தங்கப்பாவின்
கவிதையுலகம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கால நீட்சியையுடையது. பாரதியார், வள்ளலார், பாரதிதாசன் ஆகிய
மாபெரும் ஆளுமைககளின் தொடர்ச்சியாகத் தமிழில் இயங்கிய சக்தியாக அவரை
அடையாளப்படுத்தலாம். யாப்புவடிவில் அவர் சொற்கள் ஓர் அருவியைப்போல
விழுந்துகொண்டிருப்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. அதன் பாய்ச்சலில் ஒரு
தடையுமில்லை. சீரான வேகத்துடனும் தாளலயத்துடனும் சொற்கள் உற்பத்தியானபடி
இருக்கின்றன. எடுத்துரைப்பில் அவருடைய பாடல்களில் ஒரு சின்னப் பிசகுகூட
இருப்பதில்லை. அவர் பாடல்களை மனமொன்றிப் படிக்கும்போது அச்சொற்களின் கதகதப்பு நம்
மனத்தில் மெல்லமெல்லப் படியத் தொடங்குகிறது. அந்த வெப்பம் பெருகப்பெருக அச்சொற்கள்
ஏதோ ஒரு புள்ளியில் நம் நெஞ்சிலிருந்து பெருகுவதைப்போல ஓர் உணர்வு உருவாகத்
தொடங்குகிறது. அந்த அனுபவத்தை நம் அனுபவமாக எண்ணும் விருப்பமும் ஏற்படுகிறது.
அவருடைய அரைநூற்றாண்டுக்காலக் கவிதைகளில் அத்தகு விருப்பத்தை உருவாக்குபவையே
மிகுதி. அது அவருடைய தனிப்பட்ட வெற்றி.
அவருடைய
அனுபவத்தை நம் அனுபவமாக மாற்றி எண்ணிக்கொள்ளும் விருப்பம் என்று சொல்வதற்கும்
நமக்கும் இத்தகு அனுபவங்கள் வாய்த்திருக்கின்றனவே என்று கரைந்து நெகிழ்வதற்கும்
ஒரு சின்ன வேறுபாடு உண்டு. மனம் எண்ணும் ஒன்றை நம்பி நடைமுறைப்படுத்தி
அப்புள்ளியில் தோய்ந்து திளைத்திருத்தல் என்பதுதான் அந்த வேறுபாடு. ஒற்றுமையும்
வேற்றுமையும் ஒரே புள்ளியில் நிகழ்வது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால்
தங்கப்பாவின் கவிதைகளைப் படிக்கும்போது எழுவது இந்த எண்ணம்தான். தமிழ்க்கவிதை
மரபில் இத்தகைய ஒற்றுமைக்கும் வேற்றுமைக்கும் நீண்ட மரபு உண்டு. “மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தின்
மறைந்தது மாமத யானை” என்று மொழியும் கவிஞரால் மரத்தையும் மாமத யானையையும் எந்தச்
சந்தேகமும் இல்லாமல் ஒரே இடத்தில் பார்க்கமுடிந்திருக்கிறது. அதைப்படிக்கும்
வாசகர்களுக்கு அப்படி ஓர் அனுபவம் தமக்கும் வாய்க் கக்கூடாதா என்ற விழைவு
ஏற்படுகிறது. ஆனால் அந்த விழைவு கூடிவராத அளவு ஏதோ ஒன்று தடையாகவும் இருக்கிறது.
பக்தி இலக்கியக் காலகட்டத்துக் கவிஞர்கள் அனைவருக்கும் இந்த அனுபவம் இருந்தது.
காரைக்கால் அம்மையாருக்கு இருந்தது. ஆண்டாளிடம் இருந்தது. வள்ளலாரிடமும்
குடிகொண்டிருந்தது. காக்கைச் சிறகினிலே நந்தலாலாவின் கரிய நிறத்தைக் கண்ட
பாரதியாருக்கும் இருந்தது. அவர்களிடம் பொங்கி வழிந்த தெய்வநேச உணர்வுக்கு அளவே
இல்லை. நேசம் அவர்களைக் கரைத்துவிடுகிறது. நேசத்தில் கரைந்திருக்கும் போது
தெய்வத்தின் இருப்பை விருப்பப்பட்ட விதங்களில் மாற்றி அவர்கள் நிகழ்த்தும்
உரையாடல்கள் அற்புதமாக இருக்கின்றன. ஆண்டாளைப்போல, பாரதியாரைப்போல
நமக்கும் ஆவேசமாக உரையாட ஆசையாகவே உள்ளது. ஆனால் அது நிகழ்வதில்லை. “ஊரிலேன் காணியில்லை, உறவு
மற்றொருவரில்லை” என்றோ “ஊர்வேண்டேன்
பேர்வேண்டேன்” என்றோ சொல்லியவண்ணம் அவர்கள் அளவுக்கு நம்பிப் பின்செல்ல
நம்மால் முடியவில்லை. அதனாலேயே அவர்கள் அளவுக்கு நம்மால் கரைந்துபோகவும்
முடியவில்லை. இந்த ஒற்றுமையையும் வேற்றுமையையும் பல நூற்றாண்டுகள் கடந்து நம்மை
மீண்டும் உணரவைக்கின்றன தங்கப்பாவின் கவிதைகள். ஆனால் இக்கவிதைகளின் பின்புலமும்
பக்தி அல்ல, சமூகம்.
“விழிப்பு வேண்டும்” என்பது
தங்கப்பாவின் ஒரு கவிதை. கவிதையில் ஒருவர் சாலை வழியாக நடந்து வருகிறார். வழியில்
கல்லொன்று கிடக்கிறது. வருகிறவர்கள் போகிறவர்கள் காலில் இடிக்குமே என்று காலாலேயே
அக்கல்லை உதைத்துத் தள்ளுகிறார். உதைபட்டு உருண்டோடிய அந்தக் கல் பாதை விளிம்பைத்
தாண்டி வேகமாக உருண்டோடிச் சென்று பாதையருகே பயிர் நிலத்திடையே ஓரமாக தழைத்திருந்த
ஓர் ஆமணக்குச் செடியின் கொழுந்தைத் தாக்கி ஒடித்துவிட்டு கீழே விழுகிறது. கல்லை
ஒதுக்கியத் தள்ளியவர் கண்களிலும் இக்காட்சி படுகிறது. தன் செயலுக்காக உண்மையிலேயே
உள்ளம் வருந்துகிறார். வருந்தி என்ன செய்யுமுடியும்? நல்லது செய்வதாக
நினைத்துக்கொண்டு நாம் ஏதோ ஒன்றைச் செய்யத் தொடங்குகிறோம். ஆனால் வேறொன்றை அது
பாதித்துச் சிதைத்துவிடுகிறது. இங்கே நோக்கம் நல்லதாகவே இருக்கிறது. செயலும்
நல்லதாகவே இருக்கிறது. ஆனால் முடிவில் எதிர்பார்த்த நல்லதும் நடப்பதோடு எதிர்பாராத
பாதிப்பும் நிகழ்கிறது. எதிர்பாராத பாதிப்பையும் நாம் கணக்கிலெடுத்துக்கொள்ளும்
விழிப்புணர்வு வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது கவிதை. இந்த எளிய கவிதையில்
சித்தரித்துக் காட்டப்படும் நிகழ்ச்சி நம்மில் பல பேருடைய வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கலாம்.
அந்த எண்ணம் கவிதையை வாசிக்கும்போது உடனடியாக ஒரு நெருக்கத்தையும் ஒற்றுமையையும்
உணரவைக்கிறது. ஆனால் அவர் சுட்டிக்காட்டும் விழிப்பு நம்மிடம் இல்லை. அங்கு
எதிர்பாராத ஒரு வேற்றுமையுணர்வு நம் மனத்தில் எழுகிறது.
“வாழும் காதல்” என்பது
தங்கப்பாவின் இன்னொரு கவிதை. ஓர் இளம்பெண்ணுக்கும் இளைஞனுக்கும் நிகழும் உரையாடலாக
அமைந்த கவிதை. உரையாடலென்று சொல்வதுகூட பிழையாகலாம். காதலை முன்மொழியும்
இளைஞனைநோக்கி இளம்பெண் நிகழ்த்தும் உரை என்றுதான் அதைச் சொல்லவேண்டும். நான்கு
விருத்தங்களைக் கொண்ட இக்கவிதை பல தளங்களைநோக்கி அழகாக நகர்ந்து செல்லும் தன்மை
கொண்டதாக உள்ளது. “சிவந்த உடல் அழகினுக்கும் முகமலர்க்கும் சிற்றிடைக்கும்
மென்மயில்நேர் சாயலுக்கும் உவந்துன்னை நான் காதலித்தேன் என்பீராயின் உயர்வுடையீர், உம்காதல் எனக்கு வேண்டாம்” என்று மறுக்கத்
தொடங்குகிறாள் அந்தப் பெண். அவனுடைய காதலை ஏற்க மறுப்பதற்கு அவளுக்கென்று ஒரு
தனிப்பட்ட காரணம் இருக்கிறது. தன்னைவிடச் சிவந்த உடலும் தன்னைவிடச் சிவந்த அழகும்
தன்னைவிட மென்மையும் கொண்ட ஒருத்தியைச் சந்திக்க நேரும் வாய்ப்பு அமையுமென்றால்
அவற்றால் அவள் ஈர்க்கப்படமாட்டான் என்று எப்படிச் சொல்லமுடியும்? ஈர்ப்புக்கான மையப்புள்ளி அழகு என இருக்கும் நிலையில் அந்த
ஈர்ப்பு இன்னும் கூடுதலாகத்தானே அப்போது செயல்படும். “அப்போது என்னைவிட்டு அவர் பின்னால் போகத்தானே செய்வீர்கள்?” என்று கேட்கிறாள் அவள். பிறகு “கல்வியினால் நுண்ணறிவால் பாட்டியற்றும் கற்பனையின் திறத்தாலே
கவர்ச்சியுற்று மெல்லிஉனைக் காதலித்தேன் என்பீராயின் மேதகையீர், உம்காதல் எனக்கு வேண்டாம்” என்று மறுபடியும்
உறுதியாகத் தன் மறுப்பைத் தெரியப்படுத்துகிறாள். கல்வி, அறிவு திறமை என்பவை ஈர்ப்புக்கான மையங்கள் என ஆகும்
நிலையில் இவற்றைவிட கூடுதலான கல்வி, கூடுதலான அறிவு, கூடுதலான திறமை ஆகியவற்றைக் காணநேரின் மனம் விலகிச்
செல்லாது என எப்படி எடுத்துக்கொள்ள முடியும் என்று கேட்கிறாள். இப்படி நான்கு
விருத்தங்கள் இருக்கின்றன. உரையின் முடிவில் தன்னை எல்லாவிதக் குறைகளோடும்
நிறைகளோடும் காதலிக்கும் எண்ணத்தை அவனிடம் விதைக்கிறாள். குறைகளையும் நிறைகளையும்
இணையானவையாக மதித்து மனமொப்பி உருவாகும் காதலில் ஊறும் உணர்ச்சியை அவனை
உணரவைக்கிறாள். “வையமெலாம் அழிந்தாலும் கடல்து¡ர்ந்தாலும் வாழும் அந்தக் காதல்” என்று சொல்லி முடிக்கிறாள். இப்படி ஓர் உரையாடல் நம்மிடம்
நிகழ்த்தப்பட்டால் நமக்கு என்ன தோன்றும்? பிடித்ததன்பால்
விருப்பு, பிடிக்காதவற்றின்பால் வெறுப்பு, ஈடுபாடு அல்லது ஒவ்வாமை, ஆசை அல்லது
விலகல், நட்பு அல்லது கோபம் என இரு வேறுவேறு விளிம்புகளிடையே
மாறிமாறி ஊடாடுகிற நம் மனத்துக்கு இந்தக் கோரிக்கை விசித்திரமாகப் படலாம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் ஏற்பாகமட்டும் கவிதையைச் சுருக்கிப்
பார்க்கத் தேவையில்லை. இந்த உலகை ஏற்றுக்கொள்தல், இந்த உறவுகளை
ஏற்றுக்கொள்தல், விமர்சனங்களை ஏற்றுக்கொள்தல் எனப் பல ஏற்றுக்கொள்தல்களை
இதன் விரிவாகக் காணலாம். “குறைகளோடு ஒன்றை
ஏற்றுக்கொள்தல்” என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல, ஆனால் தங்கப்பாவின் மனத்துக்கு அது சாத்தியமாகியுள்ளது.
“குழந்தைகள் ஆட்டம்” என்பது இன்னொரு
கவிதை. மணல்வீடு கட்டி விளையாடும் குழந்தைகளின் களியாட்டத்தைச் சித்தரிக்கிறது
இக்கவிதை. ஓட்டாங்கச்சிகளைப் பண்டங்களின் சேமிப்புப் பாத்திரங்களாகவும் மணலைப்
பருப்பாகவும் வேப்பங்கொழுந்தைக் கீரையாகவும் சுண்ணாம்புத் து¡ளை சக்கரையாகவும் துத்தி இலைகளை அப்பளங்களாகவும் சுட்டி
நிகழ்த்தப்படும் அந்தப் பிள்ளைப் பெருவிருந்தில் கலந்துகொள்ளக் கவிஞருக்கும்
அழைப்பு விடுக்கப்படுகிறது. தட்டு என்று போடப்பட்ட இலையில் சோறென மண்ணும் குழம்பென
தண்ணீரும் பரிமாறப்படுகின்றன. அவரும் உண்ணுவதைப்போலக் கவிஞரும் அபிநயித்து
பிசைந்தும் உண்டும் காட்டியதும் சிறுவர்கள் மகிழ்ச்சி உச்சத்துக்குப்
போய்விடுகிறது. “வீட்டுச் சுவர்களும் மண்ணே – அவர் விரும்பும்
சுவைப்பொருள் மண்ணே, கூட்டுக் கறிகளும் மண்ணே நெய்க்குப்பியும் காண்பதும் மண்ணே” என மண்ணை வெவ்வேறு விதமாகக் கற்பனை செய்து பார்த்துத்
துய்க்கும் சிறுவர்களோடு சிறுவனாகக் கவிஞரும் இன்பத்தில் திளைக்கிறார். இன்னொரு
கவிதையில் அஞ்சல் காரருக்காகக் காத்திருக்கும் வேளையில் சுற்றுப்புற நிகழ்வுகளில்
தோய்வதையும் புகைவண்டியைப் பிடிக்கச் சென்றுவிட்டு வேடிக்கை பார்த்தும்
அங்குமிங்கும் நடந்தும் அசதியில் உறங்கியும் பொழுதைக் கழித்துவிட்டு புகைவண்டியைத்
தவறவிட்டபிறகு, நாணத்துடன் வீட்டுக்குத் திரும்புவதைப்பற்றி இன்னொரு
கவிதையிலும் சொல்லப்படுகிறது. தங்கப்பாவின் நு¡ற்றுக்கணக்கான
கவிதைகளில் இப்படி எடுத்துக்காட்டாகச் சொல்ல ஏராளமான கவிதைகள் உள்ளன.
இக்கவிதைகளில்
விவரிக்கப்பட்ட சித்திரங்களைச் சற்றே தொகுத்துப் பார்க்கலாம். தொடக்கத்தில்
எல்லாருக்கும் சாத்தியமாகும் ஒன்றாகவே எல்லாச் சித்தரிப்புகளும் தொடங்குகின்றன.
ஆனாலும் இறுதியில் அவருக்குமட்டுமே சாத்தியமாகிற ஒரு புள்ளியில் எல்லாக்
கவிதைகளும் முடிவடைவது ஏன் என்பது ஒரு முக்கியமான கேள்வி. அவரிடம் நிரம்பி
இருக்கிற அந்த நுட்பமான உணர்வு எது? பல்வேறு
படிநிலைகளும் கூறுகளும் வளர்ப்புகளும் வண்ணங்களும் கொண்ட மனித நாகரிகத்தை
வளர்த்தெடுக்கும் ஆவேசத்தில் அடிப்படையிலிருந்து பிறழ்ந்துவிடக்கூடாது என்னும்
எச்சரிக்கை உணர்வாக அதை எடுத்துக்கொள்ளலாம். வாழ்க்கையின் அடிப்படைகளாக அன்பு, உண்மை, ஒழுங்கு, அகத்து¡ய்மை ஆகியவற்றை
வரையறுத்துக்கொள்கிறார் தங்கப்பா. மனித நாகரிகம் செழுமையுற நாம் செய்யும் செயல்கள்
இந்த அடிப்படைகளின் ஊற்றுக்கண்களிலிரந்து பீறிட்டெழும் முயற்சிகளாக இருக்கவேண்டும்
என்று நம்புகிறார். இந்த நுட்ப உணர்வு செயல்படும்போதுதான் பாதையிலிருந்து
அகற்றவேண்டிய கல்லை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் நம்மால் அகற்றமுடியும்.
குறைகளும் நிறைகளும் இணைந்ததாகக் காதலை ஏற்றுக்கொள்ள இயலும். புகைவண்டியைத்
தவறவிட்டதைப்பற்றிய இழப்புணர்ச்சி எதுவுமில்லாமல் திரும்பிவரமுடியும்.
காத்திருக்கிற சிறு வேளையில்கூட ஐம்புலன்களையும் விழிப்புற வைத்திருக்கமுடியும்.
இந்த நுட்பஉணர்வை
என்னவென்று சொல்லி அடையாளப்படுத்தலாம்? கனிவு என்று
சொல்லலாம். பரிவு என்று சொல்லலாம். கருணை என்று சொல்லலாம். அது மானுடமனத்தில் ஓர்
அருவியைப்போல உற்றெடுத்துப் பொங்கியபடி இருக்கிறது. தங்கப்பாவைப்போன்ற
ஒருசிலர்மட்டுமே அந்த உற்றை அடையாளம் காண்கிறார்கள். மற்றவர்களிடம் அந்த
ஊற்றுக்கண் து¡ர்ந்துபோகும் அளவுக்கு அல்லது துலக்கம் பெறாத அளவுக்கு வேறு
என்னென்னமோ சக்கைகளால் அடைபட்டுப் போயிருக்கிறது.
“பாடுகின்றேன்”, “தேடுகின்றேன்” ஆகிய இரண்டு நெடுங்கவிதைகளும் தங்கப்பாவின்
சாதனைப்படைப்புகள் என்றே சொல்லவேண்டும். இயற்கையோடு கரைந்து நிற்கும் உணர்வை “பாடுகின்றேன்” கவிதைகள்
முன்வைக்கின்றன. அன்பு நிறைந்த ஓர் இணைமனத்துக்கு ஓர் அழைப்பாக “தேடுகின்றேன்” கவிதைகள்
ஒலிக்கின்றன. இந்த இயற்கையோடு கரைந்து உவகையுறும் அரும்பெரும் வாய்ப்பை
அனைவருக்கும் உரியதாக்கி இந்த உலகமே ஆனந்தத்தில் கரைந்துநிற்கும் கண்கொள்ளாக்
காட்சியைக் காணும் பேராவல் உந்தித் தள்ள விடுக்கப்படும் அழைப்புகளே இக்கவிதைகள்.
அனைவரும் அன்பில் திளைத்து ஆனந்தமடைவதற்காகவே இந்த வாழ்க்கை நமக்கு வாய்த்துள்ளது.
ஆனாலும் அதன் எளிய உண்மையை நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. நு¡ற்கண்டில் உள்ள நு¡லை முறையில்லாமல்
இழுத்து சிக்கலாக்கிக்கொண்டு திண்டாடுகிற குழந்தையைப்போல வாழ்க்கையையும்
சிக்கலாக்கிக்கொண்டு தவிக்கிறோம். மூழ்கி முத்தெடுக்க நினைக்காமல் எளிதாகக்
கிடைக்கிற கரையோரக் கிளிஞ்சல்களைச் சேகரித்து அந்த மகிழ்ச்சியில் திளைத்துக் காலம்
தள்ளுகிறோம். நம்மிடையே எங்காவது நெகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த ஒரு நல்ல உள்ளம்
இருக்கக்கூடும் என்றும் தாய்ப்பசுவின் குரலைக் கேட்டதும் அடையாளம் கண்டு
ஓடோடிவரும் கன்றைப்போல அந்த உள்ளம் எழுந்தோடி வந்து தன்னுடன் இணைந்துகொள்ளக்கூடும்
என்னும் நம்பிக்கையில் ஏதேடுகின்றேன்ஏ கவிதைகள் தன் இணைமனத்தைத் தேடி ஒலித்தபடி
உள்ளன.
உள்ஏக்கம் தீர்வதுதான் வாழ்க்கையென்று நம்புகிறவர்களால் இன்றைய உலகம் நிறைந்துள்ளது. “உறவென்றால் தாம் நடுவில் நிற்றல் வேண்டும், உலகத்தார் தமைச்சுற்றி வருதல் வேண்டும்” என்ற பேராசையில் எங்கும் எல்லா இடங்களிலும் தம்மை நடுப்புள்ளியாக நிலைநாட்டி நிற்கத் துடிக்கிறவர்களால் நிறைந்துள்ளது. தன்முனைப்பு என்னும் கிறக்கம் உச்சத்துக்கு ஏறிவிட பம்பரம்போல ஆடுகின்றவர்களாகவே அனைவரும் இருக்கிறார்கள். ஒன்று சொன்னால் அதை இன்னொன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். குயிலின் பாடல் அவர்கள் மனத்தைக் கரைப்பதில்லை. மாறாக, அதன் இறைச்சிமணம் அவர்களை ஈர்க்கிறது. அவர்களை நசைமனத்தவர்கள் என்று தம் கவிதைகளில் அடையாளப்படுத்துகிறார் தங்கப்பா. மனத்தில் பொங்கி வழியும் நசையை வடியச் செய்துவிட்டு விடுதலையாகும் எண்ணம் எல்லாரிடமும் நிரம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.. தன்னலத்திலிருந்து விடுதலை. நடுப்புள்ளியாகத் தன்னைக் கருதுவதிலிருந்து விடுதலை. செல்வத்திலிருந்து விடுதலை. புகழிலிருந்து விடுதலை. ஆனால் அது காற்றில் பறந்துபோகிற விடுதலை இல்லை. மண்ணில் ஆழமாகக் காலு¡ன்றி நிற்கிற விடுதலைதான். ஒரு மரத்தைப்போல நிற்கிற விடுதலை. வானம் வெப்பத்தையும் மழையையும் குளிரையையும் வாரி இறைக்கும். ஒளியும் இருளும் மாறிமாறி வந்தணைக்கும். கொம்புகளில் மணிப்புறாக்களும் மற்ற பறவைகளும் வந்து உட்கார்ந்து தாவித்தாவி விளையாடும். கிளைகள் தன்னிச்சையாக யாருக்கோ நிழலாக நின்று பயன்தரும். கனிகள் எல்லா உயிர்களுக்கும் உணவாகும். பச்சை இலைகள் படரந்து அரும்பும். பழுத்த இலைகள் உதிர்ந்துபோகும். அந்த மரம் எல்லாவற்றிலும் தோய்ந்திருக்கும். அந்த மரம் எல்லாவற்றுக்கும் இடம் தரும். அந்த மரம் எல்லாவற்றோடும் இணைந்திருக்கும். அதே நேரத்தில் எல்லாவற்றிலிருந்தும் விலகி நிற்கும். அந்த மரம் துய்க்கும் விடுதலையை மனம் துய்க்கும் நிலைக்கு மானுடன் உயரவேண்டும் என்பது அவர் விருப்பம்.
உள்ஏக்கம் தீர்வதுதான் வாழ்க்கையென்று நம்புகிறவர்களால் இன்றைய உலகம் நிறைந்துள்ளது. “உறவென்றால் தாம் நடுவில் நிற்றல் வேண்டும், உலகத்தார் தமைச்சுற்றி வருதல் வேண்டும்” என்ற பேராசையில் எங்கும் எல்லா இடங்களிலும் தம்மை நடுப்புள்ளியாக நிலைநாட்டி நிற்கத் துடிக்கிறவர்களால் நிறைந்துள்ளது. தன்முனைப்பு என்னும் கிறக்கம் உச்சத்துக்கு ஏறிவிட பம்பரம்போல ஆடுகின்றவர்களாகவே அனைவரும் இருக்கிறார்கள். ஒன்று சொன்னால் அதை இன்னொன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். குயிலின் பாடல் அவர்கள் மனத்தைக் கரைப்பதில்லை. மாறாக, அதன் இறைச்சிமணம் அவர்களை ஈர்க்கிறது. அவர்களை நசைமனத்தவர்கள் என்று தம் கவிதைகளில் அடையாளப்படுத்துகிறார் தங்கப்பா. மனத்தில் பொங்கி வழியும் நசையை வடியச் செய்துவிட்டு விடுதலையாகும் எண்ணம் எல்லாரிடமும் நிரம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.. தன்னலத்திலிருந்து விடுதலை. நடுப்புள்ளியாகத் தன்னைக் கருதுவதிலிருந்து விடுதலை. செல்வத்திலிருந்து விடுதலை. புகழிலிருந்து விடுதலை. ஆனால் அது காற்றில் பறந்துபோகிற விடுதலை இல்லை. மண்ணில் ஆழமாகக் காலு¡ன்றி நிற்கிற விடுதலைதான். ஒரு மரத்தைப்போல நிற்கிற விடுதலை. வானம் வெப்பத்தையும் மழையையும் குளிரையையும் வாரி இறைக்கும். ஒளியும் இருளும் மாறிமாறி வந்தணைக்கும். கொம்புகளில் மணிப்புறாக்களும் மற்ற பறவைகளும் வந்து உட்கார்ந்து தாவித்தாவி விளையாடும். கிளைகள் தன்னிச்சையாக யாருக்கோ நிழலாக நின்று பயன்தரும். கனிகள் எல்லா உயிர்களுக்கும் உணவாகும். பச்சை இலைகள் படரந்து அரும்பும். பழுத்த இலைகள் உதிர்ந்துபோகும். அந்த மரம் எல்லாவற்றிலும் தோய்ந்திருக்கும். அந்த மரம் எல்லாவற்றுக்கும் இடம் தரும். அந்த மரம் எல்லாவற்றோடும் இணைந்திருக்கும். அதே நேரத்தில் எல்லாவற்றிலிருந்தும் விலகி நிற்கும். அந்த மரம் துய்க்கும் விடுதலையை மனம் துய்க்கும் நிலைக்கு மானுடன் உயரவேண்டும் என்பது அவர் விருப்பம்.
இந்த விடுதலையை
தங்கப்பா தம் கவிதைகளில் ஏன் பரிந்துரைக்கிறார் என்றொரு கேள்வியை
எழுப்பிக்கொள்ளலாம். மானுடனை ஒரு சமூக விலங்காக வரலாறு சொல்வதுண்டு. வனவிலங்கைவிட இந்தச்
சமூகவிலங்கு மோசமான பண்புகளைக் கொண்டிருக்கிறது. விலங்கின் அடிப்படைக் குணம்
வேட்டையாடுவதும் தனக்குரிய வனத்தில் சுதந்திரமாகத் திரிதலும். ஒரே காட்டில்தான்
புலியும் சுதந்திரமாகத் திரிகிறது. மானும் சுதந்திரமாகத் திரிகிறது. பசிக்கு
உணவைத் தேடிச் செல்லும்போதுதான் புலி மானை வேட்டையாடிக் கொல்கிறது. மானும்
பசிக்கும்போதுதான் புற்களையும் இலைக்கொழுந்துகளையும் மேய்ந்து வயிற்றை
நிரப்பிக்கொள்கிறது. பசியில்லாத நேரத்தில் எந்த விலங்கும் எதையும் கொல்வதில்லை.
உண்பதுமில்லை. ஒன்றுக்கொன்று இரையாக இருந்தாலும் ஒவ்வொன்றும் தனிப்பட்ட அளவில்
சுதந்திரமாக வாழும் வாழ்க்கை விலங்குகளுக்கு வாய்த்துள்ளது. விலங்குகள் வாழ்வில்
கடைபிடிக்கப்படுகிற இந்தச் சின்ன அறம்கூட சமூக விலங்கான
மனிதனிடம் இல்லை. பசிக்காத போதும் வேட்டையாடும் விலங்கு மனிதன். தேவையில்லாதபோதும்
வேட்டையாடி வேட்டையாடி கொலைத்தொழிலை விடாது செய்கிறவன் மனிதன். அவனைப் பொறுத்தவரை
வேட்டையாடுவது என்பது உணவுக்காகமட்டும் அல்ல. வேட்டையாடும் சுவையில் திளைக்க.
இப்படிப்பட்ட சுவைதான் ச்முகவிலங்கை ஆட்டிப்படைக்கிறது. பத்து தலைமுறைகள்
உட்கார்ந்து சாப்பிட்டாலும் கரையாத செல்வத்துக்குச் சொந்தக்காரனாக இருக்கிற மனிதன், போதுமென்ற எண்ணத்தோடு செல்வம் தேடும் வேட்டையை நிறுத்தாமல்
மீண்டும்மீண்டும் செல்வத்தைத் தேடி ஓடுவது எதற்காக? செல்வத்துக்காக
அல்ல. அந்த ஒட்டத்தின் சுவையில் திளைப்பதற்காக. ஊர்விட்டு ஊர்சென்றும் நகர்விட்டு
நகரம் சென்றும் ஏராளமான பெண்களை வேறுவேறு பெயர்களில் வேறுவேறு சூழல்களில்
வளைத்துச் சுவைத்து உதறிவிட்டுச் செல்கிறவர்களைப்பற்றிய செய்திகள்
செய்தித்தாட்களில் ஏராளமாக இடம்பெறுகின்றன. அந்த இன்பத்தின் சுவை அவர்களை ஏன்
இழுத்துக்கொண்டே இருக்கிறது? எழுந்து நின்று
பத்தடிகூட நடக்கமுடியாதவர்கள் எல்லாம் மீண்டும்மீண்டும் தேர்தலில் நின்று
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றவும் பதவி நாற்காலியில் அமரவும் ஏன் மனிதர்கள்
துடிக்கிறார்கள்? அதிகாரச்சுவையை விட்டுவிலகி நிற்கும் ஒரேஒரு கணத்தைக்கூட அவர்களால்
கற்பனைசெய்தும் பார்க்கமுடிவதில்லை. தன்னை ஆட்டிப்படைக்கும் சுவையிலிருந்து விடுபடாமல்
மறுபடியும் மறுபடியும் அதை நாடி அலைகிற சமூகவிலங்காக மனிதன் வாழ்ந்தாலும், தன் வாழ்வின் அர்த்தமின்மையையும் காலமெல்லாம் தான்
திளைத்திருந்த சுவையின் அர்த்தமின்மையையும் வெறுமையையும் புரிந்துகொண்டு
தெளிவைநோக்கி நகர்ந்த ஒருசில கணங்களும் வரலாற்றில் நிகழ்வதுண்டு. தொட்டதெல்லாம்
பொன்னாகும் வரம்பெற்ற மைதாஸ் அள்ளியுண்ண ஒரேஒரு வாய் சோறுகூட இல்லாமலும் எடுத்துக்
குடிக்க ஒரேஒரு வாய் தண்ணீர்கூட இல்லாமலும் தவித்தபோது செல்வத்தின்
அர்த்தமின்மையைப் புரிந்துகொண்டிருப்பான். மற்றவர்களுடைய வீரமும் உதவியும் படையும்
ஒத்தாசையாக நிற்குமென்று நம்பி ஜானகியைக் கவர்ந்து வரவில்லை என்றும் தன் வீரத்தை
நம்பியே அவளைக் கவர்ந்து வந்ததாகவும் அறைகூவல் விடுத்து, அறிவுரை சொல்ல வந்தவர்களை அவமானப்படுத்தி விரட்டிய இராவணன்
யுத்தகளத்தில் இராமனால் நிராயுதபாணியாக்கப்பட்டு “இன்றுபோய் நாளை
வா” என்று சொல்லக் கேட்ட தருணத்தில் வீரத்தின் அர்த்தமின்மையை
அவன் உணர்ந்துகொண்டிருப்பான். இப்படியே பதவியின் அர்த்தமின்மையை, புகழின் அர்த்தமின்மையை, திறமையின்
அர்த்தமின்மையை, உறவின் அர்த்தமின்மையை, வாழ்வின்
அர்த்தமின்மையை மனிதன் உணர்ந்துகொண்ட தருணங்கள் ஏராளமாக உண்டு. உலக இலக்கியங்கள்
அனைத்தும் இந்த அர்த்தமின்மையையே ஆயிரமாயிரம் பக்கங்களில் மீண்டும்மீண்டும்
எழுதிவந்திருக்கின்றன. கண்கள் திறக்கும் அத்தருணத்தில் பிறக்கிற தெளிவு மிகவும்
முக்கியம். தன் லட்சியத்திலும் ஆரவாரத்திலும் மிடுக்குகளிலும் உறைந்திருக்கிற
அபத்தத்தையும் அர்த்தமின்மையையும் உணரும்போது பிறக்கும் தெளிவு ஒரு துளிரைப்போல
நெஞ்சில் படர்கிறது.
இலக்கியப்
படைப்பாளிகள் இந்த அர்த்தமின்மையை தம் படைப்புகளில் நிகழ்த்திக்காட்டி தெளிவை
முன்னிறுத்துகிறார்கள். இராமாயணம், மகாபாரதம்
தொடங்கி எடுத்துக்காட்டாகச் சொல்ல ஏராளமான படைப்புகள் நம்மிடையே உண்டு. தெளிவின்
சாரத்தை முன்வைத்து, மானுட மனத்தை, வாழ்க்கையில்
திளைக்கும்பொருட்டு படைப்போவியங்களைத் தீட்டிய படைப்பாளிகளும் நம்மிடையே
வாழ்ந்திருக்கிறார்கள். முக்கியமான முன்னுதாரணம் திருவள்ளுவர். அவர் தன்
திருக்குறளில் முன்வைப்பவை அனைத்தும் ஒருபக்கம் தெளிந்த உண்மை. இன்னொரு பக்கம்
வாழ்வில் திளைத்த சுவை. சிறுகுழந்தைகளின் விரல்படிந்த கூழின் சுவையிலிருந்து
உப்பிடுவதைப்போல அளவோடு ஊடிப் பின்பு கூடிப் பெறுகிற இன்பத்தின் சுவைவரை அவர்
முன்வைக்கும் சுவைகள் ஏராளம். “செல்வத்துள்
செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை” என்றும் “ஒழுக்கம்
விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்றும் வள்ளுவர்
முன்வைக்கிற தெளிவுகள் எண்ணற்றவை.
வள்ளுவரின்
வழிவந்த படைப்பாளியாக தங்கப்பாவைச் சொல்லலாம். அவருடைய சரிபாதி படைப்புகள் அன்பு, உண்மை, ஒழுங்கு என்னும்
மரணமில்லாத உண்மைகளைப் பேசுபவை. மீதப் பாதிப்படைப்புகள் வாழ்வில் திளைப்பதால்
அடையத்தக்க ஆனந்தத்தை முன்வைப்பவை. தன் வாழ்க்கைமுறையை “மெல்லியல் வாழ்க்கை” என்று தங்கப்பா
ஒரு கவிதையில் வரையறுத்துக்கொள்கிறார். “மலரிடை
இளந்தென்றலைப்போல், தாய் மார்பினை வருடிடும் மகவினைப்போல் உலகிடை இயங்கிடுவேன்-
சற்றும் உராய்வின்றி எங்கணும் உலவிடுவேன். இலகு வெண்பளிங்கினைப்போல்- மனம்
இருப்பதனால் ஒரு துயர்இலையே” என்பவை அவர்
தன்னைப்பற்றி எழுதிவைத்திருக்கும் வரிகள்.
தங்கப்பாவின் “தெருக்கூத்து” கவிதையை இங்கே நினைத்துக்கொள்ளலாம். மேடை எதுவுமின்றி ஒரு மேட்டுப்பாங்கான இடத்தில் கிராமத்தவர்களழால் நிகழ்த்தப்படும் தெருக்கூத்து பற்றிய சிறுகுறிப்பு இக்கவிதையில் தீட்டிக்காட்டப்படுகிறது. “இராவணன் பாட்டுக்கு தாளமிட்டே- இங்கு இராமனும் பாடுவான் பின்பாட்டு. துரோபதை சேலை அவிழந்துவிட்டால் – அதைத் துச்சாதனன் சரிசெய்துவைப்பான்” என்பது பாடலின் ஒரு பகுதி. பாதியில் பேச்சை மறந்து நிற்கும் பாண்டுவின் மைந்தனுக்கு அடங்கிய குரலில் பாடல்வரிகளை எடுத்துக்கொடுக்கும் குறிப்பு இன்னொரு பகுதியில் இடம்பெறுகிறது. புனைவுப் பாத்திரங்கள் அப்பாத்திரங்களுக்குரிய குணங்களிலிருந்து விலகி, உண்மையான நட்புறவோடு நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் இச்சித்திரத்திலிருந்து நாம் உடனடியாகக் கண்டடைகிற உண்மை. தெருக்கூத்தின் இந்த உண்மையை நம் மானுட வாழ்வோடு பொருத்திப் பார்க்கும்போது நாம் கண்டடையும் உண்மை இன்னும் ஒளிமிகுந்ததாக உள்ளது. ஆணென்றும் பெண்ணென்றும் ஏதேதோ பெயருக்குரியவர்களாக பிறந்து மனிதர்களாக வாழ்வதுகூட தெருக்கூத்தின் புனைவுக்குச் சமமானதுதான். அந்தப் புனைவை உதறி மானுடத்தின் அடிப்படையான அன்பையும் ஆதரவையும் கைவிடாதவர்களாக மனிதர்கள் வாழவேண்டும் என்னும் பேருண்மையை நாம் அறிந்துகொள்ள முடியும். அணிதிரட்டவும் அறைகூவல்விடவும் ஆரவாரத்தை வெளிப்படுத்தும் ஏராளமான குரல்களுக்கு இடையே அமைதியான தொனியில் உண்மையையும் கனிவையும் முன்வைக்கும் தங்கப்பாவின் குரல் மிகவும் முக்கியமானது என்பது என் நம்பிக்கை. “வரலாற்றிலிருந்து மனிதன் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்வதில்லை” என்ற கசப்பான உண்மையே நாம் கற்கும் பாடமாகிவிட்ட சூழலில் சித்தர்கள் காலத்திலிருந்தும் வள்ளுவர் காலத்திலிருந்தும் அடிப்படை உண்மைகளை முன்வைத்து வாழக்கையைப்பற்றி ஆழ்ந்து எண்ணிப்பார்க்கத் தூண்டும் படைப்புகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரோ சில படைப்பாளிகள் உருவாகி மீண்டும்மீண்டும் எழுதிச் செல்கிறார்கள். நம் காலத்தில் அந்த உண்மையை எடுத்துரைக்கும் படைப்பாளியாக வாழ்கிறார் தங்கப்பா.
தங்கப்பாவின் “தெருக்கூத்து” கவிதையை இங்கே நினைத்துக்கொள்ளலாம். மேடை எதுவுமின்றி ஒரு மேட்டுப்பாங்கான இடத்தில் கிராமத்தவர்களழால் நிகழ்த்தப்படும் தெருக்கூத்து பற்றிய சிறுகுறிப்பு இக்கவிதையில் தீட்டிக்காட்டப்படுகிறது. “இராவணன் பாட்டுக்கு தாளமிட்டே- இங்கு இராமனும் பாடுவான் பின்பாட்டு. துரோபதை சேலை அவிழந்துவிட்டால் – அதைத் துச்சாதனன் சரிசெய்துவைப்பான்” என்பது பாடலின் ஒரு பகுதி. பாதியில் பேச்சை மறந்து நிற்கும் பாண்டுவின் மைந்தனுக்கு அடங்கிய குரலில் பாடல்வரிகளை எடுத்துக்கொடுக்கும் குறிப்பு இன்னொரு பகுதியில் இடம்பெறுகிறது. புனைவுப் பாத்திரங்கள் அப்பாத்திரங்களுக்குரிய குணங்களிலிருந்து விலகி, உண்மையான நட்புறவோடு நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் இச்சித்திரத்திலிருந்து நாம் உடனடியாகக் கண்டடைகிற உண்மை. தெருக்கூத்தின் இந்த உண்மையை நம் மானுட வாழ்வோடு பொருத்திப் பார்க்கும்போது நாம் கண்டடையும் உண்மை இன்னும் ஒளிமிகுந்ததாக உள்ளது. ஆணென்றும் பெண்ணென்றும் ஏதேதோ பெயருக்குரியவர்களாக பிறந்து மனிதர்களாக வாழ்வதுகூட தெருக்கூத்தின் புனைவுக்குச் சமமானதுதான். அந்தப் புனைவை உதறி மானுடத்தின் அடிப்படையான அன்பையும் ஆதரவையும் கைவிடாதவர்களாக மனிதர்கள் வாழவேண்டும் என்னும் பேருண்மையை நாம் அறிந்துகொள்ள முடியும். அணிதிரட்டவும் அறைகூவல்விடவும் ஆரவாரத்தை வெளிப்படுத்தும் ஏராளமான குரல்களுக்கு இடையே அமைதியான தொனியில் உண்மையையும் கனிவையும் முன்வைக்கும் தங்கப்பாவின் குரல் மிகவும் முக்கியமானது என்பது என் நம்பிக்கை. “வரலாற்றிலிருந்து மனிதன் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்வதில்லை” என்ற கசப்பான உண்மையே நாம் கற்கும் பாடமாகிவிட்ட சூழலில் சித்தர்கள் காலத்திலிருந்தும் வள்ளுவர் காலத்திலிருந்தும் அடிப்படை உண்மைகளை முன்வைத்து வாழக்கையைப்பற்றி ஆழ்ந்து எண்ணிப்பார்க்கத் தூண்டும் படைப்புகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரோ சில படைப்பாளிகள் உருவாகி மீண்டும்மீண்டும் எழுதிச் செல்கிறார்கள். நம் காலத்தில் அந்த உண்மையை எடுத்துரைக்கும் படைப்பாளியாக வாழ்கிறார் தங்கப்பா.
எழுதும் ஆற்றலை
செய்திறன் என்ற அளவில் வரையறுத்துக்கொள்ளும் தங்கப்பா, படைப்பாக்கம் என்பதை வாழ்வியல் ஆக்கமாகப் பொருள்கொள்கிறார்
தங்கப்பா. அதற்கு அடிப்படையானது அன்பில் ஊறி நிற்கும் பேணுதல் உணர்வு.
செய்திறனுக்கும் பேணுதல் உணர்வுக்கும் எந்தத் தொடர்புமில்லை. எல்லா அழகுகளுக்கும்
எல்லா நல்லவைக்கும் எல்லா ஒழுங்குகளுக்கும் ஊற்றுக்கண்ணாக நிற்பது இந்தப்
படைப்புணர்வு. இந்தப் படைப்புணர்வில் ஊறிப் பிறக்காத செய்திறன் பயனற்றது. ஆனால்
செய்திறன் சாராவிட்டாலும் படைப்புணர்வு மலர்ச்சியடையும் ஆற்றல் மிக்கது. அது
தன்னளவில் முழுமையுடையதாகும். கலை இலக்கிய வரலாற்றில் மட்டுமல்ல, வேறு பல வகைகளிலும் அது துலக்கமுறும். துலங்காவிட்டாலும்
அது ஒரு பெரிய குறையாகாது. துலக்கமும் ஒடுக்கமும் அதற்கு ஒன்றே. இன்னும் தெளிவாகக்
கூறவேண்டுமென்றால், வாழ்க்கைநலம் பேணுவதுதான் படைப்புணர்வு. எதிலும் ஒழுங்கு
சிதைந்துவிடக்கூடாதென்றும் உலகம் நலம் நிரம்பி இனிதே நடைபெறவேண்டுமே என்ற
பதைப்பும் துடிப்பும் மனத்தில் எல்லாநேரமும் ஒலித்தபடி இருப்பதுதான் படைப்புணர்வு.
இந்தப் பேணுதல் உணர்வோடும் அக்கறையோடும் அன்போடும் கனிவோடும் உலா வருகிறவனே
படைப்பாளன். கவிதை, கதை, நாடகம் என
எதையுமே எழுதாவிட்டாலும்கூட அவன் படைப்பாளன். படைப்பைப்பற்றியும்
படைப்பாளனைப்பற்றியும் இப்படி தங்கப்பா தன் கவிதை நூல்களின் முன்னுரைகளில் ஏராளமான
குறிப்புகளை எழுதிவைத்திருக்கிறார்.
எந்த உண்மையை
நாம் உணர்ந்தால் நம் உள்ளத்தில் ஒளிவெள்ளம் பாயுமோ, அந்த உண்மையை
எடுத்துரைப்பவை தங்கப்பாவின் கவிதைகள். மானுடகுலம் காலம்காலமாக வாழ்வின் சாரமாகக்
கண்டுணர்ந்த புள்ளியை மீண்டும் தொட்டுக்காட்டுகிறார் தங்கப்பா. அன்பு, ஆனந்தம், கனிவு, பரிவு என எல்லாம் இணைந்த ஒரு புள்ளி அது. எல்லா மொழிகளின்
இலக்கியத்துக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கிற புள்ளி. தங்கப்பாவின் கவிதையுலகின்
மையமாக இந்தப் புள்ளியே விளங்குகிறது என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அவர்
தன் வாழ்க்கையைத் துலக்கமாக வைத்திருந்தபோதும் ஒடுக்கமாக வைத்திருந்தபோதும்
அவருடைய கவிதைகள் வைரமணிகளாக மின்னிக்கொண்டிருக்கின்றன.
*
(18.03.2007 அன்று கடலூரில் இலக்கியப்பேரவையின் சார்பில் நடைபெற்ற “தங்கப்பாவின் படைப்புலகம்” கருத்தரங்கில்
படிக்கப்பெற்ற கட்டுரை )