Home

Monday, 20 June 2022

பெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள்

  

கன்னடத்தின் சிறந்த நவீன சிறுகதையாசிரியர்களுள் ஒருவர் லங்கேஷ். உளவியலின் துணையோடு லங்கேஷ் தன் சிறுகதைகளில் நவீனத்தன்மையைப் புகுத்தினார். எண்ணற்ற புறஉலக நடவடிக்கைகளுக்கும் ஆழ்மனம் மட்டுமே அறியவல்ல அகஎழுச்சிகளுக்கும் இடையிலான இணைப்பு என்பது ஒரு கால்வாய்ப்பாலம்போல வெளிப்படையானதல்ல, ஒற்றைத்தன்மை உடையதுமல்ல. பலநூறு புள்ளிகளிலிருந்து கிளம்பி ஒரு புள்ளியைநோக்கி நீளும் பலநூறு கோடுகள்போல ஏராளமான இணைப்புகளைக் கொண்டதாகும். ஒரே சமயத்தில் வரையறை செய்யமுடிகிற ஒன்றாகவும் துல்லியமான வரையறையை வழங்க இயலாமல் பல்வேறு சாத்தியப்பாடுகளைநோக்கித் தாவித்தாவிச் செல்கிற ஒன்றாகவும் அந்த இணைப்பு விசித்திரத் தன்மையோடு இருக்கிறது. இந்த விசித்திரத்தன்மை நவீன சிறுகதைகளுக்கு வழங்கக்கூடிய பார்வையை முழுஅளவில் பயன்படுத்திக் கொண்டவர் என்று லங்கேஷைச் சுட்டிக்காட்டமுடியும்.

இந்திய மண்ணில் உளவியலால் பகுத்துப் புரிந்துகொள்ள முடியாத இரண்டு பெரும்புதிர்கள் ஆண்பெண் உறவு மற்றும் சாதி அபிமானம். லங்கேஷின் சிறுகதைகளை ஏகதேசமாக இந்த இரண்டு பெரும்பிரிவுகளில் அடக்கிவிடலாம். இறையடியான் மொழிபெயர்த்திருக்கும் சிறுகதைகளில் இந்த இரண்டு பிரிவுகளையும் அடையாளப்படுத்துகிற கதைகள் அடங்கியுள்ளன.

ஆண்பெண் உறவை மையமாகக் கொண்ட கதைகளில் ஆண்களை விரட்டும் பெண்கள், பெண்களை விரட்டும் ஆண்கள், ஆண்களை வஞ்சிக்கும் பெண்கள், பெண்களை வஞ்சிக்கும் பெண்கள் என ஏராளமான சித்திரங்கள் அடங்கியிருக்கின்றன. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு சில சமயங்களில் நெகிழ்ச்சி மிகுந்ததாகவும் சில சமயங்களில் சிக்கல் மிகுந்ததாகவும் சித்தரிக்கப்படுகின்றன. இந்த விசித்திரம் ஏன் நிகழ்கிறது, இந்த உறவு ஏன் புரியாத உறவாக இருக்கிறது என்கிற வினா லங்கேஷின் ஒவ்வொரு படைப்பிலும் தொடர்ந்து இடம்பெறுகிறது.

தொகுப்பின் மிகச்சிறந்த “தொடுவானம்” சிறுகதையை முன்வைத்து இதை நாம் யோசித்துப் பார்க்கலாம். பூபாலனுடைய ஐம்பதாவது பிறந்தநாள் அன்று சிறுகதை தொடங்குகிறது. மூன்று பிள்ளைகளுக்குத் தந்தை அவர். மனைவியை இழந்தவர். மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் அவர். குறைந்த அளவில் கிடைக்கும் லாபம்மட்டுமே போதுமென்ற எண்ணத்துடன் வணிகத்தை நடத்திவருபவர். ஏதோ விழாவில் தற்செயலாக சந்திக்க நேர்ந்த பார்வதி என்னும் பெண்ணொருத்தியோடு அவர் நெருக்கமாகப் பழகத் தொடங்குகிறார். பார்வதியோடு இணைந்து திரையரங்குகளில் சீட்டுவாங்கி திரைப்படம் பார்ப்பதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. முப்பதையொட்டிய வயதுள்ள பார்வதி ஏற்கனவே திருமணமானவள். பூபாலனுக்கும் பார்வதிக்கும் இடையிலான உறவைப்பற்றித் தெரிந்திருந்தும் ஒன்றும் கேட்க முடியாத நிலையில் இருக்கிறான் அவள் கணவன். ஐம்பதாவது பிறந்தநாள் காணும் நண்பருக்காக அவர் விரும்பிப்படிக்கிற நூல்களையும் பரிசுப்பொருட்களையும் வாங்கிக்கொண்டு புத்தாடையோடு பூபாலனின் கடைக்கு வருகிறாள் பார்வதி. அதுதான் அவளாகவே கடைக்குத் தேடிவரும் முதல் வருகை. ஏற்கனவே வாழ்த்த வந்திருந்த நண்பரின் முன்னிலையில் பார்வதியின் வருகை முன்முறையாக அவருக்கு சற்றே குறுகுறுப்பைத் தருவதாக இருக்கிறது. உடனே அவள் அளிக்கும் பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார். அந்த அளவுக்கு ஏன் அவள் செலவு செய்தாள் என்று கடிந்துகொள்ளளவும் அவர் தயங்கவில்லை. சட்டென அவள் அன்றைய தினம் தனக்கும் பிறந்தநாள் என்று சொல்கிறாள். கோபம் மறைந்து சட்டென குற்ற உணர்வுக்கு ஆளாகும் பூபாலன் கலங்கிய குரலில் வாழ்த்து சொல்கிறார். வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு பார்வதி கடையிலிருந்து வெளியேறுகிறாள்.

முகமெல்லாம் மலர்ச்சியோடு ஆவலாக கடைக்குள் அவள் காலெடுத்துவைத்ததையும் பூபாலன் நடவடிக்கையால் வருத்தத்தில் மனமுடைந்து தவித்ததையும் நேருக்குநேர் பார்த்து நின்ற விஸ்வநாத் அவளுடைய மனஆறுதலுக்காக ஒரு வார்த்தையாவது சொல்லலாம் என்கிற எண்ணத்தோடு அவளோடு அவரும் விடைபெற்றுக்கொண்டு புறப்படுகிறார். பேச்சைத் தொடங்கும் முயற்சியாக அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்கிறார். அவள் மெதுவாகத் தலையசைத்தபடி அன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாள் அல்லவென்றும் பூபாலனுடைய கோபத்திலிருந்து தப்பிக்க அப்படி பொய் சொன்னதாகவும் சொல்லிவிட்டு அமைதியாக நடக்கிறாள்.

ஏராளமான திரைப்படங்களுக்கு பார்வதியின் துணையோடு சென்று மகிழ்ந்த ஒருவர் தன்னைத் தேடி வந்த பார்வதியின் அன்பை நிராகரிக்கத் தூண்டியது எது? புறக்கணிப்பின் வலியால் உள்ளூர மனம் நொந்திருந்தாலும் அவருடைய கோபத்திலிருந்து மீள்வதற்காக புனைந்துரைத்த ஒரு சின்னப் பொய்யால் பூபாலனைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்க பார்வதியைத் தூண்டிய உணர்வு எத்தகையது? நெருங்கிப் பழகியபிறகும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் ஏன் இப்படி நிராகரிக்கிறார்கள்? நெருக்கத்தின் அனுபவம் ஏன் நிராகரித்தலைத் தடுப்பதில்லை? இந்த உறவு ஏன் இப்படி புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது? காலம் காலமாக மானுடம் கேட்டுக்கேட்டுத் திகைத்து நிற்கிற ஒரு கேள்வியை லங்கேஷின் சிறுகதையும் கேட்டு நிற்கிறது.

‘தொடுவானம்’ என்னும் தலைப்பின் கவித்துவம் சிறுகதைக்கு கூடுதலான அழகை வழங்குகிறது என்றே சொல்லவேண்டும். தொடுவானம் என்பதுவே ஒருபோதும் தொடமுடியாத வானம்தான். அது தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதுபோல காட்சியளிப்பது ஒரு தோற்றம்தான். உண்மையில்லை. யாராலும் தொடமுடியாத ஒரு புள்ளி அது. அது ஒரு மானுடக்கற்பனை. வானம் ஒருபோதும் மண்ணைத் தொட்டு நிற்பதில்லை. நாம் விரும்பி நம்புகிற ஒரு மாயத் தோற்றம் என்று வேண்டுமானால் சொல்லலாம். எதார்த்தமான வாழ்வில் ஒரு பெண் ஆணின் மனத்தைத் தொட்டுவிட்டதாக எண்ணுகிறாள். அதேபோல ஓர் ஆணும் பெண்ணின் மனத்தைத் தொட்டுவிட்டதாக எண்ணுகிறான். அது வெறும் நம்பிக்கை சார்ந்த ஓர் உணர்வே தவிர உண்மையில்லை. ஒருவருடைய மனம் இன்னொருவருக்குத் தொடுவானமாகவே இருக்கிறது.

சாதி அபிமானத்தால் தத்தளிக்கும் முதியவர் ஒருவரைப்பற்றிய சித்திரத்தைக் கொண்ட சிறுகதை “உறுதி கொண்ட நெஞ்சினாய்”. படுக்கைவிரிப்புகள் வாங்க விரும்பிய தன்னுடைய வாடிக்கையாளருக்காக விதம்விதமான விரிப்புகள் அடங்கிய மூட்டையோடு அவருடைய வீட்டுக்கே அனுப்பப்பட்ட எழுபத்தைந்து வயதுள்ள முதியவரான ரங்கண்ணனின் கதை இப்படைப்பில் முன்வைக்கப்படுகிறது. வாடிக்கையாளர் மற்றும் ரங்கண்ணன் இருவரிடையே நிகழும் உரையாடல் வழியாகவே இப்படைப்பு முன்னகர்கிறது. பத்தாண்டு காலமாக தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்படும் வாடிக்கையாளர், உடல்நலக்குறைவு என்பதே என்னவென அறியாத ரங்கண்ணன் என இருவருமே வேறுவேறு விளிம்புகளில் நிற்பவர்கள். தன்னுடைய உறுதியான உடல்நிலைக்கு தொடர்ந்து களி சாப்பிடுவதுதான் காரணம் என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் ரங்கண்ணன். வாடிக்கையாளரையும் களி சாப்பிடுமாறு ஆலோசனை வழங்குகிறார். தன் தந்தையார், தாத்தா என தன் தலைமுறையினர் அனைவரும் உறுதியான உடல்நலம் கொண்டவர்கள் என்றும் அதற்குக் காரணம் களி உணவுதான் என்றும் எடுத்துரைக்கிறார். நூற்றாண்டு காலமாக மாறாத உணவுப்பழக்கமாக அது அவர்வழியாக தொடர்கிறது. உரையாடலில் அவர் தன்னுடைய குடும்பக்கதையையும் சொல்கிறார். பிள்ளைகள் பாகம் வாங்கிக் கொண்டு பிரிந்துபோய்விட்டார்கள். மருமகனால் விரட்டப்பட்ட மகளும் அவரும் தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். தன் சாதியில் பெண்ணுக்கு இரண்டாம் திருமணம் செய்வதில்லை என்பதால் மகளுக்கு மற்றொரு வாழ்க்கை அமைத்துத் தர இயலாதவராக இருக்கிறார். தன் மகளும் தாழ்ந்த சாதிக்கார இளைஞன் ஒருவனும் தன்னுடைய வீட்டிலேயே ஒருநாள் சேர்ந்திருந்ததைப் பார்த்த சங்கடத்தையும் சொல்கிறார். அவளைத் தண்டிக்க இயலாத தன் இயலாமையையும் பிரியத்தையும் சொல்கிறார்.

உடலுறுதி மிகுந்திருந்தாலும் மனம் தளர்ந்துபோன பெரியவரின் சித்திரத்தை நம்மை அசைத்துப் பார்க்கும்வகையில் தீட்டிக்காட்டுகிறார் லங்கேஷ். எல்லாவற்றுக்கும் களியே மருந்து என்னும் சித்தாந்தத்தால் உடல்நலத்தைக் காப்பாற்றத் தெரிந்த ரங்கண்ணன் மனத்துயரத்துக்கான மருந்து என்ன என்பது தெரியாததாக உள்ளார். எல்லாவற்றுக்கும் காரணம் தலையெழுத்து என்று முடிவெடுப்பவராகவும் உள்ளார். பெற்றெடுத்த பெண்ணின் மகிழ்ச்சியைக் காட்டிலும் முதியவருக்கு சாதி அபிமானம் பெரிதாகப் படுவது மிகப்பெரிய புதிர்.

ஆண்பெண் உறவு போலவே, இந்தியமண்ணில் சாதி அபிமானமும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு பெரும்புதிர். எல்லாச் சாதியினரிடையேயும் மாற்றுச் சாதியில் தனக்குப் பிடித்தமான இணையைத் தேடிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. சாதி என்னும் பேரமைப்பு அத்தகு நிகழ்ச்சிகளை தற்செயல்கள் என்றும் பிறழ்வுகள் என்றும் அடையாளமிட்டு சில காலம் தனித்துவைக்கிறது. பிறகு மெல்லமெல்ல தன் மையத்தைநோக்கி இழுத்துக்கொள்கிறது. சாதிக்கலப்பு என்பதை சாதிப் பேரமைப்பின் மையம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நிகழாதவரை அது அனுமதிக்கப்படாத ஒரு விதி. நிகழ்ந்தபிறகு, இணைத்துக்கொள்ளத்தக்க ஒரு விதிவிலக்கு. அவ்வளவுதான்.

லங்கேஷின் ஆளுமையைப் புரிந்துகொள்வதற்கும் அவருடைய மனத்தில் சதாகாலமும் விடைதேடி அலைந்துகொண்டிருக்கும் ஆண்பெண் உறவைப்பற்றிய கேள்வியின் ஆழத்தை அறிந்துகொள்வதற்கும் அடையாளமாக அவரே எழுதிய இரண்டு கதைச்சித்திரங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. “மூதாட்டியின் முப்பரிமாணங்கள்” என்னும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் “கிவிஜூவின் கதை” என்னும் சீனத்திரைப்படம் பற்றிய சித்திரமும் அதிசய நட்பு என்னும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் ஜெர்மானிய எழுத்தாளரான ஹெர்மன் சுடர்மன் என்பவருடைய சிறுகதைச் சித்திரமும் மிகவும் முக்கியமானவை.

கிவிஜூவின் கதையில் மூன்று முக்கியமான பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். ஊர்த்தலைவன், அவனிடம் உதைபடும் தொழிலாளி, அவனுடைய மனைவி கிவிஜூ. உதைத்த குற்றத்துக்காக பஞ்சாயத்துக்குச் சென்று முறையிடுகிறாள் கிவிஜூ. இரண்டு தரப்புகளையும் விசாரித்த பஞ்சாயத்தினர் ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதிக்கிறது. அபராதத்தொகையை வழங்கும்போது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கிறது. பணத்தை தரையில் விசிறியடிக்கிறான் ஊர்த்தலைவன். மன்னிப்பு கேட்வும் மறுக்கிறான். கர்ப்பிணிப்பெண்ணான கிவிஜூ அவமான உணர்ச்சியால் மனம் நொந்து அதே வழக்கை நகரத்துக்குக் கொண்டு செல்கிறாள். அங்கே ஊர்த்தலைவன் வென்று விடுகிறான். மனம் தளராத கிவிஜூ அதற்கும் பெரிய நீதிமன்றத்துக்குச் செல்கிறாள். விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இடையில் பிள்ளைப்பேற்று வலியால் துடிக்கிறாள் கிவிஜூ. கிராமத்து மருத்துவச்சியால் பிள்ளைப்பேற்றை வெற்றிகரமாக பார்க்க இயலவில்லை. மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய கட்டாயம். ஊர்த்தலைவனிடம் மட்டுமே வண்டி உள்ளது. தன்மீது வழக்குப்போட்டு நீதிமன்றம் வரை இழுத்தவளுக்கு உதவமுடியாது என மறுக்கிற ஊர்த்தலைவன் பிற்பாட மனமிரங்கி உதவுகிறான். பிள்ளை பிறக்கிறது. எல்லாரும் குழந்தையைப் பார்க்கச் செல்லும்போது அவனும் செல்கிறான். அவர்களிடையே உறவு சீராகிறது. உதைபட்ட கணவனும் அதை மறந்து தலைவனிடம் மறுபடியும் வேலை செய்கிறான். பழைய காயங்கள் ஆறிவிட, புதிய உறவு தழைக்கிறது. எதிர்பாராத விதமாக நீதிமன்றத் தீர்ப்போடு ஊரை நெருங்குகிறார்கள் காவலர்கள். தீர்ப்பு கிவிஜூவின் சார்பாக வந்திருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும் குற்றவாளியை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாலும் ஊர்த்தலைவனுக்கு சிறைத்தண்டனை விதிக்கிறது நீதிமன்றம். தம்பதியினரின் கெஞ்சுதல் காவலர்களை அசைப்பதில்லை. ஊர்த்தலைவன் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுவிடுகிறான். நீதிமன்றத்தால் உருவாக்கமுடியாத மனஇணைப்பை காலம் தன் சந்தர்ப்பங்களால் உருவாக்கி உறவைக் கட்டியெழுப்புகிறது. காலம் உருவாக்கிய ஒன்றை நீதிமன்றம் கலைத்துவிளையாடுகிறது. இந்த உறவும் வாழ்வும் ஏன் இப்படி புதிராக இருக்கிறது என்னும் வினா நம்மை அசைக்கிறது.

“அதிசய நட்பு” என்னும் சிறுகதையில் இடம்பெறுகிறவர்கள் இரண்டு முதிய நண்பர்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு கனப்பில் குளிர்காய்ந்தபடி பழைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கடந்த ஆண்டு இறந்துபோன தன் மனைவியை நினைவுகூர்கிறார் ஒருவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தன் மனம் பாவம் என எண்ணிச் சுமந்துவந்த ஒரு சம்பவத்தை நண்பரிடம் சொல்கிறார் மற்றவர். அது மறைந்த மேரிக்கும் அவருக்கும் இருந்த நட்பைப்பற்றியதாகும். அவளுடைய நட்பை நாடகநடிகையோடு சுற்றித் திரியும் நண்பனின் நடவடிக்கையால் விளைந்ததாக எண்ணி அந்த உறவைத் தந்திரமாகப் பிரித்து நண்பனையும் மேரியையும் சேர்த்துவைத்ததைச் சொல்கிறார். அமைதியாக அதுவரை கேட்டுக்கொண்டிருந்த நண்பர் பிரிவதற்கு முன்பாக தன் பிரியத்துக்குரிய நடிகை சொன்ன காதல் வார்த்தைளை நினைவு கூர்கிறார். மேரியின் காதல்மனம் அவனையே சுற்றியலைந்ததென்றும் அது பற்றிப் படரட்டும் என்று நினைத்தே நடிகையோடு சுற்றித் திரிந்ததாகவும் சொல்கிறார். இறுதியில் மேரியின் காதலையும் அவர் புரிந்துகொள்ளவில்லையென்றும் நடிகையின் மனத்தின் தன்மீது இருந்த உண்மையான காதலை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் துண்டித்துவிட்டார் என்றும் சொல்கிறார். நாற்பதாண்டுகால உண்மை நெருப்புக்கனப்பின் முன் சொல்லப்படுகிறது. மீண்டும் இந்த உறவும் வாழ்வும் ஏன் இப்படி புதிராக இருக்கிறது என்னும் வினா நம்மை அசைக்கிறது.


( லங்கேஷ் கதைகள். தமிழில் இறையடியான். காவ்யா பதிப்பகம், 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை-24. விலை.ரூ 50)

(08.05.2008 அன்று திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை)