Home

Showing posts with label மூன்றறையர். Show all posts
Showing posts with label மூன்றறையர். Show all posts

Friday, 7 February 2020

புதிய பார்வை - கட்டுரை



நாடோடியாகத் திரிந்த மக்கள் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலைத்து நின்று வாழத் தொடங்கியபோதுதான் ஒரு பெரிய சமூகம் உருவானது. அச்சமூகத்தைக் காக்கவும் பேணவும் மென்மேலும் மேம்படச் செய்யவும் சிறிய சிறிய அரசுகள் உருவாகி,  பிறகு கால ஓட்டத்தில் சிற்றரசுகள் இணைக்கப்பட்டு பேரரசுகள் உருவாகின. கூடி வாழ்ந்த ஒவ்வொரு சிறு சமூகத்திலும், ஒருங்கிணைந்து வாழ அவசியமான சில விதிகள் இருந்தன. மக்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற அவர்களுக்கிடையே ஒரு பொதுப்புரிதலுக்கான அவசியம் இருந்தது. அந்த அவசியத்தை ஒட்டி சில நெறிகள் வகுத்துப் பின்பற்றப்பட்டன. அவையே அச்சமூகத்தின் நீதியாக இருந்தது. பல இனக்குழுக்கள் இணைந்து இணைந்து சமூகம் விரிவடைந்து பெருகும்போது, பெரிய சமூகத்தின் இயக்கத்துக்கு துணைநிற்கும்வகையில் பொதுநீதியும் விரிவாக்கம் செய்யப்பட்டது. சமூகம் விரிவடையும்தோறும் சமூகநீதியும் விரிவடைந்து வளர்ச்சி பெற்றது.  நெறிகள் என்பவை நீதியின் குரல். இந்த நீதி அரசாட்சியின் குரலாக  வெளிப்பட்டபோது சட்டமாக மாறியது. வாழ்வியலின் குரலாக வெளிப்பட்டபோது பழமொழியாகவும் தொடர்களாவும் மாறின. பழமொழிகள் ஒருவகையில் எழுத்துக்கு வராத இலக்கியம். வாய்வழியாகவே புழங்கி வந்தவை. மானுட குலத்துக்கான ஒரு பொது அறத்தை முன்வைக்க அவை முற்பட்டன.