சிறுகதை இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றவர் ருசிய எழுத்தாளரான ஆன்டன் செகாவ். நாற்பத்துநான்கு
ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவர் பல அமரகதைகளையும் முக்கியமான நாடகங்களையும் படைத்திருக்கிறார். பலசரக்குக்கடை நடத்திவந்த குடும்பத்தில் பிறந்த செகாவ் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர். மருத்துவராகப் பணிசெய்துகொண்டே படைப் பாளியாகவும் வாழ்ந்து வந்தார். மருத்துவப் படிப்பின் போது செலவுக்காகச் சில நடைச்சித்திரங்களைப் பத்திரிகைகளுக்குத் தொடர்ச்சியாக எழுதிச் சம் பாதித்தார். ஓர் அவசரத்துக்காக எழுதத் தொடங்கிய செகாவ் நாளடைவில் ருசிய மண்ணில் தன்னை ஒரு முக்கியமான எழுத்தாளுமைகளில்
ஒருவராக நிறுவிக்கொண்டார். பச்சோந்தி, மெலிந்தவரும் உடல் பருத்தவரும், வான்கா, கீழ்நிலை இராணுவ வீரர் ப்ரிஷி பேயெவ், ஆறாவது வார்டு ஆகிய படைப்புகள் அவருக்கு உலக அளவில் பெயர் வாங்கித் தந்தவை. அவருடைய முக்கியமான நாடகங்கள் கடற்பறவை, மூன்று சகோதரிகள்.