Home

Saturday, 11 June 2022

படிமமும் பார்வையும் : எஸ்.வைத்தீஸ்வரன் கவிதைகள்

 

 ஒரு கவிதையைப் படிக்கும்போது  அக்கவிதையில்  காண நேர்கிற

அபூர்வமான சொல்லிணைவுகளும் படிமங்களும் படிப்பவர் மனத்

தில் உடனடியாக அழுத்தமாக  இடம்பெற்றுவிடுகின்றன.அபூர்வ

மான சொல்லிணைவுகள் ஒருபோதும் திட்டமிட்டு உருவாக்

கப் படமுடியாதவை.

 

காலமெல்லாம்  சொற்களைச் சுமந்து திரிகிற கவிஞனின் ஆழ்மனம்

எழுச்சிமிகுந்த ஒரு கணத்தில் அவற்றை வெளிப்படுத்துகின்றன.

அந்தச்  சொல்லிணைப்புகளிலிருந்துதான் கவிதை பிறக்கிறது..

பிறகு மெல்லமெல்ல இணைப்பு உருகிஉருகி தனக்கு முன்னும்

பின்னுமான சொற்களைத் தேடிக்  கட்டமைத்துக்கொள்கிறது.

 

 இந்த ஒருங்கிணைவு  ஒருகோணத்தில்  கவிஞனின் அகஉலகத்தை

யும்மனப்பார்வையையும்  உணர்ந்துகொள்ள ஒரு தொடக்கப்புள்ளி

யாக அமைகிறது.  வாசகனின் கவிதைப்பயணம் இந்தப் புள்ளியிலி

ருந்து தான் மேலெழுகிறது. நுட்பத்தையும் தெளிவையும் தேடித்

தேடித் தாவும்பயணம் அது..  இந்த அனுபவம் ஒரு கவிதை

வாசகனுக்கு மிகவும்முக்கியமானது.  கவிதைகளை மீண்டும் 

மீண்டும் அசைபோடும்தோறும் இந்த  அனுபவங்களின் 

உலகம்  விரிவடைகிறது.

 

ஒருபுறம் கவிதையின்  அனுபவம் மனத்தின் மீது மோதிக் கொண்

டிருக்கும்போதே  நம்மையறியாமல் தினசரி  வாழ்வின் அனுபவம்

நம்மீது மோதுகிறது. இரண்டு நதிகளின் சங்கமக்கரையில் நிற்பது

போல, இருவித  அனுபவங்களுக்கு   இடையே  நிற்கிறது மனம்..

அலைகள் ஒன்றுடன் ஒன்று  முயங்குவதையும்  புரள்வதையும்

பின்வாங்குவதையும் முன்னோக்கிப்  பாய்வதையும்  வெகுநேரம்

வேடிக்கை பார்க்கிறது.கவிதையின் அனுபவத்தை  வாழ்க்கை

அனுபவம்  ஏற்றுக்கொள்கிறது.மனத்தின் இசைவு  தேவையற்ற

நிலையில் பொங்கிப்புரளும்  உணர்வுகளின் சங்கமம்  தானாகவே

நிகழ்கிறது.

 

அக்கணத்தில் மின்னல் வெளிச்சம்போல  பளீரிடுகிறது ஓர் அர்த்தம்.

 ஒரு தீக்குச்சி எரியும் நேரத்தில் இருட்குகையில் ஒரே  கணம்

மட்டும் காணநேர்ந்த  சிற்பத்தின் அழகுபோல.கனவுபோல ஒருகணம்

தோன்றி மறைந்த அர்த்தத்தை உறுதிப்படுத்திக்கொள்ள  அதை வாழ்வ

னுபவத் தளம் வரை  இழுத்துவந்து  நிறுத்துகிறது மனம்.

 

கொடியில் மலரும் பட்டுப்பூச்சி

கைப்பிடி நழுவிக்

காற்றில் பறக்கும் மலராச்சு.

 

 

என்பது வைத்தீஸ்வரனின்  தொடக்கக்காலக்  கவிதைகளில் ஒன்று

கொடியில் மலர்ந்திருக்கும்  மலர் கவிஞரின்  பார்வையில் பட்டுப்

பூச்சியாகத்  தெரிகிறது.  காற்றில்  உதிர்ந்து பறக்கும்போது மலராகத்

தெரிகிறது.

 

மரத்தை  மறைத்தது மாமத யானை. மரத்தில் மறைந்தது

 மாமத யானை என்னும்  திருமந்திரத்தின் வரிகள் ஒருகணம்  மனத்

தில்தோன்றி  மறைகின்றன. பட்டுப்பூச்சி மலராகக்  காட்சிப்படுத்தப்

படுகிறது.

 

மலர்  பட்டுப்பூச்சியாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.  இந்த உருமாற்றத்

தையும் இடமாற்றத்தையும் கவிஞரின் கண்கள் நிகழ்த்துகின்றன.

 

இந்த  மாற்றங்கள் வழங்கும் உற்சாகமும் கிளர்ச்சியும் அளவற்றவை.

வசீகரமான  நிறங்களாலும் அழகாலும் பார்த்த கணத்திலேயே

கண்களையும் கவனத்தையும் கவர்கிறது. பட்டுப்பூச்சி.  மேலும்

மென்மையானது. பட்டுப்பூச்சிக்கு  நிகரான வசீகரம் மலரிடமும் 

காணப்படுகிறது.  அதுவும் மென்மை  மிகுந்ததாகவே

உள்ளது.

 

பட்டுப்பூச்சிக்கும் மலருக்கும் நுட்பமான  வடிவ வேறுபாட்டைத்

தவிர குணநலன்களின் அடிப்படையில் எந்த  வேறுபாடும் இல்லை.

மலரே பட்டுப்பூச்சியாக இருக்கிறது.  பட்டுப்பூச்சியே    மலராக

வும் இருக்கிறது. உயிர் ஒன்று. உடல்கள்  இரண்டு.  இப்படி ஓர் 

ஆச்சரியத்தை உணர்கிற நம் வாசக அனுபவத்தால்  நம் மனம்

ஒருவித பேரமைதியில் ஆழ்ந்துவிடுகிறது.

 

தொடக்கத்தில் கவிதை வரிகளைக் கண்டதும் நம் மனத்தில்

தொற்றிக்கொண்ட பதற்றத்துக்கு நேர்மாறான அமைதி.  அந்த

அமைதியை  உடைத்துக் கொள்ளவே  நம் மனம் விரும்புகிறது.

முகத்தில் தீயின் அனல் அடித்தது போல மனம் உணர்ந்த

பதற்றத்துக்கு எது காரணமாக இருக்கும். என்று யோசிக்கத்

தொடங்குகிறோம்.

 

குறுந்தொகையில் பரணர் பாடிய பாடலொன்றில்  இடம்பெறும்

காட்சியொன்றை இங்கே  நினைவுபடுத்திக் கொள்ளலாம்..

 தொடக்கத்தில் கரும்பாறை என்று எண்ணி  அதன்மீது  நம்பிப்

படர்கிறது ஒரு கொடி. சிறிது நேரத்துக்குப்  பிறகுதான் அது கரும்

பாறையல்ல  உறங்கிக்கொண்டிருந்த களிறு என உணர்கிறது..

அசையாதபோது கரும்பாறை. அசைந்து நின்றபோது களிறு.

 

காட்சிமயக்கத்தில் நம்பிக் கெட்ட கொடியின்  பரிதவிப்பை, நம்பித்

தோற்கிற இளம்பெண்ணின் படிமமாக்கி  காலகாலத்துக்கும் நிற்கும்

படி செய்துவிட்டது பரணர்.  கவிதை.  கிட்டத்தட்ட வைத்தீஸ்

வரனின்கொடிக்கு நிகழ்வதும் காட்சிமயக்கம்  தான்  தன் மெல்

லுடலை கிழித்துப் பிறந்தது  வெறும் மலரல்ல. பட்டுப்பூச்சி என்கிற

பெருமையும் மயக்கமும் கொடியிடம் வெளிப்படுகிறது.

 

 ஈன்ற  பொழுதினும் பெரிதுவக்கும் தாய்போல.  எல்லாம் ஒரு

கணமே. மறுகணம்இற்று விழும்போதுதான்  அது பட்டுப்பூச்சியல்ல..

எளிய மலர் என்கிற இயற்கை புரிகிறது. ஆண்டாண்டு காலம்

அழுது புரண்டாலும் இற்றுவிழுந்த மலர் கொடிமீது  மீண்டும் இடம்

பெறுவது சாத்தியமே இல்லை. கொடியின் துக்கமே

இந்தக் கவிதை..கொடியிலிருந்து  பிரிந்துவிழும்

மலரின் காட்சி இனம்தெரியாத சங்கடத்தை அளிக்கிறது

பட்டுப்பூச்சியாக  வாழ்ந்ததெல்லாம் ஒரு சரித்திரமாக, கடந்த

காலமாக, கனவாக மாறிவிடுகிறது.

 

வரலாற்றில் மின்னிய  கோடிக்கணக்கான பேரழகுகளும் வசீகரங்

களும் வீரங்களும் ஒரு கணத்தில் மலராக மண்ணில் உதிர்ந்து

மறைந்துவிடுகிறது. அவை  மறையும் ஒவ்வொரு கணமும்

மானுடத்தின் துக்கம் மீண்டும் மீண்டும் அழுத்திக்  காட்டப்படு

கிறது.

 

வரலாற்றிலிருந்து  எதையும் பாடமாக உணராத  மனம்  பட்டுப்

பூச்சியாக வசீகரம் காட்டி  வாழ்ந்து இற்றுச் சரியும் மலராக  விழுந்து 

போகிறது..மானுடமனம் ஏன்  ஒருபோதும்  எதையும்  உணர்வ

தில்லை என்கிற கேள்விதான் பதற்றத்தை  அளிக்கிறது.

 

வைத்தீஸ்வரனின்  வரிகளுடன் இப்போது ஆழ்ந்த உறவு உருவா

வதைஉணரமுடியும்.காட்சிமயக்கத்தைக்  காட்டும் மற்றோர்  கவிதை

"மயில்-மரம்". இருள் அடர்ந்த  வேளையில் தோகை விரித்த மயில்

போல நிற்கிறது. மரம்.  பனியடர்ந்த  காலையில் ஒளியை ஏற்றதும்

மயில் மறுபடியும் மரமாகிவிடுகிறது.

 

பொய்விழி என்னும்  கவிதையையும் இவ்வகையில் சேர்த்துக்

கொள்ளலாம்.இரண்டு வெவ்வேறு காட்சிகள் இக்கவிதை

யில் இணைக்கப்படுகின்றன.ஒரு கிளையில் ஒரு குருவி சிறிது

நேரம் அமர்ந்திருக்கிறது. பிறகு பறந்துபோகிறது. அது பறந்து

போனாலும் அதை ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்த  கண்களில்

இன்னும் பறந்தபடியே  இருக்கிறது.  இது ஒரு காட்சி.

 

சிறிது நேரத்துக்குப் பிறகு வேறொரு குருவி அதே கிளையின்மீது

வந்து உட்கார்கிறது.  அந்தக் குருவியைப் பார்த்த கண்கள் பழைய

குருவியைஇன்னும் ஆசையோடு நினைத்துக்கொள்கிறது.

 

கண்முன்னால் உள்ள குருவியின் வடிவில் பழைய குருவி

யின் உருவத்தையே விழிகள் காண்கின்றன. உண்மையான

விழிகள் உண்மையான  குருவியைக் காணும்போது

பொய்விழி மறைந்துபோன  குருவியையே 

நினைத்துப்  பார்த்துக்கொள்கிறது.

 

ஓர் இழப்பை இன்னொன்றின் வழியாக ஈடுகட்டி நிறைவடையும்

மானுட மனத்தின் இயல்பு  இக்கவிதையில்  வெளிப்படுத்துவதை

உணர்ந்துகொள்ள  முடியும். பெற்றெடுத்த தாயின் முகத்தை,

அவள் மறைவுக்குப் பிறகு  குழந்தையின் வடிவில் பார்த்து ஆறுதல்

கொள்பவர்கள் உண்டு. பழகி விலகிய காதலியின் முகத்தை

வேறொருத்தியின் முகச்சாயலில் கண்டு நிறைவடைபவர்களும்

உண்டு. தன் குழந்தையின்  முகத்தை இன்னொரு குழந்தையைப்

பார்த்து நினைத்து மனம் பூரிக்கிறவர்களும் உண்டு. ஏதோ ஒருவகை

யில் நிகழ்காலம்  என்பது தொலைந்துபோன  இறந்த

காலத்தை ஈடுசெய்கிறது.

 

"நகரச்சுவர்கள்

நகராத பாம்புகள்"

 

என்ற சின்னஞ்சிறிய சித்திரக்கவிதையும் ஒருவித காட்சி மயக்கத்

தையே முன்வைக்கிறது. ஊர்ந்து செல்லக்கூடிய பாம்புகளை

நிற்கும் சுவர்களுடன் இணைத்துப்  பார்ப்பதற்கு கவிஞரை

எது  தூண்டியிருக்கக்கூடும் என்று கவிதையைப் படித்து  முடித்த

துமே எண்ணத் தொடங்குகிறோம்.

 

பாம்பு எப்போது  நகர இயலாத ஒன்றாக மாறுகிறது? அளவுக்கு

மீறிய இரையை  எடுத்த பிறகு தான் முன்னகரவும் முடியாமல்

பின்னகரவும் முடியாமல் அப்படியே  விழுந்துகிடக்கிறது.

மெல்லமெல்ல அதைச்  செரித்துக் கரைத்துத் தெளியும்வரை

அதன் நகராத நிலையில்  மாற்றம் பிறப்பதில்லை.

 

அடுத்தவர்களுக்குச் சேரவேண்டியதை தன்  சாமர்த்தியத்தால்

சுருட்டி எடுத்துக்கொண்டு தன்னுடையதாக்கி  பத்துத் தலை

முறைகளுக்கு பணம் சேர்த்துவைத்திருக்கிறவர்கள்  நகர

முடியாத  அளவுக்குத் தின்றுவிட்டு கிடக்கிற பாம்புகளைப் 

போன்றவர்கள்.. நகரத்தில் பெரும்பகுதியை அத்தகைய

வர்களே வளைத்துவைத்துக்கொண்டிருக்கிறார்கள்  இன்னும்

எஞ்சிய பகுதியை  வளைத்து  வைத்திருப்பவர்கள்  உலகமய

மாக்கலால் நவீன பணக்காரர்களாக உருமாற்றப்பட்ட புதிய

தொழல்நுட்பப் பொறியியல் பட்டதாரிகள். இருபத்தைந்து

வயதில்ஐம்பது லட்சரூபாய்க்கு வீடு வாங்கிக் குடியேறுகிறவர்

கள்முதலில் குறிப்பிடப்பட்டவர்களைப்போல யாரையம் நேரிடை

யாக இவர்கள் வஞ்சித்ததில்லை என்றபோதும் மறைமுகமாக

இந்தச் சமூகத்தின் சமநிலைக்குலைவுக்குக் காரணமாக இருக்கிறார்

கள் இவர்கள். 

 

நகர்முழுதும் நிறைந்திருப்பவை இத்தகையோரின் கட்டடங்

களே அளவுமிகுந்த இரையால்நகரமுடியாத பாம்புகள் இக்கட்ட

டங்களுக்குப் பொருத்தமான படிமமாகவே தோன்றுகிறது.

 

சுவர்கள் மானுடனின் சுபாவத்தைஅடையாளப்படுத்தும்

படிமம்.  பாம்பு என்ற சொல் உண்மையில் சுவர்களைச் சுட்டாமல்

சுவர்களை எழுப்பிய தன்னலப்பிறவிகளின் கூட்டத்தைக்

குறிப்பாகச் சுட்டிக்காட்டிகிறது.

 

 நகரத்தின் புறக்கணிப்பைச் சித்தரிக்கும் கவிதை "உயிரின் வலி".

இக்கவிதையில் நகரத்தில் ஓசைகள் மிகுந்த ஓரிடத்தைத் தன்

வார்த்தைகளால் கட்டியெழுப்புகிறார் வைத்தீஸ்வரன்.  ஒரு

பாலம். ரயிலோட்டத்தால் இடியோசைபோல எழுகிற சத்தம் எல்லா

ருடைய காதுகளையும் துளைக்கிறது. பாலத்தின் அடியில்

இயங்குகிற வெல்டிங் கடைகளிலிருந்து எழுகிற ஓசையும் காதை

எட்டுகிறது.  பிறகு, பாலத்தையொட்டி  இயங்கக்கூடிய மாவரைக்கிற

இயந்திரங்களின் ஓசை, நாய்களின் கூச்சல்,அரக்கப்பரக்க நடமாடும்

 மனிதர்களின் ஓசை என எல்லாவிதமான  ஓசைகளையும்

செவிவழியாக மனம் பதிவு செய்துகொள்கிறது.

 

இத்தகைய சூழலில் பாலத்தின் அடியில் ஓரமாக கந்தலாடைக்

குள்  சுருண்டு மரணப்படுக்கையில் கிடக்கிற ஒரு மனிதனின் முனக

லொலி அமுங்கிப்போய்விடுகிறது.  உயிர் பிரிந்துபோகிற

வலியும் வேதனையும் அந்த முனகலில் அடங்கியிருக்கின்றன.

 

எல்லா ஓசைகளையும் காதுகொடுத்துக் கேட்கிற மனிதனின் இதயத்

தில் மரணப்படுக்கையில் உள்ளவனின் முனகலைக் கேட்க

இடமில்லை.  உயிர் பிரிவதைவிட வேதனையானது இந்தப் புறக்கணிப்

பின் வேதனை. வாய்முனையில் மொய்க்கத்தொடங்கி

விட்ட  எறும்புகளைக்கூடதள்ளிவிட தேவையான சக்தியில்

லாமல்  மரணத்தைநோக்கிச் சரிகிறவனின் முனகல்

யாருடைய காதுகளையும் எட்டாமல் காற்றில்

கலந்துபோகிறது.  மனிதன் ஏன் இப்படி மாறிப்போனான் என்கிற

கேள்வி நம் மனத்தில்  விடையின்றி எஞ்சி நிற்கிறது.

 

 எதார்த்த வாழ்வில் ஒரு வீட்டை என்னுடையது என்று உரிமை

பாராட்டுகிறோம். வீட்டையொட்டி நாம் வளர்த்த தோட்டத்தை

என்னுடையது என்று உரிமை பாரட்டுகிறோம். தேவையையொட்டி

நாம் அகழ்ந்தெடுத்த  கிணற்றை என்னுடையது என்று உரிமை

பாராட்டுகிறோம்.  உரிமை கொண்டாடத்தொடங்கும் மனநிலை

உலகில் எதையும் விட்டுவைப்பதில்லை. ஒரு கட்டத்தில்

சாக்கடைக்குக்கூட உரிமைகொண்டாடத் தொடங்குகிறது.

உரிமையை நிலைநாட்ட வேண்டும்  என்கிற துடிப்பு,

அச்சாக்கடையைக்கூட யாரும் அண்டிவிடாமல் காக்கத் துடிக்கிறது.

அப்படிப்பட்டதுடிப்பின்  சித்திரத்தை எஸ்.வைத்தீஸ்வரனின்

"உரிமை" என்னும் கவிதை முன்வைக்கிறது.

 

சாக்கடைக்கு உரிமை கொண்டாடும் ஒருவரையும் அவருடைய

அதிகாரத்தை மீறி அதில் படுத்துப் புரளும் நாயையும் காட்டுகிறது

கவிதை. விரட்டும்போதெல்லாம் வெளியேறி ஓடி மீண்டும் வந்து

சாக்கடையில் படுத்து சுகம்  காண்கிறது நாய்.  சுகம் பழகப்

பழக நகரக்கூட மனமில்லாமல் அதட்டும்  குரலைப் பொருட்

படுத்தாமல் சாக்கடைச் சுகத்தில் திளைக்கிறது.  என்

வீட்டுச் சாக்கடையில்  யாரோ ஒருவரின் நாய்  எப்படி சுகம்

காணமுடியும் என்னும்  ஆத்திரத்தில் மனிதமனம் கொதிப்படை

கிறது. தடியெடுத்து அடித்து விரட்டுகிறான்  குரைத்துக்கொண்டே

அது உடலை உதறியபடி வெளியேறி ஓடும்போது சாக்கடைச்சேறு

நாலாபுறங்களிலும் தெறிக்கிறது.  சேற்றின் ஒரு துளி அடித்து

விரட்டுபவனின்  உதட்டிலும் தெறிக்கிறது.எள்ளல் தன்மை மிகுந்த

காட்சியைச் சித்தரிக்கும் கவிதை.

 

'என் வீட்டுச் சாக்கடைச் சகதி' என்று  முடிவடைந்தாலும் "அது

இனிக்கவா  போகிறது?" என்றொரு  கேள்வி மறைந்திருப்பதை

படிக்கும்போது  உணரலாம்  அக்கேள்வியின் தொடர்ச்சியாக ஏராளமான

எண்ண அலைகள் எழுந்து  விரிவடைந்தபடி செல்கிறது.  இங்கு சாக்கடை

என்பது எது?  சாக்கடை ஏன் உருவாகிறது?சாக்கடையைத் தேங்க

விடுவது  சுற்றுச்சூழலுக்கு  ஆரோக்கியமானதல்ல.. என்பது மனிதனுக்

குத்தெரியாத உண்மையா?  தெரிந்தபிறகும்  சாக்கடையைத்தேங்க

விடுவதன்  உள்நோக்கம் என்ன? சொந்தம் கொண்டாடும் அளவுக்கு அதன்

மீது ஈடுபாடு பிறந்தது எப்படி? தன் வீட்டுசாக்கடையில்  அடுத்த வீட்டு

நாய் படுத்துறங்குவதை பொறுத்துக்கொள்ளாத மனம் தன் வீட்டு நாய்

 படுத்துப்புரளநேர்ந்தால் பொறுத்துக்கொள்ளுமா?  இப்படி ஏராளமான

கேள்விகள்  தோன்றிய  வண்ணம்  உள்ளன.

 

மனிதர்கள் மாறினாலும் மாறாத ஒரு  மரத்தைப்பற்றிய ஒரு

சித்திரமும் வைத்தீஸ்வரனின் கவிதைகளில் உண்டு.

அக்கவிதையின் பெயர்  "கருணை".  தரையில் நிழல்பரப்பிய

படிநின்றிருக்கிறது ஒருபெரிய மரம்.  ஒரு தாயின் கருணையைப்போல

குளிர்ந்திருக்கிறது அந்த நிழல். கனிமரம்  என்பதாலேயே அம்மரத்தை

நாடி பல பறவைகள்  வந்தமர்கின்றன  பறவைகளின் நிழல்களும்

கீழே தரையில் படரத்  தொடங்குகின்றன. மரத்தின்மீது பறவைகள்

அமர்வதுபோல  மரநிழலின்மீது   பறவைகளின் நிழல்கள் அமர்கின்றன.

தன்  கிளைகளில் அமர்ந்த பறவைகள் உண்பதற்காக  பழங்களை வழங்கு

கிற மரம், தன் நிழலில்  இளைப்பாறுகிற பறவைகளின் நிழல்களும்

பழங்களை  உண்ணும்பொருட்டு தாய்மையுணர்வோடு தன்

கனிகளை கீழே உதிர்க்கின்றது மரம் அதை கனியோ, கனிவோ என்று

தனக்குள் கேட்டுக்கொள்கிறான்  இக்காட்சியின் பார்வையாளன்

பார்வையாளனின்  இக்கேள்விக்கு  அவசியமே இல்லாதபடி மரத்தின்

கனிவை  நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப்  போர்வையும் அளித்த  வள்ளல்

களின் கொடைமடம், இவ்விடத்தில் ஓர் எளிய மரத்திடமும்  வெளிப்

படுகிறது.

 

ஊர்நடுவே பழுத்த  மரம்போல வாழும் மனிதரின் சமூகமதிப்பை

ஒரு திருக்குறளில்  பாராட்டுகிறார்  வள்ளுவர். பறவைக்கும்

ஈந்து, பறவையின் நிழலும்  ஔ்கும்   ஈந்துவக்கும் மரத்தை  நமக்குப்

படம்பிடித்துக்  காட்டுகிறார். வைத்தீஸ்வரன்.

 

"நிழல்இலை" என்னும் கவிதையில்  வைத்தீஸ்வரன்  சுட்டியெழுப்

பும்சித்திரம் வசீகரம் மிகுந்தது. குளத்தங்கரையோரம்  நிற்கிறது ஒரு

மரம்.அதன் நிழல் குளத்தில் ஒரு துணியைப்போல மிதக்கிறது.  இலை

களின் நிழல்  நடனநங்கையொருத்தியின் நளின அசைவுகளைக் காட்

டும் விரல்களைப்போல உள்ளது. கரையோரம் நின்றபடி 

வேடிக்கை பார்க்கிறான்  ஒருவன். நிழலின் வசீகரம் அவனைக்

கவர்கிறது. நிழல்இலையைப் பறிக்கும் ஆவல் அவன்

மனத்தில் பொங்கியெழுகிறது. எப்படி பறிப்பது என்னும் வழி

புரியாமல்  தவிப்போடு நிற்கிறான் அவன். அவன் நிழலும்

காத்து நிற்கும் ஒருகொக்குபோல  நீர்ப்பரப்பில் விழுந்து நிற்கிறது.

நிழல்இலையைப் பறிக்கும் வழியறியாது தவிப்பவன் கரையின்

மேலே நிற்பவனா அல்லது கொக்குபோன்ற நிழலுடன் தண்ணீருக்குள்

நிற்பவனா என்கிற புதிரைநோக்கி நகர்கிறது நம் மனம்.

 

பறிப்பது என்பதே ஓர் இலட்சியத்தை அடையும் பயணம். நிழல்

இலையைப்பறிப்பது என்பது மாபெரும் கனவு.  நாம்

அனைவருமே மனத்துக்குள் ஏதேனும் ஒரு மாபெரும்

கனவைச் சுமந்துகொண்டிருப்பவர்களே.  ஒவ்வொரு நாளையும்

அந்தக் கனவை அடையும் ஆசையுடன்தான் கழித்துக்கொண்டிருக்

கிறோம்  வாழ்க்கையின் பொருளே அந்தக் கனவை நனவாக்

கிக் கொள்வதுதான்  வழியறியாத தவிப்பில் கனவுகள் கனவாகவே

எஞ்சிப்போய்விடுகின்றன. ஆனாலும் கனவை நனவாக்கிக்கொள்ளும்

வேட்கையில் மீண்டும்மீண்டும் மனிதகுலம் இயங்கியபடியே உள்ளது.

 

."கிளிநோக்கம்" என்னும் கவிதையில் வைத்தீஸ்வரன் சிக்கலான

ஒருபுதிரை மிகஎளிய வரிகளால் விடுவித்துக் காட்டுகிறார். காற்றில்

துடிக்கும் மின்னலென மேலும் கீழும் வாழ்வெல்லாம் பறக்கிற ஒரு

கிளிஅக்கவிதையில் இடம்பெறுகிறது. நல்லநிறமுள்ள கிளி அது.

பறப்பதை ஒரு லட்சியமாகக் கொண்டதுபோல காலம் முழுதும்

வானைச் சுற்றிச்சுற்றி வலம்வருகிறது கிளி.கிளிக்கு அழகு பறப்பது

தான் என்பதை அந்த அப்பாவிக் கிளி மறந்துவிடுகிறது. அழகான கிளி

என்று மக்கள் தன்னை அழைப்பதற்குக் காரணமான தன் அழகைத்

தானே காணும் ஆவலை அது நெஞ்சடிநிறைய சுமந்துகொண்டு திரி

கிறது. தன் அழகைக் காட்டும் கண்ணாடியைத் தேடி காலமெல்லாம்

பறந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறது. ஆனால் அது நடக்கவில்லை.

கிளியின் நிராசையோடு கவிதை முடிவடைகிறது.

 

தோற்றம், திறமை என இரண்டு வழிகளில் தன்னை வெளிப்படுத்திக்

கொள்பவன் மனிதன். ஆனால் மனித ஆற்றலை மதிப்பிடுவது என

வரும்போது தோற்றத்துக்கு அங்கே இடமில்லை.  திறமைக்கே

முதலிடம்.  மனித ஆற்றல் குன்றாத ஒரு சக்தியாக இத்தனை

நூற்றாண்டுகளாக ஓங்கி வளர்ந்துவந்திருக்கிறது. ஆற்றலுள்ளதே

மேலெழுந்து உறுதியாக  நிற்கும். ஆற்றலில்லாதவை. தளர்ந்து சரிந்து

மண்ணோடு மண்ணாகி மக்கிப்போகும் உள்நின்று மானுடனை

இயக்கும் இந்தச் சக்தியே இந்த உலகத்தின் ஆதார சக்தி அத்தகு

சக்தியை வெளிப்படுத்தத்  தெரிந்த ஒருவன் ஊராரின் புகழ்வார்த்தை

யில் மனம் பிறழ்ந்து திசைதிரும்பி  நடக்கத் தொடங்கினால், அவனு

டைய வாழ்க்கைக்கு  எவ்விதமான சமூகமதிப்புமில்லை. பாதை மாறிய

பயணம் வலிமைகுன்றி மண்ணோடு மண்ணாகிப் போகிறது.

 

நாம் அனைவரும் அறிந்த சிங்கம் நரியின் கதையை ஒருகணம்

நினைத்துக்கொள்வோம். காட்டின் அரசனாகிய சிங்கத்தின் கவனத்தை

சற்றே திசைதிருப்பி, இன்னொரு சிங்கம் கிணற்றுக்குள் இருக்கிறது

என்றுசொல்லி கிணற்றுக்குள்  தெரிந்த பிம்பத்தைக் காட்டி, நம்பவைத்த

நரியின் தந்திரம் தன் மரணத்தைத் தேடி தானேசெல்வது போன்ற சூழல்

சிங்கத்துக்கு உருவாகிவிட்டது. பலமடங்கு வலிமையும் வீரமும்

இருந்தும் கூட குண்டுமணியளவுக்குக் கூட அது பயன்படாமல்

போய்விட்டது.  கிளி, சிங்கம்,  மனிதன் என இயற்கையின்

படைப்புகள் அனைத்திலும் காணப்படும் பொதுவான அம்சமாக

ஒரு கேள்வியை உருவாக்கிக்கொள்ள கவிதை துணைநிற்கிறது.

அனைத்து உயிர்களும் தன் சொந்தத் திறமையாலும்

வலிமையாலும் மட்டுமே  இவ்வுலகில் உயிர்த்திருக்கின்றன.

ஒவ்வொரு உயிரின் அடையாளமும் அதன் சிறப்பான திறமை

யின் வழியாகவே வெளிப்படமுடியும். திறமையை வெளிப்படுத்து

வது, திறமையை வளர்த்துக்கொள்வது என்கிற அம்சங்களில்

மட்டுமே மனத்தின் கவனம் பதிந்திருக்கவேண்டும். இருந்தபோதிலும்,

தன் கவனத்தைத் திசைதிருப்பும் அம்சத்தின்மீதான தீராத இச்சைக்கு

மனம் ஏன் இடம் தருகிறது என்பதுதான் அந்தக் கேள்வி.

 

புதிர்த்தன்மை மிகுந்த மற்றொரு கவிதை "பாரங்கள்".

இக்கவிதையில் ஒரு சிறுவன் இடம்பெறுகிறான். தெருவிலும்

குப்பைத்தொட்டிகளிலும்  சிதறிக் கிடக்கிற கூளங்களையும் பிளாஸ்டிக்

குப்பைகளையும் தேடித்தேடிச் சேகரித்தபடி நடக்கிறான் அந்தச்

சிறுவன்.  வானத்தை ஒருகணமும் நிமிர்ந்துப்  பார்க்காமல் தரையில்

கிடக்கும் துண்டுத்தாள்களையும் இரும்புத்துண்டுகளையும் தேடித்தேடிப்

பார்த்தபடி அலைகின்றன அவன் கண்கள். அவனுடைய இயக்கத்தை

தொடக்கத்திலிருந்தே  கவனிக்கிற ஒருவனும் கவிதையில்

இடம்பெறுகிறான்.

 

சிறுவனின்  சுறுசுறுப்பையும் அலைதலையும் கண்டு

இரக்கம் கொள்கிறான். படிப்படியாக அவன்மீது  ஒருவித மதிப்பும்

உருவாகிறது. எதிர்பாராத ஒரு கணத்தில் இருவரும் எதிரும்புதிருமாக

சந்தித்துக்கொள்கிறார்கள்.

 

 சிறுவன் அவரைப் பார்த்த கணத்தில் அடக்கமுடியாமல் சிரித்து

விட்டுஓடிவிடுகிறான். சிரிப்புக்கான காரணம் புரியாமல் தவிக்கிறான்

இவன்.

 

காரணம் புரியாததால் அந்தச் சிரிப்பு அவர் மீது பெரும்பாரமாக

அழுத்தத்தொடங்குகிறது.  ஒருவன் முதுகில் குப்பையின் பாரம்.

இன்னொருவன் முதுகில் புரியாமையின் பாரம்.

 

தன் இரக்கத்துக்குக் கிடைத்த பரிசு இந்தச் சிரிப்புதானா என்கிற

வருத்தம்தான் மனிதனின் மனபாரத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

இந்த உலகத்தில் இரக்கப்படுவதே  குற்றமாகுமோ என்னும்

விளிம்புவரைக்கும் அவன் எண்ணத் தொடங்கலாம்.  இதையே

சொல்லிச்சொல்லிப் புலம்பி மற்றவர்கள்  மனத்திலும் இந்த

விதையை விதைக்கலாம்.

 

எல்லாவற்றுக்கும் சாத்தியம் உள்ளது. சிறுவனுக்கும்

மற்ற எல்லாரையும்போல நல்லஉடை உடுத்தி,  நல்ல உணவு

களை உண்டு, நல்ல கல்வி கற்று, பட்டம்  பெற்று வேலைக்குச்

சென்று கைநிறையச் சம்பாதித்து, சாப்பிட்டு நிம்மதியாக வாழ

வேண்டும் என்று கனவுகள் இருக்கும். நூற்றில் ஒரு  விழுக்காடு

கூட தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளும் வழி இல்லாத

தால்தான் தெருவில் சிதறிக்கிடக்கும் குப்பைகளைத் தேடித்தேடிச் 

சேகரித்து பிழைக்கிற வழியில் இறங்கியிருக்கக்கூடும்.

 

 வாழ்வில்  நெருக்கடிகள் அந்தப்  பாதையைத் தேர்ந்தெடுக்கும்

படிஅவனைத் தூண்டியிருக்கலாம்.  ஒருபுறம்  அப்படிப்பட்ட

நெருக்கடிகள் இந்த வாழ்வில் எந்தச் சிறுவனுக்கும் நேரக்கூடாது.

இன்னொருபுறம்  குப்பையும் செத்தையும் இல்லாதபடிதெருக்களும்

வாழ்க்கைத்தரமும் உயர்வானதாக  இருக்கவேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு சமச்சீரான சூழல்  உருவாகும்போது எல்லாம்

மாறக்கூடும்.  இரக்கப்படும் அவசியம் அப்போது ஏற்படப்போவ

தில்லை. ஏளனம் செய்யவும் அவசியமில்லை இவற்றை

யெல்லாம் காதுகொடுத்துக் கேட்கும்போது,  இதெல்லாம்

நடைபெறக்கூடிய விஷயம்தானா என்கிற சந்தேகம் நமக்கே

வந்துவிடுகிறது. 

 

அந்த அளவுக்கு நம் அமைப்பின்மீது நமக்கு அவநம்பிக்கை

மிகுதியாக உள்ளது. உலகத்திலேயே  உயர்ந்த குணம் இரக்கம்தான்.

ஆனால் செயல்துடிப்பற்ற  ஒரு சமூகத்தில்  தனிமனித இரக்கம்

மதிப்பிழந்த  செல்லாக்காசாக போய்விடுகிறது. அப்படிப்பட்ட

தருணத்தில்  நம்மை நோக்கிய சிரிப்பைக் கண்டு வேதனைப்

படுவதைத் தவிர  வேறு வழியில்லை.

 

பறவைகள், விலங்குகள், மரங்கள், இயற்கை, மனித  நடமாட்டம்

மிகுந்த இவ்வுலகம் என அனைத்தையும்  அகவயமாகப்

பார்க்கிறார்  வைத்தீஸ்வரன்.  அகவயமாக அவை காட்சிப்படும்

போதுஅந்தந்த மனநிலைக்குத்  தகுந்தபடி ஒவ்வொன்

றும் ஒவ்வொருவிதமான படிமமாக  மாற்றமடைகிறது.

அதனால்தான் ஒரு சாதாரண சுவர் வைத்தீஸ்வரனின்  கவிதையில்

வெறும் சுவராக மட்டுமே இடம்பெறாமல்  தன்னலமற்ற  மனிதர்

களின் படிமமாக மாற்றமடைகிறது.

 

கடந்த  அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து  கவிதைத்

தளத்தில் இயங்கிவரும் வைத்தீஸ்வரன்  உருவாக்கிய

படிமங்களை ஒருசேரத் திரட்டித் தொகுப்பதன்  வழியாக

அவரை   வழிநடத்தும் வாழ்க்கைப் பார்வையை அடையாளம்

காணமுடியும்.