01.01.1997 அன்று மதுரையிலிருந்து பிரிக்கப்பட்டு தேனி மாவட்டம் உருவானது. தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர், சின்னமனூர் போன்ற பல ஊர்கள் அந்த மாவட்டத்தில் உள்ளன. அனைத்தும் காடும் மலையும் சூழ்ந்த ஊர்கள். முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை, மேகமலை, வெள்ளிமலை, போடிமெட்டு, கும்பக்கரை அருவி, சுருளி நீர்வீழ்ச்சி போன்ற இயற்கைக்காட்சிகள் நிறைந்த இடங்கள் இங்கே நிறைந்துள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வீசும் காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலைகள் அடிவாரமெங்கும் நிறைந்துள்ளன.
இவையனைத்தும் தேனி என்னும்
ஊரைப்பற்றிய புவியியல் சார்ந்த தகவல்கள். இப்படிப்பட்ட புள்ளிவிவரங்களைச் சேகரித்து
தேனியின் வரலாற்றை எளிதாக எழுதிவிட முடியும்.
ஆனால் கவிஞர் விஜயானந்தலட்சுமி அப்படிச் செய்யவில்லை. ஊர்வரலாறு என்பதை மனிதர்களின்
வரலாறாகப் பார்க்கும் மனம் கொண்ட அவர், வரலாறாக வாழ்ந்து மறைந்த ஆளுமைகளைப்பற்றிய தகவல்களைத் தேடித்தேடி இந்தப்
புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் கவிஞர்கள், விடுதலைப்போராட்டத்
தியாகிகள், மொழிப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மருத்துவமனை கட்டியவர்கள், நோய்நொடிகளிலிருந்து
காப்பாற்றி ஊராரை வாழவைத்தவர்கள் என யாரேனும் ஒருவரைப்பற்றிய தகவல்கள் வந்துகொண்டே
இருக்கின்றன. அந்த ஆளுமைகளின் கொடிவழியில் வாழும் இன்றைய தலைமுறையினரைத் தேடிச் சென்று
சந்தித்து உரையாடி, அவர்கள் வழியாகவே தகவல்களைப் பெற்று தொகுத்திருக்கிறார். இந்த நூலை
ஒரு புனைகதைக்குரிய சுவாரசியத்துடன் வாசிப்பதற்கு விஜயானந்தலட்சுமியின் தொகுப்பாக்கம்
ஒரு முக்கியமான காரணம்.
ராணி மங்கம்மாள் 1689 முதல்
1704 வரை மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர். கணவரான சொக்கநாதரின்
மறைவுக்குப் பிறகு மகன் குழந்தைப்பருவத்தில் இருந்ததால், அவரே ஆட்சிப்பொறுப்பேற்று
நடத்தினார். அக்காலத்தில் அவருடைய பாதுகாப்பாளராக இருந்தவர் சின்னமநாயக்கர். அவரைக்
கெளரவிக்கும் வகையில் அவருடைய பெயரால் ஓர் ஊர் உருவாக்கப்பட்டு சின்னமநாயக்கனூர் என்று
பெயர் சூட்டப்பட்டது. காலப்போக்கில் அந்த ஊரின் பெயர் சின்னமனூர் என்று மருவியது. அங்கே
இந்துக்களுடன் ராணி மங்கம்மாள் அவர்களால் குடியமர்த்தப்பட்ட இஸ்லாமியர்களும் இணைந்து
வாழ்ந்தார்கள். இரு வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் நல்லிணக்கத்தோடு அப்பகுதியில்
வாழ்ந்தார்கள். ஏட்டில் எழுதப்பட்ட வரலாறு அந்தத் தகவலோடு நின்றுவிடுகிறது. இன்று வரலாற்றை
எழுதுபவர்கள் இப்படி தகவல்களை மட்டும் திரட்டி அளித்தால் போதாது. அத்தகவல்களை வரலாற்றின்
பின்னணியில் வைத்து நிறுவவேண்டும். கவிஞர்
விஜயானந்தலட்சுமி தன் இயல்பான ஊக்கத்தின் காரணமாக மெனக்கிட்டு அலைந்து, அப்பகுதியில்
வாழ்ந்த இஸ்லாமிய ஆளுமைகளைப்பற்றிய தகவல்களைத் திரட்டி, அந்த வரலாற்றை நிறுவியிருக்கிறார்.
மங்கம்மாள் காலத்து நல்லிணக்க வாழ்க்கைமுறை நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும் இன்றளவும்
நீடித்திருப்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.
விஜயானந்தலட்சுமி அளிக்கும்
ஹாஜி கருத்த ராவுத்தர் பற்றிய தகவல்கள் அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆவலை அளிக்கின்றன.
கருத்த ராவுத்தர் என அவர் அழைக்கப்பட்டாலும் அவருடைய இயற்பெயர் மீரான் ராவுத்தர். பிளேக்
நோயால் மக்கள் மரணமடையத் தொடங்கியதும், தன் சொந்தச் செலவில் பஞ்சாபிலிருந்தும் லாகூரிலிருந்தும்
மருந்துகளை வாங்கி அனைவருக்கும் வழங்கினார். ஏழைகளைக் காத்த அவருடைய வரலாற்றை அந்தோணிமுத்துப்பிள்ளை
கவிதைகளாக எழுதியுள்ளார். அந்த வட்டாரத்தில் முதன்முதலாக மகப்பேறு மருத்துவமனையையும்
தன் சொந்தச் செலவில் ராவுத்தரே தொடங்கிவைத்தார். மக்கள்நலம் சார்ந்த சிந்தனை அவரை விடுதலைப்
போராட்ட வீரராக மாற்றியது. காந்தியடிகளின் வழியில் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைபுகுந்தார்.
கள்ளுக்கடை மறியலிலும் கதர்ப்பிரச்சாரத்திலும் தொடர்ந்து ஈடுபட்டார். அந்த ஊரில் உயர்நிலைப்பள்ளி
உருவாக தனக்குச் சொந்தமான நிலத்தையே அன்பளிப்பாக அளித்தார்.
தேனி பகுதிகளில் வாழ்ந்த
பாரதி நாராயணசாமி, க.அருணாசலம் போன்ற விடுதலைப்போராட்ட வீரர்களின் பங்களிப்பையும் பதிவு
செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. ஏலம் மணக்கும் தேவாரம் என்னும் ஊரைச் சேர்ந்த பாரதி
நாராயணசாமி 1934இல் சின்னமனூர், கம்பம், தேவாரம் போன்ற பகுதிகளுக்கு காந்தியடிகளை அழைத்துவந்து
மக்களிடையே உரையாடவைத்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச்
சென்றார். க.அருணாசலம் ஓவலாபுரத்தைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டையில் புதுமைப்பித்தனுடன்
வகுப்புத்தோழராக படித்தவர். மதுரை அரிசனசேவா சங்கத்திலும் பெரியநாயகன்பாளையத்தில் பள்ளியாசிரியராகவும்
பணியாற்றினார். பூசாரிக்கவுண்டன்பட்டியில் குடும்பத்தினரிடமிருந்து தன்னுடைய பங்காகத்
தனக்குக் கிட்டிய வீட்டை சர்வோதயப்பணிகளுக்காக அன்பளிப்பாக அளித்துவிட்டார். காந்தியத்தைப்
புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் சில நூல்களை எழுதி வெளியிட்டார்.
காந்தியக்கொள்கைகளால் கவரப்பட்ட
மற்றொரு கவிஞர் கம்பம் பீர்முகம்மது பாவலர். 1921இல் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை
இயக்கத்தில் ஈடுபட்டு, கல்லூரியை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். காவல்துறையில்
துணை ஆய்வாளராக பணியில் இருந்தபோதும் சுதந்திரப்போராட்டத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால்
தன்னுடைய வேலையை உதறினார். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு பெல்லாரி
மாவட்டத்தில் அலிப்பூர் சிறையில் ஓராண்டு தண்டனையை அனுபவித்தார். 1934இல் கம்பம் நகருக்கு வந்த காந்தியடிகளிடம் மூன்றாயிரம்
ரூபாய் திலகர் நிதியாகத் திரட்டியளித்தார். கம்பத்தில் வாழ்ந்த மற்றொரு தியாகி டி.சையது
முகம்மது. அவர்கள் இருவரும் சேர்ந்து கம்பம் கோட்டை மைதானத்தில் பெரிய மேடையை அமைத்து
காந்தியடிகளை உரையாற்றவைத்தனர். 1935இல் தமிழ்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது நிலச்சுவான்தார்களிடமிருந்து
தானியங்களைத் திரட்டி ஏழைக்களஞ்சியத்தை உருவாக்கினர். பாவலர் பீர்முகம்மதுவின் வீரம்
செறிந்த பாடல்கள் இன்றளவும் கம்பம் பகுதியில் பாடப்படுகின்றன.
மக்கள் அனைவரும் அறிந்த
நா.காமராசன், மு.மேத்தா, வைரமுத்து தேன்மொழிதாஸ் போன்ற கவிஞர்களுக்கு அப்பால் பலருடைய
நினைவிலிருந்தே மறைந்துபோன சில கவிஞர்களைப்பற்றியும் ஏராளமான தகவல்களைத் திரட்டி பதிவு
செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. அவர்களில் முக்கியமான கவிஞர் அந்தோனிமுத்துப்புலவர்.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனுமந்தப்பட்டி என்னும் சிற்றூரில்
வாழ்ந்தவர். மதுரகவி சீனிவாச ஐயங்காரின் உதவியால் தமிழில் புலமை பெற்று இசையோடு பாடல்களை
எழுதினார் அவர். சிந்து, திரிபு விருத்தங்கள், சித்திரக்கவி புனைவதில் வல்லவராக இருந்தார். அந்தக் காலத்தில் பல நாடகங்களையும் நாடகங்களுக்கான
பாடல்களையும் எழுதினார். அவர் எழுதிய இரட்சணிய சிந்தில் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தின்
எல்லா மெட்டுகளும் காணப்படுகின்றன. அனுமந்தன்பட்டி தேவாலயம் பற்றியும் அக்காலத்தில்
மக்களைத் தாக்கிய பிளேக் நோய்க்கு மறைத்திரு சாந்தப்பநாதர் என்பவர் அளித்த மருந்துகளைப்பற்றியும்
அவர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
பிளேக்குகளில் ஐந்துவகை
இருப்பதையும் ஒவ்வொரு வகை பிளேக்குக்கும் உரிய குணத்தையும் வரிசைப்படுத்தி ஒரு பாட்டாகவே
பாடிவைத்திருக்கிறார் அந்தோனிமுத்துப்புலவர்.
அனல்போல் சுரங்காண்பது
அக்கினி பிலேக்கு
அசையாமல் கிடப்பது எருமைப்
பிளேக்கு
நினைவின்றி இறப்பது நித்திரைப்
பிளேக்கு
ரத்தமாய்க் கழிவது ரத்தப்
பிளேக்கு
வெறிகொளல் நொந்து வெறிப்பிளேக்கு
தேனி மாவட்டத்தின் அடையாளமாக
விளங்கும் முல்லைப் பெரியாறு அணைக்கட்டின் வரலாற்றையே சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்
விஜயானந்தலட்சுமி. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்களும் பற்றாக்குறையும்
மக்களை வறுமையில் ஆழ்த்தியது. மக்களைக் காக்கும் வழி தெரியாமல் அரசு திணறியது. ஜார்ஜ்
பேரிஸ் என்பவர் வைகையின் துணைநதியான சுருளி ஆற்றுநீரை அதிகப்படுத்தினால் வைகை நீரைப்
பெருக்கலாம் என்று முதலில் தெரிவித்தார். அவரே பெரியாறு நீரைத் தமிழகத்துக்குத் திருப்பும்
ஆய்வறிக்கையை முதலில் தயாரித்தார். ஆய்வு செய்யும் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்
கீழ் இருந்ததால், அதற்குரிய அனுமதியைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. ஐந்தாண்டு காலம்
தொடர்ந்த ஆய்வின் விளைவாக 172 அடி உயரத்துக்கு அணையை எழுப்பி, 433 அடி நீளமுள்ள சுரங்கப்பாதையை
அமைத்து, அதன் வழியாக நீரைக் கொண்டுவந்து நிரப்பும் திட்டம் உருவானது.
முதன்மைப்பொறியாளராக
1884இல் பென்னி குவிக் பொறுப்பேற்றுக்கொண்டார். பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற
கட்டுமானப்பணியின் விளைவாக இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ஒரு மாத அளவுக்கு தொடர்ச்சியாக
பொழிந்த மழையின் காரணமாக உருவான வெள்ளத்தில் அணையின் பெரும்பகுதி சிதைந்தது. மனம் தளராத
குவிக் மீண்டும் வேலைகளைத் தொடங்கினார். அணையின் உயரம் குறைக்கப்பட்டு ஐந்தாண்டு காலம்
தொடர்ச்சியாக கட்டுமான வேலைகள் நடைபெற்றன. 1895இல் அணைக்கட்டு வேலை முடிந்து, ஆயிரக்கணக்கான
ஏக்கர் நிலப்பரப்பு அந்த நீர்ப்பாசனத்தால் பயனடைந்தது. உலகிலேயே முதன்முதலாக ஏரியில்
நீரைச் சேமித்து, மலையைக் குடைந்து சேமித்த நீரை அணையின் எதிர்ப்புறம் திருப்பும் புதிய
தொழில்நுட்பம் வெற்றிகரமாக நிறைவேறியது. பென்னி குவிக்கின் நினைவைப் போற்றும் விதமாக,
கிராமத்து மக்கள் தெய்வங்களை வணங்குவதுபோல அவருடைய உருவச்சிலைக்கு பொங்கல்வைத்து வழிபடுகிறார்கள்
என்னும் செய்தி மெய்சிலிர்ப்பூட்டுகிறது..
பஞ்சாபில் படுகொலை செய்த
கொக்கு அது
பழிபாவம் பார்க்காத கொக்கு
அஞ்சாமல் பாஸ்கரன் தமிழ்பாடி
அதை
அடித்து விரட்ட வேண்டும்
பாப்பா
என்று நாடக மேடையில் பாட்டு
பாடி ஆங்கிலேயர் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் விஸ்வநாத தாஸ். நடத்துவது புராணநாடகமாக
இருந்தாலும், பாடுவது புராணப்பாத்திரங்களுக்குரிய பாடல்களாக இருந்தாலும், நாடகத்தின்
காட்சிகளுக்கு இடையிடையே இப்படி ஆங்கிலேய எதிர்ப்புப் பாடல்களைப் பாடி சுதந்திர வேட்கையை
ஊட்டி வந்தார் அவர். சிவகாசியில் பிறந்து சென்னையில் மறைந்த அவருக்கு, தேனி மக்கள்
சின்னமனூர் சாலையில் சிலையொன்றை நிறுவி உரிய முறையில் மரியாதை செலுத்துவருகிறார்கள்.
அதற்கான காரணத்தை விசாரித்து விரிவாகவே எழுதியிருக்கிறார் விஜயானந்தலட்சுமி. அயலூர்க்காரர்
என்றபோதும் அவருடைய ஆங்கிலேய எதிர்ப்பு நாடகங்களுக்கு தேனிவாழ் மக்களிடையே நல்ல வரவேற்பு
இருந்தது. விஸ்வநாததாஸ் மக்களின் மதிப்புக்குரிய கலைஞராக விளங்கினார். அவரை கைது செய்ய
காவலர்கள் தேடி அலையும்போதெல்லாம் அவருக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தனர் சின்னமனூர்
மக்கள். குறிப்பாக விடுதலைப்போராட்ட வீரரான ராவுத்தர் அவருக்கு ஆதரவாக இருந்தார். இருபத்தொன்பது முறை மேடையிலேயே காவலர்கள் அவரை கைது
செய்தனர். அப்போதும் விஸ்வநாததாஸ் தன் ஆங்கிலேய எதிர்ப்பில் உறுதியாகவே இருந்தார்.
அடிக்கடி சிறைக்குச் சென்றுவிடுவதால்,
விஸ்வநாததாஸுடைய குடும்பம் வறுமையில் வாடியது. அவருடைய வீடு ஏலத்துக்கு வந்தபோது, அவருக்கு
உதவுவதற்காக சென்னை ராயல் அரங்கில் ஐந்து நாட்களுக்கு நாடகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
எதிர்பாராத விதமாக உடல்நலம் குன்றியதால் முதல் மூன்று நாட்கள் நாடகம் நடைபெறவில்லை.
நான்காவது நாள் வள்ளி திருமணம் நடைபெற்ற போது ஒரு பாடலைப் பாடும்போது மேடையிலேயே மயங்கி
விழுந்து இறந்தார் விஸ்வநாததாஸ். அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றிய கலைஞர் என்ற அன்பின்
வெளிப்பாடாக அக்கலைஞருக்கு சின்னமனூர் சாலையில் ஒரு சிலையை நிறுவி ஊர்மக்கள் கெளரவித்து
வருகிறார்கள். ஆதிக்கத்தை எதிர்க்கும் ஆற்றலுக்கும் ஊராரின் அன்புக்கும் அடையாளமாக
விஸ்வநாததாஸின் சிலை நின்றிருக்கிறது.
ஒருவரோடொருவர் அண்ணன் தம்பிகள்
போலப் பழகும் இயல்புடைய மக்கள் வசிக்கும் சின்னமனூரில் ஒரு காலத்தில் தீண்டாமைச்சுவர்
இருந்தது என்னும் கசப்பான உண்மையையும் பதிவு செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. அவர்
விரும்பியிருந்தால், தேனியின் ஒளிமிக்க பகுதிகளை மட்டுமே இப்புத்தகத்தில் முன்வைத்துவிட்டு,
இருளடர்ந்த பகுதியை விலக்கிவைத்திருக்கலாம். ஆயினும் விஜயானந்தலட்சுமியின் சமநிலை நோக்கும்
நேர்மையுணர்வும் அவரைச் சார்புநிலை அற்றவராக நிலைத்திருக்க வைத்திருக்கிறது.
சின்னமனூரில் வசித்த மேல்சாதிக்காரர்கள்
தாம் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள்
வரக்கூடாது என்கிற எண்ணத்தில் 1946இல் கற்சுவர் எழுப்பித் தடுத்துவிட்டார்கள். அப்போது
விடுதலைப்போரில் ஈடுபட்ட பல தியாகிகளில் ஒருவர் கோம்பை டேவிட் வில்லியமும் ஒருவர்.
அவர் மனக்குமுறலுடன் மதுரை ஆட்சியரைச் சந்தித்து ஒரு புகாரளித்தார். அச்சுவரை இடிப்பதற்கு
ஒப்புதல் அளித்து ஆட்சியர் உடனடியாக ஓர் ஆணையை பிறப்பித்தார். ஊருக்குத் திரும்பிய
வில்லியமுடன் ஒத்துழைக்க ஒருவரும் தயாராக இல்லை. வேறு வழியில்லாமல் ஒரு கடப்பாறையோடு
மரக்கம்புகளைப்பற்றி சுவர் மீது ஏறி அவரே சுவரை இடிக்கத் தொடங்கினார். ஆட்சியரின் ஆணை
என்பதால் மேல்சாதியினர் இயலாமையுடன் அமைதியாக நின்றிருந்தனர். சிறிது நேரத்தில் தாழ்த்தப்பட்டோரும்
துணிவு வரப்பெற்று அவருடன் சேர்ந்து சுவரை இடித்துத் தள்ளும் வேலையில் இணைந்துகொண்டனார்.
தெருக்களுக்குக் குறுக்கில் நின்றிருந்த தீண்டாமைச்சுவர் மொத்தமாக இடிந்து வீழ்ந்தது.
அந்த சுவர் நின்றிருந்த இடத்தின் மீதுதான் சின்னமனூர் முக்கியச்சாலை இன்று நீண்டு செல்கிறது
என்னும் தகவலையும் குறிப்பிட்டிருக்கிறார் விஜயானந்த லட்சுமி.
சின்னமனூரில் பழமையான பாண்டியர்
காலச் செப்பேடுகள் கிடைத்திருக்கின்றன. வட்டெழுத்துகள் அடங்கிய அந்தச் செப்பேடுகள்
வழியாக பாண்டியர் சந்ததியினரைப்பற்றிய குறிப்புகளையும் அவர்கள் ஆற்றிய செயல்களையும்
அறிந்துகொள்ளமுடிகிறது. சதிக்கல் என்பது கணவனோடு
உடன்கட்டையேறி உயிரை மாய்த்துக்கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு எழுப்பப்படும் நடுகற்கள்.
வீரக்கல் என்பது போரில் வீரமுடன் போரிட்டு உயிர்நீத்த வீரர்களின் நினைவாக எழுப்பப்படும்
நடுகற்கள். இவ்விரண்டு நடுகற்களும் கம்பம் அருகில் உள்ள புதுப்பட்டியில் கிடைத்த செய்தியையும்
பதிவு செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி.
அரசனின் முன்னிலையில் காற்சிலம்பை உடைத்து, தன் கணவன் கோவலன் மீது விழுந்த பழியை
அகற்றிய கண்ணகியின் நீண்ட நடைப்பயணம் முடிவுற்று விண்ணேறிய இடமாக விண்ணேத்திப்பாறை
சுருளியாகிய நெடுவேள்குன்றத்தில் இருப்பதையும் அங்கு ஆண்டுதோறும் கண்ணகிக்கு வழிபாடு
நடப்பதையும் பதிவு செய்துள்ளார். இத்தகு பதிவுகள் தமிழக வரலாற்றில் தேனி நகரத்தின்
பகுதிகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
இந்தப் புத்தகத்தில் நாற்பத்துநான்கு அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஓர் ஆளுமையை அல்லது பழைய வரலாற்றில் புதைந்துபோன
செய்தியை அறிமுகப்படுத்துகிறார் விஜயானந்தலட்சுமி. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு நாவலின் சுருக்கத்தைப் படித்ததுபோல இருக்கிறது. இந்த நூலை வாசித்த பிறகு தமிழ்ச்சூழலில்
தேனியின் இடம் என்ன என்பதை நாமே உணர்ந்துகொள்ளலாம். விஜயானந்தலட்சுமி அடிப்படையில் கவிஞராக இருப்பதால்
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கவித்துவம் ததும்பும் தொடக்கத்தையும் முடிவையும் வழங்கியிருக்கிறார்.
தேனீக்கள் தினமும் மலர்களைத் தேடித்தேடி அலைந்து பூந்தேனை உறிஞ்சியெடுத்து கொஞ்சம்கொஞ்சமாக
உருவாக்கும் தேனடையைப்போல இப்புத்தகத்தை அவர் உருவாக்கியிருக்கிறார்.
(தேனி : மகரந்தக் கருவூலம் தேடி. விஜயானந்த
லட்சுமி, சந்தியா பதிப்பகம், 53வது தெரு,
9வது அவென்யு, அசோக் நகர், சென்னை
-83.
விலை ரூ.340)
(புக்
டே – 18.06.2022)