Home

Monday, 11 May 2026

தனுசு - குறுநாவல் - பகுதி 1

  

கடைசியில் தனுசு அண்ணனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவது தான் நல்லது என்று முடிவாகி ராமு, சுந்தரம் சித்தப்பா, கமலக்கண்ணன் மாமா எல்லாரும் ஒரு டாக்சியில் ஏற்றிக் கொண்டு போய் படாதபாடு பட்டு சேர்த்தபிறகு திரும்பினார்கள்

கடைத்தெருவில் சில்லறை மாற்றி டாக்சிக்கு கணக்கு தீர்த்த கையோடு சுந்தரம் சித்தப்பாவும் கமலக்கண்ணன் மாமாவும்பத்தரமா ஊட்டுக்குப் போ ராமு. ஊட்ல இருக்கறவங்களுக்கு நீ தான் தைரியம் சொல்லணும். நீயே கோழையாய்ட்டா ஊட்டுப் பொம்பளங்கள்ளாம் அழ ஆரம்பிச்சிடும். பாத்து பக்குவமா நடந்துக்க. நீ உலக விவகாரம் தெரிஞ்சவன். நாங்க ஜாஸ்தி சொல்றதுக்கு இல்லஎன்று நிதானமாய் முதுகைத் தட்டி ராமுவிடம் சொல்லிவிட்டு பிரிந்து நடந்தார்கள். ஆயிரம் பேர் வருகிற போகிற கடைத்தெரு என்றாலும் கூட அந்த நிமிஷத்தில் மீளமுடியாத தனிமையில் இருப்பதாய் உணர்ந்தான் ராமு.

வீட்டில் ஒரு மாசமாகவே இந்த விஷயம் எரியும் பிரச்சினையாக இருந்தது. தெருவில் இருக்கிற ஜனங்களும் உறவு ஜனங்களும் இழவு வீட்டில் துக்கம் கேட்கவருகிற மாதிரி வந்து உட்கார்ந்து ஆளாளுக்குப் புத்தி சொல்லிவிட்டுச் சென்றார்கள். வேண்டாம் வேண்டாம் என்று மறுத்துப் பேசியதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் சுந்தரிப்பாளையம் சின்னத் தாத்தா வந்து மந்தரித்து பூஜையெல்லாம் செய்து தாயத்து கட்டிவிட்டுமூனே நாள்ல சரியாய்டும்மா. எதுக்கும் கவலப்படாதஎன்று சொல்லிவிட்டுப்  போனார். கொசவமூட்டு ஆயாவும் ரொம்ப கரிசனத்தோடு கருக்கலிலேயே வந்து தனுசு அண்ணன் தலையில் அதக்கிஅதக்கி ஆறேழு எலுமிச்சம் பழங்களைத் தேய்த்து கிணற்றுத்தண்ணீரை வாளி வாளியாய் இழுத்து நாலு நாளைக்குக் குளிப்பாட்டி விட்டுப் போனது. ‘மைலம் விபூதிடி இது. ஒடம்புல பூசு. எந்த நோவுமானாலும் ஒரு ராத்திரில ஓடிடும் பாருஎன்று கண்டமங்கலம் சின்னாயா ஒரு பொட்டலம் விபூதியைக் கொண்டுவந்து கொடுத்தது. எதற்கும் மசியாமல் தனுசு அண்ணனின் பைத்தியம் ஏறிக்கொண்டே இருந்தது. நாளுக்கு நாள் சேஷ்டையும் ஆட்டமும் பாட்டமும் கூத்தும் கும்மாளமும் அதிகரித்துக்கொண்டே போனது. அம்மாவுக்கு சாமி மேல் இருந்த நம்பிக்கையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்துகொண்டே வந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் சிறுவந்தாட்டு சின்னம்மா வந்துஎதுக்கும் கவலப்படாதக்கா. நம்ம கைல என்ன இருக்குது. சாமிக்கு வேண்டிக்கோ, எல்லாம் சரியா போவும்என்று பேச்சோடு பேச்சாய்ச் சொன்ன போதுஒரு பாவமும் அறியாத என் புள்ளைக்கு இந்த கதிய குடுத்த சாமி இன்னாடி சாமி, பெரிய மயிரு சாமிஎன்று வாய்க்கு வந்த மாதிரி ஏசத் தொடங்கினாள். இந்த ஆத்திரத்தின் தொடர்ச்சியாகவேஎந்த சாமியும் என் புள்ளய காப்பாத்த வேணாம்டி. எப்படி காப்பாத்தணும்னு எனக்குத் தெரியும்டிஎன்று கூச்சல் போட்டு அன்றைய ராத்திரி நாள் தனுசு அண்ணனை ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தாள் அம்மா.

அம்மாவின் சம்மதத்துக்குத்தான் எல்லாரும் காத்திருந்தார்கள் லேசாய் புத்தி மாறாட்டம் தெரிந்து ஆரம்பக் கட்டத்திலேயே சித்தப்பா பெரியப்பா எல்லாம் கூடிநம்மால கட்டி மேய்க்க ஆவாது. பேசாம ஆஸ்பத்திரிக்கு அனுப்பிர்லாம்என்று சொன்னபோது அம்மா திட்டவட்டமாய் மறுத்தாள். அப்போதெல்லாம் அம்மா தனுசு அண்ணனுக்கு பைத்தியமே இல்லை என்று சாதித்தாள். ‘என் புள்ளைய எனக்குத் தெரியாதா? ஊத்த வாய வச்சிக்கினு ஊரு கத பேச வந்துட்டீங்களா?’ என்று சத்தம் போட்டாள். ‘பைத்தியம் பைத்தியம்னு சொல்லியே எம் புள்ளைய பைத்தியமாக்கிர்லாம்னு நெனைக்கறிங்களாடா? ஏதோ நாலு வார்த்த திலுப்பி திலுப்பி பேசனா பைத்தியமா? போவுது பாருயா ஒங்களுக்குப் புத்திஎன்று திருப்பித் திட்டினாள். வயசான காலத்தில் அம்மாவின் நிம்மதியைக் கெடுக்கவேண்டாம் என்று எல்லாருமே பின்வாங்கிக் கொண்டார்கள்.

அப்பா இல்லாத குடும்பத்தில் ஒற்றை ஆளாய் அலைந்து அலைந்து அம்மா ஒரு மாசத்தில் அரை ஆளாய் இளைத்துவிட்டாள்.

எல்லாக் கஷ்டத்தையும் அம்மாவும் ராமுவும் மட்டுமே தனியே சமாளித்தார்கள். ராமுவுக்கும் தனுசுவுக்கும் நடுவில் காசி அண்ணன் இருந்தான். காசி அண்ணனுக்கென்று மரக்காணம், திண்டிவனம், காளாப்பட்டு, பாண்டிச்சேரி என்று நிறைய ஊர்களுக்குப் போய் பெண்ணைத் தேடியது எல்லாம் தனுசு அண்ணன்தான். கண்ட நேரத்தில் எல்லாம் மண்டியில் லீவ் போட்டு ஓடி வந்து விடுவான். ‘அம்மா அம்மா சீக்கிரம் கௌம்பு. மல்லாட்ட போட வந்த ஆளு ஒர்த்தன் கண்டமங்கலத்துல ஒரு பொண்ணு நம்ம ஜாதில நல்லா இருக்குதுன்னான். போய்ப் பாத்துட்டு வரலாம் வாஎன்பான். பதினாலு இடம் பார்த்து பதினைந்தாவதாக கீரப்பாளையத்தில் ஒரு இடம் திருப்தியாக அமைய அந்த இடத்தில்தான் காசிக்குப் பெண் எடுத்தான். அப்படிப்பட்ட காசி, ராத்திரி ரயில் ஏறி காலையில் வந்து இறங்க முடிகிற அளவில் மதுரையில் இருந்துகொண்டு மூன்று லெட்டர் எழுதிப் போட்டும்கூட இங்கிருக்கிற ஊருக்கு எட்டிக் கூடப் பார்க்கவில்லை. ‘அண்ணனுக்கு எப்படி உள்ளது. லீவ் இல்லை. வரமுடியவில்லைஎன்று லெட்டர் மட்டும் எழுதினான். ராமுவுக்கு இதையெல்லாம் நம்பக் கூட முடியவில்லை. இப்படியெல்லாம்கூட மனிதர்கள் இருப்பார்களா என்றுதான் விசனப்பட்டான். காசி அண்ணன் பெண்டாட்டி வீட்டிலேயே தங்காமல் நாலாம் நாள் தூக்குப் பையோடு வண்டியேறிப்போன பிறகுஇவதான்டா லெட்டர் எழுதி வரவேணாம்னு சொல்லி இருக்கா. வேலுக்கவுண்டர் பொண்ணு மூலமாத்தா எழுதி அனுப்பனாளாம், அந்தப் பெண்ணே சொல்லிச்சி. இவளப்போயி தேடித் தேடி கண்டுபுடிச்சானே ஒங்க பெரிய அண்ணன் என்று அம்மா அழுதுகொண்டே சொன்னாள்.

தனுசு அண்ணன்சட்சட்டென்று தொலைந்து போவதும் கண்டுபிடித்து கூட்டி வருவதும்தான் பெரிய பிரச்சினையாய் இருந்தது. வயசுக்கு வந்த சிவகாமி தங்கச்சியை தனியே வீட்டில் விட்டுவிட்டு அம்மாவும் ராமுவும்தான் தேடவேண்டும். ஒரு நாள் ஏரிக்கரையில் படுத்துக் கிடந்தானே என்று நினைத்து அடுத்த நாள் அங்கே போய் பார்த்தால் இருக்கமாட்டான். நடையாய் நடக்கவேண்டும். வழியில் இருக்கிற மாட்டுக்காரப் பையன், சூளைக்காரக் கிழவன் என்று யார் மூலமாவது புலன் விசாரித்துக்கொண்டு போய் பருத்திக்காட்டிலோ, கம்மங்காட்டிலோ படுத்து புரள்கிறவனை இழுத்துவர வேண்டும். மறுநாள் தேடினால் அங்கும் இருக்கமாட்டான். மதகுக் கரைப்பக்கம் பீடி குடித்துக் கொண்டிருப்பான். உட்கார்ந்திருப்பவனை தாஜா செய்து கூப்பிட்டு வருவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும். அத்தனை சீக்கிரத்தில்  மசிய மாட்டான் தனுசு அண்ணன். அடம் பிடிப்பான். தூரத்தில் இருக்கிற பனைமரத்தில் இருந்து நுங்கு கேட்பான். தென்னங் கள்ளு வாங்கி வந்து கொடுக்கச் சொல்வான். கரும்பைக் கசக்கிச் சாறாக வாயில் ஊற்றச் சொல்வான். அம்மா ஓரமாய் உட்கார்ந்து அழுவாள். ராமுவுக்கும் தொண்டை அடைக்கும். ஆனாலும் அண்ணனின் மனநிறைவுக்காக அழுகையை மறைத்துக்கொண்டு அண்ணன் சொல்வதையெல்லாம் செய்வான். அதற்குப் பிறகுதான் எழுந்துவரச் சம்மதிப்பான்.

வேலங்காட்டில் ஆட்டுக்கிடைக்கு நடுவில் படுத்துக்கிடந்த அண்ணனை அழைத்து வருவது ஒரு தரம் ரொம்பவும் சிரமமாகி விட்டது. எவ்வளவோ கெஞ்சியும் கூத்தாடிப் பார்த்தும் எழுந்திருக்கமுடியாது என்று அழுத்தமாய் உட்கார்ந்துகொண்டான். முதலில்ஒரு பாட்டு பாடு, வரன்என்றான். முட்டி வரும் அழுகையை மறைத்துக்கொண்டு பாடினான் ராமு. முடிந்த கையோடுஇன்னோர் பாட்டு இன்னோர் பாட்டுஎன்று தொடையைத் தட்டினான். அதுவும் முடிந்ததும்ஒரு டேன்ஸ் ஆடு, அப்பதான் வருவன்என்றான். ராமுவுக்கு தாங்கமுடியாத துக்கமாய் இருந்தது. ஆனாலும் கசப்பை விழுங்குகிறமாதிரி விழுங்கிக்கொண்டு கையைக் காலை பிரித்துக் குதித்து ரெண்டு ஆட்டம் ஆடினான். கைகொட்டிச் சிரிக்கிற அண்ணனை பார்க்க வேதனையாய் இருந்தது. ‘ஏந்துருண்ணே போவலாம்என்று கெஞ்சியபோது அந்த மாதிரி தூக்கிப் போறியா வரன்என்று ஆட்டுக்குட்டியைத் தோளில் தூக்கிக்கொண்டு வந்த இடையனைக் காட்டினான். மனசு அதிர்ந்தாலும் மறைத்தபடி எழுந்திருக்கச் சொன்னான். ‘ஊடு வரிக்கும் தூக்கிக்னு போவணும்என்று கட்டளையிட்டான் தனுசு அண்ணன். மறுப்பே சொல்லாமல் மூச்சுக்கட்டி அண்ணனைத் தோளில் தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் வீட்டுக்கு வந்தான் ராமு, தெருவில் பார்த்த பாதி ஜனம் சிரித்தது. கால்வாசி ஜனம் முகத்தைச் சுளித்தது. கால்வாசி ஜனம் நாக்கு சப்புக் கொட்டியது.

அன்றைய தினம் ராத்திரிதான் முறுக்குக்காரத் தாத்தா வந்து அண்ணனைக் கட்டிப் போடுகிற யோசனையைச் சொன்னார். அம்மாவுக்கு ஆத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. ‘எம் புள்ளயபத்தி வாய் கூசாம எதுக்கு மாமா அந்த மாதிரி பேசறிங்கஎன்று அழுதாள். ‘இந்த கொடுமையையெல்லாம் பார்க்கணும் செய்யணும்ன்னு சொல்லிட்டு நீங்க போய் சேந்திட்டிங்களே ஐயா, என் தரும தொரயே. எனக்கு இந்த நெலமய வய்க்கலாமா?’ என்று சுவரில்  இருந்த அப்பா படத்துக்குப் பக்கத்தில் சென்று உருக்கமாய் அழுதாள். அப்புறம்தான் அரைமனசு கால் மனசோடு கட்டிப்போட ஒத்துக்கொண்டாள். கட்டிப் போட்ட நிலையிலேயே தனுசு அண்ணன் செய்து விடுகிற மலஜலக் கழிவுகளையெல்லாம்கூட வாரிப் போட்டாள். சிவகாமி தங்கச்சி செய்யப் போனபோது அம்மா பலவந்தமாய் மறுத்து ஒதுக்கிவிட்டாள். ‘நீ பச்சமண்ணு தாயி. இதயெல்லாம் பாத்து இதயெல்லாம் செஞ்சி நீ நரங்கிடாத தாயி. போ, போய் உள்ள ஒக்காரும்மா என்று கையெடுத்துக் கும்பிட்டாள். ராமு மாத்திரம் பக்கத்திலேயே இருந்து உடம்பு கழுவ குளிப்பாட்ட, துவட்டி விட, துணிமாற்ற பார்த்துக் கொண்டான்.

தோட்டத்திலேயே கட்டிப் போடுகிற யோசனை மூன்று நான்கு நாள்களுக்கு உபயோகமாகவே இருந்தது. ஐந்தாம் நாள் மதியம் கொஞ்சம் கண்ணயர்ந்திருந்த சமயத்தில் கட்டுகளை அறுத்துக்கொண்டு போய்விட்டான் தனுசு அண்ணன். அந்த தரம் அவனைக் கண்டுபிடிப்பது ரொம்பவும் சிரமமாய்ப் போய்விட்டது. நாலு ஆள் போட்டுக்கொண்டு ஆளுக்கொரு திசையில் தேடினாலும் ஒன்றும் தடயம் இல்லை. வேலங்காடு, கம்மங்காடு, ஏரிக்கரை, ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டான்ட், கோயில் குளம் என்று ஊரில் ஒரு இடம்பாக்கி இல்லாமல் சலித்தெடுத்த பிறகும் உபயோகம் இல்லை. உறவுக்காரர்கள் ஆளாளுக்குப் பேசத் தொடங்கிவிட்டார்கள். எல்லாரும் தனித்தனியே விளக்குக் கம்பத்தின் கீழே கோயில் மதிலையொட்டி பாலத்துப் பக்கத்தில், திண்ணையில் சாய்ந்துகொண்டு, வேலிக்காத்தான் செடி மறைவில் நின்றுகொண்டு, தத்தமதுயோசனைகளுக்குத் தகுந்தபடி பேசினார்கள். ஏறத்தாழ எல்லாருமே தனுசு அண்ணன் ஏதோ செத்துப் போய் கைக்குப் பிணம் கிடைக்காததற்குப் பரிதாபப்படுகிற மாதிரி உச்சுக் கொட்டினார்கள். அடுத்தநாள் சூரியன் உச்சியில் இருக்கிற சமயம் ராமுதான் வில்லியனூர் ஆற்று மணலில் உட்கார்ந்து கிடந்தான் என்று கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தான். தனுசு அண்ணனின் தலைமுதல் கால்வரை வியர்வையில் நசநசத்த சாணத்தின் துர்நாற்றம் வீசியது. தலைமயிர் எல்லாம் சாணப் பாலில் கெட்டித்துப்போய் விறைத்திருந்தது. உடம்பு முழுக்க திப்பித் திப்பியாய் அப்பிக் கிடந்தது சாணத்துளிகள். பக்கத்தில்கூட நெருங்க முடியவில்லை. துர்நாற்றத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டு தள்ளித் தள்ளி நின்றார்கள். ஏழு மைல் கையைப் பிடித்து கூட்டி வந்திருக்கிற ராமுவை சாமர்த்தியசாலி என்று மெச்சினார்கள். ராமுவும் அம்மாவும் சேர்ந்துகொண்டு கிணற்றங்கரைக்கு அழைத்துப் போய் உட்காரவைத்து வாளி  வாளியாய் தண்ணீரை இழுத்து ஊற்றினார்கள். வைக்கோல் கொண்டு தேய்க்கத்தேய்க்கக் கூட வராமல் ஒட்டிக்கொண்டிருந்தது சாணம். ஆத்திரமும் அழுகையும் தாங்காமல் அம்மாஏன்டா இப்படியெல்லாம் உயிர வாங்கற?’ என்று வாளியாலேயே தலையில் ஒரு இடி இடித்தாள். வாளிப்பிடியின் கொக்கி பதிந்து ரத்தம் ஒழுகியது. ராமுவே இரண்டு பேரையும் சமாதானப்படுத்தி பச்சைக் குழந்தைக்கு ஊற்றுகிற மாதிரி ஊற்றித் துவட்டினான். தூய்மையான பிறகு தனுசு அண்ணனை அம்மா உள்ளே அழைத்துக்கொண்டு போனதும் கிணற்றோரம் போட்டிருக்கிற துணிதுவைக்கும் கல்லைப் பிடித்தபடி ஓவென்று வாந்தி எடுத்தான் ராமு. குமட்டிக் குமட்டி வயிற்றுக்குள் இருக்கிறதெல்லாம் எதிர்த்திசையில் கிளம்புகிற மாதிரி பொங்கிப்புரண்டு வந்தது. குவளையில் சுடுநீர் வைத்து எடுத்து வந்து கொடுத்து மாரை நீவிவிட்டது சிவகாமி. அதற்குப் பிறகும் ஆகாயத்தைப் பார்த்தபடி உட்கார்ந்து கிடந்தான் ராமு.

தனுசு அண்ணன் ரொம்பவும் அடங்கின சுபாவமானவன். ஒரு வார்த்தைகூட அதிர்கிற மாதிரி வராது. தனக்காக எதையும் அடம் பிடித்து செய்துகொள்ளத் தெரியாதவன். சந்தோஷமோ துக்கமோ எதையும் வாய்விட்டுச் சொல்லாத அப்பிராணி. நெஞ்சுக் குள்ளேயே போட்டுப்போட்டு அடக்கிக்கொள்வான். கல்யாணமான ரெண்டரை வருஷத்துக்குள்ளேயே சுமதி அண்ணி செத்துப் போனாள். ஒரு வருஷத்துக் கைக்குழந்தை முத்துக்குமார் அம்மை வந்து செத்துப் போனது. இழந்து இழந்து உட்கார்ந்து விசனப்பட்ட போது கூட மௌன அழுகையாய் கண்ணில் நீர் வழியக் கிடந்தானே தவிர ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லை. தாள முடியாத துக்கம் கலந்த அந்தக் கட்டங்களில் பைத்தியமாகி இருந்தால்கூட விசனத்தால் வந்துவிட்டது என்று ஒரு பொருத்தத்துக்கு சொல்லவோ நினைக்கவோ வாஸ்தவமாய் இருக்கும். அப்போது இறுகிஇறுகி மனத்தை மூடிக்கொண்டு நடமாடியவன் மண்டியில் மூட்டை இறக்கும் சந்தர்ப்பத்தில் குடோனில் வரிசையில் மேல் இருந்த மூட்டை மண்டையில் சரிந்து ஆளைச் சாய்க்க அதிர்ச்சியில் புத்தி பேதலித்தது துரதிர்ஷ்டமான விஷயம்.

இந்த விஷயங்கள் எல்லாம் பிரச்சினைகளில் ஒரு ரகம் என்றால் டாக்சியில் மெட்ராஸ் வரைக்கும் போய் ஆஸ்பத்திரியில் தனுசு அண்ணனைச் சேர்ப்பதற்குப் பட்ட பாடு இன்னொரு ரகப் பிரச்சினை. டாக்சி என்று போனவுடனேயே டாக்சிக்காரன் ஆயிரம் ரூபாய் கேட்டான். “இன்னாயா கொள்ளையா இருக்குதுஎன்றால்இஷ்டம் இருந்தா வா சார் இல்லன்னா உடுஎன்றான்  தனுசு .

அண்ணன் இருக்கிற நிலையில் பஸ்ஸிலோ ரயிலிலோ கொண்டு போதல் நடக்காத காரியமாய் இருந்தது. போகிற போது இறங்கியோ விழுந்தோ நேர்கிற அபாயத்துக்கு பணம் போனால் பரவாயில்லை என்று அம்மா வீட்டுப் பத்திரத்தை ராத்திரியோடு ராத்திரியாய் எடுத்துக்கொண்டு போய் மளிகைக்கடை செட்டியாரிடம் வைத்து கையெழுத்துப் போட்டு நாலாயிரம் ரூபாய் வாங்கி வந்து ராமுவிடம் தந்தாள். டாக்சி தயார் என்றதும் அதுவரைக்கும் வாசலில் நின்றவர்கள் மெதுவாக நழுவ ஆரம்பித்தார்கள். தோப்புக்கரணம் போடாத குறையாய் சுந்தரம் சித்தப்பாவையும் கமலக் கண்ணன் மாமாவையும் கெஞ்சிக் கெஞ்சி துணைக்கு அழைத்துக்கொண்டு மிகுந்த சிரமங்களுக்கு நடுவில் தனுசு அண்ணனை உள்ளே உட்கார வைத்துக்கொண்டு கிளம்பினான் ராமு.

விடிகாலை மெட்ராஸ் ஆஸ்பத்திரியை அடைந்தவர்களுக்கு அத்தனை சுலபமாய் யாரையும் சேர்க்க முடியாது என்று புலப்பட்டது. காலையில் இறங்கி ஒரு டீத்தண்ணீர்கூட குடிக்காமல் பதினோருமணி வரைக்கும் அலைந்தும்கூட சேர்ப்பது சிரமமாய் இருந்தது. இக்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என்று அதிகாரிகளிடத்தில் அலைகிற மணியமாகவே இருந்தது. உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஏழுமலை என்கிற ஏஜென்ட் பக்கத்தில் வந்துமொதல்ல இது போலீஸ் கேஸாவணும், அங்கேர்ந்துதா இங்க வரணும் எல்லாத்தயும் ஒன் அவர்ல நா ஏற்பாடு பண்றன். ஐந்நூறு ரூபாய் குடுத்துரு சார்என்றான். ராமுவுக்கு எதுவும் புரியவில்லை. நடுவில் தனுசு அண்ணன் வண்டிக்குள் உட்காரவே மறுத்து எம்பிஎம்பி ஓட சண்டை போட்டான். ஒரு தருணத்தில் தெருவில் போகிற பலாப்பழத்தை வாங்கித் தரவில்லை என்று பளார் என்று கன்னத்தில் மாறிமாறி நாலைந்து அறை கொடுத்தான். பதட்டத்திலும் எரிச்சலிலும் ஒன்றும் விளங்காமல் குழம்பினான் ராமு. சுந்தரம் சித்தப்பாவே முன் வந்துபரவால்ல சார். முடிங்கஎன்றார். ராமுவைப் பார்த்து பணத்தையும் தரச் சொன்னார்.

பணம் கொடுத்த பிறகு எல்லாம் ஒழுங்காய் நடந்தது. தெருவில் தனுசு அண்ணன் பைத்தியமாக ஓடிஓடி விழுந்ததாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்ததாகவும், பிடித்துக் காவலில் வைத்ததாகவும், பரிசோதனைக்கும் அனுமதிக்கும் ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதாகவும் போலீஸ் ஸ்டேஷனிலேயே சான்றிதழ் வாங்கிக் கொண்டு வந்தான். தனுசு அண்ணனைத் தனியே கொஞ்சம் தொலைவுக்கு அழைத்துச் சென்று போலீஸ் வேனிலேயே அழைத்து வருகிறமாதிரி ஆஸ்பத்திரிக்குள் கொண்டு போனான். வாசலிலேயே  கையைப் பிசைந்துகொண்டு நிற்க, அரைமணி நேரம் கழித்து ஏழுமலை வந்தான். ‘குறிச்சிக்க சார், பேஷன்ட் நெம்பர் நானூத்திமூனு. சி ப்ளாக். ஆளு ரொம்ப அடம் சார். உயிர வாங்ட்டாரு. வாரத்துல ஒரு நாளு ஞாயித்துக்கெழம வந்து பாத்துக்க சார். பேசனத்துக்கு கொஞ்சம் மேல போட்டுக் குடு சார். ரொம்ப கஷ்டம்என்றான், ‘ரொம்ப பேஜாராய்டுச்சி சார்என்று திரும்பத்திரும்பச் சொன்னான். அறுநூறு ரூபாக்கு கணக்கு செய்து கொடுத்துவிட்டு ராமு அசோக மரங்களும் சில மாமரங்களும் அடர்ந்த இடத்துக்கு நடுவில் இருந்த அந்த ஆஸ்பத்திரியைத் திரும்பத்திரும்பப் பார்த்தபடி மனம் கனக்க வண்டிக்குள் உட்கார்ந்தான். செங்கல்பட்டு வந்ததும் டிரைவர், சித்தப்பா, மாமா எல்லாரும் சாப்பிடப் போய்விட்டார்கள். ராமுவுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. உலகில் பிரியப்படுகிற மாதிரி விஷயங்களே இல்லை என்கிற மாதிரியும் எல்லாமே வெறுப்பும் சலிப்புமான விஷயங்களே என்கிற மாதிரியும் நினைத்துக் கொண்டான். மனிதப் பிறவியே மோசமானது என்று எரிச்சலாக நினைத்தான். இதற்குள் சாப்பிட்டு முடித்தவர்கள் மீண்டும் வர பயணம் தொடர்ந்தது. ஊர் வந்து டாக்சிக்கு கணக்குத் தீர்க்கிற வரை எதுவுமே பேசாமல் மௌனமாய் வந்தான் ராமு.

சுற்றி கவியத் தொடங்கியிருந்த இருளில் தனிமையையும், துயரத்தையும் இன்னும் அதிகமாய் உணர்ந்தான். பயம் வேறு அடர்த்தியாய்க் கவ்வியது. எதையும் யோசிக்கவோ தீர்மானிக்கவோ செய்ய இயலாதபடி அழுத்திக்கொண்டிருந்தது பயம்.

வீட்டு வாசலிலேயே தூணில் சாய்ந்தபடி அம்மா உட்கார்ந்திருந்தாள். ராமுவைப் பார்த்ததும் அவசரமாய் நிமிர்ந்தாள்.

இன்னாச்சிடா ராமு?’

சேத்தாச்சிம்மா

எப்படா சரியாவும்னு கேட்டியா?’

சரியாவும் போது தகவல் வரும்மா. அதுவரிக்கும் வாரத்துக்கு ஒரு தரம் போய்ப் பாக்கலாம்மாம்

சீக்கிரம் சரியாய்டுமல்ல?’

ரொம்ப முத்திப் போய்டுச்சாம். திட்டனாங்க. கொஞ்சம் முன்ன பின்ன சொஸ்தமாவும்.’

உடம்பெல்லாம் வெலவெலத்துக் கொண்டு வர ராமுவும் திண்ணையிலேயே உட்கார்ந்தான். சுவரில் சாய்ந்து காலை நீட்டிக்  கூரையிலேயே பார்வையைப் பதித்துக் கிடந்தவனுக்கு இரண்டு மூனு நிஷத்துக்கெல்லாம் வயிறு புரட்டிக்கொண்டு வர பெருஞ்சத்தத்துடன் வாந்தி எடுக்கத் தொடங்கினான்.

**

(தொடரும்...)