Home

Saturday, 11 June 2022

வ.சுப்பையா : எளிமையும் வலிமையும்

 

வடமாநிலங்களில் கதர்ப்பிரச்சாரப் பயணத்தை முடித்துக்கொண்டு தென்னகத்துக்கு வந்த காந்தியடிகள் கர்நாடகம் வழியாக தமிழகத்துக்குள் வந்தார். ஒசூர், கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் வழியாகச் சென்னைக்குச் சென்று, பிறகு அங்கிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் பயணம் செய்து 10.09.1927 அன்று அதிகாலை 03.30 மணியளவில் கடலூருக்கு வந்துசேர்ந்தார். நகராட்சி மன்ற உறுப்பினர்கள் காந்தியடிகளை வரவேற்று அழைத்துச் சென்றனர். முதலில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பங்களாவிலும் பிறகு திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த முத்தையா செட்டியாரின் இல்லத்திலும் காந்தியடிகள் தங்கி ஓய்வெடுத்தார்.

அன்று ஒய்.எம்.சி.ஏ.கட்டிடத்தில் மாணவர்களுக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேணுகோபால் நாயுடு என்பவர் தலைமை தாங்கினார். மாணவர்களுடைய உற்சாகம் படிந்த முகங்களைப் பார்த்து தானும் உற்சாகம் அடைவதாகக் கூறினார் காந்தியடிகள். தொடர்ந்து “சமுதாய வளர்ச்சி என்பது தனிப்பட்டவர்கள் வளர்ச்சியைப் பொருத்ததாகவே இருக்கும். தனியார் வளர்ச்சிக்குப் பணிவு என்பது முதல் தேவை. தொண்டு செய்யும் பணியில் ஈடுபட விழைபவர்கள் தன் இதயத்தைத் தூய்மையானதாக வைத்திருக்க வேண்டும். தூய இதயம் ஆன்மிகமான பிரார்த்தனை வழியாகவே கிடைக்கும். தொண்டு செய்ய நினைப்பவர்கள் முயற்சி உள்ளவர்களாகவும் விழிப்புணர்ச்சியும் இறைநம்பிக்கையும் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். இறைநம்பிக்கை  நம்மைக் காக்கும் கவசமாக எப்போதும் நம்மோடு இருக்கும்” என்றார்.

மாணவர்கள் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக கலெக்டர் அலுவலக மைதானத்தில் பொதுமக்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும் காந்தியடிகள் உரையாற்றினார். சமுதாயத்தில் நிலவும் பிராமணர்கள் – பிராமணர்கள் அல்லாதோர் இடையிலான கருத்து வேறுபாடுகளைப்பற்றிய தன் கருத்துகளை அம்மேடையில் விரிவாகவே எடுத்துரைத்தார். முடிவில் இரு தரப்பினருமே தத்தம் குறைகள் என்னவென்பதைக் கண்டறிந்து, அவற்றை நீக்கிக்கொள்ள தம்மாலியன்ற முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று கூறினார்.

இரு கூட்டங்களிலும் கடலூரைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமன்றி, அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வந்திருந்த எண்ணற்ற மாணவர்களும் கலந்துகொண்டனர். காந்தியடிகளின் உரையைக் கேட்பதற்காகவென்றே தன் தாயாரின் அனுமதியுடன் புதுச்சேரியிலிருந்து நண்பர்களுடன் மிதிவண்டியில் பயணம் செய்து வந்திருந்த பள்ளி மாணவர் ஒருவரும் இருந்தார். அப்போது அவர் புதுச்சேரியில் கல்வே கல்லூரியில் ஐந்தாம் படிவத்தில் படித்துவந்தார். அவர் பெயர் வ.சுப்பையா. ‘ஏழைகளை நேசியுங்கள், நீங்கள் காந்தியடிகளை நேசித்தவர்களாவீர்கள்’ என கடலூரில் பல இடங்களில் அன்று சுவர்களில் எழுதப்பட்டிருந்த வாசகம் அவருடைய நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது.

தமிழகப்பயணத்தை முடிக்த்துக்கொண்டு ஒரிசாவுக்குச் சென்ற காந்தியடிகள் 25.12.1927 அன்று ஸ்பர் டாங்க் மைதானத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காந்தியடிகள் சென்னைக்கு மீண்டும் வந்தார். அம்மாநாடு டாக்டர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. முகம்மது அலி ஜின்னா, மதன்மோகன் மாளவியா, சென்குப்தா, நேரு போன்ற பல தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். ரஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த நேரு அப்போதுதான் இந்தியாவுக்குத் திரும்பியிருந்தார். அதுவரை டொமினியன் அந்தஸ்து கேட்டு போராடிய காங்கிரஸ் தலைவர்கள் முதன்முதலாக இந்தியாவின் முழு விடுதலையே தம் தலையாய குறிக்கோள் என இம்மாநாட்டில்தான் வெளிப்படையாக அறிவித்தனர். சுப்பையா இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் சென்றிருந்தார்.  தலைவர்களுடைய உரைகள் இந்திய அரசியல் களத்தைப் புரிந்துகொள்ள அவருக்கு மிகவும் உதவியாக இருந்தன. அயல்நாட்டினரின் ஆட்சி சொந்த நாட்டினருக்கு இழைத்திருக்கும் பலவிதமான கொடுமைகளை அன்று சுப்பையா தெளிவாகப் புரிந்துகொண்டார்.

அந்தக் காலத்தில் புதுச்சேரிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்  மெட்ரிகுலேஷன் தேர்வை மட்டும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக எழுதித் தேர்ச்சி பெறவேண்டும் என்பது விதியாக இருந்தது. பள்ளிக்கல்வியில் போதிய கவனம் செலுத்திய பிரெஞ்சு அரசு மெட்ரிகுலேஷன் படிக்கும் மாணவர்களுக்கான பயிற்சியில் மட்டும் அக்கறையின்றி நடந்துவந்தது. ஆசிரியர் பயிற்சி பெறாத, தகுதிக்குறைவான ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பித்துவந்தனர். இதனால் மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டிய சிறப்புப்பயிற்சிகள் எதுவும் கிடைக்க வழியில்லாமல் போனது. கல்வே கல்லூரியில் மெட்ரிகுலேஷன் படித்துவந்த சுப்பையா, அந்தப் போதாமையால் நேரிடையாகப் பாதிக்கப்பட்டார். அந்தத் தேவையை வாய்மொழி மூலமாகவும் எழுத்துமூலமாகவும் பலமுறை பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு சுப்பையா எடுத்துச் சென்றார். ஆனால், அவர் எடுத்த முயற்சிகளுக்கு ஒரு பயனும் கிடைக்கவில்லை. இறுதி முயற்சியாக, அதே பள்ளியில் மெட்ரிகுலேஷன் படிக்கும் மற்ற மாணவர்களையும் ஒன்று திரட்டி சுப்பையா ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். ஏறத்தாழ மூன்று வார காலம் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது. பயிற்சியளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக பள்ளி நிர்வாகம் சுப்பையாவையும் மற்ற மாணவர்களையும் ஆறு மாத காலம் பள்ளியை விட்டு நீக்குவதாக அறிவித்தது. ஆயினும் மனம் தளராத சுப்பையா மாணவர்களையும் மாணவர்களுடைய பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து மற்றுமொரு போராட்டத்தை அறவழியில் தொடங்கினார். இரு மாத கால தொடர் போராட்டத்துக்குப் பிறகு மாணவர்களின் பள்ளி நீக்க ஆணைகளை நிர்வாகம் விலக்கிக்கொண்டது. மாணவர்கள் வழக்கம்போல மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினர்.

மெட்ரிகுலேஷனில் நல்ல மதிப்பெண்களோடு சுப்பையா தேர்ச்சி பெற்றிருந்தபோதும் படிப்பைத் தொடர்வதற்கு அவருடைய தாய் அனுமதிக்கவில்லை. கல்வியைத் தொடர இயலாத நிலையில் சுப்பையாவின் மனம் தேசிய விடுதலையையும் பொதுவாழ்க்கையையும் நாடியது. 1929இல் நட்புறவுக்கழகம் என்னும் ஓர் அமைப்பைத் தொடங்கி இளைஞர்களைத் திரட்டி ஒன்றிணைத்தார். அவர்கள் அனைவரும் இணைந்து அந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தனர். கடலூரில் அவர் வாசித்த ‘ஏழைகளை நேசியுங்கள்’ என்னும் வாசகமே மெல்ல மெல்ல அவரை இயக்கும் விசையாக மாறியது.

1930இல் வாலிபர் சங்கம் என்னும் பெயரில் மற்றொரு அமைப்பைத் தொடங்கினார் சுப்பையா. பிறகு ராமகிருஷ்ணர் பெயரில் ஒரு வாசகசாலையையும் தொடங்கினார். அப்போது, பிரெஞ்சு ஆட்சியில் பிரெஞ்சிந்திய மக்களுக்கு அடிப்படையான பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமை அனைத்தும் மறுக்கப்பட்டிருந்தன. எந்தவொரு செயலுக்கும் அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டியது அவசியமாக இருந்தது. எவரும் எங்கும் பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டுவிடக் கூடாது என அரசு முன்னெச்சரிக்கையாக இருக்க நினைத்ததே இதன் காரணம். இச்சூழலில் சுப்பையா மிகுந்த கவனமுடன் அமைப்புகளைத் தொடர்ந்து நடத்தி வந்தார். மார்கழி மாதத்தில் ‘பஜனைக்குழு, கூட்டு வழிபாடு’ என்ற பெயரில் அனுமதியைப் பெற்று பல முக்கியமான வீதிகளில் பாரதியாரின் தேசபக்திப்பாடல்களைப் பாடியபடி  சென்று, மக்களுக்கு விடுதலையுணர்வை ஊட்டினார்.

1931இல் இந்தியக் காப்பீட்டுக் கழகம் என்னும் தனியார் நிறுவனத்தில் புதுச்சேரிக் கிளைமேலாளராகப் பணிபுரியும் வாய்ப்பு சுப்பையாவுக்குக் கிடைத்தது. அப்போது அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் இருந்தது. சென்னைக்குச் சென்றுவருவதற்கு அந்த வேலையை ஒரு வாய்ப்பாக சுப்பையா பயன்படுத்திக்கொண்டார். பல முக்கிய அரசியல் தலைவர்களோடும் அவர்கள் நடத்திய நாளிதழ், வார இதழ்களோடும் நெருக்கமான வகையில் தொடர்புகொள்ள அது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. சங்கு சுப்பிரமணியன் நடத்திய ’சுதந்திரச்சங்கு’, ஏ.என்.சிவராமனை துணையாசிரியராகக் கொண்ட ’காந்தி’ ஆகிய இதழ்களை சுப்பையா விரும்பிப் படித்தார். மேலும் மணிக்கொடி, இந்தியா, தமிழ்நாடு ஆகிய இதழ்களையும் படித்து நாட்டுநடப்புகளைத் தெரிந்துகொண்டார்.

காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காந்தியடிகள் லண்டனில் 1931இல் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிவந்தார். மீண்டும் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்துவிட்டு போராட்டத்தில் இறங்கினார் காந்தியடிகள். உடனே அவரைக் கைது செய்த அரசு எரவாடா சிறையில் அடைத்தது. 1933இல் விடுதலையடைந்ததும் மேல்சாதியினரால் தாழ்த்தப்பட்ட அரிசன மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு அரிசன மக்கள் நல்வாழ்வுப்பயணம் ஒன்றை அவர் உடனடியாகத் தொடங்கினார். இந்தியா முழுதும் பத்துமாத காலம் பயணம் செய்து தாழ்த்தப்பட்டோர் நலவாழ்வுக்காக நிதி திரட்டினார். மக்களிடம் தீண்டாமையை உதறிவிடும்படி மனமுருக வேண்டிக்கொண்டார்.

இதன் விளைவாக தக்கர்பாபாவைச் செயலராகக் கொண்டு அகில இந்திய அரிசன சேவா சங்கமும் தி.சே.செள.ராஜனைத் தலைவராகக்கொண்டு  தமிழ்நாடு அரிசன சேவா சங்கமும் தொடங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் தொடங்கப்பட்ட கிளைச்சங்கத்துக்கு சுப்பையா செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். திட்டவட்டமான சாதியின் பெயர்களால் தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருந்த புதுச்சேரியில் வேரோடியிருந்த தீண்டாமையை ஒழிப்பது என்னும் மாபெரும் பணியை சுப்பையா ஏற்றுக்கொண்டு, அதற்கான பிரச்சார முயற்சிகளில் ஈடுபட்டார். பல இளைஞர்களையும் அறிஞர்களையும் திரட்டி அவர்களையும் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார். மற்றொருபுறத்தில் கல்வியறிவூட்டும் வகையில் பல இடங்களில் பள்ளிகளும் தொடங்கப்பட்டன. இரவுப் பாடசாலைகள் தொடங்கப்பட்டு இளையோர் முதியோருக்கான வகுப்புகள் நடத்தப்பட்டன. சங்கத்தின் வெற்றிக்கு, சங்க உறுப்பினர்களான மோரிஸ் கிளேரோன், டி.துரைராஜ், ஜே.சவரிநாதன், கிருஷ்ணசாமிப்பிள்ளை போன்றோரின் இடையறாத உழைப்பு மிகமுக்கியமான காரணம்.

ஆந்திரம், கர்நாடகம், மலபார் வழியாக திருவிதாங்கூருக்கு வந்து சேர்ந்த காந்தியடிகள் 22.01.1934 அன்று நாகர்கோவிலை அடைந்தார். அவருடைய பயணத்தின் வழியாக மக்கள் இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். எவ்வளவோ பணக்கஷ்டம் இருந்தபோதும் மக்கள் மனமுவந்து நிதியுதவி செய்தனர். அடுத்து, சனாதனிகளின் எச்சரிக்கையையும் எதிர்ப்பாளர்களின் கோரிக்கையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் பொதுக்கூட்டங்களுக்குத் திரண்டுவந்தனர். தம்மிடம் அன்பளிப்பாக பணத்தையும் ஆபரணங்களையும் அளிப்பவர்கள் உண்மையிலேயே தம் நோக்கத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் காந்தியடிகள் ஒவ்வொரு முறையும் அவர்களிடம் ‘நீங்கள் இவற்றை எதற்காக அளிக்கிறீர்கள் தெரியுமா?” என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த குரலில் “அரிஜனங்களுக்காகத்தான்” என்று பதிலைக் கேட்ட பிறகே அவருடைய மனம் அமைதியடையும்.

நாகர்கோவிலிலிருந்து காந்தியடிகளின் பயணம் குன்னூரை நெருங்கிய சமயத்தில் சுப்பையாவுக்கு பயணக்குழுவிடமிருந்து பயணத்திட்டத்திலிருந்து புதுச்சேரி நீக்கப்பட்டுவிட்டதாக ஒரு தந்தி வந்தது. காந்தியடிகளின் வருகையை ஒட்டி, அவரிட வழங்குவதற்காக மக்களிடமிருந்து நிதி திரட்டி வைத்துக்கொண்டு காத்திருந்த சுப்பையாவும்  தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். உடனே சுப்பையா குன்னூருக்கு விரைந்து சென்றார். மறுநாள் காலையில் நடைப்பயிற்சிக்காகச் சென்ற காந்தியடிகளுடன் நடந்தபடி காந்தியடிகளின் புதுவை வருகை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என எடுத்துரைத்தார். இறுதியில் காந்தியடிகள் புதுவைத்திட்டத்துக்கு இசைவு தெரிவித்தார்.

17.02.1934 அன்று காந்தியடிகள் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். சாதாரணமான ஒரு கூட்டு வழிபாட்டுக்குக்கூட அரசு அனுமதியைப் பெறவேண்டியது கட்டாயம் என்கிற நிலையில் அப்போது புதுச்சேரி ஆளுநராக இருந்த ஜார்ஜ் பொர்ரே என்னும் பிரெஞ்சுக்காரர் காந்தியடிகளின் நிகழ்ச்சிக்கு எவ்வித மறுப்பும் சொல்லாமல் அனுமதியை வழங்கினார். அது மட்டுமன்றி, மேடையிலிருந்து சிறிது தொலைவில் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு, காந்தியடிகளின் உரையையும் கேட்டுவிட்டுச் சென்றார். காந்தியடிகளின் உரை அன்று அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது.

”மதத்தின் பேராலும் சாதியின் பேராலும் சாதி இந்துக்கள் அரிஜன மக்களை ஒடுக்குவதும் நசுக்குவதும் பாவம். ஒரு சமூக அநீதி. அரிஜன மக்களை நம் உடன்பிறந்த சகோதரர்களாக நாம் கருதவேண்டும். உலகின் பிறநாட்டு மக்கள் சகோதரத்துவம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்வதற்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் பிரான்ஸ் உணர்ந்துகொண்டது. அந்த இலட்சியப்பார்வை உங்களிடமும் இருக்கும் என்றும் உங்களிடம் தீண்டாமை இருக்காது என்றும் நான் நம்புகிறேன். ஒருவேளை இருந்தாலும் அதைப் போக்கிக்கொள்ள தயங்கமாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்” என்றார் காந்தியடிகள். அவருடைய சொற்கள் தீண்டாமை ஒழிப்பு என்னும் உன்னதப்பணிக்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட அரிசன சேவா சங்க உறுப்பினர்களுக்கு மந்திரச்சொற்களாகவே ஒலித்தன.

1934இல் பிரிட்டன் அரசு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது. மீரட் சதிவழக்கில் தேடப்பட்டு வந்தவர்களில் ஒருவரான அமீர் ஹைதர்கான் சிறைக்கொடுமைக்குத் தப்பி சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் மறைந்திருந்தார். தற்செயலாக அப்போது புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு வந்திருந்த சுப்பையா அவரைச் சந்தித்து உரையாடினர். அச்சந்திப்பில் அவருக்கு இன்னும் சிலருடைய தொடர்புகள் கிடைத்தன. அக்குழுவினரிடமிருந்து பெற்றுவந்த பொதுவுடைமை இலக்கியங்களை சுப்பையா கவனமுடன் படித்தார். உழைக்கும் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவும் அவர்களுடைய பொருளாதார நிலைகளில் மாற்றம் ஏற்படவும் தொழிற்சங்கங்களை உருவாக்கி சுரண்டலையும் சமூகக்கொடுமைகளையும் எதிர்த்துப் போராடவேண்டியது அவசியம் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

புதுச்சேரிக்குத் திரும்பியதும் அரிஜன சேவா சங்கச் செயல்களோடு பஞ்சாலைத்தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பணியிலும் ஈடுபடத் தொடங்கினார். அப்போது புதுச்சேரியில் ஜவானா ஆலை, ரோடியர் ஆலை, கப்ளே ஆலை என மூன்று பஞ்சாலைகள் செயல்பட்டு வந்தன. அவற்றில் ஏறத்தாழ ஆறாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தொழிற்சங்கம் அமைப்பது அன்றைய காலச் சட்டத்துக்குப் புறம்பான செயல் என்பதால் பஞ்சாலைகளில் ஒவ்வொரு துறைதோறும் தொழிற்களக்குழுக்களை அமைப்பதற்கு தொழிலாளர்களுக்கு வழிகாட்டினார். தொழிலாளர்களை இணைப்பதற்காகவே ’சுதந்திரம்’ என்னும் மாதப்பத்திரிகையைத் தொடங்கினார். ஓராண்டுக்குப் பிறகு அது வார இதழாக மாறியது.

அந்தக் கால விதிமுறையின்படி பஞ்சாலை நிர்வாகங்கள் சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து மறையும் நேரம் வரைக்குமான பொழுதை தொழிலாளிகளின் வேலை நேரமாக வரையறுத்துவைத்திருந்தன. ஏறத்தாழ பன்னிரண்டு மணி நேர வேலை என்பது கட்டாயமாக இருந்தது. அதை எதிர்த்துப் போராடுவதற்காக தொழிலாளர்களை ஒருங்கிணைத்தார் சுப்பையா. முதலில் ஜவானா ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். நாளொன்றுக்கு பத்து மணி நேரம் என்று வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும், தினக்கூலி மூன்றணாவிலிருந்து ஆறணாவாக உயர்த்தவேண்டும், பெண்களுக்கு இரவுப்பொழுது வேலை கூடாது, பதினாலு வயதுக்குக் குறைந்தவர்களை வேலையில் அமர்த்தக்கூடாது, பெண் தொழிலாளர்களுக்கு பேறுகாலத்தில் சம்பளத்தோடு கூடிய ஒரு மாத விடுப்பும் அளிக்கப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஏறத்தாழ 84 நாட்கள் அந்த வேலைநிறுத்தம் நீடித்தது. வேறு வழியில்லாமல் ஆலை நிர்வாகம் இறங்கிவந்து 29.04.1935 அன்று கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. ஜவானா ஆலையைப் பின்பற்றி மற்ற இரு ஆலை நிர்வாகங்களும் தொழிலாளர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டன.

இந்த வெற்றியின் காரணமாக சுப்பையாவுக்கு சென்னை தொழிற்சங்கங்களில் பணியாற்றி வந்த வி.வி.கிரி, எஸ்.குருசாமி போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் வழியாக ஆலைத் தொழிலாளர்களின் பிரச்சினையை பாரிசில் உள்ள சர்வதேசத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவும், அக்கூட்டமைப்பின் துணையோடு பிரெஞ்சு குடியேற்ற நாடுகளின் அமைச்சரிடம் புதுச்சேரியில் தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்த வேண்டியும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை வழங்கவேண்டியும் வலியுறுத்தவும் வழி இருப்பதை சுப்பையா கண்டடைந்தார். விரிவாக அவர் எழுதி அனுப்பிய வேண்டுகோள் வெகுவிரைவில் சர்வதேசத் தொழிலாளர் கூட்டமைப்புக்குச் சென்று சேர்ந்தது.

இதற்கிடையில் 10.05.1936 அன்று தொழிலாளர்கள் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு சுப்பையா முறையாக அரசு அனுமதியைப் பெற்று, தேவையான ஏற்பாடுகளைச் செய்தார். புதுவையைச் சேர்ந்த இரெட்டியார்பாளையம் என்னும் இடத்தில் மாநாட்டுக்கான பந்தல் அமைக்கப்பட்டது. ஆயினும் நிகழ்ச்சிநாளன்று அங்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டைத் தடை செய்திருப்பதாக தெரிவித்து அனைவரையும் கலைந்துபோகக் கட்டளையிட்டனர். அதிகாரிகளுடன் மோத விரும்பாத சுப்பையா பிரெஞ்சிந்திய எல்லைப்பகுதியில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பெரம்பை என்னும் கிராமத்தில் மந்தக்கரை மாந்தோப்பு என்னும் இடத்திற்கு மாற்றி, தொழிலாளர்களை இரெட்டியார்பாளையத்திலிருந்து பெரம்பை வரைக்கும் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.

தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு, பிரெஞ்சு அரசு தொழிற்சங்க உரிமையைத் தவிர்த்து பிற தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்தும் ஆணை ஒன்றை 23.05.1936 அன்று  பிறப்பித்தது. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைப்பற்றி மெளனம் சாதித்த அந்த ஆணை புதுச்சேரித் தொழிலாளர்களுக்கு அவ்வளவாக உவப்பளிக்கவில்லை.

இரு மாத இடைவெளியில் மீண்டும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கோரி மூன்று பஞ்சாலைகளையும் சேர்ந்த தொழ்லாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு போராட்டத்தைத் தொடங்கினர் சுப்பையா. போராட்டத்தை ஒடுக்குவதில் குறியாக இருந்த நிர்வாகம் தொழிலாளர்கள் வேடத்தில் சிலரை ஆலைக்குள் அனுப்பி போராட்டத்தைத் திசைதிருப்பி முறியடிக்கும் முயற்சியில் இறங்கியது. ஆலைக்குள் வேடதாரிகள் அனுப்பப்பட்டிருக்கும் செய்தியை அறிந்ததும், 28.07.1936 அன்று சுப்பையாவே தொழிலாளர் சீருடையில் கையில் ஒரு உணவுப்பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வேகமாக ஆலைக்குள் நுழைந்துவிட்டார். வந்திருப்பவர் சுப்பையா என்பதை அறிந்துகொண்ட பிற தொழிலாளிகள் தறிகளுக்கிடையில் குறுக்குப்பலகைகளை அடுக்கி தற்காலிக மேடையொன்றி உருவாக்கி, அவர் பேசுவதற்கு வழி செய்து கொடுத்தனர். நிர்வாகிகளின் தந்திர நடவடிக்கைகளைப்பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறிய சுப்பையா, தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் ஒன்றுபட்டுப் போராடி வெற்றிபெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திவிட்டு ஆலையைவிட்டு வெளியேறினார். சுப்பையா ஆலைக்குள் சென்று திரும்பிய செய்தியை அறிந்துகொண்ட அரசு, தன் எதிரி ஒருவரை ஆலைக்குள் புகுந்து சுப்பையா கொலை செய்ததாகப் பழிசுமத்தி, கண்டதும் கைது செய்யும் ஆணை ஒன்றை 29.07.1936 அன்று பிறப்புத்தது.

30.07.1936 அன்று அரசு ஆலைகளின் பாதுகாப்புக்காக எந்திரத்துப்பாக்கிகள் ஏந்திய காவல் படையினரை லாரிகளில் அனுப்பி வைத்தது. முதல் நடவடிக்கை ரோடியர் பஞ்சாலையில்தான் தொடங்கியது. ஆலையின் கதவுகளை தொழிலாளர்கள் இறுக அடைத்திருந்தனர். சாலையைச் சமப்படுத்தும் எந்திரத்தைப் பயன்படுத்தி கதவை இடித்துத் தகர்த்த ஆயுதப்படை ஆலைக்குள்ளே சென்றது. அதைக் கண்டு ஊக்கம் கொண்ட ஆலை மேலாளர் மார்ஷ்லேண்ட் என்பவர் தன் கைத்துப்பாக்கியால் தொழிலாளர்களை நோக்கிச் சுடத் தொடங்கினார். குண்டடி பட்ட ஒரு தொழிலாளி அந்த இடத்திலேயே உயிர்துறந்தார். இதைக் கண்டு ஆவேசமுற்ற தொழிலாளர்கள் கைக்குக் கிடைத்த ஆயுதங்களோடு ஆயுதப்படை மீது எதிர்த்தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் அருகிலிருந்த ஜவானா ஆலைக்குச் சென்ற ஆயுதப்படையின் மற்றொரு பிரிவு தாக்குதலுக்கான ஆயத்த நிலையில் காத்திருந்தது. தொலைவில் தொழிலாளர்களின் போராட்ட ஆரவாரத்தைக் கேட்டதும், ஆயுதப்படையினர் தன்னிச்சையாக எந்திரத்துப்பாக்கியால் தொழிலாளர்களை நோக்கிச் சுடத் தொடங்கினர். அந்தத் துப்பாக்கிச்சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்தக் கலவரம் காரணமாக ஆலைகள் மூன்று மாத காலத்துக்கும் மேல் மூடப்பட்டுவிட்டன. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 31.10.1936 அன்று இரு தரப்பினரிடையிலும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை தொடர்பான குறிப்பு எதுவும் இந்த உடன்படிக்கையில் இல்லை என்ற போதும் நாளொன்றுக்கு ஒரு தொழிலாளருக்கு எட்டுமணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்று ஆசியாவிலேயே முதன்முறையாக வரையறுக்கப்பட்டது.

17.10.1936 அன்று சுப்பையா விழுப்புரத்துக்கு வந்த நேருவைச் சந்தித்து புதுச்சேரிக்கு அழைத்துவந்தார். புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்று நேரு உரையாற்றினார். அன்று இரவு உணவுண்ணும் சமயத்தில் சுப்பையாவிடம் பிரான்சிற்குச் சென்று முக்கியமான அரசியல் தலைவர்களையும் அமைச்சரையும் நேரில் சந்தித்து புதுச்சேரி ஆலைப்பிரச்சினையைப்பற்றி எடுத்துரைத்து தீர்வுக்கு வழிகாணும்படி ஆலோசனை வழங்கினார் நேரு. அதை ஏற்றுக்கொண்ட சுப்பையா புதுச்சேரியில் தன் வேலைகளையெல்லாம் தன் நண்பரான எஸ்.ஆர்.சுப்பிரமணியன் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு 1937 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரான்சிற்குச் சென்றார். அங்கிருந்த தொழிலாளர் பேரவையின் செயலாளர்களையும் அமைச்சரையும் சந்தித்து புதுச்சேரிப்பிரச்சினையைப் பற்றி எடுத்துரைத்தார். பல கட்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு பிரெஞ்சிந்திய தொழிலாளர்களுக்கான சட்டதிட்டங்களைக் கொண்ட புதிய ஆணை 06.04.1937 அன்று பிறப்பிக்கப்பட்டு, அந்த ஆணையின் நகல் சுப்பையாவிடம் வழங்கப்பட்டது.  இந்தச் சட்டத்தின் கீழ் கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சங்கம் அமைத்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. ஒன்றிணைந்த தொழிலாளர் போராட்டத்தில் அது மிகப்பெரிய சாதனையாக அமைந்தது. வெற்றிக்களிப்புடன் 06.07.1937 அன்று புதுச்சேரிக்குத் திரும்பினார் சுப்பையா.

இந்திய தேசிய காங்கிரசின் கிளை ஒன்றை புதுச்சேரியில் தொடங்குவதற்கு இதுவே சரியான தருணம் என நினைத்த சுப்பையா, அதைப்பற்றி ஆலோசனை வழங்குமாறு நேருவுக்கு எழுதினார். தனித்தியங்கும் சுதந்திரமும் வேறு பெயரும் கொண்ட புதிய அமைப்பு ஒன்றைத் தொடங்கிச் செயல்படுவதே பொருத்தமாக இருக்கும் என்று பதில் எழுதினார் நேரு. அதையொட்டி தன் நண்பர்களுடன் கலந்து பேசிய பிறகு ’மகாஜன சபா’ என்னும் புதியதொரு அரசியல் கட்சியை சுப்பையா தொடங்கினார். ஆளுநருக்குச் சர்வ வல்லமையையும் அளிக்கும் சர்வாதிகாரச் சட்டத்தை ஒழிப்பது, வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை அளிப்பது, தேர்தல்முறையை முற்றிலுமாக மாற்றி அமைப்பது, கல்விமுறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது, வறுமையை ஒழித்து, வேலை வாய்ப்புக்கு வழிவகுத்து, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது ஆகியவற்றை தன் செயல்திட்டங்களாக அக்கட்சி அறிவித்தது.

புதுச்சேரியை காவல்துறையினரின் துணையுடன் பதற்றமான ஒரு சூழலில் வைத்திருப்பதையே அன்றைய ஆளுநர் குரோச்சியா விரும்பினார். அப்போது செல்வராஜ் செட்டியார் என்பவர் ஆளுநர் விரும்பும் வேலைகளையெல்லாம் செய்ய உதவினார். அவரே ஆளுநரிடம் இல்லாததையெல்லாம் இட்டுக்கட்டிச் சொல்லி அடக்குமுறை நடவடிக்கைகளைத் தூண்டிவிடக் காரணமாக இருந்தார். மக்களின் சீற்றத்துக்கு இலக்கான அவரை ஒருநாள் ஜவானா ஆலையில் பணிபுரிந்த ஆர்.இராமையா என்னும் தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இத்தருணத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த புதுச்சேரி ஆளுநர், தலைமறைவாக திரிந்துகொண்டிருந்த சுப்பையாவை சென்னை காவல்துறை வழியாக கைது செய்யவைத்து, புதுச்சேரிக்கு அழைத்துவந்து சிறையில் அடைத்தார். . நாளடைவில் பிரெஞ்சிந்தியப் பகுதிகள் அனைத்திலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்பு வலிமையுறத் தொடங்கியதும்  மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கும் தேசிய விடுதலைக்கான கனவு மலரத் தொடங்கியது. நீண்ட கால விசாரணைக்குப் பிறகு, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்பதால் மகா ஜன சபை கட்சியைச் சேர்ந்த சுப்பையாவும் பிற தொண்டர்களும் 11.06.1939 அன்று விடுதலை செய்யப்பட்டனர்.

1940 அக்டோபரில் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு பல தலைவர்கள் சிறைக்குச் சென்றனர். இடதுசாரிக் கட்சிகள் வெளியிட்டிருந்த போர்  எதிர்ப்புத் துண்டறிக்கைகளை எடுத்துச் சென்ற சுப்பையா தென்னார்க்காடு, தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் வாழும் மக்களிடையில் விநியோகித்தார். அச்செய்தி கிடைத்ததும் சென்னை ஆளுநர் சென்னை மாகாண எல்லைக்குள் எந்த இடத்திலும் சுப்பையா பேசக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்தார். அவரைத் தொடர்ந்து கவனித்துவந்த அரசு அதிகாரிகள் அவரைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். 11.09.1942 அன்று சுப்பையா சிறையிலிருந்து விடுதலை பெற்றார்.

1945இல் பிரான்சில் நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தின் விளைவாக புதுச்சேரி மக்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக முன்வைத்துப் போராடிய ஒரு போராட்டம் முடிவுக்கு வந்தது. எல்லையற்ற சுதந்திரத்தை ஆளுநருக்கு அளிக்கும் சர்வாதிகாரச் சட்டம் ஒழிக்கப்பட்டது. துன்பங்களைக் கண்டு கலங்காமல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடிய தொழிலாளர்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக, அந்தச் சட்ட ஒழிப்பு நாளை அனைவரும் கொண்டாடினர்.  இச்சூழலில் அரசியல் விடுதலையை முன்வைத்து தேசிய ஜனநாயக முன்னணி என்னும் பெயரில் ஓர் அமைப்பு உருவானது. 15.12.1946 அன்று நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தேசிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. ஆளுநர் பரோனின் சூழ்ச்சியின் காரணமாக, அதுவரை தேசிய ஜனநாயக முன்னணியில் முக்கியப்பங்கு வகித்த மகா ஜன சபாவை, அதற்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபாட்டைக் காரணமாகக் காட்டி தேசிய ஜனநாயக முன்னணியினரே விலக்கிவைத்தனர். அந்த அமைப்பின் தலைவரான சுப்பையாவை ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ப்ரெஞ்சிந்திய எல்லைக்கு வெளியே அனுப்பும் ஆணையை அரசு தொடர்ந்து பிறப்பிக்கத் தொடங்கியது.

பல்லாண்டு கால தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, பிரெஞ்சிந்தியப் பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகியவற்றை 01.11.1954 அன்று இந்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு பிரெஞ்சு அரசு நாட்டைவிட்டு வெளியேறியது. பிரான்சின் சிறப்புத் தூதுவரான பியர் லேண்டியும் இந்தியத் தூதுவரான கேவல்சிங்கும் புதுச்சேரியில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதுவரை நாடு கடத்தப்பட்ட சுப்பையா புதுச்சேரி எல்லைக்குள் வரமுடியாமல் தமிழக எல்லைப்பகுதிகளிலேயே வசித்துவந்தார். தூதுவர் கேவல்சிங் சுப்பையாவைச் சந்தித்து விடுதலை விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைத்தார். தன்மீது உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் சட்டப்படி விலக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார் சுப்பையா. அவருக்காகவே புதுவையில் எல்லைப்பகுதியில் ஒரு சிறப்புநீதிமன்றம் அமைக்கப்பட்டது. தலைமை நீதிபதி அந்த நீதிமன்றத்தில் தோன்றி சுப்பையாவின் மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட்டன என்று அறிவித்தார். அதற்குப் பிறகே, சுதந்திர மனிதராக சுப்பையா ஆயிரக்கணக்கான மக்கள் மலர்தூவி வரவேற்க புதுச்சேரிக்குள் அடியெடுத்து வைத்தார்.

(கிராம ராஜ்யம் – மே 2022)