Home

Tuesday 21 September 2021

புன்னகை பூக்க வைக்கும் வரிகள்

 

கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் நவீன கல்வியின் அறிமுகத்துக்குப் பிறகு குழந்தைகளுக்கான பாடல்களுக்கும் கதைகளுக்கும் ஓர் அவசியத்தேவை உருவானது. அதையொட்டி குழந்தைகளுக்கென எழுதும் பல கவிஞர்களும்  கதையாசிரியர்களும் உருவாயினர். ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் ஆங்கிலவழிக் கல்வி எங்கெங்கும் வேரூன்றி தழைத்துப் பெருகத் தொடங்கியதும், அந்தத் தேவை மெல்ல மெல்ல குறைந்து இல்லாமலானது.

நாற்பதாண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கல்வி சார்ந்த ஒரு விழிப்புணர்வுக்குப் பிறகு படைப்பாளிகள் குழந்தைகளுக்கென பாடல்களையும் கதைகளையும் மீண்டும் எழுதத் தொடங்கினர். இருப்பினும் இந்த ஆக்கங்கள் போதுமானவை அல்ல. குழந்தைகளுக்கான பாடல்களும் கதைகளும் இன்னும் நிறைய எழுதப்பட வேண்டிய தேவை இருக்கிறது. குழந்தைகளின் ரசனைகளும் விருப்பங்களும் வெவ்வேறு விதமானவை. அவற்றை நிறைவு செய்யும் வகையில் பாடல்களும் கதைகளும் இருக்கவேண்டும்.

குழந்தைப்பாடல்களை, அவர்களுடைய வயதை முன்வைத்து தோராயமாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.  மொழியைப் புரிந்துகொண்டு பேசத் தொடங்கும் சிறுகுழந்தைக்கான பாடல்கள் முதல்வகை. வளர்ச்சியுற்று சிறுவர்களாகும் குழந்தைகளுக்கான பாடல்கள் இரண்டாவது வகை. முதிர்சிறுவர்களுக்கான பாடல்கள் மூன்றாவது வகை.

மூன்று வகைப் பாடல்களிலும் அவற்றின் அழகியல் சார்ந்து பல உட்பிரிவுகளை வரையறுத்துக்கொள்ளலாம். பொருளற்றவையாக இருப்பினும் தாள அடுக்கின் காரணமாக ஒருவித உற்சாகத்தை வழங்கும் சொல்லடுக்குகள் நிறைந்த பாடல்கள், கற்பனைப்பாடல்கள், கிண்டல் பாடல்கள், விலங்குகளோடும் தாவரங்களோடும் உரையாடும் பாடல்கள், வேடிக்கைப்பாடல்கள், புதிர்ப்பாடல்கள், விளையாட்டுப்பாடல்கள், சித்தரிப்புகள் நிறைந்த பாடல்கள், கதைப்பாடல்கள், கேள்வி பதில் பாடல்கள் என பல பிரிவுகள் சொல்லலாம்.

நாக்கில் பட்டதும் இனிப்பு  பரவிக் கரைந்துவிடுவதுபோல, ஒரு பாட்டைப் பாடும்போதே நாக்கில் படிந்துவிட வேண்டும் என்பதுதான் நல்ல பாட்டின் முதல் தகுதி.  சொல்விளையாட்டாகவும் நேரடிப் பேச்சாகவும் இருக்கவேண்டும் என்பது அடுத்த தகுதி. ஒரு குழந்தை ஒரு பாட்டைப் பாடுவதன் வழியாக மொழியின்பத்தை தன்னிச்சையாக அறிந்துகொள்ளும் சாத்தியத்தை கொண்டிருக்கவேண்டும். கற்பனையைத் தூண்டவேண்டும். எதிர்மறைத்தன்மை, நல்லுபதேசங்கள் போன்றவை விலக்கப்பட வேண்டும். இது எனக்கு நானே வகுத்துக்கொண்ட இலக்கணம்.

ஒரு பாடல் எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றி கடந்த ஆண்டு ஒருநாள் விண்மீனுடன் தொலைபேசியில் உரையாட நேர்ந்தபோது இச்சொற்களை அவருடன் பகிர்ந்துகொண்டேன். அப்போது அவர் எழுதிய வண்ணத்துப்பூச்சி, வான்மழை ஆகிய தொகுதிகள் வெளிவந்திருந்தன. மிகவும் உற்சாகமுடன் இயங்கத் தொடங்கியிருக்கும் படைப்பாளியாக அவரைப் புரிந்துகொண்டேன். அதனால் அவரிடம் அச்சொற்கள் பயனளிக்கும் என்ற நம்பிக்கையுடன் என் மனத்திலிருந்ததை அவரோடு பகிர்ந்துகொண்டேன். மெல்ல மெல்ல அவருடைய படைப்புகளில் மாற்றம் தெரியத் தொடங்கியது. முந்தைய இரு தொகுதிகளைவிட முற்றிலும் மாறுபட்ட பாடல்களைக் கொண்ட ஒரு புதிய தொகுதியோடு இப்போது அவர் வந்திருக்கிறார்.

அவர் பாடல்களில் நிகழ்ந்திருக்கும் மாற்றம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்குச் சாட்சியாக பல பாடல்கள் இத்தொகுதியில் உள்ளன. ”தட்டான் தட்டான் பூச்சியே, தாழப் பறக்கும் பூச்சியே, முட்டக் கண்ணு விழியிலே முழிச்சி உருட்டிப் பார்க்கறேஎன்ற வரிகளில் தட்டான் பூச்சியின் பின்னால் செல்லும் ஒரு சிறுமியை என்னால் எளிதாக கற்பனை செய்துகொள்ள முடிகிறது. “வட்டமான குளத்திலே எட்டு வாத்து நீந்துது, குட்டி குட்டி மீன்களும் எட்டி எட்டி நீந்துதுஎன்ற வரிகளைப் படிக்கும்போது ஒரு கதையைக் கேட்கும் மனநிலை இயல்பாகவே உருவாகிவிடுகிறது.

நான் ரசித்துப் படித்த மற்றொரு பாட்டு பஞ்சுமிட்டாய். குழந்தையின் கண்கொண்டு, குழந்தையின் நாக்கில் புழங்கும் மொழியழகோடு எழுதப்பட்டிருக்கும் பாடல். அப்பாடலை இத்தொகுப்பின் முக்கியமான பாடல் என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. ‘புசுபுசுன்னு இருக்குது புடிச்ச கையில் ஒடுங்குதுஎன்னும் வரி படிக்கும்போதே மனத்தில் ஒட்டிக்கொண்டுவிடுகிறது.

இதேபோல உற்சாகத்துடன் பாடத்தக்க இன்னொரு பாடல் கன்றுக்குட்டியைப்பற்றிய பாடல். ’முழிக்கும் கண்கள் வெல்லக்கட்டிஎன்னும் வரி முற்றிலும் குழந்தைமைக்கே உரிய புதிய கற்பனை.

எலி-பூனை கதையொன்றை விண்மீன் மிகவும் கற்பனையுடன் ஒரு பாடலில் விவரிக்கிறார். டிக்டிக்டிக் என்று கடிகாரத்தின் சத்தம் மட்டுமே கேட்கிற நள்ளிரவில் ஓர் எலி திருட்டுத்தனமாக வீட்டுக்குள் வந்து எட்டிப் பார்க்கிறது. அதன் வருகையைக் கவனித்துவிட்ட ஒரு பூனை, அந்த எலியைப் பிடித்துக் கொல்வதற்காக ஓரிடத்தில் பதுங்கி காத்திருக்கிறது. அத்தருணத்தில் யாரும் எதிர்பாராத விதமாக நிற்கும் அங்கே உறங்கிக்கொண்டிருக்கும் பாட்டி சத்தமாக ஒரு தும்மல் போடுகிறாள். அதைக் கேட்டதும் நின்ற இடத்திலிருந்து பின்வாங்கி எலி தப்பித்து ஓடுகிறது. அதைப் பிடிப்பதற்காக அதைத் தொடர்ந்து ஓடுகிறது பூனை. இருண்ட மூலையில் நிகழும் இந்த ஓட்டப்பந்தய விளையாட்டை நல்ல சொல்லடுக்கோடு அழகாக காட்சிப்படுத்தி பாடலாக்கியிருக்கிறார் விண்மீன்.

போலீஸ் இத்தொகுதியில் உள்ள சுவாரசியமான மற்றொரு பாடல். ஒரு குழந்தையின் கண்கள் வழியாக விரியும் போலீஸ் பற்றிய சித்தரிப்பு மிகச்சிறப்பாக உள்ளது. ’தொப்பி போட்ட போலீஸு, தோட்டா கண்ணு போலீஸுஎன்ற இரு வரிகளில் அவரைப்பற்றிய சித்தரிப்பையும்மிடுக்காய் இறங்கி நடக்கிறார்  கணக்காய் கேள்வி கேட்கிறார்என்ற இரு வரிகளில் அவருடைய செயல்பாடுகள் பற்றிய சித்தரிப்பையும் விண்மீன் அளிக்கிறார். இறுதியில்சல்யூட் போட்டேன் அவருக்கு, சாக்லெட் கொடுத்தார் எனக்குஎன்று முத்தாய்ப்பாய் சொல்லும்போது நம்மையறியாமல் நம் உதடுகளில் புன்னகை படர்கிறது.

ஒரு கிளி சொல்ல

இரு முயல் பேச

மூன்று நரி கேட்க

நான்கு மான் துள்ள

ஐந்து யானை இசைக்க

ஆறு மயில் ஆட

ஏழு குயில் பாட

எட்டு குரங்கு ரசிக்க

ஒன்பது வாத்து சிரிக்க

பத்து குருவி பறந்தது

இப்படி ஒரு பாடல் இத்தொகுதியில் உள்ளது. எண்களைக் கற்பிக்கும் எண்ணத்துடன் இந்தப் பாடல் இருந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் கற்பனைக் கதையடுக்கு ரசனையோடு உள்ளது. அதைப் படித்த தருணத்தில் நான் அதை என் கற்பனைக்கேற்ற வகையில் காட்சிப்படுத்திக் கொண்டேன்.

நான் ஒரு கதை சொல்லட்டுமா?” என்று ஆவலோடு எழுந்திருக்கிறது ஒரு குழந்தை. கூட்டமாக  கூடி அமர்ந்திருக்கும் பிற குழந்தைகள் என்று ஓசையிட்டு சம்மதத்தைத் தெரிவித்துவிட்டு கதை சொல்ல நின்றிருக்கும் குழந்தையை ஆர்வத்தோடு கவனிக்கிறார்கள்.

எழுந்து நின்ற பிறகுதான் என்ன கதை சொல்வது என்று யோசிக்கிறது அக்குழந்தை. ஜன்னல் பக்கமாக அதன் பார்வை திரும்பும்போது ஒரு முருங்கை மரக்கிளையில் வந்து உட்கார்ந்த கிளியைப் பார்க்கிறது. உடனே குழந்தை மன எழுச்சி கொண்டுஒரு கிளி  சொல்லஎன்ற வாக்கியத்துடன் பாடலைத் தொடர்கிறது. மற்ற குழந்தைகள் அக்குழந்தையை அதிசயமாக பார்க்கின்றனர். அடுத்து தன் மனத்தில் உதித்த முயலின் சித்திரத்தை நினைவுபடுத்துக்கொண்டுஇரு முயல் பேசஎன்று இன்னொரு வரியை இணைத்துவிடுகிறது.

சொற்களின் இணைப்பை, அதைச் சொன்ன குழந்தையே ரசிக்கத் தொடங்குகிறது. தனக்குள் ஒருவித உற்சாகம் பொங்குவதை உணர்கிறது. உடனே ஒரு மன எழுச்சியோடு தன் மனத்தில் எழும் நரி, மான், யானை, மயில், குயில், குரங்கு, வாத்து என எல்லா விலங்குகளின் சித்திரத்தையும் முன்வைத்து ஒரு வரி சொல்லிக்கொண்டே வந்து , இறுதியில்பத்து குருவி பறந்ததுஎன்று பூரிப்போடு சொல்கிறது.

அந்த வரியைச் சொல்லும்போது சிறகசைத்து பறந்து செல்வதுபோல அக்குழந்தையின் இரு கைகளும் வானத்தை நோக்கி விரிந்திருக்க, மீண்டும் மீண்டும் அந்த வரியைச் சொல்லி பாடலை முடித்துவிடுகிறது. அதுவரை பாட்டையும் கதையையும் கேட்ட மற்ற பிள்ளைகள்  மகிழ்ச்சியோடு கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

இந்தப் பாட்டைப் படித்ததும் இவ்விதமாக நான் கற்பனை செய்துபார்க்க விரும்பினேன். இதே பாடலைப் படிக்கும் பிற வாசகர்கள் நெஞ்சில் இன்னொரு விதமான கற்பனை எழலாம். ஒரு நல்ல பாடலுக்கு இப்படி நூற்றுக்கணக்கான கற்பனைகள் சாத்தியம்.

சொற்களின் வசீகரத்தால், ஒரு குழந்தையை புன்னகை பூக்க வைப்பதும் நெஞ்சில் பதிய வைப்பதும் ஒரு நல்ல பாடலுக்கு அழகு. அது ஒரு மகத்தான கலை. அது விண்மீனுக்கு வசப்படத் தொடங்கியிருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். 

 

(சிறுவர்களுக்கான பாடல்கள் எழுதும் எழுத்தாளர் விண்மீனின் ’வான்மலர்’ தொகுதிக்காக எழுதப்பட்ட முன்னுரை)