னதும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
எங்கள் உரையாடல்
நிகழ்ந்துகொண்டிருந்த சமயத்திலேயே நெருக்கமான நண்பர் ஒருவரும் அவருடைய மனைவியும்
தாம் புதிதாகக் கட்டியிருந்த இல்லத்துக்கான புதுமனை புகுவிழா அழைப்பிதழைக்
கொடுப்பதற்காக வந்திருந்தார்கள். வரவேற்று உட்காரவைத்துப் பேசிக்கொண்டிருந்தோம்.
அந்த நண்பர் எனக்குப் பழக்கமாக பத்தாண்டுகளாவது இருக்கும். ஒருநாளும் அவருடன் அவர்
மனைவியை எந்த வெளியிடத்திலும் பார்த்ததாகவே எனக்கு ஞாபகமில்லை. நல்லவேளை, இன்றாவது அழைத்துவந்தாரே என்று நினைத்துக்கொண்டேன். என் மனைவியோ வாய்விட்டு
கேட்டேவிட்டாள்.
"நீங்க வீட்டுக்காரம்மாவோட வந்திருக்கறது பெரிய உலக அதிசயம்தான். இந்தத் தேதி
முக்கியமான ஒரு நாள். எட்டாவது உலக அதிசயம் நிகழ்ந்த நாள்னு கின்னஸ்லதான்
எழுதிவைக்கணும்."
அவர்கள் சிரித்து
மழுப்பினார்கள். சிறிதுநேர உரையாடலுக்குப் பிறகு விடைபெற்றுச் சென்றார்கள். என்
மனைவியின் வார்த்தைகள் இன்னும் என் மனத்தில் ரீங்கரித்துக்கொண்டே இருந்தன. எவ்வளவு
எளிதான முறையில் அந்த வரவை எட்டாவது அதிசயமாக அவளால் மாற்றிக்கொள்ளமுடிந்தது என்று
ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தேன். நண்பரின் படத்தொகுப்புக்கான தலைப்பை மறுபடியும்
நினைத்துப் பார்த்தேன். அந்த அதிசயங்கள் வெறும் பெளதிக இருப்பைச்
சுட்டிக்காட்டுபவை அல்ல என்னும் குறிப்பை உள்வாங்கிக்கொண்டேன். அந்த
அசைன்மென்ட்டில் இருக்கிற சிக்கல் தன்மையையும் உள்விரிவுகளையும் என்னால்
புரிந்துகொள்ளமுடிந்தது. அதையே யோசித்தபடி உறங்கிவிட்டேன்.
சனிக்கிழமை மாலை படக்காட்சிகளைப் பார்ப்பதற்காக நண்பர் வீட்டு
கணிப்பொறியின் முன் அமர்ந்தபோது என் ஆர்வம் பலமடங்காக இருந்தது. மொத்தத்தில்
இருபத்தைந்து மாணவமாணவிகள் படத்தொகுப்புகளை உருவாக்கியிருந்தார்கள்.
ஒவ்வொன்றுக்கும் வரிசையாக ஓர் எண்ணைக் குறித்திருந்தார் நண்பர். நான் முதல் தொகுப்பைத் திறந்தேன். வண்ணங்களில் அவை
ஒவ்வொன்றாகத் திறந்துகொண்ட விதம் உற்சாகமாக இருந்தது. முதல் படம் தாஜ்மகாலுடையது.
முழுநிலவின் ஒளியில் நனைந்த அதன் தோற்றம் வசீகரமாக இருந்தது. அதே தாஜ்மகாலின்
நான்கைந்து தோற்றங்கள் வெவ்வேறு படக்காட்சியாக இணைக்கப்பட்டிருந்தன.
இரண்டாவது சீனப்பெருஞ்சுவரின் படம்.
வெளிர்நீல வானப் பின்னணியில் வளைந்துவளைந்து ஒரு கொடியைப்போல நீளும் அதன் சுவர்
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதன் தோற்றமும் மூன்று விதங்களில் இருந்தன.
மூன்றாவது எகிப்துப் பிரமிடுகளின் கம்பீரமான தோற்றம். சூரிய அஸ்தமனத்தில்
செம்புழுதி படிந்த அவற்றின் தோற்றம் ஏதோ ஒரு கனவுக்காட்சியைப் பார்ப்பதைப்போல
இருந்தது. வானைத் தொடும் உயரத்தில் நின்றிருக்கும் அலெக்சான்ட்ரியாவின் கலங்கரை
விளக்கத்தின் படம் ஆச்சரியத்தின் உறைவிடமாக காட்சியளித்தது. சாய்ந்த பைசா
கோபுரமும் பாபிலோனின் தொங்கும் தோட்டமும் பிரான்சின் ஈஃபிள் கோபுரமும்
பிரமிக்கவைத்தன. ஒவ்வொன்றின் அழகும் பொலிவும் மேலும் பல மடங்குகளாகப் பெருகிக்
காட்சி தரும் வகையில் வெவ்வேறு நிலைகளில் அவற்றின் தோற்றத்தைக் காட்டும் பல
துணைப்படங்களும் ஒவ்வொருவருடைய தொகுப்பிலும் இடம்பெற்றிருந்தன.
அடுத்த தொகுப்பைப்
பிரித்தேன். கட்டுமானத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு உலகில் புகழுடன் விளங்கும் ஏழு
அதிசய இடங்களோடு அத்தொகுப்பு காட்சியளித்தது. இன்னொரு தொகுப்பில் இயற்கைவளம்
மற்றும் செழுமையின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட ஏழு அதிசயங்கள் காணப்பட்டன.
சுற்றுலாப் பயணியர்களின் சுவையின் அடிப்படையில் புகழடைந்த வெவ்வேறு ஏழு இடங்கள்
தனியாக அதிசயப்பட்டியலில் காணப்பட்டன. அதிசயம் ஒன்றுபோல இல்லை. ஒவ்வொருவரும்
ஒவ்வொரு பார்வையின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தியிருந்தார்கள். அதற்கான
காரணம் தொகுப்பில் வலிமையாக குறிக்கப்பட்டிருந்தது. பார்க்கப்பார்க்க ஒவ்வொன்றும்
ஒரு அதிசயமாகவே தோன்றியது. அதைவிட அதிசயம் அவற்றைத் தொகுக்கும் விதத்துக்குப்
பின்னணியாக அவர்கள் பயன்படுத்தியிருந்த சின்னச்சின்ன கதைப்பின்னணிகள். படங்களைக்
காட்டிலும் அவையே மிகவும் சுவாரஸ்யமானவையாக இருந்தன. ஒரு தொகுப்பில் ஒரு தாயாரும்
குழந்தையும் இடம்பெறுகிறார்கள். தூங்குவதற்குமுன்னர் கதைகேட்கிறது குழந்தை.
"நீ மிகவும் அதிசயமான குழந்தையடா செல்லமே" என்று கொஞ்சுகிறாள் தாய்.
"அதிசயம் என்றால் என்ன அம்மா?" என்று கேட்கிறது குழந்தை. குழந்தைக்கு விளக்குவதற்காக அருகிலிருந்த புத்தகத்தை
எடுத்துக்காட்டி ஒவ்வொரு படமாக பார்க்கவைத்து விளக்கிச் சொல்கிறாள் தாய். இப்படி
இருக்கிறது ஒரு கதை. இன்னொரு தொகுப்பில் ஒரு காதலனும் காதலியும்
இடம்பெறுகிறார்கள். காதல் மோகத்தில் ஏதேதோ சொல்லிக்கொஞ்சுகிறான் காதலன். மோகம்
முற்றிய ஒரு பித்துக்கணத்தில் "உன் கண்கள் எட்டாவது அதிசயம்" என்று
சொல்கிறான். "மற்ற எழு அதிசயங்கள் என்னென்ன?" என்று அப்பாவித்தனமாகக் கேட்கிறாள் காதலி. அவளுக்குப் புரியும்படி ஒவ்வொரு
இடத்தைப்பற்றியும் விளக்கமாகச் சொல்கிறான் காதலன். இப்படி விரிவடைகிறது இன்னொரு
தொகுப்பு. கதைப்பின்னணிகளும் அவற்றுக்காக அவர்கள் வடிவமைத்திருந்த படங்களும்
மனத்தைக் கொள்ளைகொள்வதாக இருந்தன.
இன்னும் ஒரே ஒரு தொகுப்புமட்டுமே
பாக்கியிருந்தது. அதற்குள் நண்பரின் மனைவி தேநீர் கொண்டுவந்து கொடுத்தார்.
"சூடு ஆறிப் போயிடும். முதல்ல குடிச்சிடுங்க. படத்த அப்பறமா
பாத்துக்கலாம்" என்றார். அதிசயங்களில் மூழ்கியிருந்ததில் கிட்டத்தட்ட
ஒருமணிநேரத்துக்கும் மேல் கடந்துவிட்டிருந்தது. ஆனால் சிறிதும்
களைப்பில்லாதவகையில் அத்தொகுப்பு என் மனத்தில் இடம்பெற்றுவிட்டது. இவற்றில் எதை
முதல் தகுதிக்குரியதாக தேர்ந்தெடுப்பது என்பது உண்மையிலேயே சிக்கலான வேலையாகத்
தோன்றியது. இன்னும் இரண்டு முறைகளோ அல்லது மூன்று முறைகளோ மீண்டும்மீண்டும்
அப்படங்களைத் தொகுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தால் அவற்றை மதிப்பிடும் வரிசைமுறை
தானாக வசப்பட்டுவிடும் என்று நினைத்துக்கொண்டேன். பாக்கியிருக்கிற ஒன்றையும்
பார்த்துமுடிக்காமல் பேசக்கூடாது என்பதால் அமைதியாக தேநீரை அருந்தி முடித்தேன்.
எஞ்சியிருந்த அந்தப்
படத்தொகுப்பைப் பிரித்தேன். முதல் கணத்திலேயே அது என்னை ஈர்த்துவிட்டது.
அத்தொகுப்பு தொடங்கப்பட்டிருந்த கதையமைப்பில் படிந்திருந்த ஈர்ப்புத்தன்மையில் என்
மனம் மயங்கியது. அது ஒரு பள்ளியின் வகுப்பறை . ஆசிரியை அங்கே உட்கார்ந்திருக்கும்
பிள்ளைகளைப் பார்த்து தத்தம் குறிப்புச்சுவடியில் உலகின் ஏழு அதிசயங்களைப்
பட்டியலிடும்படி சொல்கிறார். குழந்தைகள் ஒவ்வொன்றும் தம் சுவடியில் குனிந்து
எழுதத் தொடங்குகின்றன. எழுதி முடித்ததும் உற்சாகமாக ஓடிவந்து ஆசிரியையிடம்
நீட்டுகின்றன. அவளும் அதை அன்போடு வாங்கி மேசைமீது அடுக்குகிறாள். நேரம்
கரைந்துகொண்டே போகிறது. ஒரே ஒரு சிறுமிதான் பாக்கி. இன்னும் கொஞ்ச நேரம்
கூடுதலாகவே அவள் எடுத்துக்கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் அடுக்கிவைத்திருந்த
சுவடிகளைத் திருத்தத் தொடங்குகிறாள். வேலை முடிந்துவிடுகிறது. ஆனாலும் இன்னும்
குனிந்த தலை நிமிராமல் சிறுமி எழுதிக்கொண்டே இருக்கிறாள். ஆசிரியை அச்சிறுமியை
நெருங்கி "வேலையை முடிக்க ஏதாவது
உதவி வேண்டுமா?" என்று கேட்கிறாள். சிறுமி
தலையை உயர்த்தி புன்னகையோடு "இன்னும் அஞ்சே அஞ்சி நிமிடம் டீச்சர், முடிச்சிருவேன்" என்கிறாள். அவள் தலையை வருடிக்கொடுத்துவிட்டு
இருக்கைக்குச் செல்கிறாள் ஆசிரியை. சொன்னபடி
ஐந்தே நிமிடங்களில் எழுத்து வேலையை முடித்துவிட்டு சுவடியோடு வந்து நிற்கிறாள்
சிறுமி. ஆவலோடு வாங்கிப் பிரித்துப் படித்த
ஆசிரியை பிரமித்து வாய்பிளந்தபடி அச்சிறுமியை நம்பமுடியாதவளாகப்
பார்க்கிறாள். எழுந்து ஆவலோடு அச்சிறுமியை நெருங்கி தன்னோடு சேர்த்து
அணைத்துக்கொள்கிறாள். அச்சிறுமி எழுதிய ஏழு அதிசயங்களின் பட்டியல் கடைசிக்
காட்சியட்டையாக இடம்பெறுகிறது. ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான் படமொன்றும்
இடம்பெற்றிருக்கிறது.
1. எதையும் அற்பமாகக் கருதாமல் அக்கம்பக்கக் காட்சிகளை ஆழ்ந்து பார்ப்பது முதல்
அதிசயம்
2. எங்கெங்கும் நிறைந்திருக்கும் இயற்கையின் இசைக்குச் செவிகொடுப்பது இரண்டாவது
அதிசயம்.
3. எவ்வித வேறுபாட்டுணர்வுமில்லாமல் தொட்டுப் பேசுவது மூன்றாவது அதிசயம்.
4. கண்ணால் காண்பதையும் வாழ்வில் நடப்பதையும் ஈடுபாட்டோடு சுவைப்பது நான்காவது
அதிசயம்.
5. திறந்த மனத்துடன் அனுபவங்களை எதிர்கொண்டு ஒவ்வொன்றையும் உணர்ந்தறிதல் ஐந்தாவது
அதிசயம்.
6. மனத்தில் கள்ளமற்று புன்னகைத்தல் ஆறாவது அதிசயம்.
7. எல்லா உயிர்களிடத்தும் அன்போடிருத்தல் ஏழாவது அதிசயம்.
"தெரிஞ்ச ஒரு விஷத்திலேருந்து தெரியாத ஒரு விஷயத்தைநோக்கி சட்டென்று தாவிப்போவ
முடிவதுதானே படைப்பு" என்று முன்பொருமுறை நண்பர் சொன்ன வாக்கியங்கள் நெஞ்சில்
எழுந்தன. இந்தப் படத்தொகுப்பு சென்றிருக்கிற தொலைவும் அதைப் பகிர்ந்துகொண்டிருந்த
முறையும் என் மனத்தை மிகவும் கவர்ந்தன. திரும்பவும் ஒருமுறை அத்தொகுப்பை
தொடக்கத்திலிருந்து பார்த்தேன். ஒரு
மீள்பார்வையாக இருபத்தைந்து படத்தொகுப்புகளையும் வேகவேகமாக ஒருமுறை நகரவிட்டுப்
பார்த்துவிட்டு சில கணங்கள் அசைபோட்டேன். என் நண்பர் என் முகத்தையே
பார்த்திருந்தார். கையிலிருந்த சுவடியைக் கீழே வைத்துவிட்டு நானும் தற்செயலாக அவர்
பக்கமாகப் பார்த்தேன்.
"என்ன முடிவு பண்ணிட்டீங்கிளா?" அவர் ஆவலோடு கேட்டார். செய்தாகிவிட்டது என்பதன் அடையாளமாக நான் தலையசைத்துச்
சிரித்தேன்.
"உங்கள் பார்வையில் எது முதலாவதாக தெரிகிறது?"
"கடைசியாக பார்த்தோமே, இந்தப்
படத்தொகுப்புதான்."
என் முடிவில் அவர்
நிறைவுற்றதை அவருடைய புன்னகையும் மலர்ந்த கண்களும் உணர்த்தின. மற்ற இரண்டு
நிலைகளுக்குரிய படத்தொகுதிகளையும் அடையாளம் காட்டினேன். "ரொம்ப ஆச்சரியமா
இருக்குது. நான் நினைப்பதுபோலவே நீங்களும் நினைக்கிறீங்க" என்றபடி
நெருங்கிவந்து என் தோளைத் தொட்டார் நண்பர்.