Home

Tuesday 13 October 2015

சாவை வென்ற வீரர்

பெங்களூரின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்று விமானநிலைய வீதியில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனை. எட்டுமாடிக் கட்டிடம். எல்லா நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் உள்ள இடம். அதன் அவசர சிகிச்சைப் பிரிவின்முன் எப்போதும் ஐம்பது பேராவது கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ரத்த தானத்துக்காக மூன்றுமுறைகளும் நோய்வாய்ப்பட்டு அறுவை  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்ப்பதற்காக சில முறைகளும் அங்கு சென்றதுண்டு.  தற்செயலாக பின்வாசல் வழியாக வெளியேற நேர்ந்த ஒரு தருணத்தில் நீண்ட விரிப்புகளையும் மெத்தென்ற இருக்கைகளையும் கொண்ட பெரிய கூடமொன்றைப் பார்த்தேன்.  சுவர்களில் ஆறேழு ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. பழைய காலத்துச் சிகிச்சை முறைகளைச் சித்தரிக்கும் காட்சிகள்.  எல்லாமே அறுவை மருத்துவம் தொடர்பானவை.  மயக்கமருந்தே இல்லாமல் நடக்கும் அறுவை சிகிச்சைகள் அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.  ஒரு பல்லை எடுப்பதற்குக்கூட மயக்கமருந்து கொடுத்துவிட்டு சிகிச்சை செய்கிற காலம் இன்று. புதுமையின் விளிம்பில் நின்றுகொண்டு அந்தக் காலத்தை என்னால் கற்பனைகூட செய்துபார்க்க இயலவில்லை.  

அறுவை சிகிச்சைகள் இன்று மிகவும் சாதாரணமான சம்பவங்களாகிவிட்டன.  கருப்பையில் பிரச்சனை என்றால் கருப்பை நீக்கம், பித்தப்பையில் பிரச்சனை என்றால் பித்தப்பை நீக்கம் என உறுப்புகளைத் துண்டித்தெறிந்துவிட்டு இயல்பான வாழ்வுக்கு மனிதர்களைத் தகவமைத்திருக்கும் பெருமை நவீன மருத்துவத்துக்கு இருக்கிறது.  எல்லா வசதிகளும் கொண்ட பெரிய மருத்துவமனைகளில் ஒரே நாளில் ஐம்பதுமுதல் அறுபது அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.   இன்று உலகில் நடைபெறும் அறுவை சிகிச்சைகளில் எழுபது சதவீத சிகிச்சைகள் இதயத்தின் ரத்தக்குழாய்களில் நடைபெறுபவை.
அறுவைக்கூட நடவடிக்கைகள்பற்றி ஒரு மருத்துவ நண்பர் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. அறுவைக் கூடத்தில் மருத்துவர்கள் அணி குழு அடிப்படையில் பிரிந்து வேலை செய்கிறார்கள். இளம் மருத்துவர்களைக் கொண்ட  முதல் குழு முதலில் நோயாளியை சிகிச்சைக்குத் தகுந்தபடி தயார் செய்கிறது. போதுமான அளவில் மயக்க மருந்து வழங்குவதும் இந்தக் குழுதான். இரண்டாவது குழு அறுவை சிகிச்சைக்குரிய அடையாளமிட்டு இதயத்தைத் திறந்து மாற்று மூச்சுக்கான ஏற்பாடுகளையும் செய்கின்றது.  பழுதுபட்ட குழாய்ப்பகுதியின் இடத்தில் புதிய குழாய் இணைப்பைப் பொருத்துவற்கான ஏற்பாடுகளைச் செய்வது மூன்றாவது குழு.  அறுவை சிகிச்சையின் பிரதான மருத்துவர் நான்காவது குழுவில்தான் இருப்பார். புதிய குழாயை தேர்ந்த தொழில்நுட்பத்தோடு கச்சிதமாக இணைத்வைப்பவரும் இவரே.  பிறகு அப்பகுதியை மூடுவதில் முறையே மூன்றாவது, இரண்டாவது, முதல் குழு மறுபடியும் பங்கெடுத்து வெற்றிகரமாக முடித்துவைக்கும்.  ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒரேவிதமான பிரச்சனைகளோடு மருத்துவமனைகளை அணுகும்போது மருத்துவர்கள் ஆளுக்கொரு குழுவாகப் பிரிந்து வேலை செய்வதைத் தவிர்க்க இயலவில்லை.  
மருத்துவத்துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் முக்கியமானவை. உடலின் இயக்கம் கிட்டத்தட்ட ஒரு தொழிற்சாலையின் இயக்கத்துக்கு இணையாது.  நூற்றுக்கணக்கான உறுப்புகள். எலும்புகள். மூட்டுகள். நூற்றுக்கணக்கான இயங்குவிதிகள். இவை அனைத்தும் எலும்புதோல் போர்த்திய உடலுக்குள் நடக்கின்றன.  உடலுறுப்புகளின் இயக்கத்தைத் துல்லியமாக அறிந்துகொள்வது என்பது ஒருவகையான அறிவு.  உறுப்புகளின் செயல்பாடுகளில் குறை நிகழும்போது அவற்றைச் சரிசெய்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவைப்பது இன்னொருவகையான அறிவு.  இரண்டுவகையான அறிவையும் பெற்றவர்களே மருத்துவர்கள்.  உடலின் இயக்கத்தை வாதம், பித்தம், கபம் என மூன்றுவகையான நாடிகளை முன்வைத்து வகுத்துக்கொண்டதும் அதன் துடிப்புகளில் ஏற்படும் மாற்றங்களை உற்றறிந்து மருத்துவம் செய்வதும் நம் நாட்டில் சித்தர்கள் கையாண்ட மருத்துவமுறை.  சித்த மருத்துவம் பாழ்பட்ட உடலின் பகுதிகளை அகற்றுவதில்லை.  மாறாக, அவற்றை மீண்டும் உயிர்ப்படையவைக்கத் தேவையான நடவடிக்கைகளில் இறங்குகிறது. ஆங்கிலேயர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் வருகை வேறு விதமான மருத்துவத்தை அறிமுகப்படுத்தியது. நோய் எதிர்ப்பு மருந்தை வெளியேயிருந்து புகட்டி உடலுறுப்புகளுக்கு தற்காலிக சக்தியை வழங்குவதும் அதன்மூலம் நோயைப் போக்குவதும் உடலின் பாழ்பட்ட உறுப்புகளை வெட்டி அகற்றுவதும் அதன் செயல்முறைகள்.
அறுவை சிகிச்சைமுறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களுக்குக் காரணமான பல மருத்துவர்களில் முக்கியமானவர் வில்லியம்ஸ். அவருடைய வாழ்க்கை வரலாறு "சாவை வென்ற வீரர்" என்கிற தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. (பழனியப்பா பிரதர்ஸ்-1965) அந்த மாற்றங்களையும் அவற்றைச் சாத்தியப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளையும் அறிந்துகொண்ட பிறகு முதலில் குறிப்பிட்ட சித்திரங்களை வேறொரு கோணத்தில் புரிந்துகொள்ள முடிந்தது. லேசர் மருத்துவமுறை வரைக்கும் இன்று வந்துவிட்டோம். இது ஒரு சாதனைப்புள்ளி. இதைத் தொடுவதற்கு அறிவியல் எவ்வளவு தொலைவு கடந்துவந்துள்ளது என்பதை உணர்வதற்கு வழிசெய்யும் தொடக்கப்புள்ளிதான் அந்தச் சித்திரங்கள். வில்லியம்ஸின் சாதனை அறுவை சிகிச்சையின்போது உருவாகக்கூடிய தொற்றுக்கிருமிகளை ஒழிக்க எடுத்துக்கொண்ட முயற்சியாகும். இவருடைய புதிய முறைகளைப் பார்த்து கேலி செய்தவர்கள் நோயாளிகளல்லர், சகமருத்துவர்களே. அவருடைய முயற்சிகளையும் சாதனைகளையும் சுருக்கமாக முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.
தொடக்கத்தில் உள்நாட்டுப் போர்களில்  ஏற்பட்ட வெட்டுக் காயங்களோடு வருகைதரும் நோயாளிகளுக்கு விஸ்கியும் ரம்மும் கொடுத்து மயங்கவைத்தார்கள். பிறகு பழுதுபட்ட உறுப்புகளை அப்படியே பச்சையாக வெட்டி நீக்கினார்கள். அப்போது அவர்களைக் கட்டாயப்படுத்தி அழுத்திப் பிடித்துக்கொண்டார்கள் மற்றவர்கள்.  கிருமிகள் பரவலைத் தடுக்க வேறு வழி தெரியாத காலம். பெரும்பாலும் துண்டிப்பா அல்லது சாக விடுவதா என்பதுதான் கேள்வியாக இருந்த காலம். தொற்றியவனின் புண்ணிலிருந்து கிளம்பி காயமடைந்த மற்றவர்கள் ரத்தத்தில் அது புகுந்துவிடுவதைத் தடுக்க துண்டிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.  இதற்குப் பிறகுதான் கார்பாலிக் அமிலம் பயன்படுத்தும் முறை அறிமுகமானது. புளித்த பாலில் ஆய்வு செய்த லு¡யி பாஸ்டர்  சில முடிவுகளை அறிவித்தார். அவரது கோட்பாட்டின்படி மிகச்சிறிய உயிரணுக்களால்தான் பாலிலும் சாராயத்திலும் புளிப்பும் அழுகலும் ஏற்படுகின்றன.  கொதிக்கவைத்தாலோ அல்லது அதிகம் சூடேற்றினாலொ அவற்றைக் கொல்லலாம். ஜோஸப் லிஸ்டர் என்னும் மருத்துவர் இதனை மேலும் விரிவாக்கினார். உயிரணுக்கள்தாம் பாலிலும் சாராயத்திலும் புளிப்பை உருவாக்குகின்றனவெனில் அவையே ஏன் அழுகும் புண்களிலும் இருக்கக்கூடாது என்றும் அவற்றையும் அதே முறையில் ஏன் கொல்லக்கூடாது என்றும் கேள்விகள் அவர் நெஞ்சில் எழுந்தன. ஆனால் புண்களை எப்படிக் கொதிக்கவைப்பது என்பதுதான் பிரச்சனையாக இருந்தது.  அப்போதுதான் ருக்ஸ் என்பவர் ஒரு பெரிய தொழில் நகரச் சாக்கடைத் துர்நாற்றத்தை பினாயில் என்னும் வேதியல் கலவையால் வெற்றிகரமாக நீக்கிய செய்தி வெளியானது. பாலையும் சாராயத்தையும்  அழுகவைக்கிற அதே உயிரணுக்கள்தாம் சாக்கடைகளின் துர்நாற்றத்துக்கும் காரணம் என்பது அவர் எண்ணம். பினாயில் என்பது நிலக்கரித் தாரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கார்பாலிக் அமிலம் என்னும் திரவம். அதே அமிலத்தை காயத்தின்மீது படும்படி தடவும்போது தொற்றுக் கிருமிகளை அண்டவிடாமல் செய்யலாம் என்பது அவர் முடிவு. ஓர் அறுவைச் சிகிச்சையின்போது கட்டுப்போட்ட காயத்தில் கார்பாலிக் அமிலத்தைவைத்து சிகிச்சை செய்து முடித்தார். அது வெற்ற்¢கரமாகவே முடிந்தது. ஆனால் அதற்குப் பின்னரும் கிருமித் தொற்றுகளால் நோயாளிகள் மரணமடைவதைத் தடுக்கமுடியவில்லை. இந்தப் புள்ளியில் இருந்துதான் வில்லியம்ஸின் ஆய்வுகள் தொடங்குகின்றன.  கிருமித் தொற்றுகளைத் தவிர்க்கமுடியாது என மற்றவர்கள் நினைத்திருந்த சமயத்தில் அதை முற்றிலும் தவிர்க்கக்கூடிய ஒன்றாகவே அவர் நினைத்தார். கிருமித் தொற்றுக்கு காற்றில் உள்ள கிருமியைத் தவிர இன்னொரு மையமும் உள்ளது என்பது அவர் எண்ணம்.
ஒருமுறை குண்டடிபட்ட இளைஞன் ஒருவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்தது, மருத்துவ மாணவராக இருந்த வில்லியம்ஸ்க்கு அந்த அறுவை சிகிச்சையின் போது உடனிருந்து உதவும் வாய்ப்பு கிடைத்தது. ஈதர் கொடுத்து மயக்க்முட்டப்பட்ட இளைஞனின் தோலைக் கிழித்ததும் மருத்துவரின் கைகள் துரிதமாகக் குண்டைத் துழாவி எடுத்தன.  அவரது விரல்களில் ரத்தமும் சீழும் பட்டு சிவந்து பிசுபிசுப்படைந்தன. அவற்றை அவர் தம் உடைகளில் அப்படியே து¨டுத்துக்கொண்டு மறபடியும் சிகிச்சையைத் தொடங்கினார்.  அழுக்கின் பயங்கரத்தை நேருக்குநேர் வில்லியம்ஸ் பார்த்தார். குண்டு எடுக்கப்பட்ட பிறகும் அந்த இளைஞன் இறந்துபோனான்.                 து¡ய்மைக்கொள்கை என்பது சிகிச்சையின்போது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் மனம் அசைபோட்டது. அதை கொள்கையாக வெளியிடுவதைவிட செயல்படுத்தி §ருபிப்பது நல்லது என்று காத்திருந்தார் வில்லியம்ஸ். மாணவப் பருவத்திலேயே அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு அமைந்தது. ஒர் அறுவை சிகிச்சையைப் பொறுப்பேற்று செய்யவேண்டியிருந்தது. அப்போது அந்த மருத்துவமனையிலேயே முதன்முறையாக கைகளை வெந்நீரில் கழுவுதல், சுத்தமான துணிகளைப் பயன்படுத்துதல், உபகரணங்களை கொதிக்கவைத்தல், எதையும் நேரிடையாகத் தொடாமல்  பிடிகளைக் கொண்டு தொடுதல் என நான்கு விஷயங்களை வலியுறுத்தினார். அவரது கன்னிமுயற்சி வெற்றியில் முடிந்தது. பிறகு, வேறொரு சந்தர்ப்பத்தில் காயங்களைத் தைப்பதற்குப் பயன்படுத்தப்படும் தசைநு¡ல் திசுக்களைப் பிளந்துகொண்டு பரவியிருந்தாலும் தொற்று ஏற்படும் என்பதையும் அனுபவத்தின் வழியாக உணர்ந்து திசுப்பிளவு, சீழ், கிருமிப்பெருக்கம் என்பவை ஒரு தொடர் இயக்கம் என்பதை அவர் அறிவித்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்வதில் மற்ற மருத்துவர்கள் தயக்கம் காட்டினார்கள்.  எனவே அதை நிருபித்துக்காட்டவேண்டிய நெருக்கடிக்காளானார் வில்லியம்ஸ்.
அவர் மனம் ஒரு திட்டத்தைத் தீட்டி செயல்வடிவம் கொடுத்தது. உடனடியாக தனது பொறுப்பில் சுத்தமான சூழல் கொண்ட அறுவை மருத்துவக்கூடாரம் ஒன்றை அவர் நிறுவினார். தன் வாதங்களை ஏற்கமறுத்த, ஆனால் அதே சமயத்தில் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் மரணங்களை புரிந்துகொள்ள இயலாமல் தவித்த பெரிய மருத்துவர் ஒருவரை அணுகி தனது கூடத்துக்கு வந்து அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். பொதுத்துப்புரவு, திசுப்பாதுகாப்பு, பட்டு நு¡லினால் நிதானமான தையல் ஆகியவைபற்றிய கண்டிப்பான விதிகளை அந்த மருத்துரிடம் எடுத்துரைத்து அவவரையும் அவ்விதிகளைப் பின்பற்றவைத்தார் மருத்துவர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. சில வாரங்களின் இடைவெளியில் அவரே செய்த மூன்று வெவ்வேறு விதமான அறுவை சிகிச்சைகளும் தொடர் வெற்றிகளாக அமைந்தன. வில்லியம்ஸ் வலியுறுத்திய கோட்பாடுகளுக்கு நிரூபணங்களாக அவை அமைந்துபோயின. நாளடைவில் வில்லியம்ஸின் கோட்பாடுகள் அறுவைக்கூடங்களின் அடிப்படை விதிகளாகின.
வில்லியம்ஸின் மனம் அத்துடன் ஓயவில்லை.  ஆழமான அறுவைச் சிகிச்சைகளில் கோகா சாற்றைப் பயன்படுத்தப் பார்க்க விழைந்தது.  சொட்டுச்சொட்டாக ஈதரை சிகிச்சையின்போது விடுவதற்குப் பதிலாக, தோலின்கீழே ஊசியால் மருந்தை ஏற்றினால் விரைவில் உடல் மரத்துவிடும் என்று அவர் நம்பினார்.  சிகிச்சைநேரம் முழுமைக்கும் தேவையான மயக்கத்தை இதன்மூலம் உருவாக்கலாம் என்பது அவர் எண்ணம்.  வழக்கம்போல, இதையும் மருத்துவ உலகம் நம்புவதற்கு §ருபணங்கள் தேவையாயிற்று.
இச்சோதனைக்கு அவர் தன்னையே முதலில் உட்படுத்திக்கொண்டார்.  சக மருத்துவர்கள், மாணவர்கள் என முப்பது பேரை தன் வீட்டுக்கு ஒருநாள் அழைத்தார்.  தயாராக வரவழைத்து வைத்திருந்த கோகா சாற்றிலிருந்து ஆறு துளிகளை ஊசியில் ஏற்றினார். தன் கோட்டைக் கழற்றிவிட்டு சட்டையை மடித்துவிட்டுக்கொண்டு தமது புஜத்தை சக டாக்டரின் முன் நீட்டினார். சோப்பையும் கார்பாலிக் அமிலத்தையும் கொண்டு அந்த புஜத்தை நன்றாகக் கழுவினார் அவர்.  பிறகு வில்லியம்ஸ் அந்த ஊசியை தன் முன்கையில் தானே செலுத்திக்கொண்டார். துடிப்பு மிக்க மெளனத்தோடு எல்லாரும் அவர் கையையே பார்த்தபடி நின்றிருந்தார்கள்.  ஏறத்தாழ இரண்டு நிமிடங்களுக்குள் வில்லியம்ஸ் தன் கைப்பகுதி மரத்துப்போய் விட்டதாகச் சொன்னார். எதிர்பாராத விதமாக அதைத் தொடர்ந்து அவருக்கு திடீரென மயக்கம் வந்தது.  ஒரு மணிநேரத்துக்குப் பிறகு அவர் சுறுசுறுப்புடன் மீண்டும் செயல்படத் தொடங்கினார்.
தொடர்ந்து பல கூட்டங்களில் மருந்தின் அளவை மாற்றி உடலின் பிற நரம்புகளில் ஏற்றச் சோதனைகள் நடத்தினார் வில்லியம்ஸ். பிருஷ்ட பாகத்து நரம்பிலும் தொடைநரம்பிலும் தோளுக்கும் மார்புக்குமிடையே நரம்புச் சந்தியிலும் செலுத்தினார். விளைவுகள் எங்கும் ஒரேமாதிரியாக இருந்தன.  மருந்தை ஏற்றிய இடத்துக்குக் கீழே நரம்பு உடனடியாக மரத்துப்போனது.  எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மயக்க உணர்வும் நோய்உணர்வும் இருந்தன. பிறகு இவ்வுணர்வுகள் நீங்கி மிகவும் சுகமான உணர்வே எஞ்சி நின்றது.  
ஒருநாள் வில்லியம்ஸூடன் பணிபுரியும் மருத்துவர் டிக்ஹால் கடுமையான பல்வலியால் தவித்தார். அதை சரியான வாய்ப்பாகக் கருதிய வில்லியம்ஸ் கோகா சாற்றை அவருடைய ஈறுகளுக்கருகே செலுத்திக்கொள்ளும்படி து¡ண்டினார்.  ஆனால் மருத்துவர் டிக்ஹால் அதற்கு உடன்படவில்லை. அவருக்கு நம்பிக்கை ஏற்படும்பொருட்டு ஊசியில் மருந்தை ஏற்றி தன் ஈறுகளுக்கிடையே உடனே தானே செலுத்திக்கொண்டார் வில்லியம்ஸ். சில நிமிடங்களில் அந்த இடம் மரத்துப் போனது. பிறகு இன்னொரு ஊசியை எடுத்து கொதிநீரில் து¡ய்மை செய்தபிறகு மரத்துப்போன பகுதியில் அரை அங்குல ஆழத்துக்குக் குத்தும்படி சொன்னார்.  ஊசி இறங்கி நிற்கிற நிலையிலும் வலியின் சுவடே இல்லாமல் வில்லியம்ஸ் உட்கார்ந்திருந்ததைக் கண்டார் ஹால்.  முடிவில் கோகா சோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள சம்மதித்தார். இருவரும் உடனே ஒரு பல் மருத்துவரிடம் சென்றனர். கோகா சாற்றை ஈறுகளிடையே செலுத்தும்படி செய்தார்கள். பல் மருத்துவர் நரம்புக்கு அருகில் சுரண்டி இடைவெளியை நிரப்பினார்.  அரைமணிநேரத்தில் அந்தச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அந்தச் செய்தி நாளிதழில் உடனே வெளிவந்து அச்சிகிச்சைமுறையைப் பற்றி உலகுக்கே தெரிவித்தது.
இந்த முதல் வெற்றியைத் தொடர்ந்து கோகா சாற்றைப் பயன்படுத்தி வில்லியம்ஸ் ஏராளமான அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துமுடித்தார்.  இடையறாத உழைப்புக்காகவும் களைப்பற்று சுறுசுறுப்பாக செயல்படுவதற்காகவும் அடிக்கடி அவரும் அந்தச் சாற்றை ஏற்றிக்கொள்ளத் தொடங்கினார்.  இதனால் இரவில் நெடுநேரம் ஓய்வே இன்றி அவரால் வேலை செய்யமுடிந்தது. ஆனால் இந்த வரமே இவருடைய வாழ்வில் சாபமாக ஒருநாள் மாறியது.  ஒருநாள் ஒரு அறுவைச் சிகிச்சையின்போது கத்தியைப் பிடித்த தனது கைகள் நடுங்குவதைத் தானே உணர்ந்து பின்வாங்கினார் வில்லியம்ஸ்.  சோர்வோடு வீட்டுக்கு உடனே திரும்பிவிட்டார்.  கொகேயின் பொடியை எடுத்து ஒரு சிமிட்டா உறிஞ்சினார். சிறிதுநேரம் படுத்து எழுந்தார். கைநடுக்கம் முற்றிலும் நீங்கிவிட்டிருப்பதை உணர்ந்தார். அவருக்கு நம்பிக்கை மீண்டது.  ஆனால் அடுத்த வாரத்திலேயே இதேபோன்ற நிலைக்கு மறுப்யும் ஆளானார் அவர்.  மறுநாள் பகல்முழுதும் ஓய்வெடுத்த பிறகும் களைப்பு நீங்கவில்லை.  கொகேயின் பொடியை நுகர்ந்ததும் களைப்பு அகன்றது.  வில்லியம்ஸ்க்கு பல அறுவைச் சிகிச்சைகளில் வெற்றிக்குத் துணையாக இருந்த கொகேயின் அவருடைய சொந்த வாழ்வில் ஆபத்தாக முளைத்தது. அப்பழக்கத்திலிருந்து அவரை விடுபடவைக்க அவருடைய பல நண்பர்கள் முயற்சி செய்துபார்த்தார்கள். எதுவும் பயனளிக்கவில்லை.  மருத்துவமனையிலிருந்தே அவர் வெளியேறும்படி நேர்ந்தது.
அப்போது அந்தப் பழக்கத்திலிருந்து அவரை மீட்டெடுக்க ஒரு கடற்பயணத் திட்டத்தை முன்வைத்தார் இன்னொரு நண்பரான மருத்துவர் வெல்ஷ். வில்லியம்ஸ் அத்திட்டத்துக்கு இசைவளித்தார்.  உடனே ஒரு பாய்மரக்கப்பலுக்கும் அதைச் செலுத்த மூன்று திறமையான ஆட்களுக்கும் ஏற்பாடுகள் நடந்தன.  கடற்பயணத்தால் பல மாற்றங்கள் ஒருவர் வாழ்வில் ஏற்படக்கூடும் என்று அந்த மருத்துவர் நம்பினார்.  பயணத்தின்போது ஒருநாள் பாய்மரத்தை இழுத்துக்கட்டும் ஒருவனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் ஒழுகியது.  அதே தளத்தில் அக்காட்சியைக் கண்களால் பார்த்துக்கொண்டிருந்தார் வில்லியம்ஸ்.  ஆனால் அவரால் சிறிதும் அசையமுடியவில்லை.  அவனுக்கு உதவவேண்டும் என அவரது உள்மனம் விழைந்தது. ஆனால் கொகேயினின் செல்வாக்கால் துவண்டுபோன மூளை அவரை அளவுகடந்த களைப்புக்காளாக்கி ஒரு சவத்தைப்போல நிற்கவைத்தது.  மூளை செயலிழந்துபோகும் கொடுமையை அக்கணம் வில்லியம்ஸ் தானாகவே உணர்ந்துகொண்டார்.  தன் மனவலிமைமூலம் அந்தச் சாற்றின் வலிமையை வெல்ல அவர் மனம் உறுதிகொண்டது.  
ஒருநாள் கப்பலுக்குத் தேவையானவற்றை நிரப்பிக்கொள்ள ஒரு கரையில் நின்றது.  நேரப்போக்குக்காக அந்தக் கரையோரக் கிராமத்தில் இறங்கிய வில்லியம்ஸ் அங்கிருந்த ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்தார். அங்கே வயிற்றுவலியால் துடித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தார். தானாகவே அவனருகே சென்று சோதித்துப் பார்த்தார். அங்கிருந்த மருத்துவர் அவரை நெருங்கி அவனுக்கு சீரணக் கோளாறு இருப்பதாகவும் பேதி மாத்திரையும் கொயினா மாத்திரையும் கொடுத்திருப்பதாகவும் விரைவில் குணமடையக்கூடும் என்றும் சொன்னார்.  வில்லியம்ஸ் அந்த மருத்துவரின் கணிப்பு தவறானது என்று மெதுவாகச் சுட்டிக்காட்டினார். சிறுவனுடைய குடல்வால் வீங்கியிருப்பதாகச் சொன்னார். பிறகு அந்த மருத்துவரின் இசைவோடு, அங்கிருந்த கருவிகளைப் பயன்படுத்தி அச்சிறுவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்தார். ஒரு வாரத்துக்குப் பிறகு அவன் முழுக்குணம் அடைந்துவிட்டான்.  
அந்தச் சிகிச்சைக்காக அவர் தன் கைவசம் வைத்திருந்த கொகேயின் பொடியில் முக்கால்பங்குக்கும் மேலாகப் பயன்படுத்திவிட்டார். இருப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனாலும் புறப்படும்போதிருந்ததைவிட இப்போதைய தேவை குறைவுதான் என்பதில் அவருக்கு எவ்வித சந்தேகமும் எழவில்லை.  இந்த நிலையே அவருக்கு நம்பிக்கை அளித்தது. உண்மையிலேயே தேவைப்படும்போது அது கிடைக்கும் என்ற உறுதியே அதைத் தவிர்ப்பதற்கான மனத்திடத்தைத் தந்துவிட்டது.  
கரையை அடைந்ததும் ஸாயர் என்னும் வேறொரு மருத்துவரிடம் வில்லியம்ஸ் சிகிச்சை பெறத் தொடங்கினார். சில வாரங்களுக்குப் பிறகு பழைய நிலைக்குத் திரும்பிவிட்டார்.  வெல்ஷின் தன் மருத்துவமனையிலேயே அவருக்கு பணிபுரியும் வாய்ப்பை வழங்கினார்.  வில்லியம்ஸின் மனம்  முழுக்க தொற்று ஆய்வுகளிலேயே மூழ்கியிருந்தது. அதனால் அந்த வாய்ப்பை விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டார்.
மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சைப் பிரிவின் தலைமைப் பொறுப்பை வில்லியம்ஸ்க்குத் தர விழைந்தார் வெல்ஷ்.  ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நியுயார்க்கில் அறுவை சிகிச்சையின்போது கைநடுங்கிய மருத்துவர் என வாங்கிவிட்ட அவப்யெரை அழிப்பது என்பது பெரிய சவாலாகவே இருந்தது.  வெல்ஷ் இப்போதும் ஒரு திட்டத்தை முன்வைத்தார். கொகேயின் நிரம்பிய முத்திரையிடப்பட்ட ஒரு குப்பியை வில்லியம்ஸிடம் கொடுத்து ஒரு மாதம் வரைக்கும் வைத்திருந்துவிட்டு தன்னிடம் திருப்பித் தரும்படி கேட்டுக்கொண்டார். ஒரு மாதத்தில் ஒருநாள் கூட அதைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் அவர் வாழ்வில் உருவாகவே இல்லை என்றால்  அவர் வெற்றிபெற்றதாக பொருள். அந்த வெற்றி மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக அல்ல, அவருடைய நிலையை அவரே உணர்வதற்காக. வேகவேகமாகச் சொன்னபிறகு அங்கிருந்து சென்றுவிட்டார் வெல்ஷ்.
ஒருமாதக் கெடு முடிந்தது. வில்லியம்ஸின் மனஉறுதி வென்றது.  அந்த மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைக்கூடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருடைய து¡ய்மைக்கொள்கைகள் அங்கும் உடனடியாக அமுலாகின. தலைமைச் செவிலி கரோலின் ஹாம்ப்ஸ்டன் என்பவர் அவருடைய பணிகளில் மிகவும் விருப்பத்துடன் துணைபுரிந்தார். பல அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துமுடித்தார் வில்லியம்ஸ்.
கடுமையான து¡ய்மை விதிகளின் காரணமாக கரோலின் கைகளில் புண்கள் நிறைந்திருப்பதை தற்செயலாக ஒருநாள் பார்த்தார் வில்லியம்ஸ். அந்தக் கைகளோடு வேலை செய்வது அவளுக்கும் நல்லதல்ல, நோயாளிக்கும் நல்லதல்ல என்று அவர் நினைத்தார். அதே சமயத்தில் து¡ய்மையும் மிகமிக முக்கியம். எப்படி இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பது என்ற தீவிர யோசனையில் ஆழ்ந்தார்.  அவர் மனத்தில் ரப்பர் கையுறைத்திட்டம் உதித்தது.  உடனே குட்இயர் நிறுவனத்தின் மூலமாக மெல்லிய ரப்பராலான இரண்டு ஜோடி கையுறைகளைத் தயாரித்து வாங்கினார்.  மருத்துவமனையில் ஒரு செவிலியும் மருத்துவரும் முதன்முறையாக கையுறைகளைப் பயன்படுத்தினர். அது மிகப்பெரிய புரட்சியாகக் கருதப்பட்டது.  அதன் பயன்களை அனைவரும் உணர்ந்தார்கள். உடனடியாக மருத்துவ நிர்வாகம் உபகரணங்களைத் தொட்டுக் கையாள்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஜோடி கையுறையை வழங்கியது. இதன்மூலம் ரப்பர் கையுறைகள் நிலைபெறத் தொடங்கின.  தொற்று ஆய்வுகளில் கையுறை இன்னொரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
பிற்காலத்தில் பல பெருமைகளும் விருதுகளும் வில்லியம்ஸைத் தேடி வந்தன. அவர் தொடங்கிவைத்த ஆய்வுகள் இன்று வெகுதொலைவு கடந்து வந்துவிட்டது. ஒரு முன்னோடியாக அவர் தொடங்கிவைத்த இடம் மருத்துவத்துறையில் யாராலும் மறக்க முடியாத ஒன்று. ஒரு முன்னோடியின் உழைப்பு என்பது ஒரு துறைக்கு அடியுரம் போன்றது. மருத்துவத்துறை இன்று காண்கிற வெற்றியின் விளைச்சலுக்குப் பின்னால் வில்லியம்ஸைப் போன்ற நு¡ற்றுக்கணக்கான வில்லியம்ஸ்களின் கடுமையான உழைப்பும் கற்பனைஆற்றலும் உள்ளன என்பதை நாம் மறக்கக்கூடாது. அதற்காகத்தான் ஒவ்வொரு மருத்துவமனைதோறும் அந்தக் காலச் சிகிச்சைமுறைச் சித்திரங்கள் வைக்கப்படுகின்றன என்று தோன்றுகிறது.
"சாவை வென்ற வீரர்" என்பது மொழிபெயர்ப்பாளரே சூட்டிய பெயராகும். தன் ஆய்வுமுடிவுகளைத் தீவிரத்தோடு பயன்படுத்தியதால் மரணமடைய இருந்த பல உயிர்களைக் காப்பாற்றியவர் என்கிற பொருளிலும் தனக்கு வரவிருந்த சாவையும் தன் விடாமுயற்சியாலும் உறுதியான மனக்கட்டுப்பாட்டாலும் வென்று மீண்டவர் என்கிற பொருளிலும் அவர் இத்தலைப்பைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனாலும் இந்த நூலின் உண்மையான பெயர் Cancer, Cocain and Courage என்பதாகும்.