அந்தக் காலத்தில் கதை கேட்கும் பேரக்குழந்தைகளிடம் “நான் வாழ்ந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா?” என்று சற்றே செல்லமான சலிப்போடுதான் பெரியவர்கள் தொடங்குவார்கள். பிறகு சுவரோடு ஒட்டிச் சாய்ந்தபடி காலை நீட்டி உட்கார்ந்துவிட்டால், கதைகள் அருவியாகக் கொட்டத் தொடங்கிவிடும். கால்மீது படுத்துக்கொண்டிருக்கும் பேரனின் முதுகைத் தட்டியபடியோ அல்லது தோள்மீது சாய்ந்திருக்கும் பேத்தியின் காலைத் தட்டியபடியோ ஒன்றையடுத்து ஒன்றென கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் அவர்கள் கண்ட ஒவ்வொரு அனுபவத்துக்கும் காலும் கையும் இறக்கையையும் ஒட்டி கதைகளாக மாற்றிவிடுவார்கள். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் அத்தகு கதைகள் இருக்கும். வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் அத்தகு கதைகள் இருக்கும். கதைகள் இல்லாத மனிதனே இல்லை.
இன்று தொழில்கள் பல்கிப் பெருகியிருக்கின்றன.
கல்வி பல கதவுகளைத் திறந்துவைத்திருக்கிறது. வண்டலைக் கொண்டுவந்து சேர்க்கும் ஆற்றுவெள்ளத்தைப்போல
புதிய கல்வியும் புதிய வேலையும் வாழ்க்கையில் புதிய அனுபவங்களைக் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன.
தொழில்சார் அனுபவப்பதிவுகள் இலக்கியத்தில் ஒரு முக்கியமான வகைமையாக இடம்பெறத் தொடங்கிவிட்டன. மயக்க இயல் மருத்துவராக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும்
மேலாக பணிபுரிந்த எஸ்.மாணிக்கவாசகன் என்னும் மருத்துவர் தன் பணிக்கால அனுபவங்களை தூங்காமல்
தூங்கி என்னும் தலைப்பில் 2008இல் ஒரு புத்தகமாக
எழுதி வெளியிட்டார்.
ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்கு
வரும் நோயாளிகளை மயக்கவியல் மருத்துவர்தான் முதலில் சந்திக்கிறார். நோயாளியின் வயது,
ஆரோக்கியம், நோயின் தன்மை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நோயாளிக்குக் கொடுக்கவேண்டிய
மயக்க மருந்தின் அளவை அவர் தீர்மானிக்கிறார். மருந்து வேலை செய்யத் தொடங்கியதும் நோயாளி
மெல்லமெல்ல மயங்கி ஒருவித தூக்கநிலைக்குச் சென்றுவிடுகிறார். தசைகள் தளரத் தொடங்குகின்றன.
அறுவை சிகிச்சை முடிந்ததும் மீண்டும் சுய உணர்வுக்கு மீட்டு வரும் மருந்தை அளித்து
கொஞ்சம் கொஞ்சமாக விழிப்பு நிலைக்குக் கொண்டு வருகிறார் மருத்துவர்.
கோட்பாடு அளவில் இப்படி சுருக்கமாகச்
சொல்வது வேறு. வெற்றிகரமாக செயல்படுத்து வேறு. இடையில் எதிர்பாராத விதமாக சிக்கல்கள்
நேரக்கூடும். ஒவ்வொரு சிக்கலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அறிவையும் அனுபவத்தையும்
உள்ளுணர்வையும் துணையாகக் கொண்டு மருத்துவர் அவற்றை எதிர்கொள்கிறார். மருத்துவரைப்
பொறுத்தவரையில் ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் ஒரு புத்தம்புதிய அனுபவம். ஒவ்வொன்றிலும்
ஒரு சாகசம் நிறைந்துள்ளது. தன் மருத்துவமனை வாழ்வில் தான் பெற்ற அனுபவத்தொகையிலிருந்து
ஒருசில அனுபவங்களை மட்டுமே மருத்துவர் மாணிக்கவாசகன் இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
அவர் இன்று இல்லை.
ஒவ்வொரு அனுபவப்பதிவிலும் சிகிச்சைக்கு
வந்த நோயாளிகளின் வாழ்க்கைச்சூழலைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. அறுவைக்கூடத்திற்குள்
நோயாளி இருக்கும்போது, நோயாளியோடு தொடர்புடைய மனிதர்கள் வெளியே நின்றிருக்கிறார்கள்.
அவர்களிடையே வெவ்வேறு விதமான உறவுகள். உரசல்கள்.
மோதல்கள். ஒரு விரிவான காட்சியில் சிற்சில சொற்களோடு அவர்கள் அனைவருடைய சித்திரங்களும்
இடம்பெற்றுவிடுகின்றன. இக்குறிப்புகள் ஒரு வாசகனை உடனடியாக ஒரு வாழ்க்கைக்குள் அழைத்துச்
செல்கிறது. இத்தகு அனுபவப்பதிவுகளின் வெற்றி என்பது, இவை ஏதோ ஒரு வகையில் மானுடவாழ்வுடன்
நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கிறது என்னும் அம்சமே. அக்குறிப்புகள் பக்கம் பக்கமாக
நீண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. பத்து வரிகள் இருந்தாலும் போதும், வயல்சேற்றோடு கலந்து
கரைந்துபோகும் உரப்பொடியைப்போல நெஞ்சின் ஆழத்தில் சென்று அவை தங்கிவிடுகின்றன.
இப்படிப்பட்ட அனுபவ நினைவோடைகள் ஏன்
எழுதப்படவேண்டும் என்னும் கேள்விக்கு வேறெங்கும் காணமுடியாத மனிதர்களை இத்தகு அனுபவப்பதிவுகளே
நமக்கு வழங்குகின்றன என்பதுதான் சிறந்த பதில். எல்லாப் பதிவுகளிலும் இழையோடிக்கொண்டிருக்கும்
மருத்துவரின் கனிவும் மனிதாபிமானமும் இப்பதிவுகளை
மிகமுக்கியமான தொகுதியாக மாற்றிவிடுகின்றன.
ஒரு பதிவு. இரு குழந்தைகளுக்குத் தாயான
பிறகு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தாள். கருக்குழாய் இணைப்பு சிகிச்சைக்காக அவள் வந்திருந்தாள். குழம்பிப்போன
மருத்துவர் அவளிடம் கனிவோடு பேசியபோது உண்மை விவரம் தெரிந்தது. அவள் கடலோரத்தில் வசிக்கும்
குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆழிப்பேரலை அவளுடைய கணவனையும் குழந்தைகளையும் இழுத்துச்
சென்றுவிட்டது. யாரும் இப்போது உயிருடன் இல்லை. கணவனின் தாயார் அவளுக்கு ஆறுதல் சொல்லி
தம் குடும்பத்திலேயே தங்கவைத்துக்கொண்டார். பற்றற்ற பார்வையுடன் நடைப்பிணமாக இருந்த
அவளுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை உண்டாக்குவதற்காக, கணவனின் தம்பியையே அவளுக்குத் திருமணம்
செய்துவைத்தார். குழந்தை இல்லாத வாழ்க்கை அவளுக்கு வெறுமை சூழ்ந்ததாக இருந்தது. ஒரு
குழந்தை அவளுடைய வாழ்க்கைக்கு மலர்ச்சியைக் கொண்டுவந்து சேர்க்கக்கூடும் என அவள் குடும்பம் நினைத்தது. மருத்துவத்தில்
கருக்குழாய் இணைப்புக்கு வழி இருக்கிறது என எப்படியோ யார்மூலமாகவோ அவர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துவந்து சேர்த்துவிட்டனர். எந்த முடிவையும் சொந்தமாக
எடுக்கும் சூழலற்ற அந்த அபலைப்பெண் பற்றற்ற குரலில் பகிர்ந்துகொண்ட சொந்தக்கதையைக்
கேட்டு மருத்துவரும் ஒருகணம் நிலைகுலைந்து போய்விட்டார். மனபாரத்துடன் மெளனமாக சிகிச்சைக்காக
அவளைத் தயார்ப்படுத்தினார். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
இன்னொரு பதிவு. கழுத்துக்கழலையுடன்
அறுவைசிகிச்சைக்காக ஒரு பெண்மணி மருத்துவமனைக்கு வந்தார். அவருக்குத் துணையாக பதினாலு
வயதுப் பையனொருவனும் வந்திருந்தான். அறுவைக்கூடத்தில் மருத்துவர் மாணிக்கவாசகம் மயக்கமருந்து
கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது மூத்த மருத்துவர் ஒருவர் வந்து, அதைத் தான்
கவனித்துக்கொள்வதாகச் சொல்லி, அவரை மற்ற நோயாளிகளைக் கவனிக்க அனுப்பிவிட்டார். துரதிருஷ்டவசமாக
மயக்க மருந்து செலுத்தியதும் நோயாளியின் உடலில் நீலம் பரவத் தொடங்கிவிட்டது. மாணிக்கவாசகம்
அவசரமாக அறுவைக்கூடத்துக்கு அழைக்கப்பட்டார். நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு நோயாளியைத்
தூக்கநிலையில் வெற்றிகரமாக மூழ்கவைத்தார் மாணிக்கவாசகன். அதற்குப் பிறகு அந்தக் கழலைநீக்க
அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. கூடத்தைவிட்டு வெளியேறியபோது, அந்தத்
தாயின் பையன் மாணிக்கவாசகத்தின் காலில் விழுந்து நன்றி சொன்னான். அதற்குப் பிறகுதான்
பேச்சுக் கொடுத்து அவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார் மாணிக்கவாசகன்.
தந்தை இல்லாத குடும்பம். கொஞ்சம் நிலங்கள் உண்டு. சொந்தமாக பம்ப்செட்டும் இருந்தது.
தாயும் மகனும் நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்து குடும்பம் நடத்தினர். எட்டு ஆண்டுகளுக்குப்
பிறகு மீண்டும் அந்தப் பெண்மணி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது கருப்பைநீக்க அறுவை
சிகிச்சை செய்துகொண்டாள். பையன் இப்போது இளைஞனாகிவிட்டிருந்தான். தன் அம்மாவை கண்ணும்
கருத்துமாக கவனித்துக்கொண்டான். ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவள் மருத்துவமனைக்கு வந்தாள். வயிற்று
வீக்கம். வலி. சோதனைகளில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. அப்போதும் அவன் துணைக்கு
வந்திருந்தான். கையிலும் கழுத்திலும் தங்கச்சங்கிலிகள் கண்ணைப் பறித்தன. அவனுடைய புதுக்கோலம்
அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. புற்றுநோயைப்பற்றியும் அவளைப் பிழைக்கவைப்பது கடினம்
என்பதையும் நோயாளியிடம் எப்படி தெரிவிப்பது என்று மருத்துவருக்கு ஒரு தயக்கம் இருந்தது.
அதனால் அவரைப் பார்ப்பதை ஒன்றிரண்டு நாட்கள் தவித்தார். பிறகு உண்மையைச் சொல்வதற்காக
அந்தப் பெண்மணியைச் சந்தித்தார். துணைக்கு
இருந்த மகனை சாப்பிட்டு வருமாறு சொல்லி அனுப்பிவைத்தாள் அவள். பிறகு, மருத்துவர் பேசுவதற்கு முன்பாக, மருத்துவரிடம்
அவள் மனம் திறந்து பேசத் தொடங்கினாள். தனக்கு வந்திருக்கும் நோய் பற்றியும் தான் பிழைப்பதற்கு
வாய்ப்பில்லை என்பது பற்றியும் தனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொன்னாள். நிலத்தில்
தன்னோடு உண்மையாகப் பாடுபட்டு உழைத்த மகனுக்கு திருமணம் செய்துவைத்ததையும் அதற்குப்
பிறகு அவனுடைய இயல்பு கொஞ்சம் கொஞ்சமாக திரிபடைந்துவிட்டது என்றும் சொன்னாள். செல்வம்
சேர்க்கும் ஆசையால் மகன் சேரத் தகாதோரிடமெல்லாம்
கூட்டுசேர்ந்து கெட்டுப் போனதையும் அவர்களோடு சேர்ந்து கோவில் நகைகளைத் திருடி விற்றுப்
பணமீட்டுவதையும் சொன்னாள். ஒரு நள்ளிரவில் வீட்டுக்குப் பின்பக்கம் ஒரு சிலையைப் புதைத்துவைப்பதை
நேருக்கு நேர் பார்த்தபோது அடிவயிற்றில் சுருக்கென்று ஒரு வலி படர்ந்ததையும் அக்கணத்திலிருந்து
அந்த வலி பாடாய்ப்படுத்துவதையும் சொன்னாள். “என்னைத் தண்டிச்சதோடு விட்டுடு தெய்வமே,
என் குடும்பத்தை ஒன்னும் செஞ்சிடாத. என் புள்ளைக்கு நல்ல புத்தியை கொடு” என்பது மட்டுமே இறைவனிடம் தான் முன்வைக்கும் பிரார்த்தனை
என்றும் சொன்னாள். “அறுதலை பெத்த தருதலையாயிடுச்சின்னு நாலு பேர் சொல்றத காது கொடுத்து
கேக்கறதுக்கு முன்னால நான் போய் சேர்ந்துடணும். என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க டாக்டர்.
எனக்கு ஆப்பரேஷன்லாம் செய்யவேனாம். போற உயிர் என் வீட்டுலயே போகட்டும்” என்று கேட்டுக்கொண்டாள். ஒழுக்கத்துக்கும் பாசத்துக்கும்
நடுவில் ஊசலாடும் அந்தத் தாயின் வேதனை பல நாவல்களுக்குரிய களம்.
செயற்கை சுவாசம் கொடுக்கக்கூடிய வென்டிலேட்டர்
கருவிகள் இல்லாத ஒரு காலத்தி மாணிக்கவாசகம் பணிபுரிந்திருக்கிறார். மூச்சுக்குத் தேவையான ஆக்சிஜனை ஒரு பையில் நிரப்பி,
அதை ஒருவர் ஒரு நிமிடத்துக்கு பதினைந்து முறை என்கிற கணக்கில் சீராக அழுத்தி அழுத்தி
சுவாசத்துக்காக இணைக்கப்பட்டிருக்கும் குழாய் வழியாக அனுப்புவதுதான் அன்றைய நடைமுறையாக
இருந்தது. ஒருமுறை, திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துவிட்ட மருத்துவக் கல்லூரி மாணவியொருத்தியை
அறுவைக்கூடத்தில் சேர்த்து சிகிச்சையளிக்கும் நெருக்கடி உருவானது. அறுவை முடிந்த பிறகும் சுயநினைவு திரும்புவதற்குத்
தேவையான மருந்துகளை அளித்தபோதும் அவள் சுயநினைவுக்குத் திரும்பவில்லை. அவள் பிழைப்பாளா
மாட்டாளா என்பதைத் தெளிவுற எடுத்துச் சொல்ல இயலாத நிலையில், இரவும் பகலும் மருத்துவர்கள்
மாறிமாறி உட்கார்ந்து பன்னிரண்டு நாட்கள் தொடர்ச்சியாக செயற்கை சுவாசமளித்தனர். பதின்மூன்றாவது
நாள் அவள் மெதுவாக கண்விழித்துப் பார்த்தாள். பிறகு மெல்ல மெல்ல சுயநினைவு பெற்றாள்.
ஓர் உயிரைக் காப்பாற்றுவது எவ்வளவு பெரிய மனநிறைவு என்பதை அனைவருமே அக்கணத்தில் உணர்ந்துகொண்டனர்.
தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை
என்பதற்காக பெற்றோர்கள் மகனிடம் சில கடுமையான சொற்களைச் சொல்லிவிட்டனர். அதைக் கேட்டு
மனமுடைந்த மகன் மூட்டைப்பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி
செய்திருக்கிறான். உண்மையைத் தெரிந்துகொண்ட அவனுடைய பெற்றோர் அவசரமாக அவனை மருத்துவமனைக்கு
அழைத்துவந்தனர். உடனடியான முதலுதவி அவனுக்கு வழங்கப்பட்டது. பல மணிப் போராட்டத்துக்குப்
பிறகும் அவனைக் காப்பாற்ற இயலவில்லை. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவனுடைய
மரணம் நிகழ்ந்தது.
மருத்துவரின் ஆசிரியர் ஒருவர் தன் மனைவியை
அறுவைசிகிச்சைக்காக சேர்த்திருந்தார். கருணை நிறைந்தவர் அந்த ஆசிரியர். பள்ளியிறுதிக்கான
தேர்வுகளை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு மாணவனுடைய தந்தையார் இறந்துவிட்டார். அன்றுதான்
இறுதித்தேர்வு. அவனுடைய வீட்டுக்குச் சென்ற அந்த ஆசிரியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி,
மெல்ல பள்ளிவரைக்கும் அழைத்துவந்து தேர்வெழுத வைத்து, மீண்டும் அவனை வீடு வரைக்கும்
அழைத்துச் சென்று இறுதிச்சடங்கு முடியும் வரைக்கும் உடனிருந்துவிட்டுத் திரும்பிய பெருந்தன்மையாளர்.
அப்படிப்பட்டவரின் மனைவிக்குத்தான் அறுவைசிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவைசிகிச்சை
நல்லபடியாகவே முடிந்தது. மயக்கம் தெளிவதற்கான மருந்துகளைக் கொடுத்தபோது பிரச்சினை உருவானது.
எதிர்பார்த்தபடி அம்மருந்து வேலை செய்யவில்லை. தசைகள் ஊக்கம் பெற்று மீண்டும் செயல்படத்
தொடங்கி சுயநினைவு கூடிவர வேண்டிய நிலையில் அவர் நினைவு திரும்பாமலேயே இருந்தது. ஏன்
அந்தச் சிக்கல் ஏற்பட்டது என்பதை ஒருவராலும் ஊகிக்கமுடியவில்லை. அறிந்துகொள்ள முடியாத
ஏதோ ஒரு ரசாயனமாற்றம் உடலுக்குள் நிகழ்ந்து அவருடைய உயிரைப் பறித்துவிட்டது. ஆசிரியரின்
மனைவியுடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என்பது நினைவில் ஆறாத வடுவாக பதிந்துவிட்டது.
இரு மாத இடைவெளிக்குப் பிறகு ஆசிரியரைச்
சந்தித்து ஆறுதலாகப் பேசிவிட்டு வரலாம் என்று சென்றார் மருத்துவர். எதிர்பாராத கணத்தில்
பள்ளியில் ஒரு மாணவர் தவிர்க்கவேண்டிய பிழைகளைப்பற்றி அவர் எடுத்த பாடத்தைப்பற்றியதாக
பேச்சு திரும்பியது. கல்லாப்பிழை, கருதாப்பிழை, நெஞ்சில் நில்லாப்பிழை, நினையாப்பிழை,
சொல்லாப்பிழை, எழுதாப்பிழை என பிழைகளின் பட்டியலை மீண்டும் பகிர்ந்துகொண்டனர். அந்த
மரணத்தில் என்ன பிழை நடந்தது என்று எங்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை ஐயா என்று
வருத்தத்துடன் அவர் தெரியப்படுத்தினார். அப்போது “இன்னொரு பிழையும் அப்பட்டியலில் உண்டு.
சின்ன வயதி உங்களுக்குப் புரியாது என்பதால் நான் சொல்லவில்லை. இப்போது புரியும். அது
முன்னம் எழுதினவன் கைப்பிழை” என்றார் ஆசிரியர். அது ஒரு ஆறுதல் சொல் என இருவருக்குமே
தெரியும். மனிதர்கள் தம்மைத்தாமே தேற்றிக்கொள்ள இப்படி சில ஆறுதல் சொற்கள் சில நேரங்களில்
தேவைப்படுகின்றன.
நூல் முழுக்க இப்படி எண்ணற்ற அனுபவக்குறிப்புகள்.
தொழிலில் அர்ப்பணிப்பு உணர்வு மிக்க ஒரு மருத்துவரின் வாழ்க்கையில் எண்ணற்றோரின் வாழ்க்கைத்துளிகள்
கலந்திருக்கின்றன. மருத்துவர் மாணிக்கவாசகம் வாழ்ந்த வாழ்க்கையை போற்றத்தக்க பெருவாழ்வு
என்று சொல்லலாம்.
(தூங்காமல்
தூங்கி.- அனுபவக்கட்டுரைகள். எஸ்.மாணிக்கவாசகன். ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை.
சந்தியா பதிப்பகம், 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை -83. விலை.ரூ.110)
(புக் டே – 17.06.2022)