பெங்களூரில் சட்டப்படிப்பை முடித்த ராஜாஜி சேலத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர். 1900 -1920 காலகட்டத்தில் மாகாணத்தின் மிகமுக்கியமான வழக்கறிஞர் அவர். வெற்றிகரமான முறையில் தன் தொழிலை நடத்திவந்தவர். சேலம் நகராட்சியில் உறுப்பினராகவும் செயலாற்றியவர். அப்போது ஆங்கில அரசு கொண்டுவந்த ரெளலட் சட்டத்துக்கு எதிராக நாடு முழுதும் உருவாகிப் பெருகிய எதிர்ப்பலை, சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமானோர் ஈடுபடுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. ராஜாஜியின் வாழ்க்கையிலும் அது திருப்பத்தை உருவாக்கியது. காந்தியடிகள் தொடங்கிய சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1930 ஆம் ஆண்டில் உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கி தண்டி யாத்திரையைத் தொடங்கியபோது, தமிழகத்தில் வேதாரண்யம் யாத்திரையை நிகழ்த்தினார் ராஜாஜி.
சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை ராஜாஜியின் மனம் ஏற்றுக்கொண்டதில்லை. தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்கான சேவைமுயற்சிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார். மதுப்பழக்கத்தால் அழியும் பல குடும்பங்களை நேருறக் கண்ட அனுபவத்தில் மதுவிலக்குப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பிரச்சாரங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மதுப்பழக்கத்துக்கு பலர் அடிமைப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்துவந்தார்கள். அக்காலத்தில் தீண்டாமை ஒழிப்பும், மதுப்பழகத்துக்கு எதிரான பிரச்சாரமும் காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கைகளாக இருந்தன. அக்கருத்துகள் சமூகத்தில் வேர்பிடித்து தழைக்கும் வகையில் காந்தியின் தொண்டர்கள் அல்லும் பகலும் ஓயாமல் பாடுபட்டு வந்தார்கள். 1937 ஆம் ஆண்டில் மதராஸ் மாகாண முதல்வராகப் பணியாற்றும் வாய்ப்பு ராஜாஜிக்குக் கிடைத்தபோது, அதை ஏற்று அப்பதவி வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில் அவர் சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக மதுவிலக்கைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். 1952 ஆம் ஆண்டில் மற்றொரு முறை மாகாணமாக முதல்வராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது, மாகாணம் முழுமைக்குமாக மதுவிலக்குச் சட்டத்தை விரிவுபடுத்தி, மக்களிடையே அதிகரித்துவிட்ட மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். நாற்பதுகளில்
ராஜாஜி திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமத்தை அமைத்து செயல்பட்டபோது, ஆசிரமத்தின் வெளியீடாக பிரசுரமான விமோசனம் என்னும் இதழின் முக்கிய நோக்கமே மதுவிலக்காகும். மதுப்பழக்கத்தால் விளையும் உடல் கேடுகளையும் சிதைந்துபோகும் குடும்ப உறவுகளையும் சுட்டிக்காட்டி ஏராளமான படைப்புகளையும் செய்திக்கட்டுரைகளையும் விமோசனம் இதழ் வெளியிட்டு வந்தது. 1971 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி மதுவிலக்குச் சட்டத்தை விலக்கிக்கொள்ளும் நிலைபாட்டை எடுக்கவிருக்கிறது என்னும் செய்தி கிடைத்ததும் தீராத மனத்துயரக்கு ஆளாகி, தன் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் தி.மு.க. தலைவரைச் சந்தித்து நாட்டு மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு மதுவிலக்கு மிகவும் அவசியமான சட்டமென்று எடுத்துச் சொல்லி, அது விலக்கப்படக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார். ஆனால் ராஜாஜியுடைய வேண்டுகோளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. அந்த ஆண்டே அரசு மதுவிலக்குச் சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டது.
மதுப்பழக்கமும் தீண்டாமை எண்ணமும் சமூகத்துக்கு தீமையை விளைவிக்கும் என்பது அனைத்துக் காந்தியவாதிகளுக்கும் ஏற்புடைய கருத்தாகவே இருந்தது. அரசியல் களத்தில் இருந்தவர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் இக்கருத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்கான வழிமுறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்கள். அக்கருத்தை சமூகத்தின் அடித்தட்டு வரைக்கும் பரவும் வகையில் மேடைகளில் பேசினார்கள். உண்ணாவிரதம் இருந்து பரப்பினார்கள். கருத்துச் சித்திரங்களைத் தீட்டினார்கள். இக்கருத்துகளை மையக்கருவாகக் கொண்டு பல நாடகங்கள் மேடைகளில் நடிக்கப்பட்டன. கட்டுரைகளும் கதைகளும் எழுதப்பட்டன. இலக்கியப்படைப்பு என்னும் வகையில் முதல் வரிசையில் இந்த ஆக்கங்களுக்கு பெரிய இடமில்லை என்ற போதும், எழுதியவர்களின் நல்லெண்ணங்களைப் புலப்படுத்தும் படைப்புகள் என்னும் வகையில் ஒரு மொழியின் ஏதோ
ஒரு வரிசையில் இவற்றுக்கு இடமுண்டு. தமிழில் அவ்வரிசையில் வைத்துப் பார்க்கத்தக்க முன்னோடி எழுத்தாளர் ராஜாஜி.
ராஜாஜியுடைய ஒருபாதிக் கதைகள் தீண்டாமைப்பழக்கத்தில் உள்ள பொருளின்மையை உணர்த்துபவை. இன்னொரு பாதிக் கதைகள் மதுப்பழக்கத்தால் விளையும் தீமைகளையும் இழப்புகளையும் சுட்டிக் காட்டுபவை. முகுந்தன்,
ஜகதீச சாஸ்திரிகளின்
கனவு, பட்டாசுக்கட்டு,
அன்னையும் பிதாவும்,
அறியாக்குழந்தை
போன்ற கதைகளின் கருக்கள் தீண்டாமையின் விளைவை ஒட்டியவை. ஜெயராமன்,
திக்கற்ற பார்வதி போன்ற கதைகளின் கருக்கள் மதுப்பழக்கத்தின் விளைவை ஒட்டியவை. இவ்விரண்டு கருக்களிலிருந்து விலகி அமைந்திருக்கும் சாந்தி,
ராயப்பன், தேவதரிசனம் போன்ற கதைகள் மனிதர்களுக்கு நன்னெறியை உணர்த்தும் ஆவலில் உருவானவை.
தீண்டாமையின் விளைவாக மக்கள் மனத்தில் நிறைந்திருக்கும் நம்பிக்கைகளைத் தகர்க்க விழையும் கதை முகுந்தன். தந்தையில்லாத குடும்பத்தில் தாயாரால் வளர்க்கப்படும் சிறுவன் முகுந்தன். சாதி அடிப்படையில் மேல்தட்டில் இருப்பவன். மாரி, சின்னான் போன்ற சிறுவர்கள் சாதி அடிப்படையில் கீழ்த்தட்டில் இருப்பவர்கள்.
ஒருநாள் ஒரு தோப்பில் பல சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தற்செயலாக ஒரு குரங்குக்குட்டியைப் பார்க்கிறார்கள். அதைப் பிடித்துவைத்துக்கொண்டு விளையாடி மகிழ்கிறார்கள். அவர்கள் குட்டிக்குரங்கைத் தூக்கிவைத்துக்கொண்டு விளையாடுவதைப் பார்க்கும் தாய்க்குரங்கு சீற்றம் கொள்கிறது. குட்டியை மீட்பதற்காக அவர்களைத் துரத்துகிறது. அதைப் புரிந்துகொள்ள முடியாமல் அவர்கள் குட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். முகுந்தன் தாய்க்குரங்கால் தாக்கப்பட்டு மயங்கி விழுகிறான். தற்செயலாக அதைப் பார்க்கும் மாரி, முகுந்தனிடமிருந்து குட்டியைப் பிடுங்கிக்கொண்டு ஓடுவதன் வழியாக குரங்கின் கவனத்தைத் தனது பக்கம் திருப்பிவிடுகிறான். அப்போது அவனைத் துரத்திக்கொண்டு வருகிறது தாய்க்குரங்கு. சிறிது
தொலைவு ஓடி ஆட்டம் காட்டும் மாரி, குரங்கின் பார்வையில் படும்படி குட்டியை நழுவ விடுகிறான். குட்டியைத் திரும்பக் கண்டதும் மறுகணமே அதைத் தூக்கிக்கொண்டு தாய்க்குரங்கு அங்கிருந்து ஓடிவிடுகிறது.
அச்சத்தின் காரணமாக எல்லாச் சிறுவர்களும் ஓடிவிட முகுந்தன் மட்டும் தரையில் மயக்கத்தில் விழுந்துகிடக்கிறான். மாரியும் சின்னானும் அவனை அவனுடைய வீடுவரைக்கும் தூக்கிச் சென்று தரையில் கிடத்துகிறார்கள். உண்மையைச் சொன்னாலும் அதைப் புரிந்துகொள்ளத் தெரியாத அவனுடைய தாய் தன் குடும்பத்தைப் பாவம் சூழ்ந்துவிட்டதாக நினைத்து சீற்றமுறுகிறாள். கோபத்தில் அந்தப் பிள்ளைகளை அடிக்கிறாள். அடிவாங்கிக்கொண்டு தப்பித்து வந்த அச்சிறுவர்களின் தாய் நடந்ததையெல்லாம் கேட்டு திகைத்து நின்றுவிடுகிறாள். அவளும் தன் குடும்பத்தைப் பாவம் சூழ்ந்துவிட்டதாக நினைக்கிறாள்.
காலம் நகர்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். முகுந்தன் தன் தாயை இழந்துவிடுகிறான். அங்கிருந்து எங்கோ வடக்கே சென்று எப்படியோ படித்து மருத்துவம் படித்துவிட்டு சொந்த ஊருக்கே திரும்பி வந்து மருத்துவமனை நடத்தி வருகிறான். மாரியின் குடும்பமும் பஞ்சத்தின் விளைவாக இலங்கைக்குச் சென்று கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு கைக்குக் கிடைத்த பணத்தோடு ஊருக்குத் திரும்பிவந்து வண்டியோட்டி பிழைக்கிறது. ஒருநாள் மேல்சாதிக்காரர்கள் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கப்போன மாரியின் மனைவி பூவாயியை எல்லோரும் சேர்ந்து தாக்கி காயப்படுத்தி தரையில் வீழ்த்திவிட்டு ஓடிவிடுகிறார்கள். அவளுக்கு முகுந்தன்தான் மருத்துவம் பார்த்துக் காப்பாற்றுகிறான்.
முகுந்தன் மாரியை அடையாளம் கண்டு கொள்கிறான். இளமையில் தன் தாயார் அவனுக்கு இழைத்த கொடுமைக்காக வருத்தம் தெரிவிக்கிறான். அவன் குடும்பம் தன்னோடு வசிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறான். ஒரு காலத்தில் மேல்சாதிக்காரர்கள் வீட்டுக்குச் சென்றதையே பாவமென நினைத்த தன் தாய், முகுந்தனோடு வசிக்கும் திட்டத்தை ஏற்பாளோ மாட்டாளோ என்ற தயக்கத்தில் பதில் சொல்லத் தயங்குகிறான் மாரி. அவளுடன் பேசிச் சம்மதிக்க வைக்க தானே முயற்சி செய்வதாகச் சொல்கிறான் முகுந்தன். அவன் முயற்சிக்கு வெற்றியும் கிடைக்கிறது. மாரியின் குடும்பம் அவனோடு வாழத் தொடங்குகிறது. விஷயம் தெரிந்ததும் ஊர் அவனை ஒதுக்கிவைத்துவிடுகிறது. ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் மனம் உணர்ந்த நிம்மதியில் அனைத்தையும் மறக்கிறான் முகுந்தன்.
மனிதர்கள் சேர்ந்து வாழ்வதுதான் முக்கியமே தவிர, சாதி அடையாளங்கள் முக்கியமல்ல என்னும் உண்மையை வாசிப்பவர்கள் நெஞ்சில் பதியவைக்கும் முயற்சியை இக்கதையில் காணலாம். அந்த இறுதிக்கட்ட உண்மையை நோக்கியே ஒவ்வொரு சம்பவமும் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.
மதுப்பழக்கத்துக்கு ஆட்பட்டுவிட்ட ஒரு குடும்பத்தின் சரிவை யாராலும் தவிர்க்கமுடிவதில்லை என்பதையும் அதனால் நேரும் உயிரிழப்பையும் மான இழப்பையும் சுட்டிக்காட்டும் கதை ஜெயராமன். ஜெயராமன் சிறுவன். அவனுடைய தந்தை சுப்பா நாயுடு. சிறு வயதிலேயே ஊருக்குள் ‘சாராய சுப்பன்’ என்று பட்டப்பெயர் எடுத்தவன். மூக்கு முட்ட சாராயம் குடிப்பதும் கடையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் எங்காவது ஒரு சாக்கடை ஓரமாக விழுந்து கிடப்பதும் வழக்கமாக நடைபெறும் சம்பவம். ஊரில் உள்ள சிறுவர் சிறுமியர் அனைவரும் தினந்தோறும் பள்ளிக்கூடம் சென்று படிப்பதைப் பார்த்து சிறுவன் ஜெயராமனுக்கும் பள்ளிக்குச் செல்லும் ஆசை துளிர்த்தது. அவன்
அம்மாவிடம் தன் ஆசையைத் தெரிவித்தான் அவன். கைக்குழந்தையைக் காரணம் காட்டி சிறிது காலம் சமாளிக்கிறாள் அவள். குழந்தை பெரிதானதும் மறுபடியும் தன் ஆசையை முன்வைக்கத் தொடங்குகிறான் ஜெயராமன். சம்மதிப்பதைத் தவிர அவன் அம்மாவுக்கு வேறு வழி தெரியவில்லை. உடுத்த ஒரு ஒழுங்கான உடை இல்லை. ஒருவழியாக
கந்தையாடையையே
தைத்து உடுத்தி அனுப்பிவைக்கிறாள்.
ஆனால் ஜெயராமன் கற்பனை செய்துவைத்திருந்த அளவுக்கு அந்தப் பள்ளிக்கூடச் சூழல் அவனுக்கு இதமளிப்பதாக இல்லை. அவன் உடையையும் கோலத்தையும் பார்த்து பிற சிறுவர்கள் அவனைக் கிண்டல் செய்கிறார்கள். சுற்றி நின்று சிரிக்கிறார்கள். தொட்டுப் பார்த்து சீண்டுகிறார்கள். அவனைப்பற்றிய தகவல்களை விசாரிக்கிறார் ஆசிரியர். அவன் பதில் சொல்லும் முன்பாக, அவன் சார்பில் சுற்றி நின்றிருக்கும் சிறுவர்கள் அவனைக் கேவலப்படுத்தும் விதத்தில் பதில் சொல்கிறார்கள். “உன் அப்பா பெயர் என்ன?” என்று கேட்கிறார் ஆசிரியர். “சாராய சுப்பன் சார்” என்று யாரோ ஒரு சிறுவன் பதில் சொல்கிறான். சிறுவர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். அந்தக் கிண்டலைத் தாங்கமுடியாமல் ஜெயராமன் அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு வந்துவிடுகிறான். தாயிடம் அழுது முறையிடுகிறான். அவனுக்கு ஆறுதல் சொல்ல சொற்களின்றி அவன் தாயும் அழுகிறாள்.
அன்று இரவு சுப்பன் முழு போதையுடன் வீட்டுக்குத் திரும்புகிறான். ஜெயராமனை அடிக்கத் தொடங்குகிறான். “உன்னை யார் பள்ளிக்குப் போகச் சொன்னது?” என்று கேட்டு அடிக்கிறான். “என்னைப்பற்றி எல்லோரும் கேலி பேசுவதற்காகவா பள்ளிக்குப் போனாய்? என் மானத்தை வாங்கிவிட்டாயே” என்று சொன்னபடி மீண்டும் மீண்டும் உதைக்கிறான். இடையில் புகுந்து தடுக்கவந்த தாய்க்காரிக்கும் உதை விழுகிறது. ஜெயராமன் மயங்கி விழுகிறான். இதற்குள் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கே சேர்ந்துவிடுகிறார்கள். போதை தெளியாமலேயே அங்கிருந்து வெளியேறிவிடுகிறான் சுப்பன். ஜெயராமன் இறந்துவிடுகிறான். அவன் தாய் கூக்குரலிட்டு அழுது புலம்புகிறாள்.
பெற்ற மகனுடைய கல்வியைவிட மதுபோதையை பெரிதாக எண்ண வைக்கும் பழக்கத்தால் ஒருவன் தன் குடும்பத்தையே இழந்துவிடுகிறான். தன் குடும்பம் பட்டினியாக இருக்கிறது, தன் பிள்ளை படிப்பறிவில்லாமல் இருக்கிறது என்பதைவிட, தன் பழக்கத்தைச் சுட்டிக்காட்டும் சொல் ஒருவனை வெறிகொள்ள வைத்துவிடுகிறது. தான் குடிப்பதால்தானே தன்னைப் பட்டப்பெயரிட்டு அழைக்கிறார்கள், அதை விட்டுவிடலாமே என்று அவன் யோசிக்கவில்லை. மாறாக, நீ பள்ளிக்கூடம் போனதால்தானே அவர்கள் சொன்னார்கள் என சீற்றமுற்று பெற்றெடுத்த பிள்ளையையே அடித்துச் சாய்க்கத் தொடங்குகிறான். பிள்ளை என்னும் பாசத்தைக்கூட மதுவின் போதை விழுங்கிவிடுகிறது. இதே கோணத்தில் மதுவின் போதையால் ஒருவன் மனைவியைப் பறிகொடுத்த நிகழ்ச்சி திக்கற்ற
பார்வதி சிறுகதையில்
முன்வைக்கப்படுகிறது.
இவ்விரண்டு தன்மைகளிலிருந்தும் விலகி நிற்கும் ஒரு கதை ஓர்
எலெக்ஷன்
கதை. சாதிகள்
அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு நகராட்சியில் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இருவர் போட்டியிடுகிறார்கள். முப்பத்தைந்து உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் சம அளவில் இரு அணிகளிலும் இருக்கிறார்கள். ஓர் உறுப்பினர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். அவருடைய வாக்கைப் பெறும் வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு உறுதி என்பது தெளிவாகிவிடுகிறது. அவருடைய வாக்கைப் பெறுவதற்கு வேட்பாளர்கள் செய்யும் கீழ்மைச்செயல்கள் நினைத்தாலே வெட்கப்பட வைப்பவை. பணம் கொடுக்கிறார்கள். ஆளை கண்காணாத இடத்துக்குக் கொண்டு சென்று மறைத்துவைக்கிறார்கள். பொய்வாக்குறுதிகள் கொடுக்கிறார்கள். தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்கும் தீட்டுத்தத்துவத்துக்கு விடைகொடுக்கப் படுகிறது. ஒரு வெற்றிக்கான வேட்கை மனிதர்களை என்னவெல்லாம் படாத படுத்துகிறது என்பதற்குச் சான்றாக உள்ள எல்லாச் சம்பவங்களையும் ராஜாஜி இக்கதையில் குறிப்பிடுகிறார்.
சமூக மேம்பாடு என்னும் இலட்சியம் சார்ந்து சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவிலும் பிந்தைய இந்தியாவிலும் எல்லாத்
துறைகளிலும் பல அறிஞர்கள் தன்னலமின்றி உழைத்தார்கள். அவர்களுடைய எண்ணற்ற தியாகங்களே இந்த மண்ணுக்கு அடியுரமாக அமைந்தன. இன்று நாம் காணும் வளர்ச்சியை சாத்தியப்படுத்திய உரம் அது. தன் காலத்து இலட்சியங்களுக்கு தடையாக இருக்கும் அம்சங்களைச் சுட்டிக் காட்டுவதையும் அவர்கள் தன்னுடைய கடமைகளில் ஒன்றென எடுத்துக்கொண்டார்கள்.
ராஜாஜி மிகப்பெரிய நம்பிக்கைவாதி. செயலூக்கம் மிக்கவர். தன் மனத்தில் தோன்றிய நல்லெண்ணங்களையே அவர் தன் படைப்புகளாக எழுதினார். இப்படைப்புகளைப் படிப்பதன் வழியாக அரசியல் சாராத அவருடைய இன்னொரு முகத்தை அறிந்துகொள்ளலாம். அதற்கு இத்தொகுதி வழிவகுத்துக் கொடுக்கிறது. பல ஆண்டுகளாக வாசகர்களின் பார்வையிலேயே படாமல் இருந்த இத்தொகுதியைத் தேடிக் கண்டுபிடித்து பிரசுரித்திருக்கும் காந்திய இலக்கியச் சங்கத்துக்கு தமிழுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
(காந்திய இலக்கியச்சங்கம் வெளியீடாக வரவிருக்கிற ’ராஜாஜி கதைகள்’ தொகுதிக்கு எழுதிய முன்னுரை)