இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் நவீனத் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு மணிக்கொடி இதழ் ஆற்றிய பங்கு மகத்தானது. 1933ஆம் ஆண்டு முதல் 1950 வரை மூன்று காலகட்டங்களிலாக வெளிவந்த அவ்விதழில் இரு தலைமுறை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அரசியல் நோக்கத்துடன் வார இதழாகத் தொடங்கப்பட்டு பின்னர் இலக்கியத்துக்கான மாத இதழாக மாற்றமடைந்தது. மணிக்கொடி காலத்தை தமிழ்ச்சிறுகதைகளின் மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லலாம். மணிக்கொடி இதழை முன்வைத்து உருவான இலக்கிய ஆளுமைகள் ‘மணிக்கொடி எழுத்தாளர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
மணிக்கொடி எழுத்தாளர்கள் என்னும் பட்டியலில் கும்பகோணத்தைச்
சேர்ந்தவர்கள் என பலரைக் குறிப்பிடலாம். அநேகமாக அனைவருமே கும்பகோண நகரத்தின் சித்திரங்களை
பல சிறுகதைகளில் எழுதியிருக்கிறார்கள். உண்மையான அயோத்தி நகரத்துக்கும் கம்பர் தன்
காவியத்தில் தீட்டிய அயோத்தி நகரத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. உண்மையான அயோத்தி
தினந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் காவியத்தில் இடம்பெற்றிருக்கும் அயோத்தி
ஒரு காலகட்டத்தின் அடையாளமாக என்றென்றும் நிலைத்திருக்கும்.
எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் ஒரு நகரம் சார்ந்தோ அல்லது கிராமம்
சார்ந்தோ வழங்கும் தகவல்கள் மிகமிகக் குறைவானவை. கிட்டத்தட்ட கோட்டோவியங்கள் போன்றவை
அவை. ஆனால் அக்குறிப்புகளே வரலாற்றில் அந்த நகரத்தை நிலைநிறுத்தி வைக்கின்றன. கி.ராஜநாராயணன்
தன் கதைகளில் கரிசல் நிலப்பகுதிகளைப் பற்றி வழங்கியிருக்கும் சித்திரங்கள் மகத்தான
வரலாற்றுத்தடயங்கள். காலமாற்றத்தின் விளைவாக அவற்றில் பெரும்பாலானவை இன்று மறைந்துபோயிருக்கலாம்.
ஆனால் கரிசலின் அடையாளமாக அவை அவருடைய எழுத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கும்பகோணம் சார்ந்து அத்தகு சித்திரங்களை வடித்து வைத்திருக்கும்
பதின்மூன்று எழுத்தாளர்களின் பதினைந்து கதைகளைத் தேடி ‘கும்பகோணம் கதைகள்’ என்னும்
தலைப்பில் ஒரு தொகுப்பாக உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ராணி திலக்.
கும்பகோணம் என்றதுமே அனைவருக்கும் அங்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழாவும் புனித நீராடலும் அதற்கென உருவான குளத்தைச்சுற்றி திகழும் பதினாறு மண்டபங்களும் நினைவுக்கு
வருவது இயற்கை. இதே மகாமகத்தை முன்வைத்து
1943இல் தி.ஜானகிராமன் தன்னுடைய ‘புஷ்கர்ணி’ சிறுகதையில் தீட்டிவைத்திருக்கும் சொற்சித்திரம்
வேறொரு கோணத்தைக் காட்சிப்படுத்துகிறது.
மகாமகம் குளத்துக்கு எதிரிலிருக்கும் வீட்டிலிருந்து தன் சிறுகதையைத்
தொடங்குகிறார் தி.ஜானகிராமன். அவ்வீட்டில் வசிக்கும் பாட்டிக்கு கால்தடுமாற்றம் உண்டு
என்றாலும், அவள் ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து அடிமேல் அடிவைத்துச் சென்று படிக்கட்டில்
அமர்ந்து கொண்டுசென்ற துணிமணிகளையெல்லாம் துவைத்துக்கொண்டும் தண்ணீரில் மூழ்கிக் குளித்துவிட்டும்
வீட்டுக்குத் திரும்பிவருகிறாள். அந்தப் பழக்கத்தை அவள் விடுவதே இல்லை. மகாமகத்தில்
குளித்து எழுவதால் பாவங்களிலிருந்து மீட்சி கிடைக்கும் என்கிற மரபான நம்பிக்கையில்
அவள் மனம் மூழ்கியிருக்கிறது. அவளுக்கு நேர்மாறானவனாக இருக்கிறான் அவளுடைய பேரன். பழைய
நீர் கழிந்து வெளியே போகவும் புதிய நீர் புகவும் வழியில்லாத ஒரு குளத்தில் குளிப்பதற்கு
அவனுக்கு மனமில்லை. குளியலறையில் அண்டாவில் நீர் நிரப்பிக் குளிப்பதையே வாடிக்கையாகக்
கொண்டிருக்கிறான். ஒரே வீட்டில் இரு துருவங்கள். இருவிதமான நம்பிக்கைகள்.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து தினந்தோறும் வரும்
யாத்ரீகர்கர்கள் தம் பாவத்தைக் கரைக்க அக்குளத்தில் மூழ்கியெழுகிறார்கள். உள்ளூரில்
வசிப்பவர்களும் தினந்தோறும் மூழ்கியெழுகிறார்கள். இவ்வளவு பேருடைய அழுக்கும் பாவமும்
ஒவ்வொரு நாளும் சேர்ந்து பெருகிக்கொண்டே போகும் ஒரு குளத்தில் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன்
மனிதர்கள் எப்படி வந்து குளித்துவிட்டுச் செல்கிறார்கள் என்கிற கேள்வி அவனை அரித்துக்கொண்டே
இருக்கிறது.
பாட்டிக்கும் பேரனுக்கும் இடையில் நிகழும் உரையாடல் வழியாகக்
கதையை நகர்த்திச் செல்லும் தி.ஜானகிராமன் அவனுடைய குழப்பத்தை வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு
ஏதுவாக குளக்கரைச் சித்திரங்களையும் எழுதிச்
செல்கிறார். தன் குழப்பத்துக்கான விடையை அவனால் கண்டறிய முடியவில்லை. ஆனால் அந்த யோசனையின்
தொடர்ச்சியாக அவனுக்கு ஒரு பழைய புராணக்கதை நினைவுக்கு வருகிறது.
பாவத்தைப் போக்கும் மகாமகக் குளத்தைப்போல வடக்கே பாவத்தைப் போக்கும்
கங்கை நதிக்கரையில் அந்தக் கதை நடக்கிறது. பரமசிவனும் பார்வதியும் அந்தப் பக்கமாகச்
செல்கிறார்கள். கங்கையில் மூழ்கியெழும் பக்தர்களின் கூட்டத்தைக் கண்டு பார்வதி தன்
கணவர் பரமசிவனிடம் ’இவ்வளவு பேரும் கங்கையில் மூழ்கியெழுந்தால் பாவம் தொலையும் என்கிற
கருத்தில் நம்பிக்கை உள்ளவர்களா?’ என்றொரு கேள்வியைக் கேட்கிறார். அதற்கு “இரு பதில்
சொல்கிறேன்” என்று பார்வதியை அமைதிப்படுத்துகிறார் பரமசிவன். அதற்குள் கங்கைக்கரையில்
பரபரப்பான ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பதிலை மறந்து இருவரும் அந்த நிகழ்ச்சியை வேடிக்கை
பார்க்கத் தொடங்குகிறார்கள்.
கங்கைப் படித்துறையில் ஒரு கிழவனும் கிழவியும் மெதுவாக இறங்கிச்
செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக கிழவருக்கு கால் வழுக்கிவிடுகிறது. கங்கையில் அடித்துச்
செல்லப்படுகிறார். “ஐயோ ஐயோ” என்று கிழவி அலறுகிறாள். அலறல் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப்
பார்த்தவர்களில் பலர் அக்கணமே கிழவரைக் காப்பாற்ற கங்கையில் இறங் முனைகிறார்கள். “ஐயோ,
இந்தப் பிறவியில் ஒரு பாவம் கூடச் செய்யாதவர்கள்தான் அவரைத் தொடலாம்” என்று கிழவி அலறுகிறார்.
உடனே காப்பாற்றச் சென்ற அவ்வளவு பேரும் உறைந்து நின்றுவிடுகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த பாவம்தான் உடனடியாக நினைவுக்கு
வருகிறது. குளித்து எழுந்ததால் பாவம் தொலைந்து தூயவர்களாகிவிட்டோம் என ஒருவரும் நினைக்கவில்லை.
கிழவர் தண்ணீரில் போய்க்கொண்டே இருக்கிறார். அப்போது, இரவெல்லாம் ஒரு தாசியின் வீட்டில்
இன்பமாகக் கழித்த இளைஞனொருவன் தூங்கியெழுந்த முகத்தோடு கரையோரமாக நடந்துவருகிறான்.
கிழவியின் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறான். தண்ணீரால் அடித்துச் செல்லப்படும்
கிழவரைக் கண்டதும் சட்டென கங்கையில் குதித்து அவரைக் காப்பாற்றி கரைசேர்க்கிறான். அந்த
முழுக்கில் தன் பாவம் தொலைந்தது என நம்பியபடி நடந்துசெல்கிறன்.
பாவத்திலிருந்து விடுதலை அடைவது என்பது வாங்கிய கடனை ஏதோ ஒரு
தொகையைக் கொடுத்து அடைப்பதுபோன்ற ஒரு செயலல்ல. அது ஒரு நம்பிக்கை சார்ந்த செயல்பாடு.
கதையைத் தொடங்கியதிலிருந்து விவாதக்களத்தைப்போல விவரித்துச் செல்லும் தி.ஜானகிராமன்
இறுதியில் தொடவேண்டிய புள்ளியைத் தொட்டு நின்றுவிடுகிறார். தன் எண்ணமென எதையும் வெளிப்படுத்தாமல்
ஒரு புதிரான புள்ளியில் அழகாக நிறுத்திவிடுகிறார். புறத்தகவல்கள் வழியாகவே அந்தப் புள்ளியைத்
தொடும் விதம் புஷ்கரணி கதையை சிறந்த கதையாக்கிவிடுகிறது.
கரிச்சான் குஞ்சு எழுதிய ’பிரதாப முதலியார்’ என்றொரு சிறுகதையிலும்
மகாமகம் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் இடைவெளியே இல்லாமல் உறக்கமே இல்லாமல் இரவும்
பகலும் தொடர்ச்சியாக சீட்டாடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைப்பற்றிய கதை அது. வெள்ளிக்கிழமை
இரவு தொடங்கிய ஆட்டம் ஞாயிறு இரவைக் கடந்தும் நீண்டுசெல்கிறது. வீடு என ஒன்று இருக்கிறது
என்பதையே மறந்து சீட்டு போதையில் ஆழ்ந்துகிடக்கிறார்கள் அவர்கள். அக்கூட்டத்தில் ஒருவர்
பிரதாப முதலியார். மூன்று நாள் ஆட்டத்திலும் கையிலிருந்த நூறு ரூபாய்க்கும் மேலான தொகையை
இழந்துவிட்டார். அப்போதும் எழுந்து செல்ல மனமில்லாமல் ஆடுகிறார் அவர்.
ஒருவரும் எதிர்பாராதபடி அந்தச் சீட்டாட்டக் கும்பலுக்கு முன்னால்
அந்த இரவு வேளையில் திடீரென வந்து நிற்கிறாள் பிரதாப முதலியாரின் மனைவி. கணவனைப் பார்த்து
“உங்களுக்குப் பிறந்த பிள்ளை வீட்டில் கிடக்குது. வீடு தேடிவந்து பணம் கேட்கும் கடன்காரர்களுக்கு
என்னால் இனிமேல் பதில் சொல்லமுடியாது. இந்தாங்க நீங்க கட்டிய தாலி. நான் போய் குளத்தில்
விழுந்து சாகிறேன்” என்று தாலியை வீசிவிட்டு வேகமாக குளத்தை நோக்கி நடந்துசெல்கிறாள்.
கரிச்சான் குஞ்சு குறிப்பிடும் குளம் மகாமகக் குளமாகத்தான் இருக்கவேண்டும். நல்ல வேளையாக
அவளுடைய ஆவேசத்தால் பிரதாப முதலியாருக்கு முன்னால் பிறருக்கு புத்தி தெளிந்துவிடுகிறது.
உடனே அவர்கள் அனைவரும் ஓடோடி அவளைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி அழைத்துவருகிறார்கள்.
ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கும் பணத்தைப்
போட்டு நூறு ரூபாய் சேர்த்து அவளிடம் அளிக்கிறார்கள்.
பிறகு முதலியாரையும் அவர் மனைவியையும் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறார்கள்.
எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘பைத்தியக்காரப் பிள்ளை’ சிறுகதையிலும்
ஒரு காட்சியில் மகாமகம் இடம்பெற்றிருக்கிறது. கொலைவெறி கொண்ட அம்மாவின் ஜாடைமாடைப்
பேச்சுகளால் மனம் கசந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும் ராஜம் வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.
அவன் முதலில் போய் நிற்குமிடமே மகாமகக்குளம்தான்.
அதில் விழுந்து தற்கொலை செய்யத்தான் அவன் நினைக்கிறான். ஆனால் நீச்சல் அறிந்த தன்னால்
நீரில் மூழ்கி இறப்பது இயலாத செயல் என்கிற எண்ணம் அவனைத் தடுக்கிறது. பிறகு அங்கிருந்து
ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறான். வேகமாக வந்து ஸ்டேஷனுக்கு அருகில் நிற்க முனையும்
ரயில் பெட்டிகளுக்கிடையில் சட்டெனப் பாய்ந்து தலையுடைந்து மரணமடைகிறான். கும்பகோணம்
ரயில் நிலையத்தைக் கடப்பவர்கள் யாராக இருந்தாலும் ராஜத்தின் தற்கொலையையும் “பைத்தியக்காரப்
பிள்ளை, கல்யாணம் ஆனப்பறமா இந்த வேலை செய்யாமல் இருந்தானே” என்று முணுமுணுத்துவிட்டு
போர்வையை இழுத்துத் தலையை மூடிக்கொண்டு தூங்கத் தொடங்கும் ராஜத்தின் காதலி பங்கஜத்தையும்
நினைக்காமல் இருக்கவே முடியாது.
சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் கும்பகோணத்தில் ஒரு தொழுநோய்
மருத்துவமனை இயங்கி எண்ணற்றோருக்கு மருத்துவச் சேவை செய்துவந்திருக்கிறது. அந்த மருத்துவமனையைப்
பற்றிய சித்திரத்தைத் பராங்குசம் என்னும் எழுத்தாளர் எழுதிய ’கர்மவியாதி’ சிறுகதையில்
பார்க்கமுடிகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போலவே கும்பகோணத்தை ஒட்டிய மாந்தை என்னும்
கிராமமும் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊராக இருந்திருக்கிறது. கு.ப.ரா. எழுதிய ’வீரம்மாளின்
காளை’ என்னும் சிறுகதையில் அதைப் பார்க்கமுடிகிறது.
மாந்தை வட்டாரத்தில் ஒருவராலும் வெல்லமுடியாதது என பெயர் பெற்றது வீரம்மாளின் காளை.
ஜல்லிக்கட்டு போட்டியில் அவளுடைய காதலனே அந்தக் காளையின் கொம்பைச் சுற்றியிருக்கும்
வெள்ளைத்துண்டை அவிழ்த்து காளையை அடக்கி வெற்றி
பெறுகிறான். கொண்டாட்டமான அத்தருணத்தில் அந்தக் காளை எதிர்பாராத விதமாகத் திரும்பி
வந்து அவனைக் கொம்பால் முட்டி வீழ்த்திவிடுகிறது. மருத்துவமனையில் வீரம்மாளை நினைத்தபடியே
அவன் உயிர் பிரிந்துவிடுகிறது.
காதலனின் மறைவு வீரம்மாளை வாட்டுகிறது. ரத்தம் தோய்ந்த துண்டைப்
பார்த்துப் பார்த்து கண் கலங்குகிறாள். பின்கட்டில் அழுதுமுடித்து வீட்டுக்குத் திரும்பிவரும்
பொழுதில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த காளையைப் பார்த்ததும் “புடிபட்ட களுதைக்கு ரோசம்
வேறயா?” என்றபடி பக்கத்தில் சாய்த்துவைக்கப்பட்டிருந்த வேல்கம்பை எடுத்து அதன்மீது
பாய்ச்சுகிறாள். காதலை ஒரு பக்கமாகவும் ரோஷத்தை மறுபக்கமாகவும் வைத்திருக்கும் பெண்ணின்
மனம் புரிந்துகொள்ள முடியாத பெரும்புதிர். கும்பேஸ்வரர் கோவில் கல்நாயனத்தையே மையப்பொருளாகக்
கொண்டு கி.ரா.கோபாலன் எழுதிய ‘கல்நாயனம்’ சிறுகதையும் புரிந்துகொள்ள முடியாத மனத்தின்
புதிரைத் தொட்டுக்காட்டும் மற்றொரு சித்திரம்.
கும்பகோணத்தின் வரலாற்று முகங்களில் ஒருவர் நடிகை பாலாமணி அம்மையார்.
முழுக்கமுழுக்க பெண்களை மட்டுமே கொண்ட ஒரு நாடக நிறுவனத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின்
இறுதியில் தொடங்கி நடத்தியவர். நாடகங்கள் வழியாக ஈட்டிய பணத்தையெல்லாம் கோயில் திருப்பணிகளுக்காகவும்
ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த இளம்பெண்களின் திருமணத்துக்காகவும் செலவிட்டார். அவர்
நடித்த டம்பாச்சாரி நாடகம் மாதக்கணக்கில் கும்பகோணத்தில் நடந்ததாகச் சொல்வதுண்டு. அக்காலத்தில்
பாலாமணியின் நாடகத்தைப் பார்ப்பதற்காக வரும் மக்களின் போக்குவரத்துக்காக இரயில்வே நிர்வாகம்
திருச்சியிலிருந்தும் மாயவரத்திலிருந்தும்
கும்பகோணத்துக்கு ‘பாலாமணி ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ்’ என்னும் பெயரில் சிறப்புரயிலை
இயக்கியிருக்கிறது. அவர் பெயரைப் பயன்படுத்தி பாலாமணி புடவை, பாலாமணி வளையல் என வணிகர்களும்
விளம்பரப்படுத்தியிருக்கின்றனர். கும்பகோணத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் அவர். அவருடைய
நிழற்படத்தை இத்தொகுதியின் அட்டைப்படமாகப் பயன்படுத்தியிருப்பது பொருத்தமாக இருக்கிறது.
இறுதிக்காலத்தில் நிலைகுலைந்துபோன அவருடைய வாழ்க்கைச்சித்திரத்தை பெயரைக் குறிப்பிடாமல்
ஒரு கோட்டோவியமாகத் தீட்டியிருக்கும் தி.ஜானகிராமனின் ’ஆடை’ என்னும் சிறுகதையும் இத்தொகுப்பில்
சேர்க்கப்பட்டுள்ளது.
இப்படி கும்பகோணத்தின் தடயங்களை மணிக்கொடி காலத்து எழுத்தாளர்களின்
சிறுகதைகள் வழியாகத் தேடிப் பதிவு செய்திருக்கும் ராணி திலக்கின் முயற்சி பாராட்டுக்குரியது. அவருக்கும் இத்தொகுதியை நல்லமுறையில் அச்சிட்டு
வெளியிட்டிருக்கும் தன்னறம் பதிப்பகத்துக்கும் தமிழ் வாசக உலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
(கும்பகோணம் கதைகள். தொகுப்பு: ராணி திலக்,
தன்னறம் பதிப்பகம், குக்கூ காட்டுப்பள்ளி, புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை –
635307. )
(புக் டுடே – இணைய இதழ் –
03.06.2026)