ப்ளாக் நெம்பர் சொல்லி பேஷன்ட் பெயர் சரிபார்த்து அறை அடையாளம் தெரிந்து கொண்டு நடந்தவனுக்கு எதிரில் குறுக்கும் நெடுக்குமாய் அலையும் பைத்தியங்களைப் பார்க்க மேலும்மேலும் பயத்தில் மனம் நடுங்கியது ராமுவுக்கு. சட்டென்று திரும்பிப் போய்விடலாமா என்று தோன்றியது. மனசின் நடுக்கத்தைச் சமாளிக்க எங்கேயும் பார்க்காமல் தரையையே பார்த்து நடந்தான். குறிப்பிட்ட அடையாளமிட்ட அறையில் தனுசு அண்ணன் மூலையில் போர்வைச் சுருணைக்குள் கிடந்தான். ராமுவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தான்.
தனுசு அண்ணனைப் பார்க்கப்பார்க்க நெஞ்சு பதறியது ராமுவுக்கு. ஒரு வார இடைவெளி தனுசு அண்ணனை அடையாளமே தெரியாமல் அடித்து வளைத்து ஓடுக்கி இருந்தது. தனுசு அண்ணனுக்கு நல்ல உடல் கட்டு. பாளம் பாளவமாய் வெடித்த மார்பு. முதுகுப் பட்டைகள் இரண்டும் ஆசாரி செதுக்கித் தட்டிய மாதிரி வடிவமைப்போடு இருக்கும். எல்லாவற்றையும் இழந்து துவண்டு போய் வதங்கிய பூவாய் கிடந்தான் தனுசு அண்ணன். புசுபுசுவென்ற தலைமயிரெல்லாம் கழிக்கப்பட்டு மொட்டையாய் இருந்தது தலை. ராமுவைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டவனாய்ச் சட்டென எழுந்து நின்றான்.
‘எதுக்குடா இங்க என்ன சேத்த?. இட்டும்போய்டு ராமு. இப்பவே போலாம்டா வாடா’
‘சரிண்ணே...’
‘டாக்டர்ட்ட சொல்லி இட்டும் போறியா...?’
‘சரிண்ணே’
‘நெஜம்மா...?’
‘நெஜம்மாண்ணே’
‘தெனம் நாலு ஊசிடா. தோ பார். கையெல்லாம் பொத்தலாயிடுது. அதுகூட பரவாயில்லை. கரண்ட்ல ஷாக் குடுக்குகறாங்க ராமு. தலையில ஒயர வச்சி குடுக்கறாங்கடா. தாங்க முடியல ராமு. இட்டும் போய்டுடா.....’
‘சரிண்ணே...’
பேசும்போதெல்லாம் தனுசு அண்ணன் ரொம்ப நல்ல மாதிரியாகவே தெரிந்தான். ஒருவார வைத்தியத்திலேயே குணமானது போல பேசினான். ஊரிலிருந்து தனுசு அண்ணனுக்காக அம்மா கெடுத்தனுப்பியிருந்த வஞ்சிரம் மீன் குழம்பு சோற்றையும் வறுத்த மீன் துண்டுகளையும் தந்தான் ராமு. தனுசு அண்ணன் சட்டென்று ஓடி பக்கத்துப் ப்ளாக்கிலிருந்து நாலைந்து பேரை அழைத்துக் கொண்டு வந்தான். தூக்குவாளியில் இருந்த சோற்றை எல்லாரும் அள்ளி அள்ளிச் சாப்பிட்டார்கள். தனுசு அண்ணன் இரண்டு கவளமோ மூன்று கவளமோ சாப்பிடுவதற்குள் வாளிச்சோறு தீர்ந்து விட்டது. அடுத்த தரம் இன்னும் நிறைய கொண்டுவர வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் ராமு. சாப்பிட்டு முடித்த பக்கத்து ப்ளாக் காரன்கள் தனுசு அண்ணனைப் பார்த்து பீடி கேட்டார்கள். தனுசு அண்ணன் ராமுவைப் பார்த்து பீடிகேட்டான்.
‘பீடி குடுடா ராமு’
‘இல்லண்ணே’
‘ஏன்டா இல்ல?’
‘வாங்கியாரலண்ணே’
‘அதான் எதுக்குடா வாங்கியாரல?’
தெரியாதுண்ணே’
‘தெரியாதவன்லாம் எதுக்குடா இங்க வர?’
தனுசு அண்ணனுக்கு சட்டென்று ஆத்திரம் வந்தது. தூக்கு வாளியையும் மூடியையும் தூக்கி வாசலில் அடித்தான். சட்டென்று மூர்க்கமானான். ஆத்திரப்பட்டான். சிதறியுருண்ட பாத்திரங்களை எடுத்த ராமுவின் தலைமுடியைக் கொத்தாய்ப் பிடித்துத் திருப்பினான். மறுபடியும் மிரட்டினான்.
‘சொல்லுடா, ஏன்டா பீடி வாங்கியாரல?’
‘அடுத்த தரம் வாங்கியாரண்ணே’
‘இப்ப வேணும்டா எனக்கு’
‘சரி வாங்கியாரண்ணே’
‘இப்ப’
‘இப்பவே வாங்கியாரண்ணே’
‘ஒன்னு ரெண்டு பத்து வரிக்கும் எண்ணுவன். அதுக்குள்ள பீடி வரல. தலய ஒடைச்சி கைல குடுத்துருவன் படவா ராஸ்கல்.
‘சரிண்ணே’
‘சரி சரின்னுட்டு ஏமாத்தன, இப்பிடி விழும் ஒதை’
பிடியைத் தளர்த்தி ராமுவின் கன்னத்தில் சட்டென்று அறைந்தான் தனுசு அண்ணன். ஆஸ்பத்திரி மதிலைத் தாண்டி பெஞ்சில் தளர்ந்து உட்கார்ந்தான் ராமு. இரவுப் பயணத்தின் ஆயாசமும் அடி வாங்கின அனுபவமும் மிகவும் கலக்கின.
‘சௌக்கியமா சார்?’
முன்னால் வந்து சல்யூட் அடித்தவனைப் பார்த்து முதலில் அதிர்ந்து, அடுத்த கணம் ஏழுமலை என்று அடையாளம் கண்டு சிரித்தான்.
‘நீங்க நல்லா இருக்கிங்களா?’
‘சார் புண்ணியத்துல நல்லா இருக்கன்’
‘என் புண்ணியம் இதுல என்னாங்க இருக்குது?’
‘இருக்குது சார். மனுஷனா பொறந்தவனுக்கு அடுத்த மனுஷன் புண்ணியம் ரொம்ப அவசியம் சார். அது கெடக்கட்டும். அண்ணாச்சிய பாக்க வந்திங்களா’
‘ஆமாங்க’
‘எப்பிடி இருக்காரு?’
‘சுமார்தா’
‘நாளாவும் சார். எப்படியும் எங்கணக்குக்கு இன்னம் ரெண்டு மாசமாச்சிம் ஆவும் சார்’
‘இப்ப எனக்கு ஒரு உதவி செய்யணுமே நீங்க’
‘இன்னாது சார், கூச்சப்படாம சொல்லு’
‘அண்ணனுக்கு பீடி ஓணுமாம். உள்ள தர மாட்டாங்களாமே, ஏன்டா வாங்கியாரலன்னு அடிச்சிட்டான்’
‘ஐயோ பாவமே. உள்ளார தர மாட்டாங்க சார். யாராச்சிம் நம்மள மாதிரி ஆளு குடுத்தாத்தா உண்டு.
‘அதான் ஒங்ககிட்ட சொல்றன். தெனம் அவனுக்கு பீடிக்கு ஏற்பாடு பண்ணணும்.’
‘நா செய்றன், டோன்ட் ஒர்ரி சார்’
‘செலவுக்கு இத வச்சிக்கிங்க. அடுத்தவாரம் வரும்போது இன்னம் தரன்’
‘வேணாம் சார். பணத்துக்கு அலையறவன்ல்ல சார் நான். தவிச்ச வாய்க்கு தண்ணி மாதிரி பீடி குடுத்தாலும் புண்ணியம் சார். நாளக்கி எனக்கும் இந்த நெலம வரலாம். யாரு சார் கண்டது. யாரு தலைல இன்னா எழுதி இருக்குதோ? பணத்துக்காகத்தான் எல்லாத்தயும் செய்றான்னு நெனைக்காத சார். இன்னாடா அன்னிக்கு லட்டு மாதிரி அறுநூறு ரூபா வாங்கிட்டு இப்ப இந்த பேச்சு பேசறான்னு பாக்கறியா. எல்லாமும் எனக்கில்ல சார், போலீஸ் ஸ்டேஷன்ல எரநூறு ஆஸ்பத்திரில எரநூறு போவ எனக்கு நூறு நிக்கும். வழக்கமா ஐந்நூறுதா என் கணக்கு. எனக்கு மூணு பொண்ணு ரெண்டு புள்ள. எல்லார்க்கும் இதான் சாப்பாடு. நீ வந்த அன்னிக்கு பெரிய பொண்ணு வயசுக்கு வந்திருச்சி சார். தாவணி அது இதுன்னு நெறய வாங்கணும்னா ஊட்ல. அதான் நூறு ரூபா ஜாஸ்தி கேட்டன் சார்’
‘ஒங்களுக்கு வீண் சிரமம் வேணாமேன்னுதா பணம் தரேன்னு சொன்னன்’
‘பீடி, வெத்தல, பாக்கு, போயல இதெல்லாம் எதுவும் சிரமமே இல்ல சார். நீ ஜாக்கரதா போய்ட்டு வா சார்
‘அண்ணன்...’
‘அண்ணன் பொறுப்பு என் பொறுப்பு. நீ போ சார்’
**
காசி அண்ணன் வீட்டுக்கு வந்து நின்ற போது அம்மா முகம் கொடுத்துப் பேசக் கூட மனசில்லாமல் தோட்டத்துப் பக்கம் போய் விட்டாள். சிவகாமி மாத்திரம் அண்ணனைப் பிடித்து அழுதது. ஏரிக்குப் போய் திரும்பிய ராமு காசி அண்ணனைப் பார்த்ததும் ‘வாண்ணே எப்ப வந்த?’ என்று வறட்சியான சிரிப்பை உதிர்த்துக் கேட்டபடி உட்கார்ந்தான்.
‘இப்பதான்டா...’
‘ம்’
‘லீவ் கெடைக்கலன்னு எழுதி இருந்த. இப்பதான் கெடைசிதா’
‘கௌவர்மென்ட் ஆபீஸபத்தி தெரியாம நீங்கள்ளாம் எம்மேல கோச்சிக்கறிங்க. எங்க பேங்க்ல இருக்கறதே நாலு பேருதான்.
ஒருத்தன்தா ஒருசமயத்துல லீவ் எடுக்கலாம். மீதி மூனுபேரு இருந்தே ஆவணும், ஏற்கனவே ஒர்த்தன் கை ஒடைஞ்சி மெடிக்கல் லீவ்ல இருக்கான். அவன் வந்து சேரறவரிக்கும் அடுத்த ஆளுக்கு லீவ் கெடைக்காது. அது புரியாம பேசறிங்க நீங்கள்லாம்.’
‘போனா போவுது உடுண்ணே’
‘வாசல்லே ஒக்காந்த அம்மா என்ன பார்த்துட்டு வாடான்னு ஒரு வார்த்த கூட கூப்புடாம அவுங்க பாட்டுக்கு எழுந்து போய்ட்டாங்க தெரிமா? என்ன வேத்தாளாதான நெனைக்கறாங்க...’
‘சரி உடுண்ணே. போய் குளிச்சிட்டு நாஷ்தா சாப்புடு போ’.
மதியம் வரைக்கும் ஒன்றும் தெரியவில்லை. ராமுவும் மண்டிக்கு கேஷூவல் லேபர் வேலைக்குப் போய்விட்டான். மதியச் சாப்பாட்டுக்குத் திரும்பியபோது அண்ணனைக் காணவில்லை.
‘எங்கம்மா அண்ணன்’
‘கீரப்பாளயம் போய்ட்டான்டா...’
‘அதுக்குள்ளாறவா’
‘அதுக்குள்ளன்னா இன்னா அர்த்தம். நேரா அங்க போவாம இங்கவந்து தலய காட்டிட்டு போவறானே அத புண்ணியம்னு நெனச்சிக்க.’
‘என்னம்மா சொல்ற?’
‘சொன்னன் சொரைக்காய்க்கு உப்பில்லன்னு போடா’...
‘எதுக்குமா சலிச்சிக்கற?’
‘என் தலயெழுத்துடா, தலையெழுத்து. புள்ளைக்கு சரியில்ல ஒத்தாசைக்கு வாடான்னா லீவ் இல்லன்னு இவன் சொன்னான். இவன் பொண்டாட்டி இன்னாடான்னா அடுத்த நாளே ஊர்க்குப் போய்ட்டா. நீயும் நானும்தா லோள்பட்டு லொங்கழிஞ்சம், அங்கேர்ந்து அவ இன்னா எழுதனாளோ ஏது எழுதனாளோ இப்ப அந்த ஊர்லயே தனிக்குடித்தனம் பண்ணப்போறானாம். பொண்டாட்டிய இட்டும் போவலாம்னு வந்தானாம். எப்டி இருக்குது கத?
‘அண்ணனப் பாக்க வரலியாமா?’
‘அதுக்குத்தா நீயும் நானும் இருக்கறமே, தெண்டத் தீனிங்க.’
‘ஒரு வாரம் இருந்து தனுசு அண்ணனப் போய் பாத்தா மனசுக்கு எவ்ளோ தெம்பா இருக்கும்’
‘அதிகம் லீவ் இல்ல. நா உடனே கௌம்பணும். அண்ணனப் பத்திரமா பாத்துக்குங்கன்னு ஆயிரம் ரூபா குடுக்க வந்தான். நா கையால்கூட தொடமாட்டன்னுட்டன். தங்கச்சி கிட்டதா குடுத்திருக்கான். நீ வாங்கனாலும் வாங்கிக்க. இல்ல திருப்பி அனுப்பனாலும் அனுப்பு. ஒன் இஷ்டம்...’
வேதனையாய் இருந்தது ராமுவுக்கு, உள்ளே வலித்தது. சலித்து உட்கார்ந்தான். நினைக்கநினைக்கத் துயரமாய் இருந்தது. தனுசு அண்ணன் பதினைந்து பதினாறு வருஷம் எடுத்து வளர்ந்த பிள்ளைகள் காசியும் ராமுவும் சிவகாமியும். தாம்பத்ய வாழ்வும் குழந்தையும் பறிபோன பிறகு தன் பிரியத்தையெல்லாம் குடும்பத்தின் மேல் பொழிந்தவன் தனுசு அண்ணன். ஒரு அப்பாவின் ஸ்தானத்தில் இருந்து எல்லாரையும் ஆளாக்கியவன். இடிமேல் இடியாக துயரங்கள் கவிந்தபோதெல்லாம் தாங்கிக்கொண்டு குடும்பத்துக்காக நடைப் பிணமாக தன் இருப்பை நிலை நிறுத்திக்கொண்டவன் தனுசு அண்ணன். இரண்டாம் கல்யாணத்துக்கு நிறைய பேர் வற்புறுத்தியும் ஒத்துக்கொள்ளதவன். ஒரு வைராக்கியமாகவே இருந்தான். ஆரம்பத்தில் கூத்து வாத்தியார் மகள் மல்லிகாவை அண்ணன் ஆசைப்படுகிற மாதிரி தெரிந்தது. மல்லிகாவும் அண்ணனும் ஏரிக்கரையில் வேலங்காட்டில் வண்டித்தடத்தில் தனியே சந்தித்துப் பேசுகிறார்கள் எனத் தகவல் வந்தது. அப்பவும் எப்படியோ நல்லா இருந்தா சரிதான் என்றே எல்லாரும் நினைத்தார்கள். ஆனாலும் கடைசியில் அந்தப் பெண் தனது சொந்தத்திலேயே கோர்க்காட்டில் யாரையோ திருமணம் செய்துகொண்டு போய்விட்டது. அண்ணனுக்கு விழுந்த அடுத்த அடி இது. இறுகிய வைராக்கியம் இன்னும் இன்னும் இறுகியது. அப்புறம் பண்ருட்டிப் பக்கம் ஏதோ ஒரு பெண்ணுடன் தொடர்பு வைந்திருப்பதாய் அரசல் புரசலாய்த் தகவல் வந்தது. ஆறு மாசமோ என்னமோதான் அது கூட. திடும் திடுமென்று இரவில் ஆள் தங்கமாட்டான். கண்டிக்கக் கூட மனசில்லை அம்மாவுக்கு. அதட்டிக்கொண்டு வந்த சுற்றத்தார்களுக்கு “இருந்துட்டு போவட்டும். பூவும் காயுமா இருக்க வேண்டிய வயசுல எம்புள்ள மொட்டையா நிக்குது. அவன் சந்தோஷத்துக்கு எது வேணும்னாலும்” செஞ்சிக்கட்டும். யாரும் கேக்க வேணாம்” என்று சொல்லிவிட்டாள். அப்புறம் அண்ணன் எல்லாவற்றிலிருந்தும் விலகி பெண்கள் விவகாரத்துக்கே ஒரு முற்றுப்புள்ளி வைத்த மாதிரி நடந்துகொண்டான். அப்பா இல்லாத பிள்ளைகள் மேல் அன்பைப்
பொழிந்தான். தனுசு அண்ணனின் பிரியமான மனக்கூட்டுக்குள் கீச்கீச்சென்று கத்தி விளையாடுகிற குஞ்சுகளாய் இருந்தார்கள் காசியும் ராமுவும் சிவகாமியும்.
**
இரண்டு டஜன் வாழைப்பழம், ஒரு டஜன் ஆரஞ்சுப்பழம் ஒரு டஜன் சாத்துக்குடி, ஒரு கட்டு வெற்றிலை பாக்கு பீடிக்கட்டு என்று மண்டியில் கிட்டிய கூலிக்கு பை நிறைய வாங்கிக்கொண்டு வந்தான் ராமு. திண்ணையில் பையை வைக்கும்போதே அம்மாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
‘எதுக்குடா இவ்ளோத்தம்? என்னமோ பொண்ணுக்கு சீர் எடுத்தும் போவறமாதிரி’
‘இவ்வளவும் வேணும்மா’
‘ஆஸ்பத்திரில இவ்ளோ எடுத்தும் போவ உடுவாங்களா?’
‘சொல்லிட்டு போவ வேண்டிதுதா’
‘ஒத்த ஆளுக்கு இவ்ளோத்தம் எதுக்குடா?’
‘ஒனக்குத் தெரியாதும்மா அண்ணன் ஒரு பொருள சாப்படணும்னா அண்ணன சுத்தி நிக்கறவங்க பத்து பேராவது சாப்படணும்,
அதற்குப் பிறகு அம்மா எதுவும் பேசவில்லை. இறவாணத்தில் பார்வை குத்திட சுவரில் சாய்ந்து கொண்டாள். பொலபொலவென்று கண்ணில் நீர் வழிந்தது.
‘தனுசு அபூர்வமான பொறப்புடா, அவன மாதிரி மனசு யாருக்கும் வராது. சின்னப்புள்ளையலேந்தே இப்பிடித்தான். தனியாவே சாப்புடமாட்டான். அள்ளிஅள்ளி எல்லோர்க்கும் வழங்கிட்டுத்தான் சாப்டுவான். தனக்கு மிஞசித்தான் தானமும் தர்மமும்னு அவன்கிட்ட சொல்லிப் பாரு. உழுந்து உழுந்து சிரிப்பான். துன்னுகினே இருந்தா எந்த காலத்துல மிஞ்சி எந்த காலத்துல தர்மம் செய்யறதுன்னு கிண்டல் பண்ணுவான். அப்பிடி ஒரு மனசு அவனுக்கு. அந்த மனசுக்கு இப்பிடி ஒரு நெலம பாரு. அதான்டா அநியாயம்’
நடுக்கமான குரலில் கேவல்களுக்கு இடையில் சொல்லிக் கொண்டே புடவை முந்தானையால் வாயைப் பொத்திக் கொள்ள ராமு கிணற்றடிக்கு குளிக்கப் போனான். சோப்பு போட்டு தேய்த்துக்கொண்டிருக்கும் போது அம்மா அங்கே வந்து நின்றாள்.
‘முதுவு தேய்க்கட்டாடா?’
‘வேணாம்மா’
‘நொத நொதன்னு இருக்குடா அழுக்கு. சீக்காபோட்டு தேச்சா போய்டும்டா. காட்டு’
‘வேணாம் உடும்மா’
கொஞ்ச நேரம் மௌனமாய் அம்மா அவரைக் கொடியை இழுத்து இழுத்து தளர்த்திக்கொண்டிருந்தாள்.
‘எத்தினி மணிக்குடா பஸ்?’
‘ராத்திரி ரெண்டரை மணிக்கும்மா’
‘காலைல போய் சேந்துருமா?’
‘ஏழு மணிக்கெல்லாம் போய்டும்’
‘ரெண்டரைமணி பஸ்க்கு இப்பவே கௌம்பணுமா?’
‘ரெண்டுமணிக்கு கூடத்தா கௌம்பலாம், ஆனா அந்த நேரத்துல இங்கேர்ந்து டவுனுக்குப் போவ பஸ் இல்லயே. அதுக்குத்தா சாப்ட்டு கீப்ட்டு ஒம்போது ஒம்போதரைக்கு கௌம்பனா டவுனுக்கு போய் ரெண்டாவது ஆட்டம் சினிமா ஏதாவது பாத்துட்டு பஸ் ஸ்டான்ட் போறதுக்கும் வண்டி வர்றதுக்கும் சரியா இருக்கும்.’
‘நானும் வரட்டாடா தனுசுவ பாக்கறதுக்கு?’
‘நீயா?’
‘புள்ளய பாக்கணும்ணு ஆசையா இருக்குடா. அஞ்சாறு வாரம் ஆய்டுச்சே. அவனும்தா இன்னா நெனைப்பான். அம்மா வந்து பாத்தாளான்னு நெனைக்க மாட்டானா...?’
‘அதுக்கில்லம்மா. அந்த குளுர்ல ராத்திரில பஸ்ல ஒக்காந்துக்னு வருவியான்னு யோசிக்கறன்’
‘சமாளிச்சிக்கலாம்டா’
‘சரி கௌம்பு’
வயசான அம்மாவின் நெஞ்சு படுகிற வேதனையையும் வார்த்தைகளில் வெளிப்படுத்தாமல் அடக்கி வைத்திருக்கற துக்கத்தையும் சுலபமாய்ப் புரிந்துகொள்ளமுடிந்தது, ராமுவால். அம்மாவின் மீது இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு அளவு கடந்த பாசமும் இரக்கமும் சுரந்தது.
**
கடுமையான காய்ச்சல் வந்து ராமுவைக் கிடத்தி விட்டது. கண்ணைக் கூடத்திறந்து பார்க்க முடியாமல் கிடந்தான். நெருப்பை வைத்துக் கட்டிய மாதிரி ஒரே எரிச்சல். தொடையிலும் கையிலுமாய் ஏழு நாளைக்கு பதினாலு ஊசி போட்டார் டாக்டர். அதற்குப் பிறகு தான் காய்ச்சல் இறங்கத் தொடங்கியது. துடைப்பக்குச்சி மாதிரி இளைத்துப் போனது உடம்பு. பத்துப் பன்னிரண்டு நாள்களுக்குப் பிறகு காய்ச்சல் நீங்கி எழுந்து நடமாடத் தொடங்கியபோது ராமுவை அடையாளமே தெரியவில்லை. வெளுத்துப்போய் கண்ணெல்லாம் உள்வாங்கி முகவாய் எலும்பு துருத்திக் கொண்டிருந்தது. தோள்பட்டை எலும்புக் குழியில் இரண்டு அகல் எண்ணெய் பிடிக்கிறமாதிரி குழிந்துவிட்டது. அதிகமாய் நடக்கவும் முடியவில்லை. தோட்டத்திலிருந்து வீட்டுக்கும் வீட்டிலிருந்து தோட்டத்துக்கும் நடப்பதற்கே படாதபாடாய் இருந்தது. மூன்று வேளையும் ஆட்டுக்கால் சூப்பு வைத்துத் தந்தாள் அம்மா. மார்கண்டமும் ஈரலும் வாங்கி வறுத்துத் தந்தாள்.
இத்தனைக்கும் பிறகு தான் கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி நடமாட முடிந்தது. பழையபடி வேலைக்குப் போகவும் முடிந்தது. இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளாக மெட்ராஸ் போக முடியாததிலும் தனுசு அண்ணனைப் பார்க்க முடியாததிலும் மனசுக்கு மகவும் சங்கடமாய் உணர்ந்தான் ராமு. அடுத்த ஞாயிறாவது தவறாமல் போக வேண்டும் என்றிருந்த சமயத்தில் அதே தினத்தில் திருபுவனையில் இருந்து ஏதோ ஒரு சொந்தத்தின் மூலம் சிவகாமியைப் பெண் பார்க்க வருவதாய்த் தகவல் வந்தது. வீட்டுக்குப் பெரியபிள்ளை ஆஸ்பத்திரியில் இருக்கிற சந்தர்ப்பத்தில் இதெல்லாம் வேண்டாம் என்று அம்மா எவ்வளவோ ஆட்சேபணை செய்து பார்த்தாள். தகவல் கொண்டு வந்த சொந்தக்காரர் ரொம்ப பிடிவாதமாய் ‘வர்றன்னு சொல்லிட்டாங்க. நாம எதுக்குத் தடுக்கணும்-? கல்யாணமா பேசி முடிவு பண்ணப் போறோம்? சும்மா பார்க்கற சம்பரதாயம்தான?’ என்று என்னென்னமோ சொல்லிக் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பார்த்தார். சித்தப்பா பெரியப்பா வீட்டுப் பெண்களும் விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்து அம்மாவைக் கட்டாயப்படுத்தி ஒத்துக்கொள்ள வைத்தனர். அம்மா ராமுவிடம் ஆஸ்பத்திரிக்குப் போவதை அடுத்த வாரத்துக்கு ஒத்திப் போடச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்தினாள். ‘வீட்டு ஆம்பளையாக அவன் ஒருத்தனாவது இருக்கவேண்டும்’ என்று சொன்னாள். வேறு வழி இல்லாமல் ராமு நிற்க வேண்டியதாய்ப் போனது.
பதினோரு மணிக்கு என்று சொன்ன ஆள்கள் சாயங்காலம் நாலே கால் மணிக்குத்தான் வந்தார்கள். பலகாரம் சுட்டு வைத்திருந்தாள்
அம்மா. வந்தவர்கள் சாப்பிட்டு காப்பி குடித்தார்கள். சிவகாமி வந்து கும்பிட எல்லாரும் திருப்தியாய்ப் பார்த்தார்கள். வெள்ளை மீசையுடன் இருந்த பெரியவர் ஒருவர் திடுமெனக் கேட்டார்.
‘வழியில ஒரு விஷயம் கேள்விப்பட்டம், நெஜம்தானா?’
‘எதுங்க?’
‘பொண்ணோட அண்ணணுக்கு காயலான்னு...’
‘வாஸ்தவம் தாங்க’
‘மூள கொழம்பிப் போச்சாமே?’
‘மூட்ட ஒன்னு தலைல உழுந்திருச்சி அதுலேர்ந்து இப்டியாயிடுச்சு
‘அம்மா வழில அப்பா வழில யாருக்காச்சிம் இப்பிடி இருந்திச்சிங்களா...?’
‘சீச்சீ, அதெல்லாம் இல்லிங்க
‘எதுக்கு கேக்கறன்னா பரம்பரயா சில பேருக்கு வரும். அதனால கேக்கறன்’
‘அப்டிலாம் இல்லங்க’
‘எதுவுமே கேட்டுக்காம தெரிஞ்சிக்காம பொண்ணு எடுத்துட்டு நாளக்கி ஏதாச்சிம் எக்கச்சக்கமா ஆயி நாங்க கஷ்டப்படக் கூடாது பாருங்க, அதுக்காகத்தா கேக்கறன். தப்பா எடுத்துக்காதிங்க’
ராமுவால் சும்மா இருக்க முடியவில்லை. எரிச்சல் வந்தது. வாய் துடித்தது. சட்டென்று கேட்டான்.
‘கல்யாணத்தக்கப்பறம் ஒங்க புள்ளைக்கு அந்த மாதிரி ஆய்டுச்சின்னா என்ன செய்விங்க...?’
வந்தவர்கள் இதை எதிர்பார்க்காத மாதிரி அதிர்ச்சிக்கு ஆளானார்கள். சித்தப்பா ராமுவைப் பார்த்து அதட்டி தோட்டத்துப் பக்கம் அழைத்துப் போனார். தோட்டத்துப் பக்கம் போனவன் அங்கேயே மாஞ்செடியை, அவரைக் கொடியை, தென்னை மரத்தை, கீற்றுக்கொட்டகையை, ஒதியங்கிளையை, ஜாண் அகலத்துக்கு ஓடும் சாக்கடையை மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். ஏனோ உள் எரிச்சல் அடங்காமல் கொதிக்கிறமாதிரி இருந்தது. தோட்டத்துப் படலைத் திறந்துகொண்டு கடைத்தெருப் பக்கம் போனான். அரைமணி நேரம் சுற்றிவிட்டு திரும்பவும் வீட்டுக்குத் திரும்பியபோது அம்மா மட்டும்தான் இருந்தாள்.
‘இன்னாச்சி அப்புறம்?’
‘அதுங்க கெடக்குதுங்க ஆக்கங் கெட்ட ஜனங்க, எரியற வவுத்த இன்னம் கொஞ்சம் எரிய வைக்கறதுக்கே வந்து சேந்துது பாருடா...’
வாசலில் நின்று தபால்காரர் பெயரைச் சொல்லி கூப்பிட்டதுமே வீட்டுக்குப் பின்னால் கீற்று பின்னிக்கொண்டிருந்த ராமு பதறி அடித்துக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தான். அம்மா கடிதத்தோடு நின்றிருந்தாள்.
‘இங்க குடு’
வாங்கிப் பிரித்து கிடுகிடு வென்று பார்வையை ஓட்டினான். அம்மா ஒன்றும் புரியாமல் திகில் விலகாது ‘யாருடா எழுதி இருக்கறாங்க? சத்தமா படியேன்டா’ என்று ராமுவைப் பார்த்துச் சொன்னாள். சிவகாமியும் ஓடிவந்து நின்றுகொண்டது.
‘சத்தமா படிடா’
கண்களில் நீர் பனிக்க கீழே உட்கார்ந்தான் ராமு. ராமுவின் மலர்ச்சியையும் பளபளக்கும் கண்ணையும் பார்த்து ‘இன்னா விஷயம்டா, இன்னா விஷயம்டா?’ என்று திருப்பித்திருப்பித் கேட்டாள்.
‘தனுசு அண்ணனுக்கு நல்லாய்டுச்சிம்மா. வந்து கூப்ட்டும் போவச் சொல்லி எழுதி இருக்குது’
அம்மாவுக்கும் சிவகாமிக்கும் தாங்க முடியாத சந்தோஷம். வார்த்தை வராமல் விம்மினாள் அம்மா. சுருக்கம் விழுந்த தாடைகள் ஆடின.
‘யாருடா எழுதி இருக்கறது?’
‘தனுசு அண்ணனே எழுதி இருக்குதும்மா’
‘தனுசுவா?’
‘ம்’
‘படி பாப்பம்’
குரலை சரிசெய்துகொண்டு படித்தான் ராமு.
‘அன்புள்ள அம்மா, காசி, ராமு, சிவகாமி, ராஜாத்தி எல்லோருக்கும் தனுசு செய்யும் வணக்கங்கள். நான் சௌக்கியமாய் இருக்கிறேன். நீங்கள் எல்லாரும் சௌக்கியமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இங்கே எனக்கு குணமாகிவிட்டது. ஆஸ்பத்திரியில் என்னை
நன்றாய்க் கவனித்துக் கொள்கிறார்கள். கூடவே ஏழுமலை என்கிற சிநேகிதரும் நல்லபடி பார்த்துக்கொள்கிறார். நீங்கள் ஏன் மூன்று வாரங்களாய் யாருமே வரவில்லை. என்மேல் ஏதேனும் மனவருத்தம் இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். இந்த கடிதம் கண்டதும் தந்தி போல் பாவித்து புறப்பட்டு வந்து என்னை அழைத்துப் போகவும், மீண்டும் எல்லோர்க்கும் என் பிரியமான வணக்கங்கள். இப்படிக்கு உங்கள் அண்ணன் தனுசு.’
அம்மா கொஞ்ச நேரம் பேசமால் இருந்தாள். சிவகாமி ‘இந்த தரம் நா வர்றண்ணே. எனக்கும் அங்க வரணும்னு ஆசையா இருக்குது’ என்று கொஞ்ச ஆரம்பித்தது. சிரித்தபடி மறுத்தான் ராமு. அப்பொழுதே புறப்படப் போவதாய்ச் சொல்லிக் கிளம்பினான். உள்ளே போய் தனுசு அண்ணனுக்குத் தேவையான துணியையெல்லாம் எடுத்து வைத்தான். அம்மா வந்து அங்கே நின்றாள்.
‘இன்னோர் தரம் படி ராமு’
‘எதுக்கும்மா?’
‘படி ராமு’
மறுதரமும் படித்தான் ராமு
‘தனுசுவுக்கு அப்ப நல்லாய்டுச்சாமா?’
ம்மா. தனுசு அண்ணன் கூடவே ஏழுமலைன்னு ஒருத்தர் அங்க இருக்காருன்னு சொல்வேனில்லயா, அவரும் அந்த லெட்டர்ல நாலு வரி எழுதி இருக்கறாரு’
‘இன்னான்னு எழுதி இருக்கறாரு?’
‘அதேதாம்மா. நல்லா போய்டுச்சி. ஒடனே பொறப்பட்டு வாங்கன்னு’
**
ராமுவைப் பார்த்ததும் தனுசு அண்ணன் அவனுடைய பரந்த தோள்களில் சாய்ந்து தனது முகத்தைப் புதைத்துக்கொண்டான். ராமு தனுசு அண்ணனைக் கட்டி அணைத்துத் தட்டிக்கொடுத்தான். தனுசு அண்ணன் லேசாக அழுதான். ராமுவும் அவனைப் பார்த்து விசும்பினான். இரண்டு பேருக்குமே அந்த நேரத்தில் வாய் விட்டு அழவேண்டும்போல இருந்தது. அழுகைக்குப் பிறகு தனுசு அண்ணன் நிதானமாய்க் கண்ணைத் துடைத்துக்கொண்டான். உதட்டு நுனியில், கண்களில், ஒட்டிக்கிடந்த கன்னத்தில் எல்லாம் இன்னும் மிச்ச
அழுகை ஒட்டிக் கிடந்தது. தனுசு அண்ணணின் கைகளை வாங்கி தன் கைகளுக்குள் அழுத்திக்கொண்டு சந்தோஷமாய் உணர்ந்தான் ராமு.
‘நல்லா இருக்கறியாண்ணே?’
சட்டென்று எதிர்பார்க்காத தருணத்தில் தனுசு அண்ணன் ராமுவின் கால்களில் சரிந்தான்.
பதறிய ராமு தனுசு அண்ணனை மறுபடியும் தூக்கி நிறுத்தினான், இதுவரை உணராத அளவுக்கு எல்லையற்ற அன்பு ஒருவர்மீது ஒருவர்க்கு சுரப்பதாய் உணர்ந்தார்கள்.
(கணையாழி - 1989)